பர்ஸக் (மலையாளச் சிறுகதை) – வெள்ளியோடன்

தமிழில் : ஆர். முத்துமணி

*

பர்ஸக்

வெள்ளியோடன்

சுற்றுப்புறமிருந்து வரும் மந்திர ஒலிகளால் செவிக்கெட்டாமல் போகக்கூடியவையாக இருந்தன ஆயிசும்மாவின் விசும்பல்கள். துருக்கி பள்ளிவாசலின் பின்புறம், விசாலமும் வட்டவடிவமும் கொண்ட மத்தாஃப் இடங்களில், ஒரு இடத்தில் பெரிய தூண்களில் ஒன்றோடு சேர்த்து நிறுத்தியிருந்த வீல் செயரில் மார்பிள் பதித்த நிலத்திலிருந்து சாக்ஸ் அணிந்த கால்களுக்கு குளிர் பரவாமலிருக்க வீல் செயரின் ஃபுட் ஸ்டெப்பிலேயே கால்களை அழுத்தியபடி இருந்த ஆயிசும்மாவின் உதடுகளின் மெல்லிய விசும்பல்கள் என் காதுகளுக்கு எப்படி எட்டியது என்று இப்போதும் எனக்கு புரியவில்லை. பல தேசங்களிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நிமிடமும் கஅபவுக்கு சுற்றுமாக வலம் வந்து கொண்டிருந்தனர். இஹ்ராம் வேஷம் (உடை) அணியாதவர்கள் அனைவரும் மூன்று அடுக்கு மாடியில் இருக்கும் மத்தாஃப் இடங்களில் தொழுகை நடத்துகிறார்கள். நடக்க இயலாதவர்களும் அப்படியே.

மதிய உணவுக்குப் பின் நேராக இங்கேதான் வந்தேன். கொஞ்ச நேரம் தியானத்தில் இருக்கலாம். கடந்த நான்கு நாட்களாக இறை நம்பிக்கையின் இனிமையை மனசு நுகர்ந்து கொண்டிருக்கிறது. எனக்குள் இருக்கும் என்னை பூரணமாக ஒரு வெயிலுக்கு வெளியே உதரிவிட்டு உடலில்லாத ஆத்மாவின் தணியான பயணம். மனைவியின் நிர்பந்தம் என்னை உம்ரா செய்ய வைத்திருக்கிறது.

“மனம் சாந்தியடையட்டும்’ அவளுடன் கொஞ்சம் கோபம் தோன்றாமல் இருக்கவில்லை. அப்படி தோன்றுவதிலும் பெரிதாக வியப்பதற்கு எதுவுமில்லை. இறைவனோடு என்றும் முகம் திருப்பி நடப்பவன் தானே நான். அவள்அதற்கு நேர்மாறானவள். என்னுடன் ஒத்துப்போவதின் காரணம் என்னுடைய அன்புக்கு அவள் அடிபணிவதால் தான் என்று பலமுறை சொல்லி இருக்கிறாள்.

என் மேல் அளவற்ற அக்கறை இல்லாதவராக மாறி விடுகிறீர்களா?. கொஞ்சம் விளையாட்டாக அவள் கேட்டது நானும் அவளும் மட்டும் இருந்த தனியான நிமிடங்களில் தான். இயல்பு வாழ்க்கையின் கடைசியும் ஆத்மிய வாழ்க்கையின் துவக்கமும் சந்திக்கும் முத்தங்களுக்கு இடையே அது நிகழ்ந்திருக்கலாம். உதடுகள் விலகாத புன்னகையைத்தான் நான் அவளுக்கு பதிலாக அளித்தேன். மெல்லிய விசும்பல்கள் கேட்ட இடத்திற்கு முகம் திருப்பிய போது தான் அயிசும்மாவைப் பார்த்தேன். விசும்பல்கள் சுத்தமாக என் மனதை பாதித்திருக்கவில்லை. அதற்குக் காரணம் கஅபவுக்கு சுற்றிலுமாக பாப பாரங்களை இறக்கி வைத்த மனிதர்கள் அழுவதை வழக்கமாக பார்த்திருந்ததனால் தான். அப்படியும் எனக்கு அயிசும்மாவிடம் கேட்காமலிருக்க இயலவில்லை.

“தனியாகத்தான் வந்தீர்களா?’ இளம் பிங்க் நிறத்தில் உள்ள மக்கனாவும், தோளில் தொங்க விட்டிருக்கும் சின்ன தோல்பையின் மேலிருந்த விலாசமும் என்னை தமிழில் பேச தூண்டியது. குடும்பத்தினர் யாரும் கிடையாது. ஒரு குழுவினருடன் வந்தேன். அப்படியென்றால் அவர்கள் எங்கே? உம்ரா செய்யவும் சுற்றிப் பார்க்கவும் போயிருக்கிறார்கள். என்னைக் கூட்டிச் செல்ல இயலாது என்று கூறிவிட்டார்கள். வயது ஏறிவிட்டதல்லவா? காலையில் என்னை இங்கு கொண்டு வந்துவிட்டு விட்டனர். ஏத்திக்காஃபின் (தனிமை தியானத்தின்) கூலி கிடைக்குமல்லவா? அறுந்துவிழும் சத்தத் துண்டுகளாக இருந்தன அயிசும்மாவின் வார்த்தைகள். ஆயிஷா பள்ளிக்காவது போக வேண்டும் என்று நினைத்தேன். தூரத்தில் மனிதர்கள் கூட்டம் பொதிந்து நிற்கும் கருப்புக் கல்லை பார்த்தபடி அவர் சொன்னார்.

“அதற்கென்ன, போகலாமே நானிருக்கிறேன்’ என்னையறியாமல்தான் நான் அப்படி கூறினேன். எதிர்பாராத என் வாக்குகளைக் கேட்டு  பக்கம் திரும்பிய அயிசும்மாவின் கண்களில் வெளிச்சம் மின்னி மறைந்தது.

“முதல் உம்ரா முடிந்ததா?’.

அது முடிந்தது. ஆனால் தவாஃப் செய்தது இங்கிருந்து தான். கீழே கஅபக்கு அருகே போக முடியவில்லை.

