முய்ஸ்ஸாவும், எலியும்… – பீர்முகமது ஷாஜகான்

ஷாஜி அவர்களின் ’விரியக் காத்திருக்கும் உள்வெளி’ கவிதைத் தொகுப்பின் தலைப்பே ஆவலைத் தூண்டுகிறதே, வாங்கித் தாருங்களேன்’ என்று சகோதரர் ஆசிஃபிடம் சொன்னதற்கு ‘நீங்க நினைக்கிற மாதிரி அந்த விசயம் இல்லேண்ணே.. இது ஆன்மீகம்’ என்றார் பெரும் அமைதியுடன். அடக்கிக் கொண்டேன். ’ஒவ்வொருவருக்குள்ளும் மற்றவர்க்குச் சொல்வதற்கென ஒரு உள்வெளி இருக்கிறது’தான்.  நல்லது, ‘ஒட்டக மனிதர்கள்’ சிறுகதைத் தொகுப்பின் மிகச் சிறந்த கதையென்று எல்லா விமர்சகர்களும் சொல்லும் ’முய்ஸ்ஸாவும், எலியும்..’ கதையைப் பகிர்கிறேன். எலிப் பெண்ணும் முய்ஸ்ஸா பூனையும் குறிப்பால் உணர்த்தும் விசயங்கள் மறுவாசிப்பைக் கோருபவை என்றே ஒரு புதுக்கோட்டை அணில் சொல்லிற்று! அவசியம் வாசியுங்கள். நன்றி. – AB

*

முய்ஸ்ஸாவும், எலியும்… – பீர்முகமது ஷாஜகான்

‘நான்லாம் ஒரு தீர்மானம் எடுத்துட்டேன்னா, அது தப்பாவே போகாதாக்கும்’ நேர்க்கோட்டின் எளிமையுடன் சிந்தித்து பழக்கமுள்ள காதர் ஒரு முடிவை எடுத்தார் தப்பாக – செல்லப் பிராணி ஒண்ணு வாங்கணும்.

செல்லப் பிராணி வளர்க்கும் வம்சப் பெருமை கொண்ட குலம் கோத்திரத்திலிருந்து வந்தவர் இல்லை. குடும்பத்தில எப்பவும், ஏதாச்சும் ஒன்றோ, ரெண்டோ வீட்டுகுள்ளே சுத்திக்கிட்டிருக்கும். வெட்டிச்  சாப்பிடுவதற்காக. ஆடு, கோழி மாதிரி. பின்னே, கூடவே பசுக்களும் – பாலிற்காக. அதெல்லாம் பண்டு. ஊரில், கிராமத்தில் அவைகளை வைத்துப் பார்த்துக்கிறதுக்காவே இருந்த அம்மாவைக் கொண்டு நடந்தது.

அபுதாபில அதெல்லாம், முடியுமா? இங்கே பிறமனைவாசிகளுக்கு தொல்லை கொடுக்காத, வீட்டோடு, மனுஷனோடு மனுஷனாக ஒண்டி, கால்களைப் பின்னிக் கொண்டு கிடக்கும் மிருகங்களுக்கு மட்டுமே இடமுண்டு. பால், கறி, முட்டையெல்லாம் தந்து, சிக்கனம் பிடித்து, சிறுவாடு சேர்த்துத் தரும் மிருகங்களை வீட்டிற்குள் சேர்ப்பதில்லை. அனுமதிப்பதில்லை. வெற்றுப் பாசம், அர்த்த ராத்திரியில குடை பிடிக்கும் மேட்டிமை, தற்பெருமை, தம்பட்டம் – இவற்றைக் கூட்டிக் காட்டும் ஸ்டேடஸ் சிம்பல் பிராணிகளைத் தான் கட்டி மாளணும்.

தன் அலுவலகத் தோழமையிடம் மேம்போக்காகச் சொன்னார் காதர், `நாய் ஒண்ணு வாங்கப் போறேன்’.

அங்க தான் அவரோட தீர்மானத்தை தப்பாக்கினார், மசூத்.

’நாயா?’ ஏதோ தீண்டத்தகாத பன்றியைச் சொன்னமாதிரி, அசூயையோடு நோக்கினார். கழிவறைக்குச் சென்று, எச்சில் கூட்டித் துப்பி, நீர் இறைத்து விட்டு வந்து கேட்டார், ‘என்னன்னு தெரிஞ்சு தான், சொல்றீங்களா பாய்?’

அவருடைய கேள்வி, அடுத்து அவர் ஆரம்பிக்கப் போற பயானுக்கு முன்னுரை எழுதிற்று.

அவர் உடல் குலுக்கி, குறுக்கி வெளிப்படுத்திய மொழியிலிருந்தே தெரிந்து போயிற்று, தான் ஏதோ தப்பாச் சொல்லிட்டோம்னு காதருக்கு. தன் முடிவு தோற்கப் போகிறதேங்கற விசனமும், எதனாலெ தப்புன்னு தெரிஞ்சுக்கற ஆர்வமும் தான் பேச்சை நீட்டியது, ‘என்ன தெரிஞ்சுக்கனும் பாய்?’

நிதானமாகத் தொண்டையைச் செருமிக்கொண்டே, ஒரு முட்டாளிடம் தன் அறிவுஜீவித்தனத்தைக் காட்டும் ஒரு அதி உன்னத பேச்சாளன் போல் ஆரம்பித்தார், மசூத், ‘உங்க ரெண்டு தோள் புஜத்திலயும் இரண்டு மலக்குமார்கள் உட்கார்ந்திருக்குதுங்களே, அதுவாவது தெரியுமா உங்களுக்கு?’

மசூதிற்கு இஸ்லாம் பத்திய தன் அறிவின் மீது அலாதி கர்வம் உண்டு. சந்தர்ப்பங்களுக்காக எப்பவும் ஏங்கிக் கிடக்கும் மனிதர். அதிலும் காதர் போன்ற ‘ஈஸி கோயிங்’ அப்பாவிகள் அசந்தர்ப்பமாக சிக்கிக் கொண்டால் தப்பிப் போகவே முடியாது – அவரை அவமதிக்காமல். வாதம் செய்யாமல் கிடந்தால், கொஞ்ச நேரத்தில் அவரே விட்டு விடுவார். எதிர்வாதம் செய்தால் பிடி பிடியென பிடித்துக் கொள்வார். வேண்டாத மழை விடாது பெய்து அடாது செய்யும் காலம் போல நாறிப்போகும்.

‘என்ன சொல்லுங்க, கேட்டுக்கறேன்’ சமய, சந்தர்ப்பம் நோக்கி நழுவணும்.

