அம்மாசி – வலம்புரி ஜான்

அம்மாசி – வலம்புரி ஜான்

குடிமகன் (நாவிதன்) கிழக்கே கல்லறைத் தோட்டம் முதற்கொண்டு மேற்கே முள்ளிக்கரை வரை டமாரம் அடித்துவிட்டான். நாளை மாலை ஐந்து மணிக்கு ஊர்க் கூட்டம். பள்ளி மாணவர்கள் கழிவறைகளில் படம் வரைவது போல சிலவேளைகளில் தங்கள் பெயர்கள் சக மாணவிகளோடு எழுதப்படுவதைப் பார்த்துக் கொதித்துப் போகிறவர்களும் உண்டு. அதைக்கண்டு குதூகலம் அடைகிறவர்களும் உண்டு. அந்த ஊரில் இந்த பெயர் எழுதும் விவகாரத்தில் சின்னதான அடிதடி முதல் கொஞ்சம் பெரிதான கலவரம் வரை வந்திருக்கிறது.

இப்போது முதல் முறையாக அந்த ஊர் பங்குத் தந்தை பிரான்சிஸை ஒரு கன்னியாஸ்திரியோடு இணைத்து சுவர்களில் எழுதப்பட்டிருக்கிறது. பெரும்பாலானாவர்கள் என்ன இருந்தாலும் ஒரு சாமியாரை ஒரு கன்னியாஸ்திரியோடு இணைத்து எழுதியதை விரும்பவில்லை. நாளைய ஊர்க் கூட்டத்தில் எல்லாம் முடிவாகிப் போகும். ஜோசப்பின் என்ற இந்த கன்னியாஸ்திரிதான் முதன் முறையாக அந்த ஊருக்கு வந்த டாக்டர் கன்னியாஸ்திரி. அடிக்கடி அவர்களை அழைத்து தனது தீராத ஒரு நோய் பற்றி கூறிக்கொண்டு இருப்பார் சாமியார். பக்கத்து ஊர்களில் ஆண் டாக்டர்கள் இருக்கிறபோது இவர் ஏன் எப்போது பார்த்தாலும் படுக்கையில் கழிந்து போகிற வெள்ளை வேர்வை பற்றி, டாக்டராக இருந்தாலும் ஒரு பெண்ணிடம் பேசுகிறார் என்று ஸிஸ்டர் ஜோசப்பினுக்கு விளங்கவில்லை.

சாமியாரையும் கன்னியாஸ்திரியையும் இணைத்து எழுதியதே அம்மாசிதான் என்பதில் சாமியார் உறுதியாக இருந்தார்.

ஒருநாள் வாலிபர் கூட்டத்தில் அசிஸ்ட பண்டம் (புனிதப்பொருள்) என்றால் என்ன என்று அம்மாசி சாமியாரைக் கேட்டான். புனிதர்கள் பயன்படுத்துவது அச்சிஸ்ட பண்டம் என்று சாமியார் சொன்னார். உடனே அம்மாசி போப் அச்சிஸ்டவரா என்று கேட்டான். சாமியார் ஆம் என்றார். அப்படி என்றால் அவர் மூத்திரத்தைப் பிடித்து அச்சிஸ்ட பண்டம் என்று ஊருக்கு ஊர் விற்பனை செய்யலாமா? என்று அம்மாசி கேட்டதும் எல்லோரும் கொல்லென்று சிரித்தனர்.

வேறு ஒரு நாள் ஞான உபதேச வகுப்பில் சாமியார் பாவிகள் எல்லாம் நரகத்த்துக்குப் போவார்கள், அங்கே சாத்தான்கள் ஈயத்தைக் காய்ச்சி காதில் ஊற்றுவர் என்றார்.

உடனே அம்மாசி நமது ஊரில் ஈயம் பித்தளைக்கு பேரிச்சம் பழம் தருகிறார்கள், நரகத்துக்குப் போனால் எளிதாக வியாபாரம் நடக்குமே என்று கேட்டான். வேறு சில கேள்விகளும் கேட்டான். அவைகள் எழுதுகிற மதிரி இல்லை.

