பார்வை: நூருல் அமீனின் ‘ரோல் மாடல்’ – தாஜ்

‘இஸ்லாமிய இலக்கியம் என்றால் என்ன?’ என்ற கேள்வியோடு நிற்காமல், ‘ இலட்சிய வாழ்விற்கு இஸ்லாமிய இலக்கியம்’ என்ற தலைப்பில் இஸ்லாமிய அறிஞர் அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் (நளீமி) பேசிய உரையின் சுட்டியையும் அனுப்பி  சோதனை செய்தார் சகோதரர் நூருல் அமீன். இலக்கிய வியாதியான நான்தானா இதற்கு மாட்டினேன்? உடன் நினைவுக்கு வந்தது தோப்பில் முஹம்மது மீரான் அவர்கள் சொன்ன செய்தி. என்ன சொன்னார்? ’இலக்கியங்களை இலக்கியமாகவே பார்க்க வேண்டும்’ என்றார். ‘நம் இலக்கியங்கள் இறைவனுக்கு இணைவைப்பவை என்று கூறி மக்களை ‘பாவிகளாகி’ விடாமலிருக்க , சிலர் எச்சரித்து வருகின்றனர். இவர்கள் வாசக மனங்களில் உயிர்ப்புடன் நிற்கும் நமது விலைமதிப்பு வாய்ந்த இலக்கியப் பொக்கிஷங்களில் ஆழ்வேர்களைப் பிடுங்கி வீசி, இச்சமுதாயத்தை வேரற்ற சமுதாயமாக்கிவிடாமல் இருக்க வேண்டும். இந்த மண்ணில் முளைவிடும் இலக்கியங்களில், இந்த மண்ணின் தன்மையும், இதன் கலாச்சாரப் பிரதிபலிப்பும் இருக்கத்தான் செய்யும். அவை மண்ணின் மணம் கமழும் உண்மையான இலக்கியங்கள். ஆக, ஓர் இலக்கியம் எந்த மொழியில் தோன்றுகிறதோ, அது அம்மொழி பேசுவோரின் சமூக, கலாசாரத்தோடு பிணைக்கப்பட்டு இருக்கிறது. அதன் படிமங்களும் குறியீடுகளும், நாட்டுப்புறவியலோடும், தொன்மங்களோடும், வரலாற்றோடும் தொடர்புப் படுத்திப் பார்க்கப்பட வேண்டுமே தவிர, அதைச் சமயத் தத்துவ கோட்பாடுகளின் அளவுகோலால் மட்டுமே அளந்து, தர நிர்ணயம் செய்வது, சரியான இலக்கிய அணுகுமுறையாகத் தோன்றவில்லை’ என்றும் சொன்னார். எங்கே சொன்னார் என்பது நினைவில் இல்லை. ஆனால் சொன்னார். என்னை நம்பமாட்டீர்களா? போதுமென்று நினைக்கிறேன்.

விட்டால் மௌலவிகளும் ஆலிம்ஷாக்களும் இஸ்லாமிய பேனா, இஸ்லாமிய பென்சில், இஸ்லாமிய பேப்பர்தான் உபயோகிக்கவேண்டும் என்று சொல்லி ‘இ(ஸ்லாமிய) கலப்பையால்’ நம்மை அடிக்கவும் செய்வார்கள் போலும். வேடிக்கையாக இருக்கிறது…

அடுத்து வருவது , தலைவர் தாஜின் பார்வை. ‘ஹலோ’ என்றதுமே அட்வைஸ்களாக இப்போதெல்லாம் பொழிய ஆரம்பிக்கிற நண்பர் தாஜின் பார்வை.  ஜானகிராமனிலிருந்து ஜாகீர்ராஜா வரை வாசிக்கிற நம் நூருல்அமீனையும் விடவில்லை அவர் கிண்டல். வாழ்க இஸ்லாமிய இலக்கியம்! – ஆபிதீன்

** 

பார்வை: நூருல் அமீனின் ‘ரோல் மாடல்’

தாஜ்

சமீபத்தில்
நூருல் அமீனின் 
‘ரோல் மாடல்’
சிறுகதையைப் படித்தேன்.
கதையின் பெயர்
ஆங்கிலமாக இருந்தாலும்
தமிழில்தான் எழுதி இருக்கிறார்.  

