வேண்டுதல் : கீதாஞ்சலியிலிருந்து ஒரு ‘துளி’

‘வருஷம் வேண்டுமானால் புதிதாகப் பிறக்கட்டும்; உங்கள் மனசு மட்டும் எப்போதும் போல பழசாகவே இருக்கட்டும்’ என்று ஒரு பழைய எஸ்.எம்.எஸ் – மீண்டும் ஜபருல்லா நானாவிடமிருந்து. அதுவும் இன்று காலை 8 மணிக்கு. உடனே ஃபோன் செய்தேன் ஆச்சரியத்துடன்.

‘என்ன நானா, சீக்கிரமா முழிச்சிட்டிங்களோ இன்னக்கி!?’

‘ஓய், இன்னமேதாங்கனி தூங்கவே போறேன்!’

‘சரி, உங்க வாழ்த்தைத்தான் இன்னக்கி என் சைட்லெ போடப்போறேன்’ என்றேன்.

‘அது கிடக்குது. நம்ம ஆபிதீன்காக்கா , ‘வேண்டுதல்’ண்டு  ஒரு பாட்டு எழுதியிருப்பாஹா, ‘அழகின் முன் அறிவு’ புத்தகத்துலெ. அதப் போடும். நல்ல செய்திகள் இருக்கு அதுலே’ எனறார். பதிகிறேன். படிக்க விருப்பமில்லாதவர்கள் யானை குட்டி போடுவதை பார்க்கலாம்!. அப்படியே நான் பிறந்தது போல இருக்கிறது!

எனது மூன்று வாசகர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

*

வேண்டுதல்
(தாகூரின் ‘கீதாஞ்சலி’யிலிருந்து… புலவர் ஆபிதீன்)

வாழ்வில் முளைத்தெழும் வீழ்ச்சிகளை வெல்லும்
வல்லமை வைத்தருள் வாயே!
தாழ்வில் தவித்தழும் ஏழையைக் காத்திடும்
தாட்டிகம் தந்தருள் வாயே!

சேவையி லென்மனம் சென்று கனிந்திடச்
செய்துசு கந்தரு வாயே!
தேவையி லன்போடு தேசீயப் பற்றினைத்
தேடவே தொட்டருள் வாயே!

ஆணவத் தின்முன்னே தலைவணங் காப்பெரும்
ஆற்றலை ஈந்தருள் வாயே!
வேணவா மீறிநான் வெகுளாது பாரினில்
வாழ்ந்திட வரமருள் வாயே!

உள்ளக் குறிப்பை உணர்ந்துநி வேதிக்க
உண்மை உளமருள் வாயே!
கள்ளக் கருத்தின்றிக் கவலுமி தைப்புறக்
கணியாது காத்தருள் வாயே!

சங்கடம் வந்திடில் சுலபமாய்த் தாங்கிடும்
சக்தியை நீயருள் வாயே!
எங்கடன் உலகம் எல்லாம் நீயென
எண்ணவெ ழுந்தருள் வாயே!

உன்றன் திருவடி முன்னால் என்பலம்
உள்ளது என்றருள் வாயே!
என்றன் வேண்டுதல் எப்போது மிஃதே
எம்பெரு மானறி வாயே!

**

நன்றி : யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், இஜட். ஜபருல்லா