சக்கரத்தின் பல் (சிந்திச் சிறுகதை) – லால் புஷ்ப்

சிவசங்கரி தொகுத்த ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ – மூன்றாம் தொகுதியில் படித்த இந்த சிந்திக் கதை என்னைக் கவர்ந்தது. சிறுகதையே பிடிக்காத லால் புஷ்ப் அவர்கள் இந்தச் சிறுகதையில் (ஒருவேளை, அவருடைய நாவல் ஒன்றின் அத்தியாயமாகவும் இருக்கலாம் இது) அருமையான ஒரு மனைவியைக் காட்டுகிறார் பாருங்கள் ; நமக்கெல்லாம் அப்படிக் கிட்டாது, நஸீபு! – AB

**

சக்கரத்தின் பல் (சிந்திச் சிறுகதை) – லால் புஷ்ப்

பாரி இன்றும் வரவில்லை. அவளைத் தேடிப்போன தன் கணவன் இன்னும் வீடு திரும்பாததால், சரஸ்வதி நம்பிக்கை இழக்கவில்லை. ஒருவேளை அவன் வெறுங்கையுடன் திரும்பிவிட்டால்…? நேற்றைப்போல இன்றும் அவள் அலுவலகத்திற்குச் செல்ல முடியவில்லை . வேலை அதிகமாயிருக்கிற இந்த நாட்களில், ஓவர்டைம் சம்பளம் வேறு கிடைக்கும். ரத்னா, மிஸ் தேசாய், மிஸஸ் தேஷ்பாண்டே எல்லோருக்கும் நிறைய ஓவர்டைம் காசு கிடைத்திருக்கும். மனசுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்ததும், சரஸ்வதியைப் பேராசை சூழ்ந்துகொண்டது. எட்டு நாட்களுக்கு முன்பு, இந்த உபரி வேலையில் கிடைக்கக்கூடிய பணத்தையும் சேர்த்துத்தான் குடும்ப பட்ஜெட்டைப் போட்டிருந்தாள். குழந்தைக்கு நல்லதாய் ஒரு கவுன் வாங்கவேண்டும். இரட்டைச் சம்பளம் இருந்தும், குழந்தைகளுக்கு உடைகள் வாங்குவது பல மாசங்களாகத் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. முன்பு, வாங்குவது கஷ்டமாக இருந்தது; இப்போது முடியாமலே போய்விட்டது. குடும்பத்தினர்களின் தேவைகள் பலமடங்கு பெருகிவிட்டன. ஒவ்வொன்றுக்கும் ஏகமாய் செலவாகிறது.

ஏக்கமும் பொறாமையுமாகக் கணக்குப் போட்டபோது சரஸ்வதிக்கு ஒரு விஷயம் மறந்துபோயிற்று… அலுவலக நேரம் முடிந்தபிறகும் சுவற்றிலுள்ள கடிகாரத்தையே பார்த்தபடி உபரிவேலை செய்யும்போது, தன் வரவுக்காக வீட்டு வாசலிலேயே காத்திருக்கும் மூன்று குழந்தைகளையும் அணைத்துக்கொள்ளவும், கைக்குழந்தையின் கன்னத்தில் முத்தமிடவும் மனம் எப்படிக் கற்பனையில் பறக்கிறது என்பது அவள் நினைவுக்கு வரவேயில்லை. இன்றும் ஓவர்டைம் வேலை செய்துகொண்டிருந்தால் இந்த நினைவுகளில் அமிழ்ந்திருப்பாள். ஆனால் இப்போது அவள் குழந்தைகள் அருகிலேயே விளையாடிக்கொண்டிருப்பதால், புத்தியில் அந்த எண்ணமே எழவில்லை . ஒரு குழந்தை, “அம்மா, விளக்கைப் போடு” என்றது.

விளக்கேற்றும் நேரம்தான். ஆனால், எப்போது இருட்டிற்று? தன் நீண்ட, வறண்ட தலைமுடி சரியாக வாரப்படாமல் இருப்பதை கொஞ்சநஞ்சமிருந்த வெளிச்சத்தில் கவனித்தாள். இடது கையால் முடியைக் கோதிவிட்டுக்கொண்டாள். இன்று தலைவாரவே இல்லை. அந்திசாயும் இருளில் எங்கிருந்து ஆறு வெளிச்ச வட்டங்கள் அலமாரிமீது வரிசையாய் விழுகின்றன என்பது புரியவில்லை விளக்கைப் பொருத்தியதுமே அவை மறைந்துபோய்விட்டன. ரூபாய் நாணயம் போன்ற அந்த வட்டங்களைப் பார்த்ததாக நினைத்தது வெறும் பிரமையாக இருக்கலாம். மறுபடி விளக்கை அணைத்துப் பார்த்தால், அவை திரும்பவும் கண்ணில் பட்டாலும் படலாம். எழுந்து விளக்கை அணைக்குமளவுக்குத் தெம்பில்லாமல் சோர்ந்திருந்தாள்.

பீதாம்பர் இன்னும் திரும்பவில்லை . ஏன்? சீக்கிரம் வந்துவிடுவதாகத்தான் கூறியிருந்தார். இரண்டு மணிநேரம் அனுமதி வாங்கிக்கொண்டு போய், பாரியை அழைத்துவரவேண்டும்.

‘கவலைப்படாதே, நிச்சயமா கூட்டிட்டு வரேன்.

அவளுக்குக் கோவமா என்ன? யாராவது ஏதாவது செஞ்சீங்களா?’

“நீ ஏதாவது சொன்னியா?”

“யாரு, நானா? உங்ககிட்டதான் இந்தக் கேள்வியக் கேக்கணும்” என்று சரஸ்வதியிடமிருந்து பதில் வந்தது.

“அப்படி எதுவும் செஞ்சதா எனக்கு ஞாபகமில்லையே….”

“பின்ன ஏன் போனா?”

