அடிக்கோடுகள் (சிறுகதை) – திவ்யா

எழுத்தாளரின் பெயரைப் பார்த்ததுமே எழுநூறு பேர்கள் புதிதாக இணைந்தார்கள் – அமீரக வாசிப்பாளர்கள் குழுமத்தில். பெரிதாக பரீட்சையெல்லாம் ஒன்றும் இல்லை, குமுதம் ஆனந்தவிகடனில் ஒரு துணுக்கு எழுதியிருந்தால் போதும். இணைந்ததும்தான் தெரிகிறது திருத்தமான ஒரு தாடி ‘திவ்யா’வுக்கு உண்டென்று.  ஓடியேவிட்டார்கள். ‘வல்லினம் நீ உச்சரித்தால்’ என்ற கவிதைத்தொகுப்பை வெளியிட்டிருக்கும் மிஸ், மன்னிக்கவும், தம்பி திவ்யாவின் முதல் சிறுகதை இது. ’ஒட்டக மனிதர்கள்’ தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. வாழ்த்துகிறேன்.

கதைகளை அனுப்பிய ‘கானல்’ ஆசிப்மீரானுக்கு ஸ்பெஷல் நன்றி.- AB

*

அடிக்கோடுகள்  – திவ்யா

காற்று படித்துக் கொண்டிருந்த பக்கத்தை எடுத்துப் பார்த்தான் நித்திலன். ஒரு கவிதை அது. கவிதை முழுக்க கூர்மையாக சீவப்பட்ட பென்சிலால் நைசாக அடிக்கோடுகள் இடப்பட்டிருந்தன. ஒரு வரி இரண்டு வரியென்றால் சரி, கவிதை முழுக்கவே அடிக்கோடுகள். இது ஒரு மிகச்சிறந்த கவிதை தான் என நித்திலன் முடிவுசெய்து கொண்டான். ஏனெனில், இதற்கு முன்னர் இந்த புத்தகத்தை நூலகத்தில் எடுத்துப் படித்தது நித்திலனின் நண்பன் வாசன். வாசன் ஒரு தேர்ந்த வாசகன், கூடவே எழுதவும் செய்கிறவன். அவன் தான் நித்திலனுக்கு இந்த புத்தகத்தை பரிந்துரை செய்தவன். நித்திலனுக்கு கவிதையை விட வாசன் மீது நம்பிக்கை இருந்தது. அவன் அடிக்கோடுகளை படிக்க ஆரம்பித்தான். உண்மையில் அடிக்கோடுகளைப் படிப்பது என்பது நித்திலனுக்கு மிக சுவாரசியமான ஒன்று. நண்பனின் காதலிக்குக் கொடுக்கச் சொல்லிக் கொடுக்கும் கடிதத்தை நான்கு சுவற்றுக்குள் இரகசியமாக படித்து இன்புறுவதைப் போன்றது. அப்படித்தான் நித்திலன் எப்போதும் செய்து வந்தான். பாடப்புத்தகங்களில் இருக்கும் அடிக்கோடுகளை மட்டும் கண்டு கொள்ள மாட்டான். அவை மாடு மென்று துப்பிய வைக்கோலின் காயும் ஈரம் போல இருக்கும் அவனுக்கு.

மெதுவாக தேநீரை உள்ளுறுஞ்சியபடி அடிக்கோடுகளைத் தீண்டினான். உதட்டு மிருது என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். அடிக்கோடுகளைத் தீண்டுவது நித்திலன் அடிமையான ஒரு பழக்கம். வகுப்பில் ஏதாவது ஒரு பெண் படிக்கத் தரும் புத்தகத்தில் அவள் அடிக்கோடிட்ட வரிகளை தானும் ரசித்ததாக கதை விடுவான். பெண்களிடம் அலைபேசி எண் வாங்குவதற்கு நித்திலன் பயன்படுத்தி வந்த ஒரு யுக்தி இது. ஒருவேளை உண்மையாகவே அப்படி ஒரு வரியை ரசித்து விட்டானானால், தன்னையும் அந்த பெண்ணையும் அமர காதலர்களாக்கி கற்பனையில் ஒரு வாழ்வை கட்டமைக்கத் தொடங்குவான். அந்த பெண்ணிடம் மட்டும் ஏனோ அலைபேசி எண்ணை கேட்க மாட்டான். அதிகம் கூச்சப்படுவான்.

