வண்ணநிலவனின் துக்கம்

போதும் ஆன்மீகம்.  இலக்கியத்திற்கு போகலாம். நான் பெரிதும் வியக்கும் எழுத்தாளரான வண்ணநிலவனின் ’துக்கம்’ அனுப்புகிறேன் என்று நண்பர் தாஜ்  சொன்னதும் சிறுகதையின் தலைப்பு என்பது சட்டென்று நினைவில் வரவில்லை. பிரபல எழுத்தாளர் பாலகுமாரன், வண்ணநிலவனின் கதையைச் ’சுட்டு’ தன் பெயரில் பிரசுரித்ததாக அந்தநாட்களில் சிற்றிதழ் வட்டாரத்தில் வலம் வந்த ’பிஸாது’ (அவதூறு) தான் ஞாபகம் வந்தது.  அதற்கு எதற்கு துக்கம் , இங்கே சாதாரணமாக நடப்பதுதானே ?!  இலக்கியத்தை விடுங்கள், தமிழ் சினிமாவில் போஸ்டரைக் கூட விட மாட்டார்கள் என்று நண்பர் சுரேஷ்கண்ணன் முன்பு ஒரு பதிவு எழுதியிருந்தார். விஷயம் நீளமாகப் போகும், படைப்புத் திருட்டுக்கு வருகிறேன். ’மணிச்சித்திரதாழ்’-ன் கால்தூசிக்கு வருமா சந்திரமுகி? ஆனால், அதே இயக்குனர் ஃபாஜிலின் ‘life is beautiful’-ல் (மலையாளம்)  வரும் அருமையான சீன் ஒன்றை நான் ரொம்பவும் சிலாகித்தபோது ‘ இது ‘Dead Poets Society’யிலிருந்து அமுக்கியது என்று சரியாகச் சொன்னார் சகோதரி மதி கந்தசாமி. யாரைத்தான் நம்புவது, சங்கு ’சுட்டாலும்’ வெண்மை தரும்  என்று சமாளித்தேன். போகட்டும், நானும் வெகுநாள் இந்த பாலகுமாரன் சம்பந்தமான பிஸாதை உண்மையென்றுதான் நம்பிக்கொண்டிருந்தேன். பா.கு மேல் கோபமும் கொண்டேன். பா.கு என்று எழுதியதும் ’பா.ம’ கதை பட்டென்று ஞாபகம் வருகிறது. சொல்லவா? பீம்சிங்கின் படமான பாவ மன்னிப்பு. ‘ ‘பாவமன்னிப்பு’ திரைப்படத்தின் கதை, பல நாட்களுக்கு முன் ஆனந்தவிகடனின் வெளியான ஆர்.பி.மல்லாரியின் ‘கடைசி வெள்ளிக்கிழமை’ என்ற கதையேயாகும். எழுத்தாளர்களின் படைப்புகள் களவாடப்படுவது வருந்தத்தக்கது!’ என்று  எஸ். கே. சுல்தான் என்ற வாசகர் எழுதியிருந்தார் – ஆனந்தவிகடனில். ஆ.வியின் பதில் : களவாடவில்லை; ஒருவேளை தழுவியிருக்கலாம்! மன்னியுங்கள்! . அடுத்தவாரமே நேயர் கடிதம் பகுதியில் ’புத்தர் பிக்சர்ஸ்’ பீம்சிங்கின் கோபம். ’திரு. மல்லாரி அவர்களின் கதை இன்னது என்றே இன்னமும் நான் அறியேன். இந்த நிலையில் இப்படிப்பட்ட தகவல்களையும் குறிப்புகளையும் பிரசுரிக்கலாமா? மிகவும் வருந்துகிறேன்.’ ஆ.வி சூப்பராக பதில் சொல்லியிருந்தது இப்படி : ‘ஒருவேளை தழுவியிருக்கலாம்’ என்றுதான் குறிப்பிட்டிருந்தோம். கதையைப் படித்திருந்தால், எல்லோருக்கும் அப்படித் தோன்றக்கூடும் என நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்!’ ( ஆனந்த விகடன் , மே – ஜூன் (1963) இதழ்களிலிருந்து , Published again in 26/11/2008 ) .

எல்லோரும் கொண்டாடுவோம்… அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி ,  நல்லோர்கள் வாழ்வை எண்ணி…!

