தாஜ் குறிப்புகள் :
திசைகள் , இந்தியா டுடே , தினமணி போன்ற சஞ்சிகைகளில் ஆசிரியராக இருந்து, இன்றைக்கு ‘புதிய தலைமுறை’ என்கிற புத்தி ஜீவிதமான இதழ் ஒன்றுக்கு ஆசிரியராக இருக்கும் திரு. மாலன் அவர்களது எழுத்தின் எளிமையில் எனக்கு எப்பவும் ஈர்ப்புண்டு. தவிர, வண்டி வண்டியான விசயத்தைக் கூட இரண்டு பக்க அளவில் தெளிவுடன் கூற வல்லவர் அவர். அவரது பார்வையில் காழ்ப்புணர்ச்சியைப் பார்ப்பது அரிது. என்றாலும், முற்றாய் அது இல்லை என்றும் சொல்லிவிட முடியாது.
இந்தக் கட்டுரை, மாலன் அவர்களின் குறிப்பிடத் தகுந்த நேர்த்திகள் கொண்டது. பெரியதோர் விசயத்தை கையடக்கமாக தந்திருக்கிறார். சில இடங்களில் ’லாஜிக்’ சரிவர பொருந்திப் போகவில்லையோ என்றும் தோன்றுகிறது. 2ஜி வழக்கில் ஆ.ராசாவும் கனிமொழியும் வெவ்வேறு முகாந்தரங்களின் அடிப்படையில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவர்கள். மாலன் எழுதி இருப்பதைப் பார்த்தால் கனிமொழி ராசாவிற்கு கீழ் துணை மந்திரியாக இருந்து, ஒரே ஊழல் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர் போல் எதிரொலிக்க எழுதி இருக்கிறார்.
2ஜி விவகாரம் வெடித்த நேரத்தில் நம் பிரதமர் , ராசா இந்த விவகாரத்தில் எந்த தவறும் செய்யவில்லை என்றுதான் சொன்னார். எதிர் கட்சிகள் மாதக் கணக்கில் பாராளுமன்றத்தை முடக்கிய போது, அவர் வாய் மூடிக் கொண்டார். இன்றைக்கு கோர்ட்டில் அதே தகவலை ராசா சொல்கிறபோது மாலன் அதனை வேறு அர்த்தத்துடன் நோக்குகிறார்.
அது மாதிரியே, மத்தியில் ஜனநாயகக் கூட்டணி நடந்தபோது அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தவறு நடந்ததா? என்பதை விசாரிக்க இந்த வழக்கு தொடங்கிய நாளிலேயே உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டது. அது குறித்து இன்றையச் செய்திகளாக ‘அன்றைக்கு நிதிஅமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங், தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த அருண்ஷோரி ஆகியோரை விரைவில் சிபிஐயால் விசாரிக்கப்படுவார்கள்’ என்கிற போது, அதனை வேறு அர்த்தத்தில் பார்க்கிறார் மாலன்.
ஆளும் அரசை முடக்க, அரசியல் சங்கதிகள் கொண்டு எதிர்க் கட்சிகள் மறைமுகமாக காய் நகர்த்துவதை கண்டுகொள்ளாத மாலன் அவர்கள், ஆளும் காட்சி மறைமுக அரசியல் காய் நகர்த்தலை ஏதோ கூடாதது போல மாய்ந்து மாய்ந்து எழுதி இருக்கிறார்.
இந்த 2ஜி ஊழல் விவகாரத்தில் கை நனைத்த எவரையும் விடக் கூடாதுதான். அது போலவே காணாமல் போய்க்கொண்டிருக்கும் பல கட்சிகளின் பல ஊழல் சங்கதிகளையும் மாலன் விடவே கூடாது. இதே விசேச வீரியத்தோடு வீச்சாய் எழுத வேண்டும்.
***
மாலன் கட்டுரை :
பலவீனமாகும் 2ஜி வழக்கு யாரைக் காப்பாற்ற? – மாலன்
நாடு இன்னும் மறந்துவிடவில்லை.
