பாஷாங்க ராகம் – தி. ஜானகிராமன்

கல்கி இதழில், ஏப்ரல் 1964-இல் வெளியான சிறுகதை இது. காலச்சுவடு பதிப்பகத்திற்காக கவிஞர் சுகுமாரன் பதிப்பித்த முழுத்தொகுப்பில் கிடைத்தது. நன்றியுடன் பகிர்கிறேன். – AB

**

thi janakiraman - tamilwiki 2

பாஷாங்க ராகம் – தி. ஜானகிராமன்

… ‘என் தாயாருக்கு நீங்கள் அனுப்பிய அனுதாபச் செய்தி கிடைத்தது. ‘நிறைந்த சங்கீத அறிவுடன், ரசிக சிரோமணியாகத் திகழ்ந்தார் தங்கள் கணவர் ஸ்ரீபலராமன். பயமின்றியும் பாரபட்சமின்றியும் அவர் சங்கீத விமர்சனம் செய்து வந்ததே, சங்கீதமே மூச்சாக அவர் வாழ்ந்த லட்சிய நோக்குக்குச் சான்றாகும். அவர் மறைவைச் செவியுற்று இசையுலகம் துயரில் ஆழ்ந்து கிடக்கிறது. அன்புக் கணவரைப் பிரிந்து துயரெனும் இருளில் தவிக்கும் தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் தன் ஆழ்ந்த அனுதாபத்தை எங்கள் பிருங்கி சங்கீத சபை தெரிவித்துக்கொள்கிறது’ என்று எழுதியிருக்கிறீர்கள்.

அம்மா அதைப் படித்துவிட்டுச் சிறிது நேரம் எங்கோ பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். “நன்றி, என்று ஒரு வார்த்தை பதில் எழுதிப் போட்டுவிடட்டுமா?” என்று கேட்டேன். “இத்தனை தப்பு இருக்கிற கடுதாசுக்கு விவரமாகத்தான் எழுதிப் போடேன்” என்று சொல்லிப் போய்விட்டாள். போய் முன்வாசல் படியில் நின்று, “இந்தக் கடுதாசு உனக்கு சரியாகப்படறதா?” என்று கேட்டாள்.

மறுபடியும் படித்து, ஒவ்வொரு வார்த்தையாக எடை போட்டுப் பார்த்தேன். அநேகமாக எல்லாமே தவறு என்று தோன்றிற்று. அம்மாவிடம் அதைச் சொல்லியும்விட்டேன். “அப்படீன்னா பொய்யைக் கழுத்தை முறிச்சுப் போடு” என்று சொல்லிவிட்டு வாசற்படி இறங்கிப் போனாள்.

மறுபடியும் உங்கள் கடிதத்தைப் படித்தேன். அப்பாவின் கெட்டிக்காரத்தனத்தை நினைத்துச் சிரிப்பு வந்தது. முரட்டு ரசிகர்களான பிருங்கி சபையார் கண்ணில் மண்ணைப் போட்டு விட்டாரே என்று தோன்றிற்று. அப்பா ரசிகரும் இல்லை. சிரோமணியுமில்லை. பயந்து பயந்துதான் பொழுதைப் போக்கினார் அவர். அவருடைய லட்சியம் சங்கீதமல்ல. பக்ஷ்யம்தான். காலட்சேப பாகவதர்கள் அடுக்குகிற ஏழு ஸ்வரங்களுக்குச் சுத்தம், சாதாரணம், அந்தரம், சதுச்ருதி, த்ரிச்ருதி, ஷ்ட்ச்ருதி, கோமளம், தீவிரம் என்றெல்லாம் அடைமொழிகளுடன் வேறுபாடுகள் இருப்பதுபோல் ஒவ்வொரு சுவைக்கும் பன்னிரண்டு வகைகள் உண்டு என்று அவர் கட்சி. உண்டி வகைகளை உண்பதுதான் அவருடைய பரம புருஷார்த்தம். அம்மாவுக்கும் அவருக்கும் இடையே எந்தவித அன்பும் மலர்ந்திருந்ததாகத் தெரியவில்லை. இருந்தால் மொட்டிலேயே கருகியிருக்க வேண்டும். துயரெனும் இருளில் அம்மாவோ நாங்களோ தட்டித் தடவி நடக்கவில்லை. நான் மனையியலையும் சங்கீதத்தையும் விசேஷ பாடமாக எடுத்துக்கொண்டு ஆனர்ஸ் படித்துக்கொண்டிருக்கிறேன். என் தம்பி கெமிஸ்டாக ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறான். நானும் அவனும் வில்லி பார்லாவில் குடியிருக்கிறோம். அம்மா – கோரேகானில் அன்புக் கணவரோடு – இந்த நாள் கணவரோடு – சுகமாக வாழ்ந்துகொண்டிருக்கிறாள். அப்பாவின் மனைவியாக அல்ல. போலீஸ்காரர்கள் வந்து அவரைப் பைத்திய ஆஸ்பத்திரிக்கு அழைத்துக் கொண்டுபோய்ச் சேர்த்த பிறகுதான் அம்மாவுக்கு ஆறுதல் கிடைத்தது. மூன்று வருஷங்கள் கழித்துச் சட்டப்படி விவாகரத்து செய்துகொண்டுவிட்டாள்.

மாதா பிதா பாவம் மக்கள் தலையிலே என்பார்கள். அந்தப் பாவத்தை என் அப்பா தன் தலையில் சுமந்துகொண்டு அலைந்தார். கடைசியில் அது அவர் தலைக்குள் இருப்பதையே பாதித்துவிட்டது. அவருடைய பிதா (என் தாத்தா) செய்த பாவம் பிள்ளைக்குச் சங்கீதம் கற்பிக்க முயன்றது. மாதா (என் பாட்டி) செய்த பாவம் அதைத் தடுத்து நிறுத்தாமல் போனது. அதனால் சிலவேளை அப்பாவை நினைக்கும்போது வருத்தமாயிருக்கும்.

