வளர்ப்பு மிருகம் – சுகுமாரன் கவிதை (ஒவியம் : ஆதிமூலம்)

கவிஞர் ஞானக்கூத்தன் நடத்திய ’கவனம்’ சிற்றிதழில் வெளியான சுகுமாரனின் கவிதையையும் அதற்கு ஆதிமூலம் வரைந்த ஓவியத்தையும் நண்பர் விமலாதித்த மாமல்லன் முகநூலில் பகிர்ந்திருந்தார். (’கவனம்’ இதழ்கள் முழுத்தொகுப்பையும் தற்போது அமேஜான் தளத்திலும் வெளியிட்டிருக்கிறார். இங்கே க்ளிக் செய்து வாங்கலாம்).

எனக்குப் பிடித்த ஒவியர்களில் ஒருவரான ஆதிமூலம் பற்றி சுகுமாரன் எழுதிய  ’வாழும் கோடுகள்’ என்ற சிறு கட்டுரையை ஏற்கனவே டைப் செய்து வைத்திருந்தேன்.  எல்லாவற்றையும் சேர்த்துப் போட இப்போது ஒரு வாய்ப்பு.

சுகுமாரனுக்கும், மாமல்லனுக்கும், எப்போதும் எடுத்துக் கெடுக்கும் (!) என் சென்ஷிக்கும் நன்றிகள். – AB

*

வளர்ப்பு மிருகம் – சுகுமாரன்

தளர்ந்து
உயிர் பிரியத் தவிக்கும் உடம்பாய்க் குறுகி
எங்கோ பார்த்துக் கொண்டிருந்த
என் கால்களை முகர்ந்தது, அது.
அதன் கண்களில் நிராதரவு.
இரங்கி சில சொற்களை எறிந்தேன்
பசி நீங்கியும் போகாமல்
என் நிழலைத் தொடர்ந்தது.
நாளடைவில் கால் முகம் ரோமம் என
உறுப்புகள் மீண்டன அதற்கு
பற்கள் நீண்டன
நகங்கள் வளர்ந்தன
கண்களில் குரோதம் அடர்ந்தது
அதற்குப் பயந்து
நண்பர்கள் வராமல் போனார்கள்
குழந்தைகள் ஒளிந்து கொண்டார்கள்,
அது வளர்ந்து
என்னை விடப் பெரிதாயிற்று
அதன் பற்களில் வெறி துடித்தது
எனினும் என்னை ஒன்றும் செய்யாது என்றிருந்தேன்
அதன் முனகலும் உறுமலும்
என் அமைதியைக் கலைத்தன.
அதன் ரோமங்கள் உதிர்ந்தும்
மூத்திரம் தேங்கியும்
மலம் குவிந்தும்
அறை நாற்றமடிக்கத் தொடங்கியது.
தொல்லை தாளாமல் நம்பிக்கைகளைக் கோர்த்துச் சங்கிலியாக்கிக்
கட்டி வைத்தேன்,
உலாவப் போகையில் சங்கிலி புரளக்
கூடவந்தது. பிறகு
இழுத்துப் போக வலுவற்ற என்னை
இழுத்துப் போகத் தொடங்கியது.
சங்கிலிச் சுருளில் மூச்சுத் திணற
சிக்கிக் கொண்டேன் நான்.
விடுபடத் தவிப்பதே விதியாச்சு
ஒரு நாள் விசை குறைந்த சங்கிலியைக் கை உணர
அது தொலைந்ததென்று மகிழ்ந்தேன்.
எனினும்
புலனாகாத எங்கோ
அகற்ற முடியாத சங்கிலியின் மறுமுனையில்
இருக்கக் கூடும் அதுவென்ற
பயம் பின்பு நிரந்தரமாச்சு.

(கவனம் / 13)

*

வாழும் கோடுகள் – சுகுமாரன்

சில ஆண்டுகள் முன்பு வரை வெகுஜன வாசகர்களுக்கு தயக்கம் இருந்தது. நவீன ஓவியமெல்லாம் நமக்குப் புரியாது என்பது அந்தத் தயக்கம். பெரும் பத்திரிகைகளுக்கும் நவீன ஓவியங்களிடம் தீண்டாமை இருந்தது. அதுவெல்லாம் நமது பத்திரிகைகளில் பொருந்தி வராது.