நித்திலன் வாசனின் அடிக்கோடிட்ட ஒரு வரியை வாசித்தான்

“கைகளசைத்துக் கால்களுதைத்துக்

கூடத்தில் கிடக்கும் சிசு

மிழற்றுகிறது ஒரு சொல்லை”

இதில் மிழற்றுகிறது என்ற சொல்லை வாசன் அடிக்கோடிட்டிருந்தான். மிழற்றுகிறது, மிழற்றுகிறது, மிழற்றுகிறது நித்திலன் திரும்ப திரும்ப சொல்லிப் பார்த்தான். மிலற்றுகிறது, மிளற்றுகிறது, மிழற்றுகிறது என்றும் ஒருமுறை சொல்லிப் பார்த்தான். தமிழில் இந்த ல,ள வை சொல்லி சரியான ழ வை உச்சரித்தல் என்பது குடிகாரன் கொஞ்ச கொஞ்சமாக போதையிலிருந்து தெளிவடைவதை போலிருந்தது அவனுக்கு அல்லது தெளிவிலிருந்து போதைக்கு போவது போல் இருந்தது. நித்திலன் மிழற்றிக் கொண்டே இருந்தான். குழந்தை என்ன சொல்லை மிழற்றியிருக்கும், அதுவும் நம்மைப் போல் மிழற்றுகிறது என்ற சொல்லைத்தான் மிழற்றியிருக்கும். வேறு எதை மிழற்றியிருக்க போகுது அது, சின்னக் கழுதை.

“சமையலறையில்

பணி முனைந்திருக்கிற அம்மா

அச்சொல்லையே நீள வாக்கியங்களாக்கிப்

பதில் அனுப்புகிறாள்”

இந்த வரிகள் முழுக்கவும் அடிக்கோடிடப்பட்டிருந்தன. சமையலறையில் பணி முனைந்திருக்கிற அம்மா என்றதும் வாசனுக்கு அம்மாவின் ஞாபகம் வந்திருக்கும். அதனால் தான் வரி முழுக்க அடிக்கோடிட்டு விட்டான் போலும். வாசனுக்கு அம்மா கிடையாது. சமையலறையில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்துக் கொண்டாள். அப்பா கெட்டவர். நித்திலன் அதிசயித்துப் போனான் வாசனால் எப்படி இந்த வரிகளை அடிக்கோடிட முடிந்தது. சமையலறையில் அம்மா என்றதுமே அம்மாவின் தற்கொலை நாள் அவன் நினைவில் வந்திருக்காதா? வந்திருந்தால் கவிதையை இந்த வரியோடு மூடியிருப்பானே! சமையலறையில் அம்மா என்பதை என்னவென்று நினைத்து வாசித்திருப்பான். ஒருவேளை மிழற்றிய குழந்தையை அவனாகவும், அம்மாவை இருபத்தி மூன்று வருடத்துக்கு முந்திய சமையலறையிலும் வைத்து இந்த வரிகளை படித்திருப்பானா? நித்திலனுக்கு குழப்பமாக இருந்தது. இல்லை ஒருவேளை இப்படியும் இருக்கலாம், அந்த அம்மா ஏன் வாசனின் அம்மாவாகத் தான் இருக்க வேண்டும். அது மகேஷ்வரியின் அம்மாவாகவும் இருக்கலாம் தானே. மகேஷ்வரி வாசனின் காதலி. மகேஷ்வரியை குழந்தையாக நினைத்து ஒரு காதலன் என்ற முறையிலும் அவன் இந்த வரியை ரசித்திருக்கலாம் தானே. சமையலறையில் அம்மா என்ற வரியை அவன் இப்படித்தான் கடந்திருப்பானா.

நித்திலன் பிஸ்கட்டையும் தேநீரையும் மாறி மாறி ருசித்தபடி அடுத்த அடிக்கோட்டை வருடினான். அந்த அடிக்கோடு ஓவியத்தின் தீற்றல் போல இருந்தது.