‘நாகீர், முங்கீர்னு பேரு அவங்களுக்கு. நீங்க செய்யற நல்ல, கெட்ட கார்யங்களைப் பதிவு பண்ணி வெச்சு, அல்லாவுக்கு ரிப்போர்ட் கொடுத்து, உங்களுக்குத் தண்டனை வாங்கித் தர்றது தான் அவங்களுக்கு உண்டான வேலை’

’ஏன் சொர்க்கம் வாங்கித் தரமாட்டாங்களாமா?’ சில சமயங்கள்ல நாம் கூப்பிடாமலே இப்லீஸ் வந்து நாக்கில உட்கார்ந்து கொள்வான் போலும். வாதம் செய்யாமல் எஸ்கேப் ஆகி ஓடிப்போக மறந்து போயிருந்தது.

‘ஆங்.. அதுக்கு நீங்க நெறய நல்ல காரியம் செஞ்சிருக்கணும், பாய்’ எதிர்வாதம் செய்யப் போய் எக்குத் தப்பா வாங்கிக் கட்டிக்கிட்டார். மசூத் பேச்சில் கில்லாடி. வெற்றியில் எக்காளச் சிரிப்பும், தோற்கும் தருவாயில் டெர்ரராகவும் மாறிவிடுவார். ‘அமைதி, அமைதி’ மனசுக்குள்ளேயே தஸ்பீக் உருட்டறமாதிரி அமைதிங்கற வார்த்தையை உருட்டிக்கிட்டு, மௌனமானார் காதர்.

பதில் வராமல் வாயை அடைத்து விட்ட பெருமையில, தொடர்ந்து தன் பயானைச் செய்ய ஆரம்பிச்சார், மசூத், ‘அவங்க நம்ம கண்ணுக்குத் தெரிய மாட்டாங்க’

கல்லுடைத்துக் கசியும் ஊற்று நீர் போல மனதிற்குள் பொங்கியது, ‘தெரிஞ்சாத் தான், கண்ணாடி பார்க்கும் போது பேசிருப்போம்ல’ தொடை நடுங்குமளவிற்கு மூத்திரம் முட்டினாலும், சிரமப்பட்டு, இடம், பொருள் அறிஞ்சு அடக்கிக் கொள்பவனைப் போல அடக்கிக் கொண்டார்.

’நாயால அவங்களைப் பார்க்க முடியும்’ திருட்டுக் காக்கையைப் போல், கொஞ்சம் தலை சாய்த்து காதரைப் பார்த்துக் கொண்டார், கேட்கிறாரா என்று. காதரோ மனதிற்குள் தஸ்பீக் உருட்டி கொண்டே வெளிக்குத் தலையை ஆட்டிக் கொண்டிருந்தார். ‘நாய் அவங்களைப் பார்த்து இடைவிடாது குரைச்சி, தொந்தரவு செய்யும். அதனால, நாய்களை நாம் வச்சுக்கக் கூடாது’,  ஒரு பஃத்வா கொடுக்கும் இமாமின் அதிகாரத் தொனியில் ஒரு உத்தரவாகவே சொல்லி முடித்தார். கேட்கப்படும் பொழுது வழங்கப்படும் விளக்கம் மட்டுமே ஃபத்வா என்பது காதருக்குத் தெரியும். ஆனால் அதை காட்டிக்கக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தார்.

ஆனாலும் மசூதின் நாய் பற்றிய மதிப்பு கொஞ்சம் அசைத்து தான் போட்டு விட்டது காதரை. இனி வீம்புக்குக் கூட நாய் வாங்க முடியாது பண்ணிவிட்டார், மசூத். ஒரு வண்டி நெருஞ்சில் முள் செடிகளையே விதைத்துவிட்டார், நெஞ்சில். ஒரு நாயை இயல்பாய்க் கூட ஏறிட்டுப் பார்க்க முடியுமா இனி?

முன்னும் பின்னுமாக நகர்ந்து கொண்டும், சின்னதாக நடை நடந்து கொண்டும் பேசிக்கொண்டே இருந்தார். காதர் பதில் சொல்ல மாட்டாரா, வம்பு கிடைக்காதா என நீண்ட இடைவெளியும் கொடுத்தார் – சுலைமானி டீ போடும் சாக்கில். காதர் பதிலே சொல்லவில்லை. அவருக்குத் தெரியும், ‘பதில் சொன்னம்னா வச்சி செஞ்சிருவார்’. அதனால் தஸ்பீக் உருட்டிக் கொண்டிருந்தார், மனதிற்குள்ளேயே. திடீரென்று மசூத் சொன்னார், ‘பூனை வாங்கிக்குங்க, பாய்’ சுலைமானி  டீயை நீட்டிக் கொண்டே.

‘பூனையா?’ காதர் வியப்பைக் காட்டினார்.

‘நீங்கள்லாம் முஸ்லிமா இருந்துட்டு, இந்துவா வாழறீங்க’ தன் நெற்றியில் புடைத்திருக்கும் சஜ்தா தழும்பைத் தடவிக் காட்டிக் கொண்டே புகார் சொன்னார், வழமை போல. ‘சகுனம் சரியில்லன்னு பூனை குறுக்கேப் போவதை பேசற இந்து தானே நீங்க’ மனசுக்குள்ளே புகுந்து வெளிப்படுத்தாத எண்ணங்களையும், கண்டு எழுதும் மலக்குமார் ஆயிட்டாரா, என்ன?

மசூதிற்கு உற்சாகம் பிடிபடவில்லை. மழை பெய்து ஓய்ந்த பொழுதில், காற்றில் மிதக்கும் நீர்த்திவலைகளில் தன் நிறத்தை விரித்து, வானவில்லாக ஒளிரத் துடிக்கும் நிறமற்ற வெளிச்சம் போலத் தன் இஸ்லாமிய அறிவின் வண்ணங்களை விரிக்கத் தொடங்கியிருந்தார், மசூத். ‘பூனை நமக்கு ஆகுமான விலங்கு தெரியுமா? நபிகளார் கூட பூனை வளர்த்தார் தெரியுமா?’