ஏன், இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு அவரது குரு எஸ்.எம்.சுப்பையாநாயுடு கொடுத்த ’பரிசு’ மட்டும் என்னவாம்? வீர அபிமன்யு படத்திற்கு இசையமைத்துக்கொண்டிருக்கிறார் குரு. ‘புது வசந்தமாக வாழ்விலே இனி புதிதாய் மணமே பெறுவோமே’ என்ற பாடல். மூன்று நாட்களாக முயற்சி செய்தும் டியூன் அமையவில்லை. தனியாக அதை எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்து பாடிக் கொண்டிருக்கும்போது அங்கே வந்த குரு,  ‘ரொம்ப நல்லா மெட்டு போட்டிருக்கே, பிரமாதம்’ என்று தட்டிக்கொடுத்து விட்டு சொன்னாராம் :  ‘இந்த டியூனை நீ போட்டதாகச் சொல்லாதே. நான் போட்டதாகவே சொல்லு!’ – குருவும் சிஷ்யனும் என்று தனியாக – விரிவாக – பதிய வேண்டிய செய்தி. பதியவேண்டும். அதே குரு பிறகு உண்மையை அனைவரிடமும் சொல்லி ‘இவன் (எம்.எஸ்.வி’) பெரிய சொத்து’ என்று சொன்னதும் நெகிழ்வோடு பார்க்கவேண்டிய செய்திதான். ’உள்ளதை’ச் சொன்னவர் சித்ரா லட்சுமணன். நன்றி. இதே செய்தியை நேற்று பாடகர் தீபன் சக்ரவர்த்தியும் உறுதிப்படுத்தினார் – ஜெயா டிவியின் ’திரும்பிப் பார்க்கிறேன்’ நிகழ்ச்சியில். நான் நேராகத்தான் பார்த்தேன்.

இசை விமர்சகர்கள் திரும்பாமல் படிக்க இன்னொரு செய்தி : ஏ. ஆர். ரஹ்மானின் புகழ்பெற்ற ’சின்னச் சின்ன ஆசை’ பாட்டின் மெட்டு,  தனது  ‘வீடு வரை உறவு’ மெட்டின்  உல்டாதான் என்று மென்மையாக கிண்டல் செய்தார் எம்.எஸ்.வி –  ‘ஆசியாநெட்’டின் ஒரு  நிகழ்ச்சியில். ’வீடு வரை’ மெட்டில் ’சின்னச் சின்ன’தை கொஞ்சம் பாடியும் காட்டினார். அட, மாறுதல் ஒன்றே மாறாதது! இரண்டையும் விரைவில் இணைக்கிறேன், இன்ஷா அல்லாஹ்.

மின்தமிழ் குழுமத்தில் வந்திருந்த செய்தியும் முக்கியமானது.  மாயூரம் வேதநாயகம் பிள்ளையிடம் ஒரு கவிதைக் களவாடி வந்து, கம்பன் பாட்டொன்றைத் தம் பாட்டென்று சொன்னாராம். ‘இது கம்பருடைய பாட்டாயிற்றே’ என்றதற்கு அந்தக் களவாடி, ‘இது என் பாட்டுத்தான்! இப்பொழுது உங்கள் சட்டைப்பையில் நூறு ரூபாய் இருக்கிறது. அதை நான் எடுத்துக்கொண்டால் உங்கள் பையில் அந்த நூறு இருக்காதல்லவா! அதைப்போல கம்பராமாயணத்திலிருந்து இந்தப் பாட்டை நான் எடுத்திருந்தால், அங்கு அப்பாடல் இருக்க முடியாதே! இதோ பாருங்கள் கம்பனில் அப்பாட்டு அப்படியே இருக்கிறது’ என்றாராம் சாமர்த்தியமாக. ஆஹா!

சமீபத்தில், ’அபிமன்யு’ சினிமாவுக்கு வசனம் எழுதிய கருணாநிதி டைட்டில் கார்டில் அவர் பெயரில்லாமல் திகைத்துப்போனார் என்று சொல்லியிருக்கிறார் நண்பர் முத்துக்குமார். ( ’க’ 7 ) . தெரியுமா கனிமொழி? கவி கா.மு. செரீப் எழுதிய ‘பாட்டும் நானே பாவமும் நானே’ கண்ணதாசன் எழுதியதாக வெளிவந்தது என்று கய்யூமும் வருத்தப்பட்டிருந்தார் இங்கே.  சித்தி ஜூனைதாஆச்சியின் ’காதலா கடமையா’ நாவல், ’நாடோடி மன்னன்’ சினிமாவாக உருமாறிய விசயமும் இங்கேயே இருக்கிறது. ஓ ,’எழுத்துலக திருட்டு’ என்று கூகிளிட்டால் எவ்வளவு வருகிறது. அல்லுடு மஜாக்கா!