“அதான் உன்னைக் கேக்கறேன்.”

“நேத்து ராத்திரியே திரும்பி வந்திருக்கணும் அவ…”

“நானும் அப்படித்தான் நினைச்சேன்.”

“ஆனா வரலையே?”

“கவலைப்படாதே, இன்னிக்கு வந்துடுவா.”

“அவ இந்த மாதிரி போய்த் தங்கினதே இல்லே.”

“வாஸ்தவம்தான்…”

“அவ குடுத்திருக்கற விலாசத்துல போய்ப் பாருங்களேன்…”

“சரி, அழைச்சிட்டு வந்துடறேன்.”

“எங்க ஆபீஸுக்கு போன் பண்ண மறக்காதீங்க. இன்னிக்கும் வரமாட்டேன்னு சொல்லிடுங்க.”

“சரி.”

சரஸ்வதியின் எண்ணவோட்டம் மறுபடி வேகமெடுத்தது. அவள் ஏன் இப்படிப் போனாள் என்று தெரியவில்லை . பாரி விசித்திரமான பெண். வீடே அவளை நம்பித்தான் இருக்கிறது. காலையில் கொடுத்துவிட்டுப் போகும் ஐந்து ரூபாயை எப்படிச் செலவழிக்கிறாள் என்று கூட அவரோ நானோ கேட்பதேயில்லை. அவள்தான் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்கிறாள். அவள் வராமலே போய்விட்டால் என்ன செய்வது? வீட்டை யார் கவனிப்பது? கவலைப்படாமல் நான் எப்படி அலுவலகம் போய்வருவது?

இரண்டு வருஷங்களுக்கு முன் பாரி திடீரென்று வந்தாள்.

“எங்களுக்கு வேலைக்கு ஆள் வேணும்னு யார் சொன்னாங்க?” என்று கேட்டாள் சரஸ்வதி.

“யாரோ சொன்னாங்க….”

“வேலை எப்படிச் செய்வே?”

“ஒழுங்கா செய்வேங்க்கா… எப்படியாவது வேலை குடுங்க, ரொம்ப கஷ்டப்படறேன்…” “உ

னக்குக் கல்யாணமாயிடுச்சுன்னு சொன்னாங்களே?”

“அதனாலதான் இப்படிக் கேடுகெட்டு நிக்கறேன், சரஸ்வதிக்கா.”

“எனக்கும் வேலைக்கு ஆள் வேணும்தான்…”

“தெரியுங்க்கா … அதுக்குதான் வந்திருக்கேன். உங்க வீட்டுல மூணு ரூம்பு இருக்குது, அதுல ஒண்ணுல ஓரமா ஒடுங்கிக்கறேன். குழந்தைங்களைப்பத்தி கவலையே படாதீங்க… அவங்களுக்கு

வேணுங்கற்தெல்லாம் செய்யறேன். வேணான்னு மட்டும் சொல்லிடாதீங்கக்கா…”

இந்தக்காலத்தில் வேலைக்கு ஆள் கிடைப்பதே கஷ்டம், அதிலும் வீட்டோடு இருப்பதென்றால் கிடைக்கவே கிடைக்காது. யாரை வைத்தாலும், நேர்மையில்லாமல் இருக்கிறார்கள், அல்லது சில மாசங்களிலேயே ஓடிப்போய்விடுகிறார்கள். சரஸ்வதியின் பிரச்சினை தீர்ந்த து. பாரி வீட்டுப்பொறுப்பை ஏற்றாள். நல்ல பலசாலி, திடகாத்திரமானவள். சலிக்காமல் வேலை செய்தாள். ஏதோ கொஞ்சம் படித்தும் இருந்ததால், கணக்கு வழக்குகளை ஒழுங்காகப் பார்த்தாள். செலவழித்த ஒவ்வொரு காசுக்கும் கணக்கு எழுதிவிடுவாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு சரஸ்வதியின் சம்பளம், பிடித்தமில்லாமல் வீடு வந்து சேர்ந்தது.

பிடித்தமில்லாமல் முன்பு இருந்ததேயில்லை. சிலசமயம் பெரிய பையனைப் பள்ளியில் சென்று பார்க்க… சிலசமயம் அடிபட்டு வீட்டுக்கு வந்துவிட்ட இரண்டாவது பையனைக் கவனிக்க… வயிறு சரியில்லாமல் போன கைக்குழந்தைக்காகச் சிலசமயம்; ‘வேலைக்காரி பாட்டுக்குத் தூங்கிட்டாம்மா, தாரோ வெளிய வெயில்ல அலைஞ்சப்போ அவன் கால்ல கண்ணாடி குத்திடுச்சும்மா’ என்பான் மூத்த மகன் சில சமயம்; சிலசமயம் இரண்டாவது மகன் ‘அப்பாகிட்ட சொல்லி இந்த வேலைக்கார ராட்சஸிய வேலையவிட்டு நிறுத்தும்மா. குமார் அண்ணா ஸ்கூலுக்குப் போனதும் குழந்தையோட பாலை இவ எடுத்துக் குடிச்சிட்டு, அது அழும்போது தண்ணி குடுக்கறாம்மா’ என்பான்…

அடிக்கடி அலுவலகத்திலிருந்து விடுப்பு எடுத்து சம்பளத்தில் வெட்டு விழ, கணவனுக்கும் குறைந்த வருமானமாக இருக்க, வெளியே வாங்கிய கடன் வளர்ந்திருந்தது. அலுவலகத்திலும் கடன் வாங்கியிருந்தான் பீதாம்பர்.

ஆனால் பாரி வந்தபிறகு, நிலைமை மெல்லமெல்ல சரியாயிற்று. வெளியேயும் அலுவலகத்திலும் கடன் வாங்குவது அறவே நின்றுபோயிற்று.

