வார்த்தை – இதழ் 5-ல் (ஆகஸ்ட் 2008) வெளியான சிறுகதை. (தொழுகையின்போது) விரலாட்டுபவர்களை கடுமையாக வெடைக்கிறார் சகோதரர் பிர்தவ்ஸ் ராஜகுமாரன். முக்கியமான பகுதியை மட்டும் இப்போது பதிவிடுகிறேன். மீதி, ஆட்டியபிறகு! என் நண்பர்களில் இருதரப்பாரும் உண்டு. அவரவர் விருப்பம் என்று நகர்ந்து விடுவது வழக்கம். அவர்கள் அடித்துக்கொள்வார்கள். ஆடிய ஆட்டம் என்ன…
***
குறிப்புகள் :
பித்னா – குழப்பம் , சின்னாப்பா – சித்தப்பா , துஆ – பிரார்த்தனை , பரக்கத்து – சுபிட்சம், அருள் , சுன்னத் – நன்மை , ஹராத் – கெட்டவழி , ஷிர்க் – இணைவைத்தல் , அத்தஹியாத் – தொழுகையில் இறுதி நிலை இருப்பு, கலிமா விரல் – ஆள்காட்டி விரல் , ஹதீஸ் – நபிவழி சொல்லும் செயலும் ,இமாம் – தொழுகையை வழி நடத்துபவர் , தக்வா – இறையச்சம் , குத்பா – ஜும்மா தொழுகை , முத்தவல்லி – நாட்டாமை ,
ஸஜ்தா – தரையில் தலைவைத்து இறைவனை வணங்கும் நிலை
***
சஜ்தா
ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்
பள்ளியில் மறுபடியும் ஒரு பித்னா இன்னிக்கு எங்க செட்டியார் சின்னாப்பாவால் உண்டாச்சு. வாரம் ஒருக்க வெள்ளிக்கிழம ஜும்மா தொழுகைக்கு மட்டும் சும்மா வெள்ளையும் சொள்ளையுமா செண்டெல்லாம பூசிக்கிட்டு மணக்க.. மணக்க.. நிரந்தர தொழுகையாளி போல தொப்பியெல்லாம் போட்டுக்கிட்டு பள்ளிக்கு வருவார் செட்டியார் சின்னாப்பா. செட்டியார் என்பது ஊருக்குள் அவருக்கு இருக்கும் அடைமொழி. ஒரு காலத்துல டீக்கடை வச்சு நடத்திட்டிருந்தாரு. போண்டா, வடையெல்லாம் ரொம்பச் சின்னதா சுட்டு விப்பாராம். கஞ்சத்தனமான ஆளும் கூட. ’செட்டியார்’னு அப்ப யாரோ வச்ச பேர்தான் நிலைச்சு நின்னு போச்சு இப்பவும். வண்டிகள்ல சின்னதாயிருக்கிற போண்டா, வடைகளை இப்பப் பார்த்தாலும் , உடனே “நம்ம செட்டியார் கடை வடையாட்டமிருக்கு’னு சொல்லிச் சிரிப்பாங்க. வாப்பாவின் மூணாவது தம்பி மொம்மாப்பாங்கிற முஹம்மது. இவர ‘மொப்பா’னுதான் நாங்க கூப்பிடுவோம். இப்ப நாங்களும் செட்டியார் சின்னாப்பானு சொல்ல ஆரம்பிச்சுட்டோம்.
தொழுகை முடிஞ்சதுக்கப்புறம் இறைவனிடம் கையேந்தி துஆ கேக்குற விதம் ‘செட்டியார் (சின்னாப்பா) ஸ்டைல்’னு சொல்றளவுக்கு வித்தியாசமாயிருக்கும். உயரே தலைக்கு மேல அகலமா ரெண்டு கைகளையும் தூக்கி வச்சுக்கிட்டு, உள்ளங்கைகளை விரிச்சு மேலயே பார்த்துக்கிட்டு துஆ கேப்பாரு – ரொம்ப நேரம்.
