சஹர்பாவா பற்றிய சம்பவத்தை அவர் வர்ற அதே நேரத்துல அடிச்சி வெளியேத்துன மஜீது பாய் 2020க்கு நன்றி. ரொம்ப நாளைக்குப் பொறவு இங்கே தட்டியிருக்கார். இன்னும் தட்டனும். – AB.
*
டேப் காதர் – மஜீத்
சின்னப்புள்ளையா இருக்கும்போது – என்ன ஒரு மூனுநாலு வயசிருக்கும் – நோம்புநாளைல வீட்ல விடியக்காலைல சஹரு வைக்கிறதுக்கு எந்திரிப்பாய்ங்களா, எங்கிட்ருந்துதான் முழிப்பு வருமோ எந்திரிச்சிருவேன்…. சஹரு வைக்கத்தான்…
அதேமாதிரி சாயந்தரம் எங்கேர்ந்தாலும் நோம்புதிறக்குறதுக்கும் தவறமாட்டேன்…
பெரும்பாலும் படுக்கப்போகும்போது நாம போடுற கண்டிசனோட எஃபக்டா, காலைல எழுப்பிவிட்ருவாய்ங்கெ.. ஃபுல்கட்டு கட்டிட்டு – முக்கியமா அந்த தயிரு வாழைப்பழம் – தூங்கிறவேண்டியதுதான். சமயத்துல வெருகுமாதிரி கரெக்ட் டயத்துக்கு, சாப்பாடு வச்சவொடனே எந்திரிக்கிறதும் உண்டு.
அப்டி ஒருதடவை தன்னால எந்திரிச்ச அன்னிக்கு, திடீர்னு ஒரு சந்தேகம்… இவய்ங்கெல்லாம் எப்டி முன்னாலயே எந்திரிச்சு சமைச்சி ரெடியாகுறாய்ங்கென்னு… அலாரம்லாம் அப்ப ஃபேஷன் இல்லை.. அவய்ங்கெட்டயே கேட்ருவோம்னு கேட்டா, சஹர்பக்கிரிசா வந்து எழுப்பிவிட்ருவாருன்னு சொல்லவும்.. அவரு வந்து எப்டி எழுப்புவாருன்னு இன்னொரு சந்தேகம் வந்தாலும் கேக்கலை… நாமளே பாத்துருவோம்னு முடிவு பண்ணியாச்சு.. அடுத்தநாள் உசாராவே தூங்கிக்கிட்ருந்தேன்.. சஹருப்பக்ரிசா டேப்படிக்கிற சத்தம் வீட்டுவாசல்ல கேக்கவும் ஒரே ஒட்டமா ஓடி கதவைத்திறந்து என்ன சொல்றாருன்னு பாக்குறதுக்கு நின்னா அவருபாட்டுக்கு பாடிக்கிட்டே போய்ட்டாரு.. உள்ளே வந்தா, எல்லாரும் எந்திரிச்சுட்டாய்ங்கெ.. வெருகு தன்னால எந்திரிச்சிருச்சு பாருன்னு சொல்லிக்கிட்டே, எதுக்குடா வாசக்கதவைத் தொறந்தேன்னு கேட்டாய்ங்கெ… சஹர்ப்பக்ரிசா வந்து எழுப்புவாருன்னு சொன்னிய.. அவருபாட்டுக்கு டேப்படிச்சுக்கிட்டே போய்ட்டாருன்னு கொறைப்பட்டுக்கிட்டேன்.. அவரு வர்ற சத்தங்கேட்டு நாமதான் எந்திரிக்கனும்கவும் புஸ்ஸுன்னு ஆயிருச்சு..
பல பக்ரிசாக்கள் வந்தாலும் அப்போ வந்த அந்த வயசான சஹர்பக்ரிசா மேல சின்னப்புள்ளைகளுக்கு ஒரு பிரியம்தான்.. வெளையாடுற வெளையாட்ட விட்டுட்டு வீட்டுக்குள்ள ஓடி அரிசியோ காசோ வாங்கிக் கொடுத்துட்டுத்தான் மறுவேலை… பெரியபெரிய பாசிமணி மாலைலாம் கலர்கலரா போட்டுருப்பாரு.. அதீத சாந்தமா ஒரு முகம்.. கொஞ்சநாளைக்கப்பறம் அவரைக்காணலை… சஹருக்கு இன்னோரு சாந்தமுக வயசான பக்கிரிசா வந்தாரு… கருப்புநெறம்…அவரைவிட இவரு நல்ல உயரம், குரலும் கணீர் ரகம். பிற்பாடு அவரை நான் பாட்டிவீட்டுக்குப் போகும்போது சிவகங்கைல பாத்தேன்.. நன்னி வீட்டுக்கு பக்கத்துலயே. எங்க நன்னிட்ட விசாரணையைப் போட்டா, அவரு இந்த ஊருதாண்டா, அந்தா பள்ளியாசலுக்கு எதுத்தாமாதிரி ஒரு ’கோரி’ (சமாதி) இருக்குல்ல? அதுக்குப்பக்கத்துல ஒரு கட்டடம் இருக்குபாரு, அங்கதான் இருக்காருன்னு சொல்லவும், நூறு தொணைக்கேள்வி கேட்ருப்பேன்…(இவரு எப்டி அங்கெ எங்க ஊர்ல?)