“கடவுளுக்கும் புரியாத அவ்வுரையாடலைக் கிரகிக்கக்

கூடத்துச் சன்னலுக்கும்

சமையலறைச் சன்னலுக்குமாய்

கிளைகளின் வழியே ஓடி ஓடி

கவனிக்கிறது அணில்”

இந்த வரி மட்டும் அதிக கருமையுடன் அடிக்கோடிடப்பட்டிருந்தது. கவிதையிலேயே வாசனுக்கு மிகப் பிடித்த வரி இதுவாகத் தான் இருக்கும் போல. அதற்கெதுக்கு இவ்வளவு ஆவேசத்துடன் அடிக்கோடிட வேண்டும்.

‘உன்னை எவ்வளவு விரும்புகிறேன்

என்பதை சத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது’ என்ற சபரிநாதனின் வால் தொகுப்பிலுள்ள வரி நித்திலனுக்கு நினைவில் வந்தது. கடவுளுக்கும் புரியாத உரையாடல் என்னவாக இருக்கும். அதை ஏன் இந்த அணில் பிள்ளை கூடத்துச் சன்னலுக்கும் சமையலறை சன்னலுக்கும் மாறி மாறி ஓடிக் கவனிக்கிறது. கூடத்துச் சன்னல் தான் நமது அலுவலக வாழ்வா? சமையலறைச் சன்னல் நமது வீடா? அதை ஓடி ஓடிக் கவனிக்கிற அணில் பிள்ளை நாம் தானா. இந்த இடத்தில் மட்டும் நித்திலன் நான் என்று இல்லாமல் நாம் என்று எண்ணிக் கொண்டான். நான் மட்டும் ஏன் துன்பப்பட வேண்டும். நாம் என்பது ஒரு வக்கிர ஆறுதல் நித்திலனுக்கு. அப்போது மாடியறை சன்னல் கிளையில் அணிலொன்று ஓடியது. நித்திலனுக்கு புல்லரித்தது. மகா கவிதை தான் இது. நித்திலன் அணிலைக் கவனித்தான். அதன் முதுகில் மூன்று அடிக்கோடுகள் இருந்தது. எந்தெந்த வரிகளை இராமன் சிலாகித்து இந்த அணிலின் முதுகில் அடிக்கோடிட்டிருப்பான். பாவிப்பயல்! வரிகளை காணாமலாக்கி விட்டானே. தாஜ்மகாலைக் கட்டிய கொத்தனாரின் கையை வெட்டியது போலல்லவா வரிகளை காணாமலாக்கி விட்டான்.

கவிதையின் இறுதி வரிகள் நித்திலனுக்கு மிகுந்த திருப்தியைக் கொடுத்தன.

“சன்னல்களிடையே

அர்த்தங்களை மரம் பூக்களாக மொழிபெயர்த்து

அதன்மீது உதிர்த்துக்கொண்டிருப்பது தெரியாமல்”

நித்திலன் முழுக் கவிதையையும் ஒரு முறை முழுமையாக வாசித்தான்.

 

பூ மொழி

வீட்டின் பக்கத்தில் நிற்கிறது ஒரு மரம்

கூடத்துச் சன்னலையும்

சமையலறைச் சன்னலையும்

விரிந்த கிளைகளால்

பார்த்துக் கொண்டிருக்கிறது.

கைகளசைத்துக் கால்களுதைத்துக்

கூடத்தில் கிடக்கும் சிசு

மிழற்றுகிறது ஒரு சொல்லை

சமையலறையில்

பணி முனைந்திருக்கிற அம்மா

அச்சொல்லையே நீள வாக்கியங்களாக்கிப்

பதில் அனுப்புகிறாள்.

விரல் நீட்டி சிசு பேசுகிறது மீண்டும்

அத்தொனியிலேயே அம்மா குழறுகிறாள்

கடவுளுக்கும் புரியாத அவ்வுரையாடலைக் கிரகிக்கக்

கூடத்துச் சன்னலுக்கும்

சமையலறைச் சன்னலுக்குமாய்

கிளைகளின் வழியே ஓடி ஓடி

கவனிக்கிறது அணில்.