தாத்தாவுக்கு மூன்று பிள்ளைகள். முதல் இரண்டு பிள்ளைகளும் திவ்வியமாகப் பாடுவார்களாம். பள்ளிக்கூடத்துத் தலைமை ஆசிரியராக இருந்த தாத்தா, சங்கீதத்திலும் கரை கண்டவர். கரையைக் கண்டுவிட்டாலும் எப்போதும் அதிலேயே நீந்திக் கொண்டிருப்பாராம். பிள்ளைகள் பாடுவதைப் பார்த்து உடம்பே வெடிக்கும்போல் பூரித்துக் கொண்டிருப்பாராம். தக்க வயது வந்ததும் சங்கீத இலக்கண இலக்கியங்களையெல்லாம் கரைத்துப் புகட்டிவிடுவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தாராம். ஆனால் அவர் இதயமே வெடிக்கிற சம்பவம் நிகழ்ந்தது. அந்த முதல் இரண்டு பிள்ளைகளும் ஒரு சாதாரண ஆற்றில் நீந்தப் போய், உயிரை ஆற்றிடம் தந்து, உடம்பாக எங்கோ அகப்பட்டார்களாம். தாத்தாவுக்குத் துயரம் தாங்கவில்லை. தம் சங்கீத சொத்தை அவர் இனி மேல் யாருக்கு எழுதி வைப்பார்? மூன்றாவது பிள்ளைக்குத்தானே? வேறு வாரிசு ஏது? எனவே, என்னுடைய அப்பாவுக்கு ஏழு வயதிலிருந்தே சங்கீதம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார். வாழ்வில் அநித்தியத்தை எண்ணி, சங்கீத இலக்கண சாஸ்திரங்கள் வரலாற்று நூல்கள் எல்லாவற்றையும் அவசரம் அவசரமாகப் பாடம் சொன்னார். என் அப்பாவுக்குப் பாட்டு வராவிட்டாலும் கடம் நன்றாக வரும். எத்தனை பெரிய புத்தகமானாலும் கடம் போட்டுவிடுவார். கேட்ட இடத்தில் தலையில் பிரம்ம தண்டத்தை வைத்தாற்போல் கடகடவென்று ஒப்பிப்பார். பாடத்தான் வரவில்லை. தாத்தா அவரை அடியோ அடி என்று அடித்தார். உள்ளங்கை என்ன, முஷ்டி என்ன, பாக்குவெட்டி என்ன, புத்தகம் என்ன, டம்ளர் என்ன, டபரா என்ன- இப்படிப் பல ஆயுதங்களை அவர் மீது கண்ணை மூடிக்கொண்டு பிரயோகம் செய்வார். இப்படி வெகு காலம் வரையில் இந்த சிட்சை நடந்தது. இதற்கிடையில் என் அப்பாவுக்குக் கல்யாணமும் நடந்தது. ஆனால் இசைப் பயிற்சியும் தொடர்ந்த வண்ணமேயிருந்தது. அதனுடைய பிரிக்க முடியாத அங்கமான வசவுகளும் தொடர்ந்து பொழிந்து கொண்டிருந்தன. எத்தனை பொழிந்தும் விளைச்சலில்லை. கட்டாந்தரையில் எப்படி முளைக்கும்? அப்பா சங்கீத சாஸ்திரங்களை நெட்டுருப் போட்டதனைத்தும் பாத்தியில் எருவாகக் குவிந்திருந்தது. ஆனால் பாத்தி கருங்கல். பாட்டு வரவில்லை. தாத்தா அடிக்கடி பெருமூச்சுவிட்டு ஓய ஆரம்பித்தார். “அட, பாஷாங்க சனியனே!” என்று அடிக்கடி பிள்ளையை ஒரு புதுமுறையில் விரக்தியுடன் திட்ட ஆரம்பித்தாராம். “நீ எங்கேடா இங்கே வந்து பிறந்தே?” என்று பெருமூச்சு விடுவாராம்.

இதை என் அம்மா கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் சின்னப் பெண். சாந்தி கல்யாணம் ஆகவில்லை. ஆகாவிட்டாலும் புருஷன் வீட்டுக்குப் பெண்ணை ஒரு மாசம் கொண்டுவிடுவதும் அழைத்துப் போவதும் அந்தக் காலத்து வழக்கம். “பாஷாங்க சனியனே!” என்றால் என்ன என்று அவளுக்கு அப்பொழுது புரியவில்லை. பாஷாணம் என்பதை அப்படித் தவறிச் சொல்கிறாரோ என்று தோன்றுமாம். கடைசியில் ஒரு நாள், “பாஷாங்க ராக ராக்ஷசப் பயலே ஒழி” என்று ஆசீர்வாதத்துடன் சங்கீதப் பயிற்சிக்கு மங்களம் பாடி முடித்துவிட்டாராம் தாத்தா.

தாத்தா பிறகு அதிக காலம் ஜீவித்திருக்கவில்லை. ஒருநாள் இகவாழ்வை நீத்தார். நீக்கும்போது அவரால் பாட முடியவில்லை. பிள்ளையைப் பார்த்துக் கண்ணீர் வடித்தாராம்.

அவர் போனதும் என் அப்பா ‘கூகூ’ என்று பச்சைக் குழந்தை மாதிரி அழுதாராம். தம் தந்தையார் கடைசியில் பார்த்துப் பார்த்துப் பேச முடியாமல் கண்ணீர் விட்டதன் அர்த்தத்தை ஆராய முனைந்தார். கண்டுபிடித்துவிட்டார். “என் கோட்டையெல்லாம் தகர்ந்துவிட்டதே” என்றுதான் அவர் வெம்பியிருக்க வேண்டும் என்று அப்பாவுக்குப் புரிந்துவிட்டது. அந்தக் கணமே, இனி வேலைக்குப் போவதில்லை, சங்கீதத்துக்கே உழைப்பது என்று தீர்மானம் செய்துவிட்டார்.

