நன்றி கெடல் – ஸபீர் ஹாபிஸ் சிறுகதை

1980இல், எழுத்தாளர் வல்லூர் செல்வாவின் முதலாவது சிறுகதையான ‘அக்கினிப் பூக்கள்’ தினபதியில் வெளியானது. அதிலிருந்து 1990இல் வெளியான ‘நாகரிகக் குழந்தைகள்’ சிறுகதை வரையிலான பத்து வருட காலத்தில் 148 சிறுகதைகளை அவர் எழுதி முடித்திருந்தார். பத்து சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டிருந்தார். சிறுகதை இலக்கியம் தொடர்பான பல ஆய்வு மற்றும் விமர்சனக் கட்டுரைகளை எழுதியிருந்தார். இலங்கையில் நடைபெற்ற பல இலக்கிய மாநாடுகளில் சிறுகதை தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தார். 80களின் பிற்கூறில், தேசிய தமிழ் சிறுகதை இலக்கிய ஒன்றியம் வெளியிட்ட இலங்கையின் புகழ் பெற்ற சிறுகதை எழுத்தாளர்கள் தொகுப்பில் செல்வாவின் பெயர் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தது. இந்த அடையாளங்களூடு இலங்கையில் பிரபலமான தமிழ் சிறுகதை எழுத்தாளர்களிடை முக்கிய புள்ளியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் வல்லூர் செல்வா.

செல்வாவின் முதலாவது சிறுகதைத் தொகுதியான ‘நினைவுத் துயரின்’ அணிந்துரையில் பேராசிரியர் சொ. சண்முகம், ‘செல்வாவின் எழுத்துகளில் மனித நேயம் செறிந்துள்ளது’ என எழுதியிருந்தது பலரையும் வியப்பிலாழ்த்திற்று. ஏனெனில், அத்தொகுதியில் இடம்பெற்றிருந்த பத்துக் கதைகளிலும் வன்முறை குமுறும் இறுக்கமே கருத்தியலாக்கப்பட்டிருந்தது. சிங்களப் பேரினவாதத்தை நோக்கிய எதிர்க்குரல்களை வன்முறைக்குள் தோய்த்து வடித்திருந்தார் செல்வா. தமிழர் மீதான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளை, ஆயுதக் கலாசாரத்தின் பால் இளைஞர்களை உந்தித்தள்ளும் வீரியத்துடன் கதையாகச் செதுக்கியிருந்தார்.

செல்வாவின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவின் போது சிறப்புரையாற்ற வந்த பேராசிரியர் சொ. சண்முகம், ‘தன் இனத்தின் மீதான பற்றும், பேரினவாதத்துக்கெதிராகப் பதிவு செய்யப்படும் விடுதலைக் குரலும், உரிமை மீட்புக்கான போராட்ட ஊக்குவிப்பும் மனித நேயத்தின் பிரதான பண்புகள்’ எனப் பேசி, தன் அணிந்துரையிலிருந்த மயக்கத்தைத் தளர்த்தினார். இரண்டாவது தொகுதியிலும் செறிந்திருந்த செல்வாவின் ‘மனித நேயம்’ இலங்கையின் முதன்மைப் போராட்ட எழுத்தாளராக அவரை முன்னிறுத்திற்று.

தொடர்ந்து அவர் எழுதிய சிறுகதைகளில், காதல் பறவைகள், கொஞ்சும் கிளியே, அவளும் கவிதைதான் முதலான ஒரு சில கதைகளைத் தவிர்த்து, ஏனைய அனைத்திலும் போராட்டத்தைப் போர்த்திக் கொண்ட இரத்தவாடையே நிறைந்திருந்தது.

தமிழ் மக்கள் பலரும் செல்வாவைப் பிரமிப்புடன் நோக்கினர். ஈழப் போராட்டத்தில் எழுத்தாயுதத் தேவையைப் பூர்த்தி செய்ய வந்த ஞானியென மனதுக்குள் அவரை ஆராதித்தனர். தாம் எதிர்நோக்கும் சவால்களுக்கும் சங்கடங்களுக்கும் நிரந்த முற்றுப்புள்ளியை அவரது பேனா முனையில் தேடினர்.

மறுபுறத்தில், பேரினவாதத்துக்கெதிரான ஆயுதக் கலாசாரம் பெரு விருட்சமாய்ச் செழிக்க, அவரது இறுக்கமான எழுத்து பயனுள்ள பசளையாயிற்று. ஆயுதப் பயிற்சிக்கான ஆட்சேர்ப்புப் பிரசாரங்களில் செல்வாவின் எழுத்துகளுக்கு நல்ல மதிப்பிருந்தது. எழுத்தாளர் செல்வா இப்படிச் சொல்கிறார் என்றதும், மக்கள் தங்கள் காதுகளைத் தீட்டிக் கொள்வர். செல்வாவின் செல்வாக்கு மிகப் பலமான விசையாக எழுந்த்து. ஆட்சேர்ப்புக்காக இன்னும் உணர்ச்சிபூர்வமாக பிரசாரம் பண்ணத் தேவையில்லை எனுமளவுக்கு, செல்வாவின் எழுத்துகள் உணர்ச்சிக் கொதிப்பில் மிதந்தன.

பின்னால் தோன்றிய குட்டி எழுத்தாளர்கள், செல்வாவைத் தம் மானசீக குருவாக்கி, அவரது பாணியையே தமது பாதையென வரித்துக் கொண்டனர். அவரது எழுத்துகள் சிலவற்றை, சில மாற்றங்களுடன் தமது படைப்புகளில் உட்புகுத்தும் திறனும் அவர்களுக்கிருந்தது.

தனக்கு ஏற்பட்டு விட்ட இந்தப் பிரபலத்தை, செல்வா சாதாரணமாகக் கருதிவிடவில்லை. தனது திறமையினதும் மகத்தான ஆளுமையினதும் விசை செறிந்த ஈர்ப்பில், இத்தகைய பிரபலங்கள் இழுபட்டு வந்து சேர்வது இயல்பானதே என அவர் எண்ணினார். ஓய்வு நேரங்களில் தான் எழுதியுள்ள கதைகளை அவர் வாசித்துப் பார்ப்பார். ஒவ்வொரு கதையை வாசிக்கும் போதும் அவருக்கு வியப்பாகவே இருக்கும். என்னால் எப்படி இவ்வளவு அற்புதமான அழகுணர்ச்சியுடன் கதை படைக்க முடிகிறது?

ஆரம்பத்தில் கதை எழுதுவதற்காகப் பேனாவைப் பிடித்த போது, கருவைக் கண்டுபிடிக்க முடியாத குழப்பத்திற்குள்ளாகித் தவித்தது அவருக்கு இன்னும் நினைவிலிருந்தது. நீண்ட யோசனையின் பின் மூளைக்குள் சிக்கிய பேரினவாதக் கொடுமைகளும், தமிழர் அவலங்களும் அவரது பேனா முனையூடாக சிறுகதை அவதாரமெடுத்த போது, அந்தக் கதைக்கு இவ்வளவு பிரபலம் கிடைக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அந்தப் பிரபலமும் வரவேற்பும் ஏற்படுத்திய கிறுகிறுப்பு, தொடர்ந்து அதே பாணியிலான கதைகளைப் படைக்க வேண்டிய சுயநிர்ப்பந்தமாய் அவரை அழுத்திற்று.

‘சிறுகதைத் துறையில் வல்லூர் செல்வாவின் உத்தியும் போக்கும்’ போன்ற தலைப்புகளிலான அவரது நண்பர்களின் விமர்சனக் கட்டுரைகள், இலங்கையின் புகழ்பெற்ற எழுத்தாளர் சிம்மாசனத்தில் அவரை அழைத்துச் சென்று இருத்தின. அவர் புளகாங்கிதமடைந்தார். தலையில் கனம் ஏறுவதாக உணர்ந்தார். அதனால், தனது கதைகளின் இறுக்கத்தை மேலும் பலமாக்கினார். பேரினவாதத்தின் மீதான எதிர்க்குரல்களின் கடின இறுக்கம் துவேஷம் எனப் பெயர் மாற்றம் பெறும் என்பதை அவர் அறிந்திருந்த போதிலும், அது பற்றி அவர் அலட்டிக் கொள்ளவில்லை. இனப் பாதுகாப்புக்கான பங்களிப்பு, உரிமை மீட்பு என்பவற்றுக்கு அப்பால், தனது சிறுகதைகள் தனித்து மிளிர வேண்டும், தன் இனத்தவர் மத்தியில் பிரபலம் பெற வேண்டும் என்பதே அவரது பிரதான குறிக்கோளாயிற்று. தனது இலக்கிய ஸ்தானத்தைத் தொடர்ந்தும் தக்கைத்துக் கொள்வதில் அவர் வெகு அவதானமாகச் செயற்பட்டார்.

