எனது பஷீர் – சுகுமாரன்

கேரளத்தின் பருவ மழைக் கடைசியில் ஒருநாள். கோழிக்கோட்டிலிருந்து பேப்பூர் செல்வதற்காகப் பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன். காலையிலிருந்தே மழை விட்டு விட்டுப் பெய்து கொண்டிருந்தது. இந்த மழையில் பேப்பூர் போக வேண்டுமா என்ற குழப்பத்தில் நின்றிருந்தேன். பேப்பூர் போகும் பஸ் வந்து நிற்கும் வரையில்தான் அந்தக் குழப்பம் நீடித்தது. பஸ்ஸைக் கண்டதும் கால்கள் முடுக்கிவிட்டவை போல ஓடின. ஜன்னலோரமாக சீட்டைப் பிடித்து அமர்ந்து கொண்டேன். பஸ் நகர்ந்தது. பேப்பூரில் வைக்கம் முகம்மது பஷீரைப் பார்க்கப் போகிறேன் என்ற உற்சாகம் மனதில் ததும்பியது.

மலையாள மொழியைக் கற்று இலக்கியங்களைப் படிக்கத் தொடங்கிய ஆரம்பக் கட்டத்திலேயே சில எழுத்தாளர்கள் என்னை மிகவும் கவர்ந்தார்கள். அவர்களில் பஷீர் முக்கியமானவர். ‘இந்த மொழியில் எனக்குப் பிரியமான எழுத்தாளர் பஷீர்தான் என்று உறுதி செய்து கொண்டேன்.

பஷீருடன் புத்தகங்கள் மூலம் அறிமுகமான பிற எழுத்தாளர்கள் எனது ருசியும், கருத்துகளும் மாறியபோது தங்கள் நாற்காலிகளைக் காலி செய்து கொண்டார்கள். ஆனால் பஷீரும் அவரது சிம்மாசனமும் அப்படியே இருக்கின்றன.

பஷீரின் வைலாலில் வீடு எல்லா கேரள வீடுகளையும் போல சுமாராகப் பெரியது. தெருவிலிருந்து வாசலை அடைவதற்குள் இருபுறமும் மரங்கள், பூச்செடிகள். முற்றத்தில் திண்ணை வெளியே பார்த்தபடி சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார் பஷீர். படிகளுக்கு அருகே நின்று சிறிது தயங்கினேன். தியானத்தில் இருப்பவர் போலக் கண்களை மூடியிருந்த பஷீர் விழி திறந்து பார்த்தார்.

“வா கயறி இரிக்கு”

படியேறினேன்.

பஷீர் தலையைத் திருப்பி உள்ளே குரல் கொடுத்தார்.

‘ஃபாபி சாய எடுக்கு. ஒரு ஆள் வந்நிட்டுண்டு.”

“நான் தமிழ்நாட்டிலிருந்து வருகிறேன். உங்கள் வாசகன். உங்களைச் சந்திக்க வேண்டும் என்று நீண்டகாலமாக விரும்பி இருந்தேன். அதற்காகவே வந்தேன்” என்றேன்.

“எல்லாரும் சேர்ந்து என்னை மிருகக் காட்சிச் சாலையில் இருக்கிற ஜந்து மாதிரி ஆக்கிவிட்டீர்கள்.”

பஷீரின் பதில் கொஞ்சம் அதிர்ச்சியளித்தது.

“அட, பயப்படாதே. சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். ஒரு பொடிப் பையன் என்னைப் பார்க்க இவ்வளவு தூரம் வந்திருக்கிறான் என்பது எவ்வளவு சந்தோஷமான காரியம்”

சொல்லிவிட்டுக் கண் சிமிட்டினார் பஷீர்.

“இதா சாயா ” பஷீரின் மனைவி தேநீர் டம்ளர்களுடன் வந்தார்.

“இதாணு மாஹானாய பஷீரின்டெ பத்னி. ஃபாபி பஷீர்.”

“தெரியும்” என்று சொல்லிவிட்டு வணங்கினேன்.

“தமிழ்நாட்டிலிருந்து வருகிறான்” என்றார் பஷீர்.

“நல்லது, சாப்பிட்டுவிட்டுப் போகலாம்.” பஷீரின் மனைவி சொன்னார்.

நான் போயிருந்தது பஷீருக்கு மோசமான காலகட்டம் அல்லது மலையாள இலக்கிய உலகுக்கு கிரணகாலம்.

