வண்ணநிலவனின் மறதியும் ஒரு கவிதையும் – ‘மறதி’யுடன் தாஜ்

இணையத்தில் தேட தாஜுக்கு இயலவில்லை போலும்! மறதி என்று இந்தக் கட்டுரையில் தாஜ் குறிப்பிடுவது மகா தவறு. நண்பர் பவுத்த அய்யனார் எடுத்த நேர்காணலில் வேண்டுமானால் வண்ண நிலவன் சொல்ல மறந்திருக்கலாம். ஜூன் 2002 ’ஜங்ஸன்’ இதழ் பேட்டியில் – ’கடல்புரத்தில் ’ நாவல் எழுதிய விதத்தைச் சொல்லும்போது –  குலசேகரன்பட்டினம் முஸ்லிம் பெரியவர் பற்றி சொல்கிறார். சுட்டி :  “நான் என்ன எழுதிக் கிழித்துவிட்டேன்?’’  – வண்ணநிலவன் . வண்ணநிலவனை லேசாக யாராவது குறைசொன்னால் கொன்னுடுவேன் கொன்னு. தாஜ், அவர் துக்கம் என் துக்கம்.. ரொம்ப ’ஆராய்ச்சி’ பண்ணாதீர்! –ஆபிதீன்

***

அபூர்வக் கலைஞனின் ஒரு சின்ன மறதியும்  ஒரு சின்ன கவிதையும்

தாஜ்

nerkaanal-cover1b3இந்த வருட, சென்னை புத்தகக் காட்சியில், வாங்க விரும்பிய புத்தகங்களின் பட்டியல் நீளம். வாங்கியது ஒரு சில புத்தகங்கள் மட்டும்தான். கூடுதலாக ‘நேர்காணல்’ சிற்றிதழின் பழைய இதழ்கள் இரண்டு. வீட்டிற்கு வந்த நாழியில், முதலில் அந்தச் சிற்றிதழ்களைத்தான் வாசித்தேன்.என் வியப்பு விரிவடைந்து கொண்டே இருந்தது. அந்தச் சிற்றிதழை கொண்டு வந்திருப்பவர் பவுத்த அய்யனார்!

 பவுத்த அய்யனாரைப் பற்றி, இலக்கியச் சூழலில் நிறைய கேள்விப்பட்டதுண்டு. என்றாலும் சந்தித்ததில்லை. அவ்விதழை வாங்கிய தருணத்தில்தான் அவரை, அவரது ஸ்டாலில் வைத்து சந்தித்தேன். சுந்தரராமசாமியின் நட்பு வட்டத்தில் பவுத்த அய்யனாருக்கு தனித்த, தவிர்க்க முடியாத இடமுண்டு. சு.ரா.வோடு அவர் பழகத் துவங்கிய காலம் தொட்டு, சு.ரா. இறப்பைத் தழுவும்வரை (1986 – 2005) தான்கொண்ட நட்பை சிதையாமல் காத்து போற்றியவர்!

 பவுத்த அய்யனாருக்கும் சுந்தரராமசாமிக்கும் இடையே கடிதத் தொடர்பு துளிர்த்து, இவர் அவருக்கும் அவர் இவருக்குமென அந்தக் கடிதப் போக்குவரத்து நடந்தேறியிருக்கிறது! அவர்கள், தங்கள் கடிதங்களில் இலக்கியம் சார்ந்தும், சாராமலும் பலதரப்பட்ட செய்திகளை இருவரும் பறிமாறி கொண்டிருக்கிறார்கள். சு.ரா., அமெரிக்காவில் இருந்தப்படிக்கு கடைசியாக எழுதிய கடிதமும் கூட பவுத்த அய்யனாருக்கு எழுதியக் கடிதம்தான்! சு.ரா.வின் கடிதங்கள் மட்டுமென சுமார் 200 கடிதங்களை தொகுத்து, ‘அன்புள்ள அய்யனார்’ என்று புத்தகமாக கொண்டு வந்திருக்கிறார் அய்யனார்! வாசிக்கவும் வாசித்தேன். பெரிய அதிர்ஷ்டம்தான்!

 அந்தப் புத்தகத்தை வாங்க அய்யனாரின் ஸ்டாலுக்கு சென்ற போதுதான் ‘நேர்காணல்’ சிற்றிதழைக் கண்டேன். ஆல்பெர் காம்யுவின் ‘அந்நியன்’ / அந்த்வான் து செந்த் எக்சுபெரியின் ‘குட்டி இளவரசன்’ / ழாக் ப்ரெவெரின் ‘சொற்கள்’ / பியர் பூர்தியுவின் ‘தொலைக்காட்சி: ஒரு கண்ணோட்டம்’ / ழான்-போல் சார்தரின் ‘மீள முடியுமா?’ / பியரெத் ஃப்லுசியோவின் ‘சின்னச் சின்ன வாக்கியங்கள்’ இப்படியான பிரெஞ்ச் இலக்கியப் படைப்புகளை தமிழுக்கு தந்த வெ. ஸ்ரீராமை   பேட்டிக்கண்ட ஓர் முழு இதழைக் கண்டமாத்திரத்தில் வியந்து வாங்கினேன். அதே மாதிரி இன்னொரு இதழாக, ‘அபூர்வக் கலைஞன்’ வண்ணநிலவன் என்று அட்டைப்படம் கண்ணில்பட அதனையும் வாங்கினேன்.

 குறிப்பிட்ட இரண்டு இதழ்களையும் இத்தனை நாட்களாகப் படித்து,  சமீபத்தில்தான் நிறைவு செய்தேன். அத்தனைக்கு, அந்தப் படைப்பாளிகளது செய்திகளின் அழுத்தங்கள் விசேஷம் கொண்டதாக இருந்தது.

 நிஜத்தில் வண்ணநிலவன், ‘அபூர்வக் கலைஞன்’தான். அவர் போற்றத்தக்க கலைஞன் என்பதில் இரண்டு கருத்துகள் இருக்க முடியாது. அவரது நாவல்களான கம்பாநதி / கடல்புரத்தில் / ரெயினீஸ் ஐயர் தெரு என்ற அத்தனையும் வளமான படைப்புகள். சுமார் முப்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னால், நாவல் வாசிக்கும் வாசகனை எந்த அளவுக்கு அவரது நாவல்கள் நெகிழ்வு கொள்ள வைத்தது என்பதை நான் அறிவேன். அது மாதிரியே அப்போது வாசித்த, அவரது  சிறுகதைகள் ‘எஸ்தர்‘ போன்றவைகளும் அதே அளவிலான தாக்கம் தந்தவைகள்தான்.