செல்வாவின் கதைகளில் மனித நேயம் தழைத்தோங்கிற்று. அரசினதும் இராணுவத்தினதும் செயற்பாடுகளும் முன்னெடுப்புகளும் அவரது எழுத்துகளுக்குள் சிக்கித் துவம்சமாயின. தமிழர் போராட்ட உணர்வுகள், அவரது எழுத்துகளின் உஷ்ணத்தில் கொதிப்பேறின.

இலங்கை அரசு இந்தியாவிலிருந்து இராணுவத்தை வரவழைத்து, எதிர்க்குரல்களை நசுக்க முனைந்த காலப்பகுதியில், போராளிகள் பங்கர்களுக்குள்ளும் காட்டு மரங்களிடையேயும் தலைகளை மறைத்து வைத்துக் கொண்டனர். சத்தமின்றி மூச்சுவிடவும் பழகினர். அந்தக் கால கட்டத்திலும் கூட செல்வாவின் பேனா ஓய்வுற்றிருக்கவில்லை. சரியாகச் சொல்வதானால், அந்தக் காலகட்டத்தில்தான் அவரது பேனா முன்னெப்போதும் இல்லாதவாறு வீரியமாய் உஷ்ணம் கக்கிற்று. இந்திய-இலங்கை அரசுகளைச் சாடி கதை புனைவதன் மூலம் தன்னைத் தேசிய எழுத்தாளர் என்ற படித்தரத்திலிருந்து சர்வதேச எழுத்தாளர் என்ற நிலைக்கு உயர்த்திக் கொள்ள முடியும் என செல்வா நம்பினார். அதைப் பரீட்சித்தும் பார்த்தார். தமிழ்நாட்டில் வெளிவரும் ஆனந்த விகடனில் பிரசுரமான அவரது ‘விடுதலைக் குரல்’ சிறுகதை புகழின் உச்சியில் அவரை அமர்த்திற்று. இலங்கையிலும் சில பத்திரிகைகள், செல்வாவின் கதைகளுக்கு முன்னுரிமையளித்துப் பிரசுரித்தன. செல்வாவின் கதைகள், தமது பத்திரிகையின் தமிழ் வாசகர் பரப்பை விஸ்தரிப்பதற்கான ஓர் உத்தியாக அமையும் என அப்பத்திரிகாதிபர்கள் எதிர்பார்த்தனர். இது செல்வாவை மேலும் ஒரு படிக்கு உயர்த்திற்று.

தன் கதைகளில் அரசினையும் இராணுவத்தையும் நோக்கிய எதிர்ப்போக்கை செல்வா தொடர்ந்தும் தக்க வைத்திருந்தார். அரசுக்கெதிராகப் போராடும் தன் இனத்தவரின் குரல்களில் நியாயவாதத்தைப் பூசி மெழுகினார். அப்போதெல்லாம் இலங்கை அரசின் ஜனநாயகப் போக்கையிட்டு செல்வா பிரமிப்பதுண்டு. தனது எழுத்துகளை அரசு கண்டு கொள்ளவில்லையா? அல்லது கருத்துச் சுதந்திரத்தை மதிக்கின்றதா? அல்லது ஜனநாயகத்தை முன்னிறுத்தி தனது எதிர்ப்போக்கை ஜீரணிக்க முயல்கின்றதா? உண்மையில் ஜனநாயகம் என்பது இதுதானோ? மனதுக்கு உறைத்த போதிலும், அவரது பேனாவோ அவற்றை உள்வாங்கிக் கொள்வதில் முரட்டுப் பிடிவாதம் பிடித்தது. தொடர்ந்தும் சர்வாதிகார, ஜனநாயக மறுப்பு வார்த்தைகளுக்குள் அரசின் செயற்பாடுகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அழுத்தி மூடியது.

90களின் பின், செல்வா பெரும் சங்கடங்களை எதிர்கொண்டார். வடக்கில், ஈழப் போராட்டத்தின் பெயரில், முஸ்லிம்கள் சொத்து முழுவதும் பறிக்கப்பட்டு அகதிகளாகத் துரத்தப்பட்ட போதும், கிழக்கில் முஸ்லிம் ஊர்களில் படுகொலைச் சம்பவங்கள் பரவலாகக் கட்டவிழ்த்து விடப்பட்ட போதும் செல்வாவின் பேனா தடுமாறிற்று. உண்மைகளை எழுத வேண்டும் என்ற உத்வேகத்தை இன உணர்வு கட்டிப் போட்டது. அவரது எழுத்துகள் நியாயங்களைப் புதைத்தன. அக்கிரமங்களைப் போர்த்தி மறைத்தன. மனசாட்சிக்கு விரோதமான எழுத்துகள் ஆரம்பத்தில் சற்று சிரமமாகத்தான் இருந்தன. காலப்போக்கில் அதுவே அவருக்குப் பழக்கப்பட்டுப் போயிற்று. ‘எழுத்தாளன் சிந்தனைத் தூய்மையுடையவனாக இருக்க வேண்டும்’ என்ற மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீரின் கூற்றை அடிக்கடி நேர்காணல்களில் குறிப்பிடும் செல்வா, அதனைத் தன் எழுத்து நடைமுறையில் பின்பற்ற முடியாமல் தடுமாறினார். அந்தக் குற்ற உணர்ச்சி மிக நீண்ட காலமாக அவரது ஆழ்மனதின் அடியில் தொடர்ந்தும் துருத்திக் கொண்டிருந்தது. அந்த உணர்ச்சியின் நெருடலைத் தவிர்ப்பதற்காக, ‘பாவமன்னிப்பு’ எனும் சிறுகதையை செல்வா எழுதினார். வழமைக்கு முரணாக, தான் சார்ந்துள்ள இனத்தின் தவறை மறைமுகமாக ஒப்புக் கொள்ளும் கருத்தியலை முன்னிறுத்திய அந்தச் சிறுகதையை அவரது ஆதர்ச பத்திரிகைகள் பிரசுரிக்க மறுத்து விட்டன. செல்வா கலங்கி விட்டார். தன் எழுத்துகளுக்குக் கிடைத்த தண்டனையாக அதனைக் கருதினார்.

ஆனாலும், மனதைத் தைரியப்படுத்திக் கொண்டே அக்கதையை தேசிய பத்திரிகைக்கு அனுப்பினார். இரண்டு வாரங்களின் பின் தேசியப் பத்திரிகையில் பிரசுரமான அக்கதை, உடலும் உள்ளமும் காயமுற்றுக் கிடந்த முஸ்லிம்களுக்குப் பெரும் ஆறுதலை ஏற்படுத்திற்று. அதேவேளை, ஆயுதக்குழுக்கள் மற்றும் இனவாதப் போக்குடையோர் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிருப்தியையும் அக்கதை ஏற்படுத்திற்று. இவ்வாறான ஒரு கதை பிரசுரமாகியுள்ளது என்பதை விட, அதை வல்லூர் செல்வா எழுதியுள்ளார் என்பதுதான் அனைவரது புருவங்களையும் உயர்த்திப் பிடித்தது.

தனக்கு வரும் வாசகர் கடிதங்களில் பாராட்டையும் வரவேற்பையுமே பார்த்துப் பார்த்துப் பழகிப் போன செல்வா, முதன் முதலாக கடிதங்களில் எதிர்ப்பு முகத்தையும் அச்சுறுத்தலையும் கண்டு கலங்கியது இந்தக் கதைக்குப் பின்னர்தான். பெரும் அதிர்ச்சுக்குள்ளும் திடுக்கத்துக்குள் விழுந்தார் செல்வா. முற்றிலும் எதிர்பாராத ஓர் அவஸ்தையாக அந்நிகழ்வு அவரைப் பாதித்தது. மறுபுறம், அந்த அச்சுறுத்தல்களிலிருந்த தீவிரவாத, மற்றும் அநீதியியற் போக்கு அவரைச் சீற்றத்துக்குள்ளாக்கவும் செய்தது. இதற்கு முன்னர் தான் எழுதிய கதைகளிலிருந்த கருத்துச் சுதந்திரப் பிடிவாதத்தை நினைவுக்குள் மீட்டிப் பார்த்தார். சுதந்திரத்திற்கான தடை, இலக்கிய விமர்சனமாய் அமைவதை அவர் வெறுத்தார். புதிய தீர்மானம் எடுத்துக் கொள்ள முடியாத சூழலில் தன் பேனாவை மூடிவைத்தார். சுமார் இரண்டு ஆண்டுகள் எழுத்து முயற்சிகளைக் களைந்து மௌனம் காத்தார்.

செல்வாவின் மௌனம், இலக்கிய ஆய்வாளர்களிடையே முக்கிய ஆய்வுப் பொருளாயிற்று. சிலர், ‘வல்லூர் செல்வாவின் பேனா முதிர்ந்து விட்டது’ என எழுதிச் சிரித்தனர். வேறு சிலரோ, ‘வல்லூர் செல்வாவின் மௌனம் புயலுக்கு முந்திய அமைதி’ என எழுதித் தூண்டினர். இன்னும் சிலரோ, ‘உயிருக்குப் பயந்து ஊமையாகி விட்டார் வல்லூர் செல்வா!’ என எழுதி நகைத்தனர்.