மணி எட்டரை. ஜன்னல் திரைச்சீலைகூட அசையவில்லை. காற்றே இல்லையோ? ஏதோ தீய்ந்துபோகும் வாசனை அறையெங்கும் வியாபித்தது. ‘ஸ்ஸ்ர்ர் … ஸ்ஸர்ர்…’ என்ற சத்தம் எங்கிருந்தோ கேட்டது. அலையாய் புகை பரவியது. சரஸ்வதி சிந்தனையில் மூழ்கியிருக்க, அடுப்பில் வாட்டுவதற்காகப் போட்டிருந்த ரொட்டித்துண்டுகள் தீய்ந்து கருகத் துவங்கியிருந்தன. வெளியே குழந்தைகளின் கூக்குரல் அதிகரித்தது. நடுநடுவே போட்டிபோட்டுக்கொண்டு கேட்ட பட்டாஸுச் சத்தம் வேறு… பதினைந்து நாளைக்கு முன்னால் வந்த தீபாவளிக்கு வாங்கிய மிச்சமாக இருக்கும். பாரி ஏன் போனாள் என்று தெரியவில்லை . யோசித்தவரை, அவள் போவதற்கான காரணம் எதுவும் புலப்படவில்லை . மூன்றாவது மாடியிலிருந்த திருமதி ஜியாந்தானியின் வீட்டுக்கு ஏதாவது காரணத்தைச் சொல்லிக்கொண்டு போய், அவளது வேலைக்காரன் இருக்கிறானா போய்விட்டானா என்று விசாரித்துப் பார்த்தாயிற்று. அவர்கள் வீட்டில் ஐஸ்பெட்டி இருந்ததால், ஐஸ்கட்டி வாங்கிவருவதற்காக பாரி அங்கு போவது சகஜம்தான். இப்போது பாரி வெளியேறியதையும், ஜியாந்தானி வீட்டு வேலையாள் – இருக்கிறானோ, இல்லையோ சேர்த்து யோசித்தால், ஏதேதோ சந்தேகங்கள் தோன்றின. தேவையில்லாதபோதுகூட பாரி அங்கு போய் ஐஸ்கட்டி வாங்கிவந்திருக்கிறாள் என்று பட்டது. ஒருமுறை அவன் பால் உறை ஊற்ற துளி தயிர் கேட்டு வந்தபோது, இரண்டு கரண்டியாகக் கொடுத்தனுப்பியிருந்தாள். (அவன் போன பிறகு அவள் ஏதோ யோசனையிலும் ஆழ்ந்ததாக இப்போது தோன்றியது). ஒருமுறை சமையலறை ஜன்னலுக்குப் பின்னாலிருந்து இரு கண்கள் பார்ப்பதை சரஸ்வதி கவனித்திருந்தாள். அந்தக் கண்கள் அந்த வேலையாளினுடையதுதான், பாரியைத்தான் அவை தேடியிருக்கவேண்டும் என்று இப்போது சந்தேகம். ஆனால், ஜியாந்தானியின் வீட்டுக்கு ஒவ்வொரு முறை போகும்போதும் அந்த வேலைக்காரன் எங்கும் போகாமல் அங்கேயே இருந்தது, மனசுக்குள் எழுந்த சந்தேகத்தை அழித்தது.

ஒன்பதரை மணிக்கு பீதாம்பர் வந்தான், தனியாக

“பாரி…?”

“அவ இல்லே ….”

“அவ குடுத்த விலாசம் தப்பா?”

பீதாம்பர் வெறுப்புடன் எரிந்துவிழுந்தான். “நீயும் உன் பாரியும்! சாப்பாடு தயாராயிடுச்சுன்னா டேபிள்ல எடுத்து வை. இல்லாட்டி நான் போய்த் தூங்கவாவது செய்யறேன்…”

அவள் சமையலறைக்குப் போனாள். சின்னச்சின்ன விஷயங்களுக்குக்கூட இவருக்கு ஏன் இப்போதெல்லாம் இப்படிக் கோபம் வருகிறது? எதனாலோ அவன் குழம்பியிருக்கிறான் என்பது தெரிந்தாலும், சரஸ்வதி எதுவும் கேட்கவில்லை . தன் சுபாவத்திற்கு மாறாகத் திடீர் திடீரென்று நெருங்கி வந்து தேவையில்லாமல் கட்டியணைக்கிறார். எப்போதுமே அவனை ஒரு வெளிப்படையான மனிதன், சுத்தமான மனசுள்ளவன், எந்த வம்புக்கும் போகாதவன், அவள் மீதும் குழந்தைகள் மீதும் அக்கறையுள்ளவன், நேர்மையானவன் – என்றுதான் சரஸ்வதி உணர்ந்திருக்கிறாள்.

ஏன் சில நாளாக மாறிவிட்டார்? கவனமில்லாமல், கோபமும் எரிச்சலுமாக…

பாரியைப்பற்றி மறுபடி பேசவில்லை என்றாலும், படுக்கப் போவதற்கு முன், “நாளைக்கும் எங்க ஆபீஸுக்கு போன் பண்ணி …”

“எல்லாம் சொல்றேன்.”

மௌனம்.

“வேற ஆளு கிடைக்குமானு பாரேன்…”

“கிடைப்பாளா?”

“தேடித்தான் பாரேன்.”

“பாரி மாதிரி கிடைக்கணுமே…”

“பாரி மாதிரி கிடைக்கலேன்னா, நீ வேலைய விட்டுட்டு வீட்டோட இருக்கப் போறியா?”

வீண் விவாதம் வேண்டாம் என்று சரஸ்வதி திரும்பிப் படுத்துக்கொண்டாள்.

“தூங்கப்போறியா என்ன?”
“காலைல நீங்க சீக்கிரமா கிளம்பணும்…”

“ஆனா நீ போகப்போறதில்லையே….”

“அப்படீன்னா நீங்க தூங்குங்க, நான் முழிச்சுகிட்டே இருக்கேன்!”