 இங்கே பிரசுரம் ஆகியிருக்கும் வண்ணநிலவனின் ‘மெய்ப்பொருள்:3’ என்கிற இந்தக் கவிதை, அவரை நேர்காணல் கண்டிருந்த இதழில் கண்டெடுத்தது. இதுவும் கூட சுமார் 33 வருட பழமைவாய்ந்த எளிய கவிதை!. வண்ணநிலவனின் படைப்புகளை, என்பதுகளின் பின்னாண்டுகளில், சௌதியில் வைத்து எனக்கு அறிமுகம் செய்துவைத்த என் நண்பர் ‘மர்ஹூம்’ கூத்தாநல்லூர் ஹாஜா அலி அவர்கள், இந்தக் கவிதையை மெச்சிப் பேசியதாகவும் நினைவு. தவிர, ஹாஜா அலி எழுதும் சில கவிதைகள் கூட இதே சாயல் கொண்டதாகவே இருக்கும்.

 hajaliimage3ஹாஜா அலி, வியந்து சொல்லித்தான் வண்ணநிலவனின் கடல்புரத்தில் / ரெயினீஸ் ஐயர் தெரு; ஜானகிராமனின் மரப்பசு, சு.ரா. / அம்பை / கி.ராஜநாராயணன் / மௌனி / எம்.வெங்கட்ராம் / அசோகமித்திரன் போன்ற மேதைகளை வாசித்தேன். ஏன்… சு.ரா.வின் ஜே.ஜே. சிலக் குறிப்புகளைக் கூட அவர்தான் எனக்கு தந்து வாசிக்கவும் ஆர்வம் உதவினார்!

 எழுதுவதென்பது அவருக்கு அத்தனை இஷ்டமில்லாதது. வாசிப்புதான் அவரது உலகம். அதுதான் அவரது சுவாசம்! கடைசி காலங்களில் தமிழ் இலக்கியம் அவருக்கு போதாதென்றாகி ஆங்கிலத்தில் தேர்வு செய்து வாசிக்கத் தொடங்கினார்.

 சொத்தை விற்று ஆர்வமாக புத்தககங்கள்  வாங்கிய ஒருவரை நான் கண்டேன் என்றால் அது இவர்தான். நாகூர் கடற்கரையில் அநாதைப் பிணமாக கிடந்த கிடப்புதான் இவரின் புரிபடாத முடிவாகிப் போனது. பொதுவில், சக மனிதர்கள்  அவரது பார்வையில் அர்த்தம் கொண்டவர்களாக தெரிந்ததில்லை என்பதை மட்டும் அறிவேன்.

 வண்ணநிலவனின் இந்தக் கவிதையை கூட, நண்பரின் நினைவாகவே இங்கே பிரசுரத்திற்கு தேர்வு செய்தேன்! எனக்கென்னவோ இக்கவிதை, என் ஹாஜா அலி எழுதிய எழுத்தாகவே தோன்றுகிறது. அட்சரம் பிசகாமல் அவரது கவிதை வரிகள் மாதிரியே இருக்கிறது. பவுத்த அய்யனாரும், வண்ணநிலவனும் என்னை மன்னிக்க வேண்டும். என் நண்பர் என்னை ரொம்பவும் பாதித்திருப்பதைதான் இப்படி சொல்கிறேன்.

 இந்த என் அலப்பறையை முடித்துக் கொள்ளும் முன், இன்னொரு சின்னச் செய்தி. 1

80-களில், ஒருவருடத்தின் ஜனவரி-15ல் , ‘துக்ளக் ஆண்டுவிழா’ எங்கள் பக்கத்து டவுனான சிதம்பரத்தில் நடந்தது. அந்த விழாவில் பேச விரும்புகின்றவர்களின் முகவரியும், கேட்க நினைக்கும் கேள்வி குறித்தும் பதினைந்து நாட்களுக்கு முன்னமே தகவல் செய்து பதிவு செய்ய வேண்டுமென முந்தைய துக்ளக் இதழில் அறிவித்திருந்தபடிக்கு, என் பெயர்/ முகவரி/ கேட்க இருந்த கேள்வி என்று அனைத்தையும் வழிமுறையாய் கடிதம் எழுதி அனுப்பியிருந்தேன்.

 அந்த 80- காலக்கட்டங்களில்தான் துக்ளக் ஆசிரியர் சோ, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை வலுக்கட்டாயமாக தமிழத்தில் தன் பத்திரிகையின் வாயிலாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். (இப்போதும் கூட அதுதான் நிலை!) ஆனால், அந்த இயக்கத்தின் சூழ்ச்சி நிறைந்த அரசியல் குறித்தான இன்னொரு பக்கத்தை அவர் எழுதுவதே இல்லை. (ஆனால்.. இன்றைக்கு அவ்வப்போது எழுதவும் எழுதுகிறார்!) அந்த முரண்பாட்டையொட்டிய கேள்வியாகவே அன்றைக்கு என் கேள்விகள் அமைந்திருந்தன.

 அந்த விழா நடந்த அன்று, என்னுடன் கல்லூரியில் படித்த, நண்பரான சுந்தரவடிவேலுடன் சென்றிருந்தேன். அவன் என் கேள்வியினை கேட்டறிந்த பின்,  “சோவை விடாதே” என்று ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தான். விழா தொடங்கியதில் இருந்து சோவின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அங்கே கூடியிருந்த பெரும்கூட்டம் ஆராவரித்துகொண்டு இருந்தது.

 நண்பனிடம் சொன்னேன். ‘சூழ்நிலையைப் பார்த்தால், எனது கேள்வியில் எத்தனை அர்த்தம் இருந்தாலும், இந்த மக்கள் சோ சொல்வதைதான் ஏற்பார்கள். இந்தக் கூட்டமே அவருக்காகத்தான் கூடியிருக்கிறது. மேடையில் கேள்வி எழுப்பும் அன்பர்களை, இடையிடையே நகைச்சுவை கிண்டல்களுடன் சோ  மடக்கும் தர்க்கத்தை காணுகிற போது, என்னை அவர், சட்டென ’சைபர்’ ஆக்கிவிடுவார். எதிர்த்தும் பேச அனுமதியும் கிடைக்காது. பிறகு நான் ஏன் மேடையேறனும்?’  என்றேன். விசயதாரியான அந்த நண்பன் என் கூற்றை ஏற்றுக் கொண்டான். இத்தனைக்கும் மேடை அருகில் நின்றபடிக்குதான் இந்த ‘வேண்டாம்’ ஆலோசனை நடந்து கொண்டிருந்தது.

அந்தக் காலக்கட்டத்தில் வண்ணநிலவன் துக்ளக்கில் பணிபுரிய தொடங்கியிருந்தார். அந்தக் கூட்டத்திற்கும் வந்திருந்தார். அங்கே அவர்தான் விழா ஒருங்கிணைப்பாளராக பணியோடு ஓடியாடிக் கொண்டும் இருந்தார். மேடையில் பேச பெயர் கொடுத்தவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்களை ஒவ்வொன்றாக வாசித்தார்கள். என் பெயரையும் அறிவித்தார்கள். வண்ணநிலவனிடம், ’நான் பேச விரும்பவில்லை; என்றேன். ஏன்? என்றார்! காரணத்தைக் கூறாது ‘இல்லை வேண்டாம் சார்’ என்றேன்.

