சைத்தான் : தாஜ்

அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தானிர் ரஜிம் …! ஷைத்தானைப் பற்றி ஒரு ஷைத்தான் எழுதுவதுதான் எவ்வளவு துரதிர்ஷ்டவசமானது! எனக்குத் தெரிந்து – பெரியார் காற்று பட்ட – இரண்டு ஷைத்தான்கள் துபாயில் இருக்கு. ஜித்தாவில் இரண்டு. இது சீர்காழி ஷைத்தான்! ஆக இந்த ஐந்து ஷைத்தான்களைத் தவிர மற்ற தமிழ் முஸ்லிம்கள் அத்தனைபேரும் தங்கமோ தங்கம், தாடிமுளைத்த தங்கம். அப்படியிருந்தும் ஏன் இத்தனை அடிதடி? , ‘நாங்கள் பெரிதா, நீங்கள் பெரிதா?’ எனும் வெட்டி விவாதங்கள் , பிரச்சனைகள் என்றுதான் எனக்கு விளங்கவில்லை. நண்பர் கலையரசன் காட்டிய (புதிய) பாக்தாத் படுகொலைகளைக் கண்டுமா பிரிவுகள்?

ஒற்றுமைக் கயிற்றை வேறு எங்காவது ஆர்டர் செய்துதான் இனி வாங்க வேண்டும்..

இன்னொன்று, போகிறபோக்கில் இந்த ஷைத்தான் , தஸ்லிமாவைத் தப்பியது தப்போ தப்பென்றும் தாளமிடுகிறது! ‘ஃபத்வா என்றொரு நவீன அரக்கம்’ எழுதி நண்பர் வஹாபியிடம் நீ வாங்கிய அடி பத்தாதா? ஒரு குறிப்பையும் சேர்த்து அனுப்பியிருக்கிறாயே, இது சரியா?

சென்றவருடம் மார்ச் மாதம் (9/3/2009) , ‘தமிழன் டி.வி’யின் மக்கள் மன்றத்தில் பங்குகொண்ட வழக்கறிஞர் அருள்மொழி – சகோதரர் அமீர் ஜவ்ஹரிடம் – தன் கருத்தைச் சொன்னாராம் இப்படி : ‘யாராக இருந்தாலும் , இப்ப வந்து குஜராத்திலே சிறுபான்மை மக்களை பெரும்பான்மையினர் சேர்ந்து கொடூரம் செய்தது எவ்வளவு தப்போ அதேபோல…(வன்முறை இது).  அவங்க (தஸ்லிமா) ஒரு தனிப்பெண்; சரியோ தப்போ அவங்க கருத்தை அவங்க எழுதுறாங்க; அது தவறுண்டு சொன்னா அது பத்தி எவ்வளவோ விமர்சனங்கள் பத்திரிக்கையில வந்திருக்கு.  அந்த மாதிரி செய்யலாம். அடுத்து நேரா நிகழ்ச்சிகள்லெ வந்து ஒரு கேள்வி எழுதி கொடுக்கலாம் – நீங்க இப்படி எழுதியிருக்கீங்க, இது தப்பு , நாங்க விவாதம் பண்ணுறோம். வாங்க விவாதிக்கலாம் . இதே மாதிரி நேருக்கு நேரா அவங்கள அழைச்சி ஒரு தொலைக்காட்சில வச்சி விவாதிக்கலாம். அதையெல்லாம் விட்டுட்டு அவங்களுக்கு உயிர் அச்சத்தை உண்டாக்கி , தாக்கி… இதுதான் தீர்வா?….இந்த தாக்குதலை பெண்கள் மீது நடக்குற அதிகாரத்தை யார் வந்து உங்களுக்கு கொடுக்குறது அப்படீங்கும்போது அந்த ஆண் பெண்ணுங்குற சமத்துவம் , பாதுகாப்பே இல்லாம ஆயிடுது. அப்ப அச்சமா இருக்கு. நான் ஒரு நாத்திகவாதியா பாக்கும்போது ,’ஓ.. இந்த மதம் அமைதிக்கு உதவாது போலிருக்கு அப்படீண்டு படுது, எப்படி ஒரு சூலாயுதத்தைப் பாக்கும்போது எனக்கு என்ன அச்சம் வருதோ அதேதான் தாலிபானை பாக்கும்போதும் உண்டாவது அப்படீங்கும்போது, ‘அப்பா இந்த ரெண்டுமே வாணாம் அப்படீங்குற எண்ணம்தான் ஏற்படுது’.

