மாலதியின் நவீன சீதையும் ஹாஜாஅலியின் சிறகுகளும்

haja_ali02b

ஹாஜா அலி: நினைவுகளும் பதிவுகளும் -2

அன்புடன்..
ஆபிதீன்…….

 ஹாஜா அலி இறந்து…
இந்த எட்டு வருஷத்தில்
பல முறை அவரை
நினைத்ததுண்டு…
என்றாலும்
அவரை எழுத நினைத்ததில்லை.
‘அது முடியுமா?’ மலைப்பே
என்னை முடக்கி விட்டது!

அவரை
தூர இருந்து
அறிந்த நீங்கள்தான்
அவரை எழுத வேண்டும்
பதிவில் உயிர்ப்பிக்க வேண்டுமென
சதா என்னை உலுக்கியவர்!
உங்களது தூரப் பார்வை சரியானது!

இலக்கியம் தேடிய
எல்லோரையும்
அன்பு செய்த ஹாஜா அலியை
நாம் நேசிப்பது சரியே.

அவரது எழுத்துகளை பிரசுரிக்க
எண்ணம் கொண்ட போது
என்னிடம்….
அவரது சில கடிதங்களைத் தவிர
வேறு ஏதும் இல்லை.
பிறகுதான்
தமிழ்ப் பூக்களில்
அவர் எழுதிய ஒரு சில
உண்டென்பது ஞாபகத்திற்கு வர
தமிழ்ப் பூக்களைத் தேடினேன்!
பத்திரம் மாதிரி பாதுகாத்த
தமிழ்ப் பூக்களில்
அவர் இருக்கவும் இருந்தார்!

பிப்ரவரி -1982
தமிழ்ப் பூக்கள் -6ல்
பிரசுரமான ஹாஜா அலியின்
சின்னதான இரண்டு கவிதைகளை
இந்தப் பதிவில் பதிந்திருக்கிறேன்!
தவிர
அவர் தேர்வு செய்து
தமிழ்ப் பூக்கள்-6
இதழுக்குத் தந்த
கவிஞர்
மாலதியின்
‘கணையாழி’ கவிதையையும்
இங்கே நீங்கள்
வாசிக்க பதிந்திருக்கிறேன்.

மறைந்த….
தோழி மாலதியின்
கவிதை வீச்சை 2001 -ல்தான்
நான் அறிய வந்தேன்.
ஹாஜா அலி அதனை
ஒரு யுகத்திற்கு முன்னமேயே
மோப்பம் பிடித்திருக்கிறார்!
வியப்போ வியப்பு!!

இங்கே பிரசுரமாகி இருக்கிற
ஹாஜா அலி மற்றும்
மாலதியின் கவிதைகள்
அன்றைய கவிதைகளின்
பரவலான முகம் கொண்டது!
1980- களில்
‘கணையாழி” போற்றிய
புதுக் கவிதை ரகம் இது!
அதன் பிறகான
புதுக் கவிதையின் பரிமாணம்…
வளம் கூடியே தெரிய
இன்னும் இன்னும் என்கிற கணக்கில்
அதன் வளர்ச்சி
ஒப்புக் கொள்ள முடியாத
திசைகளில் எல்லாம்
போய் சுற்றி முடங்கிவிட்டது!
புதுக் கவிதை
கை முறுக்காய்
முதலும் முடிவும் தெரியாத
பின்னல் கொண்ட பண்டமாகிப் போனதில்
நொந்தவர்கள் ஒருபாடு!

இன்னொரு புறம்
‘மனிதன் திரும்பவும்
குரங்குக்கான கதையாய்’
முகம் காட்டுகிறது
இன்றைய புதுக் கவிதை!
– தாஜ்

*

ஹாஜா அலி கவிதைகள்

1.

பொய்யொன்றும் இல்லை
ப்ராண சிநேகம்தான்

என்றாலும்
வேறு வேறு
முளைக்குச்சிகளில்
கட்டப்பட்டிருக்கிறது
நம் வாழ்க்கை.

உன்
மேய்ச்சல் நிலத்தில்
நானும்
என்
மேய்ச்சல் நிலத்தில்
நீயும்
மேய முடியாது
ஒரு போதும்.

உனக்கென்று
ஒரு துரும்பை
நான் தூக்கிப் போட்டாலும்
எனக்கென்று
ஒரு துரும்பை
நீ தூக்கிப் போட்டாலும்
நமது
விரல் எலும்புகள் முறிந்து போம்
விலா எலும்புகள் தெறித்துப் போம்.

2.

‘மலையேறும்’ வாழ்க்கையில்
‘மஹா உன்னதம்’
தேடியென்ன லாபம்?

சாரமற்ற வாழ்க்கையைச்
சுமந்து திரியலானது
யாரிட்ட சாபம்?
ஸ ரி க ம ப த நி
மாறாத ஸ்வரம்.

என்றாலும்…
தும்புகளை அறுத்தெறிய
துணிச்சலில்லை
தொழுவங்களை விட்டால்
புகலிடமுமில்லை.

கொஞ்சம் கனவுகள்
கொஞ்சம் கவிதைகள்
கொஞ்சம் முலைகள்
கொஞ்சம் சித்தாந்தம்
இவைகளுக்கு மேல் பறக்க
யாருக்குச் சிறகுகள் இருக்கு?

*

மாலதி கவிதை: நவீன சீதை

நின்று பேசினால்
லிமிட் மீறுதல் குற்றம்,
பேசாது போனால்
அவருக்காகத் தவிர்த்தல்; – புகார்

வரும் போகும் பெண்களைப் பார்த்துப்
பொங்கிவரும் வருணனை-
ஆசையின் அழுத்தம்
வார்த்தையில் ததும்பும் – கேட்டு
பொம்மையாய் ‘இக்னோர்’
செய்ய வேண்டுமாம்,

மனைவி ஜீனத் போல வேண்டுவோர்க்கு
தான் என்ன பெரிய ஹீரோவா
என்று ஏன் தெரியவில்லை?

வயிற்றின் கனலை
எச்சில் விழுங்கி அணைக்கும்
அதிலேயே பொசுங்கினால்தான்
சிக்கல் தீருமோ?

காந்தி, புத்தர் பிறந்த மண் இது
நாமும் இக்கொடுமையை
மறப்போம்; மன்னிப்போம்
இன்றும் நாளையும்…..
அதற்குப் பிறகும்!

***
தேர்வும்/ தொகுப்பும் :  தாஜ் / தமிழ்ப்பூக்கள்

E- Mail : satajdeen@gmail.com

நாடோடி மனம் (மின் புத்தகம்)

பிரம்மராஜனின் ‘நாடோடி மனம்’ மின்புத்தகமாக அவருடைய வலைப்பதிவில் இப்போது கிடைக்கிறது. பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும் (அதுதான் உங்களுக்கு நல்லா தெரியுமே!).

– ஆபிதீன் –

***

 

Brammarajan :

Nadodi manam-in e-book format(pdf)

’This is the pdf form of the full book titled Nadodi Manam. Since the book is out of print for the past 4 years I am offering this download for a limited period of time for the readers who do not have a hard copy. I haven’t included the cover page since I didn’t design it.

