சென்ற வருடம் , சரியாக இதே ஏப்ரல் 7ஆம் தேதி , சகோதரர் ரிஷான் ஷெரீப் ஒரு பதிவு எழுதியிருந்தார். ‘எழுத்தாளர் அ.முத்துலிங்கம், நான் மற்றும் விகடன்‘ என்ற பதிவு. மனம் கனக்கச் செய்த பதிவு அது. எனது கூகுள்பக்கங்கள் காலாவதியாகி விட்டதால் அங்கிருந்தவற்றை மீண்டும் இங்கே பதிய வேண்டிய சூழலிலும் (முக்கியமாக , நண்பன் நாகூர் ரூமியின் பல படைப்புகள், அப்புறம் என்னுடைய ஃபேவரைட் எழுத்தாளர் தி. ஜானகிராமனின் பத்து செட்டி சிறுகதை etc..) இந்த இளைஞருடைய எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இங்கே இடுகிறேன்.
*
புத்தகங்கள்…
எம்.ரிஷான் ஷெரீப்
அது 2005 ம் வருடம். கொழும்பில் தங்கியிருந்து மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருந்தேன். எமது வகுப்பு வியாழக்கிழமை மட்டும் பாதிநாள் நடக்கும். வகுப்பு முடிந்ததும் மொறட்டுவை, கடுபெத்த நகர் சந்திக்கு வந்து கொழும்பு நோக்கிவரும் பஸ் எடுத்துப் பயணித்து இடையில் உள்ள வெள்ளவத்தையில் இறங்குவேன். ஒவ்வொரு வியாழக்கிழமையும் இப்படித்தான் நகர்ந்துகொண்டிருந்தது.
வெள்ளவத்தையில் இறங்க மிக முக்கியமான காரணமொன்று இருந்தது. அங்கு எனது அபிமான பழைய புத்தகக் கடையொன்றுள்ளது. இப்பொழுது இருக்கிறதா எனத் தெரியவில்லை. வெள்ளவத்தையில் குண்டு வெடித்ததாகப் பத்திரிகையில் புகைப்படம் பார்த்தபோது அதன் மூலையில் இக் கடையையும் கண்டதாக ஞாபகம். ரொக்ஸி சினிமா தியேட்டருக்கும் ஆர்பிகோ ஷோரூமுக்குமிடையில் இக்கடை அமைந்திருந்ததென நினைக்கிறேன். வெற்றிலை சாப்பிட்டு உதடெல்லாம் சிவந்த ஒரு அண்ணா (வயது 40 இருக்கும் ) உரிமையாளராக அதில் இருந்தார். சற்றுப்பெரிய கடைதான்.ஆங்கிலம், சிங்களம், தமிழென பல கிடைப்பதற்கரிய பழைய புத்தகங்கள் அழகாகவும் ஒழுங்காகவும் அடுக்கப்பட்டு அங்கு நிறைந்திருந்தன.
சிறுவயதிலிருந்தே புத்தகங்களும், அதன் வாசனையும், வாசிப்பும் எனக்கு மிகவும் பிடித்தமானவை. மதியம் ஒரு மணிக்கு அந்தப் புத்தகக் கடைக்குப் போனால் புத்தகங்கள் தேர்ந்தெடுத்து வாங்கிவர எப்படியும் மாலை 5 மணி ஆகிவிடும். ஒவ்வொரு கிழமையும் இப்படியாக மூன்று மணித்தியாலங்களுக்கும் மேலாக உருட்டிப் பிரட்டிப் புத்தங்களை அள்ளுவதால் அந்த அண்ணாவுக்கும் நான் நல்ல அறிமுகம் ஆகிவிட்டேன். இடையிடையே என்னைக் கடையில் விட்டுவிட்டு சாப்பிடவும், தேனீர் குடிக்கவும், வெற்றிலை வாங்கவுமென அவர் வெளியே போய்விடுவார்.