இந்தச் சின்ன நகைச்சுவைக்குக்கூடச் சிரிக்காமல், தன்னை நெருங்காமல் பீதாம்பர் இருக்கிறானென்றால், எங்கோ எதுவோ தவறாகியிருக்கிறது, அதைப்பற்றி அவன் பேசவிரும்பவில்லை என்று புரிந்துகொண்டாள். ஒருவேளை அதைப்பற்றி விளக்கத் தெரியவில்லையோ என்னவோ! ஆனால் அப்படியிருப்பதும் கூட அவன் சுபாவம் இல்லையென்பதால், அந்த ‘ஏதோவொன்று சாதாரண விஷயமாக இருக்கமுடியாது.

“நாளைக்கு வேணா நீங்க போய்…” “மறுபடி பாரியப் பாருங்கன்னு சொல்றியா?”

“………”

“அவ வருவான்னு என்ன நிச்சயம்?”

“………”

“சரி, போறேன்.”

“………”

“கவலைப்படாதே…”

“………”

“எதுக்குக் கவலைப்படறே? ரெண்டு நாள் சம்பளம்தானே? போனாப் போகட்டுமே!”

“ஆபீஸ்ல என் பேர் கெட்டுப்போயிடும்…”

“சரி, எல்லாம் சரியாயிடும், கவலைப்படாதே.”

“அப்போ நாளைக்குப் போய்ப் பார்க்கறீங்களா?”

“நிச்சயமா போறேன்.”

“நானும் வேணுன்னா உங்க கூட வரட்டுமா?”

“நீயுமா?”

“ஆமா …”

“எதுக்கு ?”

“சும்மாதான்…”

“தேவையில்லே ….”

சேர்ந்தாற்போல ஐந்து நாட்களுக்கு பீதாம்பர் தனியாகவே திரும்பியபோது, பாரி இனிமேல் வரமாட்டாள் என்று நினைத்தாள். வீட்டின் சுவர்கள் பலமிழந்து ஆட்டங்கண்டுவிட்டாற்போலத் தோன்றியது. இடிந்து சரிந்துவிடுமோ? அப்படியொன்றும் நடக்காது. செலவுக்கு என்ன செய்வது? குழந்தைக்காக வாங்கும் பாலை எந்தக் காரணத்துக்காகவும் நிறுத்த முடியாது. நல்ல பால் கிடைப்பது அரிதாக இருந்ததால், அதன் விலை எக்கச்சக்கமாக ஏறியிருந்தது. இப்போது காசுக்காகப் பார்த்து வேறு பால் வாங்கினால், குழந்தையின் வயிறு கெட்டுவிடும். இதையும் மற்ற மோசமான விளைவுகளையும் பற்றி உணர்ந்திருந்ததால், கணவனும் மனைவியும் நிலைமையை எதிர்கொண்டு பேசாமலிருந்துவிடுவார்கள். சூழ்நிலை நன்றாகப் புரிந்திருந்தும்கூட, அதைப்பற்றி விவாதிக்கவிடாமல் பயம் அவர்களைத் தடுத்தது. ஒருவருக்கொருவர் பிரச்சினையை மறைக்கிறார் போல இருவருமே ஒதுங்கிப்போனார்கள். சிலசமயம் இந்த மௌனமும் விலகலும் இருவரின் உடலையும் மனசையும் பாதித்து, தாங்கமுடியாத வலியில் கரைத்துக்கொள்ள விழையும் உடற்பசியாகப் பற்றிக்கொள்ளும். மனப் போராட்டத்தைத் தடுத்து, ஒருசில கணங்களின் வேட்கையில் இளகச் செய்யும் அந்தத் தூய்மையான கட்டுப்பாடு, அவர்களிடமிருந்து கொடுமையான சூழ்நிலைகளையும் பிரச்சினைகளையும் விலக்கும்.

ஒருநாள் பீதாம்பர் வீட்டுக்குத் திரும்பியதும் சரஸ்வதி சொன்னாள், “நாளைலேருந்து ஆபீஸ் போகலாம்னு நினைக்கறேன்.”

“வேற ஆளுக்கு ஏற்பாடு செஞ்சிட்டியா?”

“பாரியே திரும்ப வந்திட்டா.”

முகத்தைத் திருப்பியபடி குளியலறைக்குச் செல்ல முனைந்த பீதாம்பர், பார்வையைத் திருப்பாமலே கேட்டான், “அவளாவே திரும்பி வந்தாளா?”

“இல்லே… நான்தான் அவ குடுத்த விலாசத்துக்குப் போய்ப் பார்த்தேன்.”

பீதாம்பர் குளியலறையின் கதவைத் திறந்தான்.

“இங்க பாருங்க…”

நின்றான்.

“நீங்க அங்க போகவே இல்லியாமே…”

அவன் எதுவும் சொல்லாமல் நின்றான்.

“ஏன் போகலே?”

“சொல்றேன்…”

“இப்பவே சொல்லுங்க.”

“இப்ப முடியாது…”

“இல்லே, இப்பவே சொல்லுங்க…”

“இப்ப முடியாது.”

“சொல்லித்தான் ஆகணும்.”

“குறிப்பா ஒரு காரணமும் இல்லே …”

“எதுவா இருந்தாலும் சொல்லுங்க…”

எதுவும் பேசாமல் குளியலறைக்குள் நுழைந்தான்.