ஆறு மாதங்களுக்கு முன் 2ஜி (இரண்டாம் தலைமுறை) அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஒரு கோடியே 76 லட்சம் ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு நாட்டை ஓர் உலுக்கு உலுக்கியது. காரணம், அந்தக் குற்றச்சாட்டை பொது அரங்கில் வைத்தது எதிர்க்கட்சிகள் அல்ல. ஊடகங்கள் அல்ல. அரசை விமர்சிக்கும் சமூக நல ஆர்வலர்கள் அல்ல. விக்கிலீக்ஸ் அல்ல. அந்தக் குற்றச்சாட்டை வெளியிட்டவர் தேர்தல் கமிஷன் போல அரசமைப்புச் சட்டத்தால் சுயாட்சி வழங்கப்பட்ட மத்திய கணக்கு மற்றும் தணிக்கை ஆணையர்(CAG).
அதையடுத்து அரசியல் அரங்கம் பரப்பரப்பானது. ஊடகங்கள் உரத்து முழங்கின. நாடாளுமன்றம் செயல்பட முடியாமல் நாள் கணக்கில் முடக்கப்பட்டது. தொலைத் தொடர்புத் துறைக்குப் பொறுப்பான மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது வழக்குத் தொடர பிரதமர் அனுமதி அளித்தார். ராசா ராஜினாமா செய்தார். மத்தியப் புலனாய்வுத் துறை விசாரணைக்கு உத்தரவாயிற்று. ராசா கைது செய்யப்பட்டு திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார். சாதிக் பாட்சா என்ற அவரது நண்பர் தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார். சதியில் கூட்டு என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கைது செய்யப்பட்டார். இந்தியாவின் முக்கியமான தொலைத் தொடர்பு நிறுவனங்களின் முதல் நிலை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டு அனைவரும் இன்னும் சிறையிலேயே இருக்கிறார்கள்.
இதையெல்லாம் இன்னும் நாடு மறந்து விடவில்லை. இதற்கெல்லாம் ஆதாரமான அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளால் அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டது என்பதையும் மறந்துவிடவில்லை. அதிலும் முக்கியமாக, அரசுக்கு இழப்பு ஏற்பட்டதே தவிர அரசியல்வாதிகள், அவர்களது நிறுவனங்கள் ஆதாயம் அடைந்தன என்பதை மக்கள் மறந்து விடவில்லை.
ஆனால்…
வரும் செப்டம்பரில் 15ம் தேதி சிபிஐ 2ஜி வழக்கில் இறுதிக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவிருக்கும் நேரத்தில், இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்கு ஆணையம் (டிராய்) ஓசைப்படாமல் ஒரு குண்டை வீசி இவை அனைத்தையும் அர்த்தமில்லாததாகச் செய்திருக்கிறது.
அது என்ன அணுகுண்டு?
‘அலைக்கற்றை உரிமம் வழங்கியதில் எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்று துல்லியமாகச் சொல்வதற்கில்லை’ என்கிறது டிராய். அது மட்டுமல்ல, ராசா அரசின் கொள்கைகளைத்தான் கடைப்பிடித்தார் என்றும் சொல்கிறது.
அப்படி நினைப்பதற்கான காரணங்கள் என்ன?
