விலகும் திரைகள் – பிரேமின் பரிகாசம்

அதிர்வெடி போட்டு ஆபிதீனை அடையாளம் காட்டிய பிரேமைச் சேர்க்காமல் ஆபிதீன் பக்கங்கள் அழகு பெறுவதாவது..! பிரேமின் தீராநதி கட்டுரையிலிருந்து கொஞ்சம் பதிவிடுகிறேன் –  அவருக்கு நன்றாகவே பரிகாசம் வரும் என்று காட்ட.  (‘இணையத்தில் எழுதுவதெல்லாம் வேடிக்கையானது’  என்று என்னிடம் பிரேம் சொன்னது பரிகாசத்தில் சேராது).   ‘கண்ணகி அறுத்து எறிந்த ஒற்றைமுலைதான் மணிமேகலையின் கையில் அட்சயபாத்திரமாக மாறியது’ என்று அற்புதமாக பிரேம் எழுதியிருந்ததாக துபாயில் சொன்ன ஜெயமோகன்,  அந்த சொல்புதிது கட்டுரையை தான் தமிழில் மொழிபெயர்க்கவா? என்று பிரேமிடம் கேட்டதாகச் சொல்லி கூட்டத்தைக் கலகலக்க வைத்தார் . ஆமாம், பிரேமின் எழுத்து அப்படித்தான் .  ஜமாலனின் எழுத்தை வாசிப்பதுபோல தோலை உரித்துத்தான் சுவைக்க வேண்டும். ஆனால் , பிரேம் எழுதிய இந்தப் பகுதி மட்டும் உரித்த வாழைப்பழம். பகடி அறியாத  எனக்கே பதமாக இருந்ததென்றால் பார்த்துகொள்ளுங்களேன். உங்களுக்கும் சிரமம் இருக்காது என்றே நினைக்கிறேன். ஒரே ஒரு கண்டிசன் –  வாயைத் திறக்க வேண்டும், வீரபாண்டிய கட்டபொம்மன் போல. சூப்பர் போனஸ் பதிவின் அடியில் இருக்கிறது. வீடியோ. அவசியம் பாருங்கள். நன்றி. – ஆபிதீன்

***

விலகும் திரைகள் – அத்தியாயம் 2 [ தீராநதி (டிசம்பர் 2011)]

