நண்பன் புகாரி

நட்பு என்பது ஒரு அரிய பொக்கிஷம். ஒருவருக்கு அமையும் நட்பைக் கொண்டே அவரது குணநலனைக் கணித்து விடலாம். நட்பு குறித்து, நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுவதை இன்றைய சிந்தனையாகக் கொள்வோம்’ என்று தினமலர் (ஆமாங்க, தினமலர்தான்) சொன்னதும் நட்பூ மலர்ந்துவிட்டது எனக்கு.  கல்லூரித் தோழனான பிரியத்திற்குரிய நண்பன் புஹாரியின் (சிரித்தே மயக்கிவிடுவான் பயல்!) வலைப்பதிவுக்குச் சென்றேன். அவன் தேடிக்கொடுத்த முத்தை முத்தமிட்டேன். ஆஹா, என்ன ஒரு கிண்டல்! அவன் எழுதவில்லையாம். எங்கே எடுத்தான் என்று குறிப்பிவில்லை. ’ரீங்காரத்தில் வந்த ஒரு காரம்’ என்று தலைப்பிட்டிருக்கிறான். சரி, பதிவு அதற்காக அல்ல. சில வருடங்களுக்கு முன்பு அவன் தனது தாயாரைப் பற்றி எழுதியிருந்தது என்னை கண்கலங்க வைத்தது. அதை இங்கே மீள்பதிவிடுகிறேன். பெரிய எழுத்தாளரான அ.முத்துலிங்கம் அவனுடைய நூலுக்கு (பச்சை மிளகாய் இளவரசி’) தந்த அணிந்துரை பதிவின் கடைசியில் இருக்கிறது (சுட்டி மட்டும்) . அதையும் வாசியுங்கள். நன்றி.

***

அரபுக் கனலிலே எத்தனைக் காலம்

அன்புடன் புகாரி

இந்தப் பாடலுக்கான முன்னுரையில், என் தாயைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகிறேன். முப்பது வயதுக்குள் ஆறு பிள்ளைகளைப் பெற்றெடுத்துக் கொண்டு
தன் கணவனைக் காலனிடம் வாரிக்கொடுத்துவிட்ட பாலை மணலலை என் தாய்.

என் தாயின் வெள்ளைச் சேலையை மாற்றி வண்ணச் சேலை கட்டச் சொல்லி தினமும் அழுவேன் என் ஒன்பது வயதில். செய்வதறியாது என் தாய் என்னோடு சேர்ந்து அழுவார்.

நான் வெளிநாடு செல்ல வேண்டும் என்று என் அம்மா என்னைப் பெற்றெடுக்கவில்லை. என் தாயின் துயர நிலை கண்டு என் கண்கள் கழன்று விழுந்தன. நானே வீட்டில் மூத்த ஆண் மகன்.

வேலையில்லா திண்டாட்டம் பற்றி, பற்றி எரியும் கவிதைகள் எழுதிக்கொண்டு வீட்டில் சாம்பலானது போதும் என்று அவசரமாய் முடிவெடுத்தேன்… பாலைவனம் புறப்படேன்.

அப்படியே இரத்த நாளங்களைப் பிய்த்துக்கொண்ட பயணமான அந்த நாளை என்னால் மறக்கமுடியாது.

அம்மாவின் அறுவைச் சிகிச்சைக்குப் பத்தாயிரம் பணம் வேண்டும் என்றார்கள். நான் சவுதி அரேபியாவுக்குச் சென்றிருக்காவிட்டால் அதை என்னால் கொடுத்திருக்கவே முடியாது. அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சொன்னார் இது இரண்டாவது உம்மல் பரிதா என்று. அதுதான் என் தாயின் பெயர்.

அப்போது சவுதியில் இருந்தபடியே ”பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்” என்ற பாடலின் மெட்டுக்கு இப்படி ஒரு பாடலை எழுதினேன்.

***
அரபுக் கனலிலே எத்தனைக் காலம்
வாழ்க்கை என்னும் பூ வாடும்

பூக்க மறந்து சருகாய்ச் சிதைய
யார் விட்ட சாபம் அரங்கேற்றம் – இங்கு
யார் விட்ட சாபம் அரங்கேற்றம்

பூங்கவிக் குயிலொன்று தானே முன்வந்து
பணம் தரும் கரங்களில் விழி பெருக்கும்

பூமெத்தை மடிகளில் பெட்ரோல் வளங்களில்
புரள்கின்ற அரபிக்கு விலையாகும் – என்றும்
புரள்கின்ற அரபிக்கு விலையாகும்

தாய்மலர் இதயத்தில் தீயொன்று விழுந்தது
துணைநின்று காத்திட வழியேது

உருக்கிய இரத்தம் பணமாய்ப் பூத்தது
தாய் உயிர் காத்தே சிரிக்கின்றது – இன்று
தாய் உயிர் காத்தே சிரிக்கின்றது

**

நன்றி : புஹாரி | anbudanbuhari@gmail.com | செல்பேசி 416-500-0972

***

அணிந்துரை – அ. முத்துலிங்கம் – பச்சைமிளகாய் இளவரசி