நாகூர் நினைவுகள் – பிரபு கங்காதரன்

‘ஒரு நீண்டதூரப் பயனத்தூடேயானக் கட்டுசோற்று வாசமுன் அக்குள்கள் காளி ..’ என்று முகநூலில் கலக்கும் தம்பி பிரபுவின் நினைவுகளை ரசித்துப் படிக்கிறேன். இதுவரை வந்த அவருடைய நாகூர் நினைவுகள் தொடரை இங்கே பகிர்கிறேன். – AB
*

prabu-fb2

நாகூர் நினைவுகள் – 1
என்னாங்னி சாப்டாச்சா?

மணியாகலையே! ஹாஜா போய்ட்டானா?

இது வழக்கமா மாப்பிளைத்தெருவில் எதாவது ஒர் வீட்டில் இரவு நேரங்களில் கேட்கும் ஒரு உரையாடல்.

இரவு எட்டு மணிக்கு அலாரம் வைத்ததுபோல் ஓங்கியப் பெருங்குரலெடுத்துப் பாடிக்கொண்டே கடந்து போவான் (இல்லை) போவார் ஹாஜா .

நாகூர் செட்டியார் பள்ளியில் என்னை நாலரை வயசில் கொண்டு போய் விட்டபோது, இவன் மொவரையே சரியில்லையே இவன் ஒழுங்கா வருவானா? என்று கேட்டாராம் ரஞ்சிதம் டீச்சர்.

அவர் கணிப்பு தப்பாமல் பெரிய மாமாவிடம் ஒரிரு நாள் அடியும் வாங்கிக்கொண்டு, ஐந்தாம் நாள் என்னை சீயாழில கொண்டு விடுங்கடா கொடுமைக்காரங்களா என்று அப்பன் வீடுவந்தேன்.

நாகூர் வாசத்தில் என்னைப் பள்ளிக்கூடம் அனுப்பவும், என் குரங்கு சேட்டைகளை ஒடுக்கவும், ஹாஜா, எதிர் வீட்டு அமீர்அலி, அப்புறம் புவாக் கிழவனும் என் ஆத்தா, சித்திகளுக்கு உதவியாகயிருந்தவர்கள்.

அமீர்அலி என் மாமன்களின் தோழன், மாமன்களின் அதே கண்டிப்பும் அன்பும் நிறைந்தவர், அடிகூடவாங்கியிருக்கிறேன்.

ஹாஜா குப்பை வண்டிக்காரர், காலையில் அமைதியுன் வடிவமாக அவரும் அவருடன் வரும் பெண்ணும் இயந்திரகதியில் குப்பையை வாரி வண்டியில் கொட்டிக்கொண்டு வண்டியில் நகர்ந்து போவதை ஒளிந்து கொண்டுப் பார்த்திருக்கிறேன். ஆனால் இரவில் ஹாஜாவின் உருவமே வேறு. தெரு முனையிலிருக்கும் சிங்கி கடை வரும்போதே அவரின் குரல் கேட்கத்தொடங்கிவிட ஆத்தாவின் மடிக்குள்ளோ சித்திகளின் மடிக்குள்ளோ ஓடி ஒளிந்துக்கொள்வேன், தெருக்கோடியிலிருந்த பூவா கிழவனின் வீடு கடந்து செல்லும் வரை வெளியில் வந்தேனில்லை.

பள்ளிக்கூடம் போறியா இல்ல ஹாஜா வண்டில தூக்கிப் போட்டுடவா என்றாள் எந்தப் பிள்ளைதான் போகாமலிருக்கும்?

அப்புறம் அந்தப் பூவாக் கிழவன். ஏதோ வெளிநாட்டிலிருந்தவன் போல கிழவன் பேன்ட்டும் சட்டையும் பரட்டைத்தலையும்,”ஷூ”வுமாய் நாள் கணக்காக குளிக்காத மேனினியுடன் அலைவதைப் பார்க்கும் போதே பயம். சிலநாட்களில் கூட்டுப்பாத்திஹா இல்லத்தில் கொடுத்த சட்டிச் சோறுடன் சந்தோஷமாய் போவதைப் பார்த்திருக்கிறேன். ஒரு நாள் இறந்துப் போனக்கிழவன் இரவுமுழுக்க முற்றத்து தூணுக்கறுகே நின்றுகொண்டு தூங்கவிடாமல் செய்தான்.