பெருகும் சொற்களும்

அபூர்வ எதிர்வினைகளும்

அதீதக் குழப்பத்திலாழ்த்த

அணில் ஓடிக் களைக்கிறது சன்னல்களிடையே

அர்த்தங்களை மரம் பூக்களாக மொழிபெயர்த்து

அதன்மீது உதிர்த்துக்கொண்டிருப்பது தெரியாமல்.

 

– யூமா வாசுகி.

 

ஏன்  பெரும்பாலான கவிதைகளில் இறுதி வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன. கவிதையில் வெளியேறும் இடம் என்று ஒன்று உண்டா என்ன? எந்த வரிக்குள் போனாலும் கவிதை இழுத்து உள்ளே போட்டுவிடும் தானே. இறுதி வரிகள் ஏன் இவ்வளவு திருப்திகரமாய் அமைக்கப்படுகின்றன. நித்திலனுக்கு அவன் கைகளிலேயே அதற்கான விடை இருந்தது. கவிதை ஆரம்பித்ததிலிருந்தே டீ யையும் பிஸ்கட்டையும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு வந்தான் நித்திலன். இப்போது டீ ஒரு மிடறும், பிஸ்கட் இறுதித் துண்டும் மட்டுமே எஞ்சியிருக்கிறது. இறுதியாக டீயின் மிடறை பருகுவதா அல்லது பிஸ்கட்டின் துண்டை தின்பதா. நித்திலனுக்கு இந்த இடம் முக்கியம். ஏனெனில், எந்த சுவையில் அவன் முடிக்கிறானோ அந்த சுவை கொஞ்ச நேரத்திற்கேனும் அவனுடன் பயணம் செய்யும். முடிக்கும் இடம் முக்கியமானது. நித்திலனுக்கு கவிதையின் புதிர் புரிந்தது.

நித்திலன் தேநீரின் மிடறைப் பருகி புத்தகத்தை மூடி வைத்தான். மனதுக்கு திருப்தியாக இருந்தது. வாசன் ஏன் ஒரு பெண்ணாய் பிறக்காமல் போனான், ச்சீ என்ன சிந்தனை இது, உள்ளுக்குள் கறாருடன் சிரித்துக் கொண்டான். வாசனிடம் பேச வேண்டும் போல் இருந்தது. நித்திலன் வாசனின் எண்ணை அலைப்பேசியில் அழைத்தான். வாசனின் குரல் வந்து விழுவதற்கு முன்பு அவன் வீட்டு நாய் நித்திலனிடம் இரண்டு மூன்று வார்த்தைகள் பேசிவிட்டிருந்தது.

‘ நீ தந்த கவிதைத் தொகுப்பை வாசித்தேன். பூ மொழி கவிதையில் நீ அடிக்கோடிட்டிருந்த அதே வரிகளை நானும் ரசித்தேன்’

‘நித்திலா, நான் வாசன். வாசகி இல்ல’

நித்திலன் சிரித்துக் கொண்டான்.

‘ஆனால் அவை நான் அடிக்கோடிட்ட வரிகள் அல்ல. எனக்கு முன்னரே யாரோ அந்த வரிகளை அடிக்கோடிட்டிருக்கின்றனர்’

நித்திலனுக்கு ஏமாற்றமாகவும் ஆர்வமாகவும் இருந்தது.

‘நீ இல்லையா, அப்படியென்றால் யாராக இருக்கும்’

‘தெரியவில்லை.பின்னர் அழைக்கிறேன். அவசர வேலை’

நித்திலன் குழப்பத்திலாழ்ந்தான். பூ மொழி கவிதையைத் திரும்ப ஒரு முறை படித்தான். அடிக்கோடிட்ட வரிகளை திரும்பப் படித்தான். யாரை நினைத்து இவை இந்த அடிக்கோடுகளை நான் வாசித்தேனோ அது எல்லாம் பொய்யா. நான் ஏன் அடிக்கோடுகளை வாசித்தேன். கவிதையை வாசித்து ஏன் அடிக்கோடு போடாமல் போனேன். அடுத்தவர் அடிக்கோடுகளைப் வாசித்தல் பெரும் வியாதியா. என்ன மருந்து இருக்கு இதற்கு. அடிக்கோடி ஒரு சாலை வழி போல் எனக்கானது ஏன். அந்த வரியில் நடக்கும் பைத்தியமா நான். இதை எதையும் அவன் வாசனிடம் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. சொன்னால் தன் பைத்தியத்தனம் வெளிப்பட்டு விடுமோ என்று பயந்தான்.

