புதுமைப்பித்தனின் சங்கீத ஞானம்!

’அறம் செய்ய விரும்பு – ஆனால் செய்யாதே’ என்று  எழுதிய அங்கத மன்னன்  நம்  புதுமைப்பித்தன்.  அவரைப் பற்றி தொ.மு. சி. ரகுநாதன்  – 1951ல் – எழுதிய ‘புதுமைப்பித்தன் வரலாறு’ தேடிக்கொண்டிருந்தேன். ‘தினம் ஒரு மென்நூல்’ குழுமம் மூலம் கிடைத்தது (PDFஐ இங்கிருந்து தரவிறக்கம் செய்யலாம்) . கண்ணீர் வேண்டாம்; சுவாரஸ்யமான 20-ஆம் அத்தியாயம் மட்டும் உங்களுக்காக.. (சங்கீதஞானத்தை என்னைப்போலவே வளர்த்து வைத்திருந்திருக்கிறார் ’சோவி’!)  – ஆபிதீன்

***

சங்கீத ஞானம்!

pp_thumb[10]“புதுமைப்பித்தனைச் சிறுகதை ஆசிரியராகவும், கவி பாடும் கவிராயராகவும்தானே கண்டிருக்கிறோம். அவருக்குச் சங்கீத ஞானமும் உண்டா? பாட்டுப் பாடும் கவிராயருக்குச் சங்கீத ஞானமும் இருக்கத்தானே வேண்டும்?” என்று சிலர் கேட்கலாம்.

அவரது சங்கீத ஞானத்தைப் பற்றிக் கூறுவதை விட, ஒரு ரசமான சம்பவத்தைக் கூறலாம்.

புதுமைபித்தனுக்கு கணேச சர்மா என்று ஒரு நண்பர் உண்டு. அவருக்குச் சங்கீதத்தில் மிகுந்த ஈடுபாடு. நல்ல ஞானம். மேலும் சங்கீத வித்வான்கள் பலருடனும் அவருக்குத் தொடர்பும் பழக்கமும் உண்டு. சங்கீதக்காரர்களே பொதுவாக ஹாஸ்யமாகப் பேசுபவர்கள். கணேச சர்மாவுக்குப் புதுமைப்பித்தனோடு அரட்டையடிப்பதில் குஷி.

ஒரு தடவை திருவீழிமிழலை சகோதரர்களான நாதசுர வித்வான்கள் சென்னைக்கு வந்திருந்தார்கள். கணேச சர்மா அந்த நாதசுர வித்வான்களுக்கு மிகவும் வேண்டிய நண்பர். எனவே தாராளமாய் எதையும் பேசுவார். அவர் அந்த வித்வத் சிரோமணிகளைப் பார்த்து, “உங்கள் வாசிப்பை யாராரோ கேட்டு ரசிக்கிறார்கள். வெறுமனே தலையை ஆட்டினால் போதுமா? இங்கு ஒரு பெரிய ஞானஸ்தர் இருக்கிறார். என் நண்பர். அவர் சபாஷ் போட்டு விட்டால் அப்புறம் உங்களுக்கு வேறு பட்டயமே தேவையில்லை” என்று கூறினார்.

அவர்களும் அதிசயத்து, “அப்படியே? அவரைப் பார்க்க வேண்டுமே” என்றார்கள்.

கணேச சர்மா அவர்களைப் புதுமைப்பித்தன் குடியிருந்த இடத்துக்கு அழைத்துக்கொண்டு வந்து சேர்ந்தார்.

“என்ன சோவி, திருவீழிமிழலை பிரதர்ஸ் உங்களிடம் வாசித்துக் காட்ட வேண்டும்; நாதசுரம்” என்று பணிவோடு சொன்னார் சர்மா.

”என்னது, நாதசுரமா?” என்றார் புதுமைப்பித்தன் : “சரி. வாசிக்கட்டும்.”

வித்வான்கள் வாசிக்க ஆரம்பித்தார்கள். புதுமைப்பித்தன் வெற்றிலைச் செல்லத்தை முன்னே இழுத்துவைத்துக்கொண்டு வெற்றிலை போட்டார். ஏதோ ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்துத் திருப்ப ஆரம்பித்தார். வித்வான்கள் இருவரும் வெகுநேரம் ராக ஆலாபனைகள் எல்லாம் பண்ணி முத்தாய்ச் சொரிந்து தள்ளினார்கள். ஆனால் புதுமைப்பித்தனின் முகத்தில் எந்த மாறுதலையும் காணோம். ‘கம்’மென்றிருந்து படிக்க ஆரம்பித்து விட்டார்.

இதற்குள் அறைக்கு வெளியே இருந்த சர்மா கடகடவென்று சிரித்தார். உள்ளே வந்தார், “இவ்வளவுதானா உங்கள் சங்கீதம்? இவரை மயக்க முடியவில்லையே!” என்று வித்வான்களைக் கேலி செய்தார் சர்மா. புதுமைப்பித்தனுக்குப் பிறகுதான் உண்மை தெரிந்தது. எல்லாம் சர்மாவின் கலாட்டார்.