பள்ளிக்கூடம் போறியா இல்ல பூவா வூட்ல கொண்டு உட்றவா?

அப்புறமெப்படிய்யா அந்த சிறு பிள்ளை பள்ளிக்கூடம் போவான்.

என்ன எங்க ஊட்ல உடுங்கடான்னு கிளம்பி சீயாழி வந்தேன்.

அங்கேயும் விட்டார்களா கொலைகாரர்கள், எங்கள் தெருமுனையிலேயே சாராயம் விற்றுக்கொண்டிருந்த முனியன் தாத்தாவினால்தான் தினமும் பள்ளிக்கூடம் போனேன்.

பெரிய மீசையும், பெரிய கொட்டாப்புட்டி வயிரும், காலையிலிருந்து குடியுடன் வாழ்கையும், வியாபாரமும் நடத்திவந்த முனியன் தாத்தா வீட்டு வாசலில் நின்று அதட்டினால் போதும், புடிக்கிற ஓட்டம் பள்ளி வாசலில்தான் நிற்கும்.

ஆக என்னைப் படிக்க வைத்து நல்ல நிலைக்கு ஆளாக்கியப் பெற்றோர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நன்றி சொல்லும் முன்னர், ஹாஜா, புவாக்கிழவன், அமீர் அலி, மற்றும் முனியன் தாத்தாவிற்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

*
நாகூர் நினைவுகள் – 2
முன்பெல்லாம் நாலைந்து இல்ல பத்து வீடு தள்ளி ஒரு பங்கர பார்க்கலாம் நாகூர்ல, பங்கர்னா பதுங்கு குழி, அடையாளம் போட்ட ப்ளாஸ்டிக் குடங்கள் வரிசையா நிற்கும்.

நாகூர்ல தண்ணிபுடிக்கப்போயி காதல் கல்யாணம் செய்தவர்கள் ஏராளம்.

ஒரு வரலாற்று சிறப்புப்பெற்ற சிறுநகருக்கு இப்பொழுது வரை சரியான நீர் வசதி கிடையாது.

வெட்டாறு மட்டும் ஊருக்கு ஒதுக்குப்புறமா தாழ்த்தப்பட்ட சாதிக்காரன மாதிரி ஓடி கடல்ல சேர்ந்துடுது. சின்னக்கடைத்தெரு, ரெட்டைக்காமாளத்தெருக் காரர்கள் குண்டிக் கழுவதான் அந்த நதியின் பயன்பாடு. அதும் பாத்து உக்காந்து அலம்பனும் வாலக்கடியன் மீன் சில நேரம் குண்டியில் குத்திட்டான்னா ஒரு மாசத்துக்கு குண்டி கழுவமுடியாது.

ஆத்திரமவசரத்துக்கு வெட்டாத்தில குளிச்சிட்டா ஒரு மாசத்துக்கு சோறு கொழம்புல உப்பு போடாம சாப்பிடலாம்.

அப்படியான காலத்தில் தண்ணி வண்டிக்காரர்களே அங்கே பணக்காரர்கள். பத்தாவதுப் பரிட்சையைத் தூக்கிப்போட்டுட்டு என் நண்பன் ரஜினி குடும்பத்தின் வருமையைப்போக்க தண்ணிவண்டி ஓட்டப்போனான். வருமானம்வரும் தொழிலாகையால்.

தண்ணிவண்டிக்காரர்கள் கோலோய்ச்சிய காலத்தில் தம்பையா பெரும் ஆகிருதி, பார்க்க நான் கடவுளில் வரும் லைலாவின் வளர்ப்புத் தந்தையின் பிரதி, நிறம் அடர்கறுப்பு. சாதுவானப்பிராணி, மரக்கைப்பிடியிட்ட டால்டா டின்களில் தண்ணீர் நிறப்பிக்கொண்டு ஓடுகையில் கை மற்றும் கால் சதைகளில் தவக்களை துள்ளும்.

