‘ஒட்டக மனிதர்கள்‘சிறுகதைத் தொகுப்பிலிருந்து ஒரு கதை , ரெண்டு கிலோ இறைச்சியுடன்!
*
டியூசன் – பூந்தை ஹாஜா
எங்கள் ஊர், அழகான வயல்வெளிகள், திண்ணை வீடுகள், மரத்தடி, குளம், கோயில், பள்ளிவாசல்கள், கிறிஸ்துவ ஆலயங்கள், இவற்றுடன் ஆறு மற்றும் மண் மணக்கும் விளையாட்டுகள், மற்றும் பல விவசாய உழைப்பாளிகள், கல்விமான்களை பெற்றெடுத்து, அனைத்து வளத்தையும், வற்றாத நன் நீரூற்றைத் தன்னகத்தே கொண்ட செழிப்பான பூமி.
உயர்ந்த சாதியினர், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் சாதி மத பேதமின்றி அடிப்படைக் கல்வி கற்கும் பள்ளிக்கூடத்தில் பயின்று வந்தோம்.
நாங்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தின் எதிர் வீட்டில் குடியிருக்கும் பார்வதி அய்யர் டீச்சர் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகளுக்கு டியூசன் எடுத்து வந்தார். பள்ளி வகுப்புகள் முடிந்தவுடன் பார்வதி டீச்சரிடம் டியூசன் படித்து வந்தோம். பள்ளி விடுமுறை நாட்களில் டியூசன் வகுப்புகள் மதியம் இரண்டு மணி முதல் நான்கு மணி வரையிலும் நடைபெறும். அன்று வெள்ளிக்கிழமை பள்ளி விடுமுறையானதால் வழக்கம்போல் வீட்டில் சமைத்திருந்த மதிய உணவை சாப்பிட்டுவிட்டு நானும் என் அக்காவும் டியூசன் வகுப்புக்குச் சென்றோம் டியூசனில் எங்கள் கூட படிக்கும் பிள்ளைகளும் ஏற்கனவே வந்து அமர்ந்திருந்தனர். டீச்சருக்கு வணக்கத்தினைத் தெரிவித்துவிட்டு டீச்சர் உட்கார்ந்திருந்த நாற்காலியைக் கடந்து எங்கள் இடத்தில் போய் அமர்ந்தோம்.
உட்கார்ந்தவுடன் எங்கள் இருவரையும் அழைத்து.. “இறைச்சி சாப்பிட்டா வந்தீங்க..” என்று கேட்ட டீச்சரிடம் “ஆம்” என்ற பதிலைத் தந்த மாத்திரத்திலேயே “நீங்கள் இன்று டியூசனில் இருக்க வேண்டாம்.. வீட்டுக்கு போயிட்டு நாளைக்கு வாங்க…” என்று கோபத்துடன் கூறியதை கேட்டதும் செய்வதறியாது டீயுசன் வகுப்பை விட்டுப் பதட்டத்துடன் வீட்டை நோக்கி நடந்தோம்.
நடந்துக்கொண்டே “ஏன்க்கா.. இறைச்சி சாப்பிட்டா டீச்சருக்கு பிடிக்காதா..” என்று கேட்ட என்னிடம்
“ஆமா பிடிக்காது…. அம்மாட்ட சாப்பிடும் போதே கேட்டேன்.. அம்மா சொன்னாங்க மாட்டிறைச்சின்னு சொன்னாங்க. அதைத்தான் நாம சாப்பிட்டு டியுசனுக்கு போனாம். அது பிடிக்காமத்தான் நம்மளை திருப்பி அனுப்பிட்டாங்க..”
“நாம சாப்பிட்டது டீச்சருக்கு எப்படிக்கா தெரிஞ்சுச்சு…” என்று ஒன்னும் புரியாதவனாய் கேட்டான். அதற்கு பதில் சொல்லத் தெரியாதவளாய் என் அக்கா சென்று கொண்டிருக்க நானும் பின் தொடர்ந்தேன்.