 ‘நோ… நோ.. கட்டாயம் நீங்கள் பேசணும், எங்களுக்கு வந்திருந்த கேள்விகளில் உங்களது கேள்விதான் அர்த்தம் கொண்டது’ என்றார். அவர் சொன்ன பிறகு, மிகுந்த தைரியத்துடன் மேடையேறி, நான் பேசி முடிக்கும்வரை குறுக்கே நீங்கள் பேசக்கூடாது என்று ஆரம்பத்திலேயே சோவிடம் மிகுந்த தைரியத்துடன் கூறியவனாக, என் பேச்சைத் துவங்கி, எழுப்ப நினைத்த கேள்விகளை முழுவதுமாக கேட்டுத் தீர்த்தேன். எனக்கு சோ பதில் சொன்னார் என்பதைவிட, மழுப்பி சமாளித்தார் என்பதுதான் சரியாக இருக்கும்.

மேடையைவிட்டு கீழே இறங்கிய பிறகு, வண்ணநிலவன் என்னோடு மிகுந்த பிரியமாகப் பேசினார். அனேகமாக என் தைரியம் அவருக்கு பிடித்து போய் இருக்கலாம். அப்போதுதான் சொன்னார், ‘இளம் பருவத்தில் தானொரு இஸ்லாமியக் குடும்பத்தினரின் அரவணைப்பில், அவர்கள் காட்டிய பரிவில் படித்து வளர்ந்தவன் என்று சிலாகித்து சொன்னர். இப்போது நான் வாசித்த அவரது முழுமையான அந்த நேர்காணலில், குறிப்பிட்ட அந்தச் சிலாகிப்புச் செய்தி ஒரு வரி கூட இல்லை!

சிதம்பரத்தில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் மேடையில் வைத்து சோவிடம், ஆர்.எஸ்.எஸ்.-ன் இன்னொரு பக்க அரசியல் சூழ்ச்சிகள் குறித்து, அன்றைக்கு கேள்விகள் எழுப்பியதை எப்படி என்னால் மறக்க முடியாதோ, அது போலவே அன்றைய தினம் வண்ணநிலவன் என்னுடன் அன்பு கொண்டு உரையாடியதையும், இஸ்லாமியக் குடும்பத்தினர் குறித்து குறிப்பிட்ட சிலாகிப்பையும் என்னால் மறக்க முடியாது. வயது பொருட்டு மறதி அவரை ஆண்டிருக்கலாம்! நான் மறந்துவிடவில்லையா எத்தனை எத்தனையோ கவிதை மணித்துளிகளை!

**

vannanilavan2sol

மெய்ப்பொருள்:3 – வண்ணநிலவன்

எல்லாம் விலை குறித்தனவே

எல்லாம் விற்பனைக்கே

ஹே, அர்ஜுனா,

விற்பனைத் துணை கொள்

காய்ந்த விறகோ, ஹரி கதையோ

பழைய ஹிந்து பேப்பரோ, மகளோ,

கலையோ, கருமாரியம்மனோ…

வேஸ்ட் பேப்பருக்கும்

வேசிக்கும் சமவிலைதான்.

சூரியனுக்குக் கீழுள்ள

சகலமும் விற்பனைக்கே,

விற்பனை செய்வாய், விற்பனை செய்வாய்.

மியூஸிக் அகாடமியில் கலை விற்பனை.

கந்த விலாஸ் கடையில் ஐவுளி விற்பனை

அரபு தேசத்தில் இளைஞரும்

சீரணி அரங்கில் அரசியலும்,

‘பாக்கு மன்னன் பூச்சி?’

டிரேட் மார்க்கில் கவனம் வை.

மரமும் மகனும்

காய்த்துக் கனி தருவர்.

உட்லண்ட்ஸ் ஹோட்டலில் டிபனுற்பத்தி

பழனியில் பஞ்சாமிர்த உற்பத்தி

கலைப் படம் கான்ஸ்டாண்டி நோபிளுக்கு,

கமர்ஷியல் படம் காரைக்குடிக்கு.

ஐயப்பசாமிக்கும், ஐயனார் காபிக்கும்

பிராஞ்சுகள் திற.

மாடர்ன் ஆர்ட்டுக்கு மார்க்கெட் தேடு.

ஓய்ந்த நேரத்தில்

நட்பு செய்தாலும்

நாய் வளர்த்தாலும் – நல்ல

லாபமுண்டு.

***

நன்றி: வண்ணநிலவன்,  ’நேர்காணல்’ இதழ் (செப்டம்பர்-நவம்பர் 2010 ) , தாஜ் ,  சொல்வனம்அழியாச் சுடர்கள்

துக்கம் தொடர்கிறது…

ஆச்சரியமாக இருக்கிறது , இவ்வளவு சிறியதாக வண்ணநிலவன் எழுதிய கதை எவ்வளவு பெரிய கொந்தளிப்பை மனதில் ஏற்படுத்திவிடுகிறதென்று! அன்பு ஜெயக்குமார், ’துக்கம்’ கதையில் வரும் மெஹ்ருன்னிஸா கு.ப.ராவின் நூருன்னிசாவை சுலபமாக தோற்கடித்துவிடுகிறாள். ஒத்துக்கொள்கிறீர்களா? பெயர்களைப் பொறுத்தமட்டில் இந்த இரு நிஷாக்களையும் விட எனக்கு ஜவஹர்நிஷாவைத்தான் ரொம்பவும் பிடிக்கும். பள்ளிப் பருவத்து தோழி. வகுப்பில் அவள் நுழைந்தாலே அனைவருக்கும் அவல் சாப்பிட்டதுபோல் – முக்கியமாக ஆசிரியர்களுக்கு! அஸ்மாவிடமும் உண்மையை சொல்லியிருக்கிறேன். ‘நான் கோஷா ஸ்கூலில் படிக்கும்போது எனக்கும்..’ என்று ஆரம்பித்தாள். ‘அல்லாவே, சொல்லாதே புள்ளே..’ என்று பதறினேன். ‘ச்சீ.. ஜவஹர்நிஷான்னு ஒரு புள்ளை படிச்சிச்சி.. அத ரொம்ப புடிக்கும்டு சொல்லவந்தேன்..’ என்றாள். அப்பாடா!