நான் வாசித்திராத பழைய மல்லிகை, மூன்றாவது மனிதன், யாத்ரா, ஆனந்தவிகடன் இதழ்கள், அம்மா, சகோதரிக்கு அவள் விகடன்,மங்கையர் மலர் இதழ்கள், Readers digest, இன்னும் நல்ல பழைய தமிழ்,ஆங்கிலப்புத்தகங்கள் என எப்படியும் கிழமைக்கு 20,25 புத்தகங்கள் வாங்கிவிடுவேன். புது ஆனந்த விகடன் ஐம்பது ரூபாய் என்றால் இரு வாரங்களுக்கு முந்தி வந்த விகடன் ஐந்து ரூபாய்க்குக் கிடைக்கும். அந்த அண்ணா எனக்காகவென்றே எப்படியும் சமீபத்திய இதழ்களை எடுத்துவைத்திருப்பார்.
இப்படியாக ஒருநாள் ஏறத்தாழ 4 மணித்தியாலங்கள் தேடி , பொக்கிஷங்களெனக் கண்ட, சொல்லிவைத்து நீண்ட காலத் தேடலின் பின் கிடைத்த (கல்கியின் படைப்புகள், ஆயிரத்தொரு இரவு கதைகள், பழைய ஆனந்தவிகடன், மங்கையர் மலர்கள், Readers digest, இன்னும் சில ) புத்தகங்களை பெரியதொரு கறுப்புப் பையில் கஷ்டப்பட்டு அடுக்கி நிரப்பி எடுத்து, கடையை விட்டு வெளியே வர மாலை 5 மணிக்கும் மேலாகிவிட்டது. நடந்து தூக்கிவருகையில் நிலத்தில் இழுபடுமளவுக்கு பெரிய பை. அவ்வளவு கனம்.
இப்பொழுது வெள்ளவத்தையிலிருந்து எனது அறையிருந்த மருதானை எனும் இடத்துக்குப் போக வேண்டும். உட்கார்ந்து போகலாமெனக் காத்திருந்து சனம் குறைந்துவந்த 100 ஆம் இலக்க பஸ்ஸில் ஏறி அமர்ந்து நீண்ட நாள் வேண்டுதலின் பின்னர் கிடைத்த குழந்தையைத் தாய் மிகுந்த கவனத்தோடு பத்திரப்படுத்துவது போல பையையும் அணைத்தபடி பயணித்துக்கொண்டிருந்தேன்.
காலி முகத்திடலெனத் தமிழில் அழைக்கப்படும் Galle face எனும் கடற்கரைப் பிரதேசம் தாண்டும்போது கொழும்பு நோக்கி வரும் எல்லா பஸ்களையும் படையினர் சோதனையிடுவது தெரிந்தது. ஏதோ ஓர் திடீர் சோதனை. நீண்ட துவக்குகளை நீட்டிவந்தவர்கள் நான் வந்த பஸ்ஸையும் நிறுத்தி எல்லோரிடமும் அடையாள அட்டையைக் கேட்டுவாங்கிச் சோதனையிட்டார்கள். சிங்கள மொழி தெரியாதவர்கள், அடையாள அட்டை இல்லாதவர்கள், அடையாள அட்டை இருந்தும் யாழ்ப்பாணத் தமிழராக இருந்தவர்கள் மற்றும் சந்தேகத்துக்குரியவர்கள் எனப் பலரை ஒரு ஓரமாக நிறுத்தி வைத்தார்கள். நிறுத்தப்பட்டவர்கள் ஒருவித உதறலுடனும் பதற்றத்துடனும் அச்சத்துடனிருப்பதைக் கண்டேன். எப்பொழுதும் பதற்றமான, அச்சங்கள் நிரம்பிய சூழல்களை சக மனிதர்களே உருவாக்குகிறார்கள்.