“நாம் கஅபவுக்கு அருகே சென்று தவாஃப் செய்வோம். நான் உங்களை நடத்திக் கூட்டிச் செல்கிறேன். இங்கேயே இருக்கத்தான் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். வரும் போது காணவில்லை என்றால் பிரச்சினையாகும். அதற்கு வழி இருக்கிறது. அயிசும்மாவின் கழுத்தில் நாடாவில் தொங்கிய அடையாள அட்டையிலிருந்து குழு அமீரின் நம்பருக்கு டயல் செய்தேன். அயிசும்மாவின் முகம் கஅபவுக்கு மேலே காணும் வெளிச்சமும் தூய்மையும் நிறைந்த ஆகாயம் போலே மின்னிக் கொண்டிருந்தது. கஅபவுக்கு மேலே வட்டமிட்டுப் பறக்கும் பேர் தெரியாத பறவைக் கூட்டங்களைப் போல அயிசும்மாவின் முகத்திலும் முதிர்ந்த வயதின் அடையாளமாக சில கருப்பு நிறப் புள்ளிகள் சிதறிக்கிடந்தன. நிறைந்திருந்த கண்கள் எவ்வளவு சீக்கிரமாக பாலைவனம் போல வறண்டு உலர்ந்து போயிற்று. மத்தாஃபிலிருந்து பார்த்தால் கஅபவுக்கு சுற்றும் முஹ்ரிமீன்கள் காணலாம். உலகத்தின் வெட்டி எடுத்த ஒரு பகுதி. பல பகுதிகளிலிருந்து வந்த வியர்த்து உலர்ந்து போன வயசான முகங்கள் தான் எங்கேயும். மரணத்தின் நூல் பாலத்திற்கு நடந்து ஏறும் முன்னர் தெய்வத்தின் அருள் கிடைத்த வீட்டுக்குச் சுற்றும் வட்டமிட வந்தவர்கள். கருப்புக் கல்லில் முத்தம் கொடுத்து, பாவங்களையெல்லாம் அதோடு சேர்த்து வைக்க தூரங்களை அறுத்து பயணித்து வந்த மனிதர்கள். நான் மெதுவாக அயிசும்மாவின் வீல் செயரை மத்தாஃபின் முதல் மாடியிலிருந்து கீழே இறக்கும் போது அவரது முகத்தில் தெரிந்தும் தெரியாத ஒரு கேள்விக்குறி இருந்தது. ஆயிஷாப்பள்ளிக்கு போகிறோம் என்று தெரிந்ததும் அயிசும்மாவின் முகத்தில் மகிழ்ச்சி மின்னியது. என் இதயத்தில் அப்போது கொஞ்சமும் பாரம் இருக்கவில்லை. மனதுக்கும் உடலுக்கும் பாரமேதுமில்லாமல் காற்றில் பறந்துயரும் இலவம் பஞ்சுபோல.

நீங்கள் அழுதபடி பிரார்த்தனை செய்ய வேண்டும். கடவுள் தராமல் இருக்கமாட்டார். புறப்படும் போது அவள் சொன்னது நினைவில் வந்த வண்ணமிருந்தது. இன்றைய மருத்துவ வசதிகளின் எல்லைகள் முடிவுக்கு வந்த போது மிச்சமிருக்கும் எதிர்பார்ப்பின் தீவாக இருந்தது இந்த புனிதப் பயணம். நான் புனிதப் பயணம் போவது எனது சொந்தக் காரியம் நடப்பதற்காக இருக்கக் கூடாது என்பது தான் என் எண்ணம். என்னுள் இருக்கும் பிடிவாதக்காரன் முட்செடி குத்துவது போல வார்த்தைகளை கூர்மையாக்கி நடந்தான்.

“அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் ப்ளீஸ். சிகிற்சை பலனளிக்காமல் போனது உங்களது இந்தப் பிடிவாத குணத்தால் தான்.’ அவள் அப்படி சொன்ன போது மனதில் வந்தது பெருமித உணர்வுதான்.

பிடிவாதக்காரன் என்ற பெருமை. இறை நம்பிக்கையின் வட்டத்துக்குள்ளே சுற்றிவரும் கணவனைத்தான் அவள் விரும்பியிருந்தாள் என்று பல நேரங்களில் அவளது வார்த்தைகளிலிருந்து புரிந்து கொள்ள முடிந்ததுண்டு. அயிசும்மா சத்தமாக ஜபம் செய்தது என்னை மத்தாஃபுக்கு வெளியேயான கரடுமுரடான நிலத்தில் கொண்டு வந்துவிட்டது. பையில் தொங்கவிட்டிருந்த செருப்பை அணிந்து கொண்டேன். ஹரம் பள்ளியுடயவும் மக்கா முனிசிபாலிட்டியுடையவும் எல்லையில் நிறுத்தியிருந்த டாக்சி ஒன்றில் நாங்கள் ஏறினோம்.

நபர் ஒன்றுக்கு ஐந்து ரியால் என்ற கணக்கில் ஆயிஷாப்பள்ளிக்கு கூட்டிச் சென்று இஹ்ரம் செய்து திருப்பிக் கொண்டுவந்து விடுவர்.

அயிசும்மா கேட்டார் மகனே; உனக்குத் தெரியுமா? ஆயிஷாப்பள்ளிக்கு அந்த பெயர் வரக் காரணம் என்ன என்று தெரியுமா?

எனக்குத் தெரியாது என்பதை ஒüõவு மறைவு இல்லாமல் நான் சம்மதித்தேன். “அப்படின்னா கேட்டுக்கோ’ அயிசும்மா ஆயிஷாப்பள்ளி பற்றய கதை சொல்லத் துவங்கினார்.

இறைதூதரின் மனைவியான ஆயிஷாம்மாவின் உம்ரா பாதி வழியில் முறிந்து போனது அவருக்கு தீடீரென்று மாதவிடாய் வந்ததனால்தான். சகோதரன் அப்துர் ரஹ்மானோடு சேர்ந்துதான் ஆயிசா தன்ஈம் என்ற அமைதியான இடத்தில் இரண்டாவது இஹ்ராம் செய்தது. வரலாற்றை நினைவுக்கு கொண்டு வருவதால்தான் பள்ளிக்கு அப் பெயர்.

ஹரமின் எல்லை தாண்டி ஆயிஷாப்பள்ளியின் வாசலை அடைய அதிக நேரம் தேவைப்படவில்லை. புதுமையின் முன்னேற்றத்தால் பழமையின் சின்னங்கள் முற்றிலுமாக மாறியிருந்தன. பள்ளிக்குச் சுற்றிலுமான சுவர் நிறைய அரபி காலிக்ராபிதான். ஆங்காங்கே சிறு வியாபாரிகள் இருக்கிறார்கள். தஸ்பீக்கள் (ஐபமாலைகள்) தான் அதிகம் விற்பனைக்கு இருக்கின்றன. உதடுகளில் விரியும் இறை துதியின் கணக்குகள் சேகரிக்க தஸ்பீஹ் வேண்டுமா உம்மா?

