அஞ்சலி – ஞாநி

‘நாம் விரும்பும் விஷயங்கள் எல்லாம் நம் வாழ்க்கையில் கிடைக்காமல் போகலாமே தவிர, நேர்மையினால் நாம் வாழ்வில் சிதைகிறோம் என்ற உணர்ச்சி எனக்கு எப்போதும் இல்லை.’ – ஞாநி

நீதியரசர் சந்துரு – ‘கேணி’ சந்திப்பு

ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் கலந்துகொண்ட ‘கேணி’ கூட்டத்தின் காணொளியை சில தினங்களுக்கு முன்புதான் முழுதாக பார்க்க முடிந்தது. நிகழ்ச்சி பற்றி ஹரிஹரன் இங்கே  சுருக்கமாக எழுதியிருக்கிறார். யுவபாரதியின் வலைப்பதிவில் சந்துரு சாரின் உரை MP3யாகவும் கிடைக்கிறது.

‘மை லார்ட்னு சொல்லாதேன்னு சொன்னாகூட அதுக்கும் ‘ஸாரி மை லார்ட்’ங்குறாங்க!’ என்று இயல்பான நகைச்சுவையுடன் பேசும் சந்துரு ஒரு ஜட்ஜ்மெண்ட்டில் எழுதினாராம் இப்படி : ‘Whether it is a case of forgery or burgery it requires Surgery!’ . சிரித்துக்கொண்டே சல்யூட் அடித்தேன். – ஆபிதீன்
***

***

நன்றி : சந்துரு அவர்கள், ஞாநி, பத்ரி சேஷாத்ரி

‘பரிக்ஷா’ ஞாநியோடு கருத்துப் பரிமாற்றம் – தாஜ்

நேர்மையோடு ஒரு பதிவு.  நான் செய்யலாமா? தாராளமாக. இந்த 6 வருடங்களில் பல நண்பர்கள் தங்களின் புதிய கதை/ கட்டுரைகளை இந்த வலைப் பக்கத்தில் வெளியிட அனுப்பியிருக்கிறார்கள். நான் அவர்களின் பெயரிலேயே அதை வெளியிட்டேனே! . சரி, இந்த கருத்துப் பரிமாற்றம் ஃபேஸ்புக்கில் ஓரிரு நாள்களுக்கு முன்பு நடந்தது. பிடித்திருந்தது. பகிர்கிறேன். இரண்டு மீசைகளில் ஞாநியின் மீசையே எனக்கு அதிகம் பிடிக்கிறது என்பதையும் சொல்லிவிடுகிறேன். நன்றி. – ஆபிதீன்

***

கடற்கரய் அவர்கள்  ‘நேர்மை – மிகக் கொடிய நோய்’ என்று பதிவேற்றியிருந்தார்.  இந்தச் சிறிய வாசகம் தந்த அதிர்வில் நிறைய நண்பர்கள் தங்களது கருத்துக்களை வைத்துக் கொண்டிருந்தார்கள். நான், பெரிதும் மதிக்கும் ‘பரிக்ஷா’ ஞாநி அவர்களும் தனது கருத்தை எழுதியிருந்தார். தற்செயலாக அப் பதிவை காண நேர்ந்ததில் நானும் அதில் கலந்து கொண்டேன். எப்பவுமே ஞாநியின் எழுத்தை படித்து உள்வாங்கிக் கொள்ளும் நான், இந்த முறை அவரை மறுத்துக் கூறும்படிக்கு ஆகிவிட்டது. ஞாநி திரும்பத் திரும்ப என் கருத்தையொட்டி அவரது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி எழுதினார். நானும் திரும்பத் திரும்ப என் நிலைப்பாட்டில் நின்றபடிக்கே எழுதிக் கொண்டிருந்தேன்.  இருவருமே அவரவர் நிலையில் இருந்து பிறழாதபடிக்கு அந்த விவாதம் ஓர் எல்லையில் முற்றுப் பெற்றுவிட்டது. அதனை இங்கே இப்ப உங்களது பார்வைக்கு வைக்கிறேன். தொடர்ந்து நீங்கள் இப்போது எங்களது சரி, தப்பு குறித்து உங்களது கருத்தை பதிவு செய்யலாம். நன்றி. –  தாஜ்

***

Gnani Sankaran:
மன அழுத்தத்தைத் தருவது நேர்மையல்ல. நேர்மையின்மைதான். இன்னொருவரின் நேர்மையின்மை நமக்கு மன அழுத்தத்தைத் தரும். நம்முடைய நேர்மைதான் நம் மனதை அதன் அழுத்தத்தை லேசாக்கும்.