Rough Index of Authors discussed:

1.Franz Kafka 2.T.S.Eliot.[Tradition and the Individual Talent] 3.Four Quartets(T.S.Eliot) 4.Ocatvio Paz (Poetry and History) 5.Amy Lowell and the process of creating poetry 6.Paul Valery and his poetics 7.Miraslav Holub 8.Antonin Bartusek 9.Cesar Pavese 10.Charles Bukowsky 11.Ivan Goncharov(Oblavmov) 12.Yasunari Kawabatta (The House of Sleeping Beauties) 13.Gabriel Garcia Marquez (General in the Labyrinth) 14.Herman Hesse (The Steppenwolf) 15.Albert Camus (The Plague) 16.Samuel Beckett(Watt) 17.William Faulkner (Sound and the Fury) 18.Alexander Solzhenitsyn (Cancer Ward) 19.Andre Gide(The Counterfeiters) 20.Primov Levi (The Periodic Table) 21.Jean Genet(works) 22.Henrich Boll 23.Salvador Dali 24.Poets,lovers and madmen 25.Arthur Koestler’

***

நன்றி : பிரம்மராஜன், திண்ணை

Links :

Rememebering poet Malathi(sathara) – Brammarajan

’நாடோடி மனம்’ பற்றி மாலதி

சதாரா மாலதி

malathi.jpg 

மாலதி 

வீடு

மர நிழல்,வேலியோரத்துப்பூ,ஆற்றங்கரை இப்படி எதுவுமே அறியாத ‘நகர விளைச்சல் ‘ நான்.அதுவும் அழுக்கு நகரத்தின் ஆபாசப் புழுதி படிந்த பிரஜை.

வீடு என்றால் விடுதலையாம். கை காலை நீட்டி ஆசுவாசம் பெறுவது வீடு என்கிற இடத்திலாம். இப்படியெல்லாம் யார் யாரோ எழுதிப் படித்த ஞாபகம்.இவர்கள் வீடெல்லாம் ரொம்ப நன்றாயிருந்திருக்க வேண்டுமென்று நினைத்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

முத்துக் குளிக்க முங்குபவரைப் போல ‘தம் ‘ பிடித்துக் கூடியவரை குறைந்த அளவு நேரத்தை நான் வீட்டில் கழித்திருக்கிறேன்.சின்ன இடைவெளி கிடைத்தாலும் பரந்த வெளி உலகில் கலந்து விடத்துடித்திருக்கிறேன். யாராவது கேட்கலாம். என் வீடென்ன அப்படி முள்ளாய்க் குத்தும்படி அன்பில்லாத மனிதர் கொண்டதா ? உறவில்லாத சூழலா ? என்று. இல்லையே !

வீடு வீடாவதற்கு அதில் வசிக்கும் மனிதர்களின் பிரயாசைகள் முக்கியம் என்று சொல்வார்கள். நான் சொல்வேன் மனிதன் மனிதனாவதற்கு வீட்டுடைய அமைப்பும் அம்சமும் முக்கியமென்று.

உணவு,உடை, உறையுள் ..இவற்றுள் உறையுள்ளுக்கு அதிக மதிப்பு கொடுக்கப்பட வேண்டுமென்பது என் அபிப்பிராயம்.

நினைவு தெரிந்த நாள் முதல் தூசி தூசி தூசி தான் சென்னையில் நான் வசித்தது ஹார்பருக்கும் பிராட்வேக்கும் இடைப்பட்ட பகுதியான மண்ணடி. இளமை ஞாபகங்கள் எல்லாவற்றிலுமே சாக்கடை நாற்றத்தைத் தவிர்க்க முடியவில்லை. தொடர் நினைவுகளாகப் பாசி , அசிங்கமான குளியலறை ,நரகல் மிதக்கின்ற , மேலெல்லாம் படிந்த முழு இருட்டு டாய்லட்.. சிம்னி விளக்கோடு தான் பகலிலும் போகும்படி.

தி. ஜானகிராமனின் மூன்று கட்டு வீட்டு வர்ணங்களை த் தஞ்சைப் பின்னணியோடு வாசித்திருக்கிறேன். அவர் செய்த தவம் உயர்ந்த பின்னணிகளை எழுதவாவது முடிந்தது. நான் நகரத்தின் வறுமைக் கோட்டுக்குக் கீழெ பார்த்ததெல்லாம் கட்டை வண்டிகள், உழைப்பாளிகள், மூச்சிறைக்கப் பாரம் சுமந்த விலங்குகள், ஹார்பர் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகி மூளை சிதறிய பாட்டாளிகள் , ‘ரேவு ‘ கரையோரம் பருப்பு மூட்டைகளில் கோணி ஊசி யிறக்கித் திருடிக் கடை விரிக்கும் குடிசைப் பெண்கள்,நடை பாதை வாழ் மக்கள், ‘பம்பரக்கண்ணாலே ‘ பாடிய சேரி வாழ் பரமேஸ்வரி, மூக்குப் பொடி போடும் லிங்கிச்செட்டித்தெரு மசூதி அருகாமை முஸ்லிம் பெண்கள், டஜன் டஜனாகப் பிள்ளை பெறும் ஜெரினா அம்மா , சுருட்டு பிடிக்கும் முத்துபேகம்….

எதற்குச் சொல்கிறேன் என்றால் கோட்டைக் கொத்தளப் பின்னணி இல்லாவிட்டலும் ,சின்னவீடு, கேட் , தோட்டம் என்று வர்ணிக்கவாவது ஒரு வீடு என் மனசில் நிற்க வேண்டுமே! ம்ஹூம்…இல்லவேயில்லை. வீட்டுக்குள் வாழ்ந்திராத எனக்கு வீட்டைப் பற்றி எதுவுமே எழுதத் தெரியவில்லை.நான் அமர்ந்தது, ஆடியது, பாடியது, எழுதியது, படித்தது, எல்லாம், மல்லிகேச்வரர் கோயில் பிரகாரம், ‘அம்போ ‘ என்று தனித்து விடப்பட்டிருந்த மூலைப் பிள்ளையார் கோயில், லிங்கிச்செட்டித்தெரு மசூதிக் குளப்படி, அரமணக்காரத்தெரு ச்ர்ச்கேட் பள்ளம் , கச்சாலிஸ்வரர் கோயில் அக்ரஹாரத்திண்ணைகள் ,பாரி முனை ப்ஸ் நிறுத்தம் , இன்னும் நிறைய இடங்கள்.

[இன்னும் கூட கனவுகளில் அரமணக்காரத்தெருவை ஓடிக் கடக்கிறேன்]

நான் வசித்தது கூவ நதிக்கரைச் சேரியாக இருந்தால் சத்யஜித்ரே பாணியில் உண்மைக்கதை தந்திருப்பேன். கூவநதிக்கரைக் குப்பங்களில் நான் வசிக்கவில்லை. அதை விட மோசமான சேரி ஒன்று சென்னையில் உண்டு. கூவ நதி ஓரங்களாவது வெயில் கண்டு நாற்றமும் அழுகலும் காய்ந்து வீரியம் குறையும். நான் வசித்த சேரி பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்புச்சேரி. மூடி மூடி மறைத்து நாற்றமும் அழுக்குமாய் உள் வைத்துப் பூட்டிய உயர் வகுப்புச் சேரி.

புறக்குப்பை வழுக்கலோடு கப்பல் கப்பலாய் அகத்திலும் தூசையும் குப்பையையும் பாசிப்புழுத்தல் நரகல் அனைத்தையும் சுமந்து மனிதர் வாழும் சேரி. அந்தணச்சேரி.

எனக்கு நினைவு தெரிந்து என் முதல் விளையாட்டுத் தோழன் ஜெயிலுக்குப் போனவன் மகன். கடன் பட்டு மீள முடியாமல் ஜெயிலுக்குப் போனதாகச் சொல்வார்கள்.பெரிய வீட்டின் இருட்டுப் பொந்தான பின்புறம் அது. முன்புறம் ஒரு டாக்டரின் கிளினிக் இருந்தது. பேஷண்ட்ஸ் உபயோகிக்கும் டாய்லட்டையே நாங்களும் உபயோகிக்க வேண்டியிருந்தது. அ..அந்த ஜெயிலுக்குப் போன அப்பா எதாவது வெட்டு கொலை பண்ணியிருந்தால் கூட எனக்கு கெளரவமாகத் தோன்றியிருக்கும். அவர் கடன் கொடுக்க இயலாமல் போனது என் சொந்த அவமானம் போல என் ஆறாவது வயதில் எனக்குப் ட்டது.