இந்த மனிதன் அவளிடமிருந்து எதையுமே மறைத்ததில்லை. சின்னச்சின்ன விஷயங்களைக்கூட சொல்லித்தான் ஆகவேண்டுமா என்று அவளே வெறுத்துப்போய் கேட்டிருக்கிறாள். சொல்லாமல் இருக்கமுடியவில்லை என்பான். அவன் மனசில் எதுவும் தங்கியதில்லை. எல்லாம் வெளியே வந்து கொட்டிவிடும். என்ன ஆயிற்று அவனுக்கு? ஏன் இப்படிப் பூசிமெழுகுகிறான்? ஏன் அவளைத் தவிர்க்கிறான்? ஏதோவொரு மர்மம் அவன் மனசில் கனப்பதை அவனது அழுத்தமான காலடிகளே வெளிக்காட்டின. அவன் மனசுக்குள் புகுந்து மர்மத்தைத் தெரிந்துகொள்ள சரஸ்வதி எத்தனை முயன்றும், எல்லா ஜன்னல்களும் மூடிக்கொண்டு அவளைப் போகவிடாமல் செய்தன. சற்றே திறந்திருப்பதாகத் தோன்றும் ஜன்னலைக் கண்டுபிடித்தாலும், அதன் பின்னால் தெரியும் அடர்ந்த
கருமையைக் கண்டு பின்வாங்கிவிடுவாள். ஏன் பொய் சொன்னான்? யார் வேண்டுமானாலும் பொய் சொல்லலாம், ஆனால் அவன் சொல்வதில்லை. பிறகு, ஏன்?

சாப்பாட்டு நேரத்தில் அவனைக் காணாமல் தேடினாள். வேறெங்கோ இருந்தான்.

“என்மேல கோவமா?”

“நீதான் என்மேல கோவமா இருக்கே…”

“ஏன்?”

“உன்கிட்ட பொய் சொன்னேன்னு…”

“ஏன்?”
“ஏன்னு கேக்காதே….”

“ஏன்?”

“அப்பறம் நான் மறுபடி பொய் சொல்லவேண்டி வரும்.”

சரஸ்வதி பேசாமலிருந்தாள். அவன் பதிலுக்காகத் தான் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் தன்னை அவனிடமிருந்து விலக்கிவைக்கும் என்பதைத் தெளிவாகவே உணர்ந்திருந்தாள். அவளது ஒவ்வொரு ‘ஏன்னும் அவனைத் தள்ளிவைக்கவே செய்தது.

வழக்கத்திற்கு மாறாக, சாப்பாட்டுக்குப் பிறகு அவன் வெளியே சென்றான். சாதாரணமாக அவன் வெளியே போவதில்லை , அதுவும் தனியே.

வெளியே நடக்கும்போது, பாரி திரும்பிவந்ததைப்பற்றி யோசித்தான் பீதாம்பர். தொலைவிலிருந்து வந்து அவனைக் கடந்து சென்ற ஒரு காரின் விளக்கு வெளிச்சம் அவனது கைக்கடிகாரத்தில் பட்டு ஒளிர்ந்தது.

வெளிச்சமில்லாத பாதையில் போக வேண்டும் போல அவனுக்குத் தோன்றியது. எந்த வெளிச்சமும், மங்கியதோ பிரகாசமானதோ, ஒரு இருண்ட இரவை அவனுக்கு நினைவூட்டியது. அது வேறு விதமாக அல்லவோ இருக்கவேண்டும்? இருட்டில்தான் அன்றிரவு நடந்தவற்றை அவன் நினைவுகூர முடியும். அந்த இரவும் இருண்டதுதானே.

ஏதோவொரு வெளிச்சக்கீற்று எங்கும் இருக்க, அதன் ஒவ்வொரு இழையும் அன்றைய இரவைத் திரும்பவும் கண்முன் கொணர்ந்தது. எனவேதான் வெளிச்சமே வேண்டாம் என்று அவனுக்குத்

தோன்றியது. வெளிச்சத்திலிருந்து விலகி ஓடிவிட வேண்டும் போல இருந்தது. அன்றைக்கெனப் பார்த்து இருபக்கமிருந்தும் வந்த கார்கள், டாக்ஸிகள், லாரிகள், தெருவிளக்குகள், ஹோட்டல்களின் விளக்குகள்…

அதே இரவு மறுபடியும் வந்துவிடுமா?

அன்றைய இரவுக்குப் பின்தான் பாரி வெளியேறினாள். –

அதே இரவு மறுபடி வந்து, பாரி மறுபடி வெளியேறிவிடுவாளோ?

நாளையிலிருந்து சரஸ்வதி மீண்டும் வேலைக்குப் போகலாம். குழந்தைகளைப் பற்றி இனி கவலையில்லை. ஆனால், பாரி மறுபடி போய்விட்டால் என்ன செய்வது… மறுபடி வேதனை, மறுபடி

பிரச்சினைகள். அதே பிரச்சினைகள்… குறையும் சம்பளம், சமாளிக்கமுடியாத செலவு, அலுவலகத்திலும் வெளியிலும் கடன், ஒவ்வொரு அவசரத்தின் போதும் ஊதியக்குறைவு, மலிவான பொருட்களைத் தேடிப்போவது, எதற்கும் புலம்பாமல் சரஸ்வதி எல்லாவற்றையும் தாங்குவது, மௌனமான அவளது உள்மன வேதனை, அறைக்குள்ளேயே ஆழ்ந்த சிந்தனையில் அமிழ்வது, மேஜைவிளக்கின் ஒளியைத் திருப்பிவிட்டு சுவற்றிலோ அலமாரியிலோ சாய்ந்துகொள்வது…

அந்த இரவு வந்தேவிடுமா?