ஒருவர் குற்றம் புரிந்திருக்கிறார் என்பதைச் சட்டம் இரண்டு அம்சகளின் அடிப்படையில் தீர்மானிக்கிறது. குற்ற நோக்கம் (mens rea), குற்றச் செயல் (actus reua) என்பவை அந்த அம்சங்கள். இந்த இரண்டையும் சந்தேகத்திற்கு இடமில்லாத சாட்சியங்கள் மூலம் நிரூபித்தால்தான் சம்மந்தப்பட்டவர் குற்றம் புரிந்தார் எனக் கருதப்பட்டு தண்டனை அளிக்கப்படும். ராசா, அரசின் கொள்கைகளைத்தான் பின்பற்றினார் என்றால் அவருக்கு குற்ற நோக்கம் இல்லை என்று கருதப்பட வாய்ப்புண்டு. ஏனெனில் அவரது நோக்கம் அரசின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது. குற்றம் செய்வதல்ல. அப்படி நடைமுறைப்படுத்தியதன் காரணமாக அரசுக்கு இழப்பு ஏதும் இல்லை என்றால் அங்கே குற்றச் செயலும் நடைபெறவில்லை என்றுதான் கருதப்படும்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இதைத்தான் ராசா, தான் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். ராசா, மற்றும் கனிமொழியின் வழக்கறிஞர் சுஷீல் குமார் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி. சைனி முன் வைத்த வாதங்கள் இவை: 2ஜி அலைக்கற்றையை ஏலம் விட வேண்டாம் என்பது அரசின் கொள்கை முடிவு; அதனால்தான் ஏலம் விடவில்லை; எனவே ஏலம் விட்டிருந்தால் இவ்வளவு பணம் வந்திருக்கும், விடாவிட்டால் அது அரசுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. அவரது இன்னொரு வாதம்; அலைக்கற்றை உரிமம் பெற்ற ஸ்வான் டெலிகாம் பிரைவேட் லிமிட்டெட், யூனிடெக் வயர்லெஸ் (தமிழ்நாடு) பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனங்கள் தங்கள் உரிமங்களை விற்கவில்லை, தங்கள் நிறுவனங்களின் பங்குகளை அரசின் அனுமதி பெற்று அயல்நாட்டு நிறுவனங்களான எடிஸாலட், டெலினார் நிறுவனங்களுக்கு விற்று தங்கள் மூலதனத்தை விரிவுபடுத்திக் கொண்டன. இதில் சட்டப்படி எந்தத் தவறும் இல்லை.
ஏறத்தாழ இதே குரலில் பேசுகிறது டிராய். தவறேதும் நடக்கவில்லை, இழப்பேதும் ஏற்படவில்லை என்றால் அன்று ஏன் அரசு, ராசா மீது வழக்குத் தொடர அனுமதி கொடுத்தது? ஏன் அவரைப் பதவி விலகச் சொன்னது? அவர் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது? அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது? அவரது ஜாமீன் மனுவை எதிர்த்து வழக்காடியது? இதையெல்லாம் செய்த அரசு இப்போது ஏன் குரல் மாற்றிப் பேசுகிறது?
அதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் இன்னொரு செய்தியைக் கவனிக்க வேண்டும்.
ராசாவும் கனிமொழியும் ஏலம் விட வேண்டாம் என்ற முடிவை எடுத்தது நாங்களல்ல என்ற வாதத்தை மட்டும் வைக்கவில்லை. அதை எடுத்தது பிரதமரும் மற்ற அமைச்சர்களும்தான் என்று பிரதமரையும் வழக்கிற்குள் இழுத்தனர்.
“நான் உங்களுக்குக் காண்பிப்பது பிரதமர், அன்றைய நிதியமைச்சர் திரு.ப.சிதம்பரம், மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசா கலந்துகொண்ட கூட்டத்தின் நடவடிக்கைக் குறிப்பு (minutes) இந்தக் கூட்டத்தில் 2ஜி அலைக்கற்றையை ஏலம் விடவோ, விற்கவோ கூடாது என்று முடிவெடுக்கப்பட்டிருப்பதைப் பாருங்கள்” என்று நடவடிக்கைக் குறிப்பை நீதிபதி முன் வைக்கிறார் சுஷீல் குமார். “உரிமம் பெற்ற நிறுவனங்கள் தங்கள் பங்குகளை அயல்நாட்டு நிறுவனங்களுக்கு விற்கும் விஷயம் பிரதமருக்கும் நிதியமைச்சருக்கும் தெரியும். அன்றைய நிதி அமைச்சர், இன்றைய உள்துறை அமைச்சர், பங்குகளை விற்பது 2ஜி உரிமங்களை விற்பதாகாது என்று பிரதமரின் முன்னிலையில் கூறினார். முடிந்தால் இதை பிரதமர் மறுக்கட்டும்” என்று பகிரங்கமாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏதேனும் முறைகேடுகள் இருந்தால் அதை பிரதமர் ஒரு அமைச்சர் குழுவை அமைத்து விசாரித்திருக்கலாம். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை என்பது இன்னொரு வாதம்.