நாங்கள் இருந்த முரட்டு மூன்று மாடிக் கட்டிடத்தின் மாடிகளில் நாகரிகமான பெரிய குடும்பங்களிருந்தன.[டாக்டர் கோதண்டராமையரின் பேத்தி பிரமராவை சமீபத்தில் ஜெய்ப்பூரில் சந்தித்துப் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டேன். ஏழைகளுக்கு உதவுகிற பெரும்போக்குடைய மிக நல்ல குடும்பம் அவர்களுடையது.]மாடிகளின் சாக்கடைகள் எல்லாம் எங்கள் பின்கட்டுக் குடியிருப்பில் தான் சங்கமம்.மாடிக் குடியிருப்புகளுக்கு முத்து, கொட்டை கட்டி என்று இரு வேலையாட்கள் இருபத்து நான்கு மணி நேரமும் போரிங் பைப் அடித்து வருவார்கள். அந்த நாளில் ஆள் கொண்டு அடிக்கவைத்துதான் போரிங் பைப்பில் நீரை மேலே ஏற்ற முடியும். மோட்டார் எல்லாம் வரவில்லையோ வேறே என்ன காரணமோ! தெரியவில்லை. சாக்கடை நாற்றமென்றால் அப்படி இப்படியில்லை. குடலையே பிடுங்குவது போல கும்பி நாற்றம்.பின்னால் மாட்டுக் கொட்டிலும் கொல்லை சந்தும் உண்டு[மாடுகள் இல்லை}சந்தில் ஒரு பேய் இருப்பதாக ரொம்ப பிரசித்தி. வேலைக்காரர்கள் கொட்டிலில் படுத்தால் நெஞ்சில் அமர்ந்து அமுக்குமாம். நானும் ஆனவரை தேடிப் பார்த்தேன். பேயின் தரிசனம் கடைசிவரை எனக்குக் கிடைக்கவில்லை. எனவே பத்தாவது வயதில் ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். ஆளை அமுக்குவதெல்லம் சாக்கடை நாற்றம் தான். பேய் இல்லவேயில்லை என்ற யதார்த்தமான முடிவு எனக்கு சோகம் கொடுத்தது. [பின்னாளில் தைரியமும் தான்.பெங்களூர் சேம்பர் ஆப் காமர்ஸ் பில்டிங் மூன்றாவது மாடிப்பேய்,காஜியாபாத் ஹாஸ்டல் பேய் ,இவற்றையெல்லாம் ஒண்டியாகச் சமாளித்த தைரியத்தை மேற்படி முடிவு தானெ தந்திருக்கமுடியும் ?]

என்னுடன் செட்டி ஸ்கூலில் படித்த ருக்மணி பல நாள் சாப்பிடவேயில்லை என்பாள். எப்படிப் பசிக்கும் என்று எனக்குத்தெரிந்திருக்கவில்லை. என்னைப் பசிக்காமல் காப்பாற்றத்தான் என் தாய் தந்தை பின்கட்டு வீட்டை சகித்துவந்தார்கள் என்பது அப்போது புரிந்திருந்தால் நான் என்ன செய்திருப்பேனோ தெரியவில்லை.சாப்பாடு பெரியவிஷயம் என்று எனக்குத்தோன்றியதில்லை அப்போது. ருக்மணியோடு அவள் வீட்டுக்குப் போயிருந்த போது எனக்குப் பொறாமை மிகுத்தது.ருக்மணி வீட்டில் சிவப்புத்திண்ணைகளும் பெரிய கூடமும், தூண்கள் வந்த உயரமான தாழ்வாரமும் நடு முற்றமும் ரொம்ப அழகு. அவள் அப்பா பெரியப்பாக்களுக்குச் சொந்தமான பொதுச் சொத்தாம். தம்புச் செட்டித் தெருவில் வெண்ணைக் கடையை அடுத்து நீண்ட சந்துக்குள் நுழைந்தால் வலது திருப்பத்தில் சடக்கென்று வந்துவிடும். அதில் தான் முதுகு கூனலான ருக்மணியின் கோம்பைத்தங்கை ,கால் வராத தம்பி மற்றும் அதே சாயலில் எண்ணிக்கை தவறும் அளவுக்கு ச் சிறிதும் பெரிதுமாய் நிறைய குழந்தைகள் வசித்தார்கள்..

அந்த வீட்டில் பெரிய ஆண்பிள்ளைகள் படுத்த படுக்கையாய் இருந்தார்கள். பெண்கள் எப்போதும் உட்கார்ந்தே இருந்தார்கள்.என்னுடைய அம்மா சுறு சுறுவென்றிருப்பாள். சதா வேலை செய்வாள்.

ருக்மணி வீட்டில் என்ன கஷ்டம் என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் என் உணவையும் நோட்டுப் புத்தகங்ளையும் அவளோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.ருக்மணி வீட்டை விட்டு வெளியே வரும்போது வீட்டு ஆட்கள் யாரையும் பார்க்கப் பிடிக்காமல் கம்பீரமாக வெளியே வருவேன்.

சாப்பிட ஒன்றுமில்லாவிட்டல் கஷ்டம் என்பது எனக்கு உறைக்காத அளவுக்கு இருந்தன என் அம்மா செய்யும் மஞ்சள் கலர் பொங்கல் புளிப் பச்சிடி பருப்புத் துவையல் ரசம் ,இவையெல்லாம். ருக்மணி ருசித்து முகமலர்ந்து சாப்பிடும் போது அந்த ரசனையின் மர்மம் புரியாமல் வியந்து பார்ப்பேன்.

சாப்பிட நிறையக் கிடைத்திருந்தது என் குட்டிக்குடும்பத்துக்கு. வீடு மட்டும் நல்லதாகக் கிடைக்கவேயில்லை. நரகம் போன்ற இருட்டு கவ்விய அந்தப் பின்கட்டு வீட்டைவிட்டு ஒரு ஸ்டோருக்குக் குடி போனோம். இதில் டாக்டர் வீட்டு பாத்ரூம்களில் போல உதிரமும் பஞ்சும் ஒருவித நெடியும் , மஞ்சள்கறை படிந்த பீங்கான்,எச்சில் குப்பி மூத்திரப் பாத்திரம் ரத்தம் உறிஞ்ச அட்டைகளுடன்….இல்லை. நாற்றம் குடலை உருவும் நாசகாரப் பிரதேசங்கள் இல்லை. மொட்டைமாடி இருந்தது. புறாக்கூடு போன்ற சின்ன சின்ன போர்ஷன்களும் பொதுவான குளியலறை டாய்லட்டும் இருந்தன. ஸ்டோரில் சுமார் நூறு பேருக்கு மேல் வசித்தார்கள். ஆணும் பெண்ணுமாய். அவல வாழ்க்கை. சுற்றுப் புறத்தை அசிங்கப் படுத்தி தம் தம் போர்ஷன்களைச் சுத்தமாய் வைத்துக் கொண்டார்கள். சுறுசுறுப்போடு சினிமா போய் வந்தார்கள் பிரபாத் பிராட்வே கொட்டகைகளில். சமையல்காரர்கள்,புரோகிதர்கள்,புரோக்கர்கள்,பிளாட்பார டைப்பிஸ்டுக்கள் என்பது போல பல அலுவல் காரர்கள். அத்தனை பேரும் அந்தணர்கள். தோளுக்கும் இடுப்புக்குமான அழுக்கு நூலைத் தவிர அந்தணக் குணம் எதுவுமே அறியாதவர்கள். தப்பு, தப்பு… அப்படிச் சொல்லிவிட முடியாது. அந்தணருக்கே உரிய கோழைத்தனமும் வலியாரைக் கண்டால் காட்டுகிற பசப்பும் அத்தனை பேருக்கும் இருந்ததே!