ப்ரியத்தையும் 
நெகிழ்ச்சியையும் களமாக்கி
இஸ்லாமிய
நெறிமுறைகளில் பயணித்து
மறவாமல்
தன் ஆன்மீக குருவை
பாடலால் துதித்து
கதையை நிறைவு செய்திருக்கிறார்!

பாத்திஹா ஓதி
ஆரம்பித்திருக்கலாம்
விட்டுவிட்டார்.
மறந்திருக்கலாம்.
என்றாலும் பரவாயில்லை.
அவர் நினைத்து எழுதிய மாதிரியே
‘ரோல் மாடல்’
வளமான 
இஸ்லாமியப் பண்புகள் கொண்ட
கதையாகவே மலர்ந்திருக்கிறது.

ஆன்மீகத்தை
உயிர் மூச்சாய் போற்றி
சூஃபியாக சஞ்சரிக்கும்
நண்பர் நூருல் அமீன்,
இஸ்லாமியப் பண்புகளை
அதிகத்திற்கு அதிகம் சுமப்பவர்.
அப்படி சுமப்பது சுகமென்றும்
மனித குலம் முழுவதும்
அப்படி சுமந்தே
வாழவேண்டும் எனவும் நினைப்பவர்!

அவரது இக் கதை
அவர் கொண்ட நெறிகளுக்கு
கிஞ்சித்தும் பழுதில்லாமல்
முழுமை கொண்டிருப்பதை
இங்கே குறிப்பிட்டு சொல்ல வேண்டும்!

கொண்ட நெறி பிறழாமல்
கொள்கைத் தவறாமல்
எண்ணத்தில் மிளிந்த சம்பவங்கள்
அத்தனைக்கும்
பதிவில் வடிவம் காண்பதென்பது
அசாத்தியமானது.
அந்த வகையில்…
நூருல் அமீன் சாதித்திருக்கிறார்.
தன் படைப்பாற்றலின்
திறமைக் குறித்து நிரம்பவே
அவர் பெருமைக் கொள்ளலாம்.
தகும்.

*
மகள் ஆசிகா,
தன்னை ;ரோல் மாடலாக’
பார்த்ததிலான நெகிழ்ச்சியை
அந்தப் ப்ரியத்தை
பதிவு செய்ய முனைந்த நூருல் அமீன்,
தனக்குள்ளே சில காலம்
பின்னோக்கி நகர்ந்து
தனது இளமைப் பருவத்தில் சஞ்சரித்து
தன் தந்தையிடம் கொண்ட பாசத்தை
அதனோடான
சில நெகிழ்ச்சியான நினைவுகளை
இக்கதையில் பதிவு செய்திருக்கிறார்.
இது விசேசமான கோணம்.

இக்கதையினை
வாசிக்கும் வாசகன்
அது தரும் கிரியையினால்
இளமைப் பருவத்தில்
தான் கொண்ட இந்த அளவிலான
பாசத்தை / நெகிழ்வை
கொஞ்ச நேரமேணும்
அசைப் போட்டுவான்.
போடாமலும் முடியாது.
இக்கதை தரும் கிரியை அப்படி!

இப்படி
மனித நெஞ்சங்களில்
ஈரத்தை சுரக்கவைக்கும்
நிகழ்வுகளை/
வடிவுக்குள் நிகத்துவது
கதையாசிரியரின்
வெற்றியாக கணிக்கப்படும்.
ஆக,
தனது படைப்பாற்றலின்
இத்திறன் குறித்தும் கூட
நூருல் அமீன்
இன்னொரு முறையும்
பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
தகும்.

*
இக் கதையில்
நான்
புருவம் உயர்த்திய இடங்கள் இரண்டு.

ஒன்று…
கதைக்குள் கதையென
கதையை
நிகழ்த்திக் காட்டியிருக்கும் யுக்தி
சிறப்பானது.

இரண்டு…
நாயகனின் தந்தை
சிங்கப்பூரில் இருந்து
ஊர் வந்த நாளில்,
மனைவியிடமும் மகனிடமும்
அவர் மிளிரவிடும்
பாசம், ப்ரியம் என்பதையெல்லாம் தாண்டி
பழுத்த அனுபவம் கொண்ட
தன் பேச்சாலும்,
மேன்மையான கொண்ட
அணுகுமுறைகளாலும்
அவர் என்னை ரொம்பவும் ரொம்பவும்
வியக்க வைத்தார்!
குறிப்பாய்
மகனின் மானசீக ஆசையை உணர்ந்து
அதனை அவர்
நிறைவேற்றி தருவதும்
நிறைவேற்றி தரும் தருணமும்
சிலிர்ப்பைத் தருவது.