இக்காலப் பகுதியில்தான் க.பொ.த. (உயர்தரம்) படித்துக் கொண்டிருந்த செல்வாவின் ஒரே புதல்வனான மோகன் போராளிக் குழுவில் பலவந்தமாக இணைத்துக் கொள்ளப்பட்டான். செல்வா மன்றாடினார். போராட்டத்துக்கான தனது பங்களிப்பைக் குறிப்பிட்டு, மகனைத் திரும்பத் தரும்படிக் கெஞ்சினார். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஆளணி திரட்டப்படுவதாகவும், மறுத்தால் பிள்ளையைப் பிணமாக அள்ளிச் செல்லலாம் என்றும் அவருக்கு விடை கிடைத்தது. நாடித்துடிப்பெல்லாம் அடங்கிச் சரிந்தார் செல்வா. வாழ்க்கை அவருக்கு வெறுமையாயிற்று. மனதுக்குள் இரத்தம் வழிய வழியக் கலங்கி நின்றார். வேதனை அவரை வாட்டிற்று.

மகனை இழந்த பின், அவரது வாழ்க்கை களையிழந்து போயிற்று. வளர்த்த கடா மார்பில் பாய்ந்த துயரம் அவரைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று நைத்தது. ஆனாலும் சில தெளிவுகள் அவருக்குப் பிறந்திருந்தன. ஏற்கனவே குழம்பிக் கைவிட்ட விடயங்களில் முடிவான சில தீர்மானங்களை எடுக்க முடியுமென அவருக்குத் தோன்றிற்று. தூசு தட்டிப் பேனாவை எடுத்தார். கொதித்துக் குமுறும் அவரது உணர்வுகள் பேனா முனையூடு ஆவேச கோஷங்களாய் வழிந்து பதிந்தன. அவரது மனக்குமுறல்கள் சிறுகதையாய் உயிர்ப்பெடுத்தன. தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை, கதையின் ஒவ்வொரு வரியிலும் சோகம் இழையும் வெஞ்சினத்துடன் செதுக்கிய செல்வா, ‘நன்றி கெடல்’ எனும் பெயரிட்டு அதனைத் தேசியப் பத்திரிகைக்கு அனுப்பி வைத்தார். மறுவாரமே கதை பிரசுரமாயிற்று. பிரசுரமான கணத்திலேயே அவரின் முடிவையும் அது எழுதிற்று.

செல்வாவுக்கு அன்று 45 வயது பூர்த்தியாகியிருந்தது. எழுத்தாள நண்பர்கள் சிலர் தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தனர். அவரது நன்றி கெடல் சிறுகதை பற்றிய கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். கலாநிதி சிவராஜா மிகக் கவலையுடன் செல்வாவைக் கடிந்து கொண்டார். ‘அரசாங்கத்துக்கு எதிராக எழுதுவது போல், போராட்டக் குழுவுக்கு எதிராகவும் எழுதி விட்டு உயிருடன் இருக்கலாம் என்று எண்ணி விடாதே. சுட்டுக் கொன்று விடுவார்கள்’ என்று அச்சமூட்டினார். ஆனால் கவிஞர் கமால், ‘துணிச்சலான முயற்சி’ என செல்வாவைப் பாராட்டினர்.

இரவு, செல்வாவுக்குத் தூக்கம் வரமறுத்தது. தோளைச் சுற்றியிருந்த மனைவியின் கையை விலக்கியவாறு கட்டிலை விட்டு எழுந்தார். முன்னறைக்கு வந்து, குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து குளிர்நீரை எடுத்துப் பருகினார். ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதாக மனது பயமுறுத்திக் கொண்டிருந்தது.

மின்விளக்கை எரிய விட்டார். சோபாவில் அமர்ந்தார். டீப்போவிலிருந்த பத்திரிகையை எடுத்துப் புரட்டினார். எட்டாம் பக்கத்தில் அவரது நன்றி கெடல் சிறுகதை பிரசுரமாகியிருந்தது. ஆர்வத்துடன் மீண்டுமொரு முறை அதனைப் படித்தார். உண்மையில் அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அரசுக்கு எதிராக எழுதிய போது கூட இவ்வளவு உணர்வுபூர்வமாக எழுதியதில்லையே. இவ்வளவு தத்ரூபமாகவும் உணர்ச்சிகரமாகவும் எப்படி இந்தக் கதை உருவாயிற்று? கலப்படமற்ற உண்மையான அனுபவத்தின் வெளிப்பாடு என்பதாலா?

திடீரென தடதடவென்று வீட்டுக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. செல்வா சற்றுத் தடுமாறித்தான் போனார். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நடந்து சென்று கதவைத் திறந்தார். இரவிருளுக்குள் கறுப்புடையில் மறைந்து நின்ற இரு முகமூடி உருவங்கள் அவர் கண்களுக்குத் தென்பட்டன. ஓர் உருவம் கையிலிருந்த பிஸ்டலை உயர்த்தி செல்வாவின் நெஞ்சுக்கு முன் நிறுத்திற்று. செல்வா, மிரண்டு பின்வாங்குவதற்குள் டப் டப் என்ற இரு சத்தங்களுடன் உள்ளிருந்து பாய்ந்து வந்த நெருப்புத் துண்டங்களிரண்டு அவரது நெஞ்சைத் துளைத்து உட்புகுந்து, இதயத்தின் இரத்தம் சதைகளிடை உஷ்ணம் தணிந்து இளைப்பாறிற்று. இரத்தம் கொட்டி வலி குமுறிய நெஞ்சைக் கைகளால் அழுத்திப் பிடித்துக் கொண்டே சத்தமிடவும் திராணியற்று மல்லாந்து விழுந்தார் செல்வா. எம்பிக் குதித்து, வீட்டு மதிலைத் தாண்டி ஓடும் அந்த ‘இனந்தெரியாதோரின்’ கறுப்புருவங்கள், அவரது மூடும் விழிகளிடை மங்கலாகத் தெரிந்தது.

***

நன்றி : ஸபீர் ஹாபிஸ் (http://irukkam.blogspot.com/ )

ஆற்றங்கரை – ஸபீர் ஹாபிஸ்

17.03.2011

என்னருமை ஆபிதீனுக்கு,

போன மாதம் உங்கள் பக்கங்களைப் பார்த்தேன். உங்கள் உறவினரின் மரணச் செய்தி படித்து வருந்தினேன். அவரின் மறுமைக்காகப் பிரார்த்தித்தேன். உங்கள் எழுத்தில் அவரின் பிரிவின் முழுமையை அறிய முடிந்தது. இந்த உலகில் அவ்வப்போது மரணம் வந்து நம்மையெல்லாம் மூழ்கடித்து விட்டுப் போகிறது. நாமும் சுதாரித்துக் கொள்கிறோம். மரணம்தான் மிகப் பெரிய உண்மை. நானும் உடல் நலம் குறைந்தவனாக பொழுதுகளைப் போக்கிக் கொண்டிருக்கிறேன். அம்ருதா நவம்பர் இதழில் நாகூர் ரூமியின் கட்டுரையைப் படித்தேன். மிகச் சிறப்பாக எழுதியிருந்தார். அந்தத் தமிழ் நடையை கொஞ்சம் இலகுபடுத்தினால் கலை கொஞ்சம் கூடி வரும். இன்ஷா அல்லாஹ், வரும் மே 28ல் நான் நாகர் கோவில் போகிறேன். சுந்தர ராமசாமி நினைவு அரங்கில் கலந்து கொள்கிறேன். ரூமி, தாஜ் போன்றவர்களை காணவும் கதைக்கவம் கொள்ளை ஆசை. நிற்க,

இத்துடன், ஆற்றங்கரை என்ற கதையை அனுப்புகிறேன். கதையை எழுதியவன் எனது மச்சி மகன். உனக்கு அறபாத்தை அறிமுகப்படுத்தினேன். இப்பொழுது ஸபீர் ஹாபிஸை 33 வயது. 25 வயதில் எழுதிய கதை. ஒரு கலைப் பட்டதாரி. ஆற்றங்கரை மற்றும் பிற கதைகள் என்ற தொகுதியிலிருந்து இந்தக் கதை அனுப்பப்படுகின்றது. உங்கள் பக்கத்தில் ஏற்றி விடுங்கள். ஆற்றங்கரையில் அமர்ந்து ஆப்தீன் பக்க வாசகர்கள் ஆசுவாசப்படட்டும்.

அன்புடன்,
ஹனீபா காக்கா

***

ஆற்றங்கரைஸபீர் ஹாபிஸ்

சைக்கிளை விட்டுக் கீழே இறங்கிய போது வயற்பரப்பின் சில்லென்ற காற்று முகத்திலறைந்து அவனை வரவேற்றது. கண்களை மூடி, சுவாசத்தை உள்ளிழுத்து, அந்த சுகந்தத்தை மனதுக்குள் நிரப்பிக் கொண்டே நடக்க ஆரம்பித்தான்.

