சால்வடார் டாலியின் ஓவியங்கள் – பிரம்மராஜன்

பிரம்மராஜனின் மீட்சி இதழ் 28-இல் இருந்து, நன்றியுடன்..

பெரும் பயப்பதியும், காரண அறிவும் பிணைந்து நம்மை இயக்குகிற இந்த இருபதாம் நூற்றாண்டின் நிகழ்வுகள் நமக்கு அர்த்தத்தை அளிக்க வேண்டுமானால் அது ஸர்ரியலிஸத்தின் மூலமாகவே அதிகமாய் சாத்தியப்படும். வேறு எந்தவித கோணத்திலும், ஆய்வு முறைமையிலும் பிடிபடாத பல உறுத்தும் உண்மைகள் – ஹிரோஷிமா, வியத்நாம், கம்பூச்சியா, டெஸ்ட் ட்யூப் குழந்தைகள், பெர்ஷிங் IIs ஏவுகணைகள்- இவை யாவும் ஸர்ரியலிஸ வெளிப்பாட்டில் நமது பிரக்ஞையில் கச்சிதமாகப் பதிவாகின்றன. ஸர்ரியலிஸ ஓவிய இயக்கத்தில் டாலியின் பங்கு தனித்துவமானது இருபதாம் நூற்றாண்டின் இரட்டை நிகழ்போக்குகளான Sexம், paranoiaவும் டாலியின் உலகத்திலும் நமது உலகத்திலும் ஒரே மாதிரி இயங்குகின்றன. மற்றொரு ஸர்ரியலிஸ ஓவியரான Max Ernst மற்றும் அமெரிக்க நாவலாசிரியர் William Burroughs ஆகிய இருவரிடமிருந்தும் டாலி வேறுபடுகிறார். முந்திய இருவரும் தமது தனித்துவ உலகங்களின் நிழல்களில் சமைந்துவிடும்போது டாலி தனது ஓவிய வெளிப்பாடுகளில் இருந்து வெளிப்படுகிறார்.

ஃபிராய்டிஸ யுகத்தின் தாக்கத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டவர்களில் முதன்மையானவர் டாலி. இருபதாம் நூற்றாண்டு ஸ்வயத்தினுடைய (Peyche)வினோத வியாபக உலகினை, தொலைபேசிகள், குழையும் கைக்கடிகாரங்கள், பொறிக்கப்பட்ட முட்டைகள். கடற்கரைகள் போன்ற சாதாரண உலகின் படிமங்களைக் கொண்டு சித்தரிக்கிறார். டாலியின் ஓவியங்களில் நடக்கும் ‘நிகழ்ச்சிகளுக்கும் நமது நடைமுறை யதார்த்தத்தின் நிகழ்ச்சிகளுக்கும் அதிக வேறுபாடில்லை என்று சொல்ல முடியும். டாலியின் ஓவியங்களின் பிரதான குணம் என்று சொல்லப்படக் கூடியது அவற்றின் hallucinatory naturalism of the Renaissance. இதற்கு மேற்பட்டு டாலி புகைப்படத் தன்மையான யதார்த்தத்தையும், குறிப்பிட்ட ஒருவித திரைப்பட வெளிப்பாட்டு முறையையும் உத்திகளாகப் பயன்படுத்துகினர். இந்த உத்திகள், பார்வையாளனை அவனுடைய வசதிக்கு ஏற்ப மிக நெருக்கமாக ஓவியங்களுடன் தொடர்புபடுத்துகின்றன.

பிற ஸர்ரியலிய ஓவியர்களான Max Ernat, Rene Magritte. Tanguy ஆகியோர் சம்பிரதாய விவரணை வெளியைப் (Traditional Narrative Space) பயன்படுத்தினார்கள். இவ் விதமான விவரணை வெளி, ஓவியத்தின் காட்சிப் பொருளை முன்பார்வை கொண்டதாகவும் (Frontal) பொதுப்படுத்தப்பட்ட கால அமைப்பை உடையதாகவும் ஆக்குகிறது. மாறாக டாலி தனது ஓவியங்களை, திரைப்படத்தில் ஒரு Frameலிருந்து மற்றொரு Frameக்கு கடந்து செல்வது மாதிரியான உணர்வைத் தரும்படி ஆக்கியிருக்கிறார். டாலியின் ஓவிய உலகில் நம்மை அமைதியில்லாமல் துன்புறுத்தும் வெளிச்சம், சூரியனைச் சார்ந்தது என்பதை விட மின் ஒளியைச் சார்ந்தது என்பது சரியாக இருக்கும். மேலும் டாலியின் ஓவியங்கள், சென்டிமென்டலிஸத்தைத் தவிர்த்த அழகான நியூஸ் ரீல்களாக நமது மண்டைகளில் தயாரிக்கப்பட்ட சினிமாப் படங்களின் இயக்கமற்ற Stillகளைப் போலிருக்கின்றன. முழு மனிதனையே தனது சித்திரங்களில் படைக்கும் டாலியின் ஒவிய வளர்ச்சிக் கட்டங்கள் பின்வருமாறு அமைகின்றன.

1.The classic Freudian Phase.
2. The Metamorphic phase. (A Poly-perverse Period) .
3. The Religious Phase.
4. The Nuclear Phase.

1968ம் ஆண்டு டாலி கூறிய வார்த்தைகள் ஒய்வற்று ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன !
“The Specialized Sciences of our times are concentrating on the study of the three constants of life: the Sexual instinct, the sentiment of death, and the anguish of space – time.”
*
மீட்சி முகப்பு அட்டை ஓவியம் : டாலியின் ‘Geopoliticus’ Child Watching the Birth of a New Man. 1943 Reynolds – Morse Collection, Cleveland, Ohio.