‘ஒன்றே குலமென்று பாடுவோம், ஒருவனே தேவனென்று போற்றுவோம்!’

-ஆபிதீன்-

***

 

சை த் தா ன்

தாஜ்

‘சைத்தானைப் பற்றி உங்களுக்கு தெரியும்தானே?’ என்று கேட்டால் ‘தெரியுமே!’ என்று என்னை ஏன் பார்க்கிறீர்கள்? மலைகளும், கடல்களும் உள்ள ஒரு நாட்டில், நானெல்லாம் ஒன்றுமே இல்லை! நம்ப மாட்டீர்கள். ஓட்டை வாயன் நான். உங்களைக் கேட்டிருக்கவே வேண்டாம். சும்மா ஒரு ‘ரைம்’க்கு கேட்டது தப்பா போச்சு. இன்னும் கூட என்னைதான் பார்க்கிறீர்கள்! சரி, விசயத்துக்கு வந்துவிடுகிறேன்.

நான் ஒரு வீணாப்போன எழுத்தாளன். எழுதும் வீம்பு என்னை விட்டுத் தொலைய மாட்டேன் என்கிறது. இரத்தத்தில் கலந்து விட்டது. சொறிசிரங்கில் தொடங்கி என்னென்ன வியாதிகளுக்கோ இடம் கொடுத்திருக்கிற இரத்தம் இதையும் சகித்துக் கொண்டுவிட்டது. என் எழுத்தை இத்தனை காலமும் சொந்தப் பெயரில்தான் கிழித்துக் கொண்டிருந்தேன். சில காரணங்களினால் இப்பொழுது புனைபெயரில் எழுதுவதே மேல் என்பதான ஞானோதயம்! அதனால்தான் அது குறித்த தேடல். ஆளுமையும், அர்த்தபாவமும்கொண்ட பெயர் ஒன்றை அலசிக் கொண்டிருந்த போதுதான் ‘சைத்தான்’ வந்து நின்றது!  அது விசாலமாகத் தெரியவும்,  பரிசிலிக்கவும் தோன்றியது. ‘சைத்தான்’ என்பதில் ‘ஹராமி’ என்பதான பொருளும் தொங்கி நிற்கிறதென்ன்றாலும் தட்டிக் கழிக்க முடியவில்லை. நெருப்பென்றால் வாயா சுடும்?

‘எழுத்தாளர் சைத்தான்’ என்று நீங்களே ஒருதரம் சொல்லிப் பாருங்கள். நன்றாக இருக்கிறதுதானே? குறைந்தபட்சம் அடுத்தவர்களுக்கு ‘கிலி’ ஏற்படுத்தும் அல்லவா! ஓர் எழுத்தாளனுக்கு இப்படியான மதிப்பீடு கொண்ட பெயர் என்பது இரட்டை சந்தோஷம் தரக் கூடியதே!

எனது எழுத்துக்காக என்னைப் படிக்காதவர்கள் கூட,  இந்தப் புனைபெயருக்காகவாவது  படிக்க வாய்ப்பிருப்பதால் பரிசீலிக்கதான் வேண்டும். ‘அதெல்லாம் ஒரு மண்ணும் வேண்டாம், இப்ப இருக்கிற பெயரே போதும். இரண்டு பெயருக்கும் ஒரே அர்த்தம்தான்!’ – தூரத்திலிருந்து ஒரு நண்பரின் குரல்! பாருங்கள், இன்னும் நான் பரிசீலனையை தொடங்கக்கூட இல்லை. ஆரம்பிப்பதற்குள்ளாகவே விமர்சனம்!