கல்லூரிப் பருவத்தில் , என் மேதமையைக் காட்டுவதற்காக மலேசியாவில் இருந்த ஏம்பல்மாமாவுக்கு லா.ச.ரா , மௌனி, வண்ணநிலவன் மற்றும் முக்கியமான பலரின் புத்தகங்களை அனுப்பியபோது ( காசு அனுப்பி வைத்திருந்தார் அந்த தாமரைமணாளன் பிரியர். ‘அங்கே கூட்டம் ’கேகே’ என்று இருந்தது’ என்று ’புதுமையாக’ அவர் எழுதுகிறாராம்!) எல்லாவற்றையும் படித்துவிட்டு , ‘இவர்தான் மாப்ளே எழுத்தாளர்’ என்று மாமா சொன்னது வண்ணநிலவனை மட்டும்தான். அவர் படித்து அசந்தது ‘கடல்புரத்தில்’ நாவல். இன்னும்தான் என்னை அது அசரவைக்கிறது. ’உங்களை வெளி உலகுக்கு பிரபலப்படுத்திய  ‘கடல்புரத்தில்’ அச்சில் வந்தபோது உங்கள் மனநிலை என்னவாக இருந்தது?’ என்ற கேள்விக்கு , ‘என்னைப் பொறுத்தவரை எதுவுமே பாதிக்கல. எனக்கு எல்லாமே ரொம்ப சாதாரணமாகத்தான் படுது. ஏதோ நாம ரொம்ப சாதாரணமா செஞ்சா எல்லோரும் இப்படி பிரமாதமா இருக்குன்னு சொல்றாங்களேன்னுதான் எனக்கு ரொம்ப ஆச்சரியம் ஏற்பட்டது. மகிழ்ச்சியோ, கர்வமோ, அகந்தையோ எனக்கு ஏற்படல’ என்கிறார் வண்ணநிலவன். ’இது தன்னடக்கமா?’ என்றால் ‘ நல்ல எழுத்து எது என்று எனக்குத் தெரியும். என்னைவிட பிரமாதமாய் எழுதுபவர்கள் இருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். நான் எழுதிய எழுத்துக்கள் எனக்குத் திருப்தியா இல்லை. என்னை விடவும் பிரமாதமான எழுத்துக்களைப் பார்க்கும்போது நான் அதற்கு அருகே இல்லை. என் நல்ல எழுத்தை இனிமேல்தான் எழுத வேண்டும். அது முடியுமான்னு தெரியல!’ என்று சொல்லும் வண்ணநிலவன். ‘இவர்களது எழுத்துமுறை’யின் சுட்டியைக் கொடுத்திருக்கிறேன் கீழே. அதையும் அவசியம் வாசியுங்கள். வண்ணநிலவனின் மகத்துவம் புரியும். நன்றி. – ஆபிதீன்

***

துக்கம் – வன்ணநிலவன்

தினமணிசுடர், டிசம்பர் 24,1994

*

எல்லாம்  முடிந்து விட்டது. இனிமேல் மதுரைக்கும் உடன்குடி ஜமால்மைதீன் குடும்பத்துக்கும் ஒரு தொடர்பும் இருக்காது. பஸ்ஸில் சுபைதாளை அழைத்துக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்த மெஹ்ருன்னிஸாவுக்கு சுபைதாளைப் பற்றி நினைக்க நினைக்க வருத்தமாகத்தான் இருந்தது. எவ்வளவு தங்கமான பையன் சுலைமான். ஒரு கெட்ட பழக்கம் உண்டுமா? மவுத்துக்கு வந்தவர்கள் எல்லோரும் இந்தப் பையனுக்கு இப்படி ஆகியிருக்கவேண்டாமே என்று வருத்தப் பட்டார்கள். வருத்தப்படாதவர்கள் பாக்கியில்லை. மில்லில் டூட்டு முடிந்த பத்தாவது நிமிஷம் சுலைமானை வீட்டில்தான் பார்க்கலாம்.

பெட்டியைத் தூக்கிப் போகிற நேரத்துக்கு அந்தச் சின்ன முதலாளியே காரில் வந்துவிட்டார். வீடு ரொம்பச் சின்ன வீடு. ஒரே ஒரு பெஞ்ச் மட்டும்தான் வாசலில் போடப்பட்டிருந்தது. மில்லிலிருந்து வந்த ஜனம் பூராவும் சந்தில்தான் நின்றது. முதலாளி வந்துவிடுவார் என்று சொல்லித்தான் தாமதப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். தீபம் வைக்கிற நேரமாகிறது என்றுதான் அந்தச் சங்கத் தலைவரே – அவனும் இந்தச் சுலைமான¨ப் போல எவ்வளவு அருமையான புள்ளை – தூக்குகிறதுக்கு ஏற்பாடு செய்தான்.

சொல்லி வைத்தது மாதிரி நேரத்துக்கு முதலாளி வந்துவிட்டார். ‘சின்ன முதலாளி, சின்ன முதலாளி வந்தாச்சு..’ என்று ஒரே பேச்சாகக் கிடந்தது. அடக்கம் செய்கிற வரைக்கும் அவர் கூடவே இருந்தாராம். எவ்வளவு பெரிய கோடீஸ்வரன். அந்தப் புள்ளையாண்டான் காரை வீட்டுக்குப் பக்கத்தில் நிறுத்திவிட்டு ஜனத்தோடு ஜனமாய் அதுவும் அடக்க ஸ்தலத்துக்கு நடந்தே போயிருக்கிறதே. நல்ல மனுஷர்கள் எங்கேயும் இருக்கிறார்கள் என்று சொல்வதுதான் எவ்வளவு சரியானது.

இந்தப் புள்ளைக்குத்தான் எல்லாம் கொடுத்து வைக்காமல் போய்விட்டது. அவனும் வாப்பா, உம்மாவை அறியாத பையன். இதுவும் வாப்பாவைத் தின்ன பிள்ளை என்று பார்த்துத்தான், பட்டணத்து தாவுது சாச்சா சொல்லித்தான் எல்லாம் நடந்தது…என்னமோ ஆண்டவருக்கு இப்படித் தோணியிருக்குது, மூன்றாவது வருஷமே அறுத்துக்கிடனும் என்று.

மெஞ்ஞானபுரமே வந்துவிட்டது. ஒரு அஞ்சலில் உடன்குடி பஸ் ஸ்டாண்டில் போய் நின்றுவிடுவான். இந்தப் பிள்ளைகள் இரண்டும் என்ன செஞ்சிக்கிட்டிருக்குதுகளோ தெரியவில்லை. எல்லாம் ஹாஜியார் வீட்டில் பார்த்துக்கொள்வார்கள் என்றாலும், கிலேசப்படாமல் இருக்க முடியவில்லை. இந்த் மில்லுப் பணம் ஒரு வாரத்திற்குள் வந்துவிடுமாம். எட்டாயிரம் ரூபாய் வருமாம். அது வந்தால் நடுவுள்ளவளைத் தள்ளிவிட்டு விடலாம். ஆத்தாங்கரைப் பள்ளியில் ஆயிஷாவோட பையன் காப்ப்பிக் கடை வைத்து நடத்துகிறானாம். ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்கும். இங்கே பிறந்த வீட்டில்தான் கோரையை முடைந்து முடைந்து கை வாரியல் குச்சி மாதிரி ஆகிவிட்டது. அங்கேயாவது கொஞ்சம் உட்கார்ந்து சாப்பிடட்டும். ஆயிஷா பெற்றவளைப் பார்த்துக்கொள்ளுவாள். அதைத் தள்ளிவிட்டாயிற்று என்றால் அடுத்தது இந்த நொண்டிக் கழுத ஒண்ணுதான். இதுக்கும் ஒரு நொண்டியத் தேட வேண்டியதுதான். பாவி, பெத்ததுதான் பெத்தேன், ஒண்ணாவது ஆம்பளப் பிள்ளையாப் பெத்திருக்கக் கூடாதா?