அடிக்கோடுகள் ஒரு அகழிகளைப் போல மாறி அவன் கனவில் வந்தன. அடிக்கோடிட்ட வரியின் ஒவ்வொரு வார்த்தைகளும் ஒரு முதலையின் வாயில் இருந்தது. முதலை கடைசி வரியாக இவனை விழுங்க வந்தது.

கால்களுதைத்துக் கூடத்தில் கிடந்த சிசுவை முதலை கவ்விச் சென்றது, சமையலறையில் பணிமுனைந்திருந்த அம்மாவையும். அணில் அலுவலகத்துக்கும் வீட்டிற்கும் டை கட்டிக்கொண்டு ஓடியது. முதலை இருட்டு இருப்புப் பாதையில் டை கட்டிய அணிலை துரத்திக் கொண்டு ஓடியது. நித்திலா நித்திலா கதவைத் திற அணில் கத்திக் கொண்டே தலைதெறிக்க ஓடியது. இராமன் அந்த மூன்று வரிகளையும் மேகத்தில் நின்றபடி குரூரப் புன்னகையுடன் இரகசியமாகப் படித்துக் கொண்டிருந்தான். முதலை நெருங்கி விட்டிருந்தது. நித்திலா நித்திலா கதவைத் திற. நித்திலன் வெடுக்கிட்டு எழுந்தான். இருட்டுக்குள் அப்படியே மெளனமாக அமர்ந்திருந்தான். எங்கோ ஒரு கார் முக்கு திரும்பும் மெல்லிய சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது. சிறுநீர் கழித்துவிட்டு வந்து படுத்தான். தூக்கம் வரவில்லை. காற்றில் கவிதைப் புத்தகத்தின் பக்கங்கள் திருப்பப்படுவதைப் பயத்துடன் பார்த்தான்.

மறுநாள் நூலகம் திறக்கும் நேரத்துக்கெல்லாம் நித்திலன் அங்கு சென்று சேர்ந்து விட்டிருந்தான். நூலகரிடம் ஐநூறு ரூபாய் பணம் கொடுத்து அந்தக் கவிதை தொகுப்பை எடுத்தவர்களின் விலாசங்கள் அனைத்தையும் பெற்றுக் கொண்டான். மொத்தம் நான்கே பேர்தான் அந்த தொகுப்பை அதுவரை எடுத்திருந்தார்கள். அதில் வாசனைத் தவிர்த்தால் மூன்றே பேர்தான். நித்திலனுக்கு இது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

முதல் விலாசத்தை பார்த்தான். அன்பு நகர் ஐந்தாவது தெரு என்று இருந்தது. நித்திலனுக்கு மிகவும் பக்கமான விலாசம். வீடு வரை சென்றவனுக்கு அழைப்பு மணியை அழுத்த தயக்கமாக இருந்தது. வந்த காரணம் கேட்டால் என்னவென்று சொல்வது ?. நித்திலன் மணியை அழுத்தினான். மேல் பனியனும், லுங்கியும் அணிந்த ஒருவர் வந்து நின்றார்.

‘வணக்கம் சார், நான் மாவட்ட நூலகத்திலிருந்து வருகிறேன். இந்த புத்தகத்தின் ஒரு பக்கத்தில் வங்கிக் காசோலை ஒன்று இருந்தது. கடைசியாக இந்த புத்தகத்தை எடுத்தது நீங்கள் தான். உங்களின் காசோலையாக இருக்குமோ என்ற ஐயத்தில் நூலகத்தில் இருந்து கேட்டு வரச் சொன்னார்கள்’

‘அப்படியா, அப்படி ஒன்றும் இல்லையே தம்பி, அப்படி இருந்திருந்தால் நீங்கள் அலைபேசியிலே அழைத்து விஷயத்தை கூறியிருக்கலாமே’

நித்திலனுக்கு பயமாகவும் தயக்கமாகவும் இருந்தது.

