ஒரு மதச்சண்டை – பாறப்புறத்து ஓஷோ

மலையாள எழுத்தாளர் பாறப்புறத்து  (இயற்பெயர் : கே.ஈ.மத்தாயி) எழுதிய , நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடான , ‘அரைநாழிகை நேரம்’ நாவலில் வரும் அட்டகாசமான உரையாடல் ஒன்றை பதிவிடுகிறேன்.  தமிழாக்கம் : கே. நாராயணன்.  நாவலை pdf கோப்பாக இங்கிருந்து பெறலாம்.   சாவை எதிர்நோக்கியிருக்கும் குஞ்சுநைனா எனும்  கிழவருடைய நினைவுப் பதிவுகளாக விரியும் இந்த நாவலில் அவரை சந்திக்க வரும் (ஸிரியன் கத்தோலிக்க குருவான) கார்த்திகைப்பள்ளி சாமியாருக்கும் (இந்துவான) சிவராம குறுப்புக்கும் நடக்கும் உரையாடல் இது.  சாமியார் பாத்திரத்தில் யாராவது நம்ம ஹஜ்ரத்துகளை வைத்தும் பார்க்கலாம். தவறொன்றுமில்லை!. சுலோகங்களை புத்தகத்தில் உள்ளதுபோலவே டைப்  செய்திருக்கிறேன். தவறு இருந்தால் தயவுசெய்து தெரியப்படுத்துங்கள். பாறப்புறத்து ஒரு கிருஸ்துவர் (குஞ்ஞிக்கா ஒரு முஸ்லிம் போல!) என்பதை நினைவில் கொண்டு இந்த  உரையாடலை படிப்பது நல்லது. சுவாரஸ்யத்திற்காக ஒரு ஓஷோ ஜோக்கையும் கடைசியில் இணைத்திருக்கிறேன். சமயம் வாய்த்தால் இந்த நாவலில் வரும் அற்புதமான பைபிள் வசனங்களையும் கதைகளையும் தனியொரு பதிவாக இடுவேன். சண்டையிடுவோம் சமாதானமாக! – ஆபிதீன்

***

அரைநாழிகை நேரம் – பாறப்புறத்து

ஐந்தாம் அத்தியாயத்திலிருந்து…

parapurathதீனாம்மா (சிவராம குறுப்புக்கு) சாமியாரை அறிமுகப்படுத்தினாள் : ”கார்த்திகைப்பள்ளிச் சாமியார்”

“ஆஹா. தெரிந்தது தெரிந்தது… நான் சில நேரங்களிலே குஞ்சு நைனாவைப் பார்க்க வருவதுண்டு. அவரது வேத ஞானத்தைப் பற்றி என்ன சொல்ல? அறிவுக்கடலேதான். வேதாந்தத்திலே எனக்கும் கொஞ்சம் பற்று உண்டு. யோசித்துப் பார்க்கையில், எல்லா மதங்களும் ஒரே கருத்தைத்தான் கூறுகின்றன. அதருமத்திலே மூழ்கிய மனித குலத்தை உய்விப்பதற்குக் கடவுள் தம் திருக்குமாரரை அனுப்பினார் என்றுதானே கிறிஸ்துவ வேதம் சொல்கிறது? இந்துக்கள் புராணமும் அதையேதான் சொல்கிறது! “தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே” என்ற கீதையின் சுலோகத்தை நீங்கள் கேட்டிருப்பீர்களே. எண்ணிப் பார்த்தால் எல்லாமே ஒன்றுதான்.”

“எல்லாம் ஒன்றல்ல”

“என்ன?”

“எல்லாம் ஒன்றல்ல. இயேசு வழியில்லாமல், அவர் காட்டிய பாதை வழி நடக்காமல் யாருக்கும் விமோசனம் கிடையாது.”

“என்ன விமோசனம்?”

“அதுதான், மோட்சம்.”

“மோட்சத்தை அடைவது அவரவர்கள் கருமத்தைப் பொறுத்துள்ளது. கடவுளை அடைய ஞானயோகத்தையும் கர்மயோகத்தையும் கீதையில் கண்ணன் போதித்துள்ளார் :

லோகேஸ்மின் த்விதா நிஷ்டா
புரா ப்ரோக்தா மயாஅநக
ஜ்ஞான யோகேன ஸாங்க்யானாம்
கர்ம யோகேனே யோகீனாம்..”

“எங்களுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை.”

“அப்படியானால், எவ்வளவு நல்ல கருமங்கள் செய்தாலும் கிறிஸ்தவனல்லாவிட்டால் மோட்சம் கிடைக்காது என்றா சொல்கிறீர்கள்?”

”ஆமாம். பிதாவான தேவனுடைய பரிசுத்த ஆவியின் பெயரில் ஞானஸ்னானம் பண்ணாமலும், அவர் திருக்குமாரரரின் திருச்சரீரத்தின் ரத்தம் உண்டு பாவமோசனம் பெறாமலும் மனிதனுக்கு விமோசனம் இல்லை!”