காதருக்க்கு இது நிஜம்மாகவே ஆச்சர்யமான செய்தி தான். எல்லா இஸ்லாமியர்களுக்கும் எத்தனை வருடங்கள் கழிந்தாலும் இம்மி பிசகாமல், நபிகளின் வாழ்க்கையை நகலெடுத்து விடும் ஆசை உண்டு தான். ஆனால் அதற்காக பூனை வளர்த்தார் என்றெல்லாம் தோண்டித் துருவ வேண்டுமா, என்ன? தன் காலத்திய வழக்கத்தை ஒட்டி வாழ்ந்தார், அவர். நாம் நம் காலத்தை ஒட்டிய வாழ்வை வாழ்கிறோம். நபிகளின் வாழ்வின் நோக்கங்களை விட்டு விட்டு, புற வாழ்வைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுத் தொங்க வேண்டுமா, என்ன? நிறையவே உஷ்ணத்தைக் கிளப்பும் கொதிகலன் அருகே போகிற அபாயம். பேச்சை முடித்துக் கொண்டு கிளம்ப எழுந்தார், காதர்.

‘பூனை வாங்கிக்குங்கோ, நபிகளின் பூனையின் பெயர் என்ன தெரியுமா?’ துரத்தும் மசூதின் குரல் நடையைத் தடை செய்தது. ஒரு ஆவல். சஸ்பென்ஸ் வைத்து ஆவலைத் தூண்டும் ஒரு எழுத்துச் சமர்த்தனின் சூட்சும சாகசம் மசூதிடம் இருக்கத் தான் செய்கிறது.

************

ஒரு மாதத்திற்குள்ளாக முய்ஸ்ஸாவும் காதரும் நல்ல நண்பர்களாகி விட்டார்கள். முதலில் சற்று சிரமமாக தான் இருந்தது. பூனை கிடைக்குமிடத்தைத் தேடித் திரிந்து, மினா துறைமுகத்தினருகே செல்லப்பிராணிகள் விற்கும் இடத்தைக் கண்டு பிடித்த பொழுது தான் தெரிந்தது, தத்து எடுப்பதற்கும் பல விதிகள் இருப்பது. கிட்டத்தட்ட ஒரு மனிதனை அடையாளப் படுத்தும் அத்தனை ஆவணங்களையும் தயாராக்க வேண்டியிருந்தது. எமிரேட்ஸ் அடையாள அட்டையின் பிரதி எடுத்து, ரேபிஸ் தடுப்பூசி போட்டு, கழுத்துப் பட்டை தயார் செய்து அதில் கைபேசியையும், முகவரியையும் அச்சடித்து பூனைக்கான அடையாளங்கள் உண்டாக்கப்பட்டது.  அது பத்தாது என்பது போல பூனையின் மேல் கழுத்தின் பின்புறம், தோள்பட்டையின் நடுவே ஒரு சிறிய மைக்ரோசிப் ஒன்றும் பொருத்தப்பட்டது – காதரின் எல்லா அடையாளங்களையும் தாங்கி. இப்பொழுது அது ஒரு சாதாரண சிறுவிலங்கல்ல. ஒரு குட்டிக் காதராகிப் போனது.ஒரு அழகான குட்டிக் கூடையில், சிறு மஞ்சம் ஒன்றில் பூனையைக் கிடத்திக் கொடுத்தனர். விடைபெறும் முன் பெயர் வைக்கும் வைபவத்தையும் நடத்தி விட்டனர்.

‘யாரையாவது கூப்பிட வேண்டுமா?’

‘யாருமில்லாத தனிமையை தவிர்க்கத் தானே, பூனையையே வாங்குகிறேன்’ மசூதின் ஞாபகம் வரத்தான் செய்தது. ஏடாகூடமாக எதையாவது பயான் செய்யக் கூடும் என்ற பயத்தில் அவரை அடைத்து மூடிவிட்டார் காதர். ஆனாலும், மறவாமல் அவர் சொன்ன நபிகளின் பூனையின் பெயரையே வைத்து விட்டார் – முஇஸ்ஸா. வேகமாகச் சொன்னால், முய்ஸ்ஸா. முய்ஸ்ஸா, முய்ஸ்ஸா…  ஏதோ நபிகளுடனே ஒரு தொடர்பு ஏற்பட்டது போல ஒரு பெருமிதம். என்ன தான் மத சம்பிராதாயங்களில் ஒதுங்கி நின்றாலும் தன்னிச்சையாய் மதம் வந்து பங்கேற்கும் பொழுது அதை மனம் ஒப்புக்கொள்ளத் தான் செய்கிறது. நபிகளைப் போலவே நானும், ஏதோ ஒரு வகையில்….மகிழ்ச்சி.

முய்ஸ்ஸாவுக்கும் காதருக்குமிடையில் அப்படியொரு அன்பொழுகும் சிநேகமும், காணும் தோறும் பரவசம் கொள்ளும் நிலையும் ஏற்பட்டிருந்தது. இந்த சகல பொருத்தப் பாடுகளும் நிறைந்த தம்பதியினரின் நேர்கோட்டு உறவில், மூன்றாவது புள்ளியாய் நுழைந்து, அன்பின் பகிர்வை முக்கோணமாய்த் திருப்பினாள், அவள்.

******************

வெப்பமும் நீர்ப்பதமும் தணிந்து, மண் துகள்களைத் துறந்து, புறநகர் பகுதியில் சோம்பலுடன் குளிர் காற்று தெருக்களில் சுற்றித் திரியும் ஒரு நாளில், காதர் முய்ஸ்ஸாவை ஒரு மெல்லிய பஷ்மினா சால்வைக்குள் பொதிந்து, மார்போடு மென்மையாக அரவணைத்துக் கொண்டு, வீட்டினுள்ளேப் போக தலைவாசல் கதவைத் திறந்தார்.

எதிரே அவள். பல நாட்கள் பார்த்த பெண்தான். ஆனாலும் பார்க்காதது போல் தான்.

தலைவாசல் திறக்கும் கூடத்தின் இடது புற வீடு அவளுடையது. ஒற்றை அறை ஸ்டுடீயோ. கூடத்தின் மத்தியப் பகுதியில் திறக்கும் கதவு காதருடையது. இருவீடுகளுக்கும் நடுவே மேலே ஏறிப் போக படிக்கட்டுகள். வலது புறத்தில் மற்றுமொரு வீடும் உண்டு. பொதுவான கூடத்தை யாரும் பயன்படுத்துவதில்லை. எல்லோரும் நடப்பதினால்.  யாருக்கும் யாரையும் தெரியாது. ஏசி இல்லாமல் முடியாது என்பதால், எல்லோருமே அடைத்து மூடிக் கொண்டு தான் வாழ்ந்தார்கள். பத்து இஞ்ச் சுவர் பிரிவின் அந்தப் பக்கமும், இந்தப் பக்கமுமாகக் கிடக்கும் அநாதைகள்.