பஷீரின் சொந்த வாழ்க்கையில் இழப்புகள் ஏற்பட்டிருந்தன. இலக்கிய வாழ்க்கையிலும் பொய்ப்படலம் கவிந்திருந்தது.

பஷீரின் சொந்த அனுபவம் ‘மதில்கள்’ என்ற நாவல். அது ஆர்தர் கோஸ்லர் எழுதிய ‘நடுப்பகல் இருட்டு’ நாவலின் திருட்டு என்ற பிரச்சாரம் நிலவியிருந்தது.

பஷீர் ஒரு முஸ்லிம் மதவாதி என்றும் அவதூறு சொல்லப்பட்டிருந்தது. இந்தப் பொய்க்கருத்துக்கள் பஷீரை மௌனியாக்கி இருந்தன. வேதனையின் மௌனம் அது.

‘சொல்லிவிட்டுப் போகட்டுமே. மனிதர்கள் என்றால் நாலு நல்லதும் சொல்வார்கள். கெட்டதும் சொல்வார்கள். நாம் நல்லதை மட்டுமே எடுத்துக்கொண்டால் போகிறது’ என்றார் பஷீர்.

இந்திய மொழிகளின் மிகச் சிறந்த இலக்கியவாதிகள் என்று பட்டியல் தயாரித்தால் வைக்கம் முகம்மது பஷீரின் பெயர் நிச்சயம் இடம்பெற வேண்டும்.

பஷீரின் இலக்கியத்தில் அவரே முக்கிய கதாபாத்திரம். அவருடைய அனுபவங்களே கதையின் சம்பவங்கள். பஷீரின் எல்லாப் படைப்புகளையும் படித்து முடித்தால் ஏறத்தாழ அறுபது வருட கேரள வரலாற்றை சுவாரசியமான முறையில் தெரிந்து கொண்டு விடலாம்.

“இப்படி ஒரு பாணியை வேண்டுமென்றே  தேர்ந்தெடுத்தீர்களா?” என்று கேட்டேன்.

“எனக்கு அனுபவப்பட்டதை எழுதுகிறேன். அவ்வளவுதான். அதில் நடை, உத்தி என்று மெனக்கெடுவது இல்லை.”

எண்பதுகளில் பஷீர் அதிகம் எழுதவில்லை. அவ்வப்போது பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுதுவதைத் தவிர. படைப்பிலக்கியமாக எதுவும் வெளிவரவில்லை. ஏன்?

“எனக்குச் சொல்ல இருப்பதைச் சொல்லி விட்டேன் என்று தோன்றியது. நிறுத்தி விட்டேன். வாழ்க்கையை எழுதி எழுதிப் பார்த்தது போதும். கடவுளின் கஜானாவில் மிச்சமிருக்கிற நாளை வாழ்ந்து பார்க்கறதுதானே சரி. என்ன சொல்கிறாய்?” என்றார் பஷீர்.

நான் பேச வந்தவன் அல்ல. பஷீர் பேசுவதைக் கேட்க வந்தவன். நான் என்ன சொல்ல?

பிற்பகல். பஷீரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டேன்.

“இனி வரும்போது இங்கே வா. பேசிக் கொண்டிருக்கலாம். பேச்சும் எழுத்தைப் போலத்தான் குஷாலான காரியம்.”

கை கூப்பினேன். சாய்வு நாற்காலியிலிருந்து எழுந்து நின்றார் பஷீர். நீண்ட கைகள். இரண்டு கைகளும் என் தோள் மீது பதிந்தன. மெல்ல இழுத்து அவரோடு சேர்த்துக் கொண்டார்.

“மங்களம். நல்லது வரட்டே” என்று தலைமீது கை வைத்து ஆசீர்வதித்தார்.

நெகிழ்ந்து போனேன். என் தகப்பனார் கூட என்னை அவ்வளவு ஆதரவாக அணைத்து வாழ்த்தியதாக நினைவில்லை.

மறுபடியும் பெய்யத் தொடங்கியிருந்தது மழை. வலுவாக இல்லை. இதமாகப் பெயது கொண்டிருந்தது.

***

குங்குமம் – ஜூலை, 1994-ல் வெளியான கட்டுரை – ‘திசைகளும் தடங்களும்‘ நூலிலிருந்து..

***

நன்றி : சுகுமாரன், குங்குமம், அன்னம் பதிப்பகம்.

***

மேலும் பார்க்க : பஷீர்: பூமியின் உரிமையாளர் – சுகுமாரன்

Newer entries »