*

நன்றி : பிரம்மராஜன்

*

மேலும் :
சால்வடார் டாலி – பிரம்மராஜன் தொகுப்பில் இருந்து…  –  நன்றி : யுவன் பிரபாகரன்

பிரம்மராஜன் கவிதைகள் – நகுலன்

‘Silent Saint’ என்று நான் அழைக்கும் பிரம்மராஜனும் ‘Silent Satan’ நாகூர்ரூமியும்தான் மீண்டும் நான் எழுதவந்ததற்கு காரணம். (அட, அதற்காக ஏன் அவர்களை அடிக்க ஓடுகிறீர்கள்?). பிரம்மராஜன் கவிதைகள் பற்றி நகுலன் எழுதிய பழைய விமர்சனத்தை ‘புது எழுத்து’ மனோன்மணி முகநூலில் பதிவிட்டிருந்தார். இங்கே மீள்பதிவிடலாம் என்று தோன்றியது. சில வார்த்தைகள் குழப்பமாக இருப்பதால் இமேஜ் ஃபைல்-ஐயும் கீழே இணைத்திருக்கிறேன். தவறு இருப்பின் சொல்லுங்கள், திருத்துகிறேன். என்னிடமிருக்கும் பிரம்மராஜனின் ‘மஹா வாக்கியம்’ நூலிலுள்ள கடைசி கவிதையில் , ‘யாருடைய தலையையோ சீவுவது போல பென்சிலை சீவினார் அவர்*’ என்ற முதல் வரிக்கு ‘அவர்’ என்பது நகுலன் என்ற குறிப்பு இருக்கிறது! இதற்கு தாஜ் ஒரு கவிதை எழுதுவார் என்று நினைக்கிறேன். தாஜுக்கு ஒரு போனஸும் பதிவின் அடியில் இருக்கிறது. நன்றி. –ஆபிதீன்

***

பிரம்மராஜன் கவிதைகள்
நகுலன்

அப்படித்தான் தோன்றுகிறது: பழகிப் பழகி நைந்துபோன விஷயங்கள் சிந்தையில் கவ்விப் பிடிப்பதில்லை. பூட்டிய பூட்டைப் பூட்டப் பட்டிருக்கிறதா என்று யந்திர ரீதியில் இழுத்துப் பார்ப்பது போல் பழக்கங்களின் பிடியிலிருந்து மாறுகையில்தான் சிந்தனை தீவிரமாக இயங்குகிறது. பிரக்ஞை சிலிர்க்கிறது; ஒரு புதிய மரபின் தொடக்கம்; பிறகு மீண்டும் பழைய கதை; பூட்டிய பூட்டைப் பூட்டப் பட்டிருக்கிறதா என்று இழுத்துப் பார்ப்பதுபோல். ஆனால் பழக்கத்தின் பிடிப்பை உதறி ஒரு புது உலகை – அப்படி முழுவதும் புதிதில்லை – படைப்பாளி சிருஷ்டிக்கையில், பழக்கத்தின் வேகத்தில் மரத்துப்போன பிரக்ஞை புதியதையும் , அது நைந்துபோன பாஷையில்லை என்ற அதே காரணத்தின் அதை அசட்டை செய்கிறது!

ஞானக்கூத்தன் சொல்வது மாதிரி பிரம்மராஜன் கவிதை “ஒரு வித்தியாசமான குரல்” என்பது மாத்திரமில்லை; அது ஒரு சாசுவதமான குரல் என்பதிலும் ஐயமில்லை. அதன் தன்மைகளை பின்வருமாறு குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன். அது படிம வியாபகமானது; இங்கு படிமம் நுண்மையாகக் கட்டுக் கோப்புடன் இணைகிறது; இறுக்கமான நடை; அவரே சொல்கிற மாதிரி அறிவுலகின் இணைப்பிருந்தாலும் அறிவு உணர்வாக மாறுகிறது. எனவே கவிதை பிறக்கிறது. அவர் Co-authorship என்பதையும் புறக்கணிப்பதற்கில்லை. ஏன் என்றால் ஒரு கவிஞன் உலகம் அவன் அனுபவ உலகம்; இந்த அனுபவ உலகம் வாசகனுடைய அனுபவ உலகுடன் இணைகையில்தான் உண்மையான ரஸனை சூடு பிடிக்கிறது. இது வாசகனுக்கு அவனுக்குரிய மதிப்பைத் தருகிறது.

கவிதையில் வார்த்தைகள் ஒன்றிற்கு மேற்பட்ட “அர்த்தங்கள்” உடையவை. ஐம்புலன்களால் கிரகிக்கப்பட்டு, அனுபவச் சூழல்களால் வளர்ச்சியுற்று, சப்தமும் சித்திரமுமாக உள்வியாபகமுற்று அனுபவம் வார்த்தையின் மூலம் அதீத எல்லைகளை நோக்கி நகர்கிறது. சுருக்கமாகக் கவிதையில் வார்த்தையின் உள்வியாபகம் எல்லையற்ற பரிமாணம் உடையது. பிரம்மராஜன் வார்த்தையில் “அரூபமான வார்த்தைகள் செயல் இழந்து போகும் பொழுது அந்த இடத்தை நிறைவு செய்யப் படிமங்களால் மட்டுமே முடியும்.” மீண்டும், “படிமங்கள் இயக்கம் மிகுந்தவை” எங்கு ”படிமம் இயக்கமற்றதாக இருப்பின் அதைக் கொண்டிருக்கும் கவிதை செயல்வீச்சு அற்றதாகவே இருக்கும்”. ஆங்கிலத்தில் கவிதை எழுதும் ஒரு இந்தியக் கவிஞர் சொன்னதாகக் கேள்வி: சில இந்தியக் கவிஞர்களின் படைப்புகளை நோக்குகையில் அவர்கள் ஐம்புலன்கள் அற்றவர்கள் என்று சந்தேகம் தோன்றுகிறது” என்று. அது எப்படியாவது போகட்டும்.