இது மாதிரி நினைவுகளை சாமியார் அசைபோட்டுக்கொண்டிருந்தார். கூட்டம் தொடங்கியது. பங்கு குருவானவரை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து இருந்தார்கள். நல்லவேளை கன்னியாஸ்திரியை அழைக்கவில்லை. அம்மாசி நின்று கொண்டு இருந்தான். கூட்டம் கலவரத்தில் முடியுமோ என்ற அச்சம் இருந்தது. ஏன் என்றால் அம்மாசிக்கு தாய்மாமன்களே பத்து பேர் இருந்தார்கள். என்ன இருந்தாலும் சாமியாரை கன்னியாஸ்திரியோடு இணைத்து சுவரில் எழுதியிருக்கக்கூடாது என்று வருத்தப்பட்டார்.

முதலாவதாக உபதேசியார் எழுந்தார். சாமியாருக்குக் திக் என்றது. உபதேசியார் நன்றாகக் குடித்துவிட்டு வந்திருந்தார். தலைகிறங்க குடித்து வந்தாலும் நிதானத்தை இழகாத நீதிமானவர்.

“முந்தாநாள் இரவு உங்களுக்கு எத்தனை பெண் குழந்தைகள் என்று சாமியார் என்னைக் கேட்டார். அதுகளுக்குக் திருமணம் செய்து வைப்பது என் பொறுப்பு என்றார். பத்து பைசா தருமம் செய்ய பத்து நாள் யோசிக்கிற சாமியாருக்கு என் மேல் திடீர் அக்கறை எதற்காக, கொஞ்சம் சிந்திக்கனும்.

‘மே தினம் கொண்டாடுறீங்க, போப்பாண்டவர் பதிமூன்றாம் சிங்கராயரின் தொழிலாளர் சாசனம் பற்றி எல்லாம் பேசுறீங்க, ஆனா பதினைந்து வருஷமா எனக்கு மாதம் ஆயிரம்தான் சம்பளம் தரீங்க’ன்னு கேட்டேன். அதுக்கு சாமியார், ‘அடுத்த மாச்த்திலிருந்து உனக்கு மூனாயிரம் சம்பளம்’ என்றார். என் மீது இந்த திடீர் அக்கறை எதற்காக? கொஞ்சம் சிந்திக்கனும்.

முந்தாநாள் இராத்திரி சாமியார் பெயரையும் கன்னியாஸ்திரி பெயரையும் எழுதிட்டாங்க. சாமியார் அம்மாசியை குற்றம் சொல்றாரு. அவனுக்கு எழுதவே தெரியாது. இத சொன்னா அவன் வேறு ஆள வெச்சு எழுதிட்டான்னு சாமியார் சொல்லலாம். அந்த ஆள் யாருன்னுதான் கேள்வி. கொஞ்சம் சிந்திக்கனும்.

நேற்று காலையிலேயே ஆளுக சுவத்துல எழுதியிருந்தை பாத்துட்டாங்க. இத உடனே அழிக்கிறதுதானே சரி. ஏன் சாமியாரு அழிக்க மாட்டங்காரு. கொஞ்சம் சிந்திக்கனும்.

‘சாய்ங்காலம் கூட்டத்துக்கு வராதே, வெளியூர் போய்டு’ன்னு சொல்லி எனக்கு முன்னூறு ரூபாய் கொடுத்தாரு ஊர்ல கொலை பாதகம் நடந்துரக் கூடாது என்றதுக்காக நான் வெளியூர் போகல. நான் எதுக்காக வெளியூர் போகணும். கொஞ்சம் சிந்திக்கனும்.

கடந்த பத்து வருசமா எனக்கு ராத்தி தூக்கம் கிடையாது. ராத்தி முழுவதும் ஊரை சுத்திகிட்டு இருப்பேன். இவுங்க எல்லாருக்கும் தெரியும். கொஞ்சம் சிந்திக்கணும். நான் நல்லததான் சொல்றேன். இதுக்கு மேல சொன்னால் நல்லா இருக்காது. கொஞ்சம் சிந்திக்கனும்.”