“அப்பா கேட்டா என்ன சொல்லப்போற..” என்று நான் அக்காவைப் பார்த்துக் கேட்டேன். அக்காவிடம் பதில் இல்லாததால் எதுவும் பேசாமலேயே வீடு வந்து சேர்ந்தோம்.
டீயுசன் கிளாஸில் இருந்து பாதியிலேயே வீடு திரும்பிய என்னையும் என் அக்காவையும் கண்ட என் தந்தை காரணம் தெரியாமல் எங்கள் மேல் கோபப்பட்டார்..
“ஏன்.. என்னாச்சு.. பாதியிலேயே வந்தீட்டங்க..” என்ற என் தந்தையின் கடினக் குரலால் நாங்கள் சற்று தடுமாறித்தான் போனாம். நாங்கள் ஏன் திருப்பி அனுப்பப்பட்டோம் என்ற தகவலை என் தந்தையிடம் கூறினேன். உடனே என் தந்தை வெற்றியிலையில் சுண்ணாம்பு தடவி லெட்சுமி சீவல் வைத்து மடித்து என் வாயிலும் என் அக்கா வாயிலும் மெல்லச்சொன்னார். நாங்கள் நண்கு மென்ற பிறகு முதலில் வந்த சிவந்த எச்சிலை துப்பச்சொன்னார். பிறகு சில துளிகள் மென்ற பிறகு அதனை துப்பச் சொல்லிவிட்டு வாய் நன்றாக கொப்பளிக்கச் சொல்லி, நாங்கள் என் தந்தை சொன்னதை செய்து முடித்ததும், மேலும் இறைச்சி வாசல் வெளியே தெரியாத வகையில் எங்கள் அம்மா எங்களுக்கு ஃபான்ஸ் பவுண்டரை உடலில் நன்றாக தேய்த்து மறுபடியும் எங்களை டியூசன் கிளாஸ்க்கு போகச் சொன்னார்.
டியூசன் வகுப்பை நோக்கி நடந்தோம். “வெத்திலை சீவல் போட்டா அந்த வாசம் போயிடுமா அக்கா…” என்றேன்.
“ஆமா… இப்ப நாம ரெண்டுபேருக்கும் இறைச்சி வாசனை போயிடுச்சு..” இப்ப டீச்சர் ஒன்னும் சொல்லமாட்டாங்க.. என்று சொல்லிக்கொண்டே டியூசன் வந்து சோர்ந்தோம்.. திண்ணையில் டியூசன் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
எங்கள் இருவறையும் கண்டதும் கோபத்துடன் பார்த்த டீச்சரிடம் எங்கள் தந்தை வெற்றிலை பாக்கு போட்டு விட்டதை சொன்ன பிறகு எங்களை அமரச் சொல்லிவிட்டு….
“இப்ப நான் சொல்றத நல்லா கேட்டுக்கோங்க.. இனிமேல் யாரும் இறைச்சி சாப்பினுட்டு டீயுசனுக்கு வரக்கூடாது. இறைச்சி சாப்பிடுவது மகா பாவம்… என்று கோபமாகக் கூறினார். டியூசனில் இருந்த அத்தனை பேரும் “சரிங்க டீச்சர்” என்று சொல்லிவிட்டு டீச்சர் நடத்திய பாடத்தினைப் படிக்க ஆரம்பித்தோம். டியூசன் வகுப்பு முடிய இன்னும் அரை மணி நேரம் இருக்கின்றது என்பதனை அங்கு மாட்டி வைக்கப்பட்டிருந்த கடிகாரம் காட்டித் தந்தது.
வீட்டின் முன்பு ‘’அய்யா… அய்யா. ‘’. என்ற குரல் கேட்டு பாடம் நடத்திக் கொண்டிருந்த பார்வதி டீச்சர்… ”செத்த இருங்கே.. அப்பாவை கூப்பிடுறேன்… ’’ என்று சொல்லிவிட்டு வீட்டின் உள்ளே சென்று தன் அப்பாவை அழைத்து வந்தார்.
“யாரப்பா அது…” என்று கேட்டுக்கொண்டே வந்தார் பார்வதி டீச்சரின் அப்பா.