அவனை முற்றிலுமாக மாற்றிய அந்தக் கரிய இரவு… இன்னமும் அவன் நினைவிலிருக்கிறது. சமையலறைக்குத் தண்ணீர் குடிக்கப் போனவன், பயந்துபோய் பாதியிலேயே நின்றான். வாஷ்பேசினுக்கு மேலுள்ள கண்ணாடியில் ஒரு மெல்லிய கோடும், அதற்கருகில் வட்டமாக வெளிச்சமும்… இந்தக் கோடும் வெளிச்சவட்டமும் எங்கிருந்து வருகின்றன? கரிய இருட்டில் இவை அச்சமூட்டுவதாக இருந்தன. கதவுக்கு வெளியே விளக்கெரிவதைப் பார்த்ததும், அவன் பயம் சற்றே குறைந்தது. வெளியிலிருந்து தபால்களைப் போடுவதற்காகக் கதவில் ஏற்படுத்தப்பட்ட சந்தின் வழியாகவும், அதனருகிலுள்ள ஒரு ஓட்டையின் (வெளியில் நிற்பவரைக் கதவைத் திறக்காமல் காண உதவும் ஓட்டையின் சிறுகண்ணாடியைக் குழந்தைகள் உடைத்துவிட்டார்கள்) மூலமாகவும் வந்த வெளிச்சம்தான் வாஷ்பேசின் கண்ணாடியில் பட்டிருந்தது. பார்த்ததுமே பயந்துபோய் அவன் திடுக்கிட்டு நின்றான். வெளிச்சம் எங்கிருந்து வருகிறது என்பதை உணர்ந்ததும், கண்ணாடியையும் தாண்டிப் பாய்ந்த ஒளி, ஒரு குழாயைப் போலத் தோன்றியது. அந்த வெளிச்சவட்டமும் எதனால் என்பது புரியாமல் போயிருந்தால், வீட்டுக்குள் நுழைந்துவிட்ட திருடனின் டார்ச் விளக்கின் ஒளி என்றுதான் சந்தேகப்பட்டிருப்பான். இருட்டைக் கண்டு பயந்ததால்தான் வெளிச்சமும் உள்ளே நுழையாமல் வாசலிலேயே நின்றுவிட்டதோ? இருட்டுக்குப் பயந்துதான் உள்ளேயும் நுழையாமல், வெளியேயும் போகாமல் தங்கிவிட்டது…

அப்போது, வாஷ்பேசினுக்கு நேரெதிரே இருந்த அறையின் பாதித்திறந்திருந்த கதவின் வழியே வெளிவந்த ஒரு நிழல், மெதுவே நகர்ந்து அவனுக்குப் பின்னால் வந்து நின்றது. அவன் கையைப் பற்றி அறைக்குள் இழுத்துப்போனது. சுதாரித்துக்கொண்டு அவன் யோசிப்பதற்குள், கதவை மூடிய பாரி அவனுடன் ஒட்டியபடி நின்றாள். அவனது மூச்சின் வேகம் குறைய, அவளுடையது துரிதமாயிற்று. அவளுக்கு மூச்சு வாங்கியது. அவளிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அவன் முனைய, அவனது மார்பைத் தடவினாள் அவள். அவன் உடல் சில்லிட்டது. இடுக்கியில் மாட்டிக்கொண்ட ஐஸ்கட்டியைப் போல அவனது உடல் அவளது கைகளில் சிக்கியிருந்தது.

மிகுந்த பிரயத்தனத்துடன் இடுக்கிப்பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட ஐஸ்கட்டி, தள்ளாடியபடி அறையைவிட்டு வெளியேறி, தன் அறைக்குள் வந்து படுக்கையில் விழுந்தது.

பாரிக்கு என்னாயிற்று? அவள் ஆசைக்கு இணங்கியிருந்தால் என்னாகியிருக்கும்? இதைப்பற்றி சரஸ்வதியிடம் சொன்னால் என்ன? பாரிக்குக் கூச்சமில்லை, ஒழுக்கமுமில்லை என்று சொன்னால் என்ன? படுத்தவாறு யோசித்தவன், சரஸ்வதியிடம் எதுவும் கூறவேண்டாம் என்று தீர்மானித்தான். சொன்னால், பாரி வேலையை விட்டுப் போகவேண்டியிருக்கும். பாரி இங்கே இருப்பதால்தான் இதை வீடு என்றே சொல்லமுடிகிறது. பாரி மறுபடி இப்படி நடந்துகொண்டால்…? அப்படி நடக்கும்போது பார்த்துக்கொள்ளலாம். அப்போது சரஸ்வதியிடம் எல்லாவற்றையும் மறைக்காமல் சொல்லிவிட்டு, பாரியைப் போகச் சொல்லிவிடலாம். அதுவரை இந்தச்சின்ன அசிங்கத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம். தன் செய்கைக்காக பாரியே இப்போது தன் அறையில் வருத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறாளோ என்னவோ!

மறுநாள் அவன் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியபோது, சரஸ்வதி இன்னமும் வந்திருக்கவில்லை. யாருக்காகவோ காத்திருக்கிற மாதிரி வாசலிலேயே அமர்ந்திருந்தாள் பாரி. அவன் நுழைந்ததுமே, “நான் போறேன்…” என்றாள்.

“எங்க ?”
“எங்க வீட்டுக்கு.”
“எவ்வளவு நாளைக்கு?”
“ஒரேயடியா போறேன்.”
“ஏன்?”
அவள் பதிலேதும் கூறவில்லை .
“இங்க ஏதாவது பிரச்சினையா?”
“இல்லே, சந்தோஷமாத்தான் இருக்கேன்.”
“பின்னே ஏன் போறே?”
“உங்களுக்கு ரொம்பக் கடமைப்பட்டிருக்கேன்…”
“அதுசரி, ஏன் போறேங்கறே?”
“இனிமே இங்க இருக்கமுடியும்னு தோணலே…”
“உனக்கு என்ன குறை இங்க?” “நான் உங்க குடும்பத்தச் சேர்ந்தவ இல்லியே…” “
ஏன் இல்லே ? யாரு அப்படிச் சொன்னது?”
“அப்படீன்னா, எனக்கு எல்லாம் கிடைக்கணும்.”
“கிடைக்கலியா உனக்கு?”
“இல்லே .”