எப்பவும் போல அந்த இரு அநாதைகளும் ஒருவரை ஒருவரைத் தாண்டிப் போயிருப்பார்கள் – நிசப்தம் குலைக்கும் மெல்லிய ஒலி கொண்ட ஒரு குராவலை முய்ஸ்ஸா விட்டிருக்காவிட்டால். முய்ஸ்ஸாவிற்கு ஏன் அப்படி தோன்றியது என்று தெரியவில்லை. ஒருவேளை அவள் பூசியிருக்கும் மெல்லிய நறுமணத்தின் சிநேகமாக இருக்கலாம். முய்ஸ்ஸாவிற்கு எப்பொழுதும் இனிய மணங்களைப் பிடிக்கிறது. நிறைய முறை காதர் பூசிக் கொள்ளும் பொழுதும், முய்ஸ்ஸா அவ்வாறு உற்சாகம் அடையும். பின்னே, சும்மாவா, பதினான்கு மடங்கு அதிக சக்தி கொண்ட மூக்கல்லவா, பூனைகளுக்கு?

அவள் ஒரு நிமிடம் நின்று குரல் கொடுத்த முய்ஸ்ஸாவை விரிந்த கண்களுடனும், வாயுடனும் பார்த்தாள். இரண்டுமே புன்னகைய விரிய விரியக் காட்சிக்குத் தந்தன. ‘வா…வ்…. ப்யூட்டி…’ அவள் தன் இருகைகளையும் அகல விரித்து அழைத்தாள். பல நாட்கள் பழகிய குழந்தையைப் போல் தாவிச் சென்றது அவளிடம். அவள் மார்போடும் தோளோடும் இழைந்து, தன் மீசை முடிகளால் காது மடல்களை உராய்ந்து அவளை மெய்சிலிர்க்க வைத்தது.

‘வாட் இஸ் யுவர் நேம்…’ என்று குழைந்து குழந்தையாக உருக, அவளது கேள்விக்கு தான் தான் பதில் சொல்ல வேண்டும் என்ற நினைப்பில்லாமல், ஒரு மந்த மனிதனாக அவளது உடலின் மீது மானசீகப் பார்வைகளைப் படர்த்திக் கொண்டிருந்தார், காதர். யாரோ, எவரோ என்றிருந்த வரையிலும் அவளைக் கண்கள் கண்டிருக்கவில்லை. மனைவியும், மக்களும் நிறைந்திருந்த கண்களில், வேறு எதுவுமாக எந்தப் பெண்ணும் தோன்றியிருக்கவில்லை. படிப்பைத் தொடரத் தோதான இடம் சொந்த ஊர் தான் என்று எல்லோரையும் பண்டல் போட்டு அனுப்பிய பின்பான வெற்றிடம், எந்த நதி வந்து பாய்ந்தாலும் ஏற்றுக் கொள்ளத் தயாராகிவிட்டது. ஒற்றைப் பெண் நியதி ஆண்களுக்கு இல்லையே?

இந்தப் பெண் இந்தக் கணத்தில் என் வெற்றிடத்திற்குள் நுரை பொங்கும் நதியாக பாயப் போகிறாளா? பாயட்டுமே, பாய். வரவேற்பு. நதியே நீ – தென்றலாக, மெல்லிசையாக, நறுமணமாக, நன்னீராக, காட்சியாக – ஐம்புலனின் ஏது வடிவத்தில் வந்தாலும், அப்புலன் கொண்டே வரவேற்கிறேன். மயக்கம் கொண்ட காதர், அதை யதார்தத்திற்கு பலியிடப் பயந்து மௌனத்தினுள் அவளை கவ்வி இழுத்துக் கொண்டிருந்தார். அமைதி, அமைதி, தஸ்பீக் பலவீனமாக உருளத் தொடங்கியது. பின் மெல்ல மெல்லமாக வலுவிழந்து ஓய்ந்தது. அதன் பின்னர், மறைந்தே போனது மனதிலிருந்து…

‘வட் இஸ் யுவர் நேம்…’ இப்பொழுது அவள் கேட்டது, முய்ஸ்ஸாவிடம் அல்ல என்று புரிந்தாலும், அது முய்ஸ்ஸாவிற்கா, தனக்கா என்ற தடுமாற்றத்தில், தன் பெயரையே சொல்லிவிட்டார் காதர். ‘ஓ… கேதர், மை ஸ்வீட் பாய்’ என்று முய்ஸ்ஸாவிற்கு வாயோடு வாய்  முத்தம் தந்து, முன்னங் கால்களின் இருபுறத்தும் கை கொடுத்துத் தூக்கியவள் ‘ஹாக்… இஸ் ஹி, ஹி ஆர் ஷி?’ என்று அடிவயிற்றைப் பார்த்துக் கொண்டே என் பக்கம் திரும்பிக் கேட்டாள்.

முய்ஸ்ஸாவின் வாயில் இடப்பட்ட முத்தம், தன் வாயினுள் என்னவாகியது என்று தன் நாவை வாய்க்குள்ளாகவே ஒரு முறை சுழற்றிப் பார்த்துக் கொண்ட காதர், ஏழாவது சொர்க்கத்தின் அத்தர் நறுமணத்தை ஒன்பதாம் மேகத்தட்டின் விளிம்பில், உணர்ந்து முகர்ந்தார். ‘சற்று முன்பாக நீ கொடுத்த முத்தம் காதருக்கானால், அது நான். முய்ஸ்ஸா பெண்குட்டி. முத்தம் கொடுப்பதானால் மீண்டுமொரு முறை முத்தம் கொடுத்துக் கொள், முய்ஸ்ஸாவிற்கு’ பட்டென்று, சுயம் மறந்த வார்த்தைகள் காதரின் நாக்கிலிருந்து மென்மையாகப் பரவியது. சனி பெருமானே!

அவளது கவனம் முய்ஸ்ஸாவிடமிருந்து, முற்றிலுமாகக் காதரின் பக்கம் திரும்பியது. அந்த பார்வை குளிர்கிறதா? காய்கிறதா? சூடாக்கும் குளிர்வெப்பமா? சீஸாப் பலகையின் உயர்ந்து தாழும் இருமுனைகளா? இல்லை, பொங்கிப் பொழிந்து, புகைமூட்டம் போட்டு, பொம்பெய் மக்களுக்கு ஓடக்கூட ஒரு கணம் தராமல், நின்ற இடத்திலே லாவாக் குழம்பில் புதைத்துக் கொன்ற வெசுவியஸ் எரிமலையா? கொட்டிய வார்த்தைகளைப் பொறுக்கிக் கொண்டிருக்க முடியாது. சமாதானம் சொல்வோம் அவள் என்னவாக மாறிப் போகிறாள் என்பதைப் பார்த்து விட்டு.

