‘இக்’ வச்சுத்தான் எழுதுவார் இஜட். ஜபருல்லா. ”இக்’ வச்சி பேசுறது’ என்றால் மறைமுகமாகச் சொல்வது. ‘ஆபிதீனுக்கு ரெண்டுமே பெருசு’ என்று கிண்டல் மன்னன் ரூமி வெடைக்கிறாரா? ‘இக்’வச்சி சொல்றாருண்டு அர்த்தம். உண்மையில், எனக்கு ரெண்டுமே சின்னது! ரூமியின் ‘விக்கி’ புகைப்படம் பார்த்து , ‘ஓய்… அறிவாளி மாதிரியே இக்கிறியும்ங்கனி..’ என்கிறேனா? ‘இக்’!. சரி, எங்கள் ஜபருல்லாநானா அண்மையில் சொன்ன இரண்டு கவிதைகளுள் ஒன்றின் தலைப்பு (வாழ்)க்(கை). ‘இப்படித்தான் போடனுமா நானா?’ ‘ஆமாங்கனி, ‘வாழ்’-உக்கும் ‘கை’க்கும் இடையில ஒரு ‘க்’ இக்கினும்’. ‘இ’க்’கிம் நானா’.
ஆன்மீகத் தென்றல் அண்ணன் ஜபருல்லாவின் கவிதையோடு புதுக்கவிதைப் புயல் தம்பி ராஜா சந்திரசேகரின் கவிதையையும் கீழே தந்திருக்கிறேன், எது காற்று என்று சட்டென்று நான் புரிந்து கொள்வதற்காக. ஜபருல்லாவின் கவிதைகள் பற்றி ‘எழுது எழுது’ என்று என்னைப் பிறாண்டும் தாஜ் வேடிக்கையாக ஒருமுறை எழுதினார்:
‘ஜபருல்லா நானாவின் கவிதை என்பது
அவர் இன்னொருத்தரோடு…
ரோட்டில் நடக்கிறபோதோ
சாப்பிடும்போதோ
அரைத் தூக்கத்தின்போதோ
அவர் சொல்லும் படியான சுலபத்திலும்
கேட்பவனுக்கு சட்டென புரியும் படியான அழகிலும்
அமைப்பு வகையினைக் கொண்ட தமிழ் திரட்டு!
கேட்பவனின் வியப்பு செய்யும் தொனியும்
அவன் உடன் பங்கேற்கும் மும்முரமும்தான்…
அவர் கவிதை அவருக்கு
மகத்துவமாகும் தருணம்!
நம் பார்வையில்…
கவிதையில் இந்த நிலை இல்லாமல்
உச்சமில்லை.
கவிதையைத் தேடுபவன் எவனும்
இப்படியான படிகளை
மிதித்தேறிதான்
மேலே போயாக வேண்டும்.
அப்படித்தான் போகவும் முடியும்!
மாற்றே இல்லை!
ஜபருல்லா நானாவின்
கவிதைகள்
நமக்கில்லாவிட்டாலும்
கவிதைகளுக்கு தேவை’
**
இனி ஜபருல்லாவின் புதிய கவிதைகள். இரண்டுக்கும் சேர்த்து – பதிவின் தலைப்பாக – ‘விரல் கவிதைகள்’ என்றே தலைப்பிடச் சொன்னார். விரலறிய அது உண்மை.
(வாழ்)க்(கை)
கட்டை விரலுக்கும்
சின்ன விரலுக்கும்
நடுவேதான்
எல்லா விரல்களும்.
வாழ்க்கையும் அப்படித்தான் –
குழந்தைத்தனத்திற்கும்
வயோதிகத்திற்கும்
நடுவே.
ஆறாவது அறிவு
ஆறாவது விரல்
அதிகமாக
சின்ன விரலோடுதான்
சேர்ந்திருக்கும்
இறைவனும்
அப்படித்தான்.
**
ராஜா சந்திரசேகரின் கவிதை :
உடல் திமிர
கை நீட்டி உங்களை
குற்றம் சொல்லும்
என் விரல் நுனியில்
தொங்கிக் கொண்டிருக்கிறேன் நான்
உங்களுக்குத் தெரியாத
ஒரு குற்றமாக
அல்லது
குற்றவாளியாக
**
நன்றி : இஜட். ஜபருல்லா, தாஜ், ராஜா சந்திரசேகர்
**
பார்க்க : ஜபருல்லாவும் ரஸகுல்லாவும் – அப்துல் கய்யூம்