அதெல்லாம் வேண்டாம். கொடுப்பது எதற்குமே நான் கணக்கு வைத்துக் கொள்வதில்லை. தெய்வத்துடன் கணக்குகள் காட்ட அவசரப்படும் மனிதர்களுக்கிடையே கணக்கே தேவை இல்லை என்று நினைக்கும் உம்மா. மனதில் தோன்றும் மதிப்பின் கிராஃப் உயர்ந்து கொண்டே இருந்தது.

உம்ராவின் முதல் நிபந்தனை தான் இஹ்ராம். பெண்கள் முகமும் முன்கையும் தவிர உடல் முழுவதும் மறைக்க வேண்டும். ஆண்கள் தைக்கப்படாத ஒரு துணியை இடையில் கட்டிக் கொள்ள வேண்டும், மற்றொன்றை வலது தோள் மேலே மூடிக் கொள்ளலாம்.

பெண்களின் தொழுகை இடம் ஆயிஷாப்பள்ளியில் தனியாக இருந்தது. தமிழகத்தில் இருந்து வந்த வேறு ஒரு கூட்டத்தினருடன் அயிசும்மாவை அனுப்பும் போது மனது பதறியது.

தனியாக எதுவும் செய்து கொள்ள இயலாத உம்மா. அல்லாஹ்! வீல் செயர்கள் பள்ளிக்கு உள்ளே செல்லாது. சிறுபடிகள் ஏறித்தான் உள்ளே செல்ல வேண்டும்.

உயரம் குறைந்த வெள்ளை நிற இந்தோனேசியர்கள் தான் அதிகமும் பல நிறங்களிலான படங்களுடன் கூடிய இறுக்கமற்ற தளர்ந்த ஆடைகள் அணிந்த பெண்களுக்கிடையே ஆயிசும்மாவுடைய வீல் செயரை பெயர் தெரியாத யாரோ ஒரு பெண் தள்ளிச் செல்லும் காட்சியின் வேதனை நீர்குமிழி போல தோன்றி மறைந்து போனது.

வூளு செய்து வேகமாக புறப்பட்டேன். கையிலிருந்த துணியை தொப்புளோடு சேர்த்து இடையில் இருக்கக் கட்டினேன். வேறொரு துணி எடுத்து வலது தோளில் மூடிக் கொண்டேன். பள்ளி வாசலுக்கு உட்புறமுள்ள மிருதுவான பட்டுவிரிப்பில் நனைந்தப் பாதங்களை வைக்கும் போது, வரலாற்றின் வாசல்களை திறந்து ஆயிஷா வாசல்படியில் வந்த அமர்ந்திருக்கிறார். நபியின் அன்பின் பாதியை நுகர்ந்த மனைவி. குழந்தைப் பேரின்மையின் வேதனை ஆயிஷாவை எப்போதாவது பாதித்திருக்குமா? மனது சில இடுக்குகள் வழியாக ஆழ்ந்து இறங்க முயன்றது. என்னை வாழ்க்கையில் வரிந்து முறுக்கிய வேதனைகளோடு சரிசமமான  வேதனை அனுபவிப்பவர்களோடெல்லாம், இதயத்தில் ஒரு அனுதாபம் நிறம் கொடுத்துக் கொண்டிருந்தது. ஆனால் ஆயிஷாவுக்கு அப்படியான வேதனைகள் ஏதும் ஏற்பட்டிருக்காது. உலகத்துக்கே தாய் என்ற பட்டமல்லவா அவருக்கு கிடைத்திருப்பது.

ஆயிஷாவுடையவும் என்னுடையவும் வேதனைகள் ஒரே வழியில் ஒன்றுக்கொன்று காணாமல் வெகுதூரத்துக்கு பயணித்துக் கொண்டிருக்கலாம். இல்லை. என் வேதனைகளின் பயணம் இங்கு முடிந்துவிடும். மாதவிடாய்க்குப் பின் பதினான்காம் இரவில் நான் அவளுக்குத் தந்த பீஜங்களின் உயிர் மரித்திருக்காது. ஜோடியை சேர்த்துக் கொண்டு அது இப்போது மெதுவாக கர்ப்பப்பைக்குள் பயணித்துக் கொண்டிருக்கும். மக்காவுடையவும் மதீனாவுடையவும் களங்கமற்ற ஆகாயங்களுக்கு கீழிருந்து தொழுகை செய்தபின் ஊருக்கு திரும்புகையில் அவள் விசேஷங்களைக் கூறுவாள். சிந்தனைகளையெல்லாம் ஓரம்கட்டி விட்டுத்தான் தொழுகை செய்து முடித்தேன். உடலை மூடியிருந்த துணியின் ஒரு மூலையை கக்கத்தின் வழியாக இழுத்து பூணுôல் போலாக்கி பெண்களின் வாசலுக்கு அவசரமாக நடந்தேன். உடனிருக்கும் பெண்களிடம் சலசலவென்று ஏதோ பேசிக் கொண்டு ஆயிசும்மா வருகிறார். அறுவடை முடிந்த வயல் வெளிபோல பற்கள் இல்லாத ஈறு காட்டிச் சிரிக்கும் உதடுகள். வெள்ளையும் கருப்பும் சேர்ந்திருக்கும் மேல் புருவம்.

அயிசும்மாவின் வீல் செயரோடு சேர்ந்து நின்றபடியேதான் மனதில் முடிவு செய்தேன். உம்ராக்காக ஜஹ்காமில் நுழைகிறோம் என்று.

மகனே, இந்த நிமிடம் முதல் நமது தலையிலிருந்து முடி வெட்டிப் போடவோ நகம் வெட்டவோ கூடாது. மனதில் தப்பான எண்ணங்கள் எதுவும் வரக்கூடாது. அயிசும்மா சில நேரங்களில் என் குருவாக மாறிவிடுகிறார். வீல்செயரின் சக்கரங்கள் காத்தாடி மரத்துக்குக் கீழே காத்திருக்கும் காருக்குப் பக்கம் சென்றது. கார்சீட்டை சரித்துப் போட்டு சிறு இடைவேளை நேரங்களில் தூக்கத்தின் கடன்களை திருப்பிக் கொடுக்கும் ஓட்டுனரை மெதுவாக தட்டி எழுப்பினேன்.

