‘மாஸ்தி’யின் வெல்லம்

‘வெல்லம்னு இப்பவெல்லாம் பேச்சு வந்தாலே மாஸ்தி நினைவுதான் வருகிறது’ என்பாராம் எஸ்.பொ. அவ்வளவு
அருமையான விசயம். ‘தளம்’ இதழ் 9-ல் வெளியான ஒரு கட்டுரையிலிருந்து மாஸ்தி வெங்கடேச ஐயங்காரின் அந்த சுயசரிதைப் பகுதியை பகிர்கிறேன்.
*

Masti Venkatesha Iyengar3ஒருமுறை வெல்லம் காய்ச்சும் பருவத்தில், என்னுடைய பாட்டனார் என்னை ஓர் அளிமனைக்கு (வெல்லம்
காய்ச்சும் கொட்டகை) கூட்டிச் சென்றார். முன்பே சில முறை நான் என் தோழர்களோடும், மாமனோடும் அங்கு
சென்றதுண்டு. வேண்டிய மட்டும் கரும்புச் சாறை இலவசமாகக் கேட்டு வாங்கிப் பருகலாம். ஆனால் அங்கேயே இருந்து பருக வேண்டும். அரிதாக, சில சமயம் பெரியவர்கள் சிறு பாத்திரங்களில் சாற்றை நிரப்பி வீட்டுக்கு எடுத்துச் செல்வதுண்டு. விநயமாகக் கேட்டுக்கொண்டால், உரிமையாளர் விருப்பப்படி, புதிய வெல்லக் கட்டியும் கிடைக்கும். மணக்க, மணக்க ஒரு சிறு ஆரஞ்சுப் பழ அளவுக்கு.

என் பாட்டனார் அன்று பாத்திரம் எடுத்து வரவில்லை. அளிமனையில் “குழந்தை கையில் ஒரு வெல்லக் கட்டி
கொடுங்கள்”என்று வேண்டுகோள் மட்டும் விடுத்தார். குழந்தைக்காக என்று கேட்டதால், சிறிய கட்டியே
கிடைத்தது. மாலை மயங்கும் வேளை, பாட்டனார் கிராமத்தை நோக்கி நடந்தார். பின்னாலேயே நான், சிறிது
சிறிதாக வெல்லத்தைக் கடித்துச் சுவைத்தபடி.

கிராமத்தருகே இருந்த குளத்து உவர் நீரில் கைகால்களை அலம்பிக் கொண்டு, மாலை வழிபாட்டை முடித்துக்
கொண்ட பாட்டனார் என்னருகே வந்து மெல்லக் கேட்டார்: ‘வெல்லக் கட்டி எங்கே, எடு’.

‘எல்லாத்தையும் சாப்பிட்டு விட்டேனே’ என்றேன் நான் விழித்தபடி.

பாட்டனார் பதறினார்: ‘ஏலா, ஏலா எல்லாத்தையுமா முழுங்கிப்புட்டே?’

கூடவே இன்னொரு சொல்லையும் உதிர்த்தார். கெட்ட வார்த்தையென்றும் சொல்ல முடியாது, கோபமான
வார்த்தையும் இல்லை. கொஞ்சம் வேடிக்கையானது, ஆனால் இங்கே எழுதுவதற்குச் சற்று கொச்சையானது.
அதைச் சொல்லி பாட்டனார் உரக்கச் சிரித்தார். ‘சரி, சரி, போகலாம் வா’. நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம்.

எனது சிறு வயதில் நடந்த சம்பவங்களில் இது என்னை மிகவும் பாதித்தது. ஒரு பேரன் மூலம் பாட்டனாருக்கு
வருத்தம் நேரிட வாய்ப்புள்ளது என்பதே என்னால் கற்பனை செய்ய முடியாத ஒன்று. வளர்ந்த பின் உணர்ந்தேன் பாட்டனாருக்கு அன்று வெல்லக் கட்டி சாப்பிட ஆசை எழுந்து விட்டிருந்தது, என்னால் அது கெடுக்கப்பட்டு விட்டது என்பதை.

இந்த உண்மை உறைத்தபோது, பாட்டனாரோ அல்லது அந்த வெல்லக் கொட்டைகையோ என்னருகில் இல்லை.
பாட்டனார் காலம் முடிந்துவிட்டிருந்தது. நிவர்த்திக்க முடியாமல் போன தவறு தருவித்த வருத்தத்தை
இன்னமும் நான் சுமந்து கொண்டிருக்கிறேன். வெல்லம் காய்ச்சப்படும் ஒவ்வொரு பருவத்திலும் இச்சம்பவத்தை
நினைத்துக் கொள்வேன். புதிய வெல்லத்தின் சுவை ஈடு இணையற்றதுதான். ஆனால் கொட்டகை அருகில் போக
என் மனம் விழைவதில்லை. பாட்டனாருக்கும் கால கதியில் இந்த பற்றற்ற நிலை கிட்டியிருக்கக்கூடும்.
இருந்தாலும் இழப்பின் பாரத்தை சுமந்த என் மனம் அத்தகைய சமாதானங்களை ஏற்கும் நிலையில் இல்லை.

*
நன்றி : ‘தளம்’ இலக்கிய இதழ், வீ. விஜயராகவன்.