”உசரமா கையத் தூக்கிட்டு கேட்டாக்கா…மொதல்ல இவரு கையிலதான் பரக்கத்து உழும். அதான் இப்படி உசரமா கையத்தூக்கிட்டு செட்டியார் துஆ கேக்குறார்..”
”அல்லாஹ் குடுக்குறது கீழே உழுந்திராம இருக்குறதுக்குத்தா கைய இப்படி வச்சுக்கிட்டு துஆ கேக்குறாரு செட்டியார்..” பள்ளிக்கு வெளியே சொல்லிச் சொல்லி சிரிப்பார்கள் மொஹல்லாவாசிகள்.
முஸ்லிம்கள் யாரும் வேட்டிய தூக்கி மடிச்சுக் கட்டிக்கிட்டு வெளில நடக்கமாட்டாங்க. ஆனா செட்டியார் சின்னாப்பா எப்பவும் வேட்டிய வேட்டிய தூக்கி மடிச்சுக் கட்டிக்கிட்டுத்தா திரிவார். இதுபத்தி இதுவரை யாரும் அவரிடம் கேட்டதேயில்லை. இந்த சின்ன ஒழுங்கு கூட தெரியாத ஆளாயிருக்காரே.. இல்ல தெரிஞ்சும் வேணும்னே இப்பிடிப் பண்றாரானும் தெரியல. ஆனால் தொழுகை, மற்ற விசேஷ காரியங்கள்ல பார்த்தா.. ஆள் அப்படியே மூமினான முஸ்லிம் மாதிரி தலைல தொபப்பியோ இல்ல துண்டோ கட்டாமயிருக்கமாட்டார்.
ஊருக்குள் மொஹல்லாவிலும் மற்ற இடங்களிலும் வசிக்கும் ஆயிரத்து ஐநூறு முஸ்லிம்களில் தொழாதவர்கள் ஐநூறு பேர் நீங்கலாக வாரம் ஒருநாள் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு மட்டும் வருபவர்கள் மற்றும் தினம் ஐவேளையும் தொழும் இருநூத்தி சொச்சம் பேர்களுக்குள்ளும் ஏற்கனவே தொழுகை மற்றும் இன்னபிற சுன்னத்தான காரியங்கள் நிறைவேற்றுவதில் கருத்து வேறுபாடுகள் தோன்றி குழுக்குழுவாக குழாயடிச் சண்டையாக மோதிக்கொண்டிருக்கையில் இந்த வார வெள்ளிக்கிழை ஜூம்மாவில் இந்த செட்டியார் சின்னாப்பா வந்தமா தொழுதமானு போறதை விட்டுட்டு ‘ஏண்டா வெரலப் போட்டு இந்த ஆட்டு ஆட்டுற அதும் எம்பக்கத்துல உக்காந்துட்டு..”னு தஸ்தகீர் பாயின் ரெண்டாவது மகன் ஜஹாங்கீரோட வெரலைப் புடுச்சு ஒடிக்க, பிரச்சினை வெடித்தது.
”நா வெரலை ஆட்டுனா உனக்கென்னயா, நீ பாட்டுக்கு தொழுதுட்டுப் போக வேண்டியதுதானே.. என் வெரல நீ எதுக்குப் பாக்கணும்..? நீ ஒழுங்கா மொதல்ல அஞ்சு நேரம் தொழுவுறயாக்கும்.. பெரிசா சொல்ல வந்துட்டே..” என்று அவன்பாட்டுக்கு :”நீ..வா..போ..’னும் ஏக வசனத்தில் பேச ஆரம்பிக்க –
“இந்தாளுக்குக் ஏன் இந்த வேல.. வாயக்குடுத்து சின்னப் பய்யங்கிட்டு வாங்கிக்க் கட்டிக்குறாரே..’ என்று ஒரு சிலர் முணுமுணுக்க –
“பெரியங்க சின்னவங்க ஒரு மட்டு மரியாத இல்லயாக்கும்.. அராத்துல போ¡றவன் பேசற பேச்சப்பாரு”னு செட்டியார் சின்னாப்பா குதிக்க ஆரம்பித்தார்.