பெரிய வீடுகளா இருந்தால், முதல் மாப்பிள்ளை போனால் அடுத்த மாப்பிள்ளையைப் பிடித்து விடுவார்கள். ஜமால் மைதீன் வாப்பா சாகும்போது ஒரு கட்டு கோரை புல்லைத்தானே விட்டுட்டுப் போயிருக்காரு.

சீக்கிரமே உடன்குடி வந்துவிட்டது. சுபைதாளை பஸ்ஸ்டாண்டிலேயே சாமான்களுக்குப் பக்கத்தில் காவலுக்கு வைத்துவிட்டு, பஞ்சாயத்து போர்டு ஆபீஸ் பக்கம் போய் முத்தையா கோனார் வண்டியை அழைத்துக்கொண்டு வந்தாள்.

வீட்டுக்குப் போனதுமே எல்லோரும் வந்து கூடிவிட்டார்கள். துஷ்டி கேட்க வேண்டாமா? ஜமால் மைதீன் என்னதான் தாழ்ந்து போய்விட்டாலும் ஊர் வளமை என்று ஒன்று இருக்கிறதே? அதை விட்டுக் கொடுத்து விடுகிறது என்பதுதான் அவ்வளவு லேசானதா என்ன?

சுபைதா அழுதுகொண்டே இருந்தாள். என்ன இருந்தாலும் சுலைமான் அவளுக்கு மற்ற மனிதர்களைப் போன்றவன் இல்லையே. மூன்று வருடங்கள் அவனோடு உடனிருந்து வாழ்ந்தவள் இல்லையா? வந்து விசாரித்தவர்கள் எல்லோரும் சுலைமானுடைய மவுத்துக்கு ஆற்றாமைப்பட்டு விட்டுத்தான் போனார்கள். சில பெண்கள், குறிப்பாக கொருக்கு முதலாளியின் சம்சாரம்கூட அழுவது என்பது லேசானதல்ல.

மெஹ்ருனிசாவுக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் ஆச்சரியாயிருந்தது. துஷ்டி கேட்க வந்தவர்கள் எல்லோருமே அவளைப் போலவே, மில்லில் இருந்து வருகிற பணத்தை வைத்து நடுவுள்ளவளைத் தள்ளிவிட்டுவிட வேண்டும் என்று சொன்னார்கள். அப்படிச் சொல்லும்போதெல்லாம் மெஹ்ருன்னிஸா அதைப் பற்றி அவ்வளவாக அக்கறை இல்லாதவளைப் போல கண்களை இடுக்கிக்கொண்டு மெதுவான குரலில், “ஆமாம்ளா நானும் அப்படித்தான் நெனச்சிருக்கேன். ஆனா நாகூராரு என்ன நெனைச்சிருக்காரோ தெரிய இல்ல..இந்தப் புள்ள சுபைதாள நெனைச்சாதான் தாங்க முடியல. இத்தன வயசுல போயி இது இப்படி வந்து உக்காந்துட்டுதேங்கிறதை நெனச்சால் ஈரக்கொலையே அந்து விளுதாப்பல் இருக்கு’ என்று கண் கலங்க அழ ஆரம்பித்து விடுவாள்.

“பின்ன? பைத்தியக்காரி.. நீ பெத்தவளாச்சே கஷ்டமா இராதா?'” என்பார்கள்.

ஆனால், இதையும் எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் சொன்னார்கள்.

***

நன்றி : வண்ணநிலவன், தினமணிசுடர் , தாஜ்

***

மேலும் வாசிக்க :

இவர்களது எழுத்துமுறை – வண்ணநிலவன் : தொகுப்பு : வே. சபாநாயகம் ஐயா அவர்கள்

***

படித்ததில் பிடித்ததுவிக்ரமாதித்யன்

வண்ணநிலவன் சிறுகதைகள் எல்லாமே யதார்த்த தளத்தில் இருப்பவைதான்; வெறும் மொண்ணையான யதார்த்தம் இல்லை அவை. கலையாகக் கூடிவந்திருப்பவை. இலக்கியமாகத் திரட்சி பெற்றிருப்பவை. வண்ணநிலவனின் ‘துக்கம்’ என்ற சிறுகதை ஒரு நல்ல யதார்த்த சிறுகதை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது. கலைஞனின் மனோதர்மம் இலக்கியமாகியிருக்கும் சாதனை என்று இந்தக் கதையைச் சொல்ல வேண்டும். துக்கம் சிறுகதையின் கட்டமைப்பு விசேஷமானது. ஒரு முடிவைச் சொல்கிறபடியே தொடங்குகிறது கதை. தொடர்ந்து மிக சன்னமாக அங்கொரு கோடு இங்கொரு கோடு இழுத்து வரைந்தது போல ஒரு சோகச் சித்திரம் உருப்பெறுகிறது.

மெஹ்ருன்னிசா சுபைதாளை நினைத்து நினைத்து வருத்தப்படுகிறவள். மகளுக்குக் கொடுத்து வைக்காமல் போய்விட்டது என்று ஆற்றாமைப்படுகிறவள். பிள்ளைகளை ஊரில் தனியே விட்டுவிட்டு வந்தது பற்றி கிலேசப்படுகிறவள். நடுவுள்ளவள் கோரை முடைந்து முடைந்து கை வாரில் குச்சி மாதிரி ஆகிவிட்டது என்று சிந்தை கலங்குகிறவள். அடுத்த ‘நொண்டிப்பிள்ளை’ வாழ்க்கை குறித்து அக்கறைப்படுகிறவள். நொடித்துப்போன குடும்பத்தின் பொறுப்பை ஒற்றையில் சுமக்கும்படியாய் விதிக்கப்பட்டவள். ஜமால் மைதீன் பற்றிய கடந்தகால நினைவுகள், பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கனவுகள், நிகழ்கால வாழ்க்கைப் பிரச்சினைகள் என வாழ்கிறவள். வேறு நிவர்த்தியில்லை அவளுக்கு. அவளால் என்ன செய்யக்கழியும். வீட்டுக் காரியங்களை விருப்பு வெறுப்பு பாராது நிகழ்த்த வேண்டிய கடமை. இப்படி யோசிக்க வைக்கிறது. சுபைதாள் ஒரு வார்த்தை பேசவில்லை கதையில். மெஹ்ருன்னிஸா ஒரே ஒரு இடத்தில் பேசுகிறாள். துட்டி கேட்க வந்தவர்கள் ஒரு இடத்தில் பேசுகிறார்கள். கதையில் வேறு பேச்சே இல்லை. இது இந்தக் கதையின் முக்கியமான அம்சம். சோகம், பேச்சைக் கொன்று போடுகிறது? பேச ஒன்றும் இல்லை. கணவன் அகாலமாக இறந்து விட்டான். ஏதோ கொஞ்சம் பணம் வரும். வந்ததை வங்கியில் போட்டுவிட்டு – பத்திரமாக வைத்துக்கொண்டு – நிம்மதியாக வாழ வகையில்லை. அப்படியிருக்கிறது அமைப்பு.