முக்கால்வாசிக் குடும்பங்களின் கதைகள் தெரிந்த ஆள். பெண்களுக்கு ஆபத்தில்லாத ஆண்.

ஒருநாள் அவரின் மனைவிக்குப் பதிலாக வேறோர் உதவியாளர், மூனுவேளை சோறு மட்டுமே கூலியாம், எங்கோ வழிதப்பி வந்து தம்பையாவின் கூடடைந்த ஆள். தம்பைய்யா புள்ளைய மாதிரி பாத்துக்கிட்டாலும் எப்பவாச்சும் வாஞ்சூர் போய்வந்தா அடி உதையும் கொடுப்பார் உதவியாளருக்கு. சிலநேரம் மாடு, பொண்டாட்டி மேல உள்ள கோவத்தையும் அந்த உதவியாளரிடமும் காண்பிப்பார்.

பாத்தா அள்ளியணைத்துக்கொள்ளத்தூண்டும் குழந்தை முகம்கொண்ட அந்த உதவியாளரை தன் கோபங்களைத் தனிக்கும் ஓர் வடிகாலா தம்பைய்யா பயன்படுத்திக்கொண்டார் சிலகாலம்.

எத்தனை அடித்தாலும், திட்டினாலும் எதிர்பேக் காட்டாத சீடன்போலிருப்பார் அந்த உதவியாளர்.

தர்ஹா வாசலில் ஏராளமான பிச்சைக்காரர்கள் கிடந்தாளும் சில விணோத ஜீவன்களையும் பார்க்கலாம், நினைத்தாலே இனிக்கும் படத்தில் நடித்த ஒரு கதாநாயகி அங்கே பிச்சையெடுத்து வாழ்ந்து இறந்தார், அப்படி ஒரு பிச்சைக்காரனை தர்ஹா வாசலில் கண்டவர்களுக்கு நினைவிருக்கலாம், ஒவ்வொறுமுறை கடிகாரம் மணியடிக்கிறதுக்கு முன்னே ஒரு ஓங்கிய ஓலமெழுப்பும் பிச்சைக்காரன்.

திடீர்னு ஒரு நாள் காலையில வண்டியப்பூட்டின தம்பைய்யா உதவியாளன தேடினார், ஆளக்காணும். கெட்டவார்த்தைகளை இறைத்துக்கொண்டே தன்னந்தனியராய் அன்று வேலையைத்துவக்கியவருக்கு பத்து மணிவாக்கில் ஒரு செய்தி,

“தம்பைய்யா, உன்கூடயிருந்தவன் CIDயாம்,
தர்ஹா வாசல்ல கத்திகிட்டிறுந்தானே அந்த பைத்தியம் அவன் வடநாட்டுத் தீவிரவாதியாம், அவனப்புடிக்க மாறுவேசத்தில வந்தவராம்.
தெரியாதா உனக்கு?”

ஒரிரூ வாரங்கள் வாந்தி பேதியிலும், இப்பொழுதுவரை பயத்திலும் தம்பைய்யா வண்டியிலப் பூட்டிய மாட்டைக்கூட அடிப்பதில்லையாம்.
*
நாகூர் நினைவுகள் – 3

நாகூரை லக்ஷ்மண ரேகை மாதிரி ஒரு கோடு கிழித்தால் பிரதான சாலைக்கு இடப்புறம் இசுலாமிய கலை, இலக்கிய, ஆன்மீக, மற்றும் அதைச்சார்ந்த வாழ்வியல் இத்தியாதிகளும், வலப்புறம் இரண்டும் கலந்ததோர் கலவையான வாழ்வியல் சூழலையும் காணலாம்.

மக்கள் தினமும் புழங்கும் பெருமாள் கோவில் குளம் சுற்றிய வாழ்வியலில் நாகூர் எஜமானானையும் கைவிட்டவரில்லை, பிரசன்ன வெங்கடேசப் பெருமாளையும் கைவிட்டாரில்லை.

தன்னுள்ளாடைகளை நாங்கள் ஒன்பதாம் வகுப்பில் படிக்கையில் மறைத்து அலசிய தோழியின் வெட்கத்தில் , பெருமாள் கோவில் குளத்தில்தான் நான் பூப்பெய்தியிருக்க வேண்டும்.