ஸ்டோர் குடித்தனங்களில் எல்லா வகைத்துயரமும் வக்கிரங்களுமிருந்தன.உடம்பில் பதினெட்டு வளைசல் கொண்ட பொன்னக்காக் கிழவி, வயதுக்கு வந்த அரைப் பைத்தியப் பெண்,வயதான கன்னிப்பெண்கள்,அவர்கள் வீட்டுக்கு தினப்படி கைப்பையுடன்வருகை தரும் ரெகுலர் ராத்திரி விசிட்டர், மெஸ் வைத்து இளைஞருக்குச் சாதம் போட்டு த் தன் பெண்களுக்குக் காதல் திருமணம் அமையாதா என்று ஏங்கிய தாய், தன் மூன்று குழந்தைகளுக்கும் பேச்சு வராமல் பரிதவித்த பெற்றோர், மனைவியைப் பறி கொடுத்து பிள்ளைகளோடு பாடு பட்ட தந்தை,ஒரு பெரிய மனிதனின் சின்னக் குடித்தனம், இப்படி எத்தனையோ!

ஆண்பிள்ளைகளில் ஒருவனும் குடிகாரன் அல்லன். ஆனால் குணக்கேடன். எந்த நல்ல அம்சத்தையும் ரசித்து ஏற்றுக்கொள்ள இயலாத அளவுக்கு அந்த ஆண்களின் உடல்களில் விரசங்கள் புரையோடியிருந்தன.நிறைய காட்டன் மார்க்கெட்டு கேஸ்கள்,நிறைய அவுட்டுப் பேச்சு,வெத்துவேட்டுக்கள்,திண்ணை தூங்கிகள்.

பெண்களிடையே மெலிதான விபச்சாரமிருந்தது. அப்பட்டமில்லாத அரசல் புரசல் விபச்சாரம். குணக்கேடான சமாச்சாரங்கள் அவ்வப்போது கண்ணீல் பட்டவாறு இருந்தன. அவசரக் கல்யாணங்கள் நடந்தன. பத்து மாதங்களுக்குள்ளான குழந்தை வரங்கள் கிடைத்தன. யாரோ ஒருவனின் மனைவி இன்னொருவனோடு பாத்ரூமிலிருந்து அரையிருட்டில் வெளிவந்ததைப் பார்த்த சாட்சியங்களிருந்தன. நிறையப் பையன்கள் ஓடிப் போனார்கள். பெண்கள் வயதுக்கு வந்தார்கள். ஒரு நல்ல அம்சம் அந்தணச் சேரியில். எந்தப் பையனும் நிச்சயமாக எந்தப் பெண்ணையாவது இழுத்துக் கொண்டு ஓடிவிட மாட்டான். அந்த பலம் எங்கள் சமூகத்து ஆண்பிள்ளை முதுகில் வந்ததே கிடையாது. அதனால் தான் எல்லாப் பெண்களும் எங்கள் வீடுகளில் முப்பத்திரண்டு வயசு வரை கன்னியாகவே மனசு கெட்டு இருந்து வந்தார்கள் பத்திரமாக.

‘செளதாவுக்கு மார் அழகே போதும் ‘ என்பது மாதிரியான பேச்சுக்களை நடுக்கூடத்தில் பேசுகிற இல்லத்தரசிகளால் தானோ என்னாவோ விடலைகளின் பார்வைகளீல் சேஷ்டைகளில் விபரீதம் கலந்திருந்தது.

யாரோ எனக்குக் காதல் கடிதம் எழுத நானும் கவிதை வசப்பட என் தாய் தந்தை பயந்து போய் தாத்தா வீட்டில் சரண் புகுந்தார்கள்.

குத்து மதிப்பாய் ஒரு வாடகையையும் நாங்கள் சாப்பிடத் தயாரிக்கப் பட்ட உணவில் பெரும்பகுதியையும் எங்கள் சண்டைக்காரச் சித்திகள் கூட்டம் ஜீரணித்தது. என் தாயும் தகப்பனும் எப்போதும் போல ஏழையாகவே இருந்தனர். அவர்கள் அப்படி ஏழையாய் இருப்பதற்கு இன்னின்ன காரணங்கள் என்பதை என் தாத்தா வீடு வரிசையிட்டுச் சொல்லியும் என் பெற்றோர்கள் பரோபகாரங்களைக் குறைத்துக் கொள்ளவில்லை அத்தை குடும்பத்துக்குச் செய்வதையும் நிறுத்திக் கொள்ளவில்லை. என் தாயும் சொத்தில் தன் பங்கைக் கேட்டுச் சித்திமார்களின் கொழுப்பை அடக்கவேயில்லை. கேளாமல் கொடுக்கப் படுவது மட்டுமே ஏற்கப் படும் என்ற கொள்கை. இப்படி அப்படியாக நான் மாநிலக்கல்லூரியில் எம் எஸ்ஸி முடித்த வருடம் விஜிபி தவணை முறையில் ஒரு மர்பி மினி பாய் டிரான்ஸிஸ்டர் வாங்குமளவுக்குப் பணக்காரர்களானோம்.

பின்னால் வேற்று மாநிலங்களில் பெரிய நகரங்களில் குடியிருந்தேன். குளிருக்கு அடைத்துக் கட்டப்பட்ட சமையல் அறைகளிலும் குளியல் அறைகளிலும் மூச்சு விட முடியாமல் அவஸ்தைப் பட்டேன். நான் உப்புமாவுக்குத் தாளித்து விட்டால் போதும். வீட்டின் எந்த மூலைக்கு வந்தாலும் உப்புமா வாசம் மணிக் கணக்கில் நின்றது. மோர் மிளகாய் வறுத்து விட்டால் தீர்ந்தது.

ஆதியில் வீட்டை விட்டு வெளியே ஓடினால் நூலகமே புகலாயிருந்தது எனக்கு. மறைமலையடிகள் நூலகம் முதல் பல நூலகங்கள் நடை தூரத்தில் இருந்தன. இப்போதெல்லாம் அண்மையில் நூலகமே வாய்ப்பதில்லை. மாலைகளில் கோகலே ஹாலில் இலக்கியச்சொற்பொழிவுகளுக்குப் போக முடியும் . க.த. திருநாவுக்கரசு இன்றும் காதில் ஒலிக்கிறார். நடக்கிற தூரத்தில் அண்ணாமலை மன்றம். சோ ,பாலச்சந்தர் நாடகங்கள், மனோகர் மேடையதிசயங்கள் [பத்மா மாமி ஸீஸன் டிக்கட் உபயம்] கச்சாலீச்வரர் கொயிலில் கதா காலட்சேபங்கள் இப்படி எத்தனையோ கிடைத்தன வெளியில்.. இப்போதைய பெரிய நகரங்களில் மாலை வாழ்க்கை மத்திய தரத்தினருக்கு வெகுவாக மறுக்கப் படுகிறது.

சென்னை வரும் நாட்களில் கடற்கரை தேட நினைத்ததுண்டு. கரையோரச் சமாச்சாரங்கள் கடலையே மறக்க வைத்தன.சுத்தமான சூழலுக்காக மனிதன் தன் ஆயுள் நாள் சேமிப்பைத் தர வேண்டிய காலம் வந்துவிட்டது.

சுமாராக அந்தஸ்து[ ?] வந்த கால கட்டத்திலும் ஏதோ கவனக் குறைவு. காலத்தின் கட்டாயம். இரு வருடங்களுக்கு ஒரு சிமெண்டுக் கிடங்குக்கு அருகில் வசிக்க நேர்ந்தது. சிமெண்டின் நுண்ணிய துகள்கள் வீடு முழுவதும் ஒரு பூச்சு போல,இறையுணர்வு போல படர்ந்து போயின. எப்போதும் கரண்டு கட் வேறு. முழு இருட்டு டாக்டர் வீட்டுப் பின்கட்டை நினைவு படுத்தியது. வாசலில் ஒரு சொறி நாய் வேறு படுப்பதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தது. அதற்கு வந்திருந்ததைப் போன்ற சொறியை நான் கண்டதேயில்லை. கறுப்பு நிற ரோமம் முழுக்க உதிர்ந்து ,ஒரு முழு அப்பள வடிவில் கொதகொதவென்று சிவப்பு மாமிசம் வெளித் தெரிந்தது. அத்தனைக்கும் அந்த நாய் அலட்டவேயில்லை. லேசான முனகலோடு சரி. என் வீட்டுப் படி தவிர வேறு எந்தப் படியருகிலும் அது போனதுமில்லை.