‘இல்லை நூலக அலுவலரின் ஆணை’ என்று இழுத்தான்.

‘புத்தகத்தை எடுத்து வந்தது தான் தம்பி, படிக்கக் கூட நேரம் இல்லை. இருக்குற வேலைகள் தலைக்கு மேலே இருக்கு தம்பி’

‘சிரமத்துக்கு மன்னிக்கணும். நான் வரேன் சார்’.

நித்திலன் பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கிருந்த கடையில் பழச்சாறு வாங்கி பருகினான். அடுத்த விலாசம் என்று தேடியபோது தான் முதல் விலாசத்தில் இருந்தவர் கூறியது நினைவுக்கு வந்தது. அலைப்பேசியில் அழைத்து விஷயத்தைக் கூறியிருக்கலாமே. என்ன மடத்தனம் இது, இது ஏன் தோணவில்லை. கிறுக்குத் தனமான ஒரு விஷயத்தைத் தேடி அலைவதால் இதெல்லாம் சிந்தனைக்கு கூடவில்லையோ.

நித்திலன் நூலகரை அணுகி இரண்டு விலாசங்களின் அலைபேசி எண்ணையும் வாங்கினான்.

ஒன்று ஆறாம் வகுப்பு சிறுவன். அவன் அட்டைப் படம் கவர்ச்சியாக நல்ல நிறத்தில் கவரும் வண்ணம் இருந்ததால் அந்த புத்தகத்தை எடுத்தேன் அண்ணா என்றான். இன்னொரு எண் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தது. இறுதி ஆள் இவர்தான் என்பதால் நித்திலன் அந்த விலாசத்தையும் விசாரித்து விட முடிவெடுத்தான். சாயங்காலம் முடிந்து கிட்டத்தட்ட இரவு கவிந்து விட்டது. என்ன இருந்தாலும் பார்த்து விடுவோம், இரவு நிம்மதியாக தூங்க வேண்டும் என்ற முடிவில் நித்திலன் நூலக வாயிலில் நின்றிருந்த இருசக்கர வாகனத்தை நெருங்கினான். நடுமண்டையில் ஒரு துளி சில்லென்று விழுந்தது. சுதாரிப்பதற்குள் அடுத்தடுத்த துளிகள். நித்திலன் நூலகத்தின் அருகே இருந்த ஒரு டீ கடையில் ஒதுங்கினான். டீ குடிக்க தோணவில்லை. குழப்பத்தில் ஆழ்ந்தவனாய் மழையையே வெறித்துக் கொண்டிருந்தான். இதுவே மற்ற நாளாய் இருந்திருந்தால் வாசனுக்கு ஃபோன் செய்து மழை பொழியும் செய்தியைச் சொல்லியிருப்பான். மழை பொழியும் செய்தியை யாரிடமாவது பகிர்ந்து கொள்வது நித்திலனின் வழக்கம். அது ஒரு அடிக்கோடுக்கு தகுந்த செய்தி என்று நித்திலன் எண்ணியிருந்தான்.

தன் கடிகாரத்தில் தெளித்திருந்த மழை துளியைத் துடைத்து விட்டு மணியைப் பார்த்தான். 7.50 காட்டியது. இன்னும் பத்து நிமிடங்களில் நூலகத்தை அடைத்து விடுவார்கள். வண்டியை வெளியே எடுக்க வேண்டும். மழையும் விடாமல் பொழிகின்றது, சனியன் பிடிச்ச மழை என்று நினைத்தான். பின் மழையை சபித்ததற்காக வருந்திக் கொண்டான். ஆற்றாமையும், குழப்பமும், குற்றவுணர்ச்சியும் மூன்று புகை போல அவன் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து எழத்துவங்கின.