நானொரு வீணாப்போன எழுத்தாளனாக இருந்தாலும், எப்பாடு பட்டேனும் சாதித்து, எழுத்துக்காக இந்திய அளவில் உயர்ந்தபட்ச விருதுகளை வெல்லனும் என்கிற முடிவில் பல வருடங்களாக எழுத்தை சாதகம் செய்து வருகிறேன்! எத்தனைக் கஷ்டம், நஷ்டமென்றாலும் கூட அதை விடுவது கிடையாது. அரிப்புக்கு  களிம்பு பூசுவது மாதிரி, நாள் தவறுவது  கிடையாது. அதனால்தான் என்னென்னவோ ஏதேதோ எழுதிக் கொண்டிருக்கிறேன். வரையரையே கிடையாது. எனக்கு அடிப்படை என்று ஒன்று இருந்தால்தானே வரையரையை நான் வகுத்துக்கொள்ள? ‘வேறு ஏதேனும் சித்தாந்தம்?’ உஸ்.., பேசப்படாது.!உங்கள் எதிரில் பேப்பரும் பேனாவும் இருந்தால், பேப்பரில் பெரிய சுழி ஒன்றைப் போடுங்கள். போட்டீர்களா?  அதுதான்  என்  சித்தாந்தம்! சுத்த வெள்ளைங்க நான்! வெள்ளை சட்டை, வெள்ளை வேஷ்டி தவிர வேறு எதையும் நான் அணிவதில்லை!

வாஸ்தவத்தில், எழுத்தால் எனக்கு நயா பைசாவுக்கு பிரயோஜனமும் கிடையாது. தெண்டச் செலவுகளும், பிரச்சனைகளும்தான் கூடுகிறது. நவீன இலக்கியம் என்ற பெயரில் முறுக்கிக் கொள்ளும் எழுத்தாளர்களின் புத்தகங்களை விலை கொடுத்து வாங்கி, வாசிக்க வேண்டியிருக்கிறது. கண்டதையும் நான் எழுதுவதால், சக மக்களின் ஏளனத்திற்கும், கோபத்திற்கும் வேறு ஆளாகவும் வேண்டியிருக்கிறது. தாக்குதலுக்குள்ளாகும் வாய்ப்பும் உண்டு. எழுதுகிற பேர்வழி என்று கருத்து சொல்ல நின்றால் எவன்தான் சகிப்பான்?  சமூகம்,  அரசியல்  குறித்தெல்லாம் கருத்துக்கள் சொன்னால்கூட, பின்னர் ‘சலாம்’ வைத்தாவது தப்பித்து விடலாம், மதங்களிடம் அது நடக்காது.

பழைய கதையொன்றில், மந்திரவாதி ஒருவன், ஏழு கடல் தாண்டி மலைக் குகைப் பொந்துக்குள் சிறை வைத்திருக்கும் கிளியின் உயிரில் தன் உயிரை பிணைத்து வைத்திருந்த மாதிரி, மக்கள் தங்களது மொத்த உணர்வுகளையும், உயிர்களையும் மதத்தில் பொதித்து வைத்திருக்கிறார்கள்! போகிற போக்கில் கண் அசந்தால்கூட மதங்களின்மேல் மோதிவிடலாகாது.  கொதித்து விடுவார்கள் கொதித்து! உயிர் நிலையாயிற்றே! எழுதுபவர்கள் எல்லாம் ஏன்தான் மதங்களை வம்பிற்கு இழுக்கின்றார்களோ? அவர்களது வழி அவர்களுக்கு. உங்கள் வழி உங்களுக்கு!