எதிர் கொள்ளல்” என்று ஒரு கவிதை. பாரதி கவிதையில் இருந்து ஒரு வரி. “வீணையடி நீயெனக்கு; மேவும் விரல் நானுக்கு”. இங்கு ரஸனை என்பது நேர்கோடாக இணைக் குறியீடாகச் செல்கிறது. ஆனால் பிரம்மராஜன் கவிதை இந்த அனுபவத்தை அதன் நானாவிதமான, ஏன், தாறுமாறான தன்மைகளுடன் காட்டுகிறது. ஆமாம், முதல்வரியே விதவிதமான விபரீதமான சப்த அலைகளை எழுப்புகிறது.

“அரங்கத்தில் அடிக்கடி இருள்”. இந்தக் கவிதையில் கலைஞனுக்கும் கலைக்கும், கலைக்கும் அதை எதிர்கொள்பவர்களுக்கும் உள்ள உறவுகளைப் பற்றிப் பேசப்படுகிறது. இந்த அடிப்படையில்; இருள், வானவில், கழுதைகள், அன்னை மடியில் பால் சுரப்பது, வீணை, கங்கை நீர், தகரத்தின் பிய்ந்த குரல்கள், மனதின் சுவர்கள், தளிர், உதயம் என்ற படிம வரிசைகள் இணைகின்றன. மௌனமாகப் படிப்பவர்களுக்கு நிறையவே கிடைக்கும்.

தொடர்கிறேன். தொடரும் பொழுதே இப்படியெல்லாம் தெளிவு படுத்த வேணுமா என்று என்னையே நான் கேட்டுக் கொள்கிறேன். புதுக் குரலின் பரிணாமத்தில் ஈடுபாடுள்ளவன் என்பதனாலும், அந்தக் குரல் அதன் இயல்பில் வெளி உலகிலும் தொடர்ந்து ஒலிக்க ஒரு சூழலைச் சிருஷ்டி செய்ய வேண்டியிருப்பதும் ஒரு அவசியம் என்ற நோக்கத்திலும் என்னைத் திருப்திப் படுத்திக் கொள்கிறேன். “அறிந்த நிரந்தரம்” என்ற கவிதை, வாழ்க்கையை மீறியது ஒன்றுமில்லை என்ற ஒரு தத்துவச் சரடு (இந்தத் தத்துவத்தின் மீது உங்களுக்கும் எனக்கும் ஒரு பிடிப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது இல்லையே இங்கு விஷயம்) இதில் வரும் படிம வரிசை :-

கருப்புச் சூரியன் X ரேடியம் முட்கள்
நகராத காலம் X ஊரும் நத்தை
காகம் X குழந்தையின் ரோஜாப் பாதங்கள்
சாமச்சேவலின் கூவல் = ஒரு ஸிம்பனி

வாழ்க்கையில் எந்த பிரச்னைக்கும் ஒரு முடிவு உண்டு என்ற மையம். இந்தக் கவிதையில் ஒரு படிம ப்ரயோகத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.

மூன்று வரிகள் :_

அரைத் தூக்கத்தில் விழித்த காகம்
உறங்கும் குழந்தையின் ரோஜாப் பாதங்களைக்
கேட்காமல் மறதியில் கரைகிறது.

இங்குச் சில வாசகர்களேனும் “விழித்த காகம்… ரோஜாப் பாதங்களை கேட்காமல் மறதியில் கரைகிறது” என்ற அடிக்குறி இடப்பட்ட தொடரைக் கண்டு “புரியவில்லை” என்று சொல்லலாம். இதற்கு விஞ்ஞான பூர்வமான விளக்கம் தரலாம்; ஆனால் மீண்டும் அது இல்லையே இங்கே விஷயம்! நவீன கதையில் ஒரு புலனால் உணர்வதை இன்னொரு புலனுக்கு இணைப்பது என்பது ஒரு உத்தியாகக் கையாளபடுகிறது. மாத்திரமில்லை, இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமென்றால் ரௌத்ரம் என்ற அனுபவம் வரும்போது ரத்தச் சிவப்பை நினைவு கூர்கிறோமென்றால், ரோஜாவின் இளஞ் சிவப்பில் இனிமையான மெல்லிய இசையின் நாதத்தைக் கேட்கிறோமென்று சொல்லலாம்.