சிறுபோக வேளாண்மைக் காலமாகையால், பார்வைக்கெட்டிய தூர மெங்கும் பச்சைப் பசேலென்ற நெற்கதிர்களின் சிருங்காரத் தோற்றம் கண்களை நிறைத்தது. ஆற்றின் புறத்தேயிருந்து எழுந்த காற்றின் வீச்சுக்கிசைந்து, அநாயாசமாகத் தலையசைப்பதான நெற்கதிர்களின் ரம்மியத் தோற்றம், மனதை இதமாக வருடிக்கொடுத்தது. தலைக்கேசத்தைக் கலைத்து விட்டுச் செல்லும் வேகக்காற்றை செல்லமாகக் கடிந்து கொண்டே, வரப்பில் கால் பதித்தான்.

புற்கள் படர்ந்திருந்த அந்த உயர்ந்த வரப்புகளில், சறுகி விடாதவாறு, மிக அவதானமாக கால்களை முன்வைத்து அழுத்தி நடந்த போது, இரண்டாம் வகுப்பில் படித்த ஒளவைப் பாட்டியின் ‘வரப்புயர…’ பாடல் நினைவுக்கு வந்து உள்ளத்தை ஊடறுத்து உவகையூட்டிச் சென்றது.

ஒரு தேர்ந்த விவசாயியினது அற்புதக் கைவண்ணம் அந்த வரப்புகளின் கட்டுக்கோப்பிலும், பரிமாணத்திலும் கமகமப்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

கதிர்களின் உயர் விளைச்சலிலும், களைகளின் தாக்குதலிலிருந்து அவை பாதுகாக்கப்படுவதிலும், வரப்புகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. சமயத்தில் விவசாயிகளின் உயிர்களைக் காப்பாற்றுவதும் இந்த வரப்புகள்தான். தானும் உயர்ந்து நின்று தன்னை நம்பியிருக்கும் விவசாயியையும் உயரத்தூக்கி விடும் ஒப்பற்ற குணவியல்பு இந்த வரப்புகளின் பூர்வீகச் சொத்து.

சில மனிதர்களைப் போன்று, நம்பி வந்தவரைக் குப்புறப் படுக்கப்போட்டு விட்டு, அவர்கள் மீதேயேறி தம்முயர்வுக்கு எத்தனிக்கும் சுய நலத்தன்மையிலிருந்து முற்றிலும் ஒதுங்கி விட்டுள்ள அந்த உயர்ந்த வரப்புகளை அவன் மனதுக்குள் மெச்சிக் கொண்டான்.

சிந்தித்துக் கொண்டே நடந்ததில், முன்வைக்கப்பட்ட கால் சற்றுப் பிசகி விடவே, வரப்பின் விளிம்போரங்களில் காய்ந்து இறுக்கமின்றிக் கிடந்த சொரசொரப்பான மண், கீழ் நோக்கிச் சரிந்து, சிறு சரசரப்பை ஏற்படுத்திற்று.

அந்த சப்தத்தில், வரப்பினடியில் ஒளிந்திருந்து இரை தேடிக்கொண்டிருந்த சிறு குருவியன்று கீச்சிட்டுக் கொண்டே விர்ரென மேலெழுந்து பறந்து போனது. பிசகிய காலை சரியாக வைத்துக்கொண்டே கீழே சரிந்து கிடந்த மண்ணை அவன் பரிதாபத்துடன் நோக்கினான்.

தாம் சார்ந்துள்ள கொள்கையில் எவ்வித இலட்சியமும், பிடிப்புமற்று அசமந்தப் போக்குடனிருக்கும் சில மனிதர்களை ஞாபகப்படுத்திய அம்மண்ணை அதன் பாணியிலேயே அலட்சியப்படுத்திவிட்டு தொடர்ந்து நடந்தான்.

வயற்பரப்பைக் கடந்து வந்த போது, ஹோவென்ற இரைச்சலுடன் சிறு அலையடித்துக் கொண்டிருந்த அந்த ஆற்றங்கரை, அவனைத் தன் உஷ்ணக் காற்றால் தழுவி வரவேற்றது. உள்ளத்தில் உணர்ச்சி நரம்புகள் கொந்தளிக்க, கண்ணுக்கெட்டிய தூரம் வரையும் அகன்று கிடந்த அந்த நீல நிற நீர்ப்பரப்பை ஆதுரமாய் அவன் தன் பார்வைக்குள் அள்ளிப் பருகினான்.

மிக நீண்ட காலமான எதிர்பார்ப்பை எய்து விட்ட உணர்ச்சியின் லயிப்பு அவனது முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தது. அந்த ஆற்றங்கரை அவனது வாழ்வில் என்றுமே மறக்க முடியா வண்ணம் அழுந்திப் பதிந்து விட்ட பால்ய வயது நினைவுச்சின்னம்.

கடந்து விட்ட பதினைந்து வருடங்களில், எவ்வித மாற்றங்களுக்கும் உட்பட்டு விடாமல், அதே இரைச்சலுடனும், அதே நீர்ப்பரப்புடனும் ‘நான் நானே’ என்ற சுயகௌரவத் தோற்றத்துடனும் நீண்டு கிடந்த அந்த ஆற்றைக் கண்ணுற்றபோது, இயற்கைகளுக்கிருக்கும் தன்மானத்தையும் சுய மரியாதையையும் எண்ணி உதட்டைப் பிதுக்கி, புருவங்களை நெறித்து, கண்களில் வியப்புக் காட்டினான் அவன்.

சீரான இடைவெளி விட்டு பெரிதும், சிறிதுமாக கரை நோக்கி வந்து செல்லும் அலைகளையும் அவற்றின் முதுகிலேறியவாறு ஓசிப்பயணம் செய்யும் வெண் நுரைகளின் அழகையும் ரசித்தவாறு முன்னால் விரிந்து கிடந்த புல்வெளியில், கால்களைப் பரப்பிக் கொண்டே சௌகரியமாய் அமர்ந்தான்.

பெரிதாக வருபவை ஆணலைகள் என்றும், சிறிதாக வருபவை பெண்ணலைகள் என்றும், அவ்விரண்டும் ஒன்றையன்று சந்திக்காது என்றும், எப்போது சந்திக்கின்றதோ, அப்போது உலகம் அழிந்து விடும் என்றும் சிறு வயதில் தனக்கு அடையாளப்படுத்தப்பட்டதை நினைவு கூர்ந்த போது, அவனது உதட்டோரத்தில் கேலிச்சிரிப்பொன்று பிரசவமாகித் துள்ளியது.

அவனது ஊரின் நான்கு முனைகளில் ஒன்றான அந்த ஆற்றங்கரை, பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவருக்கும் நன்கு பரிச்சயமான ஒன்றாகத் திகழ்ந்தது.

அதன் எதிர்முனையான கடற்கரை, போராளிப் பொடியன்மாரின் கட்டுப்பாட்டில் இருந்ததனால், ஊர் மக்களில் பெரும்பாலோர் தம் பொழுதுபோக்கார்வத்தை அவ் ஆற்றங்கரையின் பக்கமே திருப்பி விட்டிருந்தனர்.

சாதாரண மீனவர்களின் தொழில் தளமாகவும், சிறுவர்களின் நீச்சல் தடாகமாகவும் பொழுது போக்குவோரின் நீர்ப்பயணஸ்தலமாகவும், வறியோரின் மலசல கூடமாகவும் விளங்கிய அது, சில சட்ட விரோதச் செயல்களுக்கான மறைப்பிடமாகவும் கூடத் திகழ்ந்தது.

அந்த ஆற்றங்கரையும் அதன் புல்வெளிகளும்தான் அன்று பெரும்பாலும் அவனது பொழுதுபோக்கிடமாக இருந்தன. அப்போது அவனுக்குப் பத்து வயதிருக்கும். ஆற்றங்கரைக்குப் போகக்கூடாது என்பது அவனது உம்மா வாப்பாவின் கண்டிப்பான கட்டளை. அநியாயமாக மூழ்கிப் போய்விடுவானே என்ற நியாயமான கவலை அவர்களுக்கு.

அதனால், விளையாடச் செல்வதாகக் கூறிக்கொண்டு, கூட்டாளிமார்களுடன் ஆற்றங்கரைக்குப் புறப்பட்டு விடுவான். சில சமயம் தெரிந்தவர்கள் யாராவது கண்டு விட்டால், வீட்டுக்கு வந்து கதைவாக்கில் ‘தம்பிய நேத்து ஆத்தங்கரயடிய கண்டன’ என்று கூறிவிட குட்டு வெளிப்பட்டு விடும். பிறகென்ன செமத்தியான தர்ம அடி கிடைக்கும்.