இப்பதான் மேட்டர்… அவரு குடும்பத்துல மொத்தம் அஞ்சுபேரு.. அவரு அவரோடமகன் காதர், காதரோட அம்மா, அப்பறம் காதரோட சின்னம்மாமாரு ரெண்டுபேரு… காதருக்கு அப்ப பதினஞ்சு வயசிருக்கும்… மாநெறம்.. கண்ண்ண்ணீர்னு ஒரு குரல்.. நல்ல ஒயரம்… டேப் அடிச்சிக்கிட்டுப் பாடுனா எல்லாருக்கும் புடிக்கும்… பகல்ல பாடுற சூஃபிப் பாட்டுகளுக்கும், பாடாதபோது ரெண்டு சின்னம்மாக்கள்ட்ட வம்பிழுத்து வலுச்சண்டை போடும்போது பேசுற லாங்குவேஜுக்கும் இடைவெளி ஏழுகாத தூரத்துக்கும் மேல… யாரும் ஏண்டா இப்டி கெட்டவார்த்தையா பேசுறே மூதேவின்னு கேட்டுப்புட்டா அம்புடுத்தேன்.. ஒன்னையாடி கேட்டேன், அவளுகளைத்தானடி கேட்டேன்னு ஆரம்பிச்சு, சின்னம்மாக்களைக் கேட்டமாதிரி ஒரு பத்துமடங்கு கேள்வி, அவுகளுக்குக் கெடைக்கும்.., அப்டி ஒரு அடங்காத குணம்… அவங்க அம்மாவும் பாவாவும் அவரைத் திருத்த முயற்சி பண்ணி, அவ்ளோ திட்டு வாங்கினதுக்கப்பறம், எப்டியோ தொலைன்னு விட்டுட்டாக…
இஷாவுக்கு அப்பறமா, சாப்ட்டுக்கீப்ட்டு எல்லாரும் படுத்தவொடனே, டேப்பை எடுத்துருவாரு காதரு…. கம்பீரமான குரல்ல சும்மா ஒரு மணிநேரம் சினிமாப் பாட்டாப் பாடுவாரு.. வித்தியாசமான ப்ளேலிஸ்ட்டு… பழசு, புதுசு, ஹிட்டு, யாரும்கேட்டே இருக்காத பாட்டுன்னு சும்மா கலக்கி எடுத்துப்புடுவாரு… இதுல என்ன விசேசம்னா, அப்பப்ப பாட்டுகளுக்கிடைல அவுக சின்னம்மா ரெண்டுபேரையும் நைஸா நொழைச்சுருவாரு.. அது நல்லமாதிரியும் இருக்கும், கெட்டமாதிரியும் இருக்கும்… அவர்ட்ட யாருபோய்க் கேக்குறது? இப்டித்தான் ஒருநாள் ராத்திரி பாடிக்கிட்டே இருக்காரு, இடையில ஒன்னும் செருகல் இல்லை, என்ன ஆச்சு இன்னிக்கு? ஏன் இன்னும் சின்னம்மாக்களை இன்னிக்கு கோர்த்தூடலைன்னு அந்த ஏரியாவைவே யோசிக்க வச்சிட்டாருன்னா பாத்துக்கிங்க… மணி பத்தை நெருங்கவும், யாரோ (ஒரு சின்னம்மாவாத்தான் இருக்கனும்) போதும் படுடான்னு சொல்றதும் கேட்டுச்சு.. நீ பொத்திக்கிட்டு தூங்குடி டேஷ்டேஷ் ன்னு சொல்லிட்டு கடேசிப்பாட்டு ஒன்னு பாடுனாரு பாருங்க: (அப்ப புத்தப்புதுசா ரிலீசான பாட்டு)
யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க..
முழுப்பாட்டையும் பாடிட்டாரு… அப்பவும் சின்னம்மாக்களைப்பத்தி ஒன்னும் சொருகலை…
பாட்டையும் முடிச்சாரு… இப்டி…..:
என் காலம் வெல்லும்; வென்றபின்னே வாங்கடா வாங்க
வாங்……கடா வாங்க…
ஐசா வா…………ங்கடா வாங்க…
சவுரு வா………ங்கடா வாங்க….