கூட்டத்தில் சர்வ நிசப்தம் நிலவியது. கூட்டத்தில் குடித்திருந்த ஒருவன் அப்போது எழுந்து “அப்ப உபதேசியாரே, சாமியாரே அவர் பேரையும் கன்னியாஸ்திரி பேரையும் எழுதிட்டாரா”ன்னு கேட்டான். பதில் சொல்லாத உபதேசியார் கள்ளுக்கடைக்கு விரைந்து கொண்டிருந்தார். பதிலேதும் பேசாத சாமியார் வியர்க்க விருவிருக்க கோவிலுக்குப் போனார்.

மறுநாள் காலை அந்த சாமியாரின் வீட்டுச் சுவர் வெள்ளையடிக்கப்பட்டிருந்தது.

சாமியார் பெட்டி படுக்கைகளோடு ஜீப் ஒன்றில் தூத்துக்குடி பயணமாகிக் கொண்டிருந்தார். அந்தப் பங்கின் நூற்றி ஐம்பது வருட வரலாற்றில் சாமியாரே இல்லாமல், அந்த விசுவாசிகள் ஆராதனையைத் தொடங்கினார்கள்.

இதுவெல்லாம் நடந்து பதினைந்து வருடங்கள் ஆகின்றன. அந்த பங்கிற்கு சாமியார் இப்போது இல்லை. ஆனால் கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஊர் சண்டை சச்சரவுகள் இல்லாமல் அமைதியாக இருக்கிறது.

*

நன்றி புதிய கோடாங்கி இதழ் (ஆகஸ்ட் 2004)

இறைவனின் நாட்டமும் கடவுளின் கழுதையும்

இரண்டு நாட்களாக தொடர்ந்து ‘மவுத்’ செய்திகளை கேட்டுக் கொண்டிருப்பதால் மனசு சங்கடமாக இருக்கிறது. ‘ஏன் இப்படி?’ என்று ஒரு ஆலிம்ஷாவைக் கேட்டால் ‘அதெல்லாம் அல்லாஹ்ட நாட்டம் தம்பி’ என்கிறார் தாடியை உருவிக்கொண்டே! அவரிடமிருந்து தப்பித்த எனக்கு ஜீ.முருகனின் ‘கடவுளின் கழுதை’ கவிதை ஞாபகம் வந்ததும் வலம்புரி ஜான் அவர்களின் ‘ஒன்றும் ஒன்றும் ஒன்று’ கட்டுரை கிடைத்ததும்கூட இறைவனின் நாட்டம்தான் என்று நினைக்கிறேன். முருகன்ஜீயின் கவிதை பதிவின் அடியில் இருக்கிறது. ‘எல்லோரையும் எல்லாவற்றையும் படிக்கவிட்டால்,  எல்லாம் ஒன்றுதான் என்று அறிந்து கொள்ளுவார்கள்.. அவ்வாறு அறிந்து கொண்டால் நிறுவனங்களாகிவிட்ட மதங்கள் தங்கள் தனித்தன்மைகளை இழக்க நேரிடும். எல்லாம் ஒன்றுதான்  என்று சொல்லி எந்த மதவாதியாவது தனது தனி ஆட்சிக்குத் தானே உலை வைப்பாரா?” என்று கேட்கும் வலம்புரி ஜானை முதலில் பார்ப்போம். அவர் மேலும் சொல்கிறார்…

இயேசு பெருமான் எருசலேம் பட்டணத்தில் உள்ள சாலமோனின் தேவாலயத்தைப் பார்த்தார். “இந்த தேவாலாயத்தை இடித்துப் போடுங்கள்; மூன்று நாட்களில் அதை நான் மீண்டும் கட்டுவேன்” என்றார். அவர் தமது உடலாகிய ஆலயத்தைக் குறித்து அவ்வாறு பேசினார் என்று பைபிளிலே வருகிறது.

‘உள்ளம் பெருங்கோயில்; ஊன் உடம்பு ஆலயம்’ என்கிற திருமூலரின் வரிகள் அப்படியே விவிலியத்தில் காணப்படுகின்றன. இந்த அழகின் ஆழத்தில் ஏன் அமிழ்ந்து எழ வேண்டும் என்பதற்கான காரணத்தைக் கண்டு பிடித்தா சொல்ல வேண்டும். தாயுமான சுவாமிகளின் பாடல்களைப் படித்தால் ‘சென் புத்தம்’ அப்படியே ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் குடியேறியிருப்பதை அறிந்து கொள்ளலாம். வள்ளலார் பாடல்களில் இயேசுவின் குரலையே கேட்கலாம். “ஆண்டவரே நான் உமது அடிமை; உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும்” என்கிற மரியாளின் (இயேசுவின் தாயார்) வேண்டுதலில் அருள்மிகு ராமானுஜரின் ‘பிரபத்தி’ தத்துவத்தைப் பார்க்கலாம்.