அவள் பொங்கவில்லை. வெடிக்கவில்லை. லாவாக்குழம்பினுள் புதைக்கவில்லை. ஓடிக்கொண்டிருக்கும் வெந்நீர் ஊற்றின் வெதுவெதுப்பாய் சிரித்தாள். முய்ஸ்ஸாவிற்கு முத்தம் தந்தாள். செல்லப் பெண்ணே எனக் கொஞ்சினாள். இந்தப் பெண்ணிடத்தில் வன்மம் இல்லை. கள்ளம் இல்லை. நான் பேசிய வார்த்தைகளைக் குறித்து எந்த ஒரு பிரக்ஞையும் இல்லை அவளிடம். இவள் நதியாகப் பாய்வாளா? அல்லது கானலாக அலையவிடுவாளா? நட்டம் தராத வியாபாரத்தை செய்வதற்கு என்ன தயக்கம்?

சட்டென்று திரும்பிக் கேட்டாள், ‘வய், முய்ஸ்ஸா?’

‘நபிகள் வளர்த்த பூனை’

‘ஓ மை காட், ஓ மை காட், நீ ஒரு நல்ல கதை வைத்திருக்கிறாய்!’ வியந்து, வியந்து அவள் முய்ஸ்ஸாவிற்கு முத்தம் கொடுத்தும், மூக்கு கொண்டு மூக்குத் தேய்த்தும் களித்தாள். ‘சொல்வாயா எனக்கு?’

‘அதனால் என்ன, நீ கேட்பதாக இருந்தால் நான் சொல்கிறேன்’

‘சரி, நான் போய் சாப்பிட்டு விட்டு வருகிறேன். நீ உன்னை தயார்படுத்திக் கொள்’ அவள் போய்விட்டாள், தன் நறுமணத்தை அந்த கூடத்தின் எல்லா மூலைகளிலும் தேய்த்துத் தடவி விட்டு.

***************

இது வழக்கமாகி விட்டிருந்தது – மடிக்கு மடி தாவி அமர்ந்து விளையாடும் முய்ஸ்ஸாவைப் பார்த்துக் கொண்டே, எலியும் காதரும் எதிரும் புதிருமாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது. உரத்த சிரிப்பும், உரையாடலின் உற்சாகத்தில் அவ்வப்போது, எதிராளியின் தோளைத் தட்டிக் கொள்வதும், வெகு இயல்பாகிப் போனது. சமயங்களில், அவள் முஷ்டியை மடக்கி, அடிவயிற்றில் குத்தி விட்டு, ‘ஏய், குண்டாஸ்’ என்று கெக்களிப்பதும் கூட சகஜமாகி விட்டிருந்தது.

ஒரு பெண்ணோடு இத்தனை இயல்பாக சிநேகம் கொண்ட காலம், பாலவித்யாலாயா காலத்தோடு முடிந்து போய்விட்டதாய் கருதிக் கொண்டிருந்தார், காதர். உறவாட அதிகாரப்பூர்வமாய் அனுமதி கொண்ட மனைவியிடம் கூட அத்தனை இயல்பாய் நெருங்க முடியாத எல்லை கிடப்பதை உணர்ந்து புழுங்கிப் போயிருக்கிறார். காமம் நிறைந்த கலவி கலந்து, ஓய்ந்த தழுவலாக பின்னங் கழுத்துத் தாங்கி, காதல் பேசி களிப்புறும் தருணங்கள் எல்லாம், கவிதை எழுதுபவனின் பின்மண்டையோடு நின்று விடும் போல். பாரதி கூட, ‘கண்ணம்மா’ என்று காதலியோடு கனவிலே தானே குடித்தனம் கொண்டார்!

மத்தியத் தரைக்கடல் கரை ஓரத்தில் பிறந்தவள், எலி. கிருத்துவமும், இஸ்லாமியக் கலாச்சாரமும் இன்றளவும் முட்டி மோதி சண்டை பிடித்துக் கொண்டிருக்கும் லெபனான் தேசத்துப் பெண். கலாச்சாரக் கலப்பினால் அரபு இயல்பைக் காட்டிலும் அதிகமாகவே சுதந்திரம் காட்டினாள். ஆடைகள் கச்சிதம் என்றாலும், பெண்மையை ஆராதிக்கும் பார்வைகளுக்கு தவிர்க்க இயலாத வடிவமும் காட்டினாள்.

‘அதென்ன, உன் பெயர் எலி?’

‘நபிகளின் பூனையை போல், இதுவும் ஒரு நபியோடு உறவு கொள்ளும் வார்த்தை தான்’ அவள் புதிர் போட்டாள். புதிரானாள்.  காதரின் விடையற்ற மந்தமான புன்னகைக்குப் பதிலாக, ஒளிரும் கண்களில் கேலியாக விரிகிறது அவளது மறுபுன்னகை.

‘சொல், பெண்ணே’ விசையுறும் மனதினுள், வீம்பு செய்கிறாய்; சுண்டி இழுக்கிறாய்.

‘சிலுவையில் ஒன்பதாவது மணி நேரத்தில், வான் நோக்கித் தலை உயர்த்திக் கூவுகிறார், இயேசு – “எல்லெ, எல்லெ, லாம சாபக்தானி…” அந்த எல்லெ, எல், எலி நான் தான்….”

காதர் பதில் சொல்லவில்லை. இயேசுவின் கடைசி நிமிட பரிதவிப்பின் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் மீது பற்றுதல் மிக உண்டு. வெளிச்சமும், இருளும் உருகிக் கலக்கும் நாளின் மயக்க பொழுதில், மெய்யும் பொய்யும் கலந்ததோர் மாயப் பின்ணணியில் சங்கேதமாக வெளிப்பட்ட  குறிப்புகள்.

“ஆக, நீ ஆசிர்வதிக்கப்பட்ட பெண்” காதரின் பதிலுக்கு, அவள் கண்கள் பனித்தன. தொலை தூரத்தில் அவள் வரலாறு, போராட்டங்களுக்கு ஊடாக அலைந்து கொண்டிருப்பதாய். சில சமயங்களில் காலம் கடந்த தொலைவில் அவள் உறைந்து போகிறாள். பின் அங்கிருந்தே ஊற்றாகக் கிளம்பி எழுகிறாள். அவளை அவளிடத்திலே விட்டு விடுவதே உசிதம். அவள் அவளாகவே இருக்கட்டும். அவளைத் தேடி உறவாக யாரும் வந்ததாக ஞாபகமில்லை. சில சமயங்களில் ஆண்கள் வரக் கண்டிருக்கிறார். திரண்ட புஜங்களும், அகண்ட மார்பும், நெடிய உயரமும் கொண்ட வாலிபர்கள்.

