கனவில் விளையும் முத்துக்கள்

போதிசத்வ மைத்ரேய எழுதிய வங்க நாவலான ‘சிப்பியின் வயிற்றில் முத்து’ (Jhinuker Pete Mukto) நாவலிலிருந்து பதிவிடுகிறேன். (பக்: 283-286. தமிழாக்கம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி . நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு). சென்ஷியின் குடவுன்-லிருந்து நாவலை டவுன்லோட் செய்யலாம் (pdf). நன்றி.

***

pearl1“……  சிப்பித் தாய்கள் கடுஞ் சூட்டிலே இனிப்புத் தண்ணிக்காக ஏங்கிக்கிட்டு இருப்பாங்க. பௌர்ணமி இரவிலே மழைத் தண்ணி ரொம்ப இனிப்பாயிருக்கும். அந்தத் தண்ணியைச் சொட்டுச் சொட்டாய்க் குடிச்சால் அதுகளோட தாகம் தணியும். நிலவிலே கழுவின அந்தத் தண்ணிச் சொட்டு அதுகளோட வயித்திலே போய் அதிலேருந்துதான் முத்து பிறக்கும்…”

அந்தோணி வியந்தான். “அப்படியா?”

பீட்டர் சிரித்துக் கொண்டு சொன்னான். “இப்படித்தான் எங்க ஜனங்க நம்பறாங்க. தலைமுறை தலைமுறையா இந்தக் கதை வழங்கி வருகிறது… ஆனால் உண்மையிலே முத்து எப்படிப் பிறக்குதுன்னு என் கல்லூரி ஆசிரிய சிநேகிதன் சொல்லியிருக்கான். உனக்கு இது பற்றித் தெரியுமா?”

“தெரியாது நீ சொல்லு..”

“சிப்பியோட உடம்பு மிகவும் மிருதுவான தசை. அது கடினமான ரெண்டு மூடியிலே ஒட்டிக்கிட்டிருக்கும். ஒரு நகைப்பெட்டியை மூடி வச்சாப்பலே இருக்கும் ரெண்டு மூடியும். அந்த ரெண்டு மூடிக்கும் நடுவிலே உள்ள இடைவெளி வழியாக கடல் தண்ணி உள்ளே போகும். வெளியே வரும். இந்தத் தண்ணி மூலமாகத்தான் சிப்பி மூச்சுவிடும். தனக்கு வேண்டிய உணவைப் பெறும். இந்தத் தண்ணியோடே ஒரு சின்ன மணல் துண்டோ அல்லது அது மாதிரி கடினமான ஒரு பொருளோ சிப்பிக்குள் போயிட்டால் அது சித்திரவதைப் படற மாதிரி அவஸ்தைப்படும். அந்த மணலால் அல்லது கடினப் பொருளால் அல்லது பாக்டீரியாக் கிருமிகளால் சிப்பியின் உடம்பிலே புண் ஏற்படும். சிப்பியோட இந்த வேதனைதான் முத்து உண்டாகக் காரணம்…”

“வேதனையாலே முத்து எப்படி உண்டாகும்?’

“இந்த வேதனையிலேருந்து விடுதலை பெறச் சிப்பியோட உடம்பிலேருந்து ஒரு வகை ரசம் ஊறும். இந்த ரசத்திலே சுண்ணாம்பு அதிகம். இது ஒரு ரசாயணப் பொருள். இதுக்குப் பேரு கஞ்ச்சியோலின். இந்த ரசம் புண்ணைச் சுத்திப்படிஞ்சு கொஞ்ச நேரங்கழிச்சு இறுகிப் போயிடும் – புண்ணுக்கு உறை போட்டப்பலே. அப்பறம் அந்த உறைக்கு மேலே இன்னோர் உறை. அதுக்கு மேலே இன்னொண்ணு.. கடைசியிலே இது பட்டாணி மாதிரி உருண்டையா ஆயிடும். இதுதான் முத்து. அது மேலே ஒளிபட்டால் வான வில்லின் நிறங்கள் தெரியும்..”

“அப்படியா! இந்தப் புண்ணும் வேதனையும் இல்லேன்னா முத்துப் பிறக்காதா?’