இக்கதையில் பிடித்த
இன்னொரு நிகழ்வை
சொல்லுங்களேன் என்றால்..
ரம்ஜான் நோன்பு நோர்த்திருக்கும்
நாயகன்(நூருல் அமீன்)
நோன்பு திறக்கும் நேரத்தையும்
பொருட்படுத்தாமல்
ரஜினி படமென்று
மாலை காட்சிக்குப் போவதை குறிப்பிடலாம்.

*
இஸ்லாமிய இலக்கிய
வரம்புகளுக்கு உட்பட்ட
சமீபகால
தமிழ் சிறுகதை ஒன்றை
தேர்வு செய்துதர
யாரேனும் என்னை கேட்கும் பட்சம்
கண்ணை மூடிக்கொண்டு
இக்கதையினை
சிபாரிசு செய்வேன்.
அத்தனைக்கு இலக்கணம் மீறாத
அசல் ‘அக்மார்க்’
இஸ்லாமிய இலக்கியம் இது!

பின் குறிப்பாக ஓர் வேண்டுகோள்:
தமிழில் வரும்
இஸ்லாமிய இதழ்களுக்கு
கதை எழுதுவதை விட்டு
உலக இலக்கியத்தில் பெயர் போட
இனி
நூருல் அமீன் எழுதவேண்டும்.
ஆமீன்.

***

நன்றி : தாஜ்  | satajdeen@gmail.com

நிக்காஹ்

’காக்கா’ என்று என்னை அழைக்கும் (இப்படி எல்லாருமே கூப்டா நான் யார கூப்டுறது நானா?!) அன்புச் சகோதரர் நூருல்அமீனின் செல்வப்புதல்விக்கு இன்று (22-5-2011) நிக்காஹ் . மணமக்கள் N. நிலோஃபர் முஸ்தாகியா – A. முஹம்மது ரில்வானுல் ஹஸன் ஃபைஜி B.Com., ACCA-யை வாழ்த்தி அவர்களின் நல்வாழ்விற்கு துஆ செய்கிறேன். நீங்களும் துஆ செய்யுங்கள். விருந்து உபசரிப்பு நாகை முஸ்லிம் சமுதாயக் கூடத்தில், இந்திய நேரம் பகல் 12 மணிக்கு . சமயம் இருக்கிறது. கிளம்புங்கள்!

**

எந்த மனிதனுக்கு நான்கு தன்மைகள் கொடுக்கப்பட்டதோ அவனுக்கு இரு உலகை விட சிறந்ததை கொடுக்கப்பட்டது என அண்ணலார் கூறினார்கள்.

1. எல்லா நிலையிலும் அல்லாஹ்வை திக்ரு செய்யும் நாவு.
2. எல்லாச் சூழ்நிலையிலும் இறைவனுக்கு நன்றி செலுத்தக்கூடிய உள்ளம்.
3. பொறுமையையும் அமைதியையும் தனதாக்கிக்கொண்டிருக்கும் சரீரம்.
4. மூஃமினான சாலிஹான மனைவி.

இந்த நான்கும் கொடுக்கப்பட்டவன் மிகப்பெரிய பாக்கியசாலியாவான்.

– தில் நவாஜ் ஃபைஜி ஷாஹ் நூரி

ஆத்திக நாத்திக ஹம்பக் – நூருல் அமீன்

‘ஓசைகளின் மூலம் உங்களை சந்திக்கின்றேன்- என்னை வாசிக்கும் உதடுகளுக்கு நன்றியுடன்’ எனும் புல்லாங்குழல் , குளிக்கவும் சொல்கிறது கூடவே. ‘சிலருக்கு’ கஷ்டம்தான்!

