‘திருமுட்டம்’ – த. பழமலய்

” நண்பர் மகள் திருமணத்திற்கு
ஸ்ரீமுஷ்ணம் போயிருந்தோம்
கோயிலையும் பார்க்க விரும்பினார்கள்
இரகமத்துல்லா கான் அவர்களும் உடன் வந்தார்

கருடத் தூண், கோபுரம் எல்லாம் தாண்டிக்
கருவறை முன் நுழைந்தோம்
கான் உள்ளே போய்விட்டார்.
வாயிலில் நின்றிருந்த அய்யங்கார்,
என்னிடம் பேச்சுக் கொடுத்தார் :
“ ஒங்களவாள் எல்லாம் இந்தச் சுவாமிக்கு
நெறயச் செய்திருக்கா
பிரம்மோத்சவத்துல அவாள் சேவை உண்டு.
சிதம்பரம் பக்கத்துல கிள்ள இருக்கில்லியோ

அங்கே மசூதிக்குச் சாமி போவார்
சேவ செய்யறவாள் வீட்டுப் பெரிய பிள்ளைக்கு
அப்துல்லா பூவராக சாமின்னுதான் பேரு வைப்பா…”

திரும்பிப் பார்த்தேன்,
உள்ளே போயிருந்த கான்
திரும்பிவந்து நின்றுகொண்டிருந்தார்
பட்டர் பேசியது அவருடன் அல்ல.

கான் மழித்துக்கொண்டு வந்திருந்தார்
நான்தான் ஆட்டுத் தாடியுடன் இருந்தேன்.

பேருந்துக்குத் திரும்புகையில் கான் சொன்னார் :
“ நீங்க முசுலீம் ஆயிட்டீங்க
நான் இந்துவாயிட்டேன்!”

*

நன்றி : த. பழமலய்,   களந்தை பீர் முகம்மது