உண்மை என்ன தெரியுமா? புதுமைப்பித்தனுக்குச் சங்கீதத்தில் அட்சரம் கூடத் தெரியாது. அந்த ஞானமும் வராது. சங்கீத விஷயத்தில் அவர் ஒரு ஔரங்கசீப். எனவேதான் அந்த வித்வத் சிரோமணிகளின் சங்கீதம் புதுமைப்பித்தனைக் கொஞ்சம்கூட அசைக்கவில்லை.

இதன் பிறகு அந்த நாதசுர சகோதரர்களும் புதுமைப்பித்தனும் நெருங்கிய நண்பர்களாகி விட்டார்கள். அவர்கள் சென்னைக்கு வந்தால் புதுமைப்பித்தன் தமது சோம்பலையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு அவர்களைப் போய்ப் பார்ப்பார்; ஆனால், கச்சேரிக்கு மட்டும் போக மாட்டார்! அது மட்டுமல்ல; அவர்கள் இருவரோடு நேர்ந்த நட்பின் அறிகுறியாக, புதுமைப்பித்தன் அவர்களிடம் ஒரு வெகுமதி கேட்டார். என்ன தெரியுமா? ஒரு நாதசுரம்!

விடாப்பிடியாக நின்று அவர்களிடமிருந்து புத்தம் புதிதான ஒரு நாதசுரத்தை வாங்கிப் பத்திரமாக வைத்திருந்தார் புதுமைப்பித்தன். ஒருமுறை அவர் என்னிடம் அதைக் காட்டினார்.

“இது எதற்கு?” என்றேன்.

“வருகிறவனைப் பயமுறுத்துவதற்கு; விரட்டுவதற்கு!” என்றார் புதுமைப்பித்தன். பிறகு “என்ன ராசா, ராசாரத்தினம் பிள்ளை பத்திரிகைக்குக் கட்டுரை எழுதும்போது, நான் மட்டும் ஏன் நாதசுரம் வாசிக்கக்கூடாது?” என்று ஒரு கேள்வியைப் போட்டு விட்டார்!

புதுமைப்பித்தன் தாம் சொல்லியபடியே நாதசுரத்தை வைத்துக்கொண்டு சிலரைப் பயமுறுத்தியதும் உண்டு. வந்த ஆசாமி எழுந்து போகவில்லையானால், “கொஞ்சம் நாதசுரம் கேக்கியளா?” என்று கூறிக்கொண்டே நாதசுரத்தை எடுத்து வந்து விடுவார். வந்தவர் திகைப்பார். “இல்லே. நான் குளிக்கப் போகணும். நீங்க இருக்கிறதுன்னா, நம்ப வாசிப்பைக் கேளுங்க” என்பார். வந்த ஆசாமிக்கு மறுசொல் வேண்டுமா? எழுந்து போய் விடுவார்!

சங்கீதத்தை பற்றி எதுவும் தெரியாத, தெரிய விரும்பாத, புதுமைப்பித்தன் ஒரு தடவை சங்கீத விசாரமே பண்ண ஆரம்பித்து விட்டார். அழகிரிசாமி சங்கீத ஞானமுள்ள சிறந்த எழுத்தாளர். அவரிடம் போய் சங்கீதத்தைப் பற்றித் தர்க்கம் பண்ண ஆரம்பித்தார் புதுமைப்பித்தன்.

தர்க்கத்தில் தோற்றது புதுமைப்பித்தன் அல்ல; அழகிரிசாமிதான். ஏன் தெரியுமா? அவரது வாதத்தை எதிர்க்கச் சக்தியற்ற புதுமைப்பித்தன், தம் தோல்வியை ஒப்புக்கொள்ளாமலே வேறு விஷயத்துக்குப் பேச்சைத் திருப்பி விட்டார்.

புதுமைப்பித்தனின் ‘பக்த குசேலா’ ஞாபகம் இருக்கிறதா?

“… நாதஸ்வரக்காரன் கேதார கௌளை ராகத்தை எடுத்து ஆலாபனை செய்கிறான்; அதே சமயத்தில் பாண்டு வாத்தியம் ‘ரூல் பிரிட்டானியா!’ என்ற மெட்டை வெளுத்து வாங்குகிறது’ என்று கோயில் ஊர்வலக் காட்சியை வருணித்திருக்கிறார் புதுமைப்பித்தன்!

‘கதையிலே ராகத்தின் பெயர்கூடப் போட்டிருக்கிறாரே’ என்று நீங்கள் வியக்கிறீர்களா? ஆமாம், கதைதானே அது’

**

நன்றி: மீனாட்சி புத்தக நிலையம், ‘தினம் ஒரு மென் நூல்’ குழு

**

தொடர்புடைய பதிவு :

தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய புதுமைப்பித்தன் வரலாறு (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு)  –  சுப்ரபாரதிமணியனின் விமர்சனம்