தலைப்பே irony-யோடு இருக்கிறது. இந்தச் சமூக அமைப்பு துக்கம் தருவது. இதில் கபடமாக வாழ வேண்டியிருப்பது துக்கமானது. கணக்குப் போட்டு வாழ்வதே கபடமானது. ஒப்புக்கு பேசுவதும் ஒப்புக்கு பேசுவதை கேட்க நேர்வதும் துக்கமானவை. நாம் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? நம்மை இப்படி வாழும்படி ஆக்கியிருப்பது எது? ஒரு நல்ல சிறுகதை யோசிக்கவைக்கும்படியான வாழ்வைச் சொல்ல வேண்டும். ‘துக்கம்’ அதைத்தான் செய்கிறது.

வண்ணநிலவனின் துக்கம்

போதும் ஆன்மீகம்.  இலக்கியத்திற்கு போகலாம். நான் பெரிதும் வியக்கும் எழுத்தாளரான வண்ணநிலவனின் ’துக்கம்’ அனுப்புகிறேன் என்று நண்பர் தாஜ்  சொன்னதும் சிறுகதையின் தலைப்பு என்பது சட்டென்று நினைவில் வரவில்லை. பிரபல எழுத்தாளர் பாலகுமாரன், வண்ணநிலவனின் கதையைச் ’சுட்டு’ தன் பெயரில் பிரசுரித்ததாக அந்தநாட்களில் சிற்றிதழ் வட்டாரத்தில் வலம் வந்த ’பிஸாது’ (அவதூறு) தான் ஞாபகம் வந்தது.  அதற்கு எதற்கு துக்கம் , இங்கே சாதாரணமாக நடப்பதுதானே ?!  இலக்கியத்தை விடுங்கள், தமிழ் சினிமாவில் போஸ்டரைக் கூட விட மாட்டார்கள் என்று நண்பர் சுரேஷ்கண்ணன் முன்பு ஒரு பதிவு எழுதியிருந்தார். விஷயம் நீளமாகப் போகும், படைப்புத் திருட்டுக்கு வருகிறேன். ’மணிச்சித்திரதாழ்’-ன் கால்தூசிக்கு வருமா சந்திரமுகி? ஆனால், அதே இயக்குனர் ஃபாஜிலின் ‘life is beautiful’-ல் (மலையாளம்)  வரும் அருமையான சீன் ஒன்றை நான் ரொம்பவும் சிலாகித்தபோது ‘ இது ‘Dead Poets Society’யிலிருந்து அமுக்கியது என்று சரியாகச் சொன்னார் சகோதரி மதி கந்தசாமி. யாரைத்தான் நம்புவது, சங்கு ’சுட்டாலும்’ வெண்மை தரும்  என்று சமாளித்தேன். போகட்டும், நானும் வெகுநாள் இந்த பாலகுமாரன் சம்பந்தமான பிஸாதை உண்மையென்றுதான் நம்பிக்கொண்டிருந்தேன். பா.கு மேல் கோபமும் கொண்டேன். பா.கு என்று எழுதியதும் ’பா.ம’ கதை பட்டென்று ஞாபகம் வருகிறது. சொல்லவா? பீம்சிங்கின் படமான பாவ மன்னிப்பு. ‘ ‘பாவமன்னிப்பு’ திரைப்படத்தின் கதை, பல நாட்களுக்கு முன் ஆனந்தவிகடனின் வெளியான ஆர்.பி.மல்லாரியின் ‘கடைசி வெள்ளிக்கிழமை’ என்ற கதையேயாகும். எழுத்தாளர்களின் படைப்புகள் களவாடப்படுவது வருந்தத்தக்கது!’ என்று  எஸ். கே. சுல்தான் என்ற வாசகர் எழுதியிருந்தார் – ஆனந்தவிகடனில். ஆ.வியின் பதில் : களவாடவில்லை; ஒருவேளை தழுவியிருக்கலாம்! மன்னியுங்கள்! . அடுத்தவாரமே நேயர் கடிதம் பகுதியில் ’புத்தர் பிக்சர்ஸ்’ பீம்சிங்கின் கோபம். ’திரு. மல்லாரி அவர்களின் கதை இன்னது என்றே இன்னமும் நான் அறியேன். இந்த நிலையில் இப்படிப்பட்ட தகவல்களையும் குறிப்புகளையும் பிரசுரிக்கலாமா? மிகவும் வருந்துகிறேன்.’ ஆ.வி சூப்பராக பதில் சொல்லியிருந்தது இப்படி : ‘ஒருவேளை தழுவியிருக்கலாம்’ என்றுதான் குறிப்பிட்டிருந்தோம். கதையைப் படித்திருந்தால், எல்லோருக்கும் அப்படித் தோன்றக்கூடும் என நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்!’ ( ஆனந்த விகடன் , மே – ஜூன் (1963) இதழ்களிலிருந்து , Published again in 26/11/2008 ) .

எல்லோரும் கொண்டாடுவோம்… அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி ,  நல்லோர்கள் வாழ்வை எண்ணி…!