தொழுகைல எந்தப் பிரச்சினைகளும், கருத்து வேறுபாடுகளும் இல்லாத காலம் அது. அப்ப நா ரொம்ப சின்னப் பையன். வாரம் ஒருக்க வெள்ளிக்கிழம ஜும்மா தொழுகைக்கு வாத்தியார் கிட்டயோ, டீச்சர் கிட்டயோ அனுமதி வாங்கிட்டு ஒரு செட்டா தொழுவப் போவோம். அப்ப ஊருக்குள்ள ஒரே பள்ளிவாசல்தான். குறிச்சிப் பிரிவிலலருந்து காளவாய் பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு ஒரு கிலோ மீட்டர் நடந்து வரணும். தொழுவப் போறதுக்கு முன்னாலதா குளிக்கனும்னு நெனச்சிட்டிருந்த காலம் அது. அரைமணி நேரத்துக்கும் முன்னாடியே ஸ்கூல்லேர்ந்து வீட்டுக்கு வந்துருவோம்- குளிக்கறதுக்காக, அப்பறம் எல்லாம் ஒண்ணு சேர்ந்து கெளம்புவோம். அப்பவே அஜீஸ் தொப்பி வச்சிருந்தான். “கொஞ்சம் குடுறா போட்டுப்ப்பாக்குறே..”னு முபாரக் அலி கேப்பான். “போடா..அழுக்காயிரும். எங்க வாப்பா திட்டும்..”னு தொப்பிய தொடவிடமாட்டான் அவன். தொப்பி போட ஏங்கிய காலம் அது. இப்ப தொப்பி அவசியம் இல்லேன்னு ஆகிப்போச்சு. அது வேற சங்கதி.
தொப்பி அவசியமா.. இல்லையானு.. அதிலும் ஆயிரத்தெட்டு கருத்து வேறுபாடுகள் இப்ப. சுன்னத் ஜமாஅத்காரங்க தொப்பி போடனும்னு சொல்றாங்க. இதற்கு மாற்றமானவங்க தொப்பி அவசியமில்லைன்னு வாதாடுறாங்க. இன்னும் சிலர் எப்பிடி வேணும்னாலும் தொழலாம். மொதல்ல நீ ஆண்டவன வணங்கினா சரிங்கறாங்க. அப்பவெல்லாம் தொழுவதில் எந்தவித கருத்து வேறுபாடுகளும் குழுமோதல்களும் இருந்ததா ஞாபகம் இல்ல. இந்த பத்து வருஷமாத்தான் இவ்வளவு பித்னாக்களும் நடந்துக்கிட்டிருக்கு. நாங்க தவ்ஹீத்வாதிகள்னு ஒரு அமைப்பு வந்த பிறகுதா இவ்வளவு கூத்துகளும் நடக்க ஆரம்பிச்சிருக்கு. நாங்கதா உண்மையான ஏகத்துவாதிகள் – இறை நம்பிக்கையாளர்கள்னு பிரசாரம் பண்ண ஆரம்பிச்சு.. பழைய சுன்னத் ஜமாஅத்காரர்கள் செய்வதெல்லாம் நபிவழிக்கு மாற்றமான காரியங்கள் – ஷிர்க்கான காரியங்களாக்கும் அவுங்க செய்றது. மக்கள் அதிலிருந்து மீண்டு வரணும். சுன்னத்துனு பேர மட்டும் வச்சுக்கிட்டு சுன்னத்துக்கு புறம்பான காரியங்களாக்கும் இந்த சுன்னத் ஜமாத்காரங்க செஞ்சு வர்ராங்கன்னு முக்குக்கு முக்கு கூட்டம் போட்டு பேச ஆரம்பிச்சாங்க. இப்ப அவங்களுக்குளேயும் பல குழுக்கள் – பித்னாக்களுமாக மொஹல்லாதோறும் சண்டை சச்சரவுகள்தா.