ஏன் உலகத்தில் இறைவன் ஒரே ஒரு சமயம் மாத்திரம் இருக்கிற படியாகப் பார்த்துக் கொள்ளக்கூடாது என்றால் ஒரே ஒரு மதமாக இருப்பதில் இறைவனுக்கே நாட்டமில்லை என்று திருக்குரான் கூறுகிறது.

***

நன்றி : ஆஸாத் பதிப்பகம் (இந்த நாள் இனிய நாள் – ஒன்றாம் தொகுதி)

***

கடவுளின் கழுதை

ஜீ.முருகன்

பரிதாபமாக நடந்து போகிறது
ஒரு கழுதை
ரத்தமும் சீழும் வடிகிற
கால்களை ஊன்றி
எல்லோருடைய பாவங்களையும்
சுமந்தபடி

நான் என் மனைவிக்கும்
நீ உன் கணவனுக்கும்
நான் என் காதலிக்கும்
நீ உன் காதலனுக்கும்
நான் உனக்கும்
நீ எனக்கும் இழைக்கும்
துரோகங்கள் அதன் முதுகில்
மூட்டையாக கனத்துச் செல்கின்றன

ரட்சிப்பற்ற காலவெளியில்
கழுதை மெல்ல நடக்கிறது
அதன் பின்னால் நடந்து போகிறான்
ஒரு நொண்டி வண்ணான்

***

நன்றி : ஜீ.முருகன், பன்முகம்

‘வலம்புரி’ விரும்பிய ‘தக்கலை’

விழுதுகளுக்கும் எடுப்போம் விழா – ஞானபாரதி வலம்புரி ஜான்
அகில உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆறாம் மாநாட்டுச்  (1999) சிறப்பு மலரிலிருந்து, நன்றிகளுடன்

***

இவர் (தக்கலை ஹலீமா) கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்தவர். கவிஞராகக் கண்விழித்த இவர் பாடலாசிரியராகவும் பரிணமித்திருக்கிறார். இவரது புதுக்கவிதைகளுக்குக் கோலங்களாக நிலைத்துவிட்ட சில புள்ளிகளை மாத்திரம் உதாரணமாக எடுத்து வைக்கிறேன்.

‘சொத்தென்றும் சொர்ணமென்றும்
நட்டென்றும் நகையென்றும்,
உன் அப்பனை
நிச்சயதார்த்தத்தின் போதே
நிர்வாணமாக்கிவிட்டுக்
கல்யாண தினத்தன்று
அவன் வாங்கி வருவது
காஞ்சிப்பட்டல்ல கண்மணி
உன்
கனவுகளின் பிணம் பொதியும்
கபன் துணி’

‘இந்தத் தேசத்தின்
எல்லைக்கோடுகளைத் தாண்டி
இராணுவ ரகசியங்களைக்
கொண்டு செல்லத்
துட்டுவாங்கிய விரல்களைவிடத்
தொழுநோயாளியின்
தொலைந்துபோன விரல்கள்
மரியாதைக்குரிய மகத்துவ விரல்கள்’

‘கடத்திவரப்பட்ட
வீடியோ கேசட்டுகளில்
போனியம் குழுவினரின்
ரஸ்புடீன் பாடலை
ரசிப்பவனின் குழந்தைகளுக்கே
சரஸ்வதியின் வரங்கள்
சாத்தியமாகின்றன’