சங்கீதத்தைப் பற்றியே பேச ஆரம்பித்தார் என் தந்தை. வீட்டில் பேசுவார். வெளியில் பேசுவார். ஹோட்டலில் பேசுவார். ரயிலடியில் பேசுவார். நண்பர்களோடு பேசுவார். சங்கீதக் கச்சேரிக்கு யாராவது நிர்பந்தமாகக் கூப்பிட்டுப் போனால், வெளியே உட்கார்ந்து சங்கீதத்தைப் பற்றிப் பேசிவிட்டு வந்துவிடுவார். அதனால் அவரைப் பார்த்து எல்லோரும் பயப்பட ஆரம்பித்தார்கள். ‘வலமோ இடமோ போகட்டும். மேலே விழுந்து பிடுங்காமல் போனால் சரி’ என்று சங்கீத வித்துவான்கள் ஓடி ஒளிந்தார்கள். அதற்காக அவருக்கு நண்பர்களில்லாமல் போய்விடுவார்களா? அவரைப்போலவே நாலு பேர்கள் சேர்ந்து கொண்டார்கள். காசுள்ள ஆசாமி என்றால் விடுவார்களா? அவரோடேயே சாப்பாட்டுக்கும் வந்துவிடுவார்கள். இரண்டு கறி, கூட்டுகள், பிட்ளை, ஆமவடை, பாயஸம் இப்படி அம்மா சாப்பாடு பண்ணிப் போடுவாள். அந்தச் சிரமங்களைக் கூட அவள் சட்டை செய்யவில்லை. கூடத்திலிருந்து அப்பா பேசுகிற மாவு மிஷின் குரலையும் நண்பர்களின் குரலையும் தான் அவளால் சகிக்க முடியவில்லை. சில சமயம் குஷி தாங்காமல் அப்பா பாடிக்கூடக் காட்ட ஆரம்பித்துவிடுவார். அம்மாவின் முகத்தில் அப்போது ஒரு பேயறைந்த கிலி வந்து படர்வதைப் பார்த்தால் பாவமாக இருக்கும். நண்பர்கள் வந்தாலும் வராவிட்டாலும் அப்பாவுக்கு நாலு கறியில்லாமல் சாப்பிடத் தெரியாது. அப்பளத்தைச் சுட்டால் பிடிக்காது. காலையில் இட்டிலி அல்லது பொங்கல் காப்பி, எட்டு மணிக்கு ஒரு காப்பி, பத்து மணிக்கு இரண்டு பிஸ்கட் காப்பி, பன்னிரண்டு மணிக்குச் சாப்பாடு, இரண்டு மணிக்குக் காப்பி, நான்கு மணிக்கு டிபன் காப்பி, ஆறு மணிக்குக் காப்பி, எட்டு மணிக்குச் சாப்பாடு, பத்து மணிக்கு டீ, பன்னிரண்டு மணிக்கு ஓமப்பொடி, கீமப் பொடியோடு இஞ்சி இடித்த கொத்தமல்லிக் காப்பி. நடுநடுவே ஹோட்டல் டிபன் வேறு. எப்படி இந்த மாதிரி சாப்பிட முடிகிறதென்று அம்மா பயந்து போய்விட்டாள். வர வர அந்தப் பயம் எப்படி இனிமேல் இத்தனையும் பண்ணிப் போடப் போகிறோம் என்ற மலைப்பாக மாறிவிட்டது. ஏனென்றால், அப்பாவின் சொத்து எப்பொழுதும் குட்டிபோட்டுக் கொண்டேயிருக்கிற பணக்காரச் சொத்து இல்லை. தாத்தாவின் பிராவிடண்ட் பணம், ஊரிலிருந்த வீடு, சாப்பாட்டு நிலம் – எல்லாம் இந்தச் சாப்பாட்டிலேயே கரைந்து போய்விட்டன.

இப்போது சங்கீத வித்தவான்களுக்கு அப்பா கடிதம் எழுத ஆரம்பித்தார். உங்களைப்போல் பாடுகிறவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்று ஒரு நூறு பேருக்குக் கடுதாசு போட்டுவிட்டார். சிலர் நன்றி தெரிவிக்க நேரிலேயே வந்தார்கள். சிலரிடம் இவரே போனார். எதற்கு? கடன் வாங்க. ஓர் இருபது பேரிடம் பலித்தது. ஆனால் அதற்குள் சங்கீதக்காரர்களுக்கு அடிக்கடி கூடிப் பேசுகிற சந்தர்ப்பங்கள் இருப்பதால், “எனக்கு மட்டும் எழுதியிருக்கிறார்” என்று அவர்கள் குடுமியில் அப்பா சுற்றியிருந்த பூ வாடிவிட்டது. பயந்து கொண்டிருந்தவர்கள் இப்போது சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

நாலுகறி, கூட்டு பச்சடி, ஒரு கறியாகவும் வற்றல் குழம்பாகவும் குறைந்துவிட்டன.

“என்னடீ! உங்க அப்பாவாத்துச் சமையல் மாதிரி ஆயிட்டுது!” என்று ஆரம்பித்தார் அப்பா.

உண்மையில் அம்மா இப்போது அவள் அப்பா அம்மா வீட்டிலிருந்து தான் சாமான் சஜ்ஜாவெல்லாம் வரவழைத்துக் கொண்டிருந்தாள். அதுதான் எத்தனை நாட்கள் நடக்கும்? அவள் அப்பா அம்மா மட்டும் என்ன சிரஞ்சீவிகளா? அவர்களும் போய்ச் சேர்ந்தார்கள். அம்மாவின் அண்ணன் தம்பிகள் சும்மா இருந்தால் அவர்களுடைய மனைவிகள் சும்மா இருப்பார்களோ?

“உங்க அப்பன் மாதிரின்னு நெனச்சிண்டியோன்னேன்” என்று அம்மாவைப் பார்த்து அடிக்கடி குத்தி நெருடிக்கொண்டேயிருப்பார் அப்பா.

“உங்கப்பாவுக்கு நானும் அவர் மாதிரி பணம் பணம்னு பறக்காம இருக்கேனேன்னு குறை! பணம்னு சம்பாதிக்காவிட்டாலும் வரவா போறவா குறைச்சல் இல்லை. பத்து பணக்காரனுக்குச் சமமா காய்தா பண்றானே மாப்பிள்ளை அப்படீன்னு வேறே ஆதங்கம். செத்துப் போகிற வரைக்கும் திரிசமனும் ஜாடையுமா இதைச் சொல்லிக் காமிச்சிண்டேயிருந்தார். இப்பதான் அவர் ஆத்மா சாந்தியடைஞ்சிருக்கும். இப்பதான் நிஜமாவே நான் இல்லாமல் கஷ்டப்படறேனோல்லியோ?’ என்றார் அப்பா ஒரு நாள். அதைக் கேட்டு அம்மா பிழிந்து பிழிந்து அழுதாள். வெகுநாட்கள் பொறுத்துக் கொண்டேயிருந்தாள். கடைசியில் ஒரு நாள் திடீரென்று ஆவேசம் வந்தாற்போல் ஒரு கூச்சல் போட்டாளே பார்ப்போம். “போரும், அப்பாவைப் பத்தி இனிமே பேச வாண்டாம்!’ என்று பீறின அந்தக் கூச்சல் ஏழு வீட்டுக்குக் கேட்டது. அப்பா அப்படியே வெலவெலவென்று தொய்ந்து போனார். சற்று நேரம் பேசாமல் நின்றார். பிறகு வாசல் பக்கம் போய்விட்டார் அவர்.