இந்தத் தயக்கத்தையும் தீண்டாமையையும் உடைத்த ஓவியர் கே.எம். ஆதிமூலம். எழுபதுகளில் வெளிவந்த சிற்றேடுகளில் ஆதிமூலத்தின் கோட்டோவியங்கள் இடம்பெறாத இதழ்கள் மிகக் குறைவாகவே இருக்கும். புதிய கவிதைபோல நவீன ஓவியமும் துடிப்புள்ள ஒரு சின்ன வட்டத்தின் விவாதப் பொருளாக இருந்தது.

பெரும் பத்திரிகைகளின் உலகுக்கு குங்குமம் மூலம் அறிமுகமானவர் ஆதிமூலம். தனித்துவமும், உயிர்ப்பும் உள்ள கோடுகளால் உருவான அவரது ஓவியங்கள் வெகுஜன வாசகர்களை முதலில் பிரமிக்க வைத்தன. பிறகு கவனிக்க வைத்தன. அதன் பிறகு புரிந்து கொள்ள அழைத்தன. இன்று நவீன ஓவியங்களை வெளியிட எந்தப் பெரிய பத்திரிகையும் முகம் சுளிப்பதில்லை. மாறாக கொஞ்சம் சீரியஸான கதை, கவிதைகளுக்கு அவரையோ, அவரைப் போன்ற நவீன ஓவியர்களையோ தேடுவது வழக்கமாகிவிட்டது.

நவீன ஓவியர்களில் பல முதன்மைகளைக் கொண்டிருப்பவர் ஆதிமூலம். பெரும் பத்திரிகைளில் பரவலாக நவீன ஓவியங்களை முதன் முதலில் இடம்பெறச் செய்தவர். தமிழ் எழுத்துக்களின் வடிவமைப்பில் மாற்றம் செய்து புத்தக முகப்புகளிலும், தலைப்புகளிலும் குடியமர்த்தியவர். நவீன ஓவியங்களில் தொடர்கதைக்குப் படம் வரைந்தவர் என்று பல முதல்கள் அவரிடமிருந்து தொடர்கின்றன.

ஆதி மூலம் உருவாக்கிய தலைப்பு எழுத்துக்கள் ஆரம்பத்தில் மிகவும் நையாண்டிக்குரியனவாகப் பேசப்பட்டன. அது அறியாமை . ஏனெனில் அந்த எழுத்துக்களின் வடிவம் அச்செழுத்துக்களின் வடிவமல்ல; கல்வெட்டுகளிலும், ஓலைச் சுவடிகளிலும் பயன்படுத்தப்பட்ட அசலான தமிழ் எழுத்துக்கள் அவை .

மகாத்மா காந்தியின் நூற்றாண்டு விழாவையொட்டி ஆதிமூலம் தீட்டிய நூறு காந்தி படங்கள் ஓவிய உலகில் மிகவும் பிரசித்தம். மிகக் குறைச்சலான கோடுகளால் வரையப்பட்ட கருப்பு வெள்ளைப் படங்கள் அவை. புகைப்பட காந்தியில் இயல்பான தோற்றத்தைப் பார்க்க முடியும். ஆனால் ஆதியின் கோடுகளில் காந்தியின் உயிர்ப்பைப் பார்க்க முடிந்தது. கிராமியக் கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான கடவுள் படங்களில் தெரியுமே அதுபோன்ற எளிமையின் உயிரோட்டம்.

சுதந்திரப் பொன்விழாவையொட்டி சென்னை வேல்யூஸ் ஆர்ட் ஃபவுண்டேஷன் ஆதி மூலத்தின் கோட்டோவியங்களை காட்சியாக வைத்திருந்தது. 1962 முதல் நேற்று வரை ஆதிமூலம் வரைந்த கோட்டோவியங்களின் கண்காட்சி அது. ஆதிமூலம் இதுவரை வரைந்த கோட்டோவியங்களின் தொகுப்பு (கோடுகளுக்கிடையே Between the Lines) ஒன்றும் புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது . இந்த முயற்சியிலும் தமிழ் ஓவியர்களில் முதல் பெருமை ஆதிக்குத்தான்.