‘பிறைமுடியைத் தரித்திருக்கும் சிவபெருமான்
பிட்டுக்கு மண்சுமந்து உழைத்ததுண்டு
கறைபடியா மேரிமகன் ஏசுகூடக்
காலெமெல்லாம் மேய்த்தலையே
தொழிலாய்க் கொண்டார்
மறைவிளக்காய் வந்துதித்த மாநபியும்
மாடாடு பால்கறந்தார்
மன்பதைக்கு ஏவல் செய்தார்
ஆனால் இன்று
அரைகுறை நாம் அவ்வுழைப்பை மறந்துவிட்டோம்
கடவுளென்றும் மதமென்றும் பிரித்துப்பேசி
நம் கலைப்பூமி இந்தியாவைப் பிரிக்கப்பார்க்கும்
அடவுமுறை தெரிந்துகொண்டு புறப்படுவோம்.
அழிந்தாலும் இம்மண்ணில் அழிந்துபோவோம்.’

‘எத்தனைபேர் செத்தார் ஒரு கணக்குமில்லை
எத்தனைநாள் வாழ்ந்தார் அது புரியவில்லை
புத்தனையே கொண்டாடும் பூமி எங்கும்
போதிமரம் பிடிபோட்ட கோடாரிகள்’

‘மதம் வளர்க்கும் இறையில்லம் கட்டுதற்கு
மானுடத்தின் அஸ்திவாரம் பெயர்த்தெடுத்தால்
வரம் கொடுக்கக் கடவுளிங்கே வருகும்போது
வாழ்ந்திருப்பார் யாரிங்கே பிணங்களன்றி’

இந்தக் கவிதைகள் தாங்களாகவே நின்று கொள்ளுகிற திறம் படைத்தவை. ஆகவே இவைகளைப்பற்றி நான் ஒன்றும் எழுதி முட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. நமது நாட்டில் கவிதைகளில் எல்லாம் இருக்கும். எழுதியவர் மாத்திரம் இருக்க மாட்டார். அதாவது கவிதை அவரைப் பிழிந்ததாக இருக்காது. கவிஞர் தக்கலை ஹலீமா எழுதிய கவிதைகளில் அவர் இருக்கிறார். அவரது எழுத்துக்களுக்கும், வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லை என்பதே அவருக்குப் பெருமை. அண்மையில் ‘அவ்வல்’ என்கிற ஒலிப்பேழையை நான்தான் வெளியிட்டேன்.

‘காஸிம்பீ பாய்மொடஞ்சா
கண்டசனம் வாய்பொளக்கும்
வாசமுள்ள தாழம்பாயாம்
வண்ணவண்ண தாழம்பாயாம்
காஸிம்பீ பாய்மொடஞ்சா
கண்டசனம் வாய்பொளக்கும்
ஆயிரம் மணவறையில்
அவமொடஞ்ச பாய்விரியும்
பாய்விரிஞ்ச பறக்கத்திலே
பதினாறும் கூடிவரும்’ ##

என்று ஒரு பாடல். இதைப்பாடுகிற உதடுகளில் ஒருவகை ஈழ மின்னல் ஈரமும், இதயத்தில் ஒரு சுயமான சோகமும் உண்டாகும். சாதாரண முஸ்லிம்களின் வாழ்வுக்கோலங்களைப் படம்பிடிப்பதில் இந்தப்பாடல் பெரு வெற்றி பெற்றிருக்கிறது. இதைப் போலவே ‘ஸபர்’ என்கிற தலைப்பில் வருகிற பாடலில்,

சின்னச்சின்ன பிராயத்தில
சிங்கப்பூரு தேசத்தில
என்னெயிங்க தவிக்கவிட்டு
வியாபாரம் செய்யப்போன
நீங்க வருவீகளாமாட்டீகளா
ரஜூலா கப்பலிலே
தூங்க முடியாம முளிச்சிருக்கேன்
தொழுகப் பாயினிலே
காட்டுவாசா மலப்பள்ளிக்குக்
கால்கடுக்க நடந்ததுவும்
கல்லுருட்டாம் பாறையிலே
கைபிடிக்கக் கேறினதும்
வட்டப்பாற இளப்பாறி
கட்டுச்சோறு உண்டதுவும்
திட்டுத்திட்டா மனசுக்குள்ளே
தீராமப் பதிஞ்சிருக்கு

என்கிற வரிகள் கண்கள் உலர்ந்துபோன காய்களாக இருந்தாலும் உப்பு நீர்ப்பூக்களை உருவாக்கும்..