தொழாதவங்களப் பத்தி எந்தக் கவலயும் படாம ஒழுங்கா ஐவேளையும் தொழுறவங்களப் பாத்து அப்படித் தொழு இப்படித் தொழு.. தொப்பி போட வேண்டாம்..வெரல நீட்டாத.. ஆட்டு.. தொப்பி போட்டே ஆகணும். தொப்பியில்லாம பள்ளிக்குள்ள நொழையாதே.. எங்க பள்ளில வந்து வெரல ஆட்டாதேனு.. ஒரே அக்கப்போரு.. இப்ப.
முதல் பித்னா வெரல ஆட்டுறதுலதா ஆரம்பிச்சுது. அத்தஹியாத்துல கலிமா வெரல நாம இதுவரை நீட்டுறோம். ஆனா ஆட்டவும் செய்யலாம்னு ஹதீஸ் இருக்கு. ஒரு சஹாபி நபிகள் நாயகம் தொழுதுட்டு அத்தஹியாத்துல இருக்குறப்ப வெரல ஆட்டுறத பாத்திருக்காரு. இது முஸ்லிம், புகாரி போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் பதிவாயிருக்கு. ஆனா இத்தன காலம் சுன்னத் ஜமாத்காரங்க மறைச்சுருக்காங்க. இல்ல இது அவங்களுக்கே தெரியாமலும் இருக்கலாம். இப்படியாக நெறைய தெரியத விஷயங்களையும் , பேசிப்பேசி இளைஞர்களிடம் ஒரு புதுக்குழப்பத்தை ஏற்படுத்தினாங்க. உடனே சின்னப்பசங்கள்லாம் தொழுகை இருப்புல.. இத்தனை காலம் இல்லாத வழமையா..எல்லாம் தெரிஞ்சிட்டமாதிரி.. வெரலப்போட்டு ஆட்டு, ஆட்டுனு ஆட்ட ஆரம்பிச்சு அது பெரிய பிரச்சனையா மாறியிருக்கு இன்னிக்கு. இதுனாலேயே நிறைய ஜமாத்துங்க ரெண்டாயிருக்கு. சில இடங்கள்ல மூணாக்கூட ஆயிருக்கு. இதோட சேர்த்து தொப்பி பிரச்சனையும். “தொப்பி போட்டுட்டு பள்ளிக்குள்ளார வா…”ன்னு சுன்னத் ஜமாத்காரங்க சொல்ல – “தொப்பி போட்டுத்தா தொழுகணும், அப்பதா தொழுகை கூடும்னு ஹதீஸ் ஆதாரம் இருக்கா..’னு அவுங்க திருப்பிக் கேட்க, இறைவனை வணங்குவதில் இப்படி பல கருத்து வேறுபாடுகளும் , அது தொடர்பான சண்டை சச்சரவுகளும் இதுக்காக புது ஜமாஅத்தையே உருவாக்கறதும்னு மொஹல்லா தோறும் ஒரே கூத்தாயிருக்கு. இன்னிக்கு தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் சொல்றதுக்கேற்ப எதுக்கெடுத்தாலும் ஹதீஸ்ல இருக்கா.. ஆதாரம் இருக்கா..னு கேக்கற பித்னா கோஷ்டிகள் நாளுக்கு நாள் அதிகமாயிட்டேயிருக்குது. அதுலயும்கூட இப்ப பல கோஷ்டிகள் உருவாகி .. ஆளுக்கு ஆள்.. நாட்டாமை பண்ணி.. ஏகப்பட்ட அமைப்புகள்.. ஏகப்பட்ட தலைவர்கள்.
