கார்ட்டூனிஸ்ட் மதன் எழுதிய ஜீனியஸ்-ல் இந்தக் கோவணம் வருகிறது. பார்த்து, மன்னிக்கவும், படித்து ரசித்தேன். ‘நாம் சர்வ சாதாரணமாக ‘கோடிவீட்டு கோதண்டம் பெரிய ஜீனியஸ், தெரியுமில்ல?!’ என்கிறோம் – அதன் நிஜ அர்த்தம் புரியாமல்!’ என்றுதான் தொடரை அவர் ஆரம்பிக்கிறார்! மகான்களுக்கும் தத்துவ மேதைகளுக்கும் முன் மாமன்னர்கள் சர்வ சாதாரணம் என்று சொல்லும் இந்தப் பகுதி அருமை. இந்த நாளுக்குப் பொருத்தமானதும் கூட!
*
கிரேக்க தத்துவ மேதை டயோஜினீஸ் ஒரு நாள் பாலைவன மணலில், கோவணம் மட்டும் அணிந்துகொண்டு படுத்திருக்க, அந்தப் பக்கமாக மாஸிடோனியாவின் மன்னராகிவிட்ட அலெக்ஸாந்தரின் பரிவாரம் செல்ல நேர்ந்தது. ‘அங்கு படுத்திருப்பது யார்?’ என்று அலெக்ஸாந்தர் வினவ, ‘டயோஜினீஸ்.. மன்னா!’ என்று தளபதி எடுத்துச் சொல்ல, உடனே குதிரையிலிருந்து கீழே குதித்து தத்துவ மேதையின் அருகில் விரைந்த மன்னர் ‘தங்களுக்காக நான் ஏதாவது செய்ய வேண்டுமா?’ என்று பணிவோடு கேட்டார். டயோஜினீஸ் எல்லாவற்றையும் கடந்த, பழுத்த தத்துவஞானி. மன்னரை ஏறிட்டுப் பார்த்து தலையசைத்த அவர் ‘எனக்கும் சூரியனுக்கும் இடையில் நிற்காமலிருந்தால் நன்றாக இருக்கும்!’ என்று சாவதானமாகச் சொல்ல, அலெக்ஸாந்தரின் மெய்க்காவலர்கள் ஏக காலத்தில் கோபத்துடன் வாளை உருவினார்கள். ‘வாளை உரையில் போடுங்கள்!’ என்று ஆணையிட்ட மன்னர் திரும்பிச் சென்று குதிரையில் ஏறும்போது தன் தளபதியிடம் ‘அடேங்கப்பா! நான் மட்டும் அலெக்ஸாந்தராக இல்லையென்றால் டயோஜினீஸாக இருக்கவே ஆசைப்படுவேன்!’ என்றார் புன்னகையுடன்.
*
நன்றி : மதன், வெங்கட் ரமணன்