எந்தவோர் எழுத்தாளனின் காலமும் கடுகளவானதுதான்! மதமோ… காலாதி காலம் நிலைக் கொண்டிருப்பது. அது பெரும் விருட்சம். அழியாது. அழிக்கவும் முடியாது.  ஜனங்கள்  எல்லோருமே அழிந்து ஒழிந்து போன நிலையில், துருவேறி அது இத்துப்போகலாம்! அப்படியும் உறுதியாக சொல்லிவிட முடியாது. மக்கள் எழுப்பிய மசூதிகளும், சர்ச்சுகளும், கோவில்களும் நிச்சயம் இருக்கும்தானே!

அவர்களின் கடவுளர்கள் ஏழாவது வானத்தில் பத்திரமாக இருக்கத்தானே இருக்கிறார்கள்! ஆக எப்படிப் பார்த்தாலும்,  எழுத்தாளன் என்பவன்  சாதாரண மனிதன். மதங்கள் வளர்த்தெடுக்கப்பட்ட அசைக்க முடியாத ஸ்தாபனம்!    

கல்லைக் கடவுளாக காணும் மக்களைப் பார்த்து, ‘அது கடவுள் அல்ல , கல்’ என்றோ, தர்ஹாவுக்கு ‘ஜியாரத்’ செய்யப் போவோரிடம், ‘அது சமாதி’ என்றோ குதர்க்கவாதமெல்லாம் செய்யக் கூடாது. இரண்டாயிரம், மூவாயிரம் வருடங்களுக்கு முந்திய மதரீதியான சம்பவங்களை, உரையாடல்களை அட்சரம் பிசகாமல், நாள் நட்சத்திரம் சுத்தமாக, பிரசங்கிகள் இன்றைக்கு பிரசங்கம் செய்கிற போதும் மௌனமாய் கேட்டுக் கொள்ளவதே நாகரீகம். ஒப்புக் கொள்ளத்தக்க இந்திய வரலாறு எழுதப்பட்டே  நானூறு வருடங்கள்தானே ஆகிறது 

என்பது  மாதிரியான அதிகப் பிரசங்கித்தனமான ஞாபகமெல்லாம் எழக்கூடாது. என்னைப் பொறுத்தவரை அப்படித்தான்! மதத்திற்கு முன்னாலும், மதவாதிகளுக்கு முன்னாலும் நீங்கள் நம்ப முடியாத அளவுக்கு படு சாது நான்!

பொதுவாக , மதங்களின் மீது மோதிவிடாமல் பார்த்து நடப்பவன்தான் நான்! என் எழுத்துக்கு அந்த ஜாக்கிரதை உண்டு. என்றாலும், எங்காவது ஓர் திருப்பத்தில் அதனோடு உராய்ந்து விடுகிறேன். அதுவும் குறிப்பாய் என் மதத்தின் மீது! அட, ஓர் இஸ்லாமியன், தான் சார்ந்த இஸ்லாத்தின் மீதுதானே உராய்கிறானனென சக இஸ்லாமிய நண்பர்கள் விட்டுவிடுவது கிடையாது.  இந்த உராய்வு சங்கடம் என்னையும் அறியாமல் அவ்வப்போது தொடர்வதால், பயம் பிடுங்கி தின்கிறது.  எப்போது வேண்டுமானாலும்  என் உயிர் தேடி, என் மதத்தின்  புஜபலம் கொண்ட பராக்கிரமசாலிகள் என்னை விசாரித்துக் கொண்டு வரலாம். எனக்கும் பிள்ளைக் குட்டிகள் இருக்கிறது.  என் தவறுதல்களுக்கு அவர்கள் ஏன் அழ வேண்டும்?  அதற்காகத்தான்  புனைபெயர் அவசரம். “அவன் நானில்லீங்க!” என்று சொல்லி ஓடி ஒளியவாவது பயன்படும் இல்லையா?