***

ஆத்திக நாத்திக ஹம்பக்

முந்தைய பதிவில் வந்த மறுமொழிகளுக்கு எதிர்வினை அல்ல இது. முன்பே நான் எழுதி வைத்திருந்த , இன்னும் முழுமைபடுத்த எண்ணியிருந்த கட்டுரை. ஆனால் சிலரின் ஆன்மீக புரிதல் பற்றிய கருத்தைப் படித்ததும் , அறியாததை மறுக்கும் அறிவை/ அறியாமையைக் கண்டு அதற்கு விரிவான பதில் எழுத விரும்பினாலும், நேரமின்மையால் இப்போதைக்கு இதையாவது அனுப்பி வைப்போம் என அனுப்புகின்றேன்.

ஆத்திகம்  அல்லது ஆன்மீகம் என்பது ஹம்பக் என்கிறது ஒரு கூட்டம்.

நாத்திகம் என்பது ஹம்பக் என்கிறது ஒரு கூட்டம்.

’ஹம்பக்’ என்றால் என்ன என்று சும்மா புரியாதவர் போல் கேட்கின்றீர்களா? இந்த ஹம்பக்கெல்லாம் நம்ம கிட்ட வேணாம் சாரே!  சரி! சரி! கோபம் வேண்டாம் விஷயத்துக்கு வருவோம்.

நீங்கள் கடவுளின் இருப்பை ஏற்பவரா? மறுப்பவரா? என்ற அடிப்படை பிரச்சனையை பிறகு பார்க்கலாம். ஆத்திகரானாலும், நாத்திகரானாலும் இருவருமே பொதுவாக விரும்பும் ஒரு விசயம் ‘நல்வாழ்வு’. சற்றே விரிவாக சொன்னால் தனிமனித மற்றும் சமுதாய நல்வாழ்வு.

‘எல்லோரும் இன்புற்றிருக்கவேயல்லாது
யானொன்றும் அறியேன் பராபரமே!’ என்பது முது மொழி

இது ஆனந்த விகடனில் வரும் வாசகம் மட்டுமல்ல நம் அனைவரின் அடிப்படை தேவையும் கூட.

ஆனால் , சொல்வதற்கு வெட்கப்பட்டாலும் கூட அடிப்படையில் நாம் அனைவருமே சுய நலவாதிகள் தான். இந்த நல்வாழ்வு என்பது கூட நான், என் குடும்பம் எனது உறவு என தன்னலமாக ஆரம்பித்து ஊர், நாடு, உலகம் என பொது நலமாக விரியும் விசயம் தான். இது மனித இயற்கை. தவறல்ல!

ஆனால் , பொது நலம் அல்லது சமுதாய நலனின்றி நாம் சுயமாக நலமாய் இருக்க முடியாது என்ற இன்னொரு அடிப்படை விசயத்தை நாம் எளிதாக மறந்து விடுவது தான் ஒரு மகத்தான சோகம்.

யாருடைய தயவும் இல்லாமல் ஒரு கோப்பை தேநீர் கூட குடிக்க நம்மால் முடியாது. எனக்கு சுயமாக தேநீர் போட்டு கொள்ள தெரியுமே என அவசரப்படாதீர்கள். தேநீர் என்பது தேயிலை, பால், தண்ணீர், சீனி என்ற நான்கு பொருள்களின் கலவை.  நாமே சுயமாக தேயிலையை பயிர் செய்து, மாடுவளர்த்து பால் கறந்து, கரும்பு வளர்த்து சீனியாக்கி தண்ணீரில் கலந்து அதற்கு மேல் அடுப்பில் வைத்து சூடுபண்ணி தேநீர் தயாரித்து அருந்த வேண்டும் என்றால் ஒரு தேநீராவது அருந்த முடியுமா?

’பட்டோடு பருத்தியை பின்னி எடுத்து
உங்கள் பகட்டுக்கு புத்தாடை யார் கொடுத்தார்?
காட்டாந்தரையிலே கல்லை உடைத்து
இந்த கண்ணாடி மாளிகையை யார் படைத்தார்?’

– என்ற பழைய சினிமா பாடல் ஒன்று இங்கே எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. நம் புத்தாடையும், சுக வாழ்வும் எத்தனையோ மக்களின் நலவாழ்வை வேண்டி நிற்கிறது. ஆக பொது நலம் என்பது தவிர்க்க முடியாத நம் சுய நலம் என்பதை மறந்துவிட கூடாது.

நாத்திகம் பேசினாலும் இதைத் தான் சுயமரியாதை இயக்கங்கள் போதிக்கின்றது.