அப்பொழுதெல்லாம் தன் மனம் துவளக் கண்டிருக்கிறார், காதர். இவர்களில் ஒருவனுடன் அவள் போகக்கூடும். அல்லது படுத்திருக்கவும் கூடும். ஒவ்வொரு ஜீவனுக்கும் தான் விரும்பிய உடலோடு தன் உடலை இணைத்துக் கொள்ளும் இன்பம் வேண்டும் தானே? பிறன்மனை வேண்டுபவன், கன்னியாகவா வேண்ட முடியும்? அவள் அவள் தேவைகளை அவளாக விரும்பிச் செய்து கொள்ளட்டும். அவள் அவளுக்குப் பிடித்தவனிடம் போகட்டும். சுகம் பெறட்டும். ஆனால், இந்த ஆண்கள் அவளுக்குத் தகுதியானவர்கள் தானா? அவர்கள் தோற்றத்தில் காண்கின்ற மூர்க்கம், அரபு இளைஞர்களின் யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்ற அலட்சிய மனபாவத்தின் இயல்பான முரட்டு சுபாவம் அல்ல. எதற்காகவோ யாரையோ எதிர்த்து சாகசம் செய்யப் போகும் ரகசிய முனைப்புகளின் மூர்க்கம். ஒரு திருட்டுத் தனம்.

ஒவ்வொரு முறையும் அவளைப் பற்றிப் பேச மெதுவாகத் தூண்டிவிடும் சமயங்களில் எல்லாம், அவள் எங்கோ தொலைந்து போனவளாக, பதைபதைப்புடன் எழுந்து போய்விடுகிறாள். அன்றும் அப்படித்தான் எழுந்து போனாள்.

*******************

அவள் வருகைக்காக காதரும், முய்ஸ்ஸாவும் காத்திருக்கிறார்கள். ஊர் ஊராய் பறக்கும் பாவை அவள். ஏர் ஹோஸ்ட்டஸ். சில சமயங்களில் கால் தரை பாவ பல நாட்கள் ஆகிவிடும். அவளைப் பற்றிய புளகாங்கிதமான இச்சை பரவும் தருணங்கள் மடிந்து காலங்கள் போய்விட்டது. இப்பொழுது, அவள் அருகாமையும், அறிவார்ந்த உரையாடல்களுமே பெரும் வேட்கையைத் தந்து கொண்டிருந்தது. ஒரு நாள் தவறினால் ஒரு பெரும் தவிப்பு நெஞ்சு குழியில் தாகம் கொள்கிறது. அலுவல் காரணமாக உரையாடுவதைத் தவிர, வேறெந்த ஈடுபாடுகளையும், சுவராஸ்யங்களையும் உரையாட யாருமில்லாப் பொழுதுகளில், அவள் ஒரு தேவதையானாள். கார்டியன் ஏஞ்சல்.

நாகீர், முங்கீர் குறித்த பயமற்ற ஒரு மலக்கு அவள். நாகீருக்கும், முங்கீருக்கும் கூட அவளைப் பிடித்திருக்கும். தினமும் தான் அவளது பேச்சை கேட்கிறார்கள், அல்லவா? ஏதாவது குறிப்பு எடுத்திருப்பார்களா? அல்லாவிடம் போட்டுக் கொடுப்பார்களா? கொடுக்கட்டுமே. எந்தத் தப்பும் நடக்காத பொழுது, ஏன் அஞ்ச வேண்டும்?

யாரோ நடந்து வரும் காலடி ஓசை கேட்டது. வரட்டும் கதவு திறந்து தான் இருக்கிறது. காலடிகள் நகர்ந்தன. உருவம் தான் இல்லை. பின் ஓசை எங்கிருந்து வருகிறது? கம்பள விரிப்பில், கால் தடம் பதிந்து எழும்பி மறைகிறதே? இதென்ன? என்ன நடக்கிறது இங்கே? “யாரது? யார்….? யார்….?” அதிர்ந்து திரும்புகிறது வார்த்தைகள். காலடிச் சுவடுகள் கம்பளத்தில் பதிந்து எழுவதும் நிற்கவில்லை; பதிலும் வரவில்லை. கண்ணுக்குத் தெரியாதவனின் நடமாட்டம் அறையெங்கும். எதையோ தேடி அலைபவன் போல். சாத்தியமில்லை. மாயங்கள் நிகழும் சாத்தியமில்லை. ஆகும் என்றால் சம்பிரதாய நம்பிக்கைகளை மறுத்ததுவும் சரியல்ல. எங்கோ தவறு நிகழ்கிறது. திட நம்பிக்கைகள் தடுமாறுகிறது. மயக்கம் பிறக்கிறது. அறையில் சுற்றிச் சுற்றி நடக்கும் அந்த உருவத்தை அல்லது அருவத்தை எட்டிப் பிடிக்க வேண்டும்.

இருந்த இடத்திலிருந்து எழப் பிரயத்தனம் செய்தார், காதர். முடியவில்லை. கட்டிப் போட்டதைப் போன்ற உணர்வு. சுய நினைவிருக்கிறது. மனம் இருக்கிறது. உடல் தான் கேட்கவில்லை. மூளையின் கட்டுப்பாட்டை உதறி நிற்கிறது. உடலை விட்டு நகர முடிகிறது. தான் இல்லாத உடலிலிருந்து தன்னைப் பார்க்கிறார். எழுந்திரு. உடலே எழுந்திரு. நகரவில்லை. உடலற்றவர் கைகளை வீசுகிறார்; கால்களை உதைக்கிறார். அவ்வாறாக நினைப்பு தான் இருக்கிறது. ஆனால், ஒரு இம்மினி அளவும் உடலில் அசைவில்லை. தன் முயற்சிகளைப் பார்த்துக் கொண்டு கிடக்கிறார் – காற்றில் மிதந்து கொண்டே.