பிள்ளையார் பால்குடிப்பதற்கு முன்பே, ஒரு ஐயங்கார் பாட்டியிடம் வாழைப்பழம் வாங்கிதின்ற ஒரு பெருமாள் நாகூரில் உண்டு.

நான் விவரம் தெளிந்தக் காலத்தில் நரை, திரை கூடிய மூப்புடன் தள்ளாமையிலும் தினமும் பெருமாளை வந்து சேவித்து போவார் வாழைப்பழப் பாட்டி. ஆனால் அவர் பெருமாளுக்கு வாழைப்பழம் ஊட்டிப் பார்தேனில்லை.

பார்ப்பதற்கு மாப்பிள்ளைத்தெரு அவ்வாவை நினைவுறுத்தும் தோற்றம் அவருக்கு,

ஐந்து வருடமாக பிள்ளைப் பேறின்றி தவித்த என் பெற்றோருக்குப் பிறந்த என்னை அள்ளியெடுத்து உச்சிமுகர்ந்தவர்களில் அவ்வாவும் ஒருவர். அவ்வா செட்டியார்பள்ளி வாத்தியார் ஒருவரின் தாயார்.

அவருடைய நேரடிப் பேத்தியான தேவியக்காவும் நானும் விளையாட்டுத் தோழமைகளானாலும் என்னை மடியில் போட்டு வளர்த்திய மடி பார்க்காத பாதி பிராமணச்சி அவ்வா.

அவ்வா சொன்ன இராமாயணக்கதைகளில் நானெழுப்பிய கேள்விகளில் இந்தப் பயல வக்கீலுக்கு படிச்க வைங்கன்னு சொல்வாராம்.

நிற்க ..

வாழைப்பழப் பாட்டியை அந்த சுற்று வட்டாரத்தில் பெருமாளுடைய தாயாகவே கொண்டாடினார்கள். தள்ளாடிக்கொண்டே பாட்டி பெருமாளையும், புதியதாய் முளைத்த சக்கரத்தாழ்வாரையும் சேவித்து போவதைப் பார்த்திருக்கிறேன். பாட்டி மறந்தும் அங்கே வேர் பரப்பி நின்ற மேல்மருவத்தூர் சக்தி சபா பக்கம் கண்ணெடுத்தும் பார்த்ததில்லை என் அறிவில்.

பாட்டி எல்லாரிடத்தும் மடி பார்க்காதுப் பழகக்கூடிய நேசர். நண்பணின் அக்காள் ஒருத்தி என்னை அணைத்துக்கோண்டு போய் பாட்டியிடம் ஷேமம் விசாரித்த்து திருமண் பூசவைத்தது அழைத்து வருவார், பாட்டியும் என் கறுத்த நிறமுமம் அருவறுப்பான முகமும் பாராமல் திருமண் வைத்து ஆசிர்வதிக்கும்.ஒரு வேளை அணைத்திருப்பது ஐயங்கார் பெண்ணென்பதாலா? தெரியாது.

ஓம் சக்தி பீடத்தில் சில நேரங்களில் கை நிறைய சர்க்கரை சாதம் தருவார்கள். காணாததைக் கண்டு, உண்ண ஓடும் ஆள்களில் நானுமொருவன். அத்தனை சுவை. ஆனால் அவர்கள் செய்யும் பூசைதொடங்கி அத்தனை அலப்பறைகளும் எனக்கு அருவருப்பூட்டக்கூடியவை. அதனால்தான் வாழைப்பழப்பாட்டிக்கும் பிடிக்கவில்லை போலிருக்கிறது.

பெருமாளுக்கே வாழைப்பழம் ஊட்டும் வாழைப்பழப் பாட்டிக்கு தம்ரூட் பிடிக்குமா சாப்பிட்டிருப்ரா என்று ஒரு நாள் தாத்தாவிடம் கேட்டேன், விசிறி மட்டை பிய்ந்து போகுமளவு அடி.
*
நன்றி : பிரபு கங்காதரன் (Prabu Gangatharan)