இந்த வீட்டைத் துறந்து அடுத்த வீட்டுக்கு என் சம்பளத்தில் பாதியை வாடகையாய்க் கொடுக்கத் துணிந்த போது வீட்டில் யாருக்கும் இஷ்டமில்லை. எனக்கு சுவாசம் தான் அப்போது முக்கியமானதாயிருந்தது.

இவ்வளவுக்கும் ஒரு வீட்டைக் கட்டியிருக்கக் கூடாதா என்று கேட்பிர்கள். கட்டினேனே!புற நகரில் பார்த்தீனியம் சூழலில் இருந்த என் வீட்டுக்குள் நான் காலை வைத்த நிமிடமே எனக்கு ஆஸ்துமா வந்தது. ஆக்ஸிஜன் வைக்க வேண்டி வந்தது. விட்டுப் பிரிந்தேன் என் வீட்டை.

ஆக மொத்தம் கண்ணுக்கு அசிங்கமான அத்தனையையும், கருப்பு,மஞ்சள், பச்சை,சிவப்பு நிறங்களில் பார்த்து விட்டேன். மூக்குக்குப் பிடித்தமில்லாத அவ்வளவு நாற்றங்களையும் அனுபவித்தாகி விட்டது.

உதறிய சாக்குத் தூசு, கோலமாவுத்தூசு, மாடியிலிருந்து விழும் குப்பைத்தூசு, சாம்பல் தூசு, சிமெண்டுத் தூசு,ஓடும் வண்டிகள் கிளப்பிய தூசு, அரிசி பருப்பு புடைத்த தூசு, காரை விழும் தூசு, ஓட்டு மேலண்ணத்தூசு, மாடிப்படி,கைப்பிடி, கேட் கதவுகளில் உட்கார்ந்து கையில் நறநறக்கும் தூசு,இப்படி தூசிலேயே வாழ்ந்திருக்கிறேன்.

மனிதனுக்குப் பசிக்கு உணவு போதும். உடுக்க ஏதோ போதும். உறையுள் உடல் வாழ மட்டும் போதாது. உள்ளமும் வாழுமளவு வசதியான உறையுள் வேண்டும். அது தான் ‘வீடு ‘

மாலதி

[சென்னை மாநகரம் பற்றின The Unhurried city யில் ஆங்கில மொழியாக்கம் வெளியிடப்பட்டுள்ளது]

நன்றி : திண்ணை

***

கனவுகள், காட்டாறுகள்..!-‘சதாரா’ மாலதியின் கவிதைகள்
லதா ராமகிருஷ்ணன்

‘எல்லாத் தகுதிகளும் இருந்தும் அதிகம் அங்கீகரிக்கப்படாத மரமல்லிகைகளை எப்போது பார்க்க நேர்ந்தாலும் மிகவும் வேதனைப்படுவேன். மில்லிங்டோனியா என்ற பெயர் கொண்ட மரமல்லிகை மணம் மிக்க கொத்துமல்லிகைகளை மிக உயரத்தில் வைத்துக் கொண்டு காத்திருக்கும்’

‘வரிக்குதிரை(1999), தணல் கொடிப் பூக்கள்(2001) ஆகிய இரண்டு தொகுப்புகளுக்குப் பிறகு 2003ல் வெளியான ‘மரமல்லிகைகள்’ ‘சதாரா’ மாலதியின் மூன்றாவது தொகுப்பு அதன் முன்னுரையில் மேற்கண்டவாறு கவிஞர் குறிப்பிட்டுள்ளார். சதாரா மாலதி தனது எழுத்துக்கள் மூலம் திண்ணை வாசகர்களுக்கும், வேறு பல இணைய இதழ்களின் வாசகர்களுக்கும் நன்கு அறிமுகமானவரே. 1950ல் பிறந்த இவர் மாநிலக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றவர். திருநெல்வேலியிலுள்ள கிராமமொன்றில் பிறந்த சதாரா மாலதி மத்திய அரசுப் பணியில் உயர் பதவியில் இருந்து சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றிருக்கிறார். 90 கள் வரை வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதி வந்த இவர் 90களின் இறுதிப் பகுதியில் தான் தமிழ்ச் சிற்றிதழ்களில் எழுதத் தொடங்கினார் என்றாலும் ஏறத்தாழ பத்து வருடங்களில் கவிதைகள், சிறுகதைகள், திறனாய்வுக் கட்டுரைகள் என்று சிறுபத்திரிகைகளில் அவருடைய எழுத்துக்கள் கணிசமான அளவு வெளியாகியிருக்கின்றன; வெளியாகி வருகின்றன. மேற்குறிப்பிட்ட கவிதைத் தொகுப்புக்களோடு கூட ‘அனாமதேயக் கரைகள்’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதைத் தொகுப்பும், ‘உயர்பாவை’ என்ற தலைப்பில் ‘ஆண்டாள் திருப்பாவை’ குறித்த ஆழ்ந்த ஆய்வலசல் கட்டுரைகளும் ( இவை திண்ணை இதழ்களில் தொடராக வெளிவந்தன) இவருடைய படைப்புக்களாக இதுகாறும் வெளியாகியுள்ளன. இவருடைய தாயார் திருமதி லலிதா நாராயணன் இதுகாறும் எழுதிவந்திருக்கும் சிறுகதைகளில் சில சமீபத்தில் இரண்டு தொகுப்புக்களாக வெளியாகியுள்ளதும் இத்தருணத்தில் குறிப்பிடத் தக்கது.
காத்திருப்பு என்பதன் மறுபக்கத்தில் இருப்பது தேடலும், காதலும். இந்தத் தேடலும், காதலுமே, காத்திருப்புமே ‘சதாரா’ மாலதியினுடைய கவிதைவெளியின் பிரதான நீரோட்டங்களாகப் புரிபடுகின்றன. ஒருவகையில் எல்லாக் கவிதைகளின் இயங்குதளங்களும், இயக்குவிசைகளும் தேடலும், காத்திருப்புமே என்று கூடச் சொல்லலாம். ஆனால், சில கவிதைகளில் இந்தத் தேடலும், காத்திருப்பும் தம்மைத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும். அல்லது, தம்மைப் பற்றிக் குற்றவுணர்வு கொள்ளும். சதாரா மலதியின் கவிதைகளில் அவை ஆற்றொழுக்காக வெளிப்படுகின்றன எனலாம்.

நகம் மேல் விரல் விரல் மடங்கும் அங்கை
முன்கை வியக்கும் முழங்கை முழங்கை முழங்கை முதல் தோளிணை
தோளில் மாலை மாலையில் என் மணம்
என் குறவன் விருப்பிற்கு நான்
செஞ்சாந்தாய் ஆவேன்.’

