என்னையே நான் வியக்கும் வேளை – பாதசாரி

Padhasari viswanathan1அன்புள்ள பஷீர்,

கடிதம் எழுதி எவ்வளவு காலமாச்சு! முத்தம் கொடுத்து எவ்வளவு காலம் ஆச்சு என்று 60 வயதில் கணவன் மனைவியைக் கேட்பது மாதிரியிருந்தாலும், இப்படிக் கேட்டுக்கொண்டு தொடங்குவது செல்லமாக இருக்கிறது. என்னமும் பேசலாம் எனும் சுதந்திரத்தால் என்னமும் சொல்வேன். நீர் எதிரில் இருந்தால்கூட இப்படி என் பேனா துள்ளாது. கடவுள் கைபிடித்து ‘சொல்லுப்பா’ என்றால்கூட நான் ஒன்றிரண்டை விட்டுவிடுவேனாயிருக்கும். காணத கடவுளிடம் என்னமும் பேசலாமே மனசுக்குள்…

உங்கள் நண்பர் குழாமுக்கு முன்னே எனக்கு பெருங் கூச்சம் வந்து விட்டது. ஆனால் விடாது என்னோடு தொடர்பு கொள்கிறீர்கள்… நட்பு பேணுகிறீர்கள்.. நானோ ஒதுங்கி ஒளிபவன். எனக்கு வரலாற்று உணர்வு கிடையாது. சமூக அக்கறை கிடையாது. பழந்தமிழ் இலக்கியம் ஒன்றுகூடப் படித்ததில்லை. அன்று பழனியான் சொன்னமாதிரி உங்களுக்குத் தர என்னிடம் ஒன்றுமில்லை என்பதே அப்பட்ட உண்மையில்லையா! ஆனாலும் உங்களது நம்பிக்கைக்கு அடிப்படை என்னவென்றே புரியவில்லை… வெறும் அன்புதானே? நோக்கங்கள் அற்ற அன்பு… நான் மின் தகனமேடை ஏறும் வரை என் சுவாசத்தில் கலந்துவரும் அன்பு… இப்போதும் எதையாவது எழுது என்கிறீர்கள்.

மனைவி பணிநிமித்தம் சென்னையில். என் மகனுக்கு கடும் காய்ச்சல்.. தாயின் பிரிவு தாளாது? பக்கத்திலேயே உட்கார்ந்து பராமரிக்கிறேன். இன்று வெளியில் எங்கும் போகவில்லை.. என்னதான் தாயுமானவானக நான் உணர்ந்து செயல்பட்டாலும் தாயின் இடமே வேறு. பையனுக்கு காய்ச்சல் விட்டுவிட்டு வருகிறது. அவன் அருகில் அமர்ந்துதான் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

தெருவில் சுற்றித் திரியும் ஒரு மனநிலை பிறழ்ந்தவரிடம் போய், உனக்குப் பிடித்த கண்ணதாசன் பாட்டொன்றைப் பாடேன் என்று கேட்பதுபோல, என்னிடம் எதையாவது – தோணுவதை – எழுதியனுப்புய்யா என்று கேட்கிறீர்கள்.. நீர் கேட்பது புரிந்து அவன் ரெண்டு வரியாவது ஞாபகத்திலிருந்து பாடுவானா, உத்திரவாதமில்லை.. எழுதிச் செல்லும் கை எப்போது ஓயும் என்று தெரியவில்லை. தாள்கள் முடிந்தவுடன் முடியலாம். முடிந்தவுடன் இந்தத் தாள்களிலிருந்து வரிகளில் பொறுக்கி நல்லதாக எடுத்து மனநிழலுக்குப் போட்டுக் கொள்ளுங்கள். வேறு வழியறியேன்.

