Shashwati Mandal

சொக்கவைத்த யுவன் சந்திரசேகரின் ‘நினைவுதிர் காலம்’ நாவலில், ‘உங்களுக்குப் பிடித்த இளைய தலைமுறைக் கலைஞர்கள் யார்?’ என்ற கேள்விக்கு இசைக்கலைஞர் ஸ்ரீ ஹரிசங்கர் தீட்சித் இவளைக் (தப்போ? சரி இவரை!) குறிப்பிடுகிறார். ‘சாஷ்வத் மண்டல் அபூர்வமான பாடகி. லேசாக ஆண்மையும், ரகசியமும் கொண்ட குரல். உலுக்கியெடுத்துவிட்டாள். ஏனோ அவள் பெயரை நான் அதிகம் கேள்விப்படுவதில்லை’ என்கிறார் (P.253). எனக்கும் அவர் சொல்லித்தான் தெரியும். கேட்டு அசந்துவிட்டேன். யூட்யூபில் தொடர்ந்து கேட்டு, ‘ Shashwati Mandal பாடுறத கேட்டு கள்ளு குடிச்ச கொரங்கு மாதிரி ஆயிட்டேன் புள்ளே… ‘ என்று அஸ்மாவிடம் காலையில் சொன்னேன். ‘கொரங்கு கொரங்காத்தானே ஆவும்’ என்றாள் தீர்மானமாக! ஒரு சாம்பிள் நீங்களும் கேட்டுப்பாருங்களேன். நண்டி!

Shashwati Mandal performs Raag Poorvi

*

Thanks to First Edition Arts Channel

நினைவுதிர் காலம் (P.180): ‘நாத சம்மான்’ விருதுத் தொகையைச் சரிபாதியாகப் பிரித்து, ராவல்பிண்டியிலுள்ள ஹஸ்ரத் பாரி இமாம் தர்ஹாவுக்கும் பனாரஸின் விஸ்வநாதர் கோயிலுக்கும் வழங்கிய தீன் சகோதரர்களில் மூத்தவரான கியாஸூத்தீன் சாஹேப் சொன்னது :

நாங்கள் அர்ப்பணிக்கும் இசையை ஏற்கும் இறைவன் நிஜமாகவே அருவமானவன். அவன் எங்களையும் அறிவான், எங்கள் கைகளைப் பிரிக்கும் கயிறுகளையும் அறிவான்… அறுத்தெறிந்து விடுவிக்க ஒரு கணம் போதும் அவனுக்கு…
—-
நன்றி : யுவன் சந்திரசேகர்.

 

இசை என்ற புலத்தின் கேள்விகள் – யுவன் சந்திரசேகர்

லால்குடியை விட அம்ஜத் அலிகான் வாசிப்பு பிடிச்சிருந்தது என்று முடியும் யுவன் சந்திரசேகரின் ‘கானல் நதி’ பின்னுரையிலிருந்து… –  அநியாயமாக அலட்டிக்கொள்ளும் என்போன்ற அசடுகளுக்காக…

***

.. இசை கேட்பது வேறு; கேட்பதால் கிடைக்கும் அனுபவத்தை எழுத்துக்குள் கொண்டுவருவது வேறு. வெறும் கேள்வி ஞானம் கொண்டு இசையின் அந்தரங்கம் பற்றி எழுத முயலும்போது தவிர்க்கவியலாமல் ஒரு ரொமாண்டிக் பார்வை தூக்கலாகப் படிந்துவிடும் வாய்ப்பிருக்கிறது. இந்த நாவலிலும் தழுதழுப்பின் அழுத்தம் சற்று அதிகமாக இருக்கிறதோ என்று தோன்றத்தான் செய்கிறது. இசையின், அதிலும் ஹிந்துஸ்தானி, இசையின் நுட்பங்கள் எனக்கு அவ்வளவாகத் தெரியாது என்பதாலோ என்னவோ.