வாப்பா கையிலே பிரம்பை எடுத்தாரென்றால், உம்மா வந்து பறிக்கும் வரை அடிப்பதை நிறுத்தவே மாட்டார். அப்படி ஒரு வைராக்கியம் அவருக்கு.

ஆற்றங்கரைக்கு வந்ததும், எல்லோரும் களிசனையும் சேட்டையும் கழட்டி புற்தரையில் போட்டு, காற்றுக்குப் பறந்து விடாதவாறு கல்லொன்றை எடுத்து மேலே பாரமாக வைத்து விட்டு முழு நிர்வாணத்துடன் ஒருவருக்கொருவர் ‘கூய்…’ காட்டிக் கொண்டே தடதடவென்று ஓடிச்சென்று ஆற்றில் குதிப்பார்கள்.

முழமளவு அலையெழும் அந்த மிருதுவான நீர்ப்பரப்பு ஒரு தாயின் வாஞ்சையுடன் அவர்களை வாரியணைத்துத் தழுவிக்கொள்ளும். கால்களை ஊன்றி எழுந்து நிற்கும் போது அடியில் படிந்திருக்கும் பாசிகளின் உரசலில் பாதங்கள் நெளுநெளுக்கும். கூச்சத்தில் உடல் சிலிர்க்கும்.

கலகலவென சிரித்துக் கொண்டே ஒருவனது பட்டப் பெயரை இன்னொருவன் சத்தமிட்டுக் கூறி ஆர்ப்பரித்துக் கொண்டே ஆனந்தமாய்க் குளிப்பார்கள். மூச்சடக்கி மூழ்கி சுழியோடுவார்கள். மேலே வந்து கைகளிரண்டையும் பரப்பி வைத்துக் கொண்டு சடசடவென நீச்சலடிப்பார்கள். பந்தடிப்பதும் கள்ளன்-பொலிஸ் துரத்துவதும் அவர்களுக்குப் பிடித்தமான விளையாட்டுகள்.

சில சமயங்களில், அவர்கள் குளித்துக் கொண்டிருக்கும் போது, அவ்வழியாக தோணிகள் செல்லும். உடனே நீருக்குள் மூழ்கி கல்லொன்றை எடுத்து தோணியில் செல்பவரைக் குறிபார்த்து வேகமாக வீசியெறிந்து விட்டு, சட்டென நீருக்குள் மூழ்கிச் சுழியோடி வேறு பக்கம் சென்று விடுவார்கள்.

வேறு சமயங்களில் தோணிக்கு அருகாமையில் பதுங்கிப் பதுங்கி வந்து, சட்டெனப் பாய்ந்து அதனைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கி விட்டு, மீண்டும் நீருக்குள் மூழ்கி விடுவார்கள்.

அப்படித்தான் ஒரு தடவை தோணியன்றைப் பாய்ந்து பிடித்த போது, அதிலிருந்த ஊசி மூக்குக் கிழவருக்கு கோபம் பொத்துக் கொண்டு வரவே துடுப்பையெடுத்து அவனது தலையில் பலமாக ஓங்கி அடித்து விட்டார். தலை விண் விண்ணென்று வலித்தது.

கள்ளக்கிழவா என மனதுக்குள் அவரைக் கறுவிக் கொண்டு கரையேறிய போதுதான் காயம் ஏற்பட்டிருப்பதும் இரத்தம் கசிவதும் தெரிந்தது. பயந்து போனான்.

காயம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தால் ஆற்றங்கரைக்குப் போன விடயமும் தெரிய வந்து விடுமே என்ற பயத்தில், வீட்டுக்கு வந்ததும் ஓடிச்சென்று தொப்பியன்றை எடுத்து அணிந்து கொண்டான்.

ஆனாலும் விஷயம் எப்படியோ கசிந்து விட, பிறகு வாப்பாவிடம் ரயில் தண்டவாளமாய் கைகளில் தழும்பு விட அடி வாங்கியதும், அவரே கூட்டிச்சென்று சுடுதண்ணி டொக்டரிடம் ஊசி போட்டு மருந்து கட்டியதும் சுவையான அனுபவங்கள். உச்சந்தலைக்கு சற்றுக்கீழே இன்னும் அந்தத் தழும்பு ஆதாரமாக இருப்பதை தொட்டுப் பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.

ஆற்றங்கரைக்கு அருகாமையில், சிறுவாய்க்கால்களும் சற்று விசாலமான குட்டைகளும் நீர் நிரம்பிக் காணப்படும். அவைகளில் மீன் பிடிப்பதென்றால் அவர்களுக்கு அலாதியான சந்தோஷம்.

ஆற்றங்கரைக்கு வருவதற்கு முன்னால் தமது வீட்டுக் கிணற்றடிக்குச் சென்று, மண்ணில் புதையுண்டு பாசி படிந்திருக்கும் செங்கற்களைக் கிளறி, அவற்றுள் ஒளிந்திருக்கும் மண் புழுக்களை இலாவகமாக வெளியே இழுத்தெடுத்து ஒரு தாளில் சுற்றியெடுத்துக் கொண்டே புறப்படுவார்கள்.

ஆற்றங்கரைக்கு வந்ததும் மீன் பிடிப்பதற்கான கைங்கரியங்களை இவனே மேற்கொள்வான். கொண்டு வந்த மண் புழுக்களை துண்டு துண்டாகப் பிய்த்தெடுத்து, தூண்டிலில் குத்தி எச்சிலைத் துப்பிய பின், ‘ஹையா…’ என சத்தமிட்டுக் கொண்டே தூண்டிலை நீருக்குள் எறிவான்.

மப்புளியைப் பார்த்து, மீன்கள் கொத்துவதை யூகித்துக் கொள்வான். அவற்றின் இழுப்புக்கு ஏற்ப தூண்டிலை மெல்ல மெல்ல விட்டுக் கொடுத்துக் கொண்டே போய், மப்புளி நீருக்குள் அமிழ்ந்ததும், சட்டென உண்ணி தூண்டிலை வேகமாக வெளியே இழுத்து விடுவான். எல்லோர் கண்களும் ஆர்வத்துடன் தூண்டிலை நோக்கும். தூண்டிலில் அழகிய மீனொன்று துடித்துக் கொண்டிருக்கும்.

அப்படியே பத்து, பதினைந்து நிமிடங்களில் அவர்கள் கொண்டு செல்லும் நீர் நிரம்பிய சிறிய கோப்பைக்குள் பனையான், ஜப்பான், விரால், சுங்கான், உழுவன் என பல வகை மீன்கள் நிரம்பி விடும்.

தூண்டிலில் சிக்கிய மீனை இலாவகமாகக் கழட்டியெடுப்பதென்பது எல்லோராலும் முடிவதில்லை. அதிலும், சுங்கான், கெழுத்தி மீனென்றால் அவற்றின் தலையிலிருக்கும் முள்ளைக் கண்டு எல்லோரும் பயந்து பின்வாங்கி விடுவார்கள்.

அவன்தான் அதை மிக அநாயாசமாகக் கழட்டியெடுத்து எல்லோரது ஆச்சரியப் பார்வையையும் தன்மேல் பதிய வைப்பான்.

ஆற்றிலே ஒவ்வொரு மீனுக்குமுரிய குறிப்பிட்ட அளவுகளை அவர்கள் இனங்கண்டு வைத்திருந்தனர். கரைக்கு சற்றுத்தள்ளி முழங்காலளவு சென்று போட்டால் நெத்தலி மீனும், இடுப்பளவு சென்று போட்டால் மண்டக் கெழுத்தியும், நெஞ்சளவு சென்று போட்டால் பெரிய கெழுத்தியும் சிக்கும்.

ஆனாலும், பெரும்பாலும் அவர்கள் ஆற்றில் மீன் பிடிப்பதை விரும்புவதில்லை. அவர்கள் பிடிக்கும் மீன்களையெல்லாம் உணவுக்காக அல்லாமல் பொழுதுபோக்கான வளர்ப்புக்காகவே பயன்படுத்தியதனாலும், நெத்தலி கெழுத்தி மீன்களெல்லாம் விரைவிலேயே செத்துப் போய்விடுவதனாலும் குட்டைகளிலும், வாய்க்கால்களிலுமே அவர்கள் அதிகம் மீன் பிடித்தனர்.

ஏனெனில், குட்டையில் வளரும் மீன்கள் மிக்க வலுவானவை. அதிலும், பனையான் மீனென்றால் கேட்கவே வேண்டாம். நீருக்கு வெளியே எடுத்துப் போட்டு மிதி மிதியென மிதித்து அடி அடியென அடித்தாலும் கூட இவகுவில் செத்துவிடாது.

அவனது ஊரில் இருந்த ஒருவனுக்கும் ‘பனையான்’ என்ற கௌரவப் பெயர் கூறப்பட்டு வந்தது. ஆரம்பத்தில் காடையனாக சுற்றித்திரிந்த அவன், பிறகு போராளிப் பொடியன்மாருடன் இணைந்து ஊரையே கருவறுத்துத் திரிந்தான்.

