மணிக்கொடியில் எழுதிய மஆலி சாஹிப்

 ‘நீண்ட ஆயுள்’ அனைவருக்கும் கிட்டட்டுமாக! மஆலி சாஹிப் எழுதிய ஒரு சிறுகதை : ‘நீண்ட ஆயுள்’. ‘நவீன விருட்ச’த்தில் திரு. அசோகமித்திரன் எழுதிய குறிப்பு ஒன்றை பார்த்தபோதுதான்   ஜனாப். மஆலி சாஹிப்-ஐ அறிந்தேன்.  அப்போது ‘மணிக்கொடி’ தொகுப்பு என் கையில் இல்லை. ஊர் போயிருந்தபோது செய்த முதல் வேலை ம ஆலி சாஹிபின் சிறுகதையை கையில் எடுத்ததுதான். அந்த வேலைக்கு முன் இன்னொரு முக்கிய வேலை செய்தேன்தான், அதையெல்லாம் பொதுவில் சொல்ல முடியாதுங்க 🙂 .

அசோகமித்திரன் குறிப்புகள் :

‘முதுமையின் மிகப் பெரிய சோகம் நம்முடைய நண்பர்கள் ஒவ்வொருவராக மறைந்து கொண்டிருப்பார்கள் என்று இங்கிலாந்து எழுத்தாளர் சாமர்சாட் மாம் கூறினார். இதையே வேறு பலரும் கூறியிருக்கிறார்கள். தொண்ணூற்றொரு ஆண்டுகள் வாழ்ந்த மாம் பழுத்த அனுபவத்தால்தான் கூறியிருக்கிறார்.

‘மணிக்கொடி இதழ் தொகுப்பு’ படித்துக் கொண்டிருக்கும்போது எனக்கு மாம்மை நினைவுபடுத்தியவரை நண்பர் என்று கூற முடியாது. ஆனால் அவரை நிழலாகப் பல ஆண்டுகள் நான் அறிந்திருந்தேன். எனக்கு எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும்போது, ‘ஆனந்தவிடனி’ல் ஒரு கதை என் மனதை மிகவும் சங்கடப்படுத்தியது. குடிகாரனான தன் அப்பாவை ஒரு சிறுமி படுக்க வைத்து, உணவு கொடுத்துப் பாதுகாப்பாள். அச் சிறு வீட்டில் அவளும், அவள் தகப்பன் மட்டும்தான்.

அவன் வியாதி முற்றிப்போய்ப் படுக்கையிலேயே இறந்து விடுகிறான். அவன் இறந்து விட்டான் என்று தெரியாது. அவள் அவனுக்கு உணவு தர முயற்சி செய்வாள். இந்தக் கதை தொடர்ந்து நினைவில் இருந்து வருவதற்கு இன்னொரு காரணம் அது ஒரு முஸ்லிம் கதை. அது முஸ்லிம் கதை என்று அடையாளப் படுத்த அப் பெண்ணின் பெயருடன் அவள் தன் அப்பாவை ‘வாப்பா’ என்று அழைப்பாள்.

இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து ‘ஆனந்தவிகட’னில் இன்னொரு முஸ்லிம் கதை. அதை எழுதியவருக்குச் சிறுகதைப் போட்டியில் அது முதல் பரிசு பெற்றுத் தந்தது. கதையின் பெயர் ‘கல்லறை மோகினி’. எழுதியவர் மீ ப சோமு. இதிலும் ‘வாப்பா’, ‘மவுத்’, ‘நிக்கா’ எல்லாம் உண்டு. இந்தக் கதைக்குக் கதைச் சுருக்கம் தருவது நியாயமல்ல. பரிசுதான் தரலாம்.

நான் முதலில் சொன்ன கதையை எழுதியவர் ம ஆலி சாஹிப். ‘மணிக்கொடி’ பத்திரிகையிலும் ஒரு கதை எழுதியிருக்கிறார் (அவர் இன்னும் பல கதைகள் எழுதியிருக்கக் கூடும்). அதிலும் முடிவு சாவில்தான். இன்றைக்குச் சரியாக 63 ஆண்டுகள் முன்பு எழுதியிருந்தாலும் அது வடிவத்தில் ஒரு நவீனக் கதை. ‘ஆனந்தவிகடன்’ கதையும் நவீனக் கதையே.