என்றாலும் எழுதும்போதும், எழுதி முடித்தபின்னும் கேள்விகள் ஊறுவது ஓயாமல் நிகழ்கிறது. என்னுடைய கேள்விகள் மட்டுமல்ல; இசை என்ற புலத்தின் கேள்விகள்.

இசையின் நுகர்முனையில் இருந்து நான் கொள்ளும் அனுபவமும் அதை சிருஷ்டிக்கும் இளைஞனின் அனுபவமும் ஒன்றேதானா? நான் சப்த ரூபமாகக் கேட்டு ஆனந்திக்கும் ஒலிக்கோவை அவ்வாறு வெளிப்படுவதற்கு முன்னால் இசைஞனுக்குள் என்ன வடிவத்தில் இருக்கும்? அதை அவன் எங்கிருந்து தோண்டியெடுக்கிறான்? வெறும் ஞாபகத்தின் மூலம் இத்தனை அபாரமான நுண்தளத்தைத் தமக்குள் பத்திரப்படுத்திக்கொள்ள முடியுமா? எனக்கு ஒலியாக இருப்பது அவர்களுக்கு காட்சியாக இருக்குமோ, ஒருவேளை?

சாஸ்திரிய சங்கீதம் கேட்பதை வெறும் பூர்வீக ஞாபகம் என்று சொல்கிற ஒரு தரப்பும் இருக்கிறது. அப்படியானால், இசை கிளர்த்தும் ஞாபக அடுக்கு எந்தக் காலகட்டம் சார்ந்தது?

மேற்கத்திய இசை மரபுகளிலும், ராக், ஜாஸ் போன்ற மேற்கத்திய நாட்ட்டுப்புற மரபுகளிலும் உள்ள தறிகெட்ட பாய்ச்சலும் உன்மத்தமும் இந்திய சங்கீதத்தில் இல்லையா?

நான் பிறப்பதற்கு முன்பே இறந்துபோன இசைக்கலைஞர்கள் பலரிடமும் இப்போது எனக்குள் இருக்கும் அந்நியோன்யம் எத்தகையது? அவர்கள் எனக்குள் படிய வைக்கும் வாஞ்சையின் தன்மை எத்தகையது? எல்லாருக்காகவும் பாடும் ஒருவன் எனக்காகப் பிரத்தியேகமாக நிகழ்த்துவதுதான் என்ன?

இசையை எதற்காகக் கேட்க வேண்டும்? சிந்தனையைக் கிளர்த்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் ஆற்றுப்படுத்துவதற்கும் இலக்கியம் உதவுகிறது என்றால், இசையின் பணி என்ன? சிந்தனையை தற்காலிகமாக மழுங்கச் செய்வதா?

சிந்தனை ஓய்ந்த மனத்தில் இசை கிளர்த்தும் அனுபவத்துக்குப் பெயர் என்ன? ஒருங்கிணைக்கப்பட்ட இசைவடிவத்தில் சுதந்திரமாகத் திரியும் இசைஞன் எனக்குள் உருவாக்கும் கட்டற்ற நிலையை உத்தேசித்துத்தான் திரும்பத் திரும்ப அவனிடம் போய்ச் சேர்கிறேனா?

மீண்டும் மீண்டும் பலமுறை கேட்டதற்குப் பிறகும் ஒரு இசைக்கோவை புதிதாகவே இருக்கும் மர்மம் என்ன?

இசை பற்றிய அடிப்படை நுணுக்கங்களும் அடையாளங்களும் அறியாதவர்களின் இசையனுபவம் இன்னமும் ஆழமாய் இருக்குமோ?

***

நன்றி : யுவன் சந்திரசேகர், உயிர்மை

மா, இந்த இலை ஏன் கசப்பாய் இருக்கிறது?

யுவன் சந்திரசேகரின் ‘கானல் நதி’ யிலிருந்து சில வரிகளைப் பதிவிடுகிறேன். பஹ்ரைன் ஓவியர் அப்துல்லா அல்-முஹ்ராக்கியின் ஓவியத்தை (suffocation) பதிவின் அடியில் இணைத்திருக்கிறேன். இரண்டுக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள்தான் விளங்கிக்கொள்ள வேண்டும். – ஆபிதீன்

***

மா, இந்த இலை ஏன் கசப்பாய் இருக்கிறது?

அம்மா தனஞ்சயனைத் தன்னுடன் அணைத்துக்கொண்டாள்.

அதுவா..?

கொஞ்சநேரம் எதுவும் பேசாமல் இருந்தாள். அம்மாவின் வியர்வையில் கடுகெண்ணெயின் மணம் இருந்தது. பருத்த அவளது மார்புகளின் நடுவில் முகத்தைப் புதைத்துக் கொண்டான் தனஞ்சயன்.

சோட்டூ, நான் கல்யாணமாகி இந்த வீட்டுக்கு வந்தேனல்லவா?…

உடனிருந்து பார்த்த பாவத்துடன் ஆமாம் என்று தலையசைத்தான் தனஞ்சயன்.

.. வந்த மறுவாரம் இந்த வேப்பமரத்தை நட்டேன்.

ம்.

அப்போது இது குட்டிச் செடியாக இருந்தது, தனஞ்சய் மாதிரி.
கன்னத்தில் இன்னொரு முத்தம்.

ம்.

அம்மாவுக்கு மனசு சரியில்லாமல் போகும்போது, இந்த மரத்திடம்தான் வந்து சொல்லி ஆற்றிக்கொள்வேன்.

ம்.

நான் கொடுத்த கசப்பையெல்லாம் வாங்கி வைத்துக்கொண்டதில்லையா. அதைத்தான் இலைகளில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது.

***

***

நன்றி : யுவன் சந்திரசேகர் , உயிர்மை பதிப்பகம், அப்துல்லா அல்-முஹ்ராக்கி ,  Meem Gallery

23 காதல் கதைகள் – யுவன் சந்திரசேகர்

‘ஒளி விலகல்’ தொகுப்பிலிருந்து…

***

கதைகளைப் பற்றி…

நண்பரே, இத்துடன் இருபத்து மூன்று காதல் கதைகளை இணைத்திருக்கிறேன். நிதானமாகப் படியுங்கள். உங்கள் அபிப்ராயங்களை, முடிந்தால், எனக்கு எழுதி உதவுங்கள். என் முதல் கவிதைத் தொகுப்புக்கு நீங்கள் முன்வைத்த விமர்சனங்கள் அதற்குப் பிறகான என் கவிதைகள் எழுதப்படுவதற்கு உதவிகரமாய் இருந்தன. உண்மையில் என் எழுத்து பற்றி எனக்குத் தீர்மானமான கோட்பாடு எதுவும் கிடையாது. எழுத்து பற்றியே தீர்மானமான முடிவுகள் என்னிடம் இருப்பதாக நான் நம்பவில்லை. நாள்தோறும் மாறிக் கொண்டேயிருக்கின்றன என் நம்பிக்கைகளும் விழைவுகளும். ஆதரிசமான கதைகள் வெளிறிப் போவதும் புரியாமல் இருந்தவை புரிந்து அகண்டாகாரமான அனுபவத்தைத் தருவதும் நடந்தவண்ணமிருக்கிறது.

உரைநடை எழுதுவது எனக்கு முதல் அனுபவம். தினசரியின் தேய்ந்த பாட்டையைப் புதுப்பிக்கும் விதமாக நபர்களும் நிகழ்வுகளும் இடங்களும் அனைத்துக்குமான என் எதிர்வினைகளும் தர்க்கங்களும் அ-தர்க்கங்களும் சூழ்ந்து தகவல்களைக் கவனமாய் களைந்து கவிதை எழுதுவது எனக்கு உவப்பான விஷயம். மேல் தளங்களில் தெரியக் கிடக்கும் முரண் நிலைகளுக்கு அடியில் இயங்கும் ஒத்திசைவை, சம நிலையைக் கேலிக்குரியதாக்கும் வகையில் உள்ளோடும் ஆதாரமான முரண்களைக் கவிதையில் நிகழ்த்திக் காட்டுவது எந்த அளவுக்குச் சவாலோ அதே அளவு சுவாரஸ்யமாகவும் இருந்தது. உடனடித் தகவல்களத் தொடர்ந்து நிராகரிப்பதன் மூலம் கவிதையின் சுயத்தன்மை செறிவு பெறுவதையும் அறிய முடிந்தது.

கதை எழுத முனையும் போது தகவல்கள் பாய்ந்து குவிகின்றன. என்னையும்  எழுது என்று விண்ணப்பித்தபடி வரிசையில் வந்து நின்று மன்றாடுகின்றன. எழுதக் கூடாதது, எழுத்தின் ஒட்டு மொத்த மைதியைக் குலைக்கக்கூடியது என்று ஒரு அம்சத்தையும் சுட்டிக் காட்ட முடிவதில்லை. எல்லாமே எழுதப்படுவதற்கான பெறுமானத்துடன் இருக்கின்றன.

ஒரு அர்த்தத்தில், இக் கதைகளை நான் எழுத நேர்ந்ததும் இவற்றைச் சுற்றுக்கு விடுவதும் அவர்களுக்கு நான் செய்யும் நம்பிக்கைத் துரோகம். அனுபவ நெருக்கம் கருதி நான் உபயோகித்த அவர்களின் அசல் பெயர்களைத் திருத்திய பிரதியில் கவனமாக மாற்றிவிடுவேன், என்றபோது. ஒருநாளும் வெளிவரமாட்டா என்ற நம்பிக்கையிலேயே அவர்கள் என்ன்னை முத்தமிட்டனர், காறியுமிழ்ந்தனர். தன் உடல்களின் கன பரிமானங்களை என் ஆளுகைக்கு உட்படுத்தி, என் அந்தரங்களைத் தாம் உணர்ந்து கொண்டனர்.

ஆனால், எனக்கு வேறு வழியில்லை. என்னுள் சதா கனன்று முதிர்வின் பாதையில் நகர்வதற்கான என் சுதந்திரத்தைக் கேலி செய்யும் இந்த ஞாபகங்களைப் பொதுவாக்குவதன் மூலம் நான் தப்பிக்கும் வழி ஒன்று திறக்கக்கூடும் . எனினும், உங்கள் வாலிபப் பிராயத்தின் பொருக்குத் தட்டிய ஓரிரு ரத்தக் காயங்களை இவற்றில் ஏதேனும் திறக்கக்கூடுமானால் என்னை மன்னித்துவிடுங்கள். அவ்வாறு மன்னித்த, மன்னிக்க மறுத்த நண்பர்களில் இரு பட்டியல்கள் என்னிடம் இருக்கின்றன. எந்தப் பட்டியலில் இடம் பெறுவது என்பது உங்கள் தேர்வு. படித்து முடித்தபின் பிரதியை ஞாபகமாகத் திருப்பி அனுப்புங்கள் தயவு செய்து. ஏனெனில் இவை என் கதைகள்.

மற்றபடி, நீங்களும் இன்னும் மற்ற நண்பர்களும் சொல்லும் அபிப்ராயங்களைத் தொகுத்தே இவற்றைப் பிரசுரிப்பது/பிரசுரிக்காமல் அழிப்பது பற்றி நான் முடிவு செய்ய வேண்டும்.

வீட்டில் அனைவரும் நலம்தானே?

உங்கள்

கிருஷ்ணன்.

*

நன்றி : யுவன் சந்திரசேகர், காலச்சுவடு, ஆரண்யம்

*

தொடர்புடைய சுட்டி :

தற்காலத் தமிழ்ப் புனைகதையின் இன்றைய நிலை – பிரம்மராஜன்

« Older entries