அம்மா இப்போது சாதாரண மனுஷியாகிவிட்டாள். இதுவரை பார்யா தர்மம், ஸ்திரீ தர்மம், இல்லாள் கடமை என்று புத்தகங்களில் எழுதியிருக்கும் பெண்மணி மாதிரி இருந்தாள். இப்போது திடீரென்று நினைத்துக்கொண்டு சாதாரண மனுஷியாகிவிட்டாள்.

அப்போதுதான் விஜயராகவன் அப்பாவுக்குச் சிநேகிதம் ஆனார். அப்பா மாதிரி அவர் அழுக்காக இருக்க மாட்டார். அழுக்கு வேட்டி கட்ட மாட்டார். சுருக்கு சுருக்கென்று பேச மாட்டார். சும்மாச் சும்மா தின்றுகொண்டேயிருக்க மாட்டார். சிநேகிதமாயிருந்தார். அவர் ஒரு நாள் கூடத்தில் அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

“நீங்கள் எத்தனை நாட்கள் சார், இப்படியே இருக்கப் போறேள்? ஏதாவது சம்பாதிக்க வழி பண்ணிக்க வேண்டாமா?”

“எனக்கு என்னய்யா, இப்ப குறை? நான் சந்தோஷமாகத்தான் இருக்கேன்.”

“சம்பாத்தியம் ..?’

“அதுதானே? நான் உண்மைக்காகப் பாடுபடறேன் இந்த மாதிரி மனுஷாள்ளாம் பட்டினி கிடந்துதான் செத்துப் போயிருக்கா. கலையோட சரித்திரத்தை எடுத்துப் பார்த்தீர்னா தெரியும்.”

“கலியாணத்தைப் பண்ணிண்டு, ஒரு குடும்பத்தை உண்டாக்கிப் பிட்டு -”

“அதுக்கு நான் என்ன பண்ணுவேன்? அவாளுக்கு இதையெல்லாம் தாங்கிக்கிற பலமில்லேன்னா நான் என்ன செய்யகிறது?”

“நீ வாழ்ந்தே” என்றாள் உள்ளே காப்பி போட்டுக் கொண்டிருந்த அம்மா. இருபது பலம் காப்பிப் பொடியை அன்று காலையில்தான் விஜயராகவன் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போயிருந்தார்.

“கடனுக்கு லாயர் நோட்டீஸ் நாலஞ்சு பேர்கிட்டேயிருந்து வந்துட்டுதே.”

“வரட்டுமே. இருந்தால்தானே கொடுப்பேன் . . .”

“கடனைத் திருப்பிக் கொடுக்க முயற்சி பண்ண வாண்டாமா?”

“திருப்பித் தரும் யோசனையோடு நான் வாங்கலியே விஜயராகவன்! பணம் வாங்கினால் திருப்பிக் கொடுத்துடணும் என்கிற நேர்மை எல்லாம் பாமர மனுஷாளுக்கு ஏற்பட்ட சட்டமில்லையோ?”

“உவா” என்று உள்ளே குமட்டினாள் அம்மா.

“பெரிய கலைஞர்கள், மேதாவிகள் எல்லாம்தான் இதெல்லாம் பார்க்க மாட்டார்கள் என்று சொல்லுகிற வழக்கம்.”

“அப்படி இங்கே ஒண்ணும் இல்லேன்னு சொல்றீமாக்கும்! ஒப்புக்காட்டா என்னய்யா? நான் கலைஞன் இல்லேன்னு ஆயிடுமா?” என்றார் அப்பா.

“இதைக் கொண்டு மாமாகிட்ட கொடுத்துட்டு வா” என்று காப்பியைக் கொடுத்தாள் அம்மா. கொடுத்துவிட்டு வந்தேன்.

“ஐயோ, ரதீ! சர்க்கரையே போடலியே!” என்று அப்பாவின் குரல் கத்திற்று. சர்க்கரை டப்பாவை எடுத்ததும், “வைடீ, கீழே!” என்று உருட்டி விழித்தாள் அம்மா. உடனே கூடத்து நிலையண்டை போய் நின்று கொண்டாள். “கலைஞருக்குச் சர்க்கரை என்னத்துக்கு?” என்று ஒரு சிரிப்புச் சிரித்தாள். இதைச் சொல்லச் சிரிப்பானேன் என்று குழம்பிய எனக்கு அந்தச் சிரிப்பைக் கேட்டு நடுநிசியில் இருட்டின நிசப்தத்தில் ஏதோ உறுமலைக் கேட்பதுபோல் இருந்தது. அம்மா உள்ளே போய்விட்டாள்.

ஒரு நாள் நான் சமையல் அறைக்கு அப்பால் உட்கார்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்தேன். விஜயராகவ மாமாவோடு அம்மா கூடத்தில் பேசிக்கொண்டிருந்தாள். அரை மணி கழித்து அப்பாவின் குரல் கேட்டது. அம்மா உள்ளே வந்தாள்.

“கழுகுக்கு மூக்கிலே வேர்க்கிறாப்பல இருக்கே இது?” என்று அப்பாவின் குரல் கேட்டது.

“என்ன?” – விஜயராகவ மாமாவின் குரல்.

“நான் இல்லாத சமயம் பார்த்தே வறீமேன்னேன்?”

“வந்தா என்ன?”

“வந்தா என்னவா! . . . கெட் ஔட்.” – அப்பாவின் குரல். அம்மா நிலையண்டை விரைந்தாள். நானும் போய் நின்றேன். விஜயராகவ மாமா நாற்காலியை விட்டு எழுந்திருக்கவில்லை. அப்பாவையே அசையாமல் பார்த்துக்கொண்டிருந்தார். மரவட்டையையோ, எட்டுக்கால் பூச்சியையோ பார்க்கிற மாதிரி இருந்தது. அப்பா அம்மாவைப் பார்த்தார். விறுவிறுவென்று செருப்பைக்கூட மாட்டிக் கொள்ளாமல் வாசலில் இறங்கிப் போய்விட்டார். விஜயராகவ மாமா படத்தில் எழுதின சமுத்திர அலை மாதிரி உட்கார்ந்திருந்தார். ஐந்து நிமிஷங்கள் கழித்துச் சமுத்திர அலை அசைந்தது. எழுந்து வெளியே போய்விட்டது.

ஆறு மணிக்கு அப்பா வந்தார். சமையல் அறைக்கு வந்தார். “ஓகோ நான் வருவேன்னு தெரிஞ்சு போயிட்டுதாக்கும்?” என்று பொதுவாகச் சுவரைப் பார்த்துக்கொண்டு சொன்னார்.

