காமம் பொங்கி வழியும் காசீம் ராவுத்தரின் ஷோக்கை கம்பீரமாக எழுதியிருக்கிறார் தஞ்சை ப்ரகாஷ். முடிவுறாத இந்தக் கதையை அனுப்பிய மயில்ராவணனுக்கு முதல் நன்றி. இப்போதுதான் படிக்கிறேன் இந்த அற்புதத்தை. ‘பொறா’ கையில் வந்து அமர்ந்ததே ஒரு வேடிக்கை. தஞ்சாவூர் கோபாலி எழுதிய ‘இலக்கியம் என்ன செய்யும்?’ என்ற சிறு பத்தியை ப்ளஸ்ஸில் போட்டிருந்தார் ம.ரா. “(தஞ்சை) பிரகாஷின் இலக்கியப் பேச்சைக் கேட்டதால் உங்களுக்கு என்ன பிரயோசனம்?” என்று ஒரு டாக்ஸி டிரைவரிடம் கோபாலி கேட்க அவர் ,”என் பெண்டாட்டி முன்னைவிட அழகாகத் தெரிகிறாள்!” என்று ஒரு போடு போட்டாராம். பொண்டாட்டி என்றாலே போட்டு விடுகிறார்கள்! நான் இதை ப்ளஸ்ஸில் போட்டதும் , ‘மாஷா அல்லா.. ப்ரகாஷோட ‘புறா சோக்கு’ படிச்சிருக்கீங்களா? உங்களவா எழுதுற மாதிரியே இருக்கும்.’ என்று சொல்லி , உடனே மெயிலிலும் அனுப்பி வைத்தார், ‘கியாமத்’தோடு (இது அப்புறம் முழுசா இங்கே வரும், நமது கியாமத் நாளுக்கு முன்னால்). pdf ஆச்சே, டைப் செஞ்சி விரைவில் போடுறேன், இன்ஷா அல்லாஹ் என்று எழுதினால் , ‘Insha allah bolenge tho 40 saal ka vaadha!! ” ambuttu naal wait panna mudiyathu 🙂 nadamadum typewriter “Senshe bai” oda udhavi naadunga.. “Kun fai kun” appdini solrathukulla ellathayum type adichu kuduvaru.’ என்று பதில்! ‘நடமாடும் டைப்ரைட்டர்’ இப்ப ரொம்ப பிஸி, யாரையோ லாடம் கட்டிக்கிட்டு இருக்கு. எனவே நானே கொஞ்சம் டைப் செய்து இங்கே பகிர்கிறேன். நேரம் கிடைக்கும்போது முழுதாக பதிவிடுகிறேன் (நேரம் கிடைக்காது என்ற தைரியம்தான்!). சரி, scribdல் ஏற்றியதை இங்கேயே வாசிக்கலாம் . படித்து இன்புற்று மறக்காமல் படைத்தவனை நினைப்பீராக! – ஆபிதீன்
***
தஞ்சை ப்ரகாஷின் ‘பொறா ஷோக்’கிலிருந்து…
.. “ஹவ்வோ லக்கு உமா” என்று காசீம் கூவினார். இரண்டாம் முறை அவர் கூவவில்லை. அவ்வளவுதான். நான்கு மினார்களின் மாடங்களில் இருந்த புறாங்கள் கங்கங்கங் என்று பெரும் இரைச்சல் வீசியபடியே அவரை நோக்கிப் பறந்து வந்து அவரது தோள்களிலும் ஜிப்பாவின் மீதும் தொப்பியின் மீதும் பச்சை உருமால் மீதும் அடுக்கடுக்காக வந்து பயமின்றி அமர்ந்த புறாக்களின் மணம். அவற்றின் இறகுகளின் மினுமினுப்பு. அவற்றின் ஓயாத பேச்சு. காசீம் மணிப்புறாக்களில் மூன்றினைத் தேர்ந்தெடுத்துப் பிடித்தார். சிறகடித்தபடி சம்மதத்துடன் அவரது தோள்களில் அமர்ந்தன.
மற்ற புறாக்களுக்கு ஊதிவிட்டார். சில புறாக்களைச் சொடுக்கிவிட்டார். சிலவற்றை இறகு பிரித்து வானத்தில் விட்டார். சந்தோஷமாக எல்லாப் புறாக்களும் பறந்து சென்றன.
