விடியுமா ஸதீநாத் பாதுரி?

Satinath Bhaduri-bwஸதீநாத் பாதுரி எழுதிய ’விடியுமா?’ என்ற வங்க நாவலிலிருந்து.. (வெளியீடு : நேஷனல் புக் டிரஸ்ட் , தமிழாக்கம் : என்.எஸ். ஜகந்நாதன்)

திரும்பத் திரும்ப எப்போதுமே எல்லாருமே சொல்வது : “பீலுவைப் போல ஒரு பிள்ளையைப் பார்ப்பது அரிது.”. இந்தப் புகழ்ச்சிக்கான தகுதியைச் சேகரித்துக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம், தன்னலமின்மை, ஆசைகளின் அடக்கம் என்ற பாதையிலிருந்து வழுவாமல் என்னைத் தடுத்து நிறுத்திவிட்டது. பொங்கி எழும் எத்தனை ஆசைகளச் சாட்டையடி கொடுத்து அடக்கியிருக்கிறேன்! இதற்குப் பிறகும் மன எழுச்சிகளைப் பதனம் செய்து ஸ்திதப்ரக்ஞ்னாகி விட்டேன் என்று சொல்லிக் கொள்ள முடியாது. அப்படி இருந்தால் இந்தச் சந்தேகம் இப்பொழுது வருவானேன்? எத்தனையோ போகங்களை நுகர வேண்டுமென்ற பசி ஏனோ என் மனத்தில் எழுந்தெழுந்து மரித்த வண்ணம் இருக்கிறது. வாழ்க்கையில் ஒன்றையுமே சாதிக்க முடியவில்லை, என்னால். நான் வரலாற்றில் பெயரை விட்டுச் செல்லவில்லை. எனக்குக் கிட்டியதெல்லாம் ஃபுட்பால் மாட்ச்சுக்கு டிக்கெட்டுக்காக நிற்கும் ‘பாம்பு’ க்யூ போலிருக்கும் முடிவற்ற தேச பக்த தியாகிகளின் வரிசையில் ஓர் இடத்தைப் பெறும் சௌபாக்கியம்.

பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட, என் கதையை ஒரு வாரத்தில் மறந்து விடுவார்கள். இப்பொழுது கூட அவர்களுக்கு ஞாபகம் இருப்பது சந்தேகம். அப்படியென்றால் இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தேன்? நான் ஒரு மஹா புருஷன் அல்ல. இரத்தம், தசைகளால் ஆன சாதாரண மனிதன். மனிதனிடம் உள்ள எல்லாக் குறைகளும் பலவீனங்களும் நிறைந்தவன். கீட்ஸ் 25 வருஷங்கள் வாழ்ந்தான். ஷெல்லி 30 வருஷம். பிட் 23ஆம் வயதில் இங்கிலாந்தின் பிரதம மந்திரியானான். நானோ 33 ஆம் வயதில், நாய், பூனை மாதிரி மரிக்கப் போகிறேன். யாரும் என்னைப் பற்றிக் கேள்விப்படப் போவதில்லை, தெரிந்து கொள்ளைப் போவதில்லை. யாரும் இரண்டு சொட்டு சூடான கண்ணீர் விடப் போவதில்லை. நான் செய்ய முயன்ற சிறு பிரயத்தனங்கள் எல்லாம் வீணாகவே போய்விட்டன. பயனற்றுப் போன இந்த முயற்சிக்கு யார் என்ன விலை கொடுப்பார்கள்? கவிகள் வேண்டுமானால் பாடலாம்; உலகில் ஒன்றுமே வீண் போவதில்லை, பாலைவனத்தில் பாய்ந்து மாயும் நதி கூட ஏதோ ஒரு முக்கியமான பணியைச் செய்கிறது என்று. இதெல்லாம் அர்த்தமற்ற கூற்றுகள், உலக அநுபவமற்ற ரொமாண்டிக்குகளின் உணர்ச்சி விலாஸம்.