இளம் இரவில் இறந்தவர்கள்” என்ற இன்னொரு கவிதை இந்த வார்த்தைச் சேர்க்கையே, பிரம்மராஜன் கூறுகிறது மாதிரி, ஒரு கலாபூர்வமான விளைவை உண்டு பண்ணுகிறது. முக்கியமாக “இளம்” என்ற வார்த்தை. நவீன இலக்கியத்ஹில் வாழ்க்கை சிக்கல் நிரம்பியதாக இருப்பதால் நமது கவிதை படிம மயமாகி விடுகிறது. இந்தக் கவிதையில் படிம ப்ரயோகத்தைப் பற்றிச் சற்று விரிவாகவே எழுதலாமென்று நினைக்கிறேன். பிணவாடை தொங்கும், பூக்கும்-காளான் பூக்கும் என்பதால் இதயச் சுவர்கள் பிறகு குயில்X சில் வண்டு . இதைத் தொடர்ந்து காகை மரங்கள் X மூளைச் சாலைகள் (தொகுதியை ஒரு முறை முழுவதும் படித்தவர்களுக்கு மிஷின்களுக்குப் பின்னாலும் மனிதர்கள் என்ற கவிதை ஞாபகம் வரும்)

லாரி எஞ்ஜின்கள் ஸிம்பனி முற்றுப் பெறும்.  விஞ்ஞானம் வியாபார உலகை நோக்கி நகரும் புகைப்பலம். இதற்கு எதிராக இயற்கையின் உயிர்த்தெழல்- … இறந்த இவைகள் கிசுகிசுக்கும். இதை நவீன விமர்சன பாஷையில் குறிப்பிடுவதென்றால் எழுத்துக்கொண்டு ஜனனம் X மரணம் என்ற எதிர்மறைகளை இசைக்கும் வித்தை. மறுபடியும் காடு கருக, உடல் நாற்றம் வீச, ஒயற்கை உயிர்த்தெழுவது போல் படிமம் மூலம் நூலறுந்த பட்டம் மூங்கையில் படபடப்பது யோனியில் நீந்தும் விந்து என்பதால் அது போல்-இது என்ற ஒத்திசைப்பு- மீண்டும் வார்த்தை மூலம் ஒரு ஒத்திசைப்பு-முரண்பாடு இணைகிறது என்று கடைசியாக உச்சம் – நாளைக்கும் காற்று வரும். கவிதையில் அர்த்தம் எலியட் பாஷையில் சொல்வதென்றால் வாசகனுக்குப் போடும் இறைச்சித் துண்டு! அனுபவத்தின் ஐக்கியத்தைச் சுட்டிக் காட்டுகிறது. இதைப் படிமங்கள் இயங்குவதால் வெவ்வேறு உலகங்களை மாறுபட்ட நிலைகளை ஒற்றுமை அடையச் செய்வது மாறாக நிற்கும் அனுபவ உலகங்களிலிருந்து படிமங்களை இணைப்பதால் பிரம்மராஜன் கூறியமாதிரி படிமம் தனியாகி நிற்காமல் ஒரு சுழற்சி மூலம் கட்டமைப்பில் பாய்கிறது. இன்னும் ஒரு கவிதையை விஸ்தரித்து விட்டு மேலே போகின்றேன். கடைசிக் கவிதை, இதைப் பற்றி நான் அதிகமாக எழுத விரும்பவில்லை. படிமங்களை ஊன்றிப் படிப்பவர்களுக்கு –

பச்சைப் புதரில்
வெறும் விரல் பிடுங்கிய மூங்கில் கிளை ஒன்று

என்றதில் “வெறும் விரல்” என்பது எந்தத் தோல்வியும் அதன் இயல்பை மீறி சாசுவத்தை நோக்கி நகர்கிறது என்று.

இந்தக் கவிதைகளைப் படிப்பவர்கள் படிமங்களைக் கவனமாகப் படிப்பவர்களுக்குப் “புரியாமல் இருக்கிறது” என்ற பிரமை நீங்கி விடும். மேலும் கவிதையில் வார்த்தை “கருத்துத் தொடர்பு” என்ற அடிப்படையில் வித-விதமான நிலைகளைப் பெறுகிறது. இன்னும் ஒன்று – கவிதையில் வரி- சப்த அடிப்படையில் நகர்கிறது என்ற பிரமையில் மயங்காமல் வரிக்குவரி “அர்த்தம்” தொடர்கிறது என்பதையும்  ஞாபகத்தில் வைத்துக் கொண்டு வாசித்தால் “புரியவில்லை” என்ற பிரச்னை தலை காட்டாது! ஆனால் படிமம் மாத்திரமில்லை கவிதை, உயிரின் துடிப்பு உணர்ச்சி வேகத்தில் இங்கு கவிதையாக மிளிர்கிறது. அனுபவத்தின் பல குரல்களை இங்கு கேட்கலாம். அவற்றில் சில வருமாறு:

மனிதன்தான் வாழ்க்கைக்கு, இயற்கைக்கு, ஏன் சாவுக்குக்கூட அர்த்தம் கொடுக்கிறான். (இறப்புக்கு முன் சில படிமங்கள்) கலைஞனுக்கு அனுபவத்தின் வெளிப்பாடு மாத்திரம் போதும். (எதிர் கொள்ளல்) இந்த நிற்கும் பொழுது கூட எல்லாவற்றையும் உள்ளடக்கிக் கொண்டு ஜ்வலிக்கிறது. (இப்பொழுது)

இப்படியாகச் சொல்லிக்கொண்டே போகலாம். முன்னர் கூறிய மாதிரி – இவற்றில் எல்லாம் மனித குலத்தின் மாறாத புராதனமான குரல் மிகப் புதுமையாக வருகிறது. அய்யப்ப பணிக்கர் ஒரு சமயம் கூறிய மாதிரி மிகப் புதியதின் பின் மிகப் பழையதின் சாயை காணப்படுகிறது.

