பாவம் சத்தார் பாய்! – ‘நாடோடித் தட’த்திலிருந்து…

இனிய தீபாவளி வாழ்த்துகள்! ‘நம்பிக்கை நாடோடி’ அத்தியாயத்திலிருந்து (பக் : 96-98) , நன்றியுடன் பதிவிடுகிறேன்.
**
Nadoodithadam__rajasundararajan’பாபத்தின் சம்பளம் மரணம்; நம் எல்லாருடைய பாபங்களுக்காகவும் சிலுவையில் மரித்தவர் இயேசு.’ இது கிறிஸ்துவம். ‘யார் பாபத்துக்காகவும் யாரும் மரிக்க முடியாது; அவரவர் பாபத்துக்கு அவரவர்தான் மரித்தாக வேண்டும்’. இது இஸ்லாம்.

நான் இயேசுவை நயந்ததில் வியப்பொன்றும் இல்லை என்பதுபோல் தோன்றுகிறது அல்லவா? செய்ய விரும்பியதை எல்லாம் செய்துவிட்டு, இயேசுவுக்குள் ஒன்றினால் தீர்ந்ததுதானே? காந்தி மகாத்மா கூட தென் ஆப்பிரிக்கக் கிறிஸ்தவர்கள் கூற்றை இவ்வாறு புரிந்துகொண்டு
அவர்கள் போதனையை ஒதுக்கியதாக அவர்தம் சுயசரிதையில் வருகிறது. இந்துக்களிடமும் இப்படி ஒரு நம்பிக்கை உண்டு. மாகாப் பாபி அஜமிலா தன்னை யமதூதர்கள் அணுகிய வேளை, நடுங்குற்று, தன் அருகிருத்திக் கொள்ள, ‘நாராயணா’ என்று தன் மகனை விளித்தானாம்.. மகனைத்தான் விளித்தான். ஆனால் அந்த நான்கெழுத்து மந்திரம் யமதூதர்கள் கையிலிருந்து அவனைக் காப்பாற்றி விட்டதாம் (பாகவதம், ஸ்கந்தம் 6). ஹிந்துக்கள் பிள்ளைகளுக்கு கடவுள் பெயர் இடுகிறதின் காரணம் இதுவாகலாம். ஆனால் மனந்திரும்புதல் என்பது அதுவாகாது. இஸ்லாத்தை எடுத்துக் கொண்டோமானால், ‘ஆவி பிரிகையில் அல்லாஹ் எனக் கூவிப் பாவம் தொலையாது, செயல்பாடு வாய்ப்பிலையால்’ (திருக்குர்ஆன் 4:17-18) என்று அடித்துக் கூறுகிறது. நம்பிக்கையை வற்புறுத்துவது போலத் தோற்றம் தந்தாலும் இஸ்லாம் ஒரு நம்பிக்கைச் சமயம் அன்று; செயற்பாட்டுச் சமயம் (அதனால்தானோ என்னவோ இஸ்லாமியர்கள் அமெரிக்கக் கல்லை எடுத்துத் தங்களை தாங்களே அடித்துக் கொள்கிறார்கள்? ஈராக் X குவைத், சவுதி; ஆஃப்கானிஸ்தான் X பாகிஸ்தான்.)

சத்தார் என்றொரு முஸ்லீம் நண்பர் இருந்தார். மதுரைக்காரர். என்னைப்போலவே பணிமாற்றம் செய்யப்பட்டு எங்கள் வடோதரா அலுவலகம் வந்திருந்தார். நான் இந்துவாய் இருந்து கிறிஸ்துவனாய் மாறிவிட்டதாய் எண்ணிக்கொண்டார் போலும். எனவே  என்னை  இஸ்லாத்துக்கு மாற்றிவிடலாம் என்று முயற்சியில் இறங்கினார். கிறிஸ்துவத்தைக் குறைகூறி பரூச் நகர் பிறந்த ஓர் இஸ்மாமியர் எழுதியிருந்த புத்தகங்களைக் கொணர்ந்து வாசிக்கக் கொடுத்தார். அவ்வெழுத்துக்கள், மூல மேற்கோள் காட்டாமல் புத்தக் கொள்கையைப் பகுத்தாய்கிற ஆதிசங்கரர் அரசியல் போல் நகைப்பூட்டுவனவாய் இருந்தன.

இவ்வாறிருக்க, ஒருநாள் ஓர் இமாமை நான் வந்து சந்திக்க வேண்டும் என்றார். அதற்கு முன் எனக்குள்ள ஐயப்பாட்டை அந்த இமாமை வினவி விளக்கும்படி அவரைக் கேட்டுக்கொண்டேன். ”முதலில் தோரா( பழைய ஏற்பாடு) தந்தோம். பிறகு இன்ஜீல் (புதிய ஏற்பாடு) தந்தோம். அவற்றைப் புரிந்துகொண்டு திருத்திவிட்டார்கள். இப்போது இதற்கு (திருக்குர்ஆனுக்கு) நாம் காவலாயிருக்கிறோம் (அல்-ஹிஜ்ர் 15:9, அல்-பகாரா 2:75) என்று சொல்லப்பட்டிருக்கிறதே. திருத்தமுடியாதபடி முதலிலேயே அல்லாஹ் தன் வேதத்தை இறக்கியிருக்கக்கூடாதா? தவறுகளால் தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டிய நிலமை அவருக்குமா?” என்றேன். அத்தோடு சத்தார் என்னை மதப்பேச்சால் அணுகியதில்லை.

ஓரொரு சமயமும் தான் உரைப்பதே உண்மை; பிற பொய் என்று நம்புகிறது.

***

ra-su1

நன்றி : தமிழினி , ராஜ சுந்தரராஜன்