“இந்தக் கிறுக்குப் பேச்செல்லாம் வாண்டாம். இன்னிக்கு ரண்டிலே ஒண்ணு தீரணும்” என்றாள் அம்மா.

“அப்படியா? . . . என்னத்துக்கு விஜயராகவன் வெறுமனே நான் இல்லாதபோது வர்றான்?”

“என்னத்துக்கா? சொல்லட்டுமா?” – என்று ஒரே ஒரு வாய்க்கடையால் சிரித்தாள் அம்மா.

“பயமுறுத்தறியே.”

“அது உங்க வேலைன்னா. நான் பாடகன் இல்லை. உங்களைக் கண்டு பயப்படறதுக்கு. நீங்கதான் இப்ப பயப்படப் போறேள்.”

“சும்மா மிரட்டாதே. அவன் எதுக்கு வரான் அதைச் சொல்லு, கிடக்கட்டும்.”

“பாஷாங்க ராகத்துக்கு வேற ஸ்வரம் எதுக்கு வரும்?”

” – “

“எதுக்கு வரும்னு கேட்டால் சொல்லுங்களேன்.” அப்பா நிமிர்ந்து ஒரு நிமிஷம் பார்த்தார். பார்த்துக்கொண்டேயிருந்தார்.

“சொல்லுங்களேன்.”

“ரக்திக்கு” என்று மெதுவாகச் சொன்னார் அப்பா.

“இப்ப புரிஞ்சுதா? அந்நிய ஸ்வரம் எதுக்கு வரும்? ராகத்துக்கு ரக்தி கொடுக்க வரும். அதை இன்னும் போஷிக்க வரும். இப்ப நாலு மாசமா குடும்ப போஷணை விஜயராகவன்னாலேதான் நடக்கிறது. நாலு மாசமா நீங்க திங்கிற அரிசி, குடிக்கிற காப்பியெல்லாம் அவன் வாங்கிப் போட்டுதுன்னேன். இத்தனை சாஸ்திரம் படிச்சும் வீட்டிலே இருக்கிற ராகமே புரியலெ” என்று அம்மா தோளில் கன்னத்தை இடித்துக்கொண்டாள்

அப்பா முகத்திலும் தலையிலும் ஓங்கி ஓங்கிப் போட்டுக்கொண்டார். நான் தடுக்கப் போனேன். “நில்லு” என்று அதட்டினாள் அம்மா. அப்பா நோக நோகப் போட்டு கொண்டுவிட்டு, “நீ உன் பொண்ணு எல்லாம் பாஷாங்கம் தாண்டி, கிராதகி” என்று பல்லைக் கடித்துவிட்டு மறுபடியும் வாசலுக்குப் போய்விட்டார்.

அப்பாவுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. “பாஷாங்க ராகம் பாடாதேள். குடும்பத்துக்குக் கெடுதல் – கெடுதல்” என்று வாசலில் நின்று கூப்பாடு போட்டுக்கொண்டிருந்தார். அழுக்கு வேட்டியைக் கிழித்தும் கொள்ளத் தொடங்கிவிட்டார். தற்செயலாக வடக்கேயிருந்து வந்திருந்த அப்பாவின் அத்தான் வீட்டில் இருக்கிற நிலைமையைப் பார்த்தார். அவரை வடக்கே தாம் வேலை பார்க்கிற ஊருக்கே அழைத்துப் போய்விட்டார். மந்திரவாதிகளைக் கூப்பிட்டுப் பார்த்துப் பயனில்லாமல் பைத்திய ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டார். அப்பாவுக்குத் தெளியவில்லையாம். பைத்திய ஆஸ்பத்திரியிலேயே ஐந்து வருடங்கள் இருந்து அவர் அங்கேயே இறந்துவிட்டதாகத் தெரிந்தது. அப்பாவின் அத்தானுக்கு அவர் மேல் மிகவும் பிரியம். அத்தை பிள்ளைகள் அப்படித்தானிருப்பார்கள். அவர்தான் பத்திரிகைக்கு – அவர் காலமான செய்தியைக் கொடுத்திருப்பார் போலிருக்கிறது. எங்களுக்குக்கூட அப்படித்தான் சேதி தெரிந்தது. நீங்கள் போட்ட அனுதாபக் கடுதாசு எங்கெங்கோ சுற்றித் தாறுமாறாக முத்திரை வாங்கிக் கொண்டு முந்தாநாள்தான் வந்தது. அப்பாவை அவர் அத்தான் அழைத்துப்போன அடுத்த மாசமே நாங்கள் பம்பாய் வந்துவிட்டோம்.
இத்தனை நீளமாகக் கடுதாசி எழுதினதற்கு மன்னிக்க வேண்டும். மேதைக்கும் பைத்தியத்துக்கும் இடையே உள்ள வரம்புக் கோடு மிக மெல்லியது என்று சொல்லுகிறது வழக்கம். ஆனால் கோடே இல்லாத மாதிரி நீங்கள் குழம்பிவிட்டதால் அம்மாவின் உத்தரவுப்படி எழுதினேன்.

பெற்ற அப்பாவைப் பற்றி இத்தனை கேவலமாக எழுதக்கூடாது. என்ன செய்கிறது? வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்த அப்பாவிடம் நானும் தம்பியும் பட்ட வேதனை..

இப்படிக்குத் தங்கள்,

ரதிபதிப்ரியா

பின்குறிப்பு: அம்மா கோரேகானிலிருந்து இன்று காலை வந்தாள். இந்தப் பதிலைக் காட்டினேன். அவளும் இரண்டு வார்த்தை எழுத விரும்புகிறாள்.

நமஸ்காரம்… குழந்தை சொன்னதெல்லாம் சரிதான். ஆனால் பலராமனுக்குச் சித்தம் கலங்குவதற்கு முன்னால் ஒன்று நடந்தது. என்மேல் அவ்வளவு சந்தேகப்பட்டுக் கோபமும் கலக்கமுமாகப் போனவர் சாப்பாட்டுக்கு மட்டும் வேளா வேளைக்கு வந்துகொண்டிருந்தார். பிறகுதான் நான் எழுதி அவருடைய அத்தானை வரவழைத்தேன் . . குழந்தை சொன்னது ரொம்ப சரி. என் மாமனார் செய்த பாபத்தை அவர் தலையில் சுமந்து கொண்டு அலைந்தார். அதற்கு நாங்கள் எவ்வாறு பிணையாக முடியும்?