சுற்றுப்புறம் எங்கும் மந்திரங்கள் முழங்கிற்று. லப்பைக் அல்லாஹம்ம லப்பைக் லப்பைக் லா ஷரீக லக லப்பைக் இன்னல் ஹம்த வன்னியாமத்த லகவல் முல்க் லாஷரீக லக்.

டாக்ஸியிலிருக்கும் முன்பின் தெரியாத இந்தோனேசியக்காரர்களுடையவும் என்னுடையவும் அயிசும்மாவுடையவும் உதடுகளில் ஒரே மந்திரம். ஆயிசும்மாவின் கைமேல் வந்து அமர்ந்த ஒரு கொசு என்னை நிம்மதியிழக்கச் செய்தது. வற்றிக் கொண்டிருக்கும் இரத்தத்திலிருந்து ஒரு துளி உறிஞ்சு குடிக்க கொசு முயற்சி யெடுப்பது கண்ட போது எனக்கு கோபம் வந்தது. அயிசும்மாவுடன் நானும் ஆரோக்யமுடைய டாக்ஸி ட்ரைவர் பட்டாணியும் இருக்கிறார். அப்படியிருந்தும் அயிசும்மாவின் மேல்தான் கொசு போய் அமர்ந்துள்ளது. எதிர்க்க திராணியில்லாதவர்களைத்தான் உலகத்தில் எங்கேயும் சுரண்ட முயல்வார்கள்.

நான் அதை அடிக்க கை ஓங்கியதும் அயிசும்மா பின்னுக்கு கை இழுத்ததும் கொசு பறந்து போனதும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தது. “‘இங்கே இரத்தம் விழக்கூடாது மகனே. ஹரமுக்குக்ளே ஒரு உயிரினத்தையும் கொல்லக் கூடாது. அது பெரும் பாவம்”. ஒரு சன்னியாசினியைப் போல அயிசும்மா பேசினார். “”உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் இந்த ஹரமில் இறைவனின் தற்காப்புடன் இருக்கும்” அயிசும்மா மேலும் சொன்னாள்.

தன்யிமில் இருந்து அதிகம் தூரம் இல்லாததனால் விரைவாகவே டாக்ஸி ஹரம் பள்ளியை அடைந்தது. மலைகளால் சுற்றப்பட்ட ஒரு பள்ளத்திலிருக்கும் நகரம் தான் மக்கா. முஹம்மது நபி பிறந்ததும் வளர்ந்ததும் இந்த மண்ணில் தான். சிறுவனாக இருக்கும் போது அனாதையாக இருந்து பின்னர் இறை தூதராக மாற்றம் தந்த இடம். அன்பின் பன்னீர் புஷ்பங்களை சொரிந்த மனிதர்களே தத்துவங்களில் பெயரால் அவர்மேல் முள்ளாலான மாலைகள் சூட்டினர்.

முஹம்மது நபி பிறந்த வீடு நூலகமாக மாறியிருக்கிறது. அதற்கு நேராக இருந்த வீடு குரூரமாக விஷம் தடவிய வாளுடன் பின் தொடர்ந்திருந்த அபூஜஹலினுடையது.  அது கழிப்பிடமாக மாறியிருந்தது.

ஹரமுக்கு உள்ளே வரும்போதே சம்சம் நிறைத்த டப்பாக்கள். குளிரூட்டப்பட்டதும் அல்லாததும். குளிர்மையில்லாத சம்சம்தான் நான் அயிசும்மாவுக்கு வாங்கிக் கொடுத்தேன். என்னுடையவும் அயிசும்மாவுடையவும் செருப்புகள் சிறு பையில் திருகி கழுத்தில் இட்டுக் கொண்டேன்.

வீல்சேரில் இருக்கும் போது முதுகு வலி இருந்ததா என்று ஒரு சந்தேகம். அயிசும்மாவிடமிருந்து வெளிப்பட்ட ஒரு சிறிய முனங்கல் தான் எனக்கு அப்படியான ஒரு சந்தேகத்தைத் தந்தது. அங்கு சோம்பலுடன் சுற்றித்திரியும் ஒரு நாயை நான் அயிசும்மாவுக்குக் காட்டினேன். நாய்க்கு என்ன குறைச்சல்? சொர்க்கத்தில் கூட நாய் உண்டு. நாயும் கூட அல்லாஹ்வின் சிருஷ்டி தான் மகனே. எல்லா படைப்பினங்களையும் அல்லா நேசிக்கிறான். இஸ்லாமியர்களை மட்டுமல்ல. சகல மனிதர்களையும் சகல உயிரினங்களையும் கண்டு பயப்படுவதற்கு அல்லாஹ் ஒரு தீவிரவாதியல்ல. அன்பு தான். அன்பு மட்டும்தான். சிந்தனைகளை தூண்டிவிடுபவைகளாக அயிசும்மாவின் வார்த்தைகள் இருந்தன.

மக்காவின் நேரம் தெரியப்படுத்தும் பச்சை நிறமுள்ள மணிக்கூண்டுக்கு நேராக இருக்கும் நுழைவு வாயிலில் சென்றடைந்த போது ஒரு போலீஸ்காரர் சிரித்த படியே சொன்னார், “வீல் செயர் மம்நூ”. போலீஸ்காரரின் வார்த்தைகள் அயுசும்மாவுக்கு புரிந்தது. அதனால் தான் ஒரு தமாஷ் போல சிரித்தபடியே அயிசும்மா சொன்னார்:

இதுதான் மகனே நான் சொன்னது. இதற்கப்பால் போக வேண்டுமென்றால் நடந்தே ஆகவேண்டும். அவசரமாக போய்க் கொண்டிருக்கும் கூட்டத்திலிருந்து விலகி நான் அயிசும்மாவை வீல்செயரிலிருந்து எழச் செய்தேன். தரையோடு அமர மறுக்கும் கால்கள். கைகளை என் தோளோடு சேர்த்துப் பிடித்தபோது கால்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது போல இருந்தது. தரையில் ஊன்றிய பாதங்கள் தள்ளாடித் தள்ளாடி முன்னுக்குச் சென்றது. கஅபவின் வாசம் தங்கியிருந்த மார்பிள் தரையில் காலை அழுத்தி வைக்கும் போது இந்த உலகில் காண இயலாத, தெய்வீகமான ஒரு சக்தி அயிசும்மாவின் கால்களுக்கு கிடைத்திருந்ததோ? முன்னால் மட்டும் பார்த்தபடி தவழ்ந்து செல்லும் மனிதர்கள். ஒவ்வொரு முறை சுற்றி வரும் போதும் நான் அயிசும்மாவை கஅபவுக்கு பக்கமாக நெருங்க வைத்துக் கொண்டே இருந்தேன். ஏழாவது சுற்று கடந்தவுடன் அயிசும்மாவின் இரண்டு கைகளும் கருப்புக் கல்லோடு சேர்த்து வைத்த போது அவருக்கு மட்டுமாக உருவான வெற்றிடத்தில் நின்றபடி கருப்பு கல்லில் உதடுகள் முத்தி சத்தமாக அழுது கொண்டிருந்தார். பிறந்து விழுந்த குழந்தையைப் போல. கஅபவின் கருப்பு கல்லிலிருந்து அயிசும்மாவை அழைத்துக் கொண்டுவர மிகவும் சிரமப்பட வேண்டியதாயிற்று. தவாஃபின் தொழுகைக்கு வீல் செயரில் தான் போனார்கள்.