இவருடைய பெயரை எப்படி உச்சரிப்பது என்று புதிராக இருந்ததாலேயே அவருடைய பெயரை எளிதில் மறக்க முடியவில்லை. அவரை நான் சந்திக்க நேரும் என்று அப்போது நான் நினைத்திருக்க முடியாது.

ஆனால் சென்னையில் ஜெமினி ஸ்டுடியோவில் வேலைக்குச் சோந்தவுடன் முதல் நாளிலேயே சந்தித்த நபர்களில் அவரும் ஒருவர். எனக்கு மேஜையிருந்த ‘கோஹினூர்’ கட்டிடத்தில் அவருக்கும் ஒரு மேஜை போடப்பட்டிருந்தது. அந்தக் ‘கோஹினூர்’ கட்டிடத்திலேயே இன்னொரு முஸ்லிமும் இருந்தார். அவர் சையத் அகமத். ம ஆலி சாஹிப் கதை எழுதுபவர். சையத் அகமத் ஆர்ட் டைரக்டர். அவர் விளம்பர டிசைன்கள் செய்து கொண்டிருப்பார். ஜெமினிகதை இலாகாவில் ம ஆலி சாஹிப்பும் இருந்தார்.

வாரத்திற்கு நான்கு ஐந்து முறை ஜெமினி முதலாளி கதை இலாகாவினருடன் சேர்ந்து பேசுவார். அந்த அறை சாதாரணமான கட்டிடம். ஆஸ்பெஸ்டாஸ் கூரை. இரண்டு பெரிய ஜன்னல்கள். யார் யார் இருக்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்று வெளியில் இருந்தபடியே தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் சகஜமாக உரத்துப் பேசுவார்கள். வெற்றிலைப் பாக்குப் புகையிலை போடுவார்கள். எல்லோருமாகச் சேர்ந்து டிபன் சாப்பிடுவார்கள். ஏதோ சில நண்பர்கள் கூடி விவாதம் நடத்துவது போல் இருக்கும். ஜெமினி ஸ்டுடியோவிலும் சிக்கனம் கடைப்பிடிக்க வேண்டி வந்தபோது இந்த இலாகா கலைந்து போயிற்று.

ம ஆலி சாஹிப் தன் மேஜையைக் காலி செய்யும்போது அந்த அறையில் நான் இருந்தேன். மாதாமாதம் சம்பளம் என்பது போய் இனி என்ன செய்யப் போகிறோம் என்ற கவலை அவரிடம் இருந்தது.

அவரை எந்த உத்தியோகத்திலும் பொருத்திப் பார்க்க என்னால் முடியவில்லை. கதை இலாகாவில் அவருடைய பங்களிப்பு இருந்திருக்க வேண்டும். ‘மணிக்கொடி’யில் அவர் பிரசுரமான எழுத்தாளரல்லவா? இந்தி சினிமாவில் பல முஸ்லிம் கதைகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்திய சுதந்திரத்திற்கு முன்பு இது நிறையாவே நிகழ்ந்திருக்கிறது. சுதந்திரத்திற்குப் பின்பும், முஸ்லிம் கதைகள், முஸ்லிம் பாத்திரங்களுக்குத் தொடர்ந்து பிரதிநிதித்துவம் இருந்திருக்கிறது. மலையாள சினிமாவில் ஓரளவு முஸ்லிம் கதைகள், பாத்திரங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

தமிழ் சினிமாவில் தொழில் நுட்பத் துறையில் சிலர் இருந்திருக்கிறார்கள. ‘மணிக்கொடி இதழ்த் தொகுப்பில்’ ம ஆலி சாஹிப் பெயரைப் பார்த்தவுடன் இதெல்லாம் நினைத்துப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது’.