தங்கள்,

விஜயா விஜயராகவன்.

**
நன்றி : கல்கி, சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம்

‘கேட்காவிட்டால் கொடுக்காது!’ – தி. ஜா

‘நளபாகம்’ நாவலின் கடைசியில் , ஜோஷியர் முத்துசாமி எழுதும் இந்த அற்புதமான கடிதம் வருகிறது. அந்தப் ‘பி.கு’ நமக்காகத்தான்! வாசியுங்கள். – AB

*

thi_janakiraman - by - adhimoolam

ஆப்தன் ஸ்ரீகாமேச்வரனுக்கு,

அம்பாளின் அருள் பூர்ணமாகக் கிட்டவேணும். நீர் நாளைக் காலையில்தான் ஊருக்குப் புறப்படுவீர். நான் ரொம்ப அதிகமாய்ப் பேசிவிட்டேன். அதையெல்லாம் பற்றி யோசித்தேன். தூக்கம் வரவில்லை. எழுந்து உட்கார்ந்து எழுதுகிறேன். நான் சன்யாசிகள் சங்கராச்சாரிகள் – முக்கியமாக, ஆதிசங்கரர் எல்லாரையும் தூஷிப்பதாக அபிப்ராயம் சொன்னீர்.

நான் தூஷிக்கவில்லை. ஆதிசங்கரர் உலகம் பிரமிக்கிற மேதைதான். அவர்கள் எல்லாரும் சொந்த ஆசாரத்தில் நல்லவர்கள்தான். நல்ல சீலர்கள், அன்புள்ளவர்கள்தான். ஆனால் ஜனங்களை எல்லாம் ஏழைகளாகவும் கையாலாகாதவர்களாகவும் காரியத்தில் ஊக்கமில்லாதவர்களாகவும் அடிக்கிற ஒரு சம்பிரதாயத்திற்குக் கை கொடுத்து அது நீடிக்குமாறும் ஸ்தாபிக்கவும் உதவி செய்துவிட்டார்கள். அவர்களுக்கு ஏதும் வேண்டாம் என்றால் மற்றவர்களும் அந்த மாதிரி நினைப்பவர்கள் என்று அர்த்தமா? இந்த உலகம் சுபிட்சமானது. அம்பாள் என்ற சக்தி எதையும் கொடுக்கக் காத்துக்கொண்டிருக்கிறது. எதைக் கேட்டாலும் கொடுக்கும். ஆனால் கேட்க வேண்டும். கேட்காவிட்டால் கொடுக்காது. கேட்காதவர்களுக்கும் கொடுக்காது. நான் நாய், பேய் ஏழையாகவே இருப்பேன் என்று நினைத்தால் நீ ஏழையாகவே, நாயாகவே, பேயாகவே இரு என்று சொல்லி சும்மா இருந்துவிடும். எனக்கு ஒன்றும் வேண்டாம், சுகம் வேண்டாம், ஆண்டியாக இருப்பேன், எளிமைதான் பெருமை, இன்பம் என்றால் நீ ஆண்டியாக, ஏழையாக இரு என்று விட்டுவிடும். இந்த உலகத்தில் எத்தனை கோடி ஜீவர்களுக்கும் வற்றாமல் ஆகாரம், வீடு, துணிமணி, சுகங்கள் எல்லாம் எல்லையில்லாமல் நிரம்பிக் கிடக்கின்றன. அவை கேட்டால்தான் கிடைக்கும். கேட்டால்தான் அவைகளைப் பெறும் வழியையும் அந்த சக்தி கொடுக்கும். சுகமாக வாழ்வது குற்றம் என்றால், சரி அப்படியே ஆகட்டும் நீ ஒற்றைத் துணியோடு கஞ்சிகுடித்து  குற்றமற்று எலி வளையிலேயே குடியிரு என்று சொல்லும், சுகத்தை அடைகிற மார்க்கத்தைக் காட்டாது. நம்முடைய வேதங்கள் எல்லாம் எல்லா மனிதர்களும் சுகமாக வாழ வேண்டும், சுகமாக வாழ விடு என்று தெய்வத்தைப் பாடுகின்றன. ஆனால் நம்முடைய கச்சேரிகளிலும் பஜனைகளிலும் நான் நாய், பேய், ஏழை, என்று கதவிடுக்கில் சிக்கின மூஞ்சுறுகள் போல கத்துகிறோம். கதாகாலேக்ஷபங்களிலும் கத்துகிறார்கள். நாங்கள் எல்லாம் தீரர்கள், சத்தியங்களைப் பார்க்கப் பிறந்திருக்கிறோம், சௌக்யமாக வாழ்ந்து அம்பாள் படைத்த சகலத்தையும் அனுபவிக்கப் பிறந்திருக்கிறோம், கொடு என்றால் அம்பாள் வேலைக்காரி மாதிரி கொடுப்பாள். ஓடி உழைப்பாள். அத்தனை சுகங்களையும் கண்டுபிடித்து அனுபவிக்கிற புத்தியையும் வழியையும் காண்பிப்பாள். சக்தியை வழங்குவாள்.

அம்பாளைப் பார்த்து ஒன்றும் கேட்காதே – கிடைத்ததை வைத்துக்கொண்டு போதுமானாலும் போதாவிட்டாலும் இதுதான் நாம் கொடுத்து வச்சது என்று வாயை மூடிக்கொண்டு சும்மா இரு என்று வாயை அடைத்துவிட்டார்கள் இந்த சன்யாசிக் கூட்டங்கள். அதனால்தான் நான் உம்மிடம் உஷ்ணமாகக் கத்தினேன். வித்யாசமாக நினைக்கவேண்டாம். எனக்கு யார் மேலும் கோபம் இல்லை. இந்த ஆண்டிகள் பலநூறு ஆயிர வருஷங்களாக நம் மனசையும் ஆண்டியாக்கிவிட்டார்களே என்றுதான் எனக்கு வருத்தமாயிருக்கிறது. நீர் அந்த மாதிரி ஆண்டிப்பேச்சு பேசவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அடுத்தபடியாக, நான் கேட்டுக்கொண்டபடி இங்கு என்னோடு வந்து இரும். மறுபடியும் கேட்டுக்கொள்கிறேன். நீர் எனக்குப் பிள்ளையாகவும், சகோதரனாகவும், சில சமயம் குருவாகவும் சில சமயம் சீடனாகவும் ஆப்தசிநேகிதனாகவும் இருக்கலாம். தயங்காமல் வாரும். இல்லாவிட்டால் அடிக்கடி வந்து போய்க்கொண்டாவது இருக்கவேணும். ரங்கமணியம்மாள் குடும்பத்திற்கு எங்கள் பிரியமான விசாரணைகளைச் சொல்லவேணும். இப்படிக்கு உம்முடைய ஆப்தன் அம்பாள் திருவடி முத்துசாமி.