நினைவுகளின் தூரத்தில் அவளது முகம் மெதுமெதுவாக தெளிவு பெறத்துவங்கியது. இன்பெர்ட்டிலிட்டியின் எல்லா பரீட்சைகளையும் தாண்டித்தான் இகசி நிலையத்துக்கு வந்திருந்தோம். செயற்கை முறையில் கருத்தரிக்க வைக்கும் நிலையம். அலோப்பதியும், ஆயுர்வேதமும், யுனானியும் ஆதிவாசிகளின் சிகிற்சை முறையும், முயற்சி செய்து, அதற்கு துணையாக என்பது போல மந்திரங்களும் தெய்வீகக் கடமைகளும் நிறைவேற்றப்பட்டது. மெதுவாக அவையெல்லாம் பலனில்லாமல் போன போதுதான் மிகவும் புதுமை நிறைந்த இன்ஃபெர்ட்டிலிட்டி க்ளினிக்கின் கண்ணாடிக்கதவுகள் கடந்து உள்ளே சென்றது. இகசி செய்வதற்கு டாக்டர் உபதேசித்தார்.

பரிசோதனைகூடத்தின்  உள்ளறைகளில் அம்மணமாக்கப்பட்ட மலட்டுத் தன்மை. சுற்றிலுமிருந்த நீல நிற வேஷமணிந்தவர்கள் மரணம் மூடிய அழகிகளை நினைவு படுத்தினர். கால்களை அகற்றி வைக்கச் சொன்னார்கள், பஞ்சாபியான டாக்டர் ரேஷ்மாவின் பாதி தமிழில் தரும் அறிவுரைகளை ஒரு குழந்தையைப் போல அனுசரித்தோம். ஒரு குழந்தைக்காக. மெதுவாக திறந்த யோனி வாசல் வழியே கண்ணாடி ட்யூபுக்குள் அண்டங்கள் ஒழுகி வந்தன.

பவுர்ணமியின் வெளிச்சமும் முழுமையும் பெற்ற அண்டங்கள். குழலுக்கு மேல் படிந்திருந்த யோனிநீர் நாப்கினால் துடைத்தெடுத்தனர். பாதி மயக்கத்திலிருந்தாள். ஒரு வசம் கூர்மையான டெஸ்ட்யூபுக்குள் அண்டங்களை செலுத்தினர். லாபின் முன்புறமுள்ள சோபாவில் கனவுகளுக்கு நிறம் கொடுத்துக் கொண்டிருந்த போது நர்ஸ் ஒரு குறிப்பு கொண்டு வந்து  தந்தார். எனது பீஜங்கள் எடுத்துக் கொடுக்க வேண்டுமாம். நம்பர் எழுதிய ப்ளாஸ்டிக் பாட்டிலுடன் அறையின் வாசல் திறந்து உள்ளே சென்றேன். தளம் கெட்டி நிற்கும் அவளது பெருமூச்சுக்களில் இருந்து பிரித்தெடுத்த இரதியின் மெல்லிய சுரங்களுடன், தனியாக மைதுணம் செய்து அதன் அனுபூதியில் பிளாஸ்டிக் பாட்டிலில் வந்து பீஜங்கள் தெறித்து விழுந்தன. வழுவழுப்பான திரவத்துக்குள் அது நீந்தித் திரிந்தன. ஒன்றுடன் ஒன்று சேர்ந்தும் தனித்தும்.

பரிசோதனைகூடத்திலிருக்கும் நர்ஸின் கைகளில் மூடிய ப்ளாஸ்டிக் பாட்டில் கொடுக்கும் போது முகத்தை குனித்துக் கொண்டேன். வீல் செயரில் அவள் வெளியே வரும் போது அவளுக்கு சோர்வான முகம். ஆஸ்பிரேஷன் முடிந்தது. அவள் அமைதியாகச் சொன்னாள். இனி பீஜமும் அண்டமும் சேர்ந்து டெஸ்ட்யூபில் ஓய்வெடுக்கட்டும் எம்பிரியோகளாக.

“யா ஹாஜி’ ஒரு போலீஸ்காரரின் அழைப்புத்தான் என்னை ஆயிசும்மாவிடம் கொண்டு சென்றது. பின்னால் வருபவர்களுக்கு வழி விடவோ, கொஞ்சம் வேகமாக நடக்கச் சொல்லவோ தான் அவர் அப்படி அழைத்து, எல்லா ஆண்களுக்கும் ஒரே பெயர்தான் ஹாஜி. பெண்களுக்கு ஹாஜ்ஜா என்றும். ஒரே வேஷம். ஒரே மந்திரம். ஒரே திசை. பயங்கரமான ஒற்றுமை. சஃபாவின் பாகத்துக்கு நான் அயிசும்மாவை கூட்டிக் கொண்டு மெதுவாக நகர்ந்தேன்.

சஃபாவுக்குச் செல்ல அம்புக்குறி இட்டிருந்தார்கள். சஃபாவுக்கும் மர்வாவுக்கும் இடையே நடக்கவும் ஓடவும் வேண்டும். ஹாஜராவின் ஓட்டத்தினை நினைவுப்படுத்துதல். பாலைவனத்தின் வறட்சியில் தனிமையில் ஆன ஹாஜரா ஒரு துள்ளி தண்ணீருக்காக ஓடிப் பார்த்தார். அங்கும் இங்கும், கணவர் இப்ராஹிம் கடவுளின் பாதை தேடிப் போயிருக்கிறார். இஸ்மாயில் பிறந்து நாட்கள் அதிகம் ஆகியிருக்கவில்லை. ஆள் அரவமில்லை. எதற்காக இப்ராஹீம் தன்னையும் குழந்தையையும் பாலைவனத்தில் யாருமில்லா இடத்தில் தனிமையில் விட்டுச் சென்றார்?. கடவுளின் கட்டளையோ?