“பிறக்காது.. அது மட்டுமில்லே.. முத்து பெரிசா ஆயிட்டா, அதாவது பழுத்துட்டா, சிப்பித்தாய் செத்துப் போயிடும். சிப்பிக்கு வேதனை அதிகமாக ஆக முத்தோட அளவும் பெரிசாயிருக்கும். சாதாரணமாக, பெரிய பெரிய முத்து செத்துப் போன சிப்பியிலேருந்துதான் கிடைக்கும். எது ரொம்ப கஷ்டப்பட்டு பிறக்குதோ அதுக்குத்தான் உலகத்திலேயே மதிப்பு அதிகம். இதுதான் என் அனுபவம். மதிப்புள்ள எதுவுமே வேதனையில்லாமே பிறக்கறதில்லே…”

“சரியான பேச்சு” அந்தோணி ஆமோதித்தான்.

பீட்டர் அந்தோணிக்கருகில் வந்தமர்ந்து பேசத் தொடங்கினான் – “முத்து மாதிரி சுதந்திர மனப்பான்மையைப் பெறனும்னா மனிதனும் துக்கத்தையும் வேதனையையும் அனுபவிக்கத்தான் வேணும்.. பிரிட்டிஷ்காரங்க நமக்கு விடுதலை கொடுத்துட்டாங்க. ஆனால் நமக்கு உண்மையான விடுதலை எங்கே கிடைச்சிருக்கு? அதைப் பெறத் தேவையான துக்கமும் வேதனையும் நாம எங்கே அனுபவிச்சோம்? நாம மத வெறியிலேருந்து விடுதலையைடைய அனுபவிக்க வேண்டிய பயங்கர வேதனையைத் தவிர்க்க முயற்சி செய்யறோம். தலைமுறை தலைமுறையா வழங்கிவர்ற அர்த்தமில்லாத பழக்க வழக்கங்களை நாம ஆசாரங்கற பேரிலே அழுத்திப் பிடிச்சுக்கிட்டிருக்கோம். அதுகளை விட்டு விடணும்னாலும் கஷ்டப்படணும். வேதனைப் படணும். அதுக்கு நாம தயாரில்லே.. நாம ஒருத்தரை ஒருத்தர் சுரண்டறோம். ரத்தத்தை உறிஞ்சறோம்.. இந்தப் பழக்கத்தை விடறதுக்கும் நாம தாக்கணும், அடிபடவும் வேணும். எல்லாமே வேதனைதான். கண் திறக்கிற வேதனை. நம் நாட்டிலே எல்லாருக்கும் இந்த வேதனை பொறுக்க முடியாத அளவுக்கு வளரல்லே இன்னும். இந்த எரிச்சல் இப்போதான் ஆரம்பிச்சிருக்கு. இது கொஞ்சம் ஜாஸ்தியாகும். ஆயிரம் மடங்கு ஜாஸ்தியாகும். ஒவ்வொரு மனுசனின் மனசிலேயும் இந்த எரிச்சல் உண்டாறபோது இதிலேருந்து தப்பறதுக்காக அவன் மனசிலேயே ஒரு ரசம் உற்பத்தியாகும். முதல்லே ஒரு சுற்று ரசம். அப்புறம் அதுக்கு மேலே இன்னொரு சுற்று. அதுக்கு மேலே இன்னொண்ணுன்னு கடைசியிலே இந்த ரசம் கெட்டியாகி  மாந்தாதா காலத்திலேருந்து தொடர்ந்து வர்ற சொத்தைச் சடங்குகளையும் அழுகிப் போன சட்டங்களையும் அழிச்சிடும். பழைய சமூகம் சிப்பி மாதிரி செத்துப் போயிடும். முத்துப் போன்ற, விட்டு விடுதலையாகி விட்ட சமூகம் பிறக்கும். அது முத்து மாதிரி பிரகாசமா, வஜ்ரம் மாதிரி உறுதியா இருக்கும். அது ரொம்ப உசத்தியான பொருள்…. இந்த சுதந்திர சமூகத்திலே ஜாதி-மத வேற்றுமை இருக்காது. ஏழை-பணக்கார வித்தியாசம் இருக்காது. ஒருத்தனை ஒருத்தன் சுரண்டல் இருக்காது. அடி தடி இருக்காது. மனுசர்களோட பரஸ்பர உறவு இயற்கையா , எளிமையா தோழமையா இருக்கும். ஒருவன் மற்றவனை முழுவதும் நம்புவான்…”

***

நன்றி : நேஷனல் புக் டிரஸ்ட் , சென்ஷி