ஐசா (ஆயிஷா)
சவுரு (ஸஹர்பான், இல்லைனா ஜஹுபர்னிசாவா இருக்கும்)
ரெண்டும் அவுக சின்னம்மாக்களோட பேரு….
கொஞ்சநாள்ல காதருதான் எங்க ஊருக்கு சஹர்ப்பக்ரிசாவா வந்தாரு.. அப்பறமா ரொம்பநாளா அவரைப் பாக்கலை.. சுமாரா ஒரு அஞ்சு பத்து வருசம் இருக்கும்.. எதிர்பாக்காத வகைல எதிர்பாக்காத இடத்துல அவரை சந்திச்சோம்.. எங்கத்தாவும் நானும்…
அந்த ஏரியாவுலேயே ஒரே வண்டிங்கிற ரேஞ்சுல எங்கத்தா எங்கூர்ல ஒரு மோட்டார் சைக்கிள் வச்சிருந்தாரு.. பிற்பாடு அவருதான் ரொம்ப்பேருக்கு வண்டியோட்டப் பழகிக்கொடுத்தாரு.. பலமாதிரி வண்டிகள்லாம் வச்சிருந்துட்டு லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர்ல செட்டில் ஆன நேரம் அது.. அவரு வண்டியை யாரையும் தொடக்கூட விடமாட்டாரு… அப்டியாப்பட்டவரு அவரு ஃப்ரண்டு ஒருத்தருக்கு வண்டியைக் கொடுத்துட்டாரு.. அதுவும் எந்த ஊருக்குன்னா, கிட்டத்தட்ட அறுபத்தஞ்சு கிலோமீட்டருக்கு அப்பால இருக்குற திருவாப்பாடிங்கிற ஊருக்கு,, இவரு சின்னப்புள்ளைல அம்மாபட்டினத்துல இருக்கும்போது அவரு பழக்கமாம்.. வயசு இவரைவிட ரொம்ப அதிகம்..அப்பப்ப அவரு எங்கவீட்டுக்கு வந்துட்டுப் போவாரு.. ஏதோ ஒரு கணக்குல வண்டியை மூனுநாளைக்குன்னு கொடுத்துவிட்டுட்டாரு.. வண்டி அஞ்சுநாளாகியும் வரலை.. சரி இனிமே சரியா வராதுன்னு கெளம்பிட்டாரு… பஸ்ல திருவாப்பாடிக்கு… வர்றியாடா தம்பின்னு என்னயக் கேக்கவும், நமக்கு கசக்குமா என்ன? தொத்திட்டேன்… மத்தியானம் கெளம்பி, சாயந்தரம் போய்ச்சேந்தோம்..
வண்டியைப்பாத்தா பாவமா இருந்துச்சு… ஸ்டாட்டாகலய்யான்னு சொன்னாரு… மெக்கானிக்கை வரச்சொல்லிருக்கேன் இன்னும் வல்லைன்னும் சொன்னாரு.. எங்கத்தா உக்காந்துட்டாரு… பிரிபிரின்னு பிரிச்சு என்னென்னவோ பண்ணி, சிகரெட் ஃபாயில் பேப்பரையெல்லாம் ஊஸ் பண்ணி, ஒரு மணிநேரத்துல வண்டியை ஸ்டாட் பண்ணிட்டாரு… ஒரேஒரு சின்ன சிக்கல்… எங்கெயோ அவரு விழுந்து எந்திரிச்சதுல ஹெட்லைட்டு கண்ணாடி, பல்பெல்லாம் ஒடைஞ்சிருந்துச்சு… சரிபண்ண முடியாது.. பரவால்ல போயிரலாம்னு கெளம்பிட்டோம்.. அரைவெளிச்சத்தோட கெளம்புனா ஆவுடையார்கோயில் வந்து சேரும்போதெல்லாம் நல்ல இருட்டு… எங்கெ சாப்டம்னு இப்ப நெனைப்பில்லை… டீக்குடிச்சிட்டு, சிகரெட் அடிச்சிட்டு கெளம்புனா இருட்டிருச்சு…. ஊர் எல்லை தாண்டுற வரைக்கும் ஒன்னுந்தெரியலை… ஒரு ரெண்டு கிலோமீட்டர் தாண்டுனவொடனே ரோடு தெரியலை.. வண்டில லைட்டும் இல்லை.. (இருந்தாலும் பிரமாதமாத்தான் இருக்கும்னு வைங்க)… அடுத்த ஊருன்னு எடுத்துக்கிட்டா ஏம்பல்தான்… ஆனா அதுவரைக்கும் போகமுடியான்னு இப்ப அவருக்கே யோசனையாப் போச்சு… என்னடா