மறைந்த உயிர் நண்பர் சீர்காழி தாஜ் பற்றி அவரது முகநூல் தோழி அமுதமொழி எழுதிய கண்ணீர் புகழ் நினைவஞ்சலியைப் பகிர்கிறேன்.
*
வாழ்க்கை பள்ளத்தாக்கை சாடித் தாவி கடக்க முனைந்த நவ கலைகளின் ஈடுபாடு மனிதகுல மேன்மைக்கு அழகும்- கீர்த்தியும் சேர்க்குமென நம்பும் இன்னொரு நண்பனை நான் எங்கே தேடுவேன்.
உள்ளொளி பிரவாகம் ஓயாமல் சலசலத்து ஓடிய உங்கள் ஆன்மா பல யதார்த்தம் மீறிய கற்பனையில் தளும்பிய வண்ணம் இருப்பதைப் பதிவுகள் மூலம் அறியத்தந்தீர்கள் தாஜ்.
ஒரு இஸ்லாமியராக பிறப்பால் இருந்தபோதும் மதம் பற்றிய தீவிர சிந்தனையோ நம்பிக்கையோ இல்லாதவர் நீங்கள்.
மனித நேயமும் மனிதகுல ஜீவிதமும் மட்டுமே நீங்கள் கேட்ட கேட்க காதலுற்ற இன்னிசை.
உங்கள் தீவிர அரசியல் பதிவுகளைப் படிக்கும் பொழுதெல்லாம் எனக்கு என் அப்பாவின் நினைவு வரும். அவரும் அப்படித்தான் ஆங்கில இந்து பேப்பரை ஒரு வரி விடாமல் படிப்பார். ரேடியோவினை காதருகில் வைத்து செய்திகளை கேட்டபடியே இருப்பார்.
ஆரியத்தின் மனிதகுல வெறுப்பரசியலுக்கு மாற்றாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைத் தலைவர் ஸ்டாலின் மீது அதி நம்பிக்கை கொண்டிருந்தீர்கள்.
உங்கள் அரசியல் பதிவுகள் முகநூல் வழி அரங்கேற்றம் காண்பதைத் தடைச் செய்ய உங்கள் வீட்டில் மட்டும் மின்சாரம் வராமல் செய்து விட்டார்கள் என்று கூட பதிந்துள்ளீர்கள். நான் ஆச்சரியம் அடைந்திருக்கிறேன் இப்படி கூட நடக்குமா என்று.
இயற்கை நேசர் நீங்கள். நான் ஒரு முறை என் வீட்டருகில் இருக்கும் வனக் காளியின் படத்தையும் அதன் அமைவிடத்தையும் வர்ணித்து எழுதிய பொழுது அதைப் பார்க்க வேண்டும் என்று அவாவுற்றீர்கள்.
நான் வாருங்கள் என்று சொன்னபொழுது ஒரு குழந்தையின் குதூகலத்துடன் வருவதாக கூறினீர்கள்.
இலக்கியம் பற்றி என்னுடன் பேச வேண்டும் என்று என்னைக் கூட சீர்காழி வரும்படி அழைத்தீர்கள். “பேருந்து நிறுத்தத்திற்கு எதிர் வீடே மொழி ” என்று வழி கூட சொன்னீர்கள்.
என் வீட்டில் போர்டிகோவில் இருக்கும் டைல்ஸ் போல நீங்களும் போட்டுள்ளதைச் சொன்னீர்கள்.
ஏதோ மனச்சோர்வு உடலின் உபாதைகள் வாழ்வின் நளிந்த நாட்கள் நான் சோர்வுற்று மரணம் பற்றி ” வந்தால் தேவலாம் “என்று சொல்கிறேன் ” நீங்கள் நல்ல உற்சாகமாக இருக்கும் பொழுது இதைப் பற்றி நிறைய பேசலாம் ” என்று சொல்லி உடனே மரணம் பற்றிய உரையாடலைத் தவிர்த்தீர்கள்.
ஆனால் இன்று அக்கொடிய மரணத்திலேறி மரணத்தின் வசனங்களை எனக்கு உபதேசம் செய்கிறீர்கள்
உங்கள் சிந்தனை செயல் இரண்டும் இலக்கியமும் இந்திய மக்களின் நலனும் என்ற இரட்டை புரவிகளின் மீதே சஞ்சாரம் செய்து கொண்டிருந்ததை இந்த உலகம் அறியத் தந்தீர்கள்.
இந்த முகநூல் பயணத்தில் உங்களைப் பற்றிய பல அரிய தகவல்களை உங்கள் வாழ்க்கை நெறியை இலட்சிய நகர்வை அறியத் தந்தீர்கள்.
உங்களுக்கு உங்கள் தாயின் மீதும் மனைவி மீதும் உங்கள் மகள் மீதும் குழந்தைகள் மீதும் பேரக் குழந்தைகள் பேத்திகள் மீதும் இருந்த அன்பினை உங்களுக்கே உரிய வாஞ்சையுடன் அறியத் தந்தீர்கள்.
அதில் ஒரு துளியினை உங்கள் பரிவும் பாசமும் மிக்க நட்பின் வழி நானும் துய்த்திருக்கிறேன்.
நாடு இனம் மதம் கடந்த உங்கள் அன்பின் பரந்துபட்ட விசாலத்தை அறிந்திருக்கிறேன்.
நீங்கள் எங்கோ சீர்காழியில் நானோ காவேரிப்பட்டணத்தில்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நேரில் பேசிக் கொண்டதில்லை .
எல்லாம் இந்த இணைய வழி தொடர்பு மட்டுமே.
ஆனால் உங்கள் மரணம் ஏற்படுத்தும் துக்கம் தாளாமல் இரவெல்லாம் அழுது அழுது மனம் இறுகிவிட்டது.
ஏன் என்று தெரியவில்லை புரியவுமில்லை.
நீங்கள் எனக்கு என்ன உறவு. உங்கள் மரணம் என்னை ஏன் இவ்வளவு பாதிக்கின்றது.
கேள்விகள் விடையற்ற கேலி செய்யும் கேள்விகள்.
மனித மனம் அதன் நுட்பத்தில் உணரும் உன்னதம் மிக்க உணர்வுகள் காரண காரியங்களை கடந்தவை என்பதை மட்டுமே நான் அறிகிறேன்.
தேற்றுவார் இன்றி அழுதபடி இருக்கும் என் காதுகளில் ” மொழி அழாதே ” என்று சொல்லிப் போக வருவீர்கள் என்று காத்திருக்கிறேன் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் தாஜ் பிரிய நண்பரே!
*
Thanks : Amuthamozhi Mozhi