அவன் மீது மட்டுமல்லாமல் அவனைப் போன்ற எல்லோர் மீதும் மக்களுக்கு தீராத எரிச்சல் இருந்த போதிலும், அதை வெளிக்காட்டிக் கொள்ள முடியாத அடக்குமுறைச் சூழ்நிலை நிலவியமையினால் எதுவும் பேச முடியாதிருந்தனர்.

அந்தக் காலப்பகுதியில் பனையான் மட்டுமன்றி அவனைப் போன்ற இன்னும் பல சின்னப் பொடியன்மார்களும் வீட்டில் உம்மா – வாப்பாவுடன் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் சண்டை பிடித்துக் கொண்டு, அல்லது ஊரில் யாரிடமாவது அடி வாங்கிய அவமானத்திற்குப் பழிதீர்க்க வேண்டுமென்று சூளுரைத்துக் கொண்டு போராளிப் பொடியன்மாருடன் சேர்ந்து ஆயுதங்களும், கிரனைட்டுகளுமாய் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு ஊரைச் சுற்றி வந்தனர்.

போராளிப் பொடியன்மாருடைய எல்லாப் போராட்டங்களிலும் பனையான் போன்ற சின்ன அப்பாவிப் பொடியன்மாரும் இணைந்து தோளோடு தோள் நின்று பங்கெடுத்து உயிரையும் இழந்திருந்ததனால், அவர்களுக்கு இயக்கத்தில் வெளிப்படையாக நல்ல மதிப்புமிருந்து வந்தது.

எல்லாவற்றையும் தாமே நிர்வகிப்பதாகவும், அதிகாரம் செலுத்துவதாகவும் வெளியில் பாவ்லாக் காட்டிக் கொண்டனர். சிலர் மார்க்க விஷயங்களிலும் தலையிட்டு மௌலவிமாரையும் அடித்து இம்சைப்படுத்தினர்.

அதன்பின், பிரச்சினைகள் ஆரம்பித்த போது முதலில் பலியிடப்பட்டவர்கள் இந்த மூளையற்ற சின்னப் பொடியன்மார்தான். அந்தக் காலப்பகுதியில் ஆயுதங்கள் ஏந்தித் திரிந்த எல்லோருமே ஊர் மக்கள் தம்மை ஒரு ஜனாதிபதியின் நிலையில் வைத்து மரியாதை செலுத்த வேண்டும் என எதிர்பார்த்த சம்பந்தமற்ற அதீத பேராசையின் விளைவாய் மக்கள் அடைந்த துயரங்கள் சொல்லொணா. பனையான் இவர்களில் முக்கியமானவனாகத் திகழ்ந்தான்.

சினிமாக்களில் ஹீரோக்களின் முன்னால் வந்து நின்று காட்டமாக சிரிக்கும் பயங்கர வில்லன்களைப் போன்று பனையான், துப்பாக்கியும், கிரனைட்டுமாக வந்து நின்று மக்களை அதட்டுவான்.

பனையானுடைய துப்பாக்கியையும் ஆட்களை அடித்துத் துன்புறுத்தும் அவனுடைய வீரத்தையும் காணும்போது, ‘இவன் உண்மையிலேயே பனையான்தான்’ என்று அவன் அப்போது எண்ணியதுண்டு.

ஆனாலும், திடீரென ஆகாயத்திலும், தரையிலும் தாக்குதல் நடத்திக் கொண்டு இந்திய இராணுவத்தினர் ஊருக்குள் நுழைந்த போது பனையான் உட்பட அனைவரும் சாரனைக் கழட்டியெறிந்து விட்டு ஜட்டியுடன் தலைதெறிக்க ஓடியதாக இவன் கேள்விப்பட்டான்.

எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். ஒரு பாரிய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டது போன்ற சுதந்திரப் பூரிப்பின் செழுமை அவர்களது சிரிப்பில் தெளிவாகத் தெரிந்தது.

ஆனால், இவனுக்கோ ஆச்சரியமாக இருந்தது. ‘ச்சே… பனையான் மீனை கேவலப்படுத்திப் போட்டானுகளே…’ என்று அவர்கள் மீது இவனுக்குக் கோபமும் எகிறியது.

இது தவிர, அவர்கள் ஆற்றில் மீன் பிடிப்பதைத் தவிர்த்ததற்கு இன்னுமொரு காரணமும் இருந்தது. வீட்டிலே மலசல கூடம் இல்லாதவர்கள் அதற்கு ஆற்றங்கரையையே பயன்படுத்திக் கொள்வார்கள். முடிந்த பின். ஆற்றோரத்தில் குந்திக் கழுவி விட்டுச் செல்வார்கள்.

தேர்தல் முடிவுகளின் பின், வெற்றி பெற்ற கட்சியின் ஆதரவாளர்களுக்குப் பயந்து ஒளிந்து திரியும் தோல்வியுற்ற கட்சியின் ஆதரவாளர்கள், தமது மலசல கூடமாக மட்டுமன்றி, மறைவான வாழ்விடமாகவும் அந்த ஆற்றங்கரையையே பயன்படுத்தி வந்தனர்.

இடை நடுவில் எதிர்க் கட்சியினர் வந்து விட்டால், கழித்தது பாதி, கழிக்காதது பாதியென சாரனைக் கிளப்பிக் கொண்டே ஓட்டம் பிடிப்பார்கள்.

மனிதர்கள் போதாதென்று மேய்ச்சலுக்கு விடப்படுகின்ற சில மாடுகளும் கூட கரைக்கருவில் வந்தே சாணமிட்டு விட்டுச் செல்லும்.

இவ்வாறாக, ஆற்றங்கரைக்குள் திணிக்கப்படும் இக்கழிவுகளெல்லாம், திண்மக் கட்டியாக அல்லது நீருடன் இணைந்து கலப்புற்றதாக மாறும்போது, ஓரங்களில் கிடக்கும் மீன்கள் அவற்றை தம் உணவாக ஆக்கிக் கொள்ளும்.

ஒரு தடவை தூண்டில் எறிந்து ஆற்றில் அவர்கள் மீன் பிடித்த போது, மண்டக்கெழுத்தி ஒன்று மாட்டியது. மகிழ்வுடன் கரைக்கு வந்து அதன் வாய்க்குள் சிக்கியிருந்த தூண்டிலை மெல்லக் கழட்ட முயன்ற போது, அதன் திடீர்த்தலையசைப்பில் தூண்டில் இறுகி வாய் கிழிந்து போனது.

கிழிந்த வேகத்தில் அப்போதுதான் அது உட்கொண்டிருந்த அந்த உணவு வெளியே சிதறி அவனது கைகளில் அங்குமிங்கும் ஒட்டிக்கொண்ட போது, அருகில் நின்ற நண்பர்கள் ‘ஈஸ்… பீடா…’ என்று கத்தியவாறு பதறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

அவனுக்கு வயிற்றைக் குமட்டியது. நாசித்துவாரங்கள் கழன்று விழுமாப்போல் அவ்வளவு நாற்றம். தூண்டிலைத் தூக்கியெறிந்து விட்டு ஓடிச்சென்று குட்டை நீரில் கைகளைக் கழுவியவன், அன்றிலிருந்து ஆற்றில் மீன் பிடிப்பதை அடியோடு நிறுத்தி விட்டான்.

ஆனால், அதில் குளிப்பதைத்தான் விட முடியவில்லை. குளித்துக் கொண்டிருக்கும் போது இந்த நீர்ப்பரப்பின் எல்லாப் பகுதியிலும் அது பரவித்தானே ஒருக்கும் என்ற எண்ணம் தோன்றுகையில் அருவருப்பு வரும். சட்டெனக் கரையேறி விடுவான்.

நோன்பு காலங்கள் வந்தால் அந்த ஆற்றங்கரைதான் அவர்களுக்குப் புகலிடமாக இருக்கும். பொழுதுபோக்குக்காக அல்ல, மறைந்திருந்து சாப்பிட்டுக் கொள்வதற்காக.

அதிகாலையில் ஸஹருக்கு எழும்பும் குடும்பத்தாருடன் இணைந்து தானும் எழுந்து கொள்ளும் அவன், நன்றாக சாப்பிட்டு, ‘நவைது ஸவ்மகதின்…’ சொல்லி விட்டு, மீண்டும் விழுந்து தூங்கி விடுவான்.

விடிந்து வெயில் ஏற ஏற பசி அதிகரிக்கும். கூட்டாளிமாருடன் சேர்ந்து இரகசியமாக பாணும், வாழ்ப்பழங்களும் வாங்கியெடுத்துக் கொண்டு ஆற்றங்கரைக்கு வந்து, திருப்தியாக சாப்பிட்டு முடித்து விட்டு வீடு திரும்புவான். பள்ளிக்குச் சென்று குரான் ஓதி விட்டு வருவதாக வீட்டிலே பொய் சொல்லி நல்ல பேரும் எடுத்துக் கொள்வான். கையில் பணம் இருந்ததாலோ என்னவோ கூட்டாளிமாருக்கு எப்போதும் குறைவேயிருப்பதில்லை. கூட்டாளிமார் மத்தியில் அவன்தான் ஹீரோவாக இருப்பான்.