சில உதாரணங்கள் :-

 ஒரு யுகம் வேண்டும் முகம் தேட
 மீட்சிக்குப் பயனற்றுப் போயினும் தாறு மாறாய்க் கிடக்கும்
வார்த்தைகளை எழுப்ப வேண்டும் உலுக்கி.
 ”புத்தகங்களை விட்டுச் சென்றவன் தனக்கு”
என்று ஒரு பெண் சொல்லலாம்.
 இந்த வரிகள் உன்மனதின் கேள்வியாகும் நேரம்
 என்னுருவம் எங்கோ தொலைவில் கல்மரம்.

***

பிரம்மராஜன் கவிதைகள் – நகுலன் (இமேஜ்1 & இமேஜ்2 )

***

போனஸ் : நண்பர் தாஜுக்கு..!

மிராஸ்லாவ் ஹோலுப்
கவிஞனுடன் ஒரு உரையாடல்

நீ ஒரு கவிஞனா?
     ஆம். நான்தான்.
அது எப்படி உனக்குத் தெரியும்?
      நான் கவிதைகள் எழுதியிருக்கிறேன்.
நீ கவிதைகள் எழுதியிருந்தால் அதன் பொருள் நீ ஒரு கவிஞனாய் இருந்தாய் என்பதுதான். ஆனால் இப்பொழுது?
      நான் மீண்டும் ஒரு நாள் ஒரு கவிதை எழுதுவேன்.
விஷயம் அப்படியானால் ஒருநாள் மீண்டும் நீ கவிஞனாக ஆவாய். ஆனால்
எப்படி அது ஒரு கவிதைதான் என்று நீ தெரிந்து கொள்வாய்?
      கடைசிக் கவிதை போலவே அதுவும் ஒரு கவிதையாக இருக்கும்.
அப்படியானால் அது ஒரு கவிதையாக இருக்காது. கவிதை என்பது
ஒரே முறைதான்.
மற்றும் அது இரண்டாவது தடவை பழையதைப் போலவே இருக்காது
      அதே அளவு சிறப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்
எப்படி அவ்வளவு உறுதியாக நீ இருக்க முடியும்? கவிதையின் தரமே ஒரு முறைதான்.
மற்றும் அது உன் மீது சார்ந்திருப்பதில்லை. ஆனால் சந்தர்ப்பங்களின் மீது.
      சந்தர்ப்பங்களும் கூட அது போலவே இருக்கும் என்று நம்புகிறேன்.
அதை நீ நம்புவாய் ஆயின் நீ கவிஞனாக இருக்க மாட்டாய் மற்றும் ஒரு கவிஞனாக இருந்திருக்க மாட்டாய். வேறு எது உன்னை கவிஞன் என நினைக்கச் செய்கிறது?
      சரி- இப்போது எனக்குச் சரியாகத் தெரியவில்லை. மேலும் நீதான் எவன்?

***

நன்றி : பிரம்மராஜன், மனோன்மணி

***

மேலும்.. :

நாடோடி மனம் – பிரம்மராஜன் : மாலதி

வேறொரு புதுக்கவிதை –  தாஜ்

 

புனிதமானது பூமி – ஸியட்டில்

செவ்வியந்தியத் தலைவன் ஸியட்டில் (Chief Seattle ) எழுதியதாக கூறப்படும் இந்த பதில் , பிரம்மராஜனின் ‘மீட்சி’யில் வெளிவந்தது –  சுகுமாரனின் மொழிபெயர்ப்பில். ஆங்கில வடிவம் (Original ?) இங்கே. என்னிடமுள்ள ‘திசைகளும் தடங்களும்’ நூலில் ஏனோ இது இடம் பெறவில்லை. அவருடைய மற்ற தொகுப்புகளில் சேர்க்கப்பட்டிருக்கலாம்; தெரியவில்லை. ‘சமீபத்தில் படித்து வியந்த அருமையான ஆக்கம் இது. வார்த்தைகளில் நின்று அர்த்தத்தில் தாவும் இந்த கலைப் பூரணத்தை நான் மட்டும் ரசிக்க மனம் இடம் தரவில்லை. அதனாலேயே உனக்கு அனுப்புகிறேன். ‘மீட்சி’யால் கிடைத்த கொடை’ எனும் குறிப்புடன் கவிஞர் தாஜ் தன் நண்பர் ஒருவருக்கு – இருபது வருடங்களுக்கு முன்பு – அனுப்பிவைத்தது, நல்வாய்ப்பாக  இன்று என் கையில் சிக்கியது. இடுகிறேன். புகழ்பெற்ற இந்த பதில் – புதூர் இராசவேலின் மொழிபெயர்ப்பில் – புதிய கலாச்சாரம் இதழிலும் இப்போது கிடைக்கிறது. கூகுள் தயவில் மற்ற தளங்களிலும் இருக்கலாம். தேடுங்கள். ‘மீட்சி‘க்காக எங்கும் அலையலாம் ; தவறில்லை!

‘1854-இல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ·ப்ராங்க்லின் பியர்ஸ், பரந்த செவ்விந்திய நிலப்பகுதி ஒன்றை விலைக்கு வாங்கும் உத்தேசத்தை செவ்வியந்தியத் தலைவனான ஸியட்டிலின் முன் வைத்தார். ஸியட்டில், ஜனாதிபதிக்கு வழங்கிய பதிலின் மொழிபெயர்ப்பு இது. …. வருடங்கள் கடந்து விட்டன. இயற்கையிடமிருந்து ஒவ்வொரு நாளும் மனிதன் துண்டிக்கப்பட்டு வரும் நமது நிகழ்காலத்துக்கு ஸியட்டிலின் சொற்கள் முன்னைவிட வெகுவாகப் பொருந்துகின்றன’ என்கிறார் சுகுமாரன்.