தம்பி பண்ணலாம்னு எங்கிட்ட கேட்டாரு.. போங்க பாப்போம்னு சொல்றேன் நான், பெரியமனுசன் மாதிரி… இன்னும் கொஞ்சதூரம் ஸ்லோவா போனோம்.. திடீர்னு ஒரு வெளிச்சம் தெரிஞ்ச்சிச்சு.. சுமாரா ஒரு மைலுக்கு அங்குட்டு… தம்பீ, என்னமோ லைட்டு தெரியுது ஆனா அங்கெ எதுவும் பெரிய ஊரு இல்லயேடான்னாரு… நான் மறுபடியும், போங்க பாப்போம்னு சொன்னேன்.. கிட்டக்க நெருங்க நெருங்க மைக்செட் லவுடுஸ்பீக்கர்ல பாட்டுன்னு ஒருமாதிரி சூழ்நிலை மாறிருச்சு… ஒரு ஆள் சைக்கிள்ல வந்தாரு.. அவர்ட்ட இது எந்த ஊரு என்ன விசேசம்னு கேட்டா, இந்த கிராமத்துக்குப் பேரு பாக்குடி… திருவிழா… வள்ளிதிருமணம் நாடகம் ஆரம்பிக்கப்போறாகன்னாரு… போனா, ரோட்லேர்ந்து இருபது அடி ஆழத்துல, ஆறோ,கம்மாயோ தெரியலை, தண்ணி இல்லை, மணல்ல கூத்துக்கொட்டகை.. தம்பி, ஒதுங்க இடம் கெடைச்சிருச்சு, இருந்து கூத்துப்பாத்துட்டு விடியக்காலம் கெளம்பலாம்டான்னாரு.. ஆகா, ஊர்ல கூத்துப்பாக்கப் போனா என்னமாதிரி திட்டுவிய… இப்ப என்ன பண்ணுவியன்னு எனக்கு உள்ளுகுள்ள கும்மாளம்.. நாடக செட்டும் அப்ப ஃபேமசா இருந்த செட்டுகள்ல ஒன்னு…
எஸ்.எம் சொர்ணப்பா ராஜபார்ட் முருகன், பாக்கியலட்சுமி ஸ்ரீபார்ட் வள்ளி (ஒரு காது கருப்பாயிருக்கும்.. அந்தப்பக்கம் நெறைய பூ வச்சு மறைச்சிருக்கும்,,,) கேஎம்பி சண்முகசுந்தரம் ஆர்மோனியம் பின்பாட்டு, நடராசன் மிருதங்கம் அன் டோலக், தங்கவேலு பபூன் காமிக், டேன்ஸ் காமிக் யாருன்னு நெனப்பில்லை.. முக்கியமா நாரதர் கலைச்செல்வி.. எனக்கு ரொம்பநாளா பாக்கனும்னு ஆசை.. பொம்பளை எப்பிர்றா நாரதர் வேசம் போடும்னு… அன்னிக்கு எனக்கு செம லக்கு… நாங்க இருந்த சைடுல இருந்து இந்த வாத்தியகோஷ்டி உக்காந்த பகுதி தெரியாது… சென்டர்ஸ்டேஜுதான் தெரிஞ்சிச்சு..
ஒரு ரெண்டுமணி நேரமிருக்கும்… வள்ளி வந்தாச்சு, நாரதரும் வள்ளியும் தர்க்கம் ஆரம்பிச்சாச்சு…
திடீர்னு அண்ணே,,,,,,,ன்னு ஒரு கம்பீரக்குரல்… பாத்தா ஜிப்பாப்போட்டுக்கிட்டு நம்ம டேப் காதரு..
என்னண்ணே இந்தப்பக்கம், நாடகம் பாப்பியன்னு தெரியும், அதுக்காக இம்புட்டுத் தூரமா வருவிய?
தம்பீ, நல்லாருக்கியாடான்னு எனக்கு ஒரு வரவேற்பு… வண்டி லைட்டு எரியமாட்டேங்க்குதுடா காதரு,,, அதான் விடிஞ்சதும் போகலாம்னு உக்காந்துட்டோம்… அது சரி, நீ எப்டி இங்கெ வந்தே? உனக்கென்ன இங்கெ வேலைன்னு கேட்டாரு… என்னண்ணே இப்டிக்கேட்டுட்டிய? நான் இப்ப நாடகத்துக்கெல்லாம் டேப் வாசிக்கிறேன்ல? என்ன நாடகம் பாக்குறிய நீங்க….? எல்லா நாடக நோட்டிஸ்லயும் இருக்குமேண்ணே….
இப்பல்லாம் எம்பேரு வெறும் காதர் இல்லைண்ணே… டேப் காதர்
*
நன்றி : டேப்பு மஜீது