விறலி என்று தலைப்பிட்ட இந்த குறுங்கவிதையில் காதலும், சந்தோஷமும் எத்தனை குதூகலமாய் வெளிப்படுகின்றன! இத்தகைய கவிதைகளின் உத்வேகத்தையும், உணர்வெழுச்சியையும் உள்வாங்கிக் கொள்ள இயலாதவர்களாய், அல்லது, உள்வாங்கிக் கொள்ள மறுப்பவர்களாய் இதை ஆணாதிக்கத்தைப் பேணும் கவிதையாய் மேம்போக்காய் பகுப்பவர்களைப் பற்றி என்ன சொல்வது? சதாரா மாலதியின் கவிதைகள் அத்தகைய எதிர் விமரிசனங்களைப் பற்றிய கவலையோ, கிலேசமோ இல்லாமல், அந்த குறிப்பிட்ட கணத்தை ஆழ்ந்து அனுபவிக்கும் ஒரே முனைப்பாய் கிளர்ந்தெழுகின்றன! இந்த உணர்வெழுச்சி சதாரா மாலதியின் பெரும்பாலான கவிதைகளில் அவருடைய பலமாகவும், ஒரு சில கவிதைகளில் அவருடைய பலவீனமாகவும் அமைவதைக் காண முடிகிறது.

மொழிக் கல்லில்
முட்டி முட்டி
என் துயர் சொன்னேன்.
மொழி சும்மாயிருந்தது.
பனிப்போர்
அது என் நெஞ்சில்
மோதி மோதி
கவிதையாய் இறங்கியது.’

‘மோதல்’ என்ற சிறுகவிதையில் மோதல் என்ற ஒரு வார்த்தை contact, confrontation ஆகிய இரண்டு விஷயங்களையும் குறிப்பாலுணர்த்துவதன் மூலம் கவிதைக்கு கனம் சேர்க்கிறது. வார்த்தைகளின் கச்சிதமான தேர்வு, அவற்றின் கச்சிதமான இடப் பொருத்தம் இரண்டுமே ஒருசேர அமைந்தால் தான் கவிதையின் ‘சிற்பச் செதுக்கல்’ பூரணமாகும். ஒன்று மட்டும் இருந்து ஒன்று இல்லாமல் போய்விடும் போது அந்த இன்மையின் அளவு கவிதையும் கூர்மழுங்கியதாகி விடுகிறது.அப்படியான சில கவிதைகளையும் சதாரா மாலதியின் தொகுப்புகளில் காண முடிகிறது. இத்தகைய பூரணமற்ற கவிதைகள் இடம்பெறாத கவிதைத் தொகுப்புகளே இருக்க முடியாது என்றும் சொல்லலாம். சில கவிஞர்களின் விஷயத்தில் அவர்களுடைய ஆகச் சிறந்த கவிதைகளே ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாய் வெற்றிகரமாய் காண்பிக்கப்படுகின்றன; அவ்விதமாய் அவர் மேலான கவிஞராக நிலைநிறுத்தப்படுகிறார். வேறு சிலர் விஷயத்தில் நேர் எதிராக விஷயம் நடந்தேறி அவர் கவிதைகள் எளிதாக ஒரம் கட்டப்பட்டு விடுகின்றன.
எனக்கு மட்டும் ஏனிப்படி/ தேன் மெழுகுக் கூடு’ என்பது போன்ற வளமான வார்த்தைப் பிரயோகங்கள் சதாரா மாலதியின் கவிதைகளில் கணிசமாகக் கிடைக்கின்றன.

‘சோரம் புனிதமானது
ஏனெனில் பணம் பத்திரங்கள்
துச்சம் அதில்
பிறிதும் கண்மூடிக் காதல்
அதில் தான்
என்ற கவிதையை ‘தட்டுக்கெட்டத்தனத்தை’ப் பரிந்துரைக்கிறது என்று பொருளுரைப்பவர்களைப் பார்த்து பரிதாபப் படத்தான் வேண்டும். ‘நகை மேல் ஆணை’ என்ற கவிதை பல்வேறு அணிகலன்கள் மேல் உள்ள ஈர்ப்பையும், அவற்றை ஒதுக்கி விட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதன் விளைவாய் மனம் உணரும் இழப்பையும் பதிவு செய்கிறது. நகையை விரும்புதல் பெண்ணடிமைத்தனம் என்ற முன்நிபந்தனையோடு இந்தக் கவிதையை வாசிக்கப் புகுந்தால் இதன் கவித்துவமும், லயம் ததும்பும் மொழிப் பிரயோகமும் நம்மை எட்டாமல் போய்விடும்.
மாதிரிக்குச் சில வரிகள்:-

சூடகமும் பாடகமும் தோடும்
அபரஞ்சித் தொங்கல்களும்
ஏந்தி நிறுத்திய பதக்கமும்
சரப்பளியும் காலால் அழகணிந்த
கவிதையூறும் உலோகச் சிரிப்புகளும் களைந்தேன்.’

கொலுசு என்ற கவிதையில் கொலுசைப் பறிகொடுத்த துக்கம் ஒரு பெண்ணின் ‘சுதந்திரமான இயக்கமும், அதிலுள்ள சந்தோஷமும் பறிபோகும் இழப்பைக் குறிப்பாலுணர்த்துவதாகிறது.

ரசிக்காத பயணத்தில்
களைப்போடு இழப்பு
எனக்குப் பழக்கம் தான் என்றாலும்
இந்த முறை
ரொம்ப ரொம்பவே வலித்தது.
சொன்னேனே அதைத் தாந்
என் கொலுசு தொலைந்து போயிற்று’.

பழந்தமிழ்ப் பரிச்சயம் நிறைய வாய்க்கப் பெற்ற சதாரா மாலதியின் கவிதைகளில் புராண, இதிகாசக் குறிப்புகளும், குறியீடுகளும் அநாயாசமாக வந்து விழுகின்றன!

‘இவை தாண்டி வடவாக்கினியில்
நுழைந்து மீளவும் பச்சைப் புண்ணிடை
பதிகம் தேறவும் பேச்சுக் காதுகளின்
ஊசி கோர்த்த மௌனத் துளை வழி
நெடிய வானம் காணவும்
நீ தான் நீ தான் உடன் வேண்டும்
பால் மறந்து நோயகன்றேக வேண்டும்
(போர் நீங்கிய தேசத்தின்)
‘தெள் நினைவு அறும் தொலைவில்
மனம் போக அஞ்சினேன்
சகுந்தலை விரலணியும்-
தொலைந்தது நுரை மடிப்பில்
(எதுவுமில்லை)

சுய-அலசல், சுய-விமரிசனம் செய்து கொள்ள இவர் கவிதைகள் தயங்குவதேயில்லை! அங்கீகாரத்திற்காய் ‘தான்’ அல்லாத ஒரு பிம்பத்தை தன்னுடையதாக வாசகர் மனதில் பதிய வைக்க இவர் கவிதைகள் முயற்சி செய்வதில்லை. ‘அன்புண்டு ஆண்டவன் தானில்லையென/ அநியாயப் புளுகுக்கு பயிற்சியெடுக்கவில்லை’, முதலிய பல வரிகளை உதாரணங் காட்டலாம்.

பெண்கள் உடல்களாய்
ஆண்கள் வெறும் கண்களாய்
பார்வையும் மனதும்
சதுப்புகளில் அறைபட்டு
இருட்டறை இலக்கியங்களின்
மிகும் வாழ்க்கை
வயிறுகளில்!
-என்று முடியும் கவிதை ஒரு விலகிய தொனியில் வெடிகுண்டுகளின் மத்தியிலும், இருட்டறை இலக்கியங்களின் மிகும் வாழ்க்கை வயிறுகளிலும் அறைபட்டுக் கிடக்கப் போகும் இனியான வாழ்க்கையை நமக்கு கவனப்படுத்துகிறது. அதேபோல், ‘வாழ்க்கை’ என்ற கவிதையும் நிறைவான வாசிப்பனுபவம் தருவது.

வலிகளால் பாறையைச் சமைக்க முனைந்த
சிற்பிகள் நாம். நம் வீடுகள் எல்லாம் சிறகு முளைத்துப் பறந்து
இங்குமங்கும் சுவர்களாய்
வழித்தடங்களாய், சத்திரத்துத் திண்ணைகளாய்
காத்திருப்பு இருக்கைகளாய் அமர்ந்து கொண்டன’
-என்று ஆரம்ப வரிகளிலிருந்து முடிவு வரி வரை ‘இறுக்கமே’ அதன் சிறப்பான நிகிழ்தன்மையாய் கட்டமைக்கப்பட்ட கவிதையிது. சில வரிகள் அதிகமாகத் தென்பட்டாலும் கூட, ஒவ்வொரு வாக்கியமும் தனித்தனி கவிதையாக வாசிப்பிற்கு உகந்ததாகிறது.