ஏன், இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு அவரது குரு எஸ்.எம்.சுப்பையாநாயுடு கொடுத்த ’பரிசு’ மட்டும் என்னவாம்? வீர அபிமன்யு படத்திற்கு இசையமைத்துக்கொண்டிருக்கிறார் குரு. ‘புது வசந்தமாக வாழ்விலே இனி புதிதாய் மணமே பெறுவோமே’ என்ற பாடல். மூன்று நாட்களாக முயற்சி செய்தும் டியூன் அமையவில்லை. தனியாக அதை எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்து பாடிக் கொண்டிருக்கும்போது அங்கே வந்த குரு,  ‘ரொம்ப நல்லா மெட்டு போட்டிருக்கே, பிரமாதம்’ என்று தட்டிக்கொடுத்து விட்டு சொன்னாராம் :  ‘இந்த டியூனை நீ போட்டதாகச் சொல்லாதே. நான் போட்டதாகவே சொல்லு!’ – குருவும் சிஷ்யனும் என்று தனியாக – விரிவாக – பதிய வேண்டிய செய்தி. பதியவேண்டும். அதே குரு பிறகு உண்மையை அனைவரிடமும் சொல்லி ‘இவன் (எம்.எஸ்.வி’) பெரிய சொத்து’ என்று சொன்னதும் நெகிழ்வோடு பார்க்கவேண்டிய செய்திதான். ’உள்ளதை’ச் சொன்னவர் சித்ரா லட்சுமணன். நன்றி. இதே செய்தியை நேற்று பாடகர் தீபன் சக்ரவர்த்தியும் உறுதிப்படுத்தினார் – ஜெயா டிவியின் ’திரும்பிப் பார்க்கிறேன்’ நிகழ்ச்சியில். நான் நேராகத்தான் பார்த்தேன்.

இசை விமர்சகர்கள் திரும்பாமல் படிக்க இன்னொரு செய்தி : ஏ. ஆர். ரஹ்மானின் புகழ்பெற்ற ’சின்னச் சின்ன ஆசை’ பாட்டின் மெட்டு,  தனது  ‘வீடு வரை உறவு’ மெட்டின்  உல்டாதான் என்று மென்மையாக கிண்டல் செய்தார் எம்.எஸ்.வி –  ‘ஆசியாநெட்’டின் ஒரு  நிகழ்ச்சியில். ’வீடு வரை’ மெட்டில் ’சின்னச் சின்ன’தை கொஞ்சம் பாடியும் காட்டினார். அட, மாறுதல் ஒன்றே மாறாதது! இரண்டையும் விரைவில் இணைக்கிறேன், இன்ஷா அல்லாஹ்.

மின்தமிழ் குழுமத்தில் வந்திருந்த செய்தியும் முக்கியமானது.  மாயூரம் வேதநாயகம் பிள்ளையிடம் ஒரு கவிதைக் களவாடி வந்து, கம்பன் பாட்டொன்றைத் தம் பாட்டென்று சொன்னாராம். ‘இது கம்பருடைய பாட்டாயிற்றே’ என்றதற்கு அந்தக் களவாடி, ‘இது என் பாட்டுத்தான்! இப்பொழுது உங்கள் சட்டைப்பையில் நூறு ரூபாய் இருக்கிறது. அதை நான் எடுத்துக்கொண்டால் உங்கள் பையில் அந்த நூறு இருக்காதல்லவா! அதைப்போல கம்பராமாயணத்திலிருந்து இந்தப் பாட்டை நான் எடுத்திருந்தால், அங்கு அப்பாடல் இருக்க முடியாதே! இதோ பாருங்கள் கம்பனில் அப்பாட்டு அப்படியே இருக்கிறது’ என்றாராம் சாமர்த்தியமாக. ஆஹா!

சமீபத்தில், ’அபிமன்யு’ சினிமாவுக்கு வசனம் எழுதிய கருணாநிதி டைட்டில் கார்டில் அவர் பெயரில்லாமல் திகைத்துப்போனார் என்று சொல்லியிருக்கிறார் நண்பர் முத்துக்குமார். ( ’க’ 7 ) . தெரியுமா கனிமொழி? கவி கா.மு. செரீப் எழுதிய ‘பாட்டும் நானே பாவமும் நானே’ கண்ணதாசன் எழுதியதாக வெளிவந்தது என்று கய்யூமும் வருத்தப்பட்டிருந்தார் இங்கே.  சித்தி ஜூனைதாஆச்சியின் ’காதலா கடமையா’ நாவல், ’நாடோடி மன்னன்’ சினிமாவாக உருமாறிய விசயமும் இங்கேயே இருக்கிறது. ஓ ,’எழுத்துலக திருட்டு’ என்று கூகிளிட்டால் எவ்வளவு வருகிறது. அல்லுடு மஜாக்கா!

சொல்லிக்கொண்டே போகலாம். ’Everybody’s Fine’  படத்தில் அட்டகாசமான வசனம் ஒன்று இருக்கிறது. வயதான, மனைவியை இழந்த கதாநாயகன்(robert de niro) தன் பிள்ளைகளைப் பார்க்கப் போவார். பிள்ளைகள் தாங்கள் வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதுபோல் நடிக்கும். வேடிக்கையான படம். ஒரு பிள்ளையின் வீட்டு வாசலின் முன் காத்துக் கொண்டிருக்கும்போது  வேசி ஒருத்தி,  ‘ என் தொடையைப் பார்க்கிறாயா?’ என்று அழைப்பதற்கு . ‘என் தொடையை நீ பாரேன்’ என்று ஹீரோ பதிலுக்கு ’காட்டும்’ படம். சிரிப்பே வராதே உங்களுக்கு…. மெயின் வசனத்திற்கு வருகிறேன். கசந்துபோய் ஓரிடத்தில் உட்கார்ந்திருப்பார் ஹீரோ. அப்போது அவரிடம் ஒரு கிழவர் சொல்லும் அற்புதமான வசனம் : ’ எனக்கு மூன்று பிள்ளைகள், ஆறு பேரப்பிள்ளைகள். எல்லோரும் பிஸியாக இருக்கிறார்கள். என்னிடம் பேசக்கூட அவர்களுக்கு நேரமில்லை. அவர்களிடம் பேச நான் அப்பாயிண்ட்மெண்ட் எடுக்க வேண்டியிருக்கிறது. யாரும் அவர்களுக்கு தேவையில்லை. எல்லாரும் மாறிவிட்டார்கள். ஹூம்… காலம் அப்படி மோசமாகி விட்டது. இப்போதெல்லாம் யாரிடமாவது கை குலுக்கினால் ‘செக்’ பண்ணிக்கொள்ள வேண்டும் – நம் ஐந்து விரல்களும் திரும்ப இருக்கிறதா இல்லையா என்று!’

Everybody’s Fine?