“அய்யா.. மாடு இருக்குன்னு என் மனைவி சொன்னுச்சு.. அத புடுச்சுட்டு போலாம்னு வந்தோமுங்க..” மாடு பிடிக்க வந்த அண்ணாமலையின் மனைவி, பார்வதி டீச்சர் வீட்டில் உள்ள மாடுகளுக்கு வைக்கோல் வைப்பதும், மற்றும் சில சமயங்களில் புல் கொண்டுவருவதும் மேலும் மாடு கட்டப்பட்டிருக்கும் கொட்டகையை சுத்தம் செய்யும் வேலையைத்தான் செய்துவந்தார். பால் கறப்பது பார்வதியின் அம்மாவும் சில சமயங்கலில் பார்வதியும் கறந்து வந்தனர். மாடு பால் கொடுப்பதை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் சரிவர தீனியையும் உணவாக எடுத்துக்கொள்ளாமல் நாளுக்கு நாள் ரொம்பவும் மெலிந்து கொண்டே வந்தது. இனி இந்த மாட்டை வைத்திருந்தால் செத்துப் போகும் என்று நினைத்து மாட்டைக் கொடுத்து விட முன்வந்தார் பார்வதியின் அப்பா.
“ஆமாமா.. செத்த இப்படிக்கு சந்து வழியா வாங்கோ..” என்று சொல்லிவிட்டு வீட்டின் உள்ளே சென்றார். மாடு பிடிக்க வந்தவர்கள் வீட்டின் சந்தின் வழியே மாடு கட்டப்பட்டிருக்கும் வீட்டின் பின்புறத்திற்கு சென்றனர்.
“ஏண்டா.. அந்த மாட்ட அவாள்ட கொடுக்குறீயே.. அது பாவம்டா.. அவா அத அறுத்து சாப்பிட்டுடுவாடா…” என்று பார்வதியின் தாத்தா தன் அப்பாவிடம் சொன்னதைக் கேட்டுக்கொண்டே திண்ணையில் பார்வதி டீச்சர் பிள்ளைகளுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.
“நோக்கு ஒன்னும் புரியறது இல்ல.. மாடு வர வரச் சரியில்லை.. அது செத்து போனாலும் போகும்.. அவாள் அதை அழைச்சிண்டு போய்ட்டா சேமமா இருக்கும்.. நீங்க செத்த சும்மா இருங்கோ…” என்று சற்று கனத்த குரலுடன் கூறினார்.
“அந்த மாடு இத்தன நாளா நமக்கு பால் கொடுத்திண்டு இருந்துது.. இப்ப அதுக்கு உடம்பு சரியில்ல. அதனால பால் கொடுக்கல.. அதை போய் அவாகிட்டே கொடுக்கிறே.. மகா பாவம்டா..”
“எது பாவம்கிறேள்.. அந்த மாடு செத்துப் போனாத்தான் மகா பாவம். மாடு கொடுக்குற பால நாம குடிச்சிண்டு வந்தோம். அதே மாடு செத்துப் போச்சுன்னா இவாட்டத்தான் தூக்கிண்டு போகச் சொல்வோம். மாட்டை தூக்கிண்டு போய் ஆத்தங்கரை ஓரமா, இல்ல வயக்காட்டு ஓரமா போட்டு, மாட்டுத் தோலை உறிச்சுண்டு, மாட்டை அப்படியே போட்டுட்டுப் போய்டுவா. அது அங்கேயே கிடந்து நாத்தம் அடிக்கும். அந்த வழியா போறவா எல்லாம் நம்மள சபிச்சுண்டே போவா.. இது நமக்கு தேவையான்னேன்.. மாட்டை நாம அறுத்தும் சாப்பிடல. காசுக்கும் விக்கல. இப்ப அவாளிண்ட மாட்ட தானமாக கொடுத்துட்டேன். மாட்டை நாம சாப்பிட்டாத்தான் பாவம்.. அத அவா அறுத்து சாப்பிட்டா பாவம் ஒன்னும் இல்லேன்னு நேக்கு