Taj Deen:
அன்பிற்குறிய ஞாநிக்கு…நேர்மையா இருந்து அந்த நோயின் கொடுமையை அனுபவிக்கிறதால்தான் சொல்றேன்… ‘நேர்மை மிகக் கொடிய நோயேதான். எந்த மன அழுத்தம் வந்து, எந்த அரசியல்வாதி/பணவாதி/ கோணல் கருத்துவாதி/ அபத்த பத்திரிகை முதலாளிவாதி/ மதவாதி/ ஆன்மீகவாதி/ சாமியார்வாதி/ பெண்களை சிதைக்கும்வாதி..என்று இப்படி நாம் காணும் சமூகத்தில் எவனாவது செத்தான் என்று செய்தியுண்டா? என் ஞாநிதான் விளக்கணும்.

Gnani Sankaran:
தாஜ்.. திரும்பவும் சொல்றேன், குழப்பிக்கறீங்க. உங்களோட நேர்மையால உங்களுக்கு மன அழுத்தம் வராது. இன்னொருத்தருடைய நேர்மையின்மைதான் உங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துது. இன்னொருத்தருடைய நேர்மை எங்கயாவது உங்களுக்கு மன அழுத்தம் தருமா? தராது. மகிழ்ச்சியைத்தான் தரும். நீங்க சொல்ற பட்டியல்ல இருக்கற நேர்மையற்றவர்களுக்கு ஏன் நேர்மையானவங்களால மன அழுத்தம் வரப்போகுது ? அவங்களாலதான் நமக்கு மன அழுத்தம் வரும். இன்னி வரைக்கும் நான் நேர்மையா இருக்கறதப்பத்தி எனக்கு எந்த ஸ்டெரெஸ்ஸும் இல்லை. இன்னொருத்தர் நேர்மையில்லாம இருக்கரதப்பத்தின கோபம்தான் என் பி.பிக்குக் காரணம்..

Taj Deen:
அன்பிற்குறிய ஞாநிக்கு… நான் என் சின்ன வயசு தொட்டு பலரிடம் பல நல்லவைகளை, உயர்ந்தவைகளை கற்றவன். அந்த வகையில் உங்களிடமும் எழுத்தில் நேர்மையை இன்னும் சிலவும் கற்றிருக்கிறேன். அதுபோகட்டும். //உங்களோட நேர்மையால உங்களுக்கு மன அழுத்தம் வராது// இதைப் பற்றி பேசுவோம். வருதே. இப்படியே நேர்மை நேர்மைன்னு அழிந்து கொண்டிருக்கிறோம்… உருப்படாமல் போகிறோம்… அடுத்தவர்கள் நம் பார்வையை திரும்பிக் கூட பார்க்க மாட்டேன் என்கிறார்களே… போன்ற இத்தியாதிகளால் மன அழுத்தம் வரத்தானே செய்கிறது. ‘ரிஃபேஸ்-50’ தினம் ஒண்ணு தின்கிற நிலையில்தான் இன்றைக்கு நான் இருக்கிறேன். அதிகத்திற்கு ஞாநி மன்னிக்கணும்.

Gnani Sankaran:
தாஜ்..நாஎனக்கு தினசரி காலையில் ஐந்து மாத்திரைகள், இரவிலும் ஐந்து, தவிர மூன்று வேளை இன்சுலின் ஊசி. என் நோய்களுக்கு என் நேர்மை நிச்சயம் காரணமே இல்லை. என் நேர்மையைப் பற்றி எனக்கு துளியும் வருத்தமோ சுயபரிதாபமோ கிடையாது. அது தேவையுமில்லை. சூழலில் இருக்கும் தவறுகள், அவை குறித்து நம்முடைய இயலாமை முதலான மன உளைச்சல்கள்தான் நம்மை பாதிக்கின்றன. ஆனால் நாம் நம் மனசாட்சிப்படி சரியாக இருக்கிறோம் என்பது பற்றிய மகிழ்ச்சியே இதற்கு மருந்து.

