‘ஞானக்கூத்து’ நூலிலுள்ள ‘முதற்தீ எரிந்த காடு’ சிறுகதையில் இந்த உரையாடல் வருகிறது. வைத்தீஸ்வரன்கோயில் நண்பர் சாதிக்கிற்கு ரொம்பப் பிடித்தது. இந்தப் பத்திக்கு முன்பாக ‘அந்தக் கடவுளைக் கும்பிடாதே என்னைக் கும்பிடு அப்படின்னு ஒரு கடவுள் சொல்லும். கடவுளுக்கிருக்கிற கவலை அப்படி’ என்றொரு வரி – முத்துக்கறுப்பன் சொல்வதாக – வருமே என்றேன் ஞாபகமாக. ஆமாம்நாநா என்றார். பகிர்கிறேன். – AB
*
“சார் – ஒரு கருத்தரங்கத்திலே நண்பரொருவர் கேட்டார் – ரொம்ப நல்லாயிருந்தது. ஆபாசம் – ஆபாசம்னு சொல்லிக்கிட்டிருக்கீங்களே, கடவுளை விட எது ஆபாசம்? அப்படின்னு.”
“ஐயையோ.”
“அது கேள்வியில்லை சார் – பதிலுக்குப் பதில் – நினைச்சுப்பாருங்க – இந்த இடத்தையே பாருங்க. இதெல்லாம் இத்தனை குடியிருப்புக் கொண்டதாகவா இருந்திருக்கும். எல்லாம் வயல்களுக்கு மத்தியிலேயிருக்கும் பத்து பதினைஞ்சு குடியிருப்பாத்தானே இருந்திருக்கும். அதுக்கு முன்னாலே இங்கே எத்தனை எத்தனை மிருகங்களை விரட்டியிருக்கணும் – எத்தனை தடவை அதுக எல்லாம் இடத்தை மறக்காம வந்து திரும்ப திரும்ப சுத்தியிருக்கணும். அதுகளின் பொந்தும் புதரும் எத்தனை தீயில் பொசுங்கிப் போயிருக்கும். அதுக திரும்பவும் இங்க வந்தா விரட்டலாம். அல்லது வரக்கூடிய நேரத்தைத் தெரிஞ்சுக்கிட்டு தீயைக் கொளுத்தி மேளத்தைக் கொட்டி பயமுறுத்தலாம். அதெல்லாம் செய்து மறந்தும் போச்சு – மேளம் கொட்டற நேரத்தை மட்டும் மறக்காம கொட்டறோம். மிருகங்கள் இல்லே இப்போ – எல்லாம் மாறிப் போச்சு – மறந்து போச்சு – இன்னொண்ணு – மறக்காமலிருந்தா அடிபடுவே அப்படின்னு சொன்னான் ஒருத்தன் – அவன் பலசாலி. மத்தவங்க பணிஞ்சாகணும் – இனிமே தீயை வயல் வெளிலே மூட்ட வேண்டாம் நிரந்தரமா என்னுடைய இடத்திலேயே வைச்சுடலாம் – நீங்க வந்து கும்பிடலாம் அப்படிண்ணும் சொன்னான் – நல்லதுதானே – கும்பிடு போட்டுக்கிட்டேயிருந்தா நெல் விளையாது – வேலை நடக்கணும் – பயிர் உண்டாகணும் – வேலையைப் பாருங்க அப்படின்னான். இந்த இடம் அப்படி உண்டாச்சுது மிருகங்களும் இந்த இடத்தில் குறைஞ்சு போச்சு. சிலது வேறே இடத்துக்கு ஓடிப் போச்சு. அங்கேயும் தீ இருக்கும் – நேரத்திற்கு மேளம் கேட்கும் – இந்த மாதிரி இடமும் உண்டாகும்.”
*
நன்றி : http://www.maaranganathan.com/