பிரபஞ்சன் : ரத்தம் ஒரே நிறம்

எழுத்தாளர் பிரபஞ்சனுக்கும் ’புதிய தலைமுறை’ இதழுக்கும் (20 அக்டோபர் 2011) நன்றிகளுடன்…

 


***

உலகத் தமிழ்ச் சிறுகதைகளில் முதன்முறையாக…!

முதல் தமிழ்ச் சிறுகதை ஒரு முஸ்லிம் எழுதியதாக நிறுவுகிறார் நண்பர் நத்தர்ஷா – ‘எண்பதுகளில் இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைகள்’ என்ற நூலில். சரி, அந்த 1888 ஆண்டுக்கு முன்னரே , மற்ற சகோதர மதத்தைச் சேர்ந்த ஒருவர்தான் முதல் தமிழ்ச் சிறுகதை எழுதினார் என்று யாராவது – துல்லியமாக – பிறகு நிறுவுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், இருக்கவே இருக்கிறது , Qatarஷாவின் சமாளிப்பு : ‘பிறக்கும்போது அவர் முஸ்லிமாகத்தான் பிறந்தார்; ஆனால் , அல்லாஹூத்தஆலாவின்….’ !

– ஆபிதீன்  –

***

மக்கள் தொ.காவின் ’நூல்வெளி’யில் பிரபஞ்சன் :