ராசாவும், கனிமொழியும் சிதம்பரத்தை இந்த வழக்கில் ஒரு சாட்சியாக விசாரிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
இதெல்லாம் நடந்தது ஆகஸ்ட் 23ம் தேதி. பிரதமர், சிதம்பரம், ஆகியோரது பெயர்கள் இழுக்கப்பட்டதற்கு ஒரு வாரத்திற்குப் பின் டிராய், அணுகுண்டைப் போடுகிறது.
டிராய் அறிக்கை வெளியான அதே செப்டம்பர் 1ம் தேதி சிபிஐயிடமிருந்து வேறு மூன்று தகவல்கள் வெளிவருகின்றன.
ஒன்று, உச்ச நீதிமன்றத்தில் 2ஜி அலைக்கற்றை வழக்கின் தற்போதைய நிலவரம் பற்றி அது தாக்கல் செய்த அறிக்கை. அதில் ஏர்செல் நிறுவனத்தை மாக்சிஸ் நிறுவனத்திற்கு விற்குமாறு தயாநிதி மாறன் வற்புறுத்தியதாகவோ, நெருக்கடி கொடுத்ததாகவோ எந்த ஆதாரமும் இல்லை எனச் சொல்லியிருக்கிறது.
மற்ற இரண்டு தகவல்களும் அலைக்கற்றை வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டவை அவை; அம்பானியோடு தொடர்புடையதாகச் சொல்லப்படும், உரிமம் பெற்ற நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ்-ஏடிஏஜிக்கு எந்தச் சதியிலும் பங்கில்லை என்பது ஒன்று. மற்றொன்று, அலக்கற்றை ஒதுக்கீட்டால் பலனடைந்ததாகக் கூறப்படும் யூடெக் நிறுவனம் லஞ்சம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பது.
லஞ்சம் கொடுக்கப்படவில்லை என்பது உண்மையானால் லஞ்சம் பெறப்படவில்லை என்பதும் உண்மையாகி விடுமல்லவா?
இவை எல்லாம் எதைக் காட்டுகிறது?
2ஜி வழக்கில் இன்று குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் பலர் எவ்விதத் தண்டணையும் இன்றி விரைவிலேயே வெளியில் வந்து விடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்பதைத்தான். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் 2ஜி வழக்கு தீபாவளிக்கு முன்னரே கூட புஸ்வாணமாகலாம்.
ஆனால், இன்னொரு புறம் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பு இருப்பதால், அரசு இந்த வழக்கில் தீவிரமாக இருப்பதுபோல் பாசாங்கு செய்துகொண்டிருக்கிறது. 2ஜி ஊழல் புகாரில் தொடர்புள்ள பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அன்னியச் செலவாணி விதிகளை மீறியிருப்பதாக அமலாக்கப் பிரிவு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. இதில் 200 வங்கிக் கணக்குகள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், ஆறு கம்பெனிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும், கள்ளப் பணத்தை ‘சலவை’ செய்வதைத் தடுக்கும் சட்டத்தின்கீழ் சொத்துக்களை முடக்கப்போவதாகவும் அது தெரிவிக்கிறது. சைப்ரஸ், சிங்கப்பூர், சானல் தீவுகள், மொரீஷியஸ், சுவிட்சர்லாந்து ஆகிய ஆகிய நாடுகளில் பணம் பதுக்க/ முதலீடு செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிவதாகவும் அது கூறியிருக்கிறது.
அதாவது, அரசின் ஒரு துறையான டிராய் முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்று சொல்கிறது. அதே நேரம் இன்னொரு அரசுத் துறையான அமலாக்கப் பிரிவு 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாகச் சொல்கிறது!