அதிகம் படிக்காத அந்தப்பெண்ணின் அசட்டுத்துணிச்சலைக் கண்டு அவன் விக்கித்து நின்றான். ‘எல்லாம்’ என்றும் ‘இல்லே’ என்றும் அவள் சொன்னதன் பொருள் அவனுக்கு விளங்கியது. அவள் கெட்டிக்காரி. ‘இல்லை ‘ என்பதால்தான் அவள் வெளியேறுகிறாள். அவளைத் தடுக்கவும் வழியிருப்பதாகத் தெரியவில்லை . குடும்பத்தைச் சேர்ந்தவள் என்கிற ரீதியில் எல்லா உரிமைகளையும் அவள் எதிர் பார்ப்பது நியாயம்தான்; ஆனால் அவளுக்குக் கிடைக்காத அந்த ‘எல்லாம்’ என்பதில்தான் விவகாரமே. அதை அவனால் அவளுக்குக் கொடுக்க முடியாதே!

“சரஸ்வதி வந்தப்புறம் போ…”
“இல்லே, அவங்ககிட்ட நீங்களே சொல்லிடுங்க.”
“அவளுக்கு அதிர்ச்சியா இருக்கும்…”
“அது உங்க பிரச்சினை. இப்பக்கூட வேணுன்னா நான் தங்கிடறேன், ஆனா அது உங்க கையிலதான் இருக்கு. குடும்பத்தைச் சேர்ந்தவன்னா, நான் கேக்கற எதுவும் எனக்குக் கிடைக்கணும்…”
“சரஸ்வதிக்குத் தெரிஞ்சா என்னாகும், தெரியுமா?”

“தேவையில்லே.. அவங்களுக்குத் தெரியாமயே எனக்குக் கிடைக்கலாமே! உங்க கையிலதான் இருக்கு… நானும் இந்த வீட்டுல ஒருத்தி….”

“போதும், நீ போ.”

“போகத்தான் போறேன். இந்தாங்க என் விலாசம்… நீங்க யோசிச்சுப் பாருங்க வேணுன்னா இந்த விலாசத்துல வந்து பாருங்க” என்றபடி அவள் போய்விட்டாள்.

பாரி திரும்பி வந்துவிட்டாள். பாதை முழுக்க ஒளியில் பிரகாசமாக இருக்கிறது – ஓரிடத்தில் கொஞ்சம், வேறிடத்தில் மொத்தமும். தன்னை மறைத்துக்கொள்ள அவனுக்கு இடமேயில்லை அந்த இரவின் நினைவிலிருந்து மறைத்துக்கொள்ள. அவளாகவே திரும்பி வந்திருப்பதால், தனக்குக் கிடைக்காதது கிடைக்கும் வரை வேறு எது கிடைத்தாலும் பாரி திருப்தியடைய மாட்டாள். நல்லவேளை, இவன் கூப்பிட்டு அவள் வரவில்லை . அதனால் கவலைப்பட வேண்டாம். இவனே போய்க் கூப்பிட்டிருந்தால், நேரடியாகச் சொல்லாவிட்டாலும்கூட, அவளது நிபந்தனைக்கு இவன் தன் சம்மதத்தை வெளியிட்டதாகவே ஆகிவிடும்.

இந்த நினைப்பு சற்றே ஆறுதலளித்தது. தேவையில்லாமல் கவலைப்பட்டு விட்டோமோ என்று தோன்றியது. இயல்புக்குத் திரும்பிவர வேண்டும். இங்குமங்கும் அலைவதால், விசித்திரமாகவும் செயற்கையாகவும் தோன்றும் இவன் நடத்தை, சரஸ்வதியின் முன்னால் நெளிய வைத்துவிடும். எப்போதும் போலவே நடந்துகொள்ள வேண்டும்.

வீடு திரும்பியதும் சரஸ்வதியிடம் பேசவேண்டும் போல இருந்தது. “எனக்கு என்னாச்சுன்னே தெரியலே…” என்றான்.

“எனக்கும் அதான் புரியலே!”
“என்ன ஆச்சு?”
“எதுவா இருந்தா என்ன, இப்போ சரியாயிடுச்சு. எனக்கு அப்பாடான்னு இருக்கு.” “
அப்போ , ‘ஏன், ஏன்’னு மறுபடியும் எங்கிட்ட கேக்கமாட்டியே?”
“மாட்டேன்.”
“ரொம்ப நல்லது.”
“கேக்கவே மாட்டேன்.”

அவன் மௌனமாக இருக்க, சரஸ்வதியே தொடர்ந்தாள். “நீங்களே சொன்னாலொழிய, கேக்கமாட்டேன்.”
“ரொம்பக் குழப்பமா இருந்தது…”
“ரொம்பத்தான் குழம்பியிருந்தீங்க!”

ஆனால், அன்றிரவு நடக்காமல் போனது ஒருநாள் நடந்தேவிட்டது. பகலில் அவன் வீட்டிலிருந்தான். சரஸ்வதி வெளியே போயிருந்தாள். கொஞ்சம் தாமதமாக வருவதாகக் கூறியிருந்தாள். பாரி அவனைத் தன்னிடம் இழுத்துக்கொண்டாள். அவன் போராடிப் பார்த்தான். பிடிவாதமாக அவள் இழுக்க, அவனால் தொடர்ந்து போராட் முடியாமல் போயிற்று. நடந்தே தீர வேண்டியதைப்போல எல்லாம் நடந்தேறின. தவிர்க்க முடியவில்லை . சற்றுமுன் தவிர்க்க நினைத்த செய்கையில் இப்போது அவனும் பங்கேற்றான்.

என்றாலும், தான் செய்ததில் துளிக்கூடத் தவறில்லை என்று மனசுக்குப் பட்டாலும், வேதனையடைந்தான். அந்தச் செய்கையிலிருந்த போராட்டமும், துவக்கத்தில் அவனிடம் காணப்பட்ட தயக்கமுமாகச் சேர்ந்து, இதுவரை அறிந்திராத ஏதோவொரு புதிய விஷயத்தை அவனுக்கு உணர்த்தின. அதேசமயம், அவனுக்குள் பதிந்துபோயிருந்த ‘நேர்மையான கணவன்’ என்பதின் ஒரு பகுதி, அவனது செய்கையின் சந்தோஷத்தை மீறி வெளியே வர, அவனது வருத்தம் அதிகரித்தது.