***

நீண்ட ஆயுள்

மஆலி சாஹிப்

மணிக்கொடி / 1938 ( மணிக்கொடி இதழ் தொகுப்பிலிருந்து) 

கார்ப்பொரேஷன் கடிகாரம் ஒன்பது மணி அடித்தது. டிராம் வண்டிகளெல்லாம் அதற்குள் நின்று விட்டன. காரணம் மாலையிலிருந்து ஓயாத மழை கொட்டிக் கொண்டிருந்ததுதான். இரவும் பகலும் ஜன சஞ்சாரமாய் இருக்கும் பார்க் டவுண் அன்று நிர்மானுஷ்ய தோற்றத்தோடு விளங்கிற்று. பசி, வெய்யில், அந்தி சந்தி ஒன்றையும் கவனியாமல் ஒன்றரையாணாக் காசுக்காக ஓயாமல் ஓடித்திரியும் ரிக்ஷா வண்டிக்காரர்களும் கூட அப்போது அங்கே காணப்படவில்லை. அவர்கள் மரத்தடியிலும், கட்டிட ஓரங்களிலும் தங்கள் தங்கள் ‘ரத’ங்களை ஒதுக்கமாய் விட்டு வைத்து, சந்து பொந்துகளில் ஒதுங்கிக் கொண்டிருந்தனர். வாயுவின் துணை கொண்டு வருணன் அவ் வேழைகளின் மீது ‘விண்ணீர்’ தெளித்துக் கொண்டிருந்தான்.

சிற்சில பாதசாரிகள் மட்டும் தங்கள் வேஷ்டிகளை முழங்காலுக்கு மேல் பாய்ச்சி கட்டிக் கொண்டு, குடைகளைப் பிடித்து அந்த ஊதக் காற்றிலும் ஓயாத் தூற்றலிலும் போட்டி போட்டு, நடந்து சென்று கொண்டிருந்தனர். பகலெல்லாம் பிச்சையெடுத்து, கூடைக்காரியிடம் எச்சில் சோறு வாங்கித் தின்றுவிட்டு, மரத்தடியிலும், நடை பாதையிலும் ஒண்டி ஒடுங்கித் தூங்கும் வழக்கமுடைய தரித்திரப் பிராணிகள் அன்று இருக்க இடமில்லாமல், மூடிக் கிடக்கும் கடைகளின் சார்புகளின் கீழ், ஒதுங்கிக் கொண்டிருந்தனர். ஆனால், கால் அரை மணி நேரத்துக்கொரு தரம் மட்டும் ஓரோர் மோட்டார் கார் ‘ஹாரன்’ சப்தம் செய்ய வேண்டிய அவசியமுமில்லாமல் பேயாய்ப் பறந்து கொண்டிருந்தது.

அத்தகைய தருணத்தில் ஒரு மனிதன், மூர் மார்க்கெட் வாயிலினின்று வெளிப்பட்டான். அவன் அணிந்திருந்த மூக்குக் கண்ணாடியின் கீழ்ப் பாதி வில்லைகளின் வழியே, தலையைச் சாய்த்துப் பாதையை நோக்கிக் கொண்டிருந்தான். உட்குழிந்த அவனது ஒளி மழுங்கிய கண்கள், எதையோ தேடிக் கொண்டிருந்தன. வலமும் இடமும் திரும்பித் திரும்பிப் பார்த்தான். ஆனால் அவன் எதிர்பார்த்த ‘வஸ்து’ அவன் கண்களில் படவில்லை. ஒல்லியாய் – வற்றலாய் – உரமற்றுப் போயிருந்த அவன் சரீரம் அந்தக் காற்றுக்கும், குளிருக்கும், தூற்றலுக்கும் தாளாது வெடவெடவென்று உதறிக் கொண்டிருந்தது. அவனது நடையும் ஸ்திரமற்று, கால்கள் நிலைகொள்ளாமல் ‘நிருத்திய’மாடிக் கொண்டிருந்தன. அவனது ‘ஹாட்’ தலைமீது விழும் மழைத்தாரையைத் தாங்கும் ஒரு சிறு குடை போல் அவனுக்குப் பயன்பட்டது; அதன் வரம்புகளினின்று நீர் கொட்டிக் கொண்டிருந்தது.