அன்னா ஹசாரேயின் அறப்போராட்டம் அரசுக்குப் பல விதங்களில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. கூச்சல் குழப்பங்களுக்கு நடுவே நாடாளுமன்றத்தில் நடந்துகொண்டிருந்த விவாதம், மக்கள் மன்றத்திற்கு வருவதற்கு அந்தப் போராட்டம் காரணமாயிற்று. அந்தப் போராட்டம் அத்தனை பெரிய அளவில் எழுச்சி பெற, ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார் குறித்த செய்திகள் மக்கள் மனதில் இருந்து ஒரு மறைமுகக் காரணம் என்று அரசியல் ஆய்வாளர்கள் சொல்லி வருகிறார்கள்.
ஸ்பெக்ட்ரம் வழக்கை ஒரு புறம் நீர்த்துப் போகச் செய்துகொண்டிருக்கும் வேளையில், அன்னா ஹசாரேவையும் கட்டுக்குள் வைக்க அரசு முனைந்திருக்கிறது. அவருக்கு வலதுகரமாக இருந்து போராட்டத்தை கட்டமைக்க உதவிய கிரண்பேடி, பிரசாந்த் பூஷன், அரவிந் கெஜரிவால் ஆகியோர் மீது நாடாளுமன்றத்தின் உரிமைகளை மீறியதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பற்றித் தரக்குறைவாகப் பேசியதாகப் புகார். உரிமை மீறல் நிகழ்த்தப்பட்டதா இல்லையா என்று முடிவு செய்வது நீதிமன்றம் அல்ல. நாடாளுமன்றம்தான். எனவே அந்த முடிவு என்னவாக இருந்தாலும் அவர்கள் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது.
இன்னொரு புறம் தன் மகன் பிரசாந்த் பூஷன் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரை விலைக்கு வாங்கலாம் என சாந்தி பூஷன், அமர்சிங்கிடம் நடத்திய உரையாடல் கொண்ட சிடி போலியானதல்ல என டெல்லி போலீஸ் தெரிவித்திருக்கிறது. ‘இந்த உரையாடல் போலியானது, வெட்டி ஒட்டப்பட்டது’ என பிரசாந்த் பூஷன் முன்பு மறுத்திருந்தார்
முன்பு ஐ.ஆர்.எஸ். அதிகாரியாக வருமான வரித்துறையில் பணியாற்றியபோது சில விதிமுறைகளை மீறிவிட்டார் என அரவிந்த் கெஜரிவாலுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
சமூக ஆர்வலர்களுக்கு சங்கடங்கள் ஏற்படுத்தும் அதே நேரம், கவனத்தை எதிர்க்கட்சிகள் மீது திருப்பவும் முயற்சிகள் நடக்கின்றன. செப்டம்பர் 1ம் தேதி சிபிஐயின் வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், “மத்தியில் ஜனநாயகக் கூட்டணி அரசு நடைபெற்றபோதும் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் விதி மீறல்கள் நடந்துள்ளன. அது தொடர்பாக அந்த அரசில் நிதிஅமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங், தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த அருண்ஷோரி ஆகியோர் விரைவில் சிபிஐயால் விசாரிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.
இன்னொரு புறம் இன்றைய அமைச்சர்களின் கைகள் சுத்தமானவை எனக் கூறாமல் கூறுவதற்காக மத்திய அமைச்சர்களின் சொத்துக் கணக்குகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஒருபுறம் 2ஜி வழக்கின் அடிப்படையையே ஆட்டம் காணச் செய்யும் தகவல், இன்னொரு புறம் குற்றச் சாட்டுக்களை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகள், மற்றொரு புறம் சமூக ஆர்வலர்களைக் களைத்துப் போகச் செய்யும் முயற்சி, வேறொருபுறம் கவனத்தை எதிர்க்கட்சிகள் மீது திருப்புதல் என மிகச் சாமார்த்தியமாக 2ஜி விவகாரத்தில் காய்களை நகர்த்தி வருகிறது. அரசு. இவற்றைப் பார்க்கும்போது நம் மனதில் எழும் கேள்வி ஒன்றுதான்.
இதெல்லாம் யாரைக் காப்பாற்ற?
***
நன்றி: மாலன் / புதிய தலைமுறை – 15 செப்டம்பர் 2011
தட்டச்சு: தாஜ்