வணக்கம் நேயர்களே! எண்பதுகளில் இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைகள் – எண்பதுகள் என்றால் 1980லிருந்து 1990 வரைக்குமான அந்த பத்தாண்டுகளில் – இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைகள் எவ்வாறு எழுதப்பட்டுள்ளன என்பதைப் பற்றிய ஓர் ஆய்வுப் புத்தகதம்தான்  இந்தப் புத்தகம். ஹ.மு. நத்தர்ஷா என்கிற பேராசியர் எழுதிய ஆய்வு நூல் இது. நத்தர்ஷா இப்போது சென்னை புதுக்கல்லூரியிலே தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருப்பவர். மட்டுமல்லமால் தமிழிலே நல்ல சிறுகதையாசிரியராகவும் விளங்கிக் கொண்டிருப்பவர்; ஆய்வாளர். அவருடைய ஆய்வையே இப்போது ஒரு புத்தகமாக அவர் வெளியிட்டுள்ளார் (சுடர் பதிப்பக் வெளியீடு). ’எண்பதுகளில் இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைகள்’ என்றால் இந்த 1980 தொடங்கி 1990 வரைக்குமான இஸ்லாமியர்களால் எழுதப்பட்ட இஸ்லாமியர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் சிறுகதைகள். அதனுடைய போக்கு, உள்ளடக்கம், கலைத்தன்மை போன்றவைகளை ஆராய்ந்து எழுதப்பட்ட ஒரு முக்கியமான புத்தகம் இந்தப் புத்தகம். 1980 என்றால், 80லிருந்து தொடங்கவில்லை அவர். தமிழ் சிறுகதையின் வரலாற்றிலிருந்தே தொடங்குகிறார். தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை எது? வரலாற்றுப்படி தமிழ்நாட்டிற்குள் எழுதப்பட்ட தமிழ்ச் சிறுகதைகள் எடுத்துக் கொண்டால் பாரதியார் 1913ஆம் ஆண்டு ஒரு சிறுகதை எழுதுகிறார். ’ஆறில் ஒரு பங்கு’ என்பது கதையின் பெயர். தாழ்த்தப்பட்ட மக்கள் இந்திய ஜனத்தொகையில் ஆறில் ஒரு பங்காக இருக்கிறார்கள், அவர்களுடைய வாழ்வு என்பதாகப் பொருள். அதன்பிறகு நான்காண்டுகள் கழித்து 1917ம் ஆண்டு வ.உ.சி. ஐயர் புதுச்சேரியில் இருந்தபோது ’குளத்தங்கரை அரசமரம்’ என்ற தொகுதியை வெளியிட்டார். அது தமிழிலே இரண்டாவதாக எழுதப்பட்ட  – இன்னும் கேட்டால் அது தமிழின் முதல் சிறுகதை எழுதியவர் என்றுகூட  வ.உ.சி ஐயரைச் சொல்வார்கள். மூன்றாவதாக 1920-ஆம் ஆண்டு – இந்த ஏழு ஆண்டுகளுக்குள் மூன்று பெரிய ஆட்கள் சிறுகதைக்குள் கை வைத்தார்கள் – மாதவையா என்பவர் ‘குசிகர் குட்டிக் கதைகள்’ என்பதாக ஒரு தொகுதியை வெளியிட்டார். ஆக 1913, 1917, 1920 , மூன்று ஆண்டுகளிலே தமிழ்ச் சிறுகதை பிறப்பெடுத்தது என்பது வரலாறு. இதை நத்தர்ஷாவும் ஒத்துக் கொள்கிறார். ஆனால் இதில் ஒரு நுட்பமான விஷயம் இருக்கிறது; அதை அவர் ஆராய்ந்து இவர் சொல்கிறார். என்ன சொல்கிறார் என்றால் உலக அளவில் எடுத்துக் கொண்டால் தமிழ்ச் சிறுகதையை முதன்முதலாக யார் எழுதினார்கள் என்று பார்த்தால் சிங்கப்பூரில் 1888ஆம் ஆண்டே ’மஹ்தூம் சாகிப்’ என்ற ஒருவர் – சிங்கப்பூரில் வந்த சிங்கைநேசன் என்ற பத்திரிக்கையில் – எழுதியிருக்கிறார். ஆக உலகத் தமிழ்ச் சிறுகதைகளிலே முதன் முதலாக எழுதியவர் என்றால் மஹ்தூம் சாகிப் என்றுதான் இனி சொல்ல வேண்டும். அடுத்தபடியாக இலங்கையிலே தமிழ்ச் சிறுகதை முளைவிட்டிருக்கிறது. 1898ஆம் ஆண்டு அங்கே ’ஹைத்ரூஸ் லெப்பை’ என்பவர் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய சிறுகதை உலக அளவிலே இரண்டாவது தமிழ்ச் சிறுகதையாக வெளிப்பட்டிருக்கிறது. ஆக சிங்கப்பூரிலும் அதன்பிறகு இலங்கையிலும் – உலக அளவில் எழுதப்பட்டு – மூன்றாவதாகத்தான் தமிழ்நாட்டிலே எழுதப்பட்டிருக்கிறது தமிழ்ச் சிறுகதை. இதில் இன்னொரு ஒரு சுவாரஸ்யமான விஷயம், சுதேசமித்திரன் தொடங்கிய பிறகு – பாரதியார் ஒரு கதை அதில் எழுதியிருக்கிறார். அவர் எழுதிய சிறுகதையின் தலைப்பு ’ரயில்வே ஸ்தானம்’. அதாவது ஒரு ரயில் நிலையத்திலே ஒரு இஸ்லாமியர் நிற்கிறார் – மூன்று பெண்களோடு. மூன்று பேரும் அவர் மனைவிகள். அதாவது அக்காள் தங்கைகளை ஏக காலத்தில் திருமணம் செய்துகொண்ட ஒரு இஸ்லாமியர் என்ன கஷ்டப்படுகிறார் என்பது கதை. இந்தக் கதை சுதேசமித்திரனில் வெளிவந்துபோச்சு. வெளிவந்த உடனே ஒரு இஸ்லாமிய நண்பர் பாரதியாரிடம் சொல்கிறார் ’இது தப்பான செய்தி’ என்று. என்ன தப்பு – பாரதியார் கேட்கிறார். ’மூத்தவள் உயிரோடு இருக்கும்போது அவளுடைய தங்கையை திருமணம் செய்வது இஸ்லாத்தில் இல்லை. நீங்க (அந்த முஸ்லிம் நபர்) அக்கா தங்கச்சிகள் மூன்று பேரை கல்யாணம் செய்திருக்கிறதா சொல்லியிருக்கீங்க.. அது தப்பு’ என்கிறார். பாரதியார் தன் தவறை உணர்ந்தார். சுதேசமித்திரனின் மறு இதழிலேயே வருத்தம் தெரிவித்து ஒரு கடிதம் எழுதுகிறார் பாரதியார். இப்படியாக இஸ்லாமியர்களைக் குறித்த புரிதல் தப்புத் தப்பாகவே மற்றவர்களிடம் இருக்கிறது; இன்றுவரை நீடிக்கிறது. அதனுடைய வடிவம்தான் ஆர்.எஸ்.எஸ்காரன்லாம். இஸ்லாமியர்களைப் பற்றித் தப்புத்தப்பாக மக்களிடம் பிரச்சாரம் செய்வது…இஸ்லாமியர்களுடைய அசல் வாழ்க்கையை, அவர்களுடைய வாழ்க்கைப் பண்பாட்டை, அவர்களுடைய மொழியை மிக அழகாக இப்பொழுது பலரும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தைத்தான் ஹ.மு. நத்தர்ஷா ‘எண்பதுகளில் இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைகள்’ என்கிற புத்தகத்திலே சொல்லியிருக்கிறார். பத்தாண்டு காலத்தை எடுத்துக் கொண்டு இந்தப் பத்தாண்டு காலத்தில்  – இஸ்லாமியர்களின் முக்கியமான காலகட்டம் அது – இந்த பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள் போன்றவை இஸ்லாமியர்களுக்கு எதிரான  மிகப்பெரிய பலத்தை,  தாக்குதலைத் தொடுத்த அந்த காலகட்டத்தில் இஸ்லாமிய இலக்கியம் எவ்வாறு படைக்க்ப்பட்டது , எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதையெல்லாம் மிகத் தெளிவாக ‘எண்பதுகளில் இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைகள்’ என்கிற இந்த ஆய்வு நமக்குச் சொல்கிறது. தமிழர்கள் இதைப் படித்து பயன் பெறுவார்களாக !

***
நன்றி : பிரபஞ்சன் , மக்கள் தொலைக் காட்சி.