சிவனுக்கே இருக்கு சங்கடம்!

‘நம்நிலை நன்றாயில்லை / காரணம் – நாம் ஒன்றாயில்லை…!’ எனும் பேராசிரியர் ஹாஜாகனியின் உரைவீச்சை வீசியபோது ‘ஆமா, அதென்ன ஒத்துமை..கித்துமைண்டு ஒரு ‘அட்டு’ கதையை போட்டிருக்கீங்க? அரசியல் செய்றீங்களோ?’ என்று கடிந்துகொண்ட நண்பர் சாதிக், எழுத்தாளர் பாவண்ணனின்  – தீராநதி தொடரிலிருந்து (அருகில் ஒளிரும் சுடர்) – ஒரு பத்தியை எடுத்து உடனே போடச் சொன்னார். ஓடி வந்தும் கொடுத்தார். வாழ்க்கையில் நிம்மதியில்லாமல் போவதற்கும் மிருகமாக மாறுவதற்கும் காரணமாக மூன்று பசிகளைச் சொல்லும் கட்டுரை அது. வயிற்றுப் பசி, உடல் பசி, அகங்காரப் பசி.. ‘வயித்துப் பசிங்கற நெருப்ப ஏதோ ஒரு பங்கு தண்ணிய ஊத்தி அணைச்சிடலாம். உடல் பசிய அணைக்கறதுக்கு அதுபோல நூறுமடங்கு வேணும். அகங்காரப்பசிக்கு அதுபோல ஆயிரம் மடங்கு வேணும். மனுஷனுடைய வாழ்க்கைய தீர்மானிக்கறது இந்த மூணு பசிதான்’ என்று ஒரு பெரியவர் கசப்பான உண்மை சொல்கிறார் அதில். ‘ஒரு நிமிடம் யோசிச்சுப் பாத்தா உங்களுக்கே புரியும். ராமாயணமும் மகாபாரதமும் இந்த நாட்டின் உன்னதமான இதிகாசங்கள். காமப்பசியப்பத்தியும், அகங்காரப்பசியப்பத்தியும் இந்த இதிகாசங்கள் சொன்னத விடவா நாம புதுசா சொல்லமுடியும்?’ என்று கேட்கும் பெரியவர். ‘காற்று அம்மன் கோயில்’ பூசாரியான அவர் சொல்கிற ஒரு பாடலையும்  அதற்கு அவர் சொல்லும் விளக்கத்தையும்தான் சாதிக் பதியச் சொன்னார். தெய்வம் சங்கடப்பட்டால் இந்த சைத்தானுக்கு அவ்வளவு இஷ்டம். ஆனால், சதா தெய்வத்தை நினைக்கும் சைத்தான்களை எனக்குப் பிடிக்கிறது!

***

நண்பர் பாவண்ணனின் கட்டுரையிலிருந்து :
 
தரையைப் பார்த்தபடி (அந்தப் பெரியவர்) ஒரு பாடலை முணுமுணுத்தார்.:

‘பசிக்கும்போது எட்டிக்காய் கடித்துத் தின்னுகிறவர்கள் இருப்பார்களா?
தாகத்துக்கு நஞ்சையெடுத்து அருந்துகிறவர்கள் இருப்பார்களா?
சுண்ணாம்பும், பாயசமும் நிறத்தில் ஒன்றே என்பதால்
நட்புக்காகக்கூட சுண்ணாம்பை எடுத்துண்ண முடியுமா?
இலிங்கத்தின் உண்மைப்பெருமை அறியாதவரை
கூடலசங்கம தேவன் பொறுப்பது எவ்வாறோ?’

‘சுண்ணாம்பு, பாயசம் ரெண்டும் நெறத்துல ஒண்ணுதான்னாலும் குடிக்கறதுக்கு யாரும் சுண்ணாம்பு எடுக்கமாட்டாங்கன்னு சொல்றது வரைக்கும் புரியுது. அதுக்கு மேலே புரியலே’ நான் உதட்டைப் பிதுக்கினேன்.

‘சுண்ணாம்பையும் பாயசத்தையும் ஒண்ணா வச்சாலும் பாத்து தடுமாறக்கூடிய, தடுமாறாத மனிதர்களுடைய சங்கடத்த மட்டும் சொல்ற பாட்டு இல்ல இது. அதுக்கு மேலே ஒரு முக்கியமான விஷயத்தப் பத்தி சொல்லுது. சிவனுடைய சங்கடத்தயும் சொல்லுது. சிவன் ரொம்ப பெரிய கடவுள். உலகத்துல சிவனுடைய பெருமையை உணர்ந்த பக்தர்களும் இருக்கறாங்க. உணராமல் பழக்கத்தால வரக்கூடிய பக்தர்களும் இருக்கறாங்க. ஒருத்தர் பாயசம் மாதிரி. இன்னொருத்தர் சுண்ணாம்பு மாதிரி. ரெண்டு பேரயும் எப்படி எடைபோடுவாரு சிவன்? யாரயும் அவரால நிராகரிக்க முடியாது. நிராகரிச்சா அவரு கடவுளா இருக்கமுடியாது. தன்னுடைய சந்நிதிக்குள்ள வந்தவங்கள அவரு பரிபூரணா நம்புறாரு.ரெண்டு வகையான ஆளுங்க இருந்தாலும் பொறுமையா ஏத்துக்கறாரு. தெரிஞ்சிம் தெரியாதமாதிரி காட்டிக்கற சங்கடம் சிவனுக்கே இருக்கு!’

***

நன்றி : பாவண்ணன், தீராநதி, ‘ஷைத்தான்’ சாதிக்