நான் இறந்து போய்விட்டேனோ? திடீரென பயம் பயங்கரமாய்த் தொற்றுகிறது. மேலும் ஒரு முறை செய்யலாம் – உடலோடு தன்னை இணைத்துக் கொள்ள. எழுந்து விட்டால், என்னை போலவே என் அறையில் அலைந்து கொண்டிருக்கும் அந்த வேற்று உருவத்தைப் பிடித்து விடலாம். ஒருவேளை உயிரின் அசைவற்ற உடலில் கணக்கெழுத இனி எதுவுமில்லை என்று நாகீரும், முங்கீரும் தான் கீழிறங்கி அலைகிறார்களோ? நான் இல்லையென்றால், அவர்கள் ஏன் அலைந்து கொண்டிருக்க வேண்டும்? ஆண்டவனிடம் போய் கணக்கைச் சொல்லிவிட வேண்டியது தானே?

மீண்டும் ஒருமுறை இயங்க வேண்டும். அனைத்து சக்திகளையும் திரட்டி உருண்ட பொழுது – பிக் பாங்…..படாரென்று பிரபஞ்சம் வெடித்து தூக்கி எறியப்பட்டார், காதர். பெருவெடிப்பின் துகள்களும், கற்களும் பாறைகளும் கொட்டிக் கிடக்க அதன் அடிவாரத்திலிருந்து தன்னை மீட்டுக் கொண்டார். காலத்திலும், மாயவெளியிலும் சிக்கிக் கிடந்ததினால் உண்டான தலைவலி சற்றே அடங்கிய பொழுது, கட்டிலிலிருந்து தரையில் வீழ்ந்தது புரிந்தது. கட்டிலுக்கு அருகாமையிலிருந்த மேசையின் மீது இருந்த அனைத்து பொருட்களும் தரையில் சிதறிக் கிடக்கின்றன. தூங்கிப் போயிருக்கிறேன் என்னையும் அறியாத ஒரு சோர்வில். எல்லாம் சரி, ஆனால் உடல் விட்டு நீங்கிய அனுபவம் – ? அது கனவல்ல. நன்றாக நினைவிலிருக்கிறது – எந்தவித அசைவுகளுமற்று, கோமா மனநிலையில் வாழும் ஒரு உடலும், சீவனும் போல.

முய்ஸ்ஸா இத்தனை கலவரத்திற்கும் எங்கே போயிற்று? தேடினார். கதவு திறந்தே கிடந்தது. சாத்துவதற்கு மறந்து போய் விட்டது போலிருக்கிறது. காதருக்கு இது ஒரு புதிய அமானுஷ்ய அனுபவம் தான். அவரது சகல நம்பிக்கைகளையும் ஒரு நிமிடம் வேரோடு மண்ணாக ஆட்டிப் போட்டுவிட்டது. லாஜிக் தெரியவில்லை. முதலில் முய்ஸ்ஸாவைப் பிடிப்போம், ஒரு கதகதப்பான உடல்சூட்டின் அரவணைப்புத் தேவைப்படுகிறது. “முய்ஸ்ஸா.. முய்ஸ்ஸா” பதிலே இல்லை. எங்கிருந்தாலும், முதல் குரலிலே தாவிப் பாய்ந்து ஏறிக் கொள்ளும். இன்று பலமுறை கத்தியும் பதிலாக வரவில்லை. கதவைத் திறந்து கூடத்திற்கு வந்து பார்த்தார் காதர். இல்லை. எலியின் வீடு பூட்டிக் கிடந்தது. ஒரு நப்பாசையில் கைப்பிடியை இரண்டு முறை அசைத்துப் பார்த்து விட்டு முற்றத்திற்கு வந்து பார்த்தார். வெளியில் போனார். கட்டிடத்தின் காம்பவுண்ட் சுவர் பக்கமாக சுற்றி அலைந்தார். மொட்டை மாடிக்கு ஏறி ஓடினார். தெருவிற்கு வந்தார். திசைதிசையாகத் தேடினார். அரக்கப் பரக்க ஓடியதைக் கண்டு விசாரித்த சகவாசிகளுக்குச் சொன்னார். ஒவ்வொருவராக இணைந்து கூட்டமாகத் தேடினார்கள். ஒரு பதிலும் இல்லை. காதருக்குப் பயம் கூடிக் கொண்டே போனது. “உங்கள் வளர்ப்புப் பிராணி தொலைந்து போனால், உடனடியாக போலிஸிற்கு சொல்லி விடுங்கள்…” ஆரம்ப கால பாடம். இனி அது ஒன்று தான் பாக்கி. ஏற்கனவே இரண்டு நாட்கள் போய்விட்டது தேடுதலில். இனியும் தாமதிப்பதில் பலன் இல்லை.

போலிஸிற்குப் போன் பண்ணினார். வருவதாக சொல்லி நேரம் குறித்துத் தந்தார்கள். நிறைய நேரம் இருப்பதாகப் பட்டது. அந்த இடைவெளியில் அருகிலிருந்த மருத்துவமனைக்குப் போய் மருத்துவரிடம் பேசினார். முய்ஸ்ஸாவைக் காணாத பதற்றத்தில் உபாதைகள் கூட மறந்து போயிற்று. பொறுமையாகக் கேட்டு புன்னகைத்தார், மருத்துவர். “டோண்ட் ஒர்ரி, டேக் இட் ஈஸி” குளிர்ந்த நீர் கொடுத்தார். பின்னர் சொன்னார், “ஸ்லீப் பாரலிஸிஸ். தூங்கும் பொழுது நிகழும். கை, கால்களை அசைக்க முடியாது. உரக்க அலறுவது போலிருக்கும். ஆனால் சப்தம் வராது. கண் விழித்திருக்கும், காட்சிகள் தோன்றாது. அச்சுறுத்தும் விதமாக யாரோ சுற்றிச் சுற்றி அலைவது போலிருக்கும் – அவ்வாறில்லாத பொழுதும். எப்பவாவது ஒரு முறை நிகழ்ந்தால் கவலை கொள்ள வேண்டாம். இதற்கு மருந்து எதுவும் இல்லை. நன்றாகத் தூங்குங்கள். ஓய்வெடுங்கள். மீண்டும் இந்த அனுபவம் வந்தால், பார்க்கலாம்”

திரும்பி வந்த பொழுது போலிஸ் வாசலில் நின்றிருந்தது. வீடு முழுக்க சுற்றிப் பார்த்தார்கள். வரிசையாக நின்ற ஏழெட்டு புத்தக அலமாரியைப் பார்த்து – “இத்தனைப் புத்தகங்கள் வாசிக்கிறீங்களா, சகோதரரே” அதிசயித்தார்கள். எல்லா மூலையையும் பார்த்துவிட்டு, வெளியில் வந்தார்கள். எலியின் வீட்டுக் கதவை தற்செயலாய் திருகிப் பார்த்துக் கேட்டார்கள் – “யார் இருக்கிறது, இங்கே?”