மீண்டும் அவன் விலகிப்போனான், மனதளவில் மட்டுமல்ல, உடலளவிலும்கூட – வீட்டிலிருந்து, சரஸ்வதியிடமிருந்து. குழந்தைகளிடமிருந்து, முக்கியமாய் பாரியிடமிருந்து. மறுபடி அதைச் செய்வதில்லை என்பதில் உறுதியாக இருந்தான். முடிந்தால், சரஸ்வதியிடம் உண்மையைச் சொல்லிவிட வேண்டும். இல்லையென்றால் குற்றவுணர்வை சதா சுமக்கவேண்டிவரும். இப்போதைக்கு எல்லாவற்றையும் பொறுத்துப் போனான். அவன் எதையோ மனசில் நினைத்து மருகுவதை சரஸ்வதி கவனித்தாள்.

இரவு. எல்லோரும் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தார்கள். தெருவிளக்குகள் எரியாததால், கண்ணாடியில் வெளிச்சக்கீற்றோ அல்லது வெளிச்சவட்டமோ காணப்படவில்லை. வாஷ்பேசினுக்கு எதிரிலுள்ள அறையினுள் நுழையும் அவன், சற்றுப் பொறுத்து வெளியே வருகிறான்.

இதற்கொரு முடிவே இல்லையா? இன்று செவ்வாய்க்கிழமை. மறுபடி அடுத்த செவ்வாய். பாரி அப்படித்தான் சொல்லியிருக்கிறாள். வாரத்திற்கு ஒருநாள் போதும். இனிமேல் அவள் வீட்டைவிட்டு வெளியேறவே மாட்டாள். இதைத் தன் வீடாகவே கருதுவாள். இப்போதுதானே அவளுக்கு இந்த வீட்டில் எல்லாமே கிடைக்கின்றன!

இரவு. செவ்வாய்க்கிழமை.
இரவு. செவ்வாய்க்கிழமை.
இரவு. செவ்வாய்க்கிழமை.

முடிவேயில்லாத பழக்கம்…

காற்றில் அடித்துச் செல்லப்படும் வைக்கோலைப் போல அவன் – லேசாக, சிறியதாக, இயந்திரத்தின் சுழற்சிக்கேற்ப சுற்றும் சாதாரண பல்சக்கரம் போல, சுயமாய் முடிவெடுக்கவோ விரும்பவோ இயலாதவனாய், சுதந்திரமற்று… இயந்திரத்தின் பல் சக்கரம்… விருப்பம், அனுமதி, அங்கீகாரம் என்ற எதுவுமற்று இயந்திரத்தில் பிணைக்கப்பட்டு…

கண்ணாடியில் இருந்த விரிசல் எப்போது பெரிதாகி வளர்ந்தது என்பதை யாரும் உணரவில்லை

சரஸ்வதி… அவன் மூச்சு சற்றே நின்றது. அவள் முழித்துக்கொண்டா இருக்கிறாள்? கவனித்தாளா? இன்று மாட்டிக்கொண்டோம் என்றுதான் நினைத்தான். பாரியின் அறையிலிருந்து விரைந்து வெளியேறியவன், குளியலறைக் கதவை மெதுவாகத் திறந்து, அதற்குள் நுழைந்து, படாரென்ற சத்தத்துடன் மூடிக்கொண்டான். அங்கு போவதற்குத் தான் அவன் வந்ததாகத் தோன்றட்டும். பின், மெல்ல நடந்து தன் படுக்கைக்குச் சென்று படுத்தான். சரஸ்வதியின் அறையில் விளக்கு எரிவதைப் பார்த்ததும், சப்தநாடியும் ஒடுங்கிப்போயிற்று. நிச்சயம் பிடிபட்டாயிற்று. அவனைப் படுக்கையில் காணாமல் தேடியிருப்பாள். எல்லாவற்றையும் புரிந்துகொண்டிருப்பாள். அவனது அறைக்குள் நுழைந்து படுக்கையருகே வந்தாள். அவன் கண்களை மூடிக்கொண்டான். அவள் செய்யப்போகும் அமர்க்களத்தில், அந்தக் கட்டடத்திலுள்ளோர் வந்து குழுமி விடுவார்கள்… என்ன வெட்கக்கேடு! மரியாதையான மனிதன், வேலைக்காரியுடன்… அவன் மனைவி ஓங்கிய குரலில் எல்லோரையும் வரவழைத்திருக்கிறாள். கொஞ்ச நாளாக நான் குழப்பத்தோடு இருந்ததனால், ஏதோ நடக்கிறது என்று அவளுக்கு ஏற்கனவே சந்தேகம். என் இருப்புக்கொள்ளாமைக்கான காரணத்தை இப்போது புரிந்துகொண்டிருப்பாள்… உண்மை அதுவல்ல என்றாலும்கூட.

“அதுக்குள்ள தூங்கிட்டீங்களா?”

எதுவும் பேசாமல் படுத்திருந்தான்.

“கொஞ்சம் நகருங்களேன்…”

ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்டதைப்போல, “என்ன… என்ன விஷயம்?” என்றான்.

படுக்கையின் ஓரத்திற்கு நகர்ந்தான்.

சரஸ்வதி அவன் பக்கத்தில் படுத்தாள்.

அவன் காத்திருந்தான். இப்போது பேசப்போகிறாள். கத்தப்போகிறாள்.

அவன் கழுத்தில் கைகளை மாலையாக்கி அவனைத் தன்பக்கமாய் இழுத்தவள், “டார்லிங், இன்னிக்கு எல்லாத்தையும் பார்த்தேன். உங்களுக்கு ரொம்ப கடமைப்பட்டிருக்கேன்…” என்றாள்.

*
நன்றி : சிவசங்கரி, புஸ்தகா