மாலையானதும் குடும்பத்தாருடன் இணைந்து பேரீத்தம்பழம், கஞ்சி, சர்பத் சகிதம் ஆடம்பரமாக நோன்பைத் திறந்து நல்லபிள்ளை என்று உம்மா-வாப்பாவிடம் பாராட்டும் பெற்றுக் கொள்வான்.

‘‘அந்தப் பொடியனப் பாத்தியா! இந்த சின்ன வயசிலயும் நோம்பெல்லாம் புடிச்சி எவ்ளோ நல்லாருக்குது. நீயும் இருக்கியே, கிடா மாடு மாதிரி. அந்தப் பொடியன்ட மூத்திரத்த எடுத்துக் குடிச்சாத்தாண்டா உனக்கு ரோஷம் வரும்’’

அவனது பக்கத்து வீட்டுக்காரி, அவனை உதாரணங்காட்டி தன் மகனை ஆர்ப்பாட்டமான குரலில் திட்ட ஆரம்பிக்கும் போது, அதைக் கேட்கும் இவன் யாருக்கும் தெரியாமல் கொடுப்புக்குள் சிரித்துக் கொள்வான்.

ஓர் இரவு, அந்த ஆற்றங்கரையில் அதிசயமொன்று நிகழ்ந்தது. ஏழு மணிக்குப் பிந்தியதான இரவின் துவக்க நேரத்திலே, ஆற்று அலைகளில் தங்கம் நுரைப்பதாகவும், மணல்களெல்லாம் மின்னிக் கொண்டிருப்பதாகவும் எழுந்த செய்தி காட்டுத்தீ போல் ஊரெங்கும் பரவிற்று. வியப்புக்குள்ளான எல்லோரும் அந்த அதிசயத்தைப் பார்ப்பதற்கென திரள் திரளாக ஆற்றங்கரை நோக்கிப் படையெடுத்தனர். வீட்டைப் பூட்டிக் கொண்டு புறப்பட்ட உம்மா-வாப்பாவுடன் இவனும் இணைந்து கொண்டான்.

அங்கு சென்ற போது, ஊரே அவ்விடத்தில் கூடியிருப்பதைக் கண்டு பிரமித்த அவன், நெருங்கிச் சென்று ஆற்றை நோக்கிய போது, பிரமிப்பினதும் ஆச்சரியத்தினதும் உச்சிக்கே சென்று விட்டான்.

வழமையாக இரவு நேரத்தில் இருளுக்குள் புதையுண்டு, மயானக் கிளர்ச்சியூட்டும் அந்த ஆறு, அன்று அலைக்கு அலை டியூப்லைட் பொருத்தப்பட்ட திருமண வீடு போன்று பளபளவென்று பளிச்சிட்டு கண்களைக் கௌவியது.

அலைகளின் வீச்சில் மேலெழும் நுரைகள் சிறுசிறு மின்குமிழ்களாக வெளிச்சம் பரப்பி ஆச்சரியமூட்டின. நீர் செறிந்த மணற்பரப்பு தங்கக் கற்களாகப் பளபளத்தது.

அதில் கைகளால் அழுத்திக் கீறி விடுகின்ற போது, வெளிச்சக் கோடொன்று தோன்றி நின்று பின் மறைந்து போனது. எல்லோர் முகங்களிலும் வியப்புக் குறிகள் விரவிக் கிடந்தன.

வந்தவர்களில் சிலர் பளபளத்த அந்த நீரையும் மண்ணையும் பாத்திரங்களில் அள்ளியெடுத்துக் கொண்டு செல்லலாயினர். இவனும் எதேச்சையாகக் கொண்டு சென்றிருந்த இரண்டு போத்தல்களில் ஒன்றில் நீரையும், மற்றொன்றில் மண்ணையும் நிரப்பியெடுத்துக் கொண்டு, நீண்ட நேரத்தின் பின் எல்லோருடனும் வீடு வந்து சேர்ந்தான்.

மறுநாள் காலையில் போத்தல்களைத் திறந்து பார்த்த போது, வெறும் ஆற்று மணலும் உப்பு நீருமே இருப்பது கண்டு எல்லோரும் ஏமாந்து போயினர். ‘மனிதர்களைப் போன்று நீயுமா ஏமாற்றத் தொடங்கிவிட்டாய்?’ என்று ஆற்றைப் பார்த்து அவனுக்குக் கேட்கத் தோன்றியது.

அதற்குப் பிறகு வந்த இரவுகளில் அப்படி எதுவும் அதிசயங்கள் நடந்ததாக அவன் அறியவில்லை. ஆனால், ஆறாத ரணமான அந்த சோக நிகழ்வு மட்டும் நடந்தேறியது.

இராணுவத்தினரால் விரட்டப்பட்ட புலிப்படையினர் ஓரிரவு வாள்-துப்பாக்கி சகிதம் ஊருக்குள் புகுந்து உறக்கத்திலிருந்த மக்களை வெட்டியும் சுட்டும் மிகக் கொடூரமாகக் கொன்று குவித்து விட்டுச் சென்றனர்.

மறுநாட்பொழுது உறைந்த இரத்தத் துளிகளிலும், சிதைந்த உடலுறுப்புகளிலுமாக விடிந்த போது, உயிர் தப்பியிருந்த மக்களின் கதறல் ஒலியும், அழுகை வெடிப்பும் விண்ணையே அதிர வைத்தன. நாலா திக்கிலும் இரத்த வீச்சம் நாசியை நிறைத்து, வாழ்வின் மீதான பயங்கரத்தை மனதுக்குள் அழுத்தித் திணித்தது. எல்லோர் முகங்களும் வெம்பாலைப் பாறையாக இறுகிக் கிடந்தன.

‘‘வெட்றத்துக்கு வந்த நாய்கள், தோணில ஏறி, நம்ம ஆத்து வழியாத்தான் வந்திருக்கானுகள்’’ நடுவீதியில் நின்று கொண்டு ஒருவர் ஆவேசமாகக் கத்திய வார்த்தை, அவனது செவிப்பறைகளில் இடியாக வந்து இறங்கிய போது, அவன் அதிர்ச்சியுற்றுத் துடித்துப் போனான். இந்த மாபெரும் வக்கிரச் செயலுக்கு ஆற்றங்கரையும் உடந்தையா? ஒரு சமூகத்தையே அழிக்க வந்த கொடும்பாவிகளுக்கு இந்த ஆற்றங்கரையும் துணைபோயிருக்கின்றதா?

இரத்த வீச்சம் நிறைந்த அந்த நிஜத்தை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. வாழ்வின் மிருதுவான பகுதிகளையெல்லாம் சுட்டெரித்துக் கரிக்கும் அனற்சாற்றாய் வலிகொடுத்த அந்தக் கொடூர நிகழ்வு ஆறாத காயமாக அவனது உள்மனதில் பதிந்து போயிற்று.

அன்றைய படுகொலை நிகழ்வில் உறவினர்கள் பலருடன், அவனது வகுப்புத்தோழி ஒருத்தியையும் அவன் இழந்து விட்டிருந்தான். உறவினர்களின் இழப்பை விட, நெருக்கமான பழக்கம் கொண்டிருந்த அவளது இழப்பு அவனை வெகுவாகப் பாதித்தது.

பாடங்களில் கெட்டிக்காரியாகவும், ஆசிரியர்கள் மட்டத்தில் நற்பெயரெடுத்தவளாகவும் இருந்த அவளுக்கும் இவனுக்கும்தான் பரீட்சைகளின் போது கடுமையான போட்டி நிலவும். அதனால் அவனையும் அவளையும் இணைத்து நண்பர்கள் கேலி செய்யும் போது இருவருமே உள்ளுக்குள் அதனை ரசித்தாலும், முகத்தில் பொய்க்கோபம் காட்டி நண்பர்களை அடக்குவர்.

அவளையும், இன்னும் பல பெண்களையும் கற்பழித்துக் கொலை செய்துவிட்டதாக ஊரில் பேசிக்கொண்டார்கள். கற்பழிப்பதென்றால் என்னவென்று அப்போது அவனுக்குப் புரியவில்லை. கைகால்களை வெட்டியெறிந்திருப்பார்கள் போலும் என்றெண்ணி போது, அந்த நிகழ்வை மனதுக்குள் கற்பனை செய்து, அதன் பயங்கர வலியுணர்வைத் தாங்கிக் கொள்ள முடியாமல் சிந்தனைகள் அறுந்து உடலுதறினான்.

மிகக் கூரான ஈட்டி முனையால் உடலில் துளையிட்டுக் குடைவதான கொடூரத்தனம் உதிர்க்கும் ஆழ்ந்த வலி அவனை நைத்து வருத்திற்று.

