‘வைரமுத்துவும் ஜபருல்லாவும்’ என்று நண்பர் அப்துல் கையும் நன்றாக அலசியிருப்பதின் தொடர்ச்சியாக இதை இடுகிறேன். ‘Come on cheer up man. Let the world tell thousand things. Keep on and go on with your works. Don’t make us feel dull’ என்கிறார் கையும். நண்பர்களே, இவர்களுக்குள் இன்னொரு ஒற்றுமையுண்டு. ‘கேள்விகளால் வேள்விகள் செய்யும்’ வைரமுத்து, வேள்விகளால் கேள்விகள் செய்யும் ஜபருல்லா , இருவருமே சிற்றிதழ்களின் மேல் பெரும் மதிப்பு வைத்திருப்பவர்கள். ** சந்தா கட்டுவதில்லை!
*
கிரேக்க எழுத்தாளர் ‘பேக்ஸைட் டிஸண்ட்ரிமேனின்’ இலக்கிய கலாட்டா இடம்பெற்ற குமுதம் சிறப்பிதழிலிருந்து (21-10-2009) கொஞ்சம்:
குமுதம் : உங்கள் பார்வையில் இலக்கியம் என்பது என்ன? சிற்றிதழ்களில் வரும் கட்டுரைகளும் கவிதைகளும்தான் இலக்கியம் என்ற பொதுவான கருத்து இருக்கிறது. வெகுஜன ஊடகங்களில் வெளிவருபவைக்கு இலக்கிய அந்தஸ்து கிடையாதா?
வைரமுத்து : இலக்கியம் என்பது உயிர். உயிருக்கு வரையறை உண்டா? இதுதான் உயிர் என்று சொல்ல முடியுமா? உயிர் என்பது உணரப்படுவது. இலக்கியம் உணரப்படுவது. கடவுள்,. இலக்கியம், உயிர் இவை மூன்றும் ஒரு ஜாதிச் சொல். இந்த மூன்றையும் பிரித்துப்பார்க்க முடியாது. உணரத்தான் முடியும். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றாலும் கடவுளைப் புரிந்து கொள்பவர்களை, கடவுளை உணர்ந்து கொண்டவர்கள் என்றே புரிந்து கொள்கிறேன். ஆகவே இலக்கியம் என்பது உணரத்தக்கது. ஆனால் என்னைப் பொறுத்தவரை நல்ல இலக்கியம் எது என்று கோடிட்டுச் சொல்ல முடியும். இது என் கருத்து. இது பொதுவான கருத்து என்றோ இலக்கியத்திற்கு வரையறை என்றோ யார் மீதும் கருத்தைத் திணிக்க மாட்டேன். நான் நினைப்பது ஒன்றுதான். ஒரு நல்ல இலக்கியம் என்பது எனக்குள் நேர்ந்திருந்த பழைய அனுபவத்தை புதுப்பித்துக் கொடுப்பது அல்லது எனக்கு நேரவே நேர்ந்திராத நேரவே முடியாத ஒரு அனுபவத்தை எனக்குள் அழைத்து வருவது. வெகுஜன ஊடகங்களில் வெளிவரும் படைப்புகளுக்கு இலக்கிய அந்தஸ்து கிடையாதா என்பது ஒரு முக்கிய கேள்வி. சிற்றிதழ்களை நாம் மதிக்க வேண்டும். போற்றவேண்டும். வணங்க வேண்டும். சிற்றிதழ் என்பது தலைக்காவிரி மாதிரி. அங்கிருந்துதான் வெகுஜன இலக்கியம் தொடங்குகிறது. தலைக்காவிரி தொடங்குகிற இடத்தில் ஒரு ஆடு தாண்டிக் குதித்துவிடும் என்பார்கள். இதுதான் பிரவாகம் எடுத்து, கரைகளை ஊடறுத்துக்கொண்டு அருவிகளாய், வெள்ளமாய் வயல் வெளிகளில் பாய்கிற ஒரு நதியாக வருகிறது. அதனால் தலைக்காவிரியில் எப்படி ஊற்று சிறிய அளவில் தொடங்கி பெரிய வெள்ளமாய் பாய்கிறதோ, அதேபோல்தான் வெகுஜன இலக்கியம்கூட சிற்றிலக்கியம் என்ற தலைக்காவிரியில்தான் தொடங்குகிறது. ஆனால் ஒரேயொரு விஷயம் , இன்றைக்கு நாங்கள் செய்துகொண்டிருக்கிற வெகுஜன இலக்கியம் என்பது முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் சிற்றிதழ்களில் அறிமுகப்படுத்தப்பட்டதுதான். இன்றைக்கு சிற்றிதழ்களில் அறிமுகப்படுத்தப்படும் இலக்கியங்கள் இன்னும் முப்பது ஆண்டுகளில் வெகுஜன இலக்கியமாக மாறும். அதனால் சிற்றிதழ்கள் தொடங்கியவர்கள் வாழ்க. அதில் எழுதுகிறவர்கள் வாழ்க. இன்னும் சொல்லப்போனால் சிற்றிதழ்களைத் தொடங்கியவர்கள்தான் இன்று வெகுஜன ஊடகங்களுக்கு வந்திருக்கிறார்கள். அதனால் தொடக்கம் என்பது சிற்றிதழ். அதன் தொடர்ச்சி என்பது வெகுஜன ஊடகம்’
*
குறிப்பு : * பிஸாது அல்ல. (இவர்கள் மேலுள்ள பிரியத்தால்) மற்றவர்கள் கட்டிவிடுவார்கள் என்று அர்த்தம். இப்போதெல்லாம் இப்படித்தான் விளக்க வேண்டியிருக்கிறது.
நன்றி : வைரமுத்து, குமுதம்
*
இரு சுட்டிகள் :
‘இது ஒரு பொன்மாலைப் பொழுது’ – காணொளி
வைரமுத்து : நான் அறிந்தவைகளினூடாக – டி.சே தமிழன்