Taj Deen:
அன்புடன் ஞாநிக்கு.. சூழல் கிடக்கிறது. அது என்றைக்குமே திருந்தாது. ஒரு தவறு இல்லாவிட்டால் இன்னொரு தவறை நிகழ்த்தியபடிக்குத்தான் இருக்கும்.(மன்னிக்கணும், உங்களுக்குத் தெரியாது என்கிற அர்த்தத்தில் இதனை இங்கே குறிப்பிடுவதாக கருதிவிடாதீர்கள்) அது திருந்தணும் என்றுதான் விரும்புகிறோம். அதற்காக நம் ஆயுதமான எழுத்தை உபயோகிக்கிறோம். அப்படி எதையொன்றை எழுதும் போதே தெரியும் நாம் எண்ணம் சபையேறாது என்று. அதை எழுதிய கஷ்டத்திற்காக கிடைக்கும் பொழுதுகளில் பாட்டு, நகைச்சுவை, நல்ல உணவு என்று ஆற்றிக்கொள்கிறோம். வேறு வழியில்லை. இப்படி இதனால் நேர்மை நேர்மைன்னு பேசிப் பேசியே வாழ்வோடு நாமும் சிதைகிறோமே என்கிற சுய கோபம்தான் அதிகத்திற்கும் அதிகம் வருகிறது. குறைந்த பட்சம் நேர்மையாளனை எவன் ஸார் மதிக்கிறான்? சில நேரம் உங்கள் மீது கூட கோபம் வரும். இவரையெல்லாம் படிக்காமல் இருந்திருக்கலாமோ… அப்படியே படித்திருந்தாலும் மண்டையில் ஏற்றிக் கொள்ளாமல் இருந்திருக்கலாமே என்றும் கூட எரிச்சல் வரும். போகட்டும். நீங்கள் தினம் உபயோகிக்கிறதா எழுதி இருக்கிற மாத்திரை மருந்துகள் எனக்கு கவலையே தருகிறது. இதுதான் சமூகம் நமக்குத்தரும் பரிசு. இப்பவும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்… அதிகத்திற்கு மன்னிக்கவும்.

Gnani Sankaran:
நாம் விரும்பும் விஷயங்கள் எல்லாம் நம் வாழ்க்கையில் கிடைக்காமல் போகலாமே தவிர, நேர்மையினால் நாம் வாழ்வில் சிதைகிறோம் என்ற உணர்ச்சி எனக்கு எப்போதும் இல்லை.

Taj Deen:
அன்புடன்.. ஞாநி. உங்களை நான் மறுக்க மாட்டேன். நீங்கள் பாரதியையும்/ பெரியாரையும் முன்வைத்து பாதை நடக்கிறவர். நானும் அப்படியே என்றாலும்.. எனக்கு அந்தச் சிதைவு குறித்து சுய வருத்தம் உண்டு. என் பாரதி, என் பெரியார், என் ஞாநி எல்லாம் நின்று வாழ்வார்கள் என்றாலும்…, வாழ்வில் அவர்கள் எதிர்கொண்ட சங்கடங்கள் எனக்கு பெரிய விசயம். அவர்கள் உண்மை பேசுகிறார்கள் என்று இந்தச் சமூகம் அவர்களுக்கு தொந்தரவு தரவில்லையா என்ன? அதனால் அவர்கள் மனம் நொந்திருப்பார்களா இல்லையா? இதெல்லாம் நேர்மையால் விளையும் சங்கடங்கள் தானே. என்னமோ போங்கள் நான் இப்படிதான். மீண்டும்.., அதிகத்திற்கு மன்னியுங்கள். நன்றி.

***

நன்றி : தாஜ் ,  ஞாநி