ஆனால் முஸ்லிம்களின் ஜீவாதாரப் பிரச்சனைகளை முன்னெடுத்துச் செல்லத்தா நாதியத்துக் கிடக்கும் சமூகம். கூட்டம் போடுறதும், கூப்பாடு போடுறதும். பேரணி நடத்துறதுமா அரசியல் அக்கப்போர் பண்ணிக்கிட்டிருக்காங்க ஆள் ஆளுக்கு. உருப்படியா ஏதாச்சும் ஒரு நன்மை கெடச்சிருக்கா இவங்களால. எல்லாத்தையும் தீவிரவாதிகள் லிஸ்டில சேர்த்ததுதான் மிச்சம்.
வெரல ஆட்டுற விசயத்துலாவது எல்லா ஒண்ணு போல செய்யறாங்களான..அதான் இல்ல. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா தங்களோட இஷ்டத்துக்கு ஆட்டுறாங்களே..ஒரு சிலரின் விரலாட்டம் ரொம்ப வேகமாக இருக்கும். அதாவது விடாம இமாம் ஸலாம் சொல்றவரைக்கும் ஆட்டிக்கிட்டே இருப்பாங்க. இன்னும் சிலர் நிறுத்தி நிறுத்தி மெதுவா ஆட்டுவாங்க. இன்னும் சிலரோ ரெண்டு அல்லது மூணு தடவ ஆட்டிட்டு நிறுத்திக்குவாங்க. இதுல எது சரின்னு கேட்டா எல்லாம் சரிம்பாங்க. எதுலவும் ஒரு ஒழுங்குமுறை வேணுமல்ல. ‘அப்ப எதுக்குப்பா இப்பிடி ஆள் ஆளுக்கு விதவிதமா ஆட்டணும், பேசாம நீட்டியே வச்சிக்க வேண்டியதுதானெ’ன்னா.. ‘அதெப்படி..ஹதீஸ்ல இருக்கே’ங்குறாங்க. எல்லாம் அப்படியே ஹதீஸ பின்பற்றி நபி வழியிலே சுத்தமான முஸ்லிம்களா நடக்குற மாதிரி பேசுவாங்க. இவங்களோட விரலாட்டம் மற்ற தொழுகையாளிகளின் கவனத்தைக் கலைத்து இடைஞ்சல் செய்வது பற்றி கவலை கெடையாது. கேட்டால், ‘நீங்க எதுக்கு வெரலைப் பாக்குறீங்க..? அப்ப தொழுகைல கவனம் இல்லேன்னும் தக்வா இல்லாம தொழுவுறீங்கன்னும் தெரியுது. இதப்பத்தி நபி (ஸல்) சொல்றாங்க’ன்னும். ஹதீஸை கரைச்சி குடிச்சவங்களாட்டம் ஒரு ஹதீஸை எடுத்து விடுவாங்க. இவனுங்ககிட்ட வாயக் குடுத்து இதென்ன வம்பாப்போச்சேன்னு யாரும் மறுக்க வாயத் தொறக்கவே மாட்டாங்க. ’அவுங்க பண்ற கூத்துக்கு பயந்து கண்ண மூடிக்கிட்டு தொழுவனுமாக்கும்..?’ சில பெரிசுகள் கூடி நின்னு அங்கலாய்ப்பார்கள்.
தொப்பி போடாதே, விரல் ஆட்டும் கூட்டம் நாளுக்கு நாள் பள்ளியில் அதிகமாகிக்கொண்டேயிருந்தது. ஜமாத்காரர்களுக்கு மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருந்த ஒரு நிலையில் செட்டியார் சின்னாப்பா பூனைக்கு மணி கட்டிவிட்டார். ”தொழுகைக்கு வராத ஆளுக்கு மத்தவங்க தொழுவுறதப்பத்தி என்ன அப்படி அக்கற..? யாரு எப்படித் தொழுதா என்னனு போக வேண்டியதுதானே.. தொழுகத்தொழுக ..விரலப் புடிச்சி தொழுகை முறிக்குறாரே..தொழுகைல எப்பிடி முறிக்கலாம். இத யாரும் கேக்க மாட்டிங்களாக்கும்..?” ஜஹாங்கீர் இதுக்கு ஒரு வழி பண்ணாமல் விடமாட்டேன் என்ற ரீதியில் கெடந்து குதித்தான்.