பரிசோதித்துக் கொண்டிருந்தவர்கள் எனதும் அடையாள அட்டையைப் பரிசோதித்துப் பார்த்துப் போகச் சொல்லிவிட்டுத் திரும்பவும் என்னை நிறுத்தி எனது கையிலிருந்த, பையின் வாய்ப் பகுதியால் தன்னொரு மூலையை விட்டு எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு புத்தகத்தை வெளியே எடுத்தார்கள். தமிழ் மொழியிலான புத்தகங்கள் அவர்கள் தோண்டத் தோண்ட அப் பையிலிருந்து வந்துகொண்டே இருந்தன. அவர்களுக்குச் சந்தேகம் முளைத்திற்று.
என்னைப் பார்த்தார்கள். ஏதோ ஒரு விசித்திரத்தைத் தேடுவது போல என் முகத்தை உற்றுப்பார்த்தார்கள். புத்தகப்பையைப் பார்த்தார்கள்..அடையாள அட்டையை மீண்டும் மீண்டும் வாங்கிப் பார்த்தார்கள். மீண்டும் என்னைப் பார்த்தார்கள். இப்படியே நிமிடங்கள் கரைந்தன.
அடுத்தது விசாரணை. எனக்குச் சிங்கள மொழி தெரியும்.
எங்கிருந்து வருகிறாய்? கொழும்பில் என்ன செய்கிறாய்? உனக்கெதற்கு இவ்வளவு புத்தகங்கள் ? அதுவும் தமிழ்ப் புத்தகங்கள் ? எங்கே வாங்கினாய்? யாருடன் நீ தங்கியிருக்கிறாய்? யாருக்காக இந்தப் புத்தகங்கள் ? இந்தப் புத்தகங்களில் என்ன இருக்கின்றன? இவற்றை வைத்து என்ன செய்யப்போகிறாய் ?
ஒரு குறிப்பிட்ட மொழியினைக் கொண்டிருப்பதால் மட்டுமே, வாசிப்பதற்கெனக் காவிச் செல்லப்பட்ட புத்தகங்கள் பொறுமையைச் சோதிக்கும் படியாக இப்படிப் பல கேள்விகளை அன்று கண்டன. பல்கலைக்கழ்கத்திலிருந்து வருவதாகவும், இவற்றையெல்லாம் வாசிக்க மட்டுமே எடுத்துச் செல்வதாகவும், பல்கலைக்கழக அடையாள அட்டை காட்டிப் பலமுறை உறுதியாகவும் தெளிவாகவும் விளக்கவேண்டியிருந்தது. இருந்தும் அவர்களது சந்தேகம் மட்டும் தீரவில்லை என்பது அவர்களது முகங்களில் அப்பட்டமாகத் தெரிந்தது.
என்னை நிறுத்திவைப்பதா? அனுப்பிவிடுவதா? புத்தகங்களையும் என்னையும் என்ன செய்வதென்று அவர்களுக்கு விளங்கவில்லை. இவ்வளவுக்கும் நன்றாக இருட்டிவிட்டது. அழகான சமுத்திரவெளி சூரியனைத் தின்றுவிட்டிருந்தது.
வீணாக பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டால் போராட்டம், வகுப்புப் பகிஷ்கரிப்புக்கள் எனப் பல இருந்த நாட்களவை. எதுவும் செய்ய முடியாமல் எனது புத்தகங்களைத் திரும்பத் தரவும் முடியாமல் அந்தப் படைவீரர்கள் தானாக வலையில் சிக்கிய அபூர்வமான விலங்கொன்றை மீண்டும் வனாந்தரத்தில் விட்டுவிடுவது எப்படியென்பதைப் போலத் தவித்தார்கள். தூரத்தில் நின்றுகொண்டிருந்த இன்னுமொரு உயரதிகாரிக்குத் தகவலனுப்பி அவரை வரவழைத்தார்கள். அதே கேள்விகளை அவரும் கேட்டார். ஏதேனும் ஆயுதங்களை அல்லது புத்தகங்களை நான் ஒளித்துவைத்திருக்கிறேனா என என் உடல் முழுதும் தடவிப்பார்த்தார். எனது கைபேசியை வாங்கி அதிலுள்ளவற்றைச் சோதனையிட்டார்.