அந்த மனிதன் தன்னுடைய சட்டையும் தொப்பியும் நனைந்து போவதையும் பொருட்படுத்தாமல் , உறைத்தாளால் போர்த்து மூடிக் கட்டப்பட்டிருந்த ஓர் பார்சலை மட்டும் மிகப் பத்திரமாய் இடுக்கி வைத்திருந்தான். ஆகவே அந்தப் பொருள் அவனுக்கு மிக அருமையும் முக்கியமும் எனத் தெரிந்தது.

நடைபாதையின் ஓரத்தில் நின்று கொண்டு, நடுப் பாதையையே அவன் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தான். ஆயினும் எதிர்பார்த்தது அவன் கண்ணில் தட்டுப் படவில்லை. ஓர் ஐந்து நிமிஷ நேரம் காத்திருந்தான். அந்த அவஸ்தையில் அவன் மனம் மிகவும் சஞ்சலமுற்றது. சற்று தூரத்தில் விளக்குடன் ஓரு வஸ்து இருப்பதைக் கண்டான். அதுதான் அவன் இத்துணை நேரம் எதிர்பார்த்தது. எனவே மிக ஆவலோடு அவன், ‘ஏய், ரிக்ஷா! ஏய், ரிக்ஷா’ என்று உரத்துக் கூவினான்.

ரிக்ஷாக்காரன் வண்டியை வேண்டா வெறுப்போடு இழுத்துக் கொண்டுவந்து நின்றான்.

‘பிராட்வே போவதற்கு எவ்வளவு கேட்கிறே?’ என்று கேட்டான் அம்மனிதன்.

‘பத்தணா கொடுக்கனும்; அதுக்குக் குறைந்து, இந்த மழையிலும் குளிரிலும் யார் வருவா?’ என்று பதிலிறுத்தான் ரிக்ஷாக்காரன்.

‘அடே, என்ன, மூர் மார்க்கெட்டிலிருந்து பிராட்வேக்கு டிராம் வண்டியில் அரையணா வாங்குகிறான். உனக்குப் போனா போகிறது, இரண்டரை கொடுக்கிறேன். வருகிறாயா?’

‘போய்யா, போ, இரண்டணாவைக் கண்டுட்டே, எட்டணாவுக்கு ஒரு பைஸா குறையாது’ என்று கூறிக்கொண்டே, திரும்ப வண்டியை இழுத்துச் செல்லலானான்.

அந்த மனிதன் தன் சட்டைப் பையில் கையைப் போட்டுப் பார்த்தான். அதில் இரண்டணா நாணயத்தைத் தவிர்த்து வேறொன்றுமில்லை. ‘சரி, நடந்துதான் போய்ச் சேரவேண்டும், வேறு வழியில்லை’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

அவன் தன் பொட்டணத்தை, மழைத்துளி படாவண்ணம் இன்னமும் பத்திரமாய் அமுக்கிக் கொண்டு, மெதுவாக நடந்து செல்லலானான். பாலத்தைக் கடந்து ஸென்ட்ரல் ஸ்டேஷன் எதிரில் வந்து , மீண்டும் நாலா பக்கமும் நோக்கினான். ரிக்ஷாவாலாவும் காணப்படவில்லை. நடையைக் கொஞ்சம் துரிதப்படுத்திக் கொண்டு பிராட்வேயை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான்.

அவன் மனத்தில் யுகாந்தப் பிரளயம் போல் எண்ணங்கள் எழுந்தன. என்னென்னமோ எண்ணினான். அவனது வாலிபப் பிராயம், உத்தியோகக் காலம், இல்லற வாழ்வு, மனைவி, மக்கள், மரணம், குதிரைப் பந்தயங்கள், சொத்துச் செல்வ நாசம்… முதலியவெல்லாம் சொப்பனம் போல் அவன் மனக்கண் முன் தோன்றித் தோன்றி மறைந்தன. இந்தச் சிந்தனைகளிலேயே ஆழ்ந்து விட்ட அவன், பாதையையும் கவனிக்கவில்லை.

ஈவ்னிங் பஜார் வழியாகப் போய்க் கொண்டிருந்த அவன் ‘ஆ….!’ என்று அலறிக் கொண்டு வீழ்ந்தான். அதே சமயம் ‘கிறீச்..’ என்று ‘பிரேக்’ சப்தமும் கேட்டது. அவன் ஒரு மோட்டார் சக்கரத்தினடியில் சிக்கிக் கொண்டு கிடந்தான்.