பிரேம்

**

சிறுதெய்வ மரபுகளும் செந்தமிழர் பெருங்கனவும்

**

……
என் நினைவாற்றல் தேவர்களின் தலைவனாக என்னை மாற்றியிருந்தது. நாங்கள் குலக்குழுவாகத் திரையரங்குகளுக்குப் புறப்பட்டுச் சென்று வரிசையில் நின்று சீட்டு வாங்கி உள்ளே சென்று இடம் பிடித்து அமர்ந்து காத்திருப்பது தொடங்கி வண்ணவிளக்குகள் மின்ன கொசுவம் வைத்த திரைகள் மேலேறிச்செல்வது உள்ளிட்ட அனைத்தும் நாங்கள் பார்த்த ஒரு திரைப்படத்தின் கதையில் முதல் அங்கமாகச் சேர்ந்துவிடுவது காப்பிய மரபுப்படி தவிர்க்க முடியாத ஒன்று. ஒவ்வொரு சட்டகமாக விளக்கி, வசனத்துடன் விவரிக்கும் திறன்பெற்ற ஒருவனோ ஒருத்தியோ பெருமை பெற்ற கதைசொல்லியாக மாறிவிடுவோம். அதில் இடம்பெற்ற பாடல், இசை, சப்தம் அனைத்தையும் இணைத்துச் சொல்கிற ஒருவன் நல்லிசைப் புலவனாகப் புகழப்படுவான். அதில் இடம் பெற்ற குட்டிக்கரணம், குத்துச்சண்டை, கொஞ்சலாட்டம் அனைத்தையும் செய்து காட்டக்கூடியவனே சர்வாங்க லட்சணங்கள் பொருந்திய கலைத்தாயின் தலைமகனாகும் பாக்கியம் பெற்றவன். இவற்றில் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமிழும் அடங்கி விடுவதுடன் தமிழர்களின் இரு கண்களாக அமைந்து விட்ட வீரமும் காதலும் பொருந்தியிருப்பதை நுண்மான் நுழைபுலம் கொண்ட எவரும் உய்த்து உணர்ந்து கொள்ள முடியும். ஊழ்வினை வந்து உறுத்தியதின் பயனாக இயற்றமிழ்த் திறன் மட்டுமே அமையப்பெற்றவனாக யாம் இருந்துவிட்டோம் என்பதை வாசகர்களுக்கு சொல்லத்தேவையில்லை. அந்தக் கதைசொல்லிகளில் சிலர் படங்களைப் பார்க்காமலேயே கேட்டகதைகளைப் பார்த்ததுபோலச் சொல்லி புகழ் பெற முயற்சி செய்த சில நிகழ்ச்சிகளையும் நான் வருத்ததுடன் சொல்லிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்’ புதுமரபு ஒன்றினை நாங்கள் தொடங்கி வைத்தோம். இனி சினிமா டிக்கெட்டையும் பத்திரப்படுத்திக் காட்டும் ஒருவரே உண்மையான அங்கீகாரம் பெற்ற கதைசொல்லியாக முடியும் என்ற உத்தியைக் கையாண்டு பார்த்தோம். அதுவும் பொய்த்துப் போனது. அண்ணன், மாமன்மார்களிடம் கதைகேட்டுக் கொண்டு,அவர்களின் சட்டைப்பைகளில் இருந்து ஆவணங்களைக் கடத்தி வந்து அது தமதுடையதுதான் என்று சொல்லிப் பரிசுபெறும் புலவர்கள் உருவாகிவிட்டார்கள். இவற்றையெல்லாம்  மீறி தமிழ்த்திரைப்படத்தின் பெருமையையும் தனித்தன்மையையும் நம்பகத்தன்மையையும் நாங்கள் போற்றிப் பாதுகாக்க எம் குழந்தைப் பருவத்தைப் பணயம் வைத்து எம் போராட்டத்தைத் தொடர்ந்து வந்தோம். இது ஏதோ பிள்ளைவிளையாட்டு என்று ஏளனமாக எண்ணி நகைக்க யாரும் தலைப்பட்டார்களேயானால் அவர்கள் தமிழர்களின் வரலாற்றுச் சான்றுகளை வழிமாற்றி விடும் பெரும் பிழையைச் செய்தவர்களேயாம். ஏனெனில் எங்கள் கலைத்தாகம் பல வேளைகளில் ஊர்த்தகராறுகள் வரை சென்றதுண்டு. ஏனெனில் எங்கள் திரைப்பட பக்தி என்பது தேசபக்தியுடன் பின்னிப் பிணைந்தது. சிறுவர் உழைப்பு தடைசெய்யப்படாத காலம் அது. அதே சமயம் சிறுவர் அரசியல் பெருகியிருந்த காலமும் அது. இளம்பிராயத்திலிருதே மிகுந்த சமூக உணர்வும், அரசியல் அறிவும் பெற்றவர்களாக நாங்கள் இருந்தோம்., வளரும் பயிர் முளையிலேயே தெரியும் என்ற சான்றோர் கூற்றுப்படி நாங்கள் கலைச்சேவை என்ற பெயரில் நாட்டின் அரசியலைக் கட்டமைக்கும் பணியில்தான் ஈடுபட்டு இருந்தோம். ‘உனக்கு யாருடைய படம் பிடிக்கும்  என்று சொல்; நீ யார் என்று சொல்கிறோம்’ என்பதுதான் எங்கள் அரசியல் அரிச்சுவடி. ‘நீ யாருடைய தொண்டன் என்பதுதான் உனது வரலாற்றுப் பங்களிப்பை நிர்ணயிக்கும் காரணி’. ஆண்டுக்கு இருமுறை புத்தம் புது காப்பிகளாகத் தவறாமல் வந்துபோகும் நாடோடிமன்னன், வீரபாண்டிய கட்டபொம்மன் இரண்டும் எங்களுடைய அரசியல் அடையாளங்கள்.

இந்தியா ஒரு பலகட்சி முறை கொண்ட நாடு என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டவர்கள் இல்லை, எங்களுக்குக் இருகட்சி முறையே உயர்ந்ததும் உத்தமமானதுமாக இருந்தது. உலகில் உள்ள மனிதர்களை நாங்கள் இரு வகையாகவே பிரித்து வைத்திருந்தோம். எம்ஜியார் கட்சி, ஜிவாஜி கட்சி. ஜிவாஜி என்பது அச்சுப்பிழை அல்ல, மற்றவருடைய பெயரில் உள்ள அந்த ஜியைவிட ஒன்று அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் கையாண்ட அரசியல் சாணக்கியத்தின் ஒரு பகுதி, இதனையே எங்கள் எதிரிகள் வேறுவிதமாகக் கையாண்டு எங்களுடைய சீற்றத்தைச் சீண்டி விளையாடிப் பார்ப்பார்கள். அவர்கள் ‘சிவாசி’ என்று உச்சரிப்பதன் மூலம் நம் நரித்தனத்தைக் காட்டிக்கொள்வார்கள். அவர்களுக்கு நல்ல தமிழ் பேச வராது என்பதற்கு அதனையே மேலும் ஒரு சான்றாக்கி அந்த தந்திரத்தையும் நாங்கள் முறியடிப்பதுண்டு.