இதைத்தான் பொதுவுடமை இயக்கங்களும் போதிக்கின்றது.

ஆத்திகம் பேசும் அத்தனை மதங்களும் போதிக்கின்றன.

இயக்கங்கள், மதங்களின் இந்த நல்ல பகுதியைத்தான் நான் ஆன்மீகத்தின் அடிப்படை என்கின்றேன்.

இந்த அடிப்படை ஆன்மீகத் தன்மையை இழந்த இயக்கத்தாராலும், மதத்தாராலும் மனித இனம் ஒருவித மிருக வாழ்க்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றோம். இப்படிச் சொல்வதனால் எந்த மனிதரும் கோபித்துக் கொள்வாரோ என்பதை விட மிருகங்கள் கோபித்துக் கொள்ளக் கூடாதே என்ற கவலையும், நல்ல வேளை மிருகங்கள் என் கட்டுரைகளை படிப்பதில்லை என்ற ஆறுதலும் வருகின்றது.

ஆன்மீகம் வந்ததற்கான அடையாளமே எல்லா உயிர்களையும் அன்பான கண் கொண்டு நோக்குவது தான் என்றார்கள் என் கண்களை விட்டு மறைந்தாலும் கருத்தில் நிறைந்திருக்கும் ஆன்மிக குரு நாதர் ஃபைஜிஷாஹ் நூரி என்ற அற்புத மகான். மேலே குறிப்பிட்ட தேநீர் உதாரணம் கூட அவர்கள் சொல்லிக் காட்டியது தான். மோகன் ஐயரும், குஞ்சு பிள்ளை அண்ணனும், என் போன்ற பலரும் அவர்களின் இல்லத்தில் இறைவேத வெளிச்சத்தில் ஏகத்துவ மெய்ஞானம் பயின்ற அந்த காலம் என் வாழ்வில் என்றும் மறவா பொற்காலம்.

குளிப்பதனால் அழுக்கு நிரந்தரமாக நீங்கி விடுவதில்லை. அதற்கு மீண்டும்  மீண்டும் குளிக்க வேண்டியது அவசியமாகிறது.ஆன்மிகம் என்பது ஒரு குளியலைப் போல அனுதினமும் தொடர வேண்டிய ஒன்று. குளிப்பதைத் தவிர அழுக்கு தீர வழியில்லை.

அன்புடன்

நூருல் அமீன்  |  http://onameen.blogspot.com/

***

நன்றி : நூருல் அமீன் | onoorulameen@gmail.com

***

தொடர்புடைய பதிவு :  படைக்கும் படைப்பினம் – நூருல் அமீன்

படைக்கும் படைப்பினம் – நூருல் அமீன்

சுடச்சுட ஒரு சூப்பர் தோசை!

நண்பர் தா’ஜின்’ குறிப்புகளுடன் வந்த ‘படைப்பதனால் என் பெயர் இறைவன்?’ என்ற மாலனின் கட்டுரைக்கு, மறுமொழியளித்த சகோதரர் நூருல் அமீன், ‘ ஒரு மெழுகுவர்த்தியை பற்ற வைப்பதற்குள் சூரியனுக்கு மாற்று ஏற்பாடு செய்து விட்டேன் என கூறினால் எப்படி சகோதரரே!’ என்று கேட்டிருந்தார். வலம்புரி ஜானின் ஸ்டைலில் சொல்லவேண்டுமென்றால் , ‘தன்னைச் சொல்லவேண்டும், தகவலும் இருக்க வேண்டும் என்பது சாதாரணமானதல்ல;  அது இவருக்கு கைவந்திருக்கிறது; படித்த நாள் முழுவதும் அந்த வரிகளையே அசைபோட்டுக் கொண்டிருந்தேன்’! ‘இறைவன் இருக்கின்றானா?’ என்ற (அமீனின்) பதிவுக்கு மறுமொழியளித்த நண்பர்களுக்கு பதில் கொடுத்த பாங்கும் (நம்ம ‘வாங்கு’ அல்ல!) என்னை மிகவும் கவர்ந்தது.

