சொல்பவர் நம்ம ஹனீபாக்கா. அவரை பகிரங்க விவாதத்திற்கு அழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் 🙂
***
தம்பி ஆபிதீன்,
நேற்று சும்மா இருந்தாப்ல கணையாழிக் கட்டொன்றை எடுத்துப் புரட்டினேன். 1966 தொடக்கம் 70 வரையுமான தொகுப்புகள். உள்ளே சுஜாதா அவர்களின் கடைசிப் பக்கக் குறிப்புகளில் சிலது என் கண்களில் பட்டு சிரிக்கவும் சிந்திக்கவும் செய்தன. தமிழ் எழுத்துலகில் நுட்பமாக அவதானித்து படிமமாக வெளிக்கொண்டு வருவதில் அவருக்கு நிகராக யாரைச் சொல்ல முடியுமோ நானறியேன். லா.ச.ராவைச் சந்தித்த நேரம் அவரின் மேசையில் சுஜாதாவின் நைலோன் கயிறு நாவல் கிடந்தது. நான் கண்ணைக் காட்டி வியந்த போது, சுஜாதாவின் நடை எனக்குப் பிடிக்குமென்றார். இதோ அவர் எழுதிய நான்கு பத்திகள். – எஸ்.எல்.எம்,ஹனீபா
ஆகாசவாணி
ஆகாசவாணி பற்றி சென்ற இதழில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. மதராஸ் நிலையத்தில் சங்கீதக் கச்சேரி எனக்கு மிகவும் பயம். நல்ல ச, கச்சேரியாக இருக்கும். மெய்ம்மறந்து கேட்டுக் கொண்டிருப்பேன். பட்டென்று மென்னியை நெரித்து “இதுவரை பாடினார்கள். இனி மாட்டுத் தீவனத்தைப் பற்றி அகில பாரத உரை நிகழ்ச்சியில் விவசாய அதிகாரி ஒருத்தர் பேசுவார்” என்பார்கள். பேச்சு என்றால் என்ன? சரசரசர என்று பேப்பர் புரட்டும் சப்தம்… இரைக்க இரைக்க பதினைந்து நிமிஷ விஷயத்தைப் பத்தே முக்கால் நிமிஷத்தில் படித்து முடிப்பார். அதற்கப்புறம் நிலைய வித்வான் நொந்து போய் ஸாக்ஸபோன் வாசிப்பார்.
ஆகாசவாணியின் வெளிநாட்டுக்கான காலைத் தமிழ் நிகழ்ச்சியிலிருந்து ஒரு பகுதி:-
“ஆகாசவாணி” ‘சலம்’ – நாடகம்… இதை எழுதியவர் ஆர்.ஜி. கோவிந்தன்… இதில் நடிப்பவர்கள் ஆர்.ஜி. கோவிந்தன், ஆர்.ஜி. ஜனஜகுமாரி, ஆர்.ஜி. உஷா, தயாரிப்பு ஆர்.ஜி.ஜி. விந்தன்… “இதுவரை சலம் நாடகம் கேட்டீர்கள். நடித்தவர்கள் ஆர்.ஜி…” அறிவிப்பாளர் யார் என்கிறீர்கள்? ஆர்.ஜி. கோவிந்தனே!
ஈப்போவிலிருந்து இந்த நிகழ்ச்சிகளைத் தினம் தவறாமல் 3 வருஷம் கேட்டு வந்த நைனார் முகம்மது என்கிற கடல் கடந்த தமிழர் ஒருவர் தற்போது பேப்பர் துணி கிழிக்கிறார் என்று கேள்வி.
பெப்ரவரி 1966
**
ஒரு டெலிபோன் சம்பாஷணை
“ஹலோ”
“ஹலோ”
“யார் பேசுறது?”
“நான்தான்”
“நான்தான்னா யார்?”
“நான்தான் ரேவதி”
“ரேவதி! அப்பா இல்லையா?”
“இல்லை”
“அம்மா?”
“இல்லை”
“சரி, அப்பா வந்தா ராமன் போன் பண்ணினதாகச் சொல்லுகிறாயா?!”
“யாரு?”
“ராமன், எழுதிக்கோ ரா-ம-ன்”
“ரா எப்படி எழுதுவது?”
“சரிதான்! பாப்பா, வீட்டில வேறே ஒருத்தரும் இல்லையா?”
“சேகர் இருக்கான்”
“சரி சேகரைக் கூப்பிடு”
“சேகர் இந்தா” என்று ரேவதி சேகரிடம் (வயது 1) டெலிபோனைக் கொடுக்கிறாள்.
**
அச்சுப்பிழைகள்
அச்சுப்பிழைகளில் நகைச்சுவை இருக்கிறது. சம்போ கந்தா என்பதை சம்போகந் தா என்று அச்சடித்தவர் தன்னையறியாமல் நகைச்சுவை நாஸ்திகராகிறார். சென்ற இதழில் சில சுவாரசியமான பிழைகள் இருந்தன. சுவையுள்ள புத்தகம், சுமையுள்ள புத்தகமானது. “அத்தா, உனை நான் கண்டு கொண்டேன்” என்ற ஆழ்வார் வரி, “அத்தான் உனை நான் கண்டு கொண்டேன்” என்று சினிமாப் பாட்டாக மாறியது.
நான் இவைகளை எடுத்துரைப்பதில் என் நோக்கம் இதிலுள்ள ஹாஸ்யத்தைச் சொல்வதற்கே. அச்சகத்தார் என்னை மன்னிக்கவும். அவர்கள் தொழிலிலுள்ள கடினத்தை நான் அறிவேன்.
**
என்ன செய்கிறாய்?
லேய்ட்ம்டன் என்கிற கனடா தேசத்துக் கவிஞரை அறிமுகப்படுத்துகிறேன்:-
“பதினான்கு வருஷ
மண வாழ்க்கையில் நான் ஒரு தடவை
கூட
என் மனைவிக்குத் துரோகம் நினைத்ததில்லை.
நீ, நான் கேள்விப்பட்டேன், இன்னும்
கன்னி என்று.
உனக்குச் சம்மதமானால்
உன் கன்னிமையையும்
அபூர்வமான என் கற்பையும் பண்ட
மாற்றிக் கொள்ளலாம்,
நாளைக்கு மூன்றிலிருந்து ஐந்துக்குள்
என்ன செய்கிறாய்
ஏப்ரல் 1970
***
நன்றி : ஹனீபாக்கா (E-Mail : slmhanifa22@gmail.com)