சொல்லிக்கொண்டே போகலாம். ’Everybody’s Fine’  படத்தில் அட்டகாசமான வசனம் ஒன்று இருக்கிறது. வயதான, மனைவியை இழந்த கதாநாயகன்(robert de niro) தன் பிள்ளைகளைப் பார்க்கப் போவார். பிள்ளைகள் தாங்கள் வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதுபோல் நடிக்கும். வேடிக்கையான படம். ஒரு பிள்ளையின் வீட்டு வாசலின் முன் காத்துக் கொண்டிருக்கும்போது  வேசி ஒருத்தி,  ‘ என் தொடையைப் பார்க்கிறாயா?’ என்று அழைப்பதற்கு . ‘என் தொடையை நீ பாரேன்’ என்று ஹீரோ பதிலுக்கு ’காட்டும்’ படம். சிரிப்பே வராதே உங்களுக்கு…. மெயின் வசனத்திற்கு வருகிறேன். கசந்துபோய் ஓரிடத்தில் உட்கார்ந்திருப்பார் ஹீரோ. அப்போது அவரிடம் ஒரு கிழவர் சொல்லும் அற்புதமான வசனம் : ’ எனக்கு மூன்று பிள்ளைகள், ஆறு பேரப்பிள்ளைகள். எல்லோரும் பிஸியாக இருக்கிறார்கள். என்னிடம் பேசக்கூட அவர்களுக்கு நேரமில்லை. அவர்களிடம் பேச நான் அப்பாயிண்ட்மெண்ட் எடுக்க வேண்டியிருக்கிறது. யாரும் அவர்களுக்கு தேவையில்லை. எல்லாரும் மாறிவிட்டார்கள். ஹூம்… காலம் அப்படி மோசமாகி விட்டது. இப்போதெல்லாம் யாரிடமாவது கை குலுக்கினால் ‘செக்’ பண்ணிக்கொள்ள வேண்டும் – நம் ஐந்து விரல்களும் திரும்ப இருக்கிறதா இல்லையா என்று!’

Everybody’s Fine?

கூடப்பிறந்த சிலரே குழி பறிக்கிற காலத்தில் இதெல்லாம் ’ஜுஜுபி’ மேட்டர்தான். கைகுலுக்கிவிட்டு விரல்களையல்ல, நம் கையை பார்க்க வேண்டும் – இருக்கிறதா இல்லையா என்று. நம் துக்கத்திற்கு வருகிறேன். பாலகுமாரன் மேல் ரொம்பவும் கடுப்பாக இருந்தேன். (ஏற்கனவே நம் ஜானகிராமனை அவர் நகல் செய்வதில் ஏகப்பட்ட எரிச்சல் வேறு.) சில மாதங்களுக்கு முன்புதான் ’பிஸாது’ உண்மையல்ல என்று  உணர்ந்தேன் – நண்பர் அருண்மொழிவர்மனின் இந்தப் பதிவு மூலம்.  வண்ணநிலவனின் கதையொன்றை அவரிடம் பணம்கொடுத்து வாங்கி தன் பெயரில் வெளியிட்டதாக பாலகுமாரன் தன் சுயசரிதையில் எழுதியிருக்கிறாம்.அட, ஏற்பாடு பிரமாதமாக இருக்கிறதே! ஆமாம், இதைப்பற்றி வண்ணநிலவன் ஏன் ஒருவார்த்தை கூட எழுதவில்லை? துக்கம்தான்! ஆனால், இவர்தான் ’துக்ளக்’-ல் துர்வாசராக வெடிக்கிறார்! ஒரே கொளப்பமா இக்கிதும்மா…

பாலகுமாரனின் அந்தநாள் கவிதையொன்றை (சுதேசமித்திரன் – தீபாவளி மலர் 1972) பார்ப்போம். எனக்கு இந்தக் கவிதை பிடிக்கும்.

*

முற்றல் நெஞ்சு

கவிந்த இருட்டில் மறைந்து கிடந்த
உயரத் தென்னை நெற்றொன்று
வீசிய காற்றில் பிடிப்பைத் தளர்த்தி
மண்ணில் உருண்டது சொத்தென்று
இருளில் கையை விரித்துத் தடவி
நெற்றைத் தேடிய ஐயங்கார்
திரும்பிக் காயுடன் என்னைக் கடக்க
குனிந்து கேட்டார் – தூங்கலையா?
பதிலாய் மெல்லிய சிரிப்பைக் கொடுப்பினும்
மனசோ சொல்லும் வெகு உரக்க
நெற்றுத் தென்னை கழன்றதற்கே
தூக்கம் போச்சே உங்களுக்கு
நெஞ்சே கழன்று வீழ்ந்துகிடக்க
தூக்கம் எங்கே, சொல்லுங்கோ!

*

சொல்லுங்கோ பாலகுமாரன் சொல்லுங்கோ!