“எலி, லெபனான் பெண். எதிஹாத்தின் விமானப் பணிப்பெண்.” காதர் பதிலுரைத்தார்.

அதை கேட்டதும் அவர்களது உடல் ஊதப்பட்ட பலூன் போல விறைப்புக் கொண்டது. தொடர்ந்து வாக்கி-டாக்கியில் இடைவிடாத உரையாடல், அரபு மொழியில். அடுத்து அடுத்து தொடராக அதிகார அடுக்குகளாகப் போலிஸ் வாகனங்கள் குவியத் தொடங்கின. இடைவிடாத சங்கிலித் தொடர் பேச்சுகளில், ஒன்றிரண்டு தெரிந்த வார்த்தைகள் வந்து விழுந்தன – ப்ரதர்ஹூட், ஹமாஸ், ஃபத்தா.

காதருக்கு உடம்பெல்லாம் அதிர்ந்தது – என்னோடு ஒரு சிறுபெண்ணின் குதூகலத்தோடு உரையாடிவளின் பெயர் இத்தனை வலிய போராளிக் குழுமங்களோடு தொடர்பு கொள்கிறதா? ரியல் எஸ்டேட் ஆட்கள் வந்ததும் அவளது வீடு திறக்கப்பட்டது. முதல் அடி வைத்த போலிஸ் அலுவலர், காலை உடனே பின்னுக்கு இழுத்தார், பூட்ஸ் அடிப்பாகத்திலிருந்து சிகப்பாக ரத்தம். பரபரப்பான அந்த இடம், இப்பொழுது தீப்பிடித்த இடம் போல் மாறிவிட்டது. சிவப்பும் வெள்ளையுமான ரிப்பனில் தடுப்பு எழுப்பப் பட்டது. அந்தத் தெருவே மூடப்பட்டது, போக்குவரத்திற்கு. வேடிக்கைப் பார்க்க முனைந்தவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டனர்.

“மிஸ்டர் காதர், இங்கே வந்து பாருங்கள்” ஒரு போலிஸ் அலுவலர் அழைத்தார். ரத்தம் தழுவாத தரைப்பகுதியாகப் பார்த்து கால் வைத்து நுழைந்தார், காதர். முதல் பார்வையின் வீச்சில் அவள் கழுத்தறுபட்டுக் கிடந்ததைப் பார்த்தார். ஆரம்ப காலத்தில், அவள் மீது நப்பாசையாக மனமெங்கும் பரவிக் கிடந்த அவளது மேனி அழகைத் துழாவிப் பார்க்க விரும்பிய இச்சைகள் கொண்ட கோலத்திலேயே அவள் கிடந்தாள். எப்பொழுது வந்தாள், எப்பொழுது மரணித்தாள் என்று தெரியவில்லை. எந்த சப்தமும் இல்லை. தெரிந்தவனாக இருக்கும். அந்தத் தடியன்களைக் காதர் பார்த்திருக்கக் கூடும். இன்னுமொரு தடவைப் பார்த்தால் இனம் காண முடியும். ஒரு போலிஸ் மொத்த கர்டன் துணியையும் உருவி அவள் உடல் மீது போர்த்தினார்.

என் பார்வை பீரோவைப் பார்த்து சைகை செய்து கொண்டிருந்த போலிஸ் பக்கம் திரும்பியது. “அந்தப் பூனை ரொம்பவும் பயந்து போயிருக்கிறது. கண்டிருக்கக் கூடும். புது ஆட்களைக் கண்டு மிரள்கிறது. நீங்கள் கூப்பிடுங்கள், வரும்”

“முய்ஸ்ஸா” ஒரே குரலுக்குப் பதிலாய் பாய்ந்து புகுந்தது என் கைகளுக்குள், வெடவெடவென நடுங்கும் உடலுடன். பாதுகாப்பான கரங்களுக்குள் தான் இருக்கிறோம் என்றான பின் தன ஆற்றாமயை மெல்லிய குரலில், அழுகை போன்ற குரலில் தொடர்ந்து முனகலாகக் குராவ ஆரம்பித்தது.

“நீங்கள் அதை எடுத்துப் போங்கள். தேவைப்பட்டுக் கூப்பிடும் பொழுது, எங்களுக்கு உதவ நீங்கள் முன்வர வேண்டும்”

காதர் அவசரம் அவசரமாக அங்கிருந்து அகன்று தன் மனை புகுந்தார்.

“சிலுவையில் தொங்கிய தேவன், இறுதியாக என்னைக் கூப்பிட்டார்.”

அவளது குரல் மௌனத்தின் அந்தகாரத்திலிருந்து தெளிவற்ற ஓசையாக வீடெங்கும் பரவியது. ஆம், என்னுள் அவள் காலம் காலமாக வீற்றிருப்பாள் – ஒரு தேவதையாய். நாகீர், மூங்கீர் போல. தோளில் அல்ல. நெஞ்சில். கொஞ்ச நேரம் அழுதால் எல்லாம் சரியாகப் போகும் என்றிருந்தது. ஆனால் அழ முடியவில்லை. முய்ஸ்ஸா எனக்குமாக தன் கண்ணீர் வடிந்து கறை படிந்த கண்களோடு அழுது கொண்டிருந்தது. பதறிப் பதறி என் கைகளுக்குள்ளே அடைந்து கொண்டிருந்தது. ஏதோ என்னுடலைப் பிளந்து அங்கே ஒளிந்து கொள்ள விரும்புவதை போல நெஞ்சோடு ஒட்டி கொண்டது. பயத்தில் ஒடுங்கி இரண்டு நாட்களாக தன்னை ஒளித்துக் கொண்டிருக்கிறது அந்த பீரோவில், எந்த ஓசையும் எழுப்பாமல். பாவம். பயம். பசி.

முய்ஸ்ஸா காதரின் மார்பில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில், கண்ட காட்சியை விரட்ட கண்ணை மூடிய காதருக்குள் மின்னல் கீற்றின் சிதறும் வெளிச்சத் துண்டுகள் போல, அவரது நம்பிக்கை வாசகம் பளீரிட்டது  – “நான்லாம் ஒரு தீர்மானம் எடுத்திட்டா, அது தப்பாவே போகாதாக்கும்”

எளிய சிந்தனை இப்பொழுது திரண்டு முறுக்கி சீற்றம் பெற்றது ‘ நாய் வாங்கி இருக்க வேண்டும் ’

*

Contact : Naan Rajamagal

*

நன்றி : பீர்முகமது ஷாஜகான் , கானல் அமீரகம் & ஆசிப் மீரான்