ஃபேஸ்புக்கில் மகுடேசுவரன் நேற்று எழுதிய பதிவை மிகவும் ரசித்தேன். கச்சிதமான காமெடி. பகிர்கிறேன். – AB
*
மின்கட்டணம் கட்டிவிட்டு வரும்வழியில் வெந்நீர் விருப்பு தோன்றிற்று. ஒரு தேநீரகத்தில் ஒதுங்கினேன்.
பருத்த உருவமுடைய ஒருவர் தம் தேநீரைப் பருகி எழுந்தார். *நிறப்பூச்சாளராக இருக்க வேண்டும். எழுந்து வெளியேறியவர் தம் வண்டியை அணுகினார். அதே விரைவில் பதறியபடி கடைக்குள் வந்தார்.
“வண்டில வெச்சிருந்த கவரைக் காணோம். உள்ளே பில்லு, கணக்கு நோட்டு, இரண்டாயிரத்து ஐந்நூறு பணம் வெச்சிருந்தேன்…” என்றார். கடைக்காரர் திருதிரு என்று விழித்தார். நாங்களும் பரபரப்படைந்தோம்.
நல்ல வேளை, கடை முழுவதும் கண்காணிப்புப் பதிவன்கள் பொருத்தப்பட்டிருந்தன. “கேமராவைக் கொஞ்சம் போட்டுக் காட்டுங்க…” என்று பதறியபடி வேண்ட கடைக்காரர் பதிவுப் படங்களைப் பின்னகர்த்தி ஓடவிட்டார்.
நிலைமையின் பதற்றமுணர்ந்த தேநீர்க்குடியர்கள் அனைவரும் படத்தை உற்றுக்காணத் தொடங்கினர். தேநீர்க் கலைஞர், உதவியாளர் என அனைவரும் காட்சித்திரை முன் கூடிவிட்டோம்.
”அதா… ஒருத்தன் வரான்… அவன்தான் எடுத்திருப்பான்… இல்லயே… வண்டியத் தொடாம போயிட்டானே… பக்கத்தில ஒருத்தன் வண்டியை நிறுத்தறான்… பாருங்க… அவனா இருக்குமோ…. அவனும் இல்லையே…” என்று ஒவ்வொருவரும் துப்பறியும் சிங்காரமாக மாறியிருந்தோம்.
யாரும் வண்டியை அணுகவில்லை. நிறுத்தியது நிறுத்தியவாறு இருந்தது.
“அப்ப நான் பெயிண்டுக் கடைலயே விட்டுட்டு வந்துட்டனாட்டம் இருக்குது…” என்று நிறப்பூச்சாளர் தம்மை மறந்து கூறினார்.
எல்லாரும் அவரையே பார்த்தோம். யாரையும் எதிர்கொள்ள முடியாமல் வெளியேறியவர் வண்டியைக் கிளப்பிக்கொண்டு கடையை நோக்கிப் பறந்தார்.
எங்களுக்கு வைக்கப்பட்ட தேநீர் ஆறியிருந்தது.
***
* நிறப்பூச்சாளர் : Painter
நன்றி : மகுடேசுவரன்