ஆதிமூலம் அகில இந்திய ஓவியர்கள் வரிசையில் குறிப்பிடப் படுபவர். தமிழ்நாட்டில் ஒதுங்கிவிட்ட காரணத்தினால் உலகப்பிரசித்தி பெறவில்லையோ என்னவோ?

சர்வதேசத் தரம் உள்ளவர் ஆதிமூலம். ஆனால், அவரது வேர்கள் தமிழ் நிலத்தில் ஊன்றியவை. காந்தி, மகாராஜா ஓவியத் தொடர்கள் அனைத்தும் இயல்பான கோடுகளால் உருவானவை. கிராமிய தேவதைகளின் சிலைகளில் தெரியும் அதே கம்பீரம், அதே ஜீவன் ஆதிமூலத்தின் படைப்புகளிலும் தென்படுபவை.

“ஓவியம் என்பது அறிவிலிருந்து வரும் விஷயமல்ல. உங்கள் பார்வையிலிருந்து வருவது. உங்கள் அனுபவத்திலிருந்து வருவது. நம் ஊர்க் கலைஞர்கள் ஆளுயர அய்யனார் சிலைகளைச் செய்து வைக்கிறார்களே. அவர்கள் ஓவியமோ சிற்பமோ கற்றுக் கொண்டா செய்கிறார்கள். பார்க்கிறார்கள். அனுபவிக்கிறார்கள். படைக்கிறார்கள்’‘ – என்கிறார் ஆதிமூலம்.

நிஜம். நமது பார்வை திரைபோடப்படாததாக இருக்குமெனில் ஆதிமூலத்தின் படைப்புகள் நிச்சயம் ஓர் அனுபவமாக இருக்கும்.

*

(குங்குமம் இதழில் வெளியான கட்டுரை.  சுகுமாரனின் ‘திசைகளும் தடங்களும்’ நூலிலிருந்து.. (பக் 130-132)
*

நன்றி : சுகுமாரன் , விமலாதித்த மாமல்லன்

*

தொடர்புடையவை :
‘நம் திறமையை நாம் உணர வேண்டும்..!’ – ஓவியர் ஆதிமூலம்

நவீன ஓவியம் : சில விளக்கங்கள் – ஜோசப் ஜேம்ஸ்

இதயத்துல இறை அச்சம் இருந்தா போதும் – விமலாதித்த மாமல்லன்

mamallan3786. நண்பர் விமலாதித்த மாமல்லனின் அற்புதமான ‘உயிர்த்தெழுதல்’ சிறுகதையில் ஒரு முஸ்லிம் பாவா (ஃபக்கீர், துறவி) சொல்வதை நன்றியுடன் பதிவிடுகிறேன். ‘எங்கும் நிறைந்த இறைவன் எந்த உயிருக்கும் எதிரி அல்ல. எல்லோருக்கும் நண்பன். அடுத்தவனைக் கெடுக்க நினைக்காதவரை அடுத்தவன் வயிற்றில் அடிக்க நினைக்காதவரை அவனது அருள் அனைவருக்கும் கட்டாயம் உண்டு’ என்று சொல்லும் பாவா அவர்.

முன்னெச்சரிக்கையாக  சிறுகதையின் PDFஐ இந்தப் பக்கத்தில் இணைக்கவில்லை. ஆனால் முழுசாக  நீங்கள்  இங்கே பார்த்து தரவிறக்கம் செய்யலாம் , இறையச்சத்தோடு. யார் கையையும் உடைக்காமல் வாசியுங்கள். – ஆபிதீன்.