‘இது பதிலில்லை’ என்ற கவிதை ‘என் தோல்வி எதுவென்றால் நான் செத்தே பிறந்தது’, என்று வாழ்வின் ஆற்றாமைகளைப் பேசுகிறதென்றால் ‘உன்னிடம்’ என்ற கவிதை ‘ இழந்த உலகங்களை/ ஈடுகட்டிச் சிரிக்குமிடம்/ அந்தப் புல்லிடம் சிலிர்க்கும்/கண்ணிடம் கொள்ளூம்/ தூக்கம் போல்’ என்று இழந்த உலகங்களை மீட்டெடுத்துக் கொள்ளும் இதமான உணர்வு குறித்துப் பேசுகிறது!

எங்கோ ஒரு மனத்தின் ஒற்றை ஏரிக்குள்
இரட்டையாய் பிரிந்திருக்கும் நீர்ப்பரப்பில்
அமுதோ நஞ்சோ
ஒன்றை ஆய்ந்தெடுத்து
குளுமை தேடித் துவண்டு வீழவென்று
பறக்கும், தொடர் பறக்கும், அதுவரை
சுமை தவிர்க்க, தலை மேல் அழுத்துகின்ற
ஆணானதையெல்லாம்
அகற்றிவிடல் கூடுமேல்’
-என்ற ஆணாதிக்க எதிர்ப்பு வரிகள், ‘பறத்தல் இதன் வலி’ என்ற கவிதையில் இடம்பெறுவது. ‘பிசாசின் தன் வரலாறு’ என்ற நீள்கவிதை அதன் மொழிப் பிரயோகத்திற்கும், உள்ளடக்கத்திற்கும் குறிப்பிடத்தக்கது. சிறந்த பெண்ணியக் கவிதை,பெண்மொழிக் கவிதை எனக் கூறத்தக்கது; எனில், அப்படி யாரும் இதுவரை பொருட்படுத்திக் கூறியதாகத் தெரியவில்லை. மேலும், நவீனத் தமிழ்க் கவிதையில் நீள்கவிதை எழுதியவர்கள் குறைவு. பெண்களில் எனக்குத் தெரிந்து இவரும், திலகபாமாவும் தான் எழுதியிருக்கிறார்கள்.

‘நெடுநாளைய சேமிப்பு நிறைய கனவு
பொய்களின் அழகை வடிவை
பைக்குள் அமுக்கி விட’ (பொய்க்கடை)
இல்லாதவர் பூசின
சொல்லாத வர்ணமே
நெஞ்சில் எப்போதும்
குங்குமமாய் அப்பி (ஹோலி)
சொல்லுக்குள் கர்ப்பம் உறா உணர்வை
ஞாபகங்களில் சிறைப்படாத நரம்பை (தாண்டவம்)
படிகளில் ஏறி விட
வடிகால் அமைத்துத் தர
சேக்காளி குழு துருப்புச் சீட்டு
கோட்டைப் பொய் சேராமலே
எனக்கும் அடையாளமுண்டு
அது என் தனிக்கவிதை’ (உறுப்பிலக்கணம்)
நிறமிழந்து வானவில்
வந்து போன நெடுகிலே
தாமரை பூத்தது நெருப்புச் சட்டிகளில் (தாமதம்)
சுறாக்கள் தின்னும் மேனி
நக்கிக் கடல் புகும் (சுறாக்கள் தின்னும்)
பித்தளை அடைப்பானை ஒருவன்
கவர்ந்து செல்ல
பெரிய்ய நீர்த்தொட்டி
துளைப்பட்டது நாட்டில்
நான் நீர்த்தொட்டிக்கோ அடைப்பானுக்கோ
சொந்தக்காரியில்லை (அசட்டையாய்)
என பலப்பல வரிகளை ‘சதாரா’ மாலதியின் கவித்துவத்திற்கு எடுத்துக்காட்டுகளாகத் தரலாம். சதாரா மாலதியின் கவிதைகளில் முக்கியமான கவித்துவ அம்சமாகக் குறிப்பிட வேண்டியவை அவற்றின் பாசாங்கற்ற உணர்வெழுச்சி, அமுதனைய தமிழ், தாளகதி, மற்றும் வாழ்வின் நுட்பமும், விரிவும். எல்லாத் தொகுப்புகளையும் போலவே இவருடைய கவிதைகளிலும் ( இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு எனக்குப் படிக்கக் கிடைத்ததில்லை) நீர்த்துப் போன, உரைநடைத் தன்மை அதிகமான கவிதைகளும் காணக் கிடைக்கின்றன என்றாலும் ஒப்புநோக்க அவை அதிகமில்லை. கவிதைகளின் தொனியில், கட்டமைப்பில், மொழிவழக்கில் சதாரா மாலதி வெவ்வேறு வகைமைகளைக் கையாண்டு பார்த்திருக்கிறார். அவர் கவிதைகளில் விரவித் தெரியும் காதலும், வாழ்வீர்ப்பும் மிகுந்த கவனம் கோருபவை. காதலை முதிர்ச்சியோடு கையாளுதல் என்பதாய் முன்வைக்கப்படும் வாதத்தை போலியாக்குவதாய் காதலை அதற்குரிய அத்தனை பரவசத்தோடும், குழந்தைத்தனத்தோடும் வடித்துக் காட்டுகின்றன சதாரா மாலதியின் கவிதைகள்!
நவீன தமிழ்க் கவிதை குறித்த கருத்தரங்குகளில் தனது கருத்துக்களைத் தெளிவாக முன்வைக்கும் சதாரா மாலதியின் கட்டுரைகளில் அவருடைய வாசிப்பின் வீச்சும், அவற்றின் வழியான ‘கவிதை பற்றிய பார்வையின் நுட்பமும் குறிப்பிடத் தக்கது.