இல்லை, ஒரேயடியாக அர்த்தமற்றவை என்று சொல்வதற்கில்லை. என் வாழ்க்கைக்கு ஒரு மதிப்பும் இல்லாதிருக்கலாம். வேறு இரண்டு மூன்று வாழ்க்கைகளுக்கும் மதிப்பிலாமல் இருக்கலாம். ஆனால் நான் கண்டவை? ஜன சக்தியின் இயற்கை உருவம். அந்தச் சக்தி, பல யுகங்களாகச் சேகரிக்கப்பட்டுப் பாறைபோன்று தரை மட்டத்தின் கீழே தூங்கிக்கொண்டிருந்தது. அது மட்டும் விழித்து உணர்வு பெற்றால் என்ன செய்ய முடியும் என்பதை மக்களுக்குக் காட்டியது ஒரு சாதாரணச் செயல் அல்ல. அரசியல் ஊழியர்களின் வாழ்வு மிகவும் ஷீணமானது, மிகவும் அபாயகரமானது.. ‘சிம்மாசனம் அல்லது தூக்குமேடை’. தூக்குக் கயிற்றின் மேல் நம்பிக்கை வை. ஒருவேளை மக்களின் மரியாதை என்ற ராஜமகுடம் உனக்குக் கிட்டக்கூடும். முடிவேயில்லாத, கிலேசம் நிறைந்த வாழ்க்கை. தினந்தோறும் அணுஅணுவாக வாழ்க்கையின் சக்தி, உற்சாகம் எல்லாம் கரைந்து போவதைப் பார்ப்பாய். உன் மனத்தில் எழும் திருப்தியைத் தவிர வேறு எதையும் எதிர்பார்த்தால் எமாந்து போவாய். பணக்காரர்களின் ஏசலும் ஏளனமும் உன் வாழ்க்கையைச் சகிக்க முடியாதவையாக ஆக்கிவிடக் கூடும். ஒரு அடி  முன்னே எடுத்து வைத்தால் எத்தனை ஆயிரம் பேர்களின் சுய நலத்துக்கு இடைஞ்சல் ஏற்படுகிறது! இவர்கள் ஒவ்வொருவரும் உன் சத்துருவாகி விடுவார்கள். ஒருவரின் மதிப்பைப் பெற்றால், பத்துப் பேர்களின் பரிகாசத்திற்கும், ஏச்சுக்கும் பாத்திரமாவாய்.

இந்த வாழ்க்கையிலிருந்து ஜெயிலுக்கு வருவதே ஒரு பெரிய நிம்மதி. மரண தண்டனை கூட ஒரு பெரிய வரப்பிரஸாதம். எத்தனை பேர் மடிகிறார்கள்- சண்டையில், ஒரு அபராதமும் செய்யாமல், ஏன் என்று கேட்டால் அவர்களுக்கே தெரியாது, எத்தனை பேர் பசியால் பிணியால், வைத்திய வசதியில்லாமல் மரிக்கிறார்கள்! அவர்களுடைய குற்றம்? மனிதனாகப் பிறந்ததுதான். எந்தப் பிறப்பின்பால் அவர்களுக்கு எந்த விதமான பொறுப்பும் இல்லையோ, அப் பிறப்புக்காகச் செலுத்தும் அபராதம். சாலையில் வண்டி ஏறிச் சாவது போல், வயலில் பாம்பு கடித்துச் சாவது போல், அரசியில் களத்தில் தூக்குத் தண்டனை ஓர் எதிர்பாராத விபத்து. இதற்கும் மேலாக ஒன்றுமில்லை. தன் கட்சிக்கு வெளியில் உள்ளவர்களோடு எல்லாம் போராட வேண்டும். எத்தனை பிற்போக்குச் சக்திகளுடன் போராட்டம்! இதற்காகவாவது எல்லா அரசியில் ஊழியர்களும் தயாராக இருக்கிறார்கள் என்று சொல்லலாம். ஆனால் தன்னுள்ளேயே நடக்கும் போராட்டம்? வெளிப் போராட்டங்களை விட இது பயங்கரமானது. கட்சிக்கும் கட்சிக்கும் போராட்டம், சாதிக்கும் சாதிக்கும் போராட்டம், பிரதேசத்துக்கும் பிரதேசத்தும் போராட்டம் – வாழ்க்கை சகிக்க முடியாததாகி விடுகிறது. ஆனால் இவையெல்லாம் அரசியல் விளையாட்டின் நியமங்கள். கொடூரமான இரக்கமற்ற விதிகள். பலவீனத்திற்கு இங்கு இடமில்லை. எல்லோரும் முன்னால் போய்க் கொண்டிருக்கிறார்கள். பின் தங்கியவர்கள் மரிப்பார்கள். அவர்களைத் திரும்பிப் பார்ப்பதற்கு அவசியமில்லை.

***

நன்றி :  நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா