உப்பூறிய நெல்லிக்காய் (கவிதை) – முபாரக்

அற்புதமாக எழுதும் முபாரக்கின் ‘க இ கொ க இ’ கவிதைகள் (அப்படித்தான் சொன்னார். ஹைக்கூ போல இதுவொரு வடிவமென நினைக்கிறேன். ‘கண்டால் இழுத்துப்போட்டு கொல்லும் கவிதைகள் இவை’யென்றும் இருக்கலாம்.) விரைவில் நூலாக வரவிருக்கின்றன. இஸ்லாத்தில் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு இருக்கிறது – முஸ்லிம்களின் பிரச்சனைகள் தவிர (அப்படித்தான் அவர்கள் நடந்து கொள்கிறார்கள்) என்று இலேசான கோபத்துடன் முன்பெல்லாம் எழுதிக்கொண்டி ருந்தவர் இப்போது திருந்திவிட்டார். அதிகமான கோபத்துடன் எழுதுகிறார். அடிவாங்குவதற்காகத்தான் இருக்கும். சும்மா வேடிக்கையாகச் சொன்னேன். பெருமானாரின் பொன்மொழிகளை முபாரக் இப்போது விளக்கும் விதம் அவ்வளவு அறிவுபூர்வமாகவும் ஆழமாகவும் உள்ளது. இறைவனுக்கு நன்றி.

நெகிழ்ச்சியான அவருடைய ஒரு கவிதையை இங்கே பகிர்கிறேன். – AB
*

உப்பூறிய நெல்லிக்காய் (கவிதை) – முபாரக்

தனித்திருக்கும் அம்மாவைப் போலவே
தானும் முதுமைக்குப்
பயணிப்பதையறியாமல்

இறப்பிற்குப் பின்னான
சொர்க்கத்தினை வேண்டி
அல்லும் பகலும் அயராது உழைத்து
கடவுளின் புகழை கணிப்பொறியில்
பரப்பிக்கொண்டேயிருக்கிறான்

முதுமையில் தனித்திருக்கும் அம்மாவின்
செலவுக்கனுப்பும் தொகையை குறைப்பதற்கு
உயர்த்தப்பட்ட வீட்டு வாடகை
பிள்ளையின் கல்லூரிப்படிப்பென
காரணம் தேடிக்கொண்டிருக்கும்
மகனின் பதட்டத்தை அறியாமல்

தனித்து விடப்பட்ட துயரில்
நிரம்பி வழியும்
பாசத்தை உணர்த்தும் வழியறியாது
ஊரிலிருந்து யார் வந்தாலும்
தின்பதற்கென யாருமில்லாமல்
காய்த்துக் கொட்டும்
நெல்லிக்காயை உப்பூறவைத்து
பருவம் தவறாமல்
அனுப்பிக் கொண்டேயிருக்கிறாள்
அம்மா
*


நன்றி : முபாரக்
Photo : H. Abedeen