பி.கு : நாமெல்லாம் ஏழைகளாகவும் சோப்ளாங்கிளாகவும் இருப்பதற்காக நம்மைப் படைக்கவில்லை அம்பாள். அட முட்டாள்களே, குருடர்களே செவிட்டுப் பொணங்களே என்று அந்த மாதிரி இருப்பவர்களைப் பார்த்துச் சிரிக்கும்.
*

நன்றி : காலச்சுவடு, சென்ஷி
தி. ஜா ஓவியம் : ஆதிமூலம்

தொடர்புடைய சுட்டி: ‘நளபாகம்’ மஜீதுபாய்

‘நளபாகம்’ மஜீதுபாய்

தி. ஜானகிராமன்  எழுதிய ‘நளபாகம்’ நாவலை மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். ‘கணையாழி’யில் தொடராக வந்த காலத்தில் படித்தது. அதிலிருந்து கொஞ்சம் (இருக்கிறேன் என்று சொல்ல காலாட்ட வேண்டுமே!)

பத்ரிநாத் / பதரிகாச்ரமம் புனித யாத்திரை போகிற ஒரு குழுவினருக்கு டெல்லியில் வழிகாட்டியாக வருகிற இந்த அப்துல் மஜீத் , முதலில் குறும்புக்காரராகத் தெரிந்தார். ‘கோச்சுக்க மாட்டீங்களே, நீங்க நாலு கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்றாங்களே’ என்று ஜோஷியர் முத்துசாமி கிண்டலாகக் கேட்பதற்கு உடனே பதில் : ” இந்த மோட்டார் மணிக்கு நூறு மைல் போகலாம்னு இங்க காமிச்சிருக்கு. அந்த மாதிரிதான்!”

அட, ‘தாக்கத்’ (வலிமை) ! சிரிப்பு வந்துவிட்டது. அப்புறம் வருகிறது நான் ரொம்பவும் ரசித்த பத்தி. வியக்க வைக்கிறார் பாய். வாசியுங்கள். நன்றி – AB
————-

thija-nalabagam-kcபத்தேப்பூர் ஸிக்ரிக்குப் போய்விட்டுத் திரும்பி வரும்போது மஜீத் அதிகமாகப் பேசவில்லை.

“நம்ம பேச்சைக் கேட்டுக் கேட்டு அலுத்துப் போய்ட்டாப்பல இருக்கு மஜீது பாய்க்கு” என்று கிண்டினார் முத்துசாமி. “ஏம்ப்ளா?”

“அலுத்துப் போகலெ. (சுலோச்சனாம்மா சொன்னாகள்ள, அப்பப்ப அதை நினைச்சுக்கிடறேன். தாஜ்மகாலெப் பாத்தாச்சு அழகாயிருக்கு ஆச்சரியமாயிருக்கு சரி – அப்புறம் சும்மா என்ன பேசுறதுக்கு
இருக்குன்னாங்கள்ள – அதை நினைச்சுக்கிடறேன். அம்மா சொன்னதிலே எத்தினியோ அடங்கியிருக்கு! தாஜ்மகால் கட்டுறான். பெரிய கோவில் கட்டுறான் பெரிய பெரிய அரண்மணையெல்லாம் கட்டுறான் சரி. அண்ணாந்தா களுத்து நோவும். அப்படியெல்லாம் கட்டுறாங்க. கட்டட்டும். அதிலெ என்ன ஆச்சரியப்படும்படியா என்னா ஆயிரிச்சி! வெறும் மண்ணு எப்படி சலவைக் கல்லாச்சு? வெறும் மண்ணும் கல்லும் எப்படி வைரமும் பச்சையும் கெம்புமா ஆச்சு? இக்கினியூண்டு விரை எப்படி மண்ணை இடிச்சுத் தள்ளிகிட்டு முளையா வருது? அது எப்படி இலையா ஆவுது? நிமிர்ந்து வளருதே. அதைவிடவா ஆச்சரியம் இருக்க முடியும்! முளை வர்றதுக்கு முன்னாலெ தளம் அடிச்சாப்பல இருக்கிற தரையிலே விரிசல் காணுது பாருங்க. இக்கினியூண்டு முளையைக் கண்டு தரையே பயந்து விரிஞ்சி குடுக்குதே அதைவிடவா ஆச்சரியம்! அது பயந்துகிட்டு விரிஞ்சி குடுக்குதா! இல்லெ ஆண்டவன் செடியா வர்றாருன்னு பக்தியோட ஆச்சரியமா, ‘ஏலே’ ஒதுங்கிடுவோம்டா’ன்னு விரிஞ்சி குடுக்குதா? அதைத்தான் நினைச்சிக்கிட்டு வர்றேன். ஒரு புல்லு எப்படி நிலத்தைக் கீறிக்கிட்டுக் கிளம்புதுன்னே நமக்குத் தெரிஞ்சுகறதுக்கில்லெ. பத்தாயிரம் பேர் சேந்து இருபது வருசம் முப்பது வருசத்திலெ இந்த மாதிரி ஒரு கட்டடத்த கட்டிப்பிடலாங்க. ஒரு புல்லை உண்டாக்கிடறேன்னு சொல்லுங்க பார்ப்பம். அதான் ஆச்சரியப்பட்டாச்சு. அப்புறம் என்னன்னு சொன்னாங்கள்ள – அதோட அர்த்தமே இதுதான். கண்ணாடியிலெ நம்மைப் பாத்துக்கறதுக்கப்பவே ஆச்சரியா இருக்கு. ஒரு தரம் பார்த்தா மினுமினுன்னு இருக்கு உடம்பு. இன்னொரு நாளைக்கு கண்ணுக்குக் கீள ரப்பை கட்டி சோந்து கிடக்கு. நாம பேசறோம். எங்கேயோ இருக்கிறவங்களை நெனக்கிறோம். திடீர்னு குத்தாலத்துலெ வீட்லெ உக்காந்து எங்கம்மாவோட நான் பேசிக்கிட்டிருக்காப்பல இருக்கு . நானே
மனசுக்குள்ளார அங்க உக்கார்ந்து அவங்களோட ரொம்ப விவரமா பேசிக்கிட்டிருக்காப்பல. அவங்க பேசறாப்பலியும் நான் பதில் சொல்றாப்பலியும் இருக்கு. ஒவ்வொரு வார்த்தையும் காதிலே கேக்குது. இதைவிடவா ஆச்சரியம் இருக்க முடியும்!..” என்று பேசிக்கொண்டே வந்த மஜீத், தேய்ந்தாற்போலப் பேச்சை நிறுத்திக்கொண்டார். “இப்ப ஐயாவுக்கு நான் பேசிக்கிட்டு வர்றாதே அலுப்பாயிருக்கும், போதுமா?” என்று சிரிக்க வேறு சிரித்தார்.