வண்ணநிலவனின் துக்கம் என்று சொல்லிவிட்டு பாலகுமாரனைப் பற்றி சொல்லிக்கொண்டிருப்பது சரியில்லை. ’துக்கம்’ அடுத்த பதிவில் வெளிவரும், இன்ஷா அல்லாஹ். அதுவரை , வண்ணநிலவனின் ’எஸ்தர்’ குறுநாவலைப் படித்துக்கொண்டிருங்கள். தமிழின் சாதனைகளுள் ஒன்று இது.  ’புதுமைப்பித்தனின் தாய்வீட்டுச் சீதனம் வண்ணநிலவன்’ என்பாராம் நாஞ்சில்நாடன் (பவுத்த அய்யனார் நடத்தும் நேர்காணல் இதழில் இதைப் படித்தது பரவசம் கொண்டதாக நண்பர் வெற்றிவேல் எங்கள் குழுமத்தில் குறிப்பிட்டிருந்தார்).  யாராலும் மறுக்க இயலுமா? எனக்குப் பிடித்த ‘எஸ்தர்’ஐ சென்ற வெகேஷனில் தட்டச்சு செய்து வைத்தேன் – இணையத்தில் இல்லையே என்று. pdfஆகவும் இங்கே ’டிராஃப்ட்’-ல் இருந்தது. வந்துபார்த்தால், அழியாச் சுடர்களில் அட்டகாசமாக வெளியாகிவிட்டது – ’எஸ்தர்’ ! சந்தோசம். என்ன, இந்த ராமும் சென்ஷியும் செய்கிற  துரோகத்தைத்தான் தாங்க முடியலே!

எச்சரிக்கை : எனக்கு முன் யாராவது ’துக்கம்’ வெளியிட்டால் கொன்றே விடுவேன். வண்ணநிலவனின் துக்கம் என் துக்கம். ஐயோ, நான் எழுதவில்லை; அவருடைய சோகம் என்னுடையதும்கூட என்கிறேன்.

சோகத்தை மாற்ற கொஞ்சம் முயற்சிக்கிறேன். ஒரு பழைய தமாஷ். சிரித்தால் நல்லது – நானும்.

நம்ம நாகூர் ரூமியின் சொந்தக்காரர் ஒருவர் சினிமாவில் சேர்ந்து புகழடைய சென்னைக்குப் போனார். தூயவன்மாமாவைச் சொல்லவில்லை, இது வேறு ஆள். ரூமியின் குடும்பத்தினர் அனைவருமே எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் மிக்கவர்கள் – ரூமியைத் தவிர. தெரியும்தானே?  சும்மா கிண்டல் செய்தேன். ’குட்டியாப்பா’வைக் கொடுத்தவரைக் குட்ட மாட்டேன். இந்த ரூமியின் மாமா முராதுபே பேசினால் நாள் முழுதும் சிரித்துக் கொண்டிருக்கலாம்.  இதுகூட முராதுபே மாமா சொன்னதுதான். சொந்தக்கதையாகவும் இருக்கலாம். சரி, போனாரா? போனவர், ஒரே மாதத்தில் திரும்பிவந்து ஓரிருநாளில் வெளியாகப்போகிற படத்தில் தான் நடித்திருப்பதாகவும் (சினிமாவின் பெயர் மறந்து விட்டது எனக்கு) டைட்டில்கார்டிலும் பெயர் வருமென்றும் ஊர்முழுதும் பறையடித்தார். திருநாளும் வந்தது.  நண்பர்களையெல்லாம் கூட்டிக்கொண்டு நாகப்பட்டினம் போயிருக்கிறார். பாண்டியன் தியேட்டரில் எல்லா செலவும் அவருடையதுதான். ஆரம்பித்துவிட்டது படம்.  நடித்தவர்களின் பெயர்களும் வந்துகொண்டிருக்கின்றன ஒவ்வொன்றாக. ’இந்தல வரும்டா.. இந்தல வரும்டா…’  என்று இவரும் சொல்லிக்கொண்டிருக்கிறார். ’எப்படா வரும்’ என்று கடுப்போடும் நம்பிக்கையில்லாமலும் நண்பர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போது ஒரு இடத்தில் உற்சாகமாக கத்தினாராம் அவர்,  ‘ ஆஹா..வந்துடிச்சி’ என்று. உற்றுநோக்கினால்…… ‘மற்றும் பலர்’ என்று இருந்திருக்கிறது!

**

சில சுட்டிகள் :

வண்ணநிலவன் – அவர் அப்படித்தான் : எஸ். ராமகிருஷ்ணன்

எழுத்துக் கலை – ஏமாற்றும் எளிமை  : விமலாதித்த மாமல்லன்

எளியவர்களின் மனசாட்சி – வண்ணநிலவன் கதைகள் : சு.வேணுகோபால்

என் சக பயணிகள்   – ச.தமிழ்ச்செல்வன்