**

thechief

புனிதமானது பூமி

ஸியட்டில்

மொழிபெயர்ப்பு : சுகுமாரன்

**

உங்களால் ஆகாயத்தையும், மண்ணின் வெதுவெதுப்பையும் எப்படி வாங்கவும், விற்கவும் முடியும்? இந்த எண்னமே எங்களுக்கு விரோதமானது.

காற்றின் புத்துணர்வும், நீரின் பிரகாசமும் எங்களுக்கு உரிமையானதல்ல என்னும்போது உங்களால் எப்படி அவற்றை வாங்க முடியும்?

இந்த பூமியின் ஒவ்வொரு இடமும் என்னுடைய மக்களுக்குப் புனிதமானது. மின்னுகிற ஒவ்வொரு பைன் மர ஊசியிலையும் ஒவ்வொரு மணற்கரையும், இருண்ட வனங்களில் விழும் மூடுபனியின் ஒவ்வொரு துளியும், தெளிவாகக் கீச்சிடும் ஒவ்வொரு பூச்சியும் என்னுடைய மக்களின் நினைவிலும், அனுபவத்திலும் புனிதமானவை. மரங்களின் வளர்ச்சியில் ஊறும் உயிர்ச்சாரத்தில் சிவப்பு மனிதனின் நினைவுகள் கரைந்திருக்கின்றன.

நட்சந்திரங்களுக்கு இடையில் நடந்து போகும் பொழுது வெள்ளைக்காரனின் முன்னோர்கள், தங்களுடைய பிறந்த மண்ணை மறந்து போகிறார்கள். எங்களுடைய மூதாதையர்கள் இந்த அழகான பூமியை ஒருபோதும் மறப்பதில்லை. ஏனெனில், சிவப்பு மனிதனுக்கு பூமியே தாய். நாங்கள் பூமியின் ஒரு பகுதி; பூமி எங்களுடைய ஒரு பகுதி. வாசனைப்பூக்கள் எங்களுடைய சகோதரிகள்; மானும், குதிரையும், பருந்தும் எங்களுடைய சகோதரர்கள். பாறைச் சிகரங்களும், புல்வெளிகளில் ஊற்றெடுக்கும் சுனைகளும், குதிரையின் உடல் வெப்பமும், மனிதனும் – எல்லாம் ஒரே குடும்பம்.

எனவே, வாஷிங்டன் பேரதிகாரி எங்களுடைய நிலத்தை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்தபோது, அவர் எங்களிடம் அதிகப்படியாகக் கோருகிறார். நாங்கள் வசதியாக வாழ எங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் பேரதிகாரியால் அறிவிக்கப்பட்டது. அப்படியென்றால் அவர் எங்கள் தந்தையும், நாங்கள் அவருடைய பிள்ளைகளும் ஆவோம். எனவே நிலத்தை வாங்குவதற்கான உங்கள் யோசனையை நாங்கள் கவனிக்கலம். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் இந்த நிலம் எங்களுக்குப் புனிதானது.

நதிகள் எங்களுடைய சகோதரர்கள். அவை எங்கள் தாகத்தைத் தணிக்கின்றன. நதிகள் எங்களுடைய படகுகளைச் சுமக்கின்றன. எங்களுடைய குழந்தைகளை ஊட்டி வளர்க்கின்றன. நாங்கள் உங்களுக்கு நிலத்தை விற்க நேர்ந்தால், நீங்கள் நினைவு கொள்ள வேண்டும்; உங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும். நதிகள் எங்களுடைய மற்றும் உங்களுடைய சகோதரர்கள். எந்த ஒரு சகோதரனுக்கும் வழங்கும் கருணையை நீங்கள் நதிகளுக்கும் வழங்கியே தீரவேண்டும்.

வெள்ளைக்காரர்களுக்கு எங்களுடைய வழிகள் புரியாது என்று எங்களுக்குத் தெரியும். அவனுக்கு ஒரு நிலப்பகுதி வேறு எந்தப்பொருளையும் போலத்தான்.ஏனெனின் இரவில் வந்து நிலத்திலிருந்து தனக்கு வேண்டியவற்றை எடுத்துப் போகிறவன் அவன். அவனுக்கு நிலம் சகோதரனல்ல; எதிரி. வெற்றி கொண்டதும் அதைக் கைவிட்டுப் போகிறான். தகப்பனின் இடுகாட்டை அவன் பின்னொதுக்கிவிட்டுப் போகிறான். அதைப்பற்றி அவன் கவலை கொள்வதில்லை. தனது குழந்தைகளிடமிருந்து நிலத்தைத் தட்டிப் பறிக்கிறான். அதைப்பற்றி அவன் கவலை கொள்வதில்லை. தகப்பனின் இடுகாடும் பிள்ளைகளின் பிறப்புரிமையும் மறக்கப்படுகின்றன. அழகிய முத்துக்களைப் போலவோ, செம்மறி ஆட்டைப்போலவோ வாங்கவும், பறித்துக்கொள்ளவும் கூடிய பொருட்களாகத்தான் அவன் தன்னுடைய தாயையும், நிலத்தையும், சகோதரனையும், ஆகாயத்தையும் கருதுகிறான். அவனுடைய வேட்கை பூமியின் ஈரம் முழுவதையும் உறிஞ்சிவிட்டு அதைப் பாலைவனமாக விட்டெறிகிறது.