மகனே; நீ மிகவும் சோர்வடைந்திருக்கிறாய். இந்த மலைமேல் எப்படி நீ வில் சேரை தள்ளி ஏற்றுவாய்? அயிசும்மா சங்கடத்துடன் என் முகத்தைப் பார்த்தார்.

சிறிய ஒரு குன்று. மலையின் பிற பகுதிகளையெல்லாம் வெட்டி எடுத்திருக் கிறார்கள். வெறும் அடையாளங்களாக பாக்கி நிற்கின்றன. இரண்டு குன்றுகளும் கான்க்ரீட் சுவர்களுக்கிடையேயும் கூரைக்கும் இடையே இருந்தது. பாதை குளிர் பதனப்படுத்தப்பட்டு இருந்தது. இரண்டு பக்கங்களிலாக சம்சம் குழாய்கள் அமைத்திருந்தார்கள். ஹாஜராவுக்கு இஸ்மாயிலின் காலடிகள் தந்த சம்சம். அப்பாவுக்கு மகனின் தண்ணீர் வெகுமதி.

வரலாற்றுக்கான பழிவாங்கல் என்பது போல ஆண்கள் ஓட வேண்டும். இரண்டு மலைகளுக்கு இடையே, பெண்கள் நடந்தால் போதுமானது. ஹாஜரா தனிமையில் ஓடியபோது இப்ராஹிம் எங்கேயோ போய் மறைந்தார். சயீயில் நடைக்கும் ஓட்டத்துக்கும் இடையேயான நடை ஓட்டம்தான் என்னுடையது. அயிசும்மா என்னை பார்த்து சிரித்தார். கண்ணாடி வளையல்கள் ஒன்றோடொன்று மோதி சலசலப்பது போன்ற சிரிப்பு.

ஆறு எம்பிரியோக்கள் பதனப்படுத்தப்பட்டு பரிசோதனைகூடத்தி  லிருப்பதாக சொன்ன போது அவளது முகத்தில் இருந்தது மரத்துப் போன சிரிப்பு.

“”நமது ஆறு குழந்தைகள்,” வேதனைப்படுத்தும் தமாஷாக நான் அவளது முகத்தைப் பார்த்து கூறினேன். நிறைந்து ஒழுகும் இயலாமை, இருட்டு மூடிய வயோதிக்கத்தை பற்றிய சிந்தனை இருவரையும் ஒரே போல வேட்டையாடிக் கொண்டிருக்கும் தனிமை. சர்வ தியாகங்களுக்கும் அவள் தயார். எதையும் தியாகம் செய்ய தயாராக இருக்கும் மனதும் உடலும் அவளுடையது. உற்பத்தி என்ற தெய்வத்தின் அபாரமான கலையை பரிசோதித்து அறிய பரிசோதனைக்கூடத்தில் அவள் அம்மணமாக கிடந்தாள். சேர்த்து வைத்த சொத்துக்கள் எல்லாம் கரைந்து தீருவதை இயலாமையுடன் நாங்கள் இருவரும் பார்த்துக் கொண்டிருந்தோம்.

ஏழு முறை நடந்த பின்னர் மர்வா குன்றுக்கு மேல் அயிசும்மாவின் வீல் சேரை உந்தி ஏற்றும்போது நான் முற்றிலும் சோர்ந்து போயிருந்தேன். இனி தலையிலிருந்து கொஞ்சம் முடி வெட்டணும். அப்போதுதான் இஹ்ராமில் இருந்து வெளியேற முடியும். நான் ரூமிலிருந்து முடி வெட்டிக் கொள்கிறேன் மகனே. அயிசும்மா அப்படிச் சொன்னது முடி மறைத்து வைக்கப்பட வேண்டியது என்னும் நம்பிக்கையால்தான். பாகிஸ்தானிகளும், இந்தோனேஷியாக்காரர்களும் வங்காளிகளுமான சில பெண்கள் அங்கிருந்த படியே தலையிலிருந்து மூன்று முடிகளை வெட்டி எறிகிறார்கள்.

நானும் நினைத்தேன் பார்பர் ஷாப்புக்குப் போய் தலை மொட்டை அடித்து விடலாமென்று. கருப்பு முடி அழகை வெட்டி எறியும் போது மனதின் அகம்பாவம் நீக்கம் செய்யப்படுகிறது.

ஹரமிலிருந்து வெளி வருவதற்கு முன்னே பாங்கு அழைத்தது. அயிசும்மாவின் வீல் சேரோடு சேர்ந்து நின்றபடிதான் நானும் தொழுகைக்கு நின்றது. எனக்கு பின்புறமாக அல்ஜீரியாவை சேர்ந்த சில பெண்களும் இருந்தார்கள். தொழுகையிலிருந்து வெளிவந்து அயிசும்மாவையும் அழைத்து வெளிவரத் தயாரெடுக்கும் போது தான் இமாம் மய்யத்து தொழுகைக்காக மைக் வழியாக அழைத்தது. வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் இமாமின் வார்த்தையின் முடிவிலிருந்து தான் புரிந்தது குழந்தை மையத்துகள் உண்டு என்று. பின்னர் திரும்பிப் போகத் தோன்றவில்லை. எனக்குத் தெரியாக குழந்தை மய்யத்துகளுக்ககாக நானும் ஜனாஸô தொழுகைக்கு நின்றேன். வெள்ளை உடுத்திய குழந்தை மய்யத்துகள் தான் அப்போது என் முன்னில் வந்து சேர்ந்தது.

ஜனாத்ராயா ஹோட்டலின் ஐந்தாம் மாடியில்தான் அயுசும்மாவின் அறை. எனது அறை 11வது மாடியிலும் குரூப் அமீரை அழைத்து அயிசும்மாவை அறையில் கொண்டு போய்விட்ட விபரம் சொன்னேன். அயிசும்மாவின் எந்தத் தேவைக்கும் என்னை அழைக்கலாம் என்றும் சொன்னேன். சொல்லிவிட்டு வெளியே வரும் போது காரணமில்லாமல் ஒரு வேதனை என்னை பின்தொடர்ந்து கொண்டிருந்தது.