**

‘எப்பிடிக் கூப்ட்டா இன்னா. கொறல் கூப்புட்றவன் காதுல வுழணும். அதான் முக்கியம். அதனால்தான் அல்லாஹ்ன்னு சொல்லுனு யாரையும் கட்டாயப் படுத்தறதில்லே. ஆண்டவனேன்னு சொல்லு. படைச்சவனேன்னு சொல்லு. படியளக்குறவனேன்னு சொல்லு. இறைவா, கடவுளே எல்லாத்துக்கும் மீறின ஒரு சக்தியேன்னு, எப்பிடி வேண்ணாக் கூப்புடு. எந்தப் பேராலக் கூப்ட்டாலும் அண்டசராசங்கள் அனைத்திற்கும் ஒன்றேயான அவனைப் போயி அது அடைஞ்சிடும். அப்பர் பர்த்துல ரிசர்வ் பண்ணி இருந்தாலும் ஏஸி கோச்சுல ஏறி இருந்தாலும் ஆர்டினரி அன்ரிஸர்வ்டு கம்பார்ட்மெண்டுல அடிச்சி புடிச்சி மொடங்கிக்கினுக் கெடந்தாலும் அஜ்மீர் போற ட்ரெயினு அல்லாரையும் அஜ்மீருக்குத்தானேக் கூட்டிக்கினுப் போவுது. நாலாற் ரூவா டிக்கெட் வாங்கினவனுக்கும் நாப்பது ரூவா குடுத்து பிளாக்குல பால்கனி டிக்கெட் வாங்கினவனுக்கும் வேற வேற படமாக் காட்றாங்க சினிமாக் கொட்டாயில, அது மாதிரிதான். அவனவன் வசதிக்கு ஏத்தா மாதிரி, வழக்கத்துக்கு ஏத்தா மாதிரி எப்படி வேண்ணாக் கூப்புட்லாம். கும்புட்லாம். இதயத்துல இறை அச்சம் இருந்தா போதும்.’

**

30 பி,டி.எஃப் தந்த விமலாதித்த மாமல்லனுக்கு முத்தங்கள்.

மோக முள் – (மலையாள மொழியாக்கத்திற்கான) தி.ஜானகிராமன் முன்னுரை

 ஃபேஸ்புக்கில் – இமேஜ் ஃபைல்களாக – இதைப் பகிர்ந்த நண்பர் விமலாதித்தமாமல்லனுக்கு நன்றிகளுடன் பதிவிடுகிறேன். இந்த முன்னுரைக்காகவே மீண்டும் இப்போது ’மோக முள்’ளை வாங்கியிருக்கும்  அவரிடம்  அனுமதியெல்லாம் வாங்க மாட்டேன்.  டைப் செய்து உடனே இங்கே போடலேன்னா தி.ஜா பிரியனான எனக்கு தூக்கமும் வராது..! சி.ஏ.பாலன் மொழிபெயர்ப்பில் கேரள சாகித்திய அக்காதெமி வெளியீடாக மலையாளத்தில் வெளியான ’மோக முள்’ நாவலுக்குத் தி.ஜானகிராமன் எழுதிய முன்னுரை இதுவென்றும்  மலையாளத்திலிருந்து தமிழாக்கியவர் சுகுமாரன் என்றும் குறிப்பு சொல்கிறது.  ’தராசில் நிறுத்துப் பார்ப்பதற்காக நான் எதையும் எழுதுவதில்லை’ என்று சொல்லும் தி.ஜா சொல்வதைக் கேளுங்கள். நன்றி. – ஆபிதீன்

***

thi-ja

மோக முள் – மலையாள மொழியாக்கத்தின் முன்னுரை

1956-56 வருஷங்களில்தான் ‘மோகமுள்’ளை எழுதினேன். அப்போது எனக்கு வயது முப்பத்து நாலு.

எனக்குச் சங்கீதம் சொல்லிக்கொடுத்த ஒரு மகா வியக்தியும் எனக்கு நன்கு தெரிந்த பலரும் இந்த நாவலில் இருக்கிறார்கள். உருவத்திலும் பெயரிலும் மாத்திரமே வேறுபாடு.

இந்த நாவலின் பாதி பாகமும் என் சொந்தக் கதை என்று எண்ணுபவர்கள் உண்டு. அது சரியல்ல, சில சம்பவங்கள், மனிதர்கள், விகார விசாரங்களை வாழ்க்கையிலிருந்து எடுத்திருப்பதாகத் தெரியலாம். அப்படி எடுப்பதுதான் இலக்கியப் படைப்பு என்று சொல்வதற்கில்லை.