தோளில் இருந்து மூன்று மணிப்புறாக்களோடு நடந்து வெளியே வந்தபோது பள்ளிவாசல் உள்ளேயிருந்து மெலிந்த நெடிய உருவம் ஒன்று. அவரை நோக்கி வந்தபடியே பேசினார் ஆலங்கீர் மௌல்விசாஹிப்.
“ஊரு ரெண்டுபட்டு கெடக்கே பாபா. இஞ்ச பொறா புடிக்க ஏன் வந்திய? துனியா ரொம்ப கெட்டு போச்சி. ஜாக்ரதையா போங்க. ஆத்தங்கரையெல்லாம் பொம்பளை கொமர்களோட பொணம் கெடக்கு. யார் என்ன ஏதுன்னு யாரும் கேக்க முடியலை. நாயக்கர் காலமில்ல இது. முஸ்லிம்களுக்கு காலமில்ல தாதா. உங்களுக்கு இன்னும் பொறா ஷோக்கு உடமாட்டேங்குது. கவனமா போங்க” என்றார் ஆலம் பக்கீர்.
லேசாகச் சிரித்தபடி புறாக்களை ஒவ்வொன்றாக “ஜாவ்ரே! ஜாவ்லாகூ! நான் வர்றவரைக்கும் அரண்மனைப் பள்ளிவாசல் மினார்ல இருங்க. பின்னாலேயே வந்திர்றேன்” என்றபடியே பறக்கவிட்டார்.
“ஆலம் சாஹிப். படச்சவன் இருக்கும்போது என்ன பயம்? அவன் எங்கும் இருக்கான் பாய். அவனை மீறி எதுவும் இல்ல. யாரை நம்பி நம்ம அப்பன் பாட்டன்மார் இஞ்ச வந்தாங்க. அல்லா அவுகளை தஞ்சாவூர்ல பாலவனத்துல இருந்து எந்த தைரியத்துல கொண்டாந்து சேர்த்தாராம். தஞ்சாவூருக்கு வர முந்தி என் பாட்டன் பூட்டன்மார் அரேபியாவில் இருந்து மேனாவிலேயும் பல்லக்குலேயும் வந்தாக. நடந்து நடந்து நடந்தே பாலவனைத்துல இருந்து ஆப்கானிஸ்தான் பலூஜிஸ்தான் ராஜஸ்தான் எல்லாம் நடந்து நடந்து நடக்கும்போதே பலுகி பெருகி நடக்கும்போது படிச்சி, நடக்கும்போதே வேட்டையாடி சாப்பிட்டு, நடக்கும்போதே தனியா என்னென்ன படிச்சிக்கிட்டு நடக்கும்போதே மருந்து செடியெல்லாம்
பறிச்சி வைத்தியம் யுனானி எல்லாம் செஞ்சுகிட்டு நடந்துகிட்டே சண்டைபோட்டு சேந்தவங்களையெல்லாம் முஸ்லீம் ஆக்கிகிட்டு யாருகிட்டயும் வேத்து வாசனை நேராம நேராம கூட்டம் கூட்டமா கூட்டமா புள்ளை குமர்களைப் பெத்தெடுத்து திடீர்னு இஞ்ச பளையம் எறங்கினாங்களே, ஆரெக் கேட்டு? ஆரு சொன்னா? முன்னூறு வருஷமா இஞ்ச தொழுகையும் ஸலவாத்தும் துஆவும் செய்யலியா? பொழுது விடியலியா? சாஹிபு, பைத்தியம் மாதிரி பயப்படாதிக. எந்தக் காலமும் நிலையானது இல்ல சாஹிப். எவனும் நிக்கிறதில்லெ. ரத்தம் தெளிவா இருக்கிற வரைக்குதான் எல்லாம். ரத்தம் கலங்கினால் – கலந்து கொட்ட வேண்டியதுதான். துனியாவுல இதெல்லாம் பாத்து பயப்பட என்ன இருக்கு. ஆலம் சாஹிப் ஒங்க பத்து கொமருகளையும் காவு கொடுக்கலியா? படச்ச அல்லா இருக்கான். என்னைக்கும் இதெல்லாம் இப்படியேதான் இருக்கும். கொஞ்சநாள் ஆட்டம்! அப்புறம் மர்கயா! யாரு எப்படி போனா என்ன? நீங்க பாக்காததா?” என்றார் காசீம்.
***
***
மேலும்…
தஞ்சை பிரகாஷ் சிறுகதைகள் – openreadingroom.com
***
நன்றி : மயில்ராவணன்