எனக்குத் தெரியாது. எங்களுடைய வழிகள் உங்கள் வழிகளிலிருந்து வேறானவை. உங்கள் நகரங்களின் தோற்றம் சிவப்பு மனிதனின் கண்களை நோகச் செய்கிறது. ஏனெனில் சிவப்பு மனிதன் காட்டுமனிதனாக இருப்பதால் புரிந்து கொள்வதில்லை.

வெள்ளைக்காரர்களின் நகரங்களில் அமைதியான இடங்களே இல்லை. வசந்தகாலத்தின் இலைகள் கீழே விழும் முணுமுணுப்பு அல்லது வண்டின் சிறகொலியோ இல்லை. ஒரு காட்டுமனிதன் என்பதால் எனக்கு இது புரியவில்லை. குளம்படி ஓசைகள் காதுகளை அவமானப்படுத்துகின்றன. இரவில் குளக்கரைகளில் சுவர்க்கோழிகளின் புலம்பலோ, தவளைகளின் விவாதமோ கேட்காமலிருந்தால் அங்கே வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்? நான் ஒரு சிவப்பு மனிதன். எனக்கு இது புரியவில்லை. குளத்தின் முகத்தில் வீசும் காற்றின் மெல்லிய ஓசையும், மத்தியான மழையில் கழுவப்பட்டு வரும் அதன் வாசனையும், பைன் மரங்களிடமிருந்து பெற்ற நறுமணமுமே ஒரு செவ்வியந்தியனுக்குப் பிரியமானவை.

சிவப்புமனிதனுக்கு காற்று விலைமதிப்பில்லாதது. எல்லாப் பொருட்களும் அதைப் பங்கிட்டுக் கொள்கின்றன. மிருகமும், மரமும், மனிதனும் ஒரே காற்றைப் பங்கிட்டுக் கொள்கின்றனர். வெள்ளை மனிதன் தான் சுவாசிக்கும் காற்றைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. நீண்டகாலமாகச் செத்துக்கொண்டிருக்கிற ஒரு மனிதனைப்போல துர்நாற்றத்தைப் பரப்பி அவன் அதிலேயே மரத்துப் போகிறான். உங்களுக்கு எங்களுடைய நிலத்தை விற்க நேர்ந்தால் நீங்கள் நினைவு கொள்ள வேண்டும் : காற்று விலைமதிப்பில்லாதது. ஏனெனில் தன்னைச் சார்ந்திருக்கிற எல்லாவற்றுக்கும் தனது ஆன்மாவைப் பங்கிட்டுத் தருகிறது. சுவாசிக்க முதல் மூச்சைத் தந்த காற்றிலிருந்துதான் எங்களுடைய மூதாதை கடைசிப் பெருமூச்சையும் உள்ளிழுத்தார். உங்களுக்கு நாங்கள் இந்த நிலத்தை விற்க நேர்ந்தால், இதை எப்பொழுதும் பரிசுத்தமானதாக நீங்கள் காப்பாற்ற வேண்டும். எங்கோ புல்வெளிகளில் மலர்ந்த பூக்களால் நறுமணமாக்கப்பட்ட காற்றை; வெள்ளைக்காரனும் அனுபவிக்கப் போகும் அந்த நிலத்தை.

அப்படியென்றால், எங்களுடைய நிலத்தை வாங்கும் உங்கள் விருப்பத்தை நாங்கள் பரிசீலனை செய்கிறோம். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள நேர்ந்தால், நான் ஒரு நிபந்தனை விதிப்பேன். வெள்ளை மனிதன் தன்னுடைய சகோதரர்களைக் காப்பாற்றுவதுபோல இந்த நிலத்திலுள்ள விலங்குகளையும் காப்பாற்ற வேண்டும்.

நான் ஒரு காட்டுமனிதன்; என்னால் வேறு வகையில் புரிந்துகொள்ள முடியவில்லை. புல்வெளிகளில் செத்து அழுகும் ஆயிரக்கணக்கான எருமைகளை நான் பார்த்திருக்கிறேன். பாய்ந்து ஓடும் ரயிலிருந்து வெள்ளைக்காரனால் சுட்டுக்கொல்லப்பட்டவை உயிர் வாழ்வதற்காக மட்டுமே நாங்கள் கொல்லும் எருமைகளை விட, புகை கக்கும் இரும்புக் குதிரைகள் எப்படி முக்கியமானவை என்று எனக்குப் புரியவில்லை. நான் ஒரு காட்டு மனிதன்.

விலங்குகள் இல்லாமல் என்ன மனிதன்? எல்லா விலங்குகளும் இந்த பூமியிலிருந்து போய்விடுமானால், பிசாசுத் தனிமையில் மனிதன் இறந்து போவான். விலங்குகளுக்கு நேர்வதுயாவும் தாமதமின்றி மனிதனுக்கும் நேரிடும். எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை.

எங்கள் காலடியில் உள்ள நிலம் எங்களுடைய மூதாதையரின் சாம்பல் என்பதை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும். எனில் அவர்கள் நிலத்தை மதிப்பார்கள். எங்களுடைய உடன்பிறந்தவர்களின் வாழ்க்கையால் வளமாக்கப்பட்டது இந்த பூமி என்று உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லுங்கள். இந்த பூமி எங்கள் தாய் என்று எங்களுடைய குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்திருந்தோம் என்பதை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். பூமிக்கு எது நேர்ந்தாலும், அது பூமியின் பிள்ளைகளுக்கும் நேரிடும். நிலத்தின் மீது துப்பும்போது மனிதன் தனது உடம்பின் மீதே துப்பிக் கொள்கிறான்.