சதாரா மாலதி மறைவு

பாவண்ணன்

தொண்ணு¡றுகளின் தொடக்கத்தில் சில கவிதைமுயற்சிகள் வழியாகவும் சிறுகதைமுயற்சிகள் வழியாகவும் தமிழில் அறிமுகமானவர் மாலதி. புதுச்சேரியைச் சேர்ந்த மாலதியும் அப்போது எழுதிக்கொண்டிருந்தார். பெயர்க்குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக சதாரா மாலதி என்று மாற்றிக் குறிப்பிடத் தொடங்கினார். எங்கள் துறையிலேயே பணிபுரியும் முகம்மது அலி என்னும் நண்பர்வழியாகத்தான் அவர் எனக்கு அறிமுகமானார். அப்போது பெங்களூரில் வசித்துவந்த சரஸ்வதி ராம்னாத் அவர்களைச் சந்தித்து ஒரு நீண்ட நேர்காணல் எடுக்கவேண்டும் என்னும் விருபத்தை ஒருமுறை வெளிப்படுத்தினார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தபோது அவர் மிகவும் மகிழ்ந்தார். இதுநடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவருடைய வரிக்குதிரைகள் என்னும் கவிதைத்தொகுப்பு அவருடைய சொந்தப் பெயரிலேயே வெளிவந்தது. பெங்களூரிலிருந்து சதாரா என்ற ஊருக்கு மாற்றலாகிச் சென்ற தருணத்தில்தான் அந்த ஊரின் பெயரைத் தன் பெயரோடு சேர்த்துக்கொண்டார். சந்தியா பதிப்பகத்தின் வழியாக அவருடைய சிறுகதைத் தொகுப்பொன்றும் வெளிவந்தது. பல கருத்தரங்குகளில் பங்கேற்று தொடர்ந்து தன் சிந்தனைகளை முன்வைத்து ஊக்கமுடன் செயல்படுபவராகவே வலம்வந்துகொண்டிருந்தார். உரையாடலில் அளவற்ற ஈடுபாடு கொண்டிருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பாவைப் பாடல்களில் தாம் திளைத்த அனுபவத்தை மற்ற நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் ராயர்காப்பி கிளப் என்னும் வலைமனையில் தொடர்ந்து எழுதிவந்தார். அவருடைய சிந்தனை வளத்துக்கு இந்த அனுபவக்கட்டுரைகள் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. மொழிபெயர்ப்பு முயற்சியிலும் அவர் ஆர்வம் காட்டினார். எச்.எஸ்.சிவப்பிரகாஷ் என்னும் கன்னட நாடக ஆசிரியர் சிலப்பதிகாரத்தைப் பின்னணியாகக் கொண்டு மதுரைக்காண்டம், மாதவி என்னும் இரண்டு நாடகங்களை எழுதினார். அவற்றில் மதுரைக்காண்டம் என்னும் நாடகத்தை நான் மொழிபெயர்த்திருந்தேன். மாதவி நாடகத்தையும் நான் மொழிபெயர்த்திருப்பேனோ என்கிற ஐயமிருந்தது அவருக்கு. என்னிடம் விசாரித்தார். நான் மொழிபெயர்க்கவில்லை என்றதும் அவர் ஊக்கத்துடன் மொழிபெயர்த்தார். பெண் பாத்திரங்களை மையமாகக் கொண்ட நாடகங்களைத் தொடர்ந்து ஆர்வத்துடன் அரங்கேற்றிவரும் வெளி ரெங்கராஜனுக்கு அந்தக் கையெழுத்துப் பிரதியை அனுப்பிவைத்தார். அவரும் அந்த நாடகத்தை அரங்கேற்றும் எண்ணத்தில் இருந்தார். சில முன்னேற்பாடுகளை செய்துவிட்டு பயிற்சியைத் தொடங்க எண்ணியிருந்தார். ஆனால் தன் மொழிபெயர்ப்பில் நாடக அரங்கேற்றத்தைக் காணாமலேயே அவர் இயற்கையெய்திவிட்டார். சதாராவிலிருந்து மீண்டும் பெங்களூர் வந்துவிடலாம் என்று எண்ணியிருந்த அவரை சாங்லிக்கு மாற்றல் செய்தது நிர்வாகம். அது அவரை மிகவும் மனச்சோர்வுக்குள்ளாக்கியது. கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு அவர் இரண்டாண்டுகளுக்கு முன்னர் பெங்களூர் வந்தார். சில மாதங்கள்மட்டுமே வேலை பார்த்திருந்துவிட்டு விருப்ப ஓய்வைப் பெற்று எழுத்து முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட நினைத்தார். எதிர்பாராதவிதமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டதால் அந்த முயற்சி கைகூடவில்லை. தொடர்ச்சியான மருத்துவம் பலனளிக்காமல் 27.03.2007 அன்று மாலை இயற்கையெய்தினார். 28.03.2007 அன்று அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு பெங்களூர் இலக்கிய நண்பர்களும் அலுவலக நண்பர்களும் அஞ்சலி செலுத்தினர். அன்று நண்பகல் அவருடைய உடல் எரியூட்டப்பட்டது.

**

நன்றி: திண்ணை,லதா ராமகிருஷ்ணன், பாவண்ணன்

**

மேலும்..

என் மகள் N. மாலதி – (19-ஜூன் 1950—27 மார்ச் 2007)  1  –  லலிதா

என் மகள் N. மாலதி (19-ஜூன் 1950—27 மார்ச் 2007)    2  –  லலிதா

ஆபிதீன் கதைகள்…

Abedeen's Book

ஆபிதீனின் ‘இடம்’ பதிப்பாளர் : ஸ்நேகா / சென்னை
Sneha Publishers , 348, T.T.K. Road ,Royappettah , Chennai 14 , India – Pin : 600 0014 , Tel : 0091 44 2811 1997 email : snehapublishers@hotmail.com

***
Abedeen’s e-Mail : abedheen@gmail.com

***

பிளிறும் களிறு முதல் பிப்பீலிகை வரையுள்ள அனைத்து ஜந்துக்களுக்கும் இருக்க இடத்தையும் உண்ண உணவையும் அளிக்கும் இந்த வையகம் சிலரை அவற்றுக்காக ஓடவும் விரட்டி விரட்டி தக்க வைத்துக் கொள்ளவும் பணித்து விடுகிறது. ஆபிதீன் எழுதிய ‘இடம்’ [கதை] மிக அருமையாகச் சொல்லப் பட்டிருக்கிறது.

வெளிப்பாடுகளை வைத்து உணர்ச்சிகளைச் சொல்வது அரியதொரு விஷயம்.

வெளிப்பாடுகளில் வரும் ,ததும்பிவழியும் , இதயப் பிரவாகங்கள் வார்த்தைகளில் அடங்காதவை. அவை எதையோ சொல்ல ,வெறெதையோ புரியவிடுபவை. வெண்ணைத்திரள் போல உருண்டு விழுந்து திடீரென்று காணாமல் போகிறவை. எத்தனையோ சாதாரணக் கண்களுக்குப் புரியாமலே மறைகிறவை. ஆபிதீன் சொல்கிற ‘இடம்’ எங்கெங்கோ என்னை இழுத்துப் போயிற்று. காற்றடிக்கும் வெட்டவெளியுடன் கூடிய, உயரக் கூரை கொண்ட வாட்ச்மேன் அறை. மூட்டைப்பூச்சி பண்ணையிலிருந்து தப்பி அதற்குள் வந்து சேரும் தமிழ் முஸ்லிம். ‘நான் என்ன வாட்ச் மேனா? ஸாப்ட்வேர் ப்ரோக்ராமராக்கும். வாட்ச்மேன் இடதுமூலையில் இருக்கிறான். அவனைக்கேட்டால் வலது மூலையில் இருப்பதாகச் சொல்லக்கூடும்.’ என்று சொல்லும் அரபு நாட்டு விருந்தாளி. எந்த இடத்திலும் உயர்வு நவிற்சி இல்லாமல் பெரிய சிரமத்தைக்கூட வலி கூட்டிச் சொல்லாமல் இயல்பாகப் பிழிந்து தரும் சோகம் இருக்கிறதே ! அது செய்தி.

பேய்க்கு ஐந்து திர்ஹம் கொடுப்பவரின் பாஷை முழுக்க வைரமும் ரத்னமும். இடையில் மலைப்பாதை நதி போல மிளிர்ந்து கம்பீரம் காட்டும் நகைச்சுவை வேறு.

‘சேகரித்து வைத்திருந்த சண்டை எல்லாவற்றையும் போட்டுத்தீர்த்த மனைவி ‘பற்றி வேறெந்த விடுமுறை நாயகரும் சொல்லியிருக்க மாட்டார்.

மார்க்கத்து நையாண்டி நிந்தனைகள் எல்லா மார்க்கங்களுக்கும் பொருந்துவதே.

கெட்ட வார்த்தைகளும் வில்லங்கமான ஹாஸ்யங்களும் ,எழுதினவர் பண்பை உயர்த்தி வைக்கிற அதிசயம் ,ஆபிதீன் எழுத்தினால் மட்டுமே விளையும்.

இந்த எழுத்துக்கு நான் இது வரை சம்பாதித்த சொத்து முழுக்கத் தந்து விடுகிறேன் என்றேன். ‘பன்முக’த்துக்கு சந்தாவை முதலில் அனுப்பிவிடுங்கள் என்றார் எம்.ஜி.சுரேஷ்.

சதாரா மாலதி (‘பன்முகம்’ கடிதம்)