நான் வெளிநாட்டவனாக, குறிப்பாய் மேலைநாட்டவனாக இருந்திருந்தால் புனைபெயருக்கு இத்தனைக்கு அவசரப்பட மாட்டேன். கொண்ட பயமும்கூட, இத்தனைக்கு மிகைத்திருக்காது. அங்கே, மதத்தோடு உராய்வை நிகழ்த்தும் எழுத்தாளர்களுக்கு ‘ஃபத்வா’ மட்டும்தான்! இங்கே, தஸ்லீமாவை ஊருக்கு ஊர், மாநிலத்திற்கு மாநிலம், டாக்காவிலிருந்து  பெங்களூர் வரை விரட்டி விரட்டி , மேடையேறி செருப்பை கழட்டி அடிக்கிற கூத்தெல்லாம் அங்கே கிடையாது. ‘ஃபத்வா’ பெற்ற எழுத்தாளன் என்பவன் அங்கே சுகவாசி! ‘ஃபத்வா’ வாங்கிய எழுத்தாளனுக்கு – உலக அளவில் – பரவலாக விளம்பரம் கிடைக்கிறது, அவன் போகும் நாடுகளில் எல்லாம் அரசுகளின் பாதுகாப்பு கிடைக்கிறது, அவன் எழுதிய/ எழுதும்/எழுதப் போகும் அத்தனைக் குப்பைகளுக்கும் பிரமாதமான விற்பனை உத்திரவாதம் கிடைத்து விடுகிறது, ‘சீரி(றி)ய சிந்தனையாளன்’ என்கிற பட்டமும் தானே வந்து ஒட்டிக் கொள்கிறது. ‘satanic verses’ எழுதி, அதில் இறைவேதத்தை பிரச்சனைக்குள்ளாக்கிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, ‘ஃபத்வா’ பெற்ற இந்த முப்பது வருடகாலமாக அவர் அனுபவித்து வரும் சுகபோகத்தை , பிற எழுத்தாளர்கள் எவரும் கனவும் காணமுடியாது! கொமெனியின் உத்தரவால், தலை துண்டிக்கப்பட இருந்த  ருஷ்டிக்கு  எப்படியோர் ராஜ அதிர்ஷ்டம்!  இறைவனின் கருணையே கருணை!

வல்லமை பொருந்திய இறைவனின் இத்தனைப் பெரிய சகிப்புத்தன்மை குறித்தோ, அவனது தாராள மன்னிப்பு குறித்தோ, இங்கே நம் மக்களுக்கு விளங்குவதே இல்லை! “ம்” என்றாலே, திட்டவும், அடிக்கவும் அல்லவா கிளம்பி விடுகிறார்கள்! திருநெல்வேலி மேலப்பாளையத்தில் ஓர் இஸ்லாமிய எழுத்தாளர். மார்க்ஸிஸ்ட் தோழர். தனது மதமான  இஸ்லாத்தை  முன் வைத்து கவிதைகளும், கட்டுரைகளும் எழுதக் கூடியவர். அப்படி அவர் எழுதுவது எல்லாமும் உடனுக்குடன் பிரச்சனையாகி விடுகிறது! அந்த மக்களை  ஆத்திரம்  மூட்டும் அளவுக்கு அவர் விமர்சனம் வைக்கிறாரோ என்னவோ! அது தேவையற்ற வேலை! அவருக்கு அது ஏன் தோணுவதேயில்லை?

என்ன வேண்டிக் கிடக்கிறது விமர்சனம்? நானெல்லாம் இல்லை?!