இந்தச் சப்தம் வெகு தூரம் வரை கேட்டிருக்கும். அக்கம் பக்கங்களில் மழைக்குப் பயந்து, கடைச் சார்புகளுக்குக் கீழ் ஒதுங்கி, உறங்கிக் கொண்டிருந்த ஏழை மக்கள் வெளிப்பட்டு ஓடி வந்தனர். சிறிது நேரத்தில் ஜனங்கள் கூடிக் கொண்டனர். ஒரு சிலர், மோட்டார் டிரைவரைக் கன்னாபின்னாவென்று திட்டினர். வேறு சிலர், ‘கண் தெரியாதவனெல்லாம் நடு ரோட்டில் எதற்காக நடக்க வேண்டும்?’ என்று பரிந்து பேசினர். அதற்குள், சற்று தூரத்தில் வண்டிப் போக்குவரத்தைக் கவனிப்பதற்காக நியமிக்கப் பட்டிருந்தும், மழைக்காகவும் குளிருக்காகவும் அஞ்சி, தன் கடமையை விடுத்து, கட்டிட ஓரத்தில் உட்கார்ந்து உறங்கிக் கொண்டிருந்த போலீஸ்காரன் ஓடி வந்தான்.

போலீஸ் சேவகன் ஓடி வந்ததும், ஜனங்கள் ஒதுங்கினர். மோட்டார் சக்கரத்தில் நசுங்கிக் கிடந்த அம் மனிதனின் ‘சடலம்’ வெளியிலெடுக்கப்பட்டது. ஜனங்களைப் போலீஸ்காரன் பல கேள்விகள் கேட்டான். டிரைவரைச் சில கடுஞ்சொற்களால் மிரட்டினான். பிறகு தன் ஜோபிலிருந்து ‘நோட்புக்’ எடுத்து எழுதலானான். ‘தற்செயலாய் நேர்ந்த மோட்டார் விபத்து. ஆங்கிலோ இந்தியன், வயது 60 , பெயர் தெரியவில்லை, மோட்டார் நெ. 6666. டிரைவர் பெயர்……. சாட்சிகள்……’

போலீஸ்காரன் மோட்டாருக் கிரையான மனிதனின் தேகத்தைச் சோதிக்கலானான். சட்டைப் பையில் இரண்டணா நாணயம், ஒரு சாவிக்கொத்து மட்டும்தான் இருந்தன. இத்துணை விபரீதம் நேர்ந்தும் அவனது இடது கரம் அந்தப் பார்ஸலை மிகவும் பத்திரமாக அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தது. உயிர் போயும் அவன் கரம் பார்ஸலை விடவில்லை.! போலீஸ்காரன் அந்தப் பார்ஸலை எடுத்துப் பிரித்தான். அது ஒரு புஸ்தகம். அவன் தனது ‘டார்ச் லைட்’ ஒளியைத் தூண்டி அப் புஸ்தகத்தின் பெயரைப் பார்த்தான்.

‘நீண்டாயுள் வாழ அனுபவ முறைகள்’ என்று அதில் எழுதப் பட்டிருந்தது.

நீண்ட நாள் உயிரோடிருக்க வேண்டுமென்று விரும்பிய , அந்த அபாக்கியசாலியின் பிரேதம் , அருகேயிருந்த ஜெனரல் ஆஸ்பத்திருக்கு அதே மோட்டாரில் கொண்டு செல்லப்பட்டது.

‘நீண்ட ஆயுள் பெறப் பிரியப்பட்டான்; ஆம், இனி அவன் சூட்சும லோகத்தில் , பல் ஊழி காலம் நீண்டாயுள்தான் பெற்று வாழப் போகிறான்’ என்று , கூடியிருந்த கும்பலில் ஒரு சோம்பேறி கூறிச் சிரித்துக் கொண்டு சென்றான்.

***

நன்றி : அசோகமித்திரன், கலைஞன் பதிப்பகம், நவீன விருட்சம்