கூடப்பிறந்த சிலரே குழி பறிக்கிற காலத்தில் இதெல்லாம் ’ஜுஜுபி’ மேட்டர்தான். கைகுலுக்கிவிட்டு விரல்களையல்ல, நம் கையை பார்க்க வேண்டும் – இருக்கிறதா இல்லையா என்று. நம் துக்கத்திற்கு வருகிறேன். பாலகுமாரன் மேல் ரொம்பவும் கடுப்பாக இருந்தேன். (ஏற்கனவே நம் ஜானகிராமனை அவர் நகல் செய்வதில் ஏகப்பட்ட எரிச்சல் வேறு.) சில மாதங்களுக்கு முன்புதான் ’பிஸாது’ உண்மையல்ல என்று  உணர்ந்தேன் – நண்பர் அருண்மொழிவர்மனின் இந்தப் பதிவு மூலம்.  வண்ணநிலவனின் கதையொன்றை அவரிடம் பணம்கொடுத்து வாங்கி தன் பெயரில் வெளியிட்டதாக பாலகுமாரன் தன் சுயசரிதையில் எழுதியிருக்கிறாம்.அட, ஏற்பாடு பிரமாதமாக இருக்கிறதே! ஆமாம், இதைப்பற்றி வண்ணநிலவன் ஏன் ஒருவார்த்தை கூட எழுதவில்லை? துக்கம்தான்! ஆனால், இவர்தான் ’துக்ளக்’-ல் துர்வாசராக வெடிக்கிறார்! ஒரே கொளப்பமா இக்கிதும்மா…

பாலகுமாரனின் அந்தநாள் கவிதையொன்றை (சுதேசமித்திரன் – தீபாவளி மலர் 1972) பார்ப்போம். எனக்கு இந்தக் கவிதை பிடிக்கும்.

*

முற்றல் நெஞ்சு

கவிந்த இருட்டில் மறைந்து கிடந்த
உயரத் தென்னை நெற்றொன்று
வீசிய காற்றில் பிடிப்பைத் தளர்த்தி
மண்ணில் உருண்டது சொத்தென்று
இருளில் கையை விரித்துத் தடவி
நெற்றைத் தேடிய ஐயங்கார்
திரும்பிக் காயுடன் என்னைக் கடக்க
குனிந்து கேட்டார் – தூங்கலையா?
பதிலாய் மெல்லிய சிரிப்பைக் கொடுப்பினும்
மனசோ சொல்லும் வெகு உரக்க
நெற்றுத் தென்னை கழன்றதற்கே
தூக்கம் போச்சே உங்களுக்கு
நெஞ்சே கழன்று வீழ்ந்துகிடக்க
தூக்கம் எங்கே, சொல்லுங்கோ!

*

சொல்லுங்கோ பாலகுமாரன் சொல்லுங்கோ!

வண்ணநிலவனின் துக்கம் என்று சொல்லிவிட்டு பாலகுமாரனைப் பற்றி சொல்லிக்கொண்டிருப்பது சரியில்லை. ’துக்கம்’ அடுத்த பதிவில் வெளிவரும், இன்ஷா அல்லாஹ். அதுவரை , வண்ணநிலவனின் ’எஸ்தர்’ குறுநாவலைப் படித்துக்கொண்டிருங்கள். தமிழின் சாதனைகளுள் ஒன்று இது.  ’புதுமைப்பித்தனின் தாய்வீட்டுச் சீதனம் வண்ணநிலவன்’ என்பாராம் நாஞ்சில்நாடன் (பவுத்த அய்யனார் நடத்தும் நேர்காணல் இதழில் இதைப் படித்தது பரவசம் கொண்டதாக நண்பர் வெற்றிவேல் எங்கள் குழுமத்தில் குறிப்பிட்டிருந்தார்).  யாராலும் மறுக்க இயலுமா? எனக்குப் பிடித்த ‘எஸ்தர்’ஐ சென்ற வெகேஷனில் தட்டச்சு செய்து வைத்தேன் – இணையத்தில் இல்லையே என்று. pdfஆகவும் இங்கே ’டிராஃப்ட்’-ல் இருந்தது. வந்துபார்த்தால், அழியாச் சுடர்களில் அட்டகாசமாக வெளியாகிவிட்டது – ’எஸ்தர்’ ! சந்தோசம். என்ன, இந்த ராமும் சென்ஷியும் செய்கிற  துரோகத்தைத்தான் தாங்க முடியலே!

எச்சரிக்கை : எனக்கு முன் யாராவது ’துக்கம்’ வெளியிட்டால் கொன்றே விடுவேன். வண்ணநிலவனின் துக்கம் என் துக்கம். ஐயோ, நான் எழுதவில்லை; அவருடைய சோகம் என்னுடையதும்கூட என்கிறேன்.

சோகத்தை மாற்ற கொஞ்சம் முயற்சிக்கிறேன். ஒரு பழைய தமாஷ். சிரித்தால் நல்லது – நானும்.

நம்ம நாகூர் ரூமியின் சொந்தக்காரர் ஒருவர் சினிமாவில் சேர்ந்து புகழடைய சென்னைக்குப் போனார். தூயவன்மாமாவைச் சொல்லவில்லை, இது வேறு ஆள். ரூமியின் குடும்பத்தினர் அனைவருமே எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் மிக்கவர்கள் – ரூமியைத் தவிர. தெரியும்தானே?  சும்மா கிண்டல் செய்தேன். ’குட்டியாப்பா’வைக் கொடுத்தவரைக் குட்ட மாட்டேன். இந்த ரூமியின் மாமா முராதுபே பேசினால் நாள் முழுதும் சிரித்துக் கொண்டிருக்கலாம்.  இதுகூட முராதுபே மாமா சொன்னதுதான். சொந்தக்கதையாகவும் இருக்கலாம். சரி, போனாரா? போனவர், ஒரே மாதத்தில் திரும்பிவந்து ஓரிருநாளில் வெளியாகப்போகிற படத்தில் தான் நடித்திருப்பதாகவும் (சினிமாவின் பெயர் மறந்து விட்டது எனக்கு) டைட்டில்கார்டிலும் பெயர் வருமென்றும் ஊர்முழுதும் பறையடித்தார். திருநாளும் வந்தது.  நண்பர்களையெல்லாம் கூட்டிக்கொண்டு நாகப்பட்டினம் போயிருக்கிறார். பாண்டியன் தியேட்டரில் எல்லா செலவும் அவருடையதுதான். ஆரம்பித்துவிட்டது படம்.  நடித்தவர்களின் பெயர்களும் வந்துகொண்டிருக்கின்றன ஒவ்வொன்றாக. ’இந்தல வரும்டா.. இந்தல வரும்டா…’  என்று இவரும் சொல்லிக்கொண்டிருக்கிறார். ’எப்படா வரும்’ என்று கடுப்போடும் நம்பிக்கையில்லாமலும் நண்பர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போது ஒரு இடத்தில் உற்சாகமாக கத்தினாராம் அவர்,  ‘ ஆஹா..வந்துடிச்சி’ என்று. உற்றுநோக்கினால்…… ‘மற்றும் பலர்’ என்று இருந்திருக்கிறது!

**

சில சுட்டிகள் :

வண்ணநிலவன் – அவர் அப்படித்தான் : எஸ். ராமகிருஷ்ணன்

எழுத்துக் கலை – ஏமாற்றும் எளிமை  : விமலாதித்த மாமல்லன்

எளியவர்களின் மனசாட்சி – வண்ணநிலவன் கதைகள் : சு.வேணுகோபால்

என் சக பயணிகள்   – ச.தமிழ்ச்செல்வன்