‘அகப்பார்வை’ நூலின் ஆசிரியரான நூருல் அமீன் ஆன்மீகத்தில் ஊறிக்கொண்டிருப்பவர். ‘பல ஆன்மீக சந்தேகங்களுக்கு இவரின் வலைதளம் தெளிவு தருகிறது’ என்று கிளியனூர் சகோதர் அன்பின் இஸ்மத்தே பாராட்டிவிட்ட பிறகு இந்த ‘அடஹா’ என்ன சொல்ல? நிறைய எழுதுங்கள் அமீன்பாய். அப்படியே, தாஜையும் திருத்துங்கள்!

புகைப்படம் கேட்டேன். ‘வேண்டாம் நானா’ என்று மறுத்துவிட்டார் நூருல் அமீன். இதுவும் ஆன்மீகம்தான்!

ஆபிதீன்

***

புல்லாங்குழல் :

ஆபிதீன் நானா போன் செய்து இப்படி இப்படி வேண்டும் என கூறி ஒரு கவிதை எழுத சொன்னதும் ஒரு ஜோக்குதான் ஞாபகத்துக்கு வந்தது.

ஒருவன் ஹோட்டல் சர்வரிடம் சூடா, மென்முறுவலா, லேசா நெய்  ஊத்தி ஒரு சுவையான தோசை கொண்டு வா என கேட்க. சர்வர்சரக்கு மாஸ்டரை நொக்கி “ஒரு சாதா!” என சவுண்டு கொடுத்தானாம். நாங்க என்ன சீர்காழி தாஜா?!. வச்சுகிட்டா வஞ்சகம் பண்றோம். ஏதோ என்னால முடிஞ்ச சாதா தோசை!

ஆபிதீன் நானா கவிதை எழுதக் கேட்டவுடன் உடனே எனக்கு தமிழாசிரியர் ஜோஸப் சாரின் நினைவு வந்தது. அவரை பற்றி இப்ப நான் சொல்லாவிட்டால் என் ஜென்மம் சாபல்யமடையாது.

பள்ளியில் படிக்கும் போது பெண் உரிமைக்காக பாடுபட்ட ஒரு கவிஞரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதச் சொன்னார் எங்கள் தமிழ் வாத்தியார் ஜோஸப் சார். கொஞ்சூண்டு மட்டுமே அந்த கவிஞரை பற்றி தெரிந்திருந்த நிலையில். சப்பாத்தி கட்டையில் சப்பாத்தியை உருட்டிப் பெரிதாக்குவது போல தெரிந்ததை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளர்த்தேன். அப்படியும் பக்கம் காலி இருந்தது. மீதி இடத்தை நிரப்புவதற்காக

“மாங்கனி மங்கையர்க்கு மாசிலா கல்வி வேண்டி!
தீங்கனி சொற்களலாலே சிந்தைக்கு உரிமை வேண்டி!
கட்டுகள் கழற வேண்டி கைவிலங்ககல வேண்டி!
பாட்டினால தட்டி எழுப்பிய பாவலா உன் புகழ் வாழி!” என எழுதி கொடுத்தேன்.

“யாரு பாரதிதாசன் கவிதையா?” என ஜோஸப் சார் அப்பாவி தனமாய் கேட்க! அன்றைக்கு எனக்கு முளைத்தது கொம்பு.

பள்ளிக் கூடங்களுக்கு இடையே நடக்கும் கட்டுரை போட்டிகளில் அதை பற்றிய தகவல் அனுப்பும் அரசு அலுவலருக்கு எங்கள் ஜோஸப் சாரை பிடிக்காது என நினைக்கின்றேன். அவர் கடைசி நாளில் தான் ஜோஸப் சாருக்கு தகவல் தருவார். பாக்கியசாமி என்ற கண்டிப்பான எங்கள் பிரின்ஸி ஜோஸப் சாரை துரத்துவார். பிரமாண்டமான எங்கள் பாக்கியசாமி பார்வையாலேயே அவரை மிரட்ட, தூக்கி எறியப்பட்ட வாழைப்பழ தோல் போல் எங்கள் குழுவிடம் வந்து விழுவார் ஜோஸப் சார். அவசர கட்டுரை எழுதுவதற்காக எனக்கு விடுமுறை தந்து லைப்ரரிக்கு அனுப்புவார். எனக்கு உதவுவதற்கு ஆள் வேண்டும் என கூறி வம்படித்து ஸ்டீஃபன், மனோகர் என நணபர்களையும் இழுத்து கொண்டு சென்று விடுவேன். லைப்ரரியில் இஸ்டத்துக்கு படித்து விட்டு கடைசியில் சம்பந்தபட்ட விசயத்தையும் கொஞ்சம் படித்து வழக்கம் போல் சப்பாத்தி வளர்த்து அதிர்ஷ்டவசமாகவோ, துரதிஷ்டவசமாகவோ சில பரிசுகளும் (‘நம்ம ஊர்களின் தரம் அவ்வளவு தான்’ – ஆபிதீன் நானா திட்டுவது காதில் விழுகிறது.) வாங்கி தந்துவிடுவேன். இந்த எனது திறமையால்/திமிரால் பல முறை அந்த நல்ல மனிதரை பாடாய் படுத்தி இருக்கின்றேன். ஆனால் அவர் என் மேல் எப்போதும் பிரியமாய் தான் இருந்தார். குருவை படுத்திய பாட்டினாலோ என்னவோ என் கவிதை ஸ்கூல் லெவல் ஸ்டேண்டர்டிலிருந்து வளரவே இல்லை.