தெய்வபக்தி நிறைந்தவன் என்ற வகையிலும் எங்கள் பாட்டனாரின் சைவப்பற்றின் வழித்தோன்றல் என்ற வகையிலும் குடும்பவழிநின்று நான் ‘ஜிவாஜி’ கட்சியைச் சேர்ந்திருந்ததில் வியப்பொன்றும் இல்லை. நல்லோர்கள் நாடுவது, பெரியோர்கள் பாடுவது நடிகர் திலகத்தின் நாமமே என்ற வாக்குக்கு இணங்க நானும் எங்கள் கூட்டாளிகளும் ‘தெய்வமகன்’ திருப்புகழைத் தினம்தோறும் ஓதிவந்தோம். புரட்சித்தலைவரா புரட்டுத்தலைவரா என்று மற்றவர் பெயரை இழிவுபடுத்திப் பேசுவது எமது அரசியல் பற்றின் அசைக்கமுடியாத அடித்தளமாக அமைந்திருந்தது. இதற்குக் காரணம் ‘மலைநாட்டு மாயாவி’யான அந்த நடிகர் (அவரை எங்கள் படையின் வீரர்கள் மற்றவர் என்று மரியாதையாகவும் சீற்றம் வரும்பொழுது எலிமூஞ்சியார் என இழிவாகவும் குறிப்பிடுவதை மரபாகக் கொண்டிருந்தோம்) தெய்வவேடங்கள் ஏற்று அதுவரை நடிக்காததுடன் இனி நடிக்கவும் மாட்டேன் என்றும் அறிவித்து இருந்தாராம். அம்மட்டும் இன்றி ஏசுநாதர் வேடத்தில் அவர் தோன்றிய உருவப்படம் எங்கள் அணியினருக்கு பெரும் வெறுப்பை உருவாக்கி இருந்தது. எப்படியென்றபோதும் தேசப்பற்று தெய்வப்பற்று இரண்டும் பொருந்திய திருமகன் வழி நடப்பதே எங்களுக்கு பெருமை சேர்ப்பதாக இருந்தது. அதனையே எங்கள் குடும்பத்துப் பெரியவர்களூம் ஆமோதித்து வந்தார்கள். ஆனால் ‘மற்றவர்’ கட்சிக்கு அதிகமாக ஆதரவு இருந்ததை நாங்கள் அறிந்து கொள்ளத் தொடங்கியபோது சற்றே சோர்வும் கலக்கமும் அடைந்தோம். ஆனால் எங்களின் முன்னோடிகள் ‘நல்லவர்கள் எப்போதும் குறைவாகவே இருப்பார்கள்’ என்று சொல்லி  எங்களை ஊக்கப்படுத்திவந்தார்கள். புதுச்சேரி பகுதியில் எங்கள் ‘பாரதவிலாஸ்’ கட்சி தமிழகம் போல முழுமையாக நலிவடைந்து போகாமல் இருந்ததால் தேசபக்தியையும் தெய்வ பக்தியையும்  தன் இருகண்களாகக் கொண்டிருந்த கலைத்தாயின் தலைமகனின் புகழ் மங்காமல் இருந்து வந்தது.