இப்பொழுது சோதனையிடப்பட்டு சந்தேகங்களில் சிக்காத பயணிகள் பஸ்ஸினுள் அமர்ந்து எனக்காகக் காத்திருக்க ஆரம்பித்தார்கள். வெக்கையான காலநிலை கிளப்பிய வியர்வையாலோ, பசியாலோ உள்ளிருந்த குழந்தைகளின் அழுகைச் சத்தங்கள் வெளியெங்கும் பரவ ஆரம்பித்திருந்த இருளோடு அலைந்தன. பஸ் சாரதியும், கண்டக்டரும் பஸ் வாயிலருகில் நின்றவாறு எனக்காகக் காத்துக்கொண்டிருந்தனர்.
அதிகாரிகளது அடுத்த கேள்விகள் கண்டக்டரை அழைத்து அவரை நோக்கி ஏவப்பட்டன. நான் எங்கிருந்து ஏறினேன்? என்னை அவருக்கு முன்பே தெரியுமா? போன்ற இன்னும் பல கேள்விகள். அவன் சொன்ன பதில்களும் எனது பதில்களும் ஒன்றுக்கொன்று சரியாகிப் போனதில் சிறு திருப்தி ஏற்பட்டிருக்கவேண்டும். எனது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், ஐ.டி. கார்ட் நம்பர் எல்லாம் எழுதி வாங்கிக்கொண்டு போகச் சொன்னார்கள்.
“மகே பொத் டிக – எனது புத்தகங்கள்?” எனக் கேட்டபடி நான் அங்கேயே நின்றிருந்தேன். எனது புத்தகப்பை அவர்களது காவலரணில் ஒரு அமைதியான செல்லப்பிராணியைப் போல அல்லது இரை விழுங்கிய மலைப்பாம்பினைப் போல மூலையில் கிடந்தது.
“அவற்றை வீட்டுக்கு அனுப்பிவைக்கிறோம்.”
“ஐயோ அவங்க சொல்றப்பவே வாங்க..புத்தகங்கள பிறகு பார்த்துக்கொள்ளலாம்..”- கண்டக்டர் எனது கைப்பிடித்து இழுத்தபடி கெஞ்சிய குரலில் சொல்லிக் கொண்டிருந்தார்.
இறுதியில் பொக்கிஷங்களென அதிக நாட்கள் பட்டியலிட்டுக் காத்திருந்து தேர்ந்தெடுத்து வாங்கிய எல்லாப் புத்தகங்களும் அக் கடற்கரைத் தடுப்புச்சாவடியோடு என்னிடமிருந்து விடைபெற்றன. இப்படியாக அந்த அதிகாரிகளுக்கு பல விதப் பதற்றங்களை ஏற்படுத்திய ஆனந்த விகடன்களும், ஆயிரத்தொரு இரவுகளும், அக் கறுப்புப்பையை நிரப்பிய மற்ற புத்தகங்களும் இன்று வரை எனக்கு வந்துசேரவில்லை. கடலின் ஆழத்துக்குள் அழிந்தோ, எரிந்த யாழ்ப்பாண நூலகத்தை மீண்டும் நினைவுபடுத்துவது போலப் பற்றியெரிந்தோ அல்லது தாண்டி வந்திருக்கும் ஆயிரத்தொரு இரவுகளுக்கும் மேற்பட்ட இரவுகளில் தினமொரு கதையெனப் பேசியபடி அதிகாரக் கட்டிடங்களின் ஏதேனுமொரு மூலையில் கிடக்கின்றனவோ…
தெரியவில்லை !
*
நன்றி : எம்.ரிஷான் ஷெரீப்