”எம்பா இப்ப்டி பொய் சொல்றே..? தொழுவ தொழுவ யாராச்சும் வெரலப் புடுச்சு தொழுகய முறிப்பாங்களாக்கும்..? நீ தொழுகய முடிச்ச்ச பின்னதானே வெரலப் புடுச்சேன்.. இந்தப் பள்ளில வெரல ஆட்டக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்கல்ல.. அப்பவும் வந்து ஆட்டிட்டேயிருக்கீங்களே.. வேணும்னே வ் அந்து பித்னா பண்றீங்க..” செட்டியார் சின்னாப்பா அவனுக்கு பதில் சொன்னார்.
”பசி நேரத்துல இவனுக வேற..” கறிச்சாத்து மணம் மூக்கைத் துளைக்குது வூட்டுகு போக உடாம பின்னயும் பின்னயும் பேசிக்கிட்டுனு” முணுமுணுத்தவாறு “சரி.. விடுங்கப்பா..” என்றார் மைதீன் ராவுத்தர். பசியால் அவர் வயிறு குத்பா ஓதிக்கொண்டிருந்தது.
”அதெப்படி விடுறது.. இதுக்கொரு முடிவு வேண்டாமாக்கும். ஜமாத்துகாரங்க இப்பிடியா பேசுறது..? போங்க பேசாம நீங்க..”னு மைதீன் ராவுத்தரைக் கோபித்தார் சின்னாப்பா.
உள் பிரகாரத்தில் பள்ளி வசூல் கணக்கில் மூழ்கியிருந்த பள்ளியின் முத்தவல்லி அனீபா ராவுத்தர் ஆற அமர எழுந்து வந்தார். “என்னவாக்கும் பிரச்சன இப்ப?” என்றவாறு.
“வேற என்ன.. வெரலாட்டறாதுதா..”
“ஏம்ப்பா.. பித்னா பண்றதுக்குனே பள்ளிக்கு வர்றீங்களாக்கும், இப்பிடி ஜும்மாவுல வந்து கலாட்டா பண்ணுறீங்களே.. உங்களயெல்லா பள்ளிகுள்ளார உடாமப் பண்ணும் கிட்டியா..” என்றார் முத்தவல்லி கோபத்துடன்.
“பள்ளிக்குக்ள்ள உடாமப் பண்ணுங்க பாக்கலாம்..” நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு வந்தான் காஜாஉசேன்.
“என்னடா பண்ணுவே..?” அவனைப் பார்த்துக் கத்தினார் முத்தவல்லி.
“அய்யே! என்னவாக்கு மீது.. முத்தவல்லி! சும்மாருங்க.. சின்னப்பசங்ககிட்டப் போயி நீங்க வாயக் குடுத்துட்டு.. வாங்கனு நீங்க..” முத்தவல்லியைப் இந்தப் பக்கம் இழுத்தார் மைதீன் ராவுத்தர்.
“ஒரு நேரு சீரு இல்லாத பசங்க..” என்றவாறு மெல்ல நடையைக் கட்டினார் செட்டியார் சின்னாப்பா. பிரச்சினை ரொம்ப பெருசாயிருமோங்கற பயம் அவருக்கு. பிறகு அவர் தலையில்ல உருளும்.
**
நன்றி : வார்த்தை , ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்
**
மேலும் பார்க்கவும் :
முற்றுகையிடப்பட்ட மனதின் தத்தளிப்பு – ஆதவன் தீட்சண்யா (ஃபிர்தவுஸ் ராஜகுமாரனின் ‘‘நகரமே ஓநாய்கள் ஊலையிடும் பாலைவனம் போல’’ சிறுகதைத் தொகுப்புக்கான முன்னுரை )
மதங்கள் நமக்குத் தந்த (மிச்சம்) உச்சம் – களந்தை பீர் முகம்மது