எங்களுக்குத் தெரியும் இது: பூமி மனிதனுக்கு உரிமையானதல்ல; மனிதன் பூமிக்கு உரிமையானவன். எங்களுக்குத் தெரியும் இது : ரத்தம் ஒரு குடும்பத்தை ஐக்கியப் படுத்துவதுபோல எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கின்றன. பூமிக்கு எது நேர்ந்தாலும் அது பூமியின் பிள்ளைகளுக்கு நேரிடும். வாழ்க்கை வலையை நெய்தவன் மனிதனல்ல. அவன் அதில் வெறும் கண்ணி. வலைக்குச் செய்வது எதுவாயினும் அவன் தனக்கே செய்து கொள்கிறான்.

நண்பனைப்போல உரையாடிக்கொண்டு கடவுளுடன் கூட நடக்கும் வெள்ளை மனிதனும் இந்தப் பொது நியதில்லை விலக்கானவல்ல. எல்லாவற்றுக்கும் மேலாக நாம் எல்லோரும் சகோதரர்களே. நாம் சந்திப்போம். எங்களுக்குத் தெரியும் : நமது கடவுள் ஒரே கடவுள் என்பதை வெள்ளை மனிதனும் ஒரு நாள் கண்டடைவான். நீங்கள் நினைவுகொள்ள வேண்டும்: எங்களுடைய நிலத்தைச் சொந்தமாக்க விரும்புவதுபோலத்தான் கடவுளையும் சொந்தமாக்கிக் கொண்டீர்கள். ஆனால் அது உங்களால் முடியாது. அவர் மனிதனின் கடவுள். அவருடைய கருணை சிவப்பு மனிதனுக்கும் வெள்ளையனுக்கும் சமத்துவமானது. இந்த பூமி கடவுளுக்கு விலை மதிப்பில்லாதது. பூமியை நோகச் செய்வது அதைப் படைத்தவரின் மீது கொட்டும் நிந்தனை. வெள்ளை மனிதனும் இந்த பூமியில் இல்லாமற் போவான். ஒருவேளை வேறு எந்த இனத்துக்கும் முன்பாகவே , உங்களுடைய படுக்கையும் மலினமாகும். உங்களுடைய குப்பையில் கிடந்து நீங்களும் ஒருநாள் மூச்சுத் திணறுவீர்கள்.

இந்த நிலத்தின் மீதும், சிவப்பு மனிதன் மீதும் உங்களுக்கு அதிகாரம் வழங்கிய, ஏதோ பிரத்தியேக காரணங்களால் உங்களை இந்த நிலத்திற்கு கொண்டு வந்தவரின் வலிமையால் , வெந்து சாம்பலாகும்போதும் நீங்கள் பிரகாசிக்கலாம். எல்லா எருமைகளும் கசாப்புச் செய்யப்பட்டதும், காட்டுக்குதிரைகள் அடக்கப்பட்டதும், கானகத்தின் ரகசிய மூலைகள் மனிதனின் பிரவேசத்தால் கனத்ததும், வளமான குன்றுகளின் காட்சி பேசும் கம்பிகளால் மூடப்பட்டதும் எப்போது என்று எங்களுக்குத் தெரியாது, ஏனெனில் அந்த நியதி எங்களுக்குப் புதிரானது. அடர்ந்த காடுகள் எங்கே? அழிந்து போயின. கழுகுகள் எங்கே? அழிந்து போயின. வாழ்தலின் முடிவு, பிழைத்திருத்தலின் ஆரம்பம்.

**

நன்றி : சுகுமாரன், பிரம்மராஜன் (மீட்சி)

நாடோடி மனம் (மின் புத்தகம்)

பிரம்மராஜனின் ‘நாடோடி மனம்’ மின்புத்தகமாக அவருடைய வலைப்பதிவில் இப்போது கிடைக்கிறது. பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும் (அதுதான் உங்களுக்கு நல்லா தெரியுமே!).

– ஆபிதீன் –

***

 

Brammarajan :

Nadodi manam-in e-book format(pdf)

’This is the pdf form of the full book titled Nadodi Manam. Since the book is out of print for the past 4 years I am offering this download for a limited period of time for the readers who do not have a hard copy. I haven’t included the cover page since I didn’t design it.

Rough Index of Authors discussed:

1.Franz Kafka 2.T.S.Eliot.[Tradition and the Individual Talent] 3.Four Quartets(T.S.Eliot) 4.Ocatvio Paz (Poetry and History) 5.Amy Lowell and the process of creating poetry 6.Paul Valery and his poetics 7.Miraslav Holub 8.Antonin Bartusek 9.Cesar Pavese 10.Charles Bukowsky 11.Ivan Goncharov(Oblavmov) 12.Yasunari Kawabatta (The House of Sleeping Beauties) 13.Gabriel Garcia Marquez (General in the Labyrinth) 14.Herman Hesse (The Steppenwolf) 15.Albert Camus (The Plague) 16.Samuel Beckett(Watt) 17.William Faulkner (Sound and the Fury) 18.Alexander Solzhenitsyn (Cancer Ward) 19.Andre Gide(The Counterfeiters) 20.Primov Levi (The Periodic Table) 21.Jean Genet(works) 22.Henrich Boll 23.Salvador Dali 24.Poets,lovers and madmen 25.Arthur Koestler’

***

நன்றி : பிரம்மராஜன், திண்ணை

Links :

Rememebering poet Malathi(sathara) – Brammarajan

’நாடோடி மனம்’ பற்றி மாலதி