போட்டியிலேயே பங்கெடுங்காத ஒருவனுக்கு உயரம் தாண்டுதலுக்கான முதல் பரிசு கிடைத்ததுபோல் எனக்கு ஓர் இலக்கியப் பரிசு கோவையில் மலையாளிகள் கொடுத்தார்கள். கூசிக்குறுகித் திருடன் போலப் போய் கவர்ந்து வந்தேன் சமீபத்தில், காசு கிடைத்தது என்பதாலேயே! கிடைத்த ஷீல்டை மகன் டி.விக்குப் கீழே ஷோகேஸில் வைத்து சந்தோஷப்பட்டான், பாவம்…! ‘ஆறுதல்’ பரிசாக நினைத்துக்கொள் என்றார் நண்பர். கவலைப்படுபவனுக்குத்தானே ‘ஆறுதல்’ எல்லாம். எனக்கெதற்கு? தினமும் காலையில் நான் கண்விழிப்பதே எனக்கு ஆறுதல் பரிசு. பன்னிரண்டு வருஷங்களாக சர்க்கரை வியாதியும் ஏழு வருஷங்களாக குருதிக் கொதிப்புமாக இருப்பவனுக்கு தூக்கத்திலேயே காலத்தை உறையச் செய்யும் சர்வ வல்லமை உண்டுங்காணும். காலையில் கண் திறந்தால் – ‘அட.. இன்று ஒரு நாள்’ பரிசாகக் கிடைக்கிறது! கண்விழித்தவுடன் யாருக்குக் கிடைக்கும் இந்த சந்தோஷப் பரிசு.. சரி அதை விடுவோம்.. ‘உட்கார்ந்து யோசிப்பானோ’ என்று நீங்கள் நினைக்க மாட்டீர்கள்… என் மனம் உட்கார இடமேயில்லை ஐயா. கர்ப்பப்பையே இல்லாத மனசு. எதுவும் கருவாக உருவாக வழியே இல்லை. இப்போது தாளிலேயே தோன்றிக்கொண்டிருக்கிறது.

என் காரியங்கள் யாவும் வடிவேலுத்தன்மையோடு அமைவதே அதிகம். ஆனால் நீங்கள் என்னைக் கெட்டிக்காரன் என்று கருதிக்கொண்டிருக்கிறீர்கள். முன்னொரு காலத்தில் மாமல்லன் என்றொரு கூர்மதியோன் சொன்னார் – காசியை எழுதிய இவன் இனி ஒரு கதைகூட எழுதமாட்டான் என்று. தீர்க்கதரிசி இப்போது எங்கே, தன் கூர்மதியை எதற்காகச் செலவழித்துக்கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை. கடைசியாகக் கோவையில் பார்த்தபோது, லாட்டரிச் சீட்டுகள் வாங்கி உடனடியாகப் பெரும் பணக்காரனாகும் கனவில் பேசிச் சென்றார். வடிவேலுத்தன்மையில் நான் எப்படி? நடிப்பில் மகா கலைஞன் அவன். நானும்தான்! என் மனத்திரையில் என்னால் எந்த வேஷத்திலும் நடிக்க முடியும். ‘எக்ஸ்க்யூஸ்மி.. அந்த குரங்கு பொம்மை என்ன விலை?’ என்று வடிவேலு ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் பந்தாவாக கேட்பார். விற்பனையாளர் ‘ கண்ணாடி சார் அது!’ என்பார். நடைமுறையில் இந்த ஜோக் போல அமைந்துவிடும் என் காரியங்கள். எதையும் யாரிடமும், எந்த விளைவையும் பற்றிக் கவலைப்படாமல் உளறிக் கொட்டிவிடுவேன். மனிதர்களுக்கிடையில் ‘ரகசியமில்லாத மனிதனாக’த் திரியத்தான் ஆசை.. அப்படித் திரிந்து பெறுவதென்ன? இன்னல்கள்தான். விவஸ்தை கெட்டவன் என்று பட்டம். ஆனாலும் மனசிலே ஒன்றுமே வெச்சுக்காததில் உள்ள சுதந்திரம் ஆனந்தமானது. எனக்கு ஆபத்தானாலும் பரவாயில்லை… வெளிப்பட்ட பேச்சால் சம்பந்தப்பட்டவர்களுக்கு சங்கடங்கள் தோற்றுவிப்பது விவேகமான செயலில்லை என்று தெரிந்துதான் இருக்கிறேன்.

…….

peikarumbu-pathasari-10147

நூல் : பேய்க்கரும்பு

*

நன்றி : பாதசாரி (நா. விஸ்வநாதன்) , தமிழினி, சாதிக்