சில இடங்களுக்கு மனது தேவையில்லாமல் கொஞ்சமும் அனுமதி கோராமல் பறந்து போகின்றது, நினைவின் மேடையில் நடனம் புரியும் சில நிழல் உருவங்கள் ஆர்ட் எம்பிரியோக்கள். அந்த நிழல் உருவங்களின் நடனம் தான் என்னை நிம்மதி இழக்கச் செய்கிறது.

இறந்து கிடக்கும் நினைவுகளுக்கு யாரோ உயிர்மூச்சு கொடுத்த போது அது மறுபடியும் என் முன் அப்படியே இருக்கிறது. ஆனால் என் கைகள் இயங்காமல் போய்விடுகின்றன. என்னுடைய இயலாமை என்னுடைய சிறுமையை பறைசாற்று கிறது. மறுநாள் ஃபஜ்ர் தொழுகைக்கு ஹரமுக்கு  போகத்துவங்கும் போதுதான் அமீரின் ஃபோன் வந்தது. ஐந்தாவது மாடிக்கு செல்லப்பணித்தார்கள். அயிசும்மாவை கூட்டிச் செல்ல சொல்வதற்காக இருக்கலாம். சங்கத்தில் உள்ள ஆண்களெல்லாம் வெளியேயும், மக்கனாயிட்ட பெண்களெல்லாம் உள்ளேயும் நிற்கிறார்கள். அமீரிடம் நான் சுயமாக அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

அயிசும்மா இறந்து விட்டார். அவர் என் முகத்தைப் பார்த்துச் சொன்னார். “இங்கேயே மரணம் வேண்டும் என்பதுதான் என் வேண்டுதல்’ . நேற்று சமீயில் உள்ள நடத்தைக்கிடையே அயிசும்மா அப்படிச் சொன்னபோது நான் தலையை குனிந்த படி சொன்னேன்.

“‘ஒரு ஏழு வருடம் கூட நீங்கள் இருப்பீர்கள்”. அப்பொழுது அவர்கள் வாய்விட்டு சிரித்தார். “‘நாளை ஹீரா குகை உள்ள நூர்மலையும் ரசூலுக்கு அபயம் தந்த சவுர் மலையும் காணலாம்”. புறப்படும் போது ஞாபகப் படுத்தினேன்.

அதற்கெல்லாம் எனக்கு முடியாது மகனே. கொஞ்சமும் மகிழ்ச்சியற்ற புன்னகையை முகத்துக்கு கொண்டு வந்து கொண்டு அயிசும்மா கூறினார்.

பெண்கள் மய்யத்தை குளிப்பாட்டுகிறார்கள். ஃபஜ்ர் தொழுத உடன் கபரடக்கம் செய்ய வேண்டும். நீங்கள் தான் அனைத்திற்கும் வரவேண்டும்.

உம். நான் இருப்பேன். அயிசும்மா ஏதோ சொல்ல மிச்சம் வைத்து எங்கோ மறைந்து போனது போல இருந்தது.

போலீஸ் ஆம்புலன்ஸில் மய்யத்துடன் நானும் சேர்ந்து கொண்டேன். ஹரம் ஷரீபுக்குத்தான் மய்யத்தை கொண்டு போகிறோம்.  எம்பிரியோ டிரான்ஸ்ஃபெரிங் நடந்து பத்தாவது நாளில் தான் அவளுக்கு ரிசல்ட் தெரிய வேண்டியது இருந்தது. இரத்தம் பரிசோதித்துத்தான் அண்டவாஹினி குழலில் நேரிட்டு செலுத்திய கரு உடலுடன் பொருந்திவிட்டதா என்று பார்ப்பார்கள்.

ஆறு எம்பிரியோக்களில் மூன்று டெஸ்ட்யூபிலேயே மரித்துப் போனது. மிச்சமிருந்த மூன்றைத்தான் டாக்டர் உள்ளே செலுத்தினார். ஏதாவது ஒன்று ஒட்டிக் கொள்ளும். மனதில் நினைத்தேன். சூரிய உதயத்துக்கு முன்னாலேயே நர்ஸ் அறையில் வந்து இரத்தம் எடுத்துக் கொண்டாள். வினோதங்களிலிருந்தும் கேளிக்கைகளிலிருந்தும், சுயமாக மனம் மாறியிருந்த காலமிது. இருவரும் ஆழமாக அன்பு செலுத்தும் போதும் அலுப்பான தாம்பத்தியத்தின் மலை உச்சிகளில் மனது மரத்துப் போன நிலையில் நின்றது. தீவிர சக்தியுடைய மருந்துகளுடையவும் யந்திரங்களுடையவும் தாக்குதலை தாங்க இயலாமல் குழிக்குள்ளே சென்ற கண்களுடன் காலையையும் மாலையையும் திரைச்சீலையை நீக்கி பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

ரிஸப்ஷனிலிருந்து ரிசல்ட் வாங்கும் போது கைகள் நடுங்கிக் கொண்டிருந்தது. ஒரு குழந்தைக்கான கடைசிப் பரீட்சை. நெகட்டீவ். ஆகாயத்திலிருக்கும் கண்ணுக்குத் தெரியாத பீடத்தை அடித்து நொறுக்க வேண்டும் என்றிருந்தது அந்த நேரம். எனக்கு மட்டும் மறுக்கப்படும் கனிகளை அம்பு செய்து விழச் செய்ய வேண்டும் என்றிருந்தது. முதல் மூன்று எம்பிரியோக்கள் லாபில் வைத்தே இறந்து போனது என்றால் மிச்சமிருக்கும் மூன்று அவளது அண்டவாஹினிக் குழலுக்கு மறுபக்கம் போகவில்லை. ஆஸ்பத்திரியிலிருந்து காகித குப்பைகள் எடுத்து வீட்டுக்கு திரும்பும் போது நாங்கள் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. தெய்வத்துடனான கேலிச் சிரிப்பு என் முகத்தில் படர்ந்த போது அவளது கன்னங்களில் மஹாபாத்திரத்தின் வெற்றுத்தன்மை.