*

நன்றி : இஸ்லாமிய இலக்கியக் கழகம், தக்கலை ஹலீமா

***

## ‘THE SONG “‘KAASIMBI PAAI…”‘ IS FROM THE AUDIO CASETTE ”AWWAL”‘.IT IS NOT ”MOWWAL”.AWWAL IS AN ARABIC WORD MEANS ”BEGIN OR START OR FIRST”‘.IT IS AN MUSIC ALBUM ABOUT THE CULTURE AND THE LIFE OF MIDDLE CLASS PEOPLE OF SOUTH DISTRICTS.THE “‘PAAI” MENTIONED THE POEM IS THE ONE USED DURING MARRIAGES. – Thakkalai Haleema

‘வரலாறு’ பற்றி வலம்புரி ஜான்

வரலாறு என்பதே தேதி, மாதங்களின் தொகுப்பு என்று ஆகி வகுப்பறைகளில் ‘இரண்டாவது பானிபட் போர் ஏன் நடந்தது ?’ என்று கேட்டால் ‘முதலாவது பானிபட் போர் ஒழுங்காக நடக்காததால்’ என்று மாணவன் பதில் சொல்கிற அளவுக்கு ஆகிவிட்டது என்று கிண்டல் செய்கிறார்  வலம்புரி ஜான் – இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆறாம் மாநாட்டுச் சிறப்பிதழில் (1999).

‘விழுதுகளுக்கும் எடுப்போம் விழா’ என்ற தலைப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்கால இஸ்லாமிய இலக்கியத்தை ஆழப்படுத்துகிற மூன்று நட்சத்திர எழுத்தாளர்களைப் பற்றி வலம்புரி எழுதிய கட்டுரையிலிருந்து பேராசிரியர் அப்துல் சமது அவர்களைப் பற்றிய குறிப்பை மட்டும் இப்போது பதிகிறேன் – பதிவுக்கு சம்பந்தமென்பதால் . கவிஞர் தக்கலை ஹலீமா, கதையாசிரியர் மீரான் மைதீன் பற்றி பிறிதொரு சமயம், இன்ஷா அல்லாஹ்.  – ஆபிதீன்.

***

வலம்புரி ஜான் :

வரலாறு என்பதே தேதி, மாதங்களின் தொகுப்பு என்று ஆகி வகுப்பறைகளில் ‘இரண்டாவது பானிபட் போர் ஏன் நடந்தது ?’ என்று கேட்டால் ‘முதலாவது பானிபட் போர் ஒழுங்காக நடக்காததால்’ என்று மாணவன் பதில் சொல்கிற அளவுக்கு ஆகிவிட்டது. இரண்டாவதாக வரலாறு என்பது இதுதான் என்று வரையறுத்துவிடுகிற வழக்கம் வரலாற்றுக்குச் சிறை எழுப்பி , கை விலங்குகளும் போட்டு விட்டது. கேம்ப்ரிட்ஜ் வரலாற்றுக் கொள்கை என்பது இப்படி இருக்கலாம்; இப்படிக்கூட இருக்கலாம்; இப்படி இருந்தாலும் தப்பில்லை என்ற மூன்று நிலைகளை முன் வைக்கிறது. இந்த வளர்ச்சி கூட நமது நாட்டு வரலாற்றில் முழுமையாக ஏற்படவில்லை. வரலாறு என்பது மக்களின் வரலாறு என்பதும் முழுக்கச் சொல்லப்படவில்லை.

ரொமிலா தாப்பர், கொசாம்பி, அஸ்கர் அலி என்ஜினியர் போன்றவர்கள் வரலாற்றை வேறுமாதிரி பார்க்கிறார்கள். சில வரலாற்று ஆசிரியர்களின் கண்களில் பூ விழுந்திருக்கிறது. சிலருக்கு விழுந்த பூவே விழியாகி இருக்கிறது. அருண் ஷோரி போன்ற வரலாற்று ஆசிரியர்களும் இருக்கிறார்கள். முடிவுகளை நோக்கிப் போகிற சரித்திர ஆசிரியர்களும் உண்டு. முடிவுகளை வைத்துக்கொண்டு முன்னேறுகிற சரித்திர மாணவர்களும் உண்டு. நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி மீண்டும் மனத்திரையில் நிகழ்த்தப்படுவதால் அது சாதி, இனம், மொழி, நாடு, வேண்டியவர், வேண்டாதவர் என்கிற அழுத்தங்களுக்கு ஆளாகி விடுகிறது.