தோண்றது… ஏன்னா.. அந்த மாடு நமக்கு பாலை கொடுத்து பயனா இருந்துச்சு.. அவாளுக்கு தன் இறைச்சியை கொடுத்து பயனா இருக்கப்போவுது. கிர்யசூத்திரா, தர்மசூத்திரா போன்ற பிராமண வேத நூல்களும் விலங்கினங்களை பலியிடுவதையும், மாட்டிறைச்சி உண்பதையும் அங்கீகரிச்சிருக்கு. ஆனாலும் நம்ம பெரியவாள் எல்லாம் இறைச்சியை சாப்பிடக் கூடாதுன்னு நமக்குச் சொன்னதால நாம சாப்பிடுறதை விட்டுட்டோம். இவா இறைச்சியை சாப்பிடறா. அதுக்கு இவாளோட வேதம் ஒண்ணும் தடை சொல்லலையே. இந்த லோகத்துல உள்ள பலரும் மாட்டு இறைச்சியை சாப்பிடறாளே. மேல் நாடுகளில் எல்லாம் மாட்டு இறைச்சியை தொடர்ந்து சாப்பிடறா. நம்ம நாட்டுலேர்ந்து மாட்டு இறைச்சிய ஏற்றுமதி பண்றா. அதுல காளை மாடா, பசுவான்னு நாம பார்த்துண்டா இருக்கோம்.. இந்த மாட்டை பிடிச்சுண்டு போறானே அந்த அண்ணாமலையோட ஆத்துக்காரி நம்ம வீட்டுலதான் வேலை பாக்கிறா.. அவதான் மாட்ட நல்லா கவனிச்சுக்குறா.. சுத்த பத்தமா வேலை பார்க்கறா. பால நாம சாப்பிட்டோம், இத்தனை நாளா அதற்கு சோறு போட்ட அவள் இறைச்சியை சாப்பிடட்டும். அதுதான் மனு தர்மம். அவாளணட கொடுக்கறது ஒன்னும் நேக்கு தப்பா தோனலை. மாடு செத்து போன பிறகு தூக்கிண்ட்டு போகச் சொன்னாத்தான் பாவம். அவாளும் மனுஷா தானே. பொணத்த தூக்கிண்ட்டு போறதுக்கு மட்டும் அவாள பயன்படுத்துறதுதான் நேக்கு தப்பா தோண்றது..’’ என்று தன் அப்பாவிடம் சொல்லிவிட்டு மாடு கட்டப்பட்டிருக்கும் வீட்டின் பின்புறம் நோக்கிச் சென்றார். வீட்டின் சந்து வழியாக வந்தவர்களிடம் மாட்டை கொடுத்து விட்டு வீட்டின் உள்ளே வந்தார்..
“நேக்கு.. நீ சொய்றது பிடிக்கலடா…” என்று சொன்ன தன் அப்பாவிடம் எந்த பதிலும் சொல்லாமல் வீட்டின் தாழ்வாரத்தில் உள்ள சாய்வு நாற்காலியில் வந்து அமர்ந்தார். பார்வதியின் அம்மா அவருக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.
சந்து வழியாக மாட்டை பிடித்துக்கொண்டு வந்தவர்கள்.. “அப்ப நாங்க வரேங்க சாமி…” என்று வீட்டின் முன்புறம் நின்று சொல்லிவிட்டு “மாடு ரொம்ப டேஞ்சரா இருக்கு.. ரொம்ப நாளைக்கு தாங்காது.. நாளைக்கே அறுத்துடுவோம்டா.. ..” என்று கூட வந்தவனிடம் சொல்லிக்கொண்டே சென்றான்..
இதை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த பார்வதி டீச்சர் எங்களை இரக்கத்துடன் பார்ப்பது எங்களுக்கு தெரிந்தது. அது எதனால் என்ற புரியாத வயதில் நாங்கள் இருந்ததால் பார்வதி டீச்சரை பார்த்து நாங்களும் புன்னகைத்தோம்.
*
Contact : Naan Rajamagal
*
நன்றி : ஹாஜா மைதீன், கானல் அமீரகம் & ஆசிப் மீரான்