எனக்கு நேர்ந்த ஒரு குழப்பத்தின் காரணமாக நான் இந்த இரு தலைவர்களின் மீதும் ஐயம் கொண்டு பெரும் வரலாற்றுப் பிழையொன்றை இழைக்க நேர்ந்தது. தொடர்ந்து பத்திரிகைகள் படித்து உலக அறிவையும் உண்மைப் பொருளையும் தேடிச்சேர்ப்பதை குழந்தைப் பருவத்திலிருந்தே பழக்கமாகக் கொண்டிருந்த எனக்குச் சில அதிர்ச்சியூட்டும் உண்மைகள் தெரியவந்தன. சிவாஜி கணேசன், எம்.ஜி.ராமச்சந்திரன் என்ற இருநடிகர்களும் நானும் எங்கள் கூட்டாளிகளும் நம்பிக்கொண்டிருந்தது போல பல பிறவிகளாகப் பகைகொண்டு, நேரில் பார்த்துக் கொண்டால் வாளினை உருவிப் போரில் இறங்கி இரண்டில் ஒன்று பார்த்துவிடும் சத்ருக்கள் அல்ல என்பதும், ‘கூண்டுக்கிளி’யில் அவர்கள் மோதிக்கொள்வதும்கூட சும்மா நடிப்புதான் என்பதும், அவர்கள் இளம்பிராயத்திலிருந்தே நல்ல நண்பர்கள் என்பதும் எனக்குத் தெரியவந்தன. ஒரு நண்பர் வீட்டுத் திருமண நிகழ்வின் போது இருவரும் அணைத்துக்கொண்டு அன்பைத் தெரிவித்துக் கொள்ளும் காட்சியை ஒரு சினிமா பத்திரிகையில் பார்த்தபோது எல்லா உண்மைகளும் எனக்கு உள்ளங்கை நெல்லிக்கனியென விளங்கிவிட்டது. நாங்கள் சிந்திய ரத்தம் விழலுக்கு இரைத்த நீர்தான் என்பதும் புரியத் தொடங்கியது. அதுவரை திருவிளையாடல், கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் தொடங்கி சிவகாமியின் செல்வன் வரை தேர்ந்தெடுத்துப் பார்த்து வந்த நான் அதற்குப் பிறகுதான் நாடோடிமன்னன், அடிமைப்பெண், ஆயிரத்தில் ஒருவன், மதுரை வீரன்ம் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் தொடங்கி உரிமைக்குரல், பல்லாண்டு வாழ்க வரையான படங்களை இழந்துபோன புதையல்களைப் போலத் தேடிப்பிடித்து பார்க்கத் தொடங்கினேன். இதிலிருந்து மேலும் ஒரு வரலாற்று உண்மையை தெரிந்துகொள்ள முடிந்தது.’அண்ணி’ எனத் தனிச் சொத்தாக நாங்கள் கொண்டாடி வந்த அம்மையார் ஒரேசமயத்தில் இரு தலைவர்களுடன் நடிப்பார் என்றும் ஒரேபோல் ‘முத்தங்களை’ இருவரிடமிருந்தும் பெற்றுக்கொள்வார் என்றும் புரிந்தபோது தலைச்சுற்றி மயக்கம் வந்து கண்ணைக் கட்டத்தொடங்கிவிட்டது. அந்த சமயத்தில்தான் பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் நூல்தொகுதியை முதன்முதலாக ஒரு ஆசிரியர் வீட்டில் பார்த்திருதேன்., ‘பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட’ அந்த மூன்று தொகுதிகள் முருகபக்தனான நான் முழுமையாகப் படித்துமுடித்தபோது என் நெற்றியில் இருந்த விபூதியும் சந்தனமும் அருவருப்பை உருவாக்கின. தமிழ்க் கடவுள் முருகனாகத் தோன்றி ஆண்டுதோறும் எங்கள் ஊர்த்திரையில் அருள் புரிந்து வந்திருந்த  நடிகை அந்த ஆண்டுதான் நகரத்துத் திரை ஒன்றில் ‘அம்மா நான் பாசாயிட்டேன்’ என்று சொல்லிக்கொண்டு ஓடிவந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருந்தேன். அந்த அக்காவை இனி ‘ஞானப்பழமாக’ எண்ணிக்கொள்ள முடியாது என்ற உயிரியல் உண்மை வேறு என்னை உறுத்தத் தொடங்கியிருந்தது. பெரியார் மறைந்தபோது சிறப்பு பூசை வைத்துக் கொண்டாடிய இறையடியார்களை நேரில் பார்த்து வளர்ந்திருந்த எனக்குச் சில திரைகள் விலகியது போல இருந்தது. வேறு சில புதிய திரைகள் என்னை மூடுவது போலவும் இருந்தது. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனுக்குப் பிறகு ‘இரு தலைவர்கள் எதிர் எதிர் கட்சிகள்’ என்ற மாயை என்னுடைய நண்பர்களுக்கும் கலைந்து ‘ஒருவர் நடிகர் ஒருவர் தலைவர்’ என்பது போன்ற கருத்து உருவாகியிருந்தது. இனி வேறு பகையணிகளைத் தேடிச் செல்ல வேண்டியதுதான் என்ற சலிப்பும் ஏற்பட்டிருந்தது.

நான் வேறு தெய்வங்களைத் தேடிச் சென்றது போல அவர்களும் வேறு தெய்வங்களைத் தேடிச் சென்றார்கள். தெய்வங்கள் பெருகிய நம் மண்ணில் எவரும் தேடியலையத் தேவையில்லை தெய்வங்களை. அவர்கள் நம்மைத் தேடி வருவார்கள். பக்தி மரபின் ஒளிபடிந்த நம் மண்ணின் வரலாற்றில் நாம் மறந்தாலும் தான் மறவாது தடுத்தாட்கொள்ளும் தயாநிதிகள் ஏதோவொரு வடிவில் தோன்றிகொண்டே இருப்பார்கள். அப்படித்தான் நடந்தது அருமை நண்பர்களே.

…..
நன்றி : பிரேம், தீராநதி

***

ஒரு சுட்டி : மகாத்மாக்கள் வருவார்கள் போவார்கள் – பிரேம்

***

போனஸ் :

எம்.ஜி.ஆர் ரகளை செய்த கதாகாலேட்சபம்

சிவாஜி ரகளை செய்த ‘I will sing for you’  (நன்றி : மஜீத்)