ஹனிபாக்காவிடமிருந்து இன்று மெயில் வந்தது, வேதாந்தி எழுதிய சிறுகதையுடன். சுட்டி : http://abedheen.blogspot.com/2013/03/blog-post_25.html
***
“தமிழ்ச் சிறுகதை – முஸ்லிம்களின் பங்களிப்பு” என்று ஒரு ஆய்வு நூலை எழுதப் போனால், தமிழக முஸ்லிம் படைப்பாளிகளை விடவும் ஈழத்து முஸ்லிம் படைப்பாளிகளின் பங்களிப்பு இந்தத் துறையில் அபாரமென்பேன். தமிழகத்தில் ஆளுமை மிக்க கதைகளை எழுதியவர்களில் ஷேக்கோ முக்கியமானவர் என்று கருதுகிறேன். அவரைத் தொடர்ந்து கவிக்கோ அப்துல் ரகுமானுடைய வாப்பா மஹதி அவர்களின் பங்களிப்பும் கவனத்திற் கொள்ளத்தக்கது. தூயவன் என்ற புனைப்பெயரில் எழுதிய எம்.எஸ். அக்பர் நாகூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அந்தக் காலத்தில் ஜியாவுடீன் என்பவரும் ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளில் எழுதினார். அதிகமான தமிழகச் சிறுகதைகள் இஸ்லாமிய நெறிமுறைகளை அச்சொட்டாக வாழ்க்கையில் பின்பற்றும் சாலிஹான மனிதர்களைப் பற்றிய கதைகளாக இருந்தன. கடந்த இரண்டு தசாப்த காலங்களாக புதிதாக எழுத வந்த நாகூர் ஆபிதீன், கவர்னர் பெத்தம்மா மூலம் எம்மை ஈர்த்த மீரான் மைதீன், மற்றும் ஜாகிர் ராஜா, பிர்தௌஸ் ராஜகுமாரன், களந்தை பீர்முகம்மது போன்ற இளைய தலைமுறையினரின் படைப்புகள்தான் தமிழக முஸ்லிம்களின் வாழ்வின் உள்ளடுக்குகளை எங்களுக்கு உணர்த்தியது.
ஈழத்திலோ 1950களிலிருந்து யதார்த்தமான கதைகளை எம்மவர்கள் படைத்தளித்தார்கள். அதில் பித்தன் முக்கியமானவர். அவரைத் தொடர்ந்து அ.ச. அப்துஸ்ஸமது, மருதூர்க்கொத்தன், முதலியோரும் அறுபதுகளின் இறுதியில் எழுத்திற்கு வந்த பாணந்துறை மொயின் சமீன், திக்குவல்லை கமால், கலைவாதி கலீல், எம்.எச்.எம். ஷம்ஸ், எஸ்.எல்.எம். ஹனீபா, எம்.எல்.எம். மன்சூர், வை. அஹமது, ஜுனைதா ஷெரீப், மருதூர்க்கனி, எம்.எச். சேகு இஸ்ஸதீன் (வேதாந்தி) இவர்களைத் தொடர்ந்து தொண்ணூறுகளில் ஒரு பட்டாளமே சிறுகதை எழுத கிளம்பினார்கள். அவர்களில் ஓட்டமாவடி அறபாத், மருதமுனை றியாஸ் அஹமத் (அம்ரிதா), அக்கரைப்பற்று ஹஸீன், நஜிமுதீன், எம்.எம். நௌஸாத் (தீரன்), ஸபீர் ஹாபிஸ், தற்பொழுது இலக்கிய மாமணி கவிஞர் அஷ்ரப் ஷிஹாப்தீன் அவர்களும் சிறுகதை உலகிற்கு வந்துள்ளார்கள். இவர்களில் ஒருவரான எம்.எஸ். சேகு இஸ்ஸதீன் சொற்ப எண்ணிக்கையான கதைகளை எழுதினாலும் அவை சொல்லப்பட்ட முறைமையால் முற்றிலும் வேறுபட்டுத் திகழ்ந்தது. வேதாந்தி என்ற பெயரில் அவர் ஆறு கதைகளை எழுதியுள்ளார். அவற்றில் எனக்குப் பிடித்த இந்தக் கதையை ஆபிதீன் பக்க வாசகர்களுக்காகப் பதிவேற்றம் செய்கிறோம்.
வேதாந்தியுடன் எஸ்.எல்.எம். ஹனீபா