thija-img1

(பக்: 52-53)

*

படித்துக்கொண்டே வந்த எனக்கு வேறொரு ஆச்சரியம் அடுத்த பக்கத்தில் இருந்தது. நாடி ஜோஷ்யம் உண்மையா என்று முத்துசாமியிடம் மஜீத்பாய் கேட்பதற்கு வரும் பதில் : ” இதுவும் ஒரு ஆச்சரியம்னு நெனைச்சுக்கிட்டு சும்மா இருங்களேன். நான் எல்லாத்துக்கும் ஒரு பதில் வச்சிருக்கேன். உண்டுன்னு சொல்லலாம், இல்லென்னு சொல்லலாம். உண்டுன்னு நம்புறவங்களுக்கு உண்டு. இல்லென்னு நினைக்கிறவங்களுக்கு இல்லெ.”

“அது எப்படிங்க?”

“ஆமா. இப்ப நான் மஜீதைப் பார்த்தப்புறம், மஜீத்னு ஒருத்தர் இருக்கார். ரஹீம்பாய் மச்சினன். அவர் ஆக்ராவிலே வியாபாரம் பண்றார். தமிழ் கைடாவே ஆயிட்டார். தில்லக்கேணி உருது பேசுவார் – இப்படியெல்லாம் தெரியறது எனக்கு. ஆனா உங்களைப் பார்க்காம எங்கியோ நாகூர்லெ இருக்கிற ஆளுக்கு மஜீத் யாரு, என்ன பண்றார்னு எதுக்குத் தெரியணும்? அவர் இங்க வந்து, உங்களைத் தெரிஞ்சுக்க நேர்ந்ததுன்னா, மஜீத் உண்டு. இல்லென்னா அவருக்கு மஜீத் இல்லெ. அவ்வளவுதான்.”

————

காரைக்குடி வில்லங்கம் மஜீதுக்கும் எனக்கும் கண்ணை இருட்டிவிட்டது. அது ஏன் நாகூர் உதாரணம்?! (வேறொரு பக்கத்தில் மெக்கா – அஜ்மீர் – நாகூர் என்ற வரிசையில் சொல்கிறார். போயிருப்பாரோ? )

“அட, இன்னக்கி பகல்தான் உங்க ‘உயிர்த்தல’த்துல வர்ற மீஜான் கதை பத்தி ஆசிப் சொல்லிக்கிட்டிருந்தார், அதுல வர்ற மஜீத் கேரக்டர் செம சிரிப்புன்னு. நான் உங்களோட பழகுறதுக்கு முன்னாலேயே நீங்க எழுதுன கதை அது. மஜீத் ரொம்ப நல்லவர்னு வேறு அதுல சொல்லியிருக்கீங்க!” என்று வியந்தார் மஜீத்.

‘கதையில பொய் சொல்லுவேன்” என்றேன்!
*

நன்றி : காலச்சுவடு, சென்ஷி

*

தொடர்புடைய சுட்டி:
தி.ஜானகிராமன் – அழியா நினைவுகள் : தாஜ்

“புவனேச்வரிதான் காப்பாத்தனும்” – தி. ஜானகிராமன்

‘எது மாத்த முடிஞ்தது, எது மாத்த முடியாததுண்டு தெரிஞ்சிக்குற அறிவும் தாங்குற ஒரு இதயமும் வந்துட்டா , வர்ற துன்பம் துன்பமாகவே இரிக்காதேங்க’ என்று எங்கள் ஹஜ்ரத் சொல்வது ‘கிணறு’ குறுநாவலில் வரும். ஹஜ்ரத் ஜானகிராமன் இதையே வேறுமாதிரி சொல்கிறார். வாசியுங்கள். – AB

*

‘செம்பருத்தி’ நாவலிலிருந்து…

சட்டநாதன் கேட்டான் : ‘மனுசனுக்கு துக்கம் வராமலிருக்க என்ன செய்யனும்?’

சண்பகவனம் சிரித்தார், பிறகு சிரிப்பு மறைந்தது. அவனை உற்றுப் பார்த்தார். “துக்கம், சுகம் எல்லாம் வரது போறதுமாகத்தான் இருக்கும். அதைத் தடுக்கிறக்கில்லே. அதுகளைத் தாங்கிக்கிறதுக்குத் தயார் பண்ணிக்கிட்டா அதுகள் வரதையும் போறதையும் உடம்பு கலையாம பார்த்துக்கிட்டு நிற்கலாம்” என்றார் அவர். பிறகுதான் “புவனா வல்லியா?” என்று கேட்டார்.

“எல்லாரும் கோயிலுக்குப் போயிருக்காங்க”

“ம்.. ஏன் இப்படி மனசுக்கு – கடையிலே யாராவது ஏதாவது செய்தானா?”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லே. என்னமோ எனக்குத்தான் திடீர்னு ஒரு துக்கமா வந்தது. கடையைச் சீக்கிரம் கட்டிட்டு இங்கே வந்தேன். இப்ப தேவலை.”

“இப்ப தேவலையில்ல?”

“இப்ப சரியாயிடுத்து.”

“புவனேச்வரிதான் காப்பாத்தனும். மனுசங்க வருத்தத்தைக் கொடுக்கிறாங்க. கொடுக்க அவங்களுக்கு இடம் கொடுக்காம நடந்துக்கிட்டா சரியாப் போயிடும். முதல்லே கேட்டீங்களே, துக்கம் வராம இருக்கிறதுக்கு என்ன வழின்னு, அதுக்கு பதில் சொல்றேன். ஆனா, காரணமில்லாம கஷ்டத்தைக் கொடுப்பவங்களை என்ன செய்ய முடியும்? கஷ்டத்தை தாங்கிக்கணும். அவங்களுக்கு நல்ல புத்தி வரனும்னு ஆண்டவனைத்தான் கேக்கணும்.”

« Older entries