”அப்படி நீங்கள் நம்புவதாகச் சொல்லுங்கள், சாமி.”

“ஆம், நம்பிக்கைதான் எல்லாம்!”

“ஆனால் எங்கள் நம்பிக்கை வேறு. எந்த மதத்தைச் சார்ந்தவராயிருந்தாலும் ஒளியைக் கண்டவர்கள் அனைவருக்கும் மோட்சம் உண்டு என்று நாங்கள் நம்புகிறோம். எல்லாக் கதவுகளும் திறந்திருக்கிற ஒரு மாபெரும் மணிமண்டபம் போன்றது எங்கள் இந்து மதம். யாராயிருந்தாலும் சரி, இந்த மணி மண்டபத்தில் வந்திருந்து ஓய்வெடுக்கலாம், பசியையும் தாகத்தையும் தீர்த்துக் கொள்ளலாம், களைப்பாறலாம். காமக் குரோதங்களிலிருந்து மனத்தை அகற்றி ஆன்மாவின் பொருளைத் தெரிந்துகொண்ட அனைவருக்கும் மோட்சம் உண்டு என்பதில் சற்றும் சந்தேகமில்லை.

காமகுக்ரோத வியுக்தானாம்
யதீனாம் யத சேதஸாம்
அபிதோ ப்ரஹ்ம நிர்வாணம்
வர்த்ததே விதிதாத்மனாம்”

சாமியாரின் முகத்தில் ஏளனத்தின் நிழல் படிந்தது. ஒரு வடமொழிச் சுலோகத்தைச் சொல்லி, கிறிஸ்தவமதத்தைத் தோற்கடிக்க வந்திருக்கிறான்!

“மக்களை ஏமாற்றுவதற்கு இப்படியெல்லாம் சொல்லி நடிக்கிறார்கள். ரட்சகனான இயேசு செய்த மாபெரும் ஆன்மத் தியாகம் போன்று எதாவது சொல்வதற்கு உங்களிடம் இருக்கிறதா? இயேசு புரிந்த அற்புதம் போன்ற ஒன்றை உங்களால் சொல்ல முடியுமா?”

“இயேசு அப்படி என்ன அற்புதம் புரிந்தார்?”

“அற்புதமா? ஒரு கன்னியின் மகனாக இயேசு பிறந்ததே ஒரு மாபெரும் அற்புதம்தானே?”

“யார் சொன்னார்?”

“யார் சொன்னார் என்றா கேட்கிறீர்கள்?”

“ஆமாம். அது உங்கள் நம்பிக்கைதானே சாமி? உங்கள் நம்பிக்கையை உறுதியோடு கடைப்பிடிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது. அதைப் போலவே அதை மறுக்கவும், வேறொன்றை நம்பவும் எங்களுக்கும் உரிமை இருக்கிறது.”

“இருக்கிறது, இருக்கிறது நம்பிக்கையை விடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டே இருங்கள்.”

அப்படிச் சொல்லித் தப்பித்துக் கொண்டாலும் உண்மையில் சாமியார் பதில் கூற முடியாமல் திணறினார். குறுப்பிடம் அவருக்கும் மதிப்பு ஏற்பட்டது. …. குறுப்பு போன பிறகு சாமியார் சொன்னார் “ ‘விவரம் தெரிஞ்ச மனுஷன்!”

***

நன்றி : நேஷனல் புக் டிரஸ்ட்

***

மேலும் கொஞ்சம் விபரம் தர  ஓஷோ வருகிறார். ஒன்றும் பிரச்னையில்லை…!

இரண்டு மனிதர்கள் நம்பிக்கை வாதம் – அவநம்பிக்கை வாதம் என்பதை விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒருவன் மற்றவனிடம் சொன்னான், “சரி ஒரு நிசமான நம்பிக்கைவாதியை எப்போதாவது நேருக்கு நேர் நீ சந்தித்திருக்கிறாயா?”

“ஆம்” என்றான் மற்றவன். “நான் என் நாலாவது மாடியின் உப்பரிகையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது யூதனான ஒரு சன்னல் துடைப்பாளி இருபதாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துகொண்டிருந்ததை பார்த்தேன்.:”

“இது எப்படி அவனை ஒரு நம்பிக்கைவாதியாக காட்டுகிறது?” என்று வினவினான் நண்பன்.

“எப்படியென்றால், அவன் வீழ்ந்துகொண்டே வந்து என் மாடியைத் தாண்டி விழும்போது இதுவரை பிரச்சனையில்லை!” என்று சொன்னது என் காதில் வி்ழுந்தது!’

***

கவிதா வெளியீடான ‘ஸென்’னுடன் நடந்து.. ‘ஸென்’னுடன் அமர்ந்து நூலிலிருந்து.. (மொழியாக்கம் : சிங்கராயர்)