தாஜ் வைத்த ‘க்கு’

நண்பர் தாஜிடமிருந்து நேற்று வந்த மெயில். பரிசு, பணம் என்று என்னமோ சொல்லியிருக்கிறார். அது மட்டும் புரியவில்லை. ’யாத்ரா’வில் வருவதற்கு தாமதமானதால் , ‘இங்கெ கண்டிப்பா போடுவாங்க, பாருங்க’ என்று கதையை – என் சார்பாக – ’கணையாழி’ இதழுக்கு அனுப்பிவைத்த நண்பருக்குத்தான் தெரியும். அது போகட்டும், இந்தப் பதிவின் தொடர்ச்சி நாளை வெளியாகும் – கொத்தும் குலையுமாக! அதற்கு முன் – இன்று ரசித்த பாதித்த – எழுத்தாள நண்பர் ஜே. டேனியலின் ‘எப்ப வருவீங்க’ கவிதை.   கடைசி பத்தி மட்டும், நன்றிகளுடன்…

’இப்போது வாசித்தாலும்
ஏமாற்றம் தராத வசனம் 
சீக்கிரம் வருவேன்
என்றுதான் இருக்கிறது
எப்போது வருவீங்க.
வந்தாலும் எப்போதும்போல்
நீங்களே எங்களுக்கா கொலையாகிவிடும் நோக்கம்தானா? ’

***

தாஜ் மெயில் :

அன்புடன்
ஆபிதீன்….

நீண்ட நாட்களாயிற்று
கடிதமென
உங்களோடு உரையாடி.

நடப்பு பொழுதுகளில்
என் வியாபாரம்
காற்று வாங்க
நான்..
நடந்து முடிந்த
மாபெறும் தேர்தல் கூத்தை
கண்டு களித்தவனாக
இன்னும் இன்னும்
சிரித்துக் கொண்டிருக்கிறேன்.
இந்த நேரங்களில்
உங்களை மாதிரி துபாயில் இருந்தால்
பணம் மட்டும்தான் பார்த்திருக்கலாம்.
இது மாதிரி
வாழும்கூத்து கிடைத்திருக்காது.
இப்படி ஒரு மஹா அனுபவத்தையோ
வயிறு நோகும் அளவிலான
உயிர்ப்பான ஹாஸ்யத்தையோ
கண்டு களித்திருக்க முடியாது.
பாக்கியவான் நான்!

நின்று போய் கிடந்த
நம்ம காலத்து பேரிலக்கிய சிற்றிதழான
‘கணையாழி’
இந்த ஏப்ரலில்
மீண்டும் உயிர்த்திருக்கிறது!
இதன் வெளியீட்டு விழா
15/04/2011 அன்று,
சென்னை….
தி.நகர் / வாணி மஹாலில் நடந்திருக்கிறது.

கணையாழியின்
கௌரவ ஆசிரியர் பொறுப்பை ஏற்றிருக்கும்
பெரியவர் இந்திரா பார்த்தசாரதி
தலைமை தாங்க
தமிழ் எழுத்துலக சிம்மம்
ஜெயகாந்தன்
இதழை வெளியிட்டு பேசியிருக்கிறார்.

“கணையாழியில் நான் எழுதியதில்லை.
ஆனால், கணையாழி
என்னை எழுதியிருக்கிறது.
இப்போ…
கணையாழியில்
நான் எழுதலாம்!”
ஜெயகாந்தனின் இந்தப் பேச்சு
நிறைய செய்திகள் கொண்டது.

கணையாழியால் வளர்ந்த
நவீன இலக்கிய கர்த்தாக்கள்
நம்மில் அதிகம்.
அதன் கொசுறுகளில்…
நிச்சயம் நான் உண்டு.

கணையாழியை
ரொம்பப் பிடித்துப்போக
பல காரணங்கள்.
அதில் ஒன்று…
கடை‘!

அந்தக் குறு நாவலை
கணையாழியில் வெளிவந்துதான் படித்தேன்.
இப்படியெல்லாம் துணிவாக
நம் சமுதாயத்தைப் பற்றி எழுதலாம் என்கிற
உணர்வையும் பெற்றேன்.

முத்திரைச் சிறுகதையாக
வெளிவந்த குறுநாவல் அது!
அப்பவே….
அதற்கு 1000/ ரூபாய் பரிசு!
அந்தப் பணத்தில்
அன்றைக்கு
அந்தக் கதை எழுதியவர்
அவரது ஊரில்
ஓர் வீட்டுமனையே வாங்கலாம்!
வாங்கினாரா?
இல்லையா?
தெரியாது!
ஏன் ஆபிதீன்…
உங்களுக்குத் தெரியுமா?

*
நம்ம கி.ரா.
அவருக்கு நண்பரும்
மரியாதைக்கு உரியவருமான
தி.க.சி.யைப் பற்றி
சிலாகித்து கட்டுரை ஒன்றை எழுதியிக்கிறார்.
அதில் தி.க.சி.யின்
இலக்கிய குசும்பெல்லாம் பேசப்பட்டிருக்கிறது!
அந்தக் கட்டுரையில்
ஓர் சுவாரசியமான விவாதம்!

கி.ரா. தன் கதை ஒன்றில்
‘உயிர்த்தலம்’ என்கிற
வார்த்தையை உபயோகித்துவிட,
அந்த வார்த்தைப் பிரயோகத்தை
ஆபாசம் என்றுவிடுகிறார் தி.க.சி.!
இல்லை என்று பதறுகிறார்
அதை எழுதிய கி.ரா!

பாருங்கள் ஆபிதீன்
நம்மிடையேதான்
எத்தனை கனவானான
எழுத்தாளப் பெருமக்கள்!?
அன்றைக்கு!!!

இன்றைக்கு…
முலையைப் பிடித்து
திருகோ திருகென்று திருகுவதை
கதைக்குக் கதை
மறக்காதல்லவா எழுதுகிறார்கள்!
இத்தனைக்கும்  
சாதாரண எழுத்தாளர்கள் அல்ல அவர்கள்!
அவதாரமாகவும்
இந்திரனும் சந்திரனுமாகவும்
தங்களைக் காண்பித்துக் கொள்பவர்கள்!

கி.ரா.வின் ’உயிர்த்தல’த்தைப் பற்றி
இங்கே சொல்ல நேர்ந்ததற்கு
ஓர் ‘க்கு’ உண்டு.
இன்ஷா அல்லாஹ்….
அதனைப்பற்றி
பிறகு.
பொழுது விடியட்டும்!

***

நன்றி :  தாஜ்satajdeen@gmail.com