அந்தத் தோழர், எதையொன்றை எழுதினாரென்றாலும், அந்த ஊர் மக்கள் அந்த எழுத்தை வாசித்துப் பார்க்காமல், தடியெடுத்துக் கொண்டு அவரை ‘காண’ வந்து விடுகிறார்கள்.  நாட்டில் நிலவும் அரசியலாலும், இஸ்லாத்தின் உள்வட்ட அமைப்புகளின் சலசலப்பாலும் அந்த ஊர் இஸ்லாமியர்களும் திட்டுத் திட்டாக பிரிந்து நின்றாலும்,  அந்தத்  தோழரை அடிக்கணும் என்றால் மட்டும், உடனே ஒன்றுபட்டு கைகோர்த்துக்கொண்டு விடுகின்றார்கள்!  இந்தச் சம்பவத்தை  அறியவந்த பிறகுதான்,  புனைபெயர் குறித்தும், அதன் அவசியம் குறித்தும் அதிகமாகவே யோசிக்க ஆரம்பித்தேன். புனைபெயரும் கிட்டத்தட்ட கிட்டிய மாதிரிதான். அந்த வரிசையில் முன்னாடி இருப்பது ‘சைத்தான்’! அது குறித்து பரீசிலிக்கலாம் என்றும் தோன்றுகிறது.

கிருஸ்தவமும், இஸ்லாமும் மட்டுமே சைத்தானை குறித்துப் பேசுகிறது. இறைவனால் படைக்கப்பட்ட ஆதம் என்கிற முதல் மனிதனை, கெட வைத்தது ‘சைத்தான்’ என்கின்றன இந்த இரு மதங்களும். பிற மதங்களில் சைத்தானைப் பற்றிய எந்தக் குறிப்புமில்லை. பேய், பிசாசு, கட்டேரி, ரத்தக் காட்டேரி, காத்து, கருப்பு, சங்கிலி கருப்பன், என்பனவான மக்கள் அஞ்சத்  தகுந்த துஷ்ட ஆவிகளைப் பற்றிக் கூறும் இந்து மதம் சைத்தானை பற்றிப் பேசவில்லை.  சைத்தான் அளவுக்கு இல்லாது போனாலும், கடவுளோடு முரணுக்கு நின்று, ‘நான்தான் கடவுள்’ என்ற இரணியனையும், கம்சனையும் பற்றி இந்து மதம் பேசுகிறது. தவிர, அவர்களை அவர்களது  கடவுள் வதம் செய்துவிட்ட செய்தியையும் கூடவே சொல்கிறது!

இஸ்லாம்தான் சைத்தானை வித்தியாசமான கோணத்தில் விரிவாக வைத்துப் பார்க்கிறது; பேசுகிறது! இறைவனையும், சைத்தானையும் இரு வேறு துருவங்களாக, எதிரெதிர் கருத்துருவமாக காட்டுகிறது. மக்களைப் படைத்து, அவர்களிடம் மறுமை குறித்த பெருவாழ்வை அழுத்தமாகப் பேசி, அச்சுறுத்தி, உலகில் வாழும் காலங்களில் அவர்களை நல்வழிப் படுத்துவது இறைவனின் செயல்பாடாகவும், மக்கள் இந்தப் புவியில் வாழும்காலங்களில், அதை சதமென்கிற நினைவு எழும்படிக்கு, உலக இன்பங்களின் மேல் ஆசையை மூட்டி, அவர்களை அதில் திளைக்கவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாய் இறைவனை மறக்கச் செய்து, தன்பக்கம் அரவணைத்து, கெட வைப்பதென்பது சைத்தானின் செயல்பாடாகவும் அந்தக் கருத்துருவத்தின்  மூலம் விளங்க வருகிறது. இஸ்லாம் கூறுகிறபடிக்கு சைத்தான் குறித்த சங்கதிகளை இன்னும் சொல்வதானால், இந்த உலகத்தில் முதல் மனிதன் தோன்றிய காலம்தொட்டு இறைவனுக்கும் சைத்தானுக்கும் மறைமுகமான, சப்தமில்லாத யுத்தம் ஒன்று நிகழ்கிறது. இரண்டு கருத்துருவங்களுக்கிடையே நேற்றைக்கும்/ இன்றைக்கும்/ நாளையக்கும் நிகழ்ந்த/நிகழும்/ நிகழப்போகும்  யுத்தவடிவமாகவும் இதைப் பார்க்கலாம்.