நான் பல சந்தர்ப்பங்களில் சொல்லியிருக்கிறேன். வாழ்க்கை, இலக்கியம் இரண்டும் இரண்டுதான். இரண்டும் ஒன்றாகத் தெரியலாமென்றாலும் அது வெறும் தோற்றம் மட்டும்தான். வாழ்க்கைப் பிரச்சனைகளுக்குச் சில சமயங்களில் இலக்கியம் பரிகாரங்களை வைக்கலாம். ஆனால் இலக்கியம் அந்தப் பரிகாரங்களைக் கொடுத்தே தீர வேண்டும் என்ற அபிப்பிராயம் எனக்கு இல்லை. சுருக்கமாகச் சொன்னால் ஒரு மனிதனின் அக உலகம், அதிலிருக்கும் சிக்கல்கள், அதன் கடினமான துக்கங்கள், சித்ரவதைகள், அதன் மகிழ்ச்சி இவை எல்லாவற்றின் மொத்தமான அனுபூதிநிலைதான் இலக்கியப் படைப்பின் உந்துசக்தி. எதற்காக, எந்த நோக்கத்துக்காக எழுதுகிறேன் என்று கேட்டால் அந்தக் கேள்வி அநாவசியமானது என்றுதான் சொல்வேன். அது நீங்கள் ஏன் காதலிக்கிறீர்கள் என்று கேட்பதைப் போலத்தான் இருக்கும்.

’மோகமுள்’ளில் சங்கீதம், காதல், கல்வி, தமிழ்நாட்டின் கிராமங்களிலும் சிறிய நகரங்களிலும் பார்த்த மனிதர்களின் வாழ்க்கை முறையும் மோகங்களும் மோக பங்கங்களும் இப்படி என்னவெல்லாமோ இருக்கின்றன. இவையெல்லாம் நாவலாசிரியனின் திடமும் தீர்மானமுமான முடிவுகளென்றோ அபிப்பிராயங்கள் என்றோ எடுத்துக் கொள்ள வேண்டாம். தராசில் நிறுத்துப் பார்ப்பதற்காக நான் எதையும் எழுதுவதில்லை.

இந்த நாவலில் கட்டுக்கோப்பான கதை இல்லையென்று பலரும் சொல்லியிருக்கிறார்கள். ஒரு சாமான்யன் ஒரு குழந்தையையோ ஒரு பூவையோ ஒரு நாய்க்குட்டியையோ தன் நெஞ்சோடு வாரியணைத்துக்கொள்வது போல விதவிதமான அனுபூதிகளை – உணர்ச்சிகளை, எண்ணங்களை, கதாபாத்திரங்களை கட்டித் தழுவிக் கொள்வதில் ஏற்படும் ஒரு பிரத்தியேக அனுபூதிதான் எனக்கு இருக்கிறது.

இந்த நாவலில் நாவலின் உத்திகள் இல்லை. பரிணாமம் இல்லை. இத்தியாதி விமர்சனங்களுமிருக்கின்றன, அந்த விமர்சனங்களைப் பணிவோடு ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் முன்னால் உந்திய வயிறும் ஒட்டிய பிருஷ்டமும் சூம்பிப்போன கால்களுமாகப் பிறந்துவிட்டது என்பதற்காக தன் குழந்தையை ஒரு பிச்சைக்காரிகூடக் குப்பைத் தொட்டியில் வீசி எறிவாளா?

தி. ஜானகிராமன்

புது தில்லை

7.6.1970

***

தொடர்புடைய இரு சுட்டிகள் :

மோகப் பெருமயக்கு – சுகுமாரன்

திகட்டவே திகட்டாத தி. ஜானகிராமன்

சேஷகோபால மாமல்லன்

நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன் சேஷகோபாலனின் ‘காக்கைச் சிறகினிலே’யை. நேற்று அதை நாட்டுடைமையாக்கிய விமலாதித்த மாமல்லனுக்கு நன்றிகள். சேஷகோபாலன் இதைப் பாடுவதற்கு எடுத்துக் கொண்ட சிரமத்தைவிட யூட்யூபில் இடுவதற்கு மாமல்லன் பட்ட சிரமம் அதிகமாம்.  ஓய், சிரமப்பட்டால்தான் சுவனம் என்பார்கள் சிராஜுல் மில்லத்!