வரலாற்றுப் பெரும் ஆசிரியர்களே இதற்கு விதிவிலக்கு இல்லை. பி.டி. சீனிவாச அய்யங்கார் சாதாரண வரலாற்று ஆசிரியர் அல்ல. ஆனால் அவர் புத்தகத்தில் விஷ்ணு அல்லது சைவம் பற்றி அதிகாரம் வருகிறது. சிவம் அல்லது சைவம் பற்றி வரவில்லை. கிழே காணப்படுகிற குறிப்பில்  ஆரியர் என்பவர் மெய்யர் என்று காணப்படுகிறது. அப்படியென்றால் திராவிடர்? என்று நீங்களோ, நானோ கேட்கக் கூடாது. திருமதி சரோஜா சுந்தர்ராஜன் பக்கம் பக்கமாக ஒரு வரலாற்றுப் புத்தகம் எழுதியிருக்கிறார். இதில் தந்த பெரியாரைப் பற்றிய படப்பிடிப்பே தவறாக இருக்கிறது. சிலம்புச் செல்வர் தமிழகத்தில் நடைபெற்ற விடுதலைப் போராட்டம் பற்றி எழுதியிருக்கிறார். அதில் பெருந்தலைவர் காமராசரைப் பற்றி இன்னமும் அதிகமாக எழுதியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆக எழுதப்படுகிற எந்த வரலாற்றிலும் எழுதியவர் இருந்தே விடுகிறார். கவிதையில், கதையில் எழுதுகிறவர் இருந்தே ஆக வேண்டும். வரலாற்றில் எழுதியவர் இருக்கலாம், ஆனால் வெற்றிலையில் சுண்ணாம்பு போல; இலையில் உப்புப் போல இருந்தால் நல்லது.

பேராசிரியர் அப்துல் சமது எழுதிய ‘தியாகத்தின் நிறம் பச்சை’ இந்திய சுதந்திரப்போரில் இஸ்லாமியரின் பங்களிப்பை எந்த அளவிற்குச் சொல்ல வேண்டுமோ அந்த அளவிற்குச் சொல்கிறது. பொதுவாக வரலாற்று ஆசிரியர்கள் என்ன பிழை செய்கிறார்களோ அவைகள் இந்த புத்தகத்தில் காணப்படவில்லை. வீர சவர்க்கரை ஒரு இந்து மதவெறியரைப் போலக் கருதிக்கொண்டு இன்னமும் எழுதுகிறவர்கள் இருக்கிறார்கள். அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் ஹக் சாதாரண எழுத்தாளர் அல்லர். ஆனால் அவரும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

ஒரு தமிழ்ப் பேராசிரியராக இருக்கிற பேரா. அப்துல் சமது தன் வாதங்களுக்குத் துணையாக வீரசவர்க்கரின் ‘எரிமலை’ என்கிற மாபெரும் புத்தகத்தில் இருந்துதான் வரிக்கு வரி மேற்கோள் காட்டுகிறார். புத்தகம் சிறியதுதான். ஆனால் புத்தகம் இதுபோலத்தான் அமைந்திருக்க வேண்டும் என்பதற்கு  இது வெளிவந்த ஆண்டில் இது ஒன்றுதான் எனக்குத் தெரிந்த உதாரண இலக்கியம்.

நகைச்சுவை கலந்த நல்ல தமிழ்ப் பேச்சும் , தனது நண்பர்களை முன்னுக்குக் கொண்டுவந்து நிறுத்த வேண்டும் என்கிற எண்ணமும் நிரம்பப் படைத்த பேராசிரியர் அப்துல் சமதுவின் சிவப்பு மை சிந்துகிற சீர்திருத்த எழுதுகோலில் இருந்து இலக்கிய உலகம் இன்னமும் நிரம்ப எதிர்பார்க்கிறது

***
நன்றி : இஸ்லாமிய இலக்கியக் கழகம்