ஆதம் முதற்கொண்டு அனைத்து மனித வர்க்கத்தையும் கெடுப்பேன் என்பதாக  இறைவனுக்கு  சைத்தான் விட்ட சவால் இன்னும் தொடர்வதுதான் விந்தை! இருவருக்கும் இடையேயான சவால் குறித்து அறியவரும் ஒவ்வொரு முஸ்லீமும், இறைவழியிலிருந்து வழி கெடாமல் இருக்க, சைத்தானுக்கே முதலில் பயப்படுபவர்களாக இருக்கிறார்கள் என்பது இன்னொரு விந்தை! ஆக, இருவருக்குமிடையே சிக்கித் தவிப்பது என்னவோ மக்களாகத்தான் இருக்கிறார்கள். ‘நானே இறைவன்’ என்ற ‘ஃபிர்அவ்ன்’ஐ மூஸா நபி மூலம் கடலில் மூழ்கடித்து, இறைவன் அழித்தொழித்த மாதிரி, நெருப்பால் படைக்கப்பட்ட ‘இப்லீஸ்’ என்கிற சைத்தானை ஒரு பெரும் மழையைக் கொண்டேனும் இறைவன் அழித்து  முடித்திருப்பானேயானால்,  நம் மக்கள் எல்லோரும்  சிதைவுக்கு ஆளாகாது , நல்லவர்களாக இருந்திருப்பார்கள்! எல்லோருக்கும் சொர்க்கம்! எல்லோருக்கும் சுகம்!

அதுதான் எத்தனை எளிய, அழகிய வழியாக இருந்திருக்கும்!

இறைவன் தனது வேதத்தின் வழியே போதித்த அத்தனை நல்ல கருத்துக்களும் இன்றைக்கும் அட்சரம் பிசகாமல் அப்படியேதான் இருக்கிறது. ஆயிரத்து நானூறு வருஷமாக அது பேசும் தெளிவில் , எந்த ஒரு மாற்றமும் இல்லைதான்! இஸ்லாமிய மக்களும் அதன் வழியைப் பின் பற்றி நடக்க உறுதிபூண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்.  ஆனால், அவர்களை வழிகெட வைக்க முயலும் சைத்தானின் முயற்சிகள் காலத்திற்கு காலம் படு தீவிரம் கொண்டதாகவே இருந்து கொண்டிருக்கிறது. புதுப் புது தினுசில் அவனது முயற்சிகள், மக்களை தன் பக்கம் கவருவதாக இருக்கிறது. குறிப்பாய், உலகில் மின்சாரம் கண்டுப் பிடிக்கப்பட்டதற்குப் பிறகு அவனது முயற்சி மிகவும் துரிதம்! மக்களை வழிகெட வைக்கும்  எத்தனையோ காரணிகள் பிரமாண்ட அளவில் வந்து, மக்களின் ஆசைகளைத் தூண்டி, அவனது பின்னால் மக்கள் வரிசைகட்டி நிற்க வைத்திருக்கிறது. ‘இன்றைய நவீன வளர்ச்சியில் பெரும்பாலானவை சைத்தானின் முயற்சிகள்தான்’ என்று யாரேனும் சொல்லக் கூடுமெனில் அதை மறுப்பதும் கஷ்டம்! 

சைத்தானின் பிரமாண்டம், என்னை வியக்க வைத்ததற்கும் மேலாக என்னென்னவோ செய்கிறது. புனைபெயர்தானே என்பதற்காக இத்தனைப் பெரிய பிரமாண்டத்தை என்னால் சுமக்க முடியாது. சாதாரண மனிதன் நான்! எனக்கு என் பெயரே போதும்! இத்தனை காலமும் காத்த என் காலம், எது செய்தாலும் சரி! 

*

நன்றி: தாஜ் / தமிழ்ப்பூக்கள்
E- Mail : satajdeen@gmail.com