காய்ச்சல் கண்டாலும் பெரவாயில்லை என்று வண்டியின் கிக்கரை ஓங்கி மிதித்தான். அதிலிருந்து கிளம்பிய புகையில் ஆற்றாமையும் குழப்பமும் குற்றவுணர்ச்சியும் வெளியேறியதாக ஒரு ஆசுவாசம் கொண்டு வண்டியை இயக்கினான். கொட்டும் மழை நித்திலனை தொப்பலாக நனைத்திருந்தது. மூக்குக் கண்ணாடியில் விழுந்த மழை மதுவைப் போல சாலையை மங்கலாகக் காட்டிக் கொண்டிருந்தது. நித்திலன் தட்டுத் தடுமாறி ஒரு வழியாக மூன்றாம் நபரின் விலாசத்தை அடைந்தான்.

தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் அந்த தெருவில் மின்வெட்டு ஏற்பட்டிருந்தது. நித்திலன் இரும்பு கேட்டின் திறப்பானை தட்டிப் பார்த்தான். மழையின் குரலுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. கேட்டை திறந்து அழைப்பு மணியை நோக்கி நகர்ந்தான். அலைப்பேசி வெளிச்சத்தைப் பாய்ச்சினான். அழைப்பு மணியின் அருகில் டூலெட் என்ற பலகை தொங்கிக் கொண்டிருந்தது. வீட்டில் யாருமில்லை. நித்திலனின் அடி மனதில் அந்த மூன்று புகையுடன் கோபம் என்ற நான்காம் புகையும் சேர்ந்து எழத் துவங்கியது. மழையின் குரல் பரிகசிப்பதைக் கேட்டு எரிச்சலும் சூழ்ந்து கொண்டது.

அக்கம் பக்கம் விசாரித்தான். ஏழு மாதங்களாக அந்த வீட்டுக்கு ஆட்கள் யாரும் குடிவரவில்லை என்று கூறினர். நித்திலனுக்கு ஏமாற்றமாகவும், மர்மமாகவும் இருந்தது. ஆள் இல்லாத வீட்டில் இருந்து புத்தகத்தை எடுத்தது யார்? நித்திலன் இருட்டுக்குள் அந்த வீட்டை ஒரு முறை பார்த்தான். ஒரு மின்னல் வெட்டி முழு வீட்டையும் வெளிச்சத்தில் காண்பித்து பின்பு இருளில் சேர்த்தது. நித்திலனுக்கு அப்போது தான் நினைவு வந்தது. பதறியடித்து வண்டியை நோக்கி ஓடினான். அதில் வைத்திருந்த புத்தகத்தை வெளியே எடுத்தான். நித்திலனை விட அது அதிகமாக நனைந்திருந்தது. பக்கங்களை புரட்டினான். அடிக்கோடுகள் இட்டதற்கான தடயமே இல்லாமல் அழிந்திருந்தது. அப்போது வெட்டிய மின்னலின் வெளிச்சத்தில் வீடு நித்திலனை பார்த்து சிரித்து இருளில் சேர்ந்தது. நித்திலன் கோபத்திலும் சோர்விலும் நிலைகுலைந்து நின்றான். விழும் மழையை எதிரியைப் போல் பார்த்தான். மழை நின்றவுடன் அந்த செய்தியை யாருக்காவது பகிர வேண்டும் போலிருந்தது. அதற்காக வன்மத்துடன் காத்திருந்தான்.’சனியன் பிடிச்ச மழை’ என்றான். ஒரு கணம் ‘பூ மொழி’ கவிதை அவன் நினைவில் வந்தது. அதன் வரிகள் மனதில் எழுந்தன. புனித புத்தகத்தின் வரிகளைப் போல அது அவன் வன்மத்தை குறைத்தது. நித்திலன் மழையை சபித்ததற்கு வருந்திக் கொண்டான். மனதின் புகையெல்லாம் அமிழ்ந்தது. குழந்தையைப் போல வாஞ்சையுடன் மழையில் கைகளை நீட்டினான். மழையால் அவன் கைகளில் இருந்த அடிக்கோடுகளை அழிக்க முடியவில்லை.

(நிறைவு)

நன்றி : முகமது மதார் முகைதீன் (திவ்யா)

*

Contact : Naan Rajamagal