நாளை வருவான் ஒரு மனிதன்!

’காலத்தை வென்ற கவிதைகள்’ வரிசையில் புரட்சிக் கமாலின் இன்னொரு கவிதையை பதிவிடுகிறேன். அனுப்பிய ஹனீபாக்காவுக்கு நன்றிகள். தம்பி ஸபீர் ஹாபிஸின் சிறுகதையை அடுத்து பதிவிட வேண்டும்.  போற போக்க பாத்தா சிலோன்லெ செட்டிலாயிடுவேன் போலக்கிது! 

***

நாளை வருவான் ஒரு மனிதன்!
ஞாலத் திசைகள் கோல மிட‌
நாளை வருவான் ஒரு மனிதன்!

உள்ள‍த் தெளிவின் நிலவினி லே…
ஒளிரும் நினைவாம் சுடரினி லே…
வெள்ள‍ப் புனலின் கலப்பினி லே…
விடியற் பரிதி உருவினி லே…
நாளை வருவான் ஒரு மனிதன்!

காலச் சுழலின் சுழிகளி லே,
க‌லந்து சுழலும் மேதையரின் –
கோலக் கனவின் கருக்குழியில்
கோடி காலம் தவ மிருந்தோன்…
நாளை வருவான் ஒரு மனிதன்!

மா நிலத்துக் கழனி யினை
மாற்றி யுழக்கி வரப்பிட்டு
ஏணி பெற்ற‍ வாழ்க்கை யினை
எருவிட் டாக்கும் நல்லுழவன்…
நாளை வருவான் ஒரு மனிதன்!

சாதி ஒன்றாய் நிற மொன்றாய்
ச‌மயம் ஒன்றாய் மொழி ஒன்றாய்
நீதி ஒன்றாய் நிலை ஒன்றாய்
நிறை கண்டாளும் விஞ்ஞானி…
நாளை வருவான் ஒரு மனிதன்!

வானக் கூரைப் பந்தரின்கீழ்
வைய கத்துப் பெரு மனையில்
மானிடத் தின் பிள்ளை களை
மருவி மகவாய் விருந்தோம்ப…
நாளை வருவான் ஒரு மனிதன்!

« Older entries