வேறு மய்யத்துகளுடன் சேர்த்துத்தான் அயிசும்மாவின் மய்யத்தும் இமாமுக்கு முன்பாக வைத்தது. இமாமுக்கு பெரும் போலீஸ் பந்தோபஸ்து உண்டு. அவருக்கென்று இருக்கும் தனி வாசல்வழியாகத்தான் இமாம் வருவதும் திரும்பிப் போவதும். முன்னாலும் பின்னாலும் போலீஸ் பாதுகாப்புடன் போலீஸ் ஆம்புலன்ஸில் தான் அயிசும்மாவின் பூத உடல் கபரஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டது. இறை தூதரில் முதல் மனைவி கதீஜாவை அடக்கியிருக்கும் மண், தூதர் என்பதற்கு சாட்சியாக இருந்த முதல் பெண் கதீஜா. இடுகாட்டுக்குள் தோண்டியிட்ட கபர் சமீபம் வரை ஆம்புலன்ஸ் வந்து நின்றது. அமீரும் குழுவினரும் மயானத்தின் வாசலுக்கு வெளியிலேயே நின்று கொண்டனர். கபரின் இரு சுவர்களை கைகளால் பிடித்து மெதுவாக நான் கபருக்குள் இறங்கினேன். அயிசும்மாவின் மய்யத்தை  கைகளில் வாங்கி மெல்ல நகர்ந்து கபருக்குள் மிருதுவாக கிடத்தினேன். கொஞ்சமும் வேதனையில்லாமல் கண்களிலிருந்து இற்று விழுந்த துள்ளிகள் அயிசும்மாவை மூடிக்கெட்டிய வெள்ளைத் துணிகளை நனைத்தன. ஒருவருக்கு மட்டும் சிரமத்துடன் கிடக்கும் படியான குழி. முகம் பார்க்கும் படி திருப்பி வைத்து மண்ணால் தலையணை செய்து தலையை அதில் சேர்த்து வைத்தேன். ஏகாந்தமான தனிமையான நெடும் பயணம். கடைசியாக நான் ஆகாயத்தைப் பார்த்தேன். அயிசும்மாவின் ஆன்மா இதையெல்லாம் பார்க்குமா? என்று தெரிந்து கொள்ள, பார்த்துக் கொண்டிருப்பார் என் கண்ணுக்கு தெரியாமலேயே. மண் இடத் தயாராகும் நிமிடம் மூன்றோ நான்கோ அரபிகள் ஒரு குழந்தையின் உடலுடன் அங்கே வந்தார்கள். மய்யத்து தொழுகைக்கு இடையில் அப்படி ஒரு மய்யத்தை நான் பார்க்கவில்லை. ஒருக்கால் நான் கவனித்திருக்காமல் இருந்திருப்பேன்.

இந்த குழந்தையையும் இந்த மய்யத்துடன் கிடத்த வேண்டும். துண்டு துண்டான ஆங்கிலத்தில் அவர் கூறினார். அந்த நாட்டினர் அப்படித்தான் இறந்து போன குழந்தைகளை தனியாக கபரில் கிடத்த மாட்டார்கள்.

குழந்தையின் மய்யத்தை நான் கைகளில் வாங்கினேன். குழந்தைகள் இல்லாத நான் ஒரு குழந்தையின் சடலத்தை கபரடக்கம் செய்கிறேன். என் கைகள் நடுங்கியபடியே இருந்தன. வாழ்க்கையின்  பாதி வழியில் உயிர் இழந்த குழந்தை. டெஸ்ட்யூபிலும் அண்டவாஹினி குழாயிலும் துடித்து இறந்த என் எம்ரியோக்களைப் போல. ஆயிசும்மாவின் மார்போடு சேர்ந்து குழந்தையை கிடத்தினேன். தாய்ப்பால் குடிக்க என்பது போல. வெள்ளை துணிகளிலிருந்து ஆயிசும்மாவின் கைகளை வெளியே எடுத்தேன். குழந்தையின் கைகளோடு சேர்த்து வைத்தேன். பாதம் முதல் தலைவரையிலான பாகங்களை பலகைகளால் அந்த கபரை மூடினேன். அயிசும்மாவையும் குழந்தையையும் இருட்டின் தனிமையில் விட்டுவிட்டு யாரோ நீட்டிய கைகளை பிடித்து நான் கபருக்கு வெளியே பூமிக்கு மேல் வந்தேன்.

மயானத்துக்கு வெளியே அமைதியை கலைத்தபடி அமீர் அழுத்தமான குரலில் சொன்னார்: அந்த அம்மா புண்ணியம் செய்தவள். அவர்களது பிரார்த்தனை களுக்கு எல்லாம் ஆண்டவன் பலன் கொடுத்திருக்கிறார். ஒன்றைத் தவிர.

அது என்ன? அந்த ஒன்று? நான் அமீரை தலையை சரித்துப் பார்த்தேன். ஒரு ஆயுட்காலம் முழுவதும் அவள் வேண்டியும் இறைவன் அவளுக்கு ஒரு குழந்தையை கொடுக்கவில்லை. குழந்தைகளை இவ்வளவு தூரத்துக்கு நேசித்த போதும் அந்த பிரார்த்தனைகளை கேட்கவில்லையென இறைவன் நடித்தான் போலும். ”யா அல்லாஹ்” என்ற எனது உச்சத்தில் உள்ள கதறல் கேட்டு அமீர் மவுனமானார். அம்மாவின் மார்பில் தாய்ப்பால் குடித்தபடி பர்ஸகில் நீண்ட உறக்கத்தில் ஏற்பட்ட அம்மாவுடையவும் குழந்தையுடையவும் சித்திரம் என் மனக்கண்ணில் நிரந்தரமாகிவிட்டது.

***

Thanks : Velliyodan Cps & Asif Meeran

*

பின்குறிப்பு : ‘ஆலம் அல் பர்ஜக்’ பற்றி எங்கள் ஹஜ்ரத் சொன்ன விளக்கம் வேறு. இந்த ‘பர்ஸக்’ பற்றி மௌலவிகள் சென்ஷியும் மஜீதும் இணையத்திலிருந்து திரட்டிய குறிப்புகள் இவை. இருவருக்கும் நன்றி. – AB

1.

Mentioned only three times in the Quran, and just once specifically as the barrier between the corporeal and ethereal, Barzakh is portrayed as a place in which, after death, the spirit is separated from the body – freed to contemplate the wrongdoing of its former life. Despite the gain of recognizance, it cannot utilize action.[9] The other two occurrences refer to Barzakh as an impenetrable barrier between fresh and salt water.[10][11] While fresh and salt water may intermingle, an ocean remains distinct from a river.

In hadith, Ibn al-Qayyim cites that, albeit not mentioned in the Quran, souls in Al-Barzakh would be grouped with others matching in purity or impurity.[12]

2

Barzakh (Arabic: برزخ, from Persian barzakh, “barrier, partition” is an Arabic word meaning “obstacle”, “hindrance”, “separation”, or “barrier”) designates a place between hell and heaven, where the soul resides after death, and experiences its own heaven or hell, until the resurrection on Qiyamah (Judgement Day).