ஆகவே , படிக்கும் போது ஒரு பள்ளி மாணவன் நாற்பது வயதுக்கு மேல் எழுதிய கவிதை என்பதை நினைவில் கொள்ளவும். இதில் கொஞ்சம் கொஞ்சம் கவிதை என்கிற வஸ்து இருந்தால்  அதை ஸ்டீபன், மனோகர்,நேதாஜி,கிருஸ்ணமூர்த்தி, மாணிக்கம் எனும் எங்கள் குழுவினர் சார்பில்  ஜோஸப் சாரின் பாதங்களில் சமர்பிக்கின்றேன். சார் மன்னிச்சு கொஞ்சம் வளர வுடுங்க சார்.

இதோ நீங்க கேட்ட சாதா தோசை, இல்லை, கவிதை.

படைக்கும் படைப்பினம் (Created creator)

காட்சிகள் இல்லை. காண்பவர் இல்லை.
ஓசைகள் இல்லை. செவிகளும் இல்லை.
ஓவியன் சிந்தையில் எல்லாம் இருந்தன.
ஓவியத் திறமை புதையலாய் இருந்தது.
புதையலின் நாவுகள் ஆசையை பேசிட
உணர்ந்திட்ட ஒவியன் கேட்ட வரம் தந்தான்.

புதையலின் ஆசையால் வான்,புவி வந்தது.
மலை, கடல் வந்தது. மான்,மயில் வந்தது.
புல்லினம் தொடங்கி வானவர் வரையில்
அத்தனை அழகும் அவன் புகழ் சொல்லுது.
ஒருமையின் அர்த்தம் சொல்ல பன்மைகள் வந்தது.

ஓவிய ஆசை உச்சத்தில் சென்றது.
படைக்கும் தன் முகம் பார்த்திட கேட்டது.
‘ஓவியக்’ கண்ணாடி காட்சிக்கு வந்தது.
முத்திரை படைப்பாய் மானுடம் என்றது.

சின்னத் துளியிலே வரைந்திட்ட சித்திரம்.
சித்திரக் கண்ணாடியில் ஓவியன் தரிசனம்.
கவிதைகள் சொல்லுது, காவியம் சொல்லுது
கப்பல்கள் செய்து கடலில் மிதக்குது.
வானில் பறக்குது. வையத்தை ஆளுது.
படைக்கும் படைப்பினம். படைத்தவன் அற்புதம்.
படைக்கும் படைப்புகள். படைத்தவன் புகழ் சொல்லும்.

காட்ட வந்த கண்ணாடி தன் நிலை மறந்தது.
சாட்சியாய் வந்திட்ட சங்கதியும் மறந்தது.
காட்சியில் வந்ததை ‘நான்’, ‘நான்’ என்றது.
தன் புகழ் பாடியே தருக்கி திரியுது.

வானமும், பூமியும்
உன் வசமானது.
சக்தனின் சக்தி நீ.
வித்தகன் வித்தை நீ
உயிர் தரும் வித்தையும் உன்னில் உறங்குது
உயிர் விடும் நாள் முன்பே
உறக்கம் களைந்திடு!.

***

நன்றி : நூருல் அமீன்  | மின்னஞ்சல் : onoorulameen@gmail.com

Newer entries »