நோன்பின் பெருமைகளை எழுதிய ‘கவிக்கோ’ , ‘இறைவனின் அன்புக்கு முன் எல்லாமே கால்தூசு என்ற பக்குவம் நமக்கு வந்துவிட்டால் பிரார்த்தனையே தேவையில்லை தனியாக ; ஏனென்றால்- நாமே பிரார்த்திக்கப்படும் பொருளாய் ஆகிவிடுகிறோம்’ என்று கவிதையை முடித்திருக்கிறார். அது கவிதையை இல்லையா என்பதெல்லாம் அப்புறம். சூஃபிஸ சிந்தனையுள்ளவர். சொன்னால்தான் என்ன? ‘ஷிர்க்கோ’ ஆகிவிட்டாராம் சிலருக்கு. நோன்பு சமயத்தில் இந்தமாதிரி கவிதைகளை ‘போஸ்ட்’ செய்யாதீர்கள் என்று ஒரு குழு மிரட்டியிருக்கிறது. நண்பர் அழுதார். ஆபிதீன் பக்கங்களுக்கு அனுப்புங்கள் என்றதும் அனுப்பிவைத்தார். அதைப் பதிவிடலாம் என்றால் ஓரிரு தளங்களில் ஏற்கனவே வெளியாகியிருக்கிறது. அறிவார்ந்த முதுகுளத்தூருக்கோ அல்லது அழகிய கடையநல்லூருக்கோ சென்று படித்துக்கொள்ளுங்கள்.
இன்னொருவர் , ‘பிறையும் வில்லும்!’ என்ற தலைப்பில் கவிஞர். வாலி எழுதியதை அனுப்பியிருக்கிறார். ஆனந்தவிகடனில் சுழலும் நினைவு நாடாக்கள். எத்தனை இஸ்லாமியப் பெரியவர்கள் தன் முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்தார்கள் என்று நெகிழ்ச்சியுடன் கூறும் வாலி, ‘கூன் பிறைகளால் உருவாக்கப் பெற்ற கோதண்டம்!’ என்று தன்னைச் சொல்கிறார். கூன் பிறைகளால் உருவாக்கப் பெற்ற – அதைப் பற்றி எந்த வார்த்தையும் பேசாத – ஒரு தண்டமும் அதே ஆ.வியில் (18.05.2011) இருக்கிறது. நான் எழுதக்கூடாது. நல்லதைப் பேசுவோம் புனித ரமலானில். ’நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்’ என்று ரசூல் (ஸல்) சொல்கிறார்கள்.
’என் வாழ்வு வடிவு பெற உளியாயிருந்து செதுக்கிய உள்ளங்கள் எல்லாம் முகமதியர் குலத்தில் முளைத்தவைதான்’ என்கிறார் கவிஞர். வாலி. ’இன்று நான் – முத்தமிழ்ப் பாலருந்த, மூலக்காரணம் முஸ்லீம் பால்தான்!’ என்று அவரைச் சொல்லவைத்த மூதாட்டி முதல் ஜெயகாந்தனின் நண்பராக இருந்த ஹகீம்பாய், செய்குதம்பிப் பாவலரின் மகனாரான ஹமீதுபாய் வரை பெரிய லிஸ்ட் அது. அந்தப் பெரியவர்களில் ஜஸ்டிஸ் மு.மு. இஸ்மாயில் அவர்களும் அடக்கம். (அஸ்மா, சந்தோஷம்தானே?!). ’அவர், தலைமை ஏற்றிருந்த சென்னைக் கம்பன் கழகத்தில்- பலமுறை என்னைப் பாட்டரங்கின் தலைவராக்கி அழகு பார்த்தவர். என்னுடைய ‘அவதார புருஷ’னை ஆய்வு செய்து, ஐநூறு பக்கத்தில் ஒரு நூலை வெளியிட்டார்கள், அமரர். திரு. டாக்டர் சுப்புரெட்டியார் அவர்கள். அதற்கு நீண்ட அணிந்துரை அருளி – என்னைப் பெருமைப்படுத்தியவர் திரு.எம்.எம்.இஸ்மாயில் அவர்கள்!’ என்கிறார் வாலி. இதைப் பதிவிடலாம்; நாகூர்க்காரர்களுக்கும் பெருமை. ஆனால் இதுவும் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் வந்துவிட்டதே. இங்கே க்ளிக் செய்து வாசியுங்கள்.
குர்-ஆனை அழகாக ’ஃப்ளாஷ்’-ல் செய்திருக்கிறார்கள். பாருங்கள் என்று இந்த தளத்தின் முகவரியை அனுப்பியிருக்கிறார் ஒருவர்.
ஒரே இஸ்லாமிய ’தாவா’தான் போங்கள்..!
எட்டிப்பார்க்கும் இந்து சகோதரர்களுக்காக இன்று ஒரு கண்ணன் பாட்டு. இதை அனுப்பியவர் ஒரு இஸ்லாமியர் என்பது கூடுதல் தகவல். அசனா மரைக்கார் என்று சொல்ல மாட்டேன்!
’Mindஐ ரிலாக்ஸா வச்சிக்க நான் யூஸ் பண்ணுறது ரோஜா பாக்கு’ என்று ஒரு விளம்பரம் வருகிறது – சனி டிவி.யில். பாக்ககு சகிக்காது. ரிலாக்ஸ் பண்ண எனக்கு உதவுவது இந்தப் பாட்டும்தான் . ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் இயற்றிய பாடலான ’நீதான் மெச்சிக்கொள்ள வேண்டும் . கேளுங்களேன். சௌம்யா பாடியது. ’நோம்பு சமயத்தில இத போடுறதா ?’ என்று கடுப்படித்தால் ’விசுவசிக்கு மகனே’ என்ற – எனக்கு மிகவும் பிடித்த – மலையாள கிருஸ்துவப் பாடலை அடுத்து பதிவிடுவேன். ஜாக்கிரதை! புனித ரமலான், பொறுமையின் மாதம்.
கேட்க :
***
நன்றி : ஜெஹபர்சாதிக் , ஷாஜஹான், பஹ்ருதீன்