அந்த சோகத்திலும் ஆற்றங்கரையின் மீது அவனுக்கு தீராத சீற்றம் தோன்றியது. ஓட்டமும் நடையுமாகச் சென்று ஆற்றங்கரையை வந்தடைந்தான். மூச்சு வாங்கிக் கொண்டே புற்தரையில் கால்பதித்து நிமிர்ந்து நின்று ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த அவ் ஆற்றை உக்கிரமாகப் பார்த்தான்.

‘த்தூ…. உன்னில் எவ்ளோ அன்பும் நம்பிக்கயும் வெச்சிருந்தம். இப்பிடி எங்களக் காட்டிக் குடுத்திட்டியே. எங்கட சொந்தக்காரங்களக் கொல்ல வந்த பாவிகள கஷ்டம் இல்லான கரசேத்து உட்டிரிக்கியே. க்கா… த்தூ..’

சத்தமிட்டு அலறிய அவனது குரலில் ஜீவனிருக்கவில்லை. கண்ணீரும் சோகமும் இணைந்து இறுகிக் கிடந்தன.

குனிந்து கற்களைப் பொறுக்கியெடுத்து ஆற்றை நோக்கி ஆவேசமாக வீசியெறிந்தான். அண்மித்துச் சென்று அதனுள்ளே காறித்துப்பினான். கரைக்கு வந்த அலைகளை கால்களால் அடித்துத் துரத்தினான்.

அவனது கண்களிலிருந்து வழிந்த கண்ணீர்த் துளிகள், அவனது கன்னத்தினூடாக வழிந்து, கீழே விழுந்து ஆற்று நீருடன் கலந்து சங்கமமாகிப் போயின.

இறுதியாக, ஆழமான ஒரு பார்வை பார்த்து விட்டுத் திரும்பியவன், பின்னர் அந்தப்பக்கம் செல்லவேயில்லை.

நூற்றுக்கும் அதிகமான ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் காவு கொண்டதான அந்த இறுகிய சோக தினம் ‘வெட்டுப்பட்ட நாள்’ என்ற அடையாளப் பெயரோடு அவனது ஊரின் வரலாற்றுச் சரித்திரத்துடன் பிணைந்து போனது.

‘‘ஊர்ல வெட்டுப்படக்குல இவனுக்கு நாலு வயசிருக்கும்’’

‘‘போன மாசந்தான் புள்ள குமராயினிச்சிகா. வெட்டுப்படக்குல ரெண்டு மாசக்குழந்த’’

‘‘வெட்டுப்பட்ட துண்டுக்குல தம்பிட வாப்பா வெளிநாட்லதான் இருந்தாக’’

ஒரு புதிய வருடக்கணக்கென ஞாபகித்துப் பேசுமளவு ஊருக்குள் சகலரதும் உள்ளங்களில் அது ஆறாத ரணமாக அழுந்திப் பதிந்து விட்டது. அந்த நிகழ்வுக்குப் பின், ஆற்றங்கரைக்குச் செல்வதை அவன் முற்றாக வெறுத்து நிறுத்தி விட்டான்.

இனிமேல் தனக்கு அங்கு ஆக வேண்டியது எதுவுமில்லையென்ற அவனது தீர்மானமானது அவனுக்கும் அவ் ஆற்றங்கரைக்கும் இடையில் ஏற்பட்டு விட்டிருந்த விரிசலை மேலும் அகலமுறச் செய்து கொண்டே போயிற்று. ஆனாலும் ஆற்றங்கரையைப் பற்றிய கதைகளும், உரையாடல்களும் அடிக்கடி அவனது காதுகளுக்குள் வந்து விழுந்து உள்ளத்தைப் பிசைய வைக்கும்.

‘‘பொடியன்மாரு ஆத்தங்கரயாலதான் ஊருக்குள்ள வாறானுகளாம்’’

‘‘ஆத்தங்கரக்கி சும்மா போறத்துக்கே பயமாயிருக்கிடா’’

‘‘ஆத்தங்கரக்கி மீம் புடிக்கப் போனா பொடியன்மாரு தோணியயும், வலயயும் பறிச்சி ஆக்களுக்கு அடிச்சும் அனுப்புறானுகளாம்’’

‘‘ஆத்தங்கரக்கி பக்கத்தில நேவிப்பட வந்திரிக்காங்களாம். மண் மூடயெல்லாம் அடுக்கி சென்றி கட்டிரிக்காங்களாம்’’

ஊருக்குள் நிலவிய அந்தக் கதைகளைக் கேட்கும் போதெல்லாம், இன்பம் எக்களிக்கும் பூங்காவாக இருந்த தன் பிரியமிகு ஆற்றங்கரை அச்சபூமியாக மாறிப்போய் விட்டதை உணர்ந்து அவன் உள்ளுக்குள் புழுங்கிக் குமுறினான். கண்ணீரையும், கவலையையும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.

சிந்தனைகளை வேறு திசைகளில் திருப்ப முயன்ற போதிலும், ஆற்றங்கரையில் தென்றலை நுகர்ந்திருந்த பால்யத்தின் பசுமை நினைவுகள் முரட்டு அதிர்வுகளாய்க் கிளர்ந்து அடிக்கடி அவனது உள்ளத்தை வலிக்கச் செய்தன.

ஆயிற்று! காலவோட்டத்தின் வேகத்தை ஆச்சரியப்பட்டுக் கொண்டே பதினைந்து வருடங்களைக் கடந்து வந்தாயிற்று.

இந்தப் பதினைந்து வருடங்களில், அவன் படித்துப் பட்டம் பெற்று, கௌரவமான அரச உத்தியோகத்தில் இணைந்து, அயலூரில் காதலித்த பெண்ணை திருமனமும் செய்து குடும்பஸ்தனாகவும் ஆகிவிட்டிருந்தான்.

உறவினர்களைப் பார்த்துச் செல்வதற்காக மனைவியுடன் ஊர் வந்த போது, திடீரென ஆற்றங்கரையைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் உந்தவே நீண்ட போராட்டத்தின் பின், மனதின் பிடிவாதத்துக்குக் கட்டுப்பட்டவனாகி, காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

நீர் முட்டிய கணைகளை கசக்கி விட்டுக் கொண்டே சிந்தனைகளிலிருந்து அகன்று ஆற்றை ஆழ்ந்து நோக்கினான் அவன். அதே முழமளவு அலையுடனும், இரைச்சலுடனும் அது நுரை கக்கிக் கொண்டிருந்தது.

அது தன் மக்களுக்குச் செய்து விட்ட துரோகத்தையும் இப்போதைய சாதுத்தோற்றத்தையும் பார்த்த போது அவனுக்கு உள்ளம் முழுவதும் அனலாகி எரிச்சலெடுத்தது. சிவந்திருந்த கண்களில் கோபம் காட்டினான்.

இந்த ஆற்றங்கரையைப் போலவே, செய்வதையும் செய்து விட்டு, பொறுப்பை வேறு பக்கம் தூக்கிப் போட்டு விட்டு கல்லுளி மங்கனாய்ப் படுத்துக் கிடக்கும் ரோஷமற்ற மனிதர்களைப் பற்றி அவனது சிந்தனை அசை போட்டது. அத்தகைய இயல்புடையோரே இன்று சமாதானம் பற்றியும், ஐக்கியம் பற்றியும் பேசுவதை நினைத்த போது அவனுக்கு சிரிப்பாக வந்தது.

ஆனாலும் அவன் தெளிவாக இருந்தான். இந்த ஆற்றங்கரை தன் மக்களுக்கு செய்து விட்ட துரோகத்தை ஒப்புக்கொண்டு மற்றொரு முறை இதனைச் செய்ய மாட்டேன் என உறுதி கூறினாலும் கூட அதனை ஏற்றுக்கொள்ள அவன் தயாராக இல்லை.

ஏனெனில், இன்னொரு துரோகத்தைத் தாங்கிக் கொள்ளும் மனோபக்குவமும், பொறுமையும் தனக்கில்லையென்பதை அவன் தெளிவாகவே அறிந்திருந்தான். அவனது வயிற்றின் அடியிலிருந்து ஆழ்ந்த பெருமூச்சொன்று உற்பத்தியாகி ஆசுவாசமாக வெளிப்பட்டு காற்றுடன் கலந்து கரைந்து போனது.

நீண்ட நாட்களாக உள்ளத்தை அழுத்திக் கொண்டிருந்த பெரும் சுமையன்றை இறக்கி வைத்து விட்ட ஆன்ம திருப்தி அவனது முகத்தில் நிரம்பித் தெரிந்தது. எழுந்து மண்-தூசுகளைத் தட்டி விட்டுக் கொண்டே தன் காரை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

***

நன்றி : ஹனிபாக்கா , ஸபீர் ஹாபிஸ் (http://irukkam.blogspot.com/ )

**

மேலும் : ஸபீர